விளையாட்டுச் செய்திகள்
விளையாட்டுச் செய்திகள்
46/1 தீர்மானத்தின் கீழ் நிறுவப்படக்கூடிய எந்தவொரு வெளியகப்பொறிமுறையையும் முற்றாக நிராகரிப்பதாக அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த வாய்மொழி அறிவிப்பு தொடர்பாக பதிலளித்து உரையாற்றும் போதே வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இதனை குறிப்பிட்டார்.
மேலும் இலங்கை அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அற்ற வெளியகப் பொறிமுறைகளால் பயனில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொரோனா தொற்றுக்கு மத்தியில், உள்நாட்டு செயன்முறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், குறிப்பாக காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலக நடவடிக்கை, இழப்பீட்டு அலுவலக அலுவலக நடவடிக்கை குறித்தும் அவர் சுட்டிக்காட்டினார்.
நாட்டின் அரசியலமைப்பிற்கு அமைவாக அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்கி, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையுடன் இணைந்து செயற்பட இலங்கை தயார் என்றும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
பொறுப்புக்கூறல் மற்றும் காணாமல்போனோர் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும், கடந்த ஆணைக்குழுக்களின் பரிந்துரைகளை மறுபரிசீலனை செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அதற்காக உயர் நீதிமன்ற நீதிபதியின் தலைமையில் விசாரணை ஆணைக்குழு அமைக்கப்பட்டு அதன் இடைக்கால அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் இறுதி அறிக்கை அடுத்த 06 மாதங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என்றும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மறுபரிசீலனை செய்வதற்கும், சர்வதேச விதிமுறைகள் மற்றும் சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப கொண்டுவரவும் அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
அதன்படி பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள வழக்குகளை விசாரணை செய்யவும், வழக்குகளை விரைந்து தீர்ப்பது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுவருவதாக ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
அத்தோடு 8 அம்ச செயற்றிட்டத்தை தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம் தொடர்ந்தும் முன்னெடுப்பதாகவும் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு அதன் ஆணையை நிறைவேற்றுகின்றது என்றும் ஜி.எல்.பீரிஸ் குறிப்பிட்டார்.
மேலும் சமாதானம், நீதி மற்றும் வலுவான நிறுவனங்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு நிலையான அபிவிருத்தி இலக்கு 16 இன் கீழான வழிநடத்தல் குழு செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தியை அடைந்து கொள்வதற்கு சிவில் சமூகத்துடன் இணைந்து பணியாற்றி வருவதாகவும் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
இதேவேளை 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து இலங்கை தொடர்ந்து விசாரணை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரரான இசுரு உதான, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுப் பெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட் தலைமை நிர்வாக அதிகாரி ஆஷ்லே டி சில்வா, 33 வயதான இசுரு உதான, சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதற்கான தனது முடிவை நிர்வாகத்திடம் அறிவித்துள்ளதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இடதுக்கை வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரரான இசுரு உதான, இதுவரை 21 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுகளையும் 237 ஓட்டங்களையும் குவித்துள்ளார்.
இதேபோல 34 ரி-20 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 27 விக்கெட்டுகளையும் 256 ஓட்டங்களையும் பெற்றுள்ளார்.
இங்கிலாந்து அணியுடன் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்தது. இதையடுத்து புதிய சாதனை ஒன்றை இலங்கை அணி படைத்துள்ளது.
இதன்படி, ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர்களில் அதிக தோல்விகளைச் சந்தித்த அணியாக இலங்கை அணி இடம்பிடித்துள்ளது.
1975ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை இலங்கை அணி 860 ஒரு நாள் கிரிக்கெட் போட்டித் தொடர்களைச் சந்தித்துள்ளது. அவற்றில் 390 ஆட்டங்களில் வெற்றியீட்டியுள்ள இலங்கை அணி 428 ஆட்டங்களில் தோல்வியைச் சந்தித்துள்ளது. இதன்படி இந்த புதிய சாதனையை படைத்துள்ளது.
2015 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கை அணி சந்தித்த தொடர்களில் 62 சதவீதமானவற்றில் தோல்வியைச் சந்தித்துள்ளது.
இதேவேளை இந்திய கிரிக்கெட் அணி 427 ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டித் தொடர்களில் தோல்வியடைந்துள்ளதுடன் பாகிஸ்தான் அணி 414 தொடர்களில் தோல்வியடைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
2027 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் 14 அணிகளும் டி20 உலகக் கிண்ணத்தில் 20 அணிகளும் பங்கேற்கும் என ஐசிசி அறிவித்துள்ளது. 2023 – 2031 காலகட்டத்திலான கிரிக்கெட் போட்டிகள் குறித்து விவாதிக்க ஐசிசி கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.
அதன் விவரங்கள்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர்ந்து நடைபெறும். 9 அணிகள் 6 தொடர்களில் விளையாட வேண்டும் என்கிற நடைமுறை தொடரும். ஒவ்வொரு இரு வருடங்கள் கழித்தும் இறுதிச்சுற்று நடைபெறும். 2025, 2027, 2029, 2031 ஆகிய வருடங்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டங்கள் நடைபெறவுள்ளன.
2027, 2031 ஒருநாள் உலகக் கிண்ண போட்டிகளில் 14 அணிகள் பங்கேற்கவுள்ளன. எனவே 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் கடைசியாக 10 அணிகள் பங்கேற்கும். 2003 உலகக் கிண்ண போட்டியில் நடைபெற்றது போல சூப்பர் சிக்ஸ் சுற்று சேர்க்கப்படும். 14 அணிகள் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படும். ஒவ்வொரு பிரிவிலிருந்து முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகள் சூப்பர் சிக்ஸில் மோதும். அதன்பிறகு அரையிறுதி, இறுதி ஆட்டங்கள் நடைபெறும்.
டி20 உலகக் கிண்ண போட்டியில் 20 அணிகள் பங்கேற்கும்.
கடைசியாக 2017 இல் நடைபெற்ற ஒருநாள் சாம்பியன்ஸ் கிண்ண போட்டி மீண்டும் நடைபெறவுள்ளது. 8 அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் கிண்ண போட்டி அடுத்ததாக 2025, 2029 ஆண்டுகளில் நடைபெறவுள்ளன.
2024 – 2031 இல் நடைபெறவுள்ள ஐசிசி போட்டிகள்.
2024 – ஆடவர், மகளிர் டி20 உலகக் கிண்ணம்.
2025 – ஆடவர் சாம்பியன்ஸ் கிண்ணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணம்.
2026 – ஆடவர், மகளிர் டி20 உலகக் கிண்ணம்.
2027 – ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் டி20 சாம்பியன்ஸ் கிண்ணம்.
2028 – ஆடவர், மகளிர் டி20 உலகக் கிண்ணம்.
2029 – ஆடவர் சாம்பியன்ஸ் கிண்ணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணம்.
2030 – ஆடவர், மகளிர் டி20 உலகக் கிண்ணம்.
2031 – ஆடவர் ஒருநாள் உலகக் கிண்ணம், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இறுதி ஆட்டம், மகளிர் டி20 சாம்பியன்ஸ் கிண்ணம்.
கரீபியன் பிரீமியர் லீக் இருபதுக்குக்கு 20 கிரிக்கெட் தொடருக்கு இலங்கையைச் சேர்ந்த மூவரை தெரிவு செய்துள்ளனர்.
இவர்களில் சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து அண்மையில் விலகிய திசர பெரேரா, இசுரு உதான, வனிந்து ஹசரங்க ஆகிய மூவரும் ஆவர்.
அண்மையில் நடைபெற்ற வீரர்களுக்கான ஏலத்தில் திசர பெரேராவை பார்படோஸ் ட்ரைடன்ஸ் அணி நிர்வாகமும், இசுரு உதானவை ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகமும் , வனிந்து ஹசரங்கவை சென். கைட்ஸ் அன்ட் நெவிஸ் பாட்ரியட்ஸ் அணி நிர்வாகமும் எடுத்திருந்தன. இவர்கள் மூவருமே சகலதுறை வீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இம்முறை கரீபியன் பிரீமியர் லீக் தொடரானது எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி முதல் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி வரை சென். கைட்ஸ் அன்ட் நெவிஸ் தீவில் நடைபெறவுள்ளது.
கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற கரீபிரியன் பிரீமியர் லீக்கில் கிரென் பொல்லார்டின் தலைமையிலான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணி சம்பியனானதுடன், அந்த அணி நான்கு தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்று அதிக தடவைகள் சம்பியன் பட்டத்தை வென்ற அணியாகவும் திகழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.
கொவிட் பரவல் காரணமாக இடைநிறுத்தப்பட்ட ஐ.பி.எல். போட்டிகளை எதிர்வரும் செப்டம்பர் – ஒக்டோபர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடாத்த இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை தீர்மானித்துள்ளது.
2021ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டிகள் கொரோனா பரவல் காரணமாக 31 போட்டிகள் மீதமுள்ள நிலையில் இடைநிறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்றைய தினம் இடம்பெற்றது. ஏற்கனவே தொடரரை இழந்திருந்த இலங்கை அணி ஆறுதல் வெற்றிக்காக இன்றைய போட்டியில் களமிறங்கியது.
இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
இதில் இலங்கை அணி சார்பில் அணியின் தலைவர் குசல் ஜனித் பெரேரா தமது 6 சதத்தை பூர்த்தி செய்து 120 ஓட்டங்களையும் டீ சில்வா 55 ஓட்ங்களையும் அதிகமாக பெற்றிருந்தனர்.
பந்துவீச்சில் பங்களாதேஸ் அணியின் தஸ்கின் அஹ்மட் 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
287 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 42.3 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 189 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக் கொண்டது. இதன்படி 97 ஓட்டங்களால் இலங்கை வெற்றி பெற்றது.அந்த அணி சார்பில் அதிகமாக மஹ்மதுல்லா 53 ஓட்டங்களையும் , ஹூசைன் 51 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் இலங்கை சார்பில் துஷ்மந்தசமீர 05 இலக்குகளை கைப்பற்றி போட்டியின் வெற்றிக்கு வித்திட்டார். போட்டியின் ஆட்டநாயகனாகவும் துஷ்மந்தசமீர தெரிவானார். தொடர்நாயகனாக ரஹீம் தெரிவானார்.
ஏற்கனவே, இரண்டு போட்டிகளில் வெற்றிப்பெற்று தொடரை பங்களாதேஷ் அணி கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அணி பங்களாதேஷில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது.
நேற்றைய போட்டியில் நாணய சுழற்சியை வென்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 இலக்குகளை இழந்து 257 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் பங்களாதேஷ் அணி சார்ப்பில் முஸ்பிகூர் ரஹீம் 84 ஓட்டங்களையும், மஹ்மதுல்ல 54 ஓட்டங்களையும் அணியின் தலைவர் தமீம் இக்பால் 52 ஓட்டங்களையும் பெற்றிருந்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்ப்பில் தனஞ்சய த சில்வா 3 இலக்குகளை வீழ்த்தியிருந்தார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 48.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 224 ஓட்டங்களைப் மாத்திரமே பெற்றுக் கொண்டது. இலங்கை அணியில் வனிந்து ஹசரங்க மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 60 பந்துகளில் 5 சிக்சர், 3 பவுண்டரியுடன் 74 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்று கொண்டார்.
பந்து வீச்சில் மொஹமட் ஹசன் 4 இலக்குகளையும், மொஹமட் ரஹ்மான் 3 இலக்குகளையும் வீழ்த்தினர்.
அதன்படி, முதலாவது ஒரு நாள் போட்டியில் பங்களாதேஷ் அணி 33 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.