கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிந்தது, டோனி இல்லாத கிரிக்கெட் வரலாறு முழுமை பெறாது என்று டோனியின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் புகழாரம் சூட்டி வருகின்றனர்.
இரு உலகக்கோப்பைகளை இந்திய அணிக்கு பெற்றுக்கொடுத்தவர், ஐசிசியின் 3விதமான கோப்பைகளையும் வென்ற ஒரே தலைவர், கேப்டன் கூல் , ஜென்டில்மேன் விளையாட்டுக்கு உரித்தாக விளங்கியவர் என்ற பெருமைக்குரியவர் தோனி. கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, அவரின் தனிப்பட்ட செயல்பாடுகளிலும் சரி டோனி தேர்ந்தெடுக்கும் வழி, முடிவுகள் சற்று வித்தியாசமாகவே இருக்கும். அதுதான் அவருக்கு பல வெற்றிகளைப் பெற்றுக்கொடுத்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டுக்காக 16 ஆண்டுகள் விளையாடிய டோனி, கடந்த ஆண்டு உலகக்கோப்பைப் போட்டியில் தனது ரன் அவுட்டில் இந்திய அணி வெற்றி வாய்ப்பை இழந்ததற்கு பின் தோனியால் இந்திய அணியின் ஜெர்ஸியை அணிய மனது வரவில்லை. கடந்த ஓர் ஆண்டுக்கும் மேலாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடமல் இருந்த தோனியின் நிலை குறித்து பல்வேறு கேள்விகள், ஓய்வு குறித்த ஊகங்கள் எழுந்தன.
ஆனால், அனைத்துக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக தோனி நேற்று மிகவும் எளிமையாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
நீல நிற ஜெர்ஸியில் மீண்டும் வருவார் என காத்திருந்த ரசிகர்களுக்கு தோனியின் அறிவிப்பு பேரிடியாக இருந்தது. தோனியின் ஓய்வு குறித்து முன்னாள் வீரர்கள் பலரும் உணர்வுப்பூர்வமாக சமூக வலைத்தளங்களில் கருத்துக்களைப் பகிர்ந்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர்(ட்விட்டர்)
“இந்திய கிரிக்கெட்டுக்கு உங்களின் பங்களிப்பு அளப்பரியது தோனி. 2011 உலகக்கோப்பையை ஒன்றாகச் சேர்ந்து வென்ற தருணம் வாழ்வில் மறக்கமுடியாதது. 2-வது இன்னிங்ஸ் உங்களுக்கும், குடும்பத்தாருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்”
சர்வதேச கிரிக்கெட்டில் சாம்பியனாக விளங்கும் விராட் கோலியை அரவணைத்து வளர்த்துவிட்டது தோனி என்றால் மறுக்கலாகாது. தோனியிடமிருந்து பலவிஷங்களை கோலி கற்றுக்கொண்டார். அவர் ட்விட்டரில் பதிவிட்ட கருத்து “ ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் பயணத்துக்கும் ஒருநாள்முடிவு உண்டு. ஆனால், நீங்கள் அறிந்த ஒருவர் மிகவும் நெருக்கமாக அந்த முடிவை அறிவிக்கும்போது, அதிகமான உணர்ச்சிகளை உணர்வீர்கள்.
நீங்கள் இந்த தேசத்துக்கு செய்தவை எப்போதும் ரசிகர்களின் இயத்தில் நீங்காமல் இருக்கும். ஆனால், உங்களிடம் இருந்து நான் பெற்ற மரியாதையும், அன்பும் எப்போதும் என மனதில் நிற்கும். உங்களின் சாதனைகளை உலகம் பார்த்துள்ளது, நான் தள்ளிநின்று பார்த்துள்ளேன். அனைத்தையும் விட்டுச் செல்வதற்கு நன்றி, என் தொப்பியை எடுத்து நன்றி தெரிவிக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
பி.சி.சி.ஐ தலைவர் சவுரவ் கங்குலி (ட்விட்டர்)
“ கிரிக்கெட்டில் ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது. நாட்டுக்கும், கிரிக்கெட் உலகிற்கும் கிடைத்த என்ன மாதிரியான அற்புதமான வீரர் தோனி. அவரின் தலைமைப்பண்புகள் வேறுவிதமானவே. அதை எதோடும் ஒப்பிடுவது கடினமான ஒன்று.
அவரின் இளமைக் காலத்தில் ஒருநாள் போட்டிகளில் பேட்டிங் திறமை உலகத்தை உற்றுப்பார்க்க வைத்தது, அவரின் திறமை, புத்திசாலித்தனத்தை கவனிக்க வைத்தது. ஒவ்வொரு நல்ல விஷயங்களும் ஒருநேரம் முடிவுக்கு வரும், அதுபோலத்தான் தோனியின் ஓய்வும். களத்தில் எந்தவிதமான வருத்தமில்லாமல் தோனி சகாப்தம் முடிந்துள்ளது”
இந்திய அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்த்திரி(ட்விட்டர்)
தோனியின் கிரிக்கெட் திறமை என்றென்றும் பேசப்படும். அவரின் மிகப்பெரிய இடத்தை நிரப்ப வேண்டும். உங்களுடன் ஓய்வறையை பகிர்ந்து கொண்டதில் பெருமையையும், சிறப்பையும் பெருகிறேன். உங்களின் சிறந்த தொழில்முறை கிரிக்கெட்டைக் கண்டுவியந்திருக்கிறேன். சிறந்த கிரிக்கெட் வீரருக்கு எனது சல்யூட். வாழ்க்கையை அனுபவியுங்கள், கடவுள் ஆசீர்வதிக்கட்டும்”
வீரேந்திர சேவாக்(ட்விட்டர்)
“ மகி போல ஒருவீரர் இருக்கவே வாய்ப்பில்லை. வீரர்கள் வருவார்கள் போவார்கள் ஆனால், இவரைப் போல் அமைதியாக இருக்கமாட்டார்கள். பல கிரிக்கெட் ரசிகர்களின் மனதோடும், குடும்பத்தோடும் இணைந்திருந்து ஓர் உறுப்பினராகவே இருந்தார்.
இர்பான் பதான் (ட்விட்டர்)
ஒவ்வொரு லெஜென்டும் ஒருநாள் ஓய்வு பெறுவார்கள். இன்று மகியின் நாள். மகியுடன் இணைந்து விளையாடியதை பெருமையாகக் கருதுகிறேன், நண்பராக எனக்கு பல்வேறு வழிகாட்டல்களை களத்தில் கூறியுள்ளார். கிரிக்கெட் வாழ்வை மிகச்சிறப்பாக தோனி முடித்துள்ளார்.
வி.வி.எஸ். லட்சுமண்(ட்விட்டர்)
சிறிய நகரிலிருந்து வந்து, மேட்ச் வின்னராக உயர்ந்தார் தோனி. உலகக் கிரிக்கெட்டில் மிகவும் மதிக்கத்தக்க வீரராக, மறக்கமுடியாத வீரராக தோனி இருக்கிறார். சிறந்த நினைவுகளை அளித்தமைக்கு தோனிக்கு நன்றி. உங்களுடன் விளையாடியதை பெருமையாகக் கொள்கிறேன் மகி, உங்களுடன் விளையாடியதையும், நாம் பகிர்ந்து கொண்ட விஷயங்களும் எப்போதும் பசுமையாக இருக்கும்
மைக்கேல் வான்(ட்விட்டர்)
2011 உலகக்கோப்பை சச்சினுக்கு பிரியாவிடையாக இருந்தது, ஆனால், தோனிக்கு மாஸ்டர்பீஸ். என்ன ஒரு அற்புதமான சர்வதேச கிரிக்கெட் வீரர் வாழ்க்கை. ஒருநாள், டி20 போட்டியில் மிகச்சிறந்த கேப்டன்,பினிஷர் தோனி என்று எப்போதும் கூறலாம்.
பாக். முன்னாள் கேப்டன் ரமீஸ் ராஜா(ட்விட்டர்)
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தோனி ஓய்வு. சிறந்த தலைவர், மிகப்பெரிய சாதனைகள், அனைவரையும் மகிழ்விக்கும் ஒப்பற்ற வீரர், டிஆர்எஸை கணிக்கும் உலகில் சிறந்த கேப்டன், ஆனால், இவை அனைத்தும் தோனி குறித்தும், இந்திய கிரிக்கெட் குறித்தும் மறக்கமுடியாத நினைவுகள்
பாக். முன்னாள்வீரர் ஷோயப் அக்தர்(ட்விட்டர்)
தோனி இல்லாத கிரிக்கெட் வரலாறு ஒருபோதும் முழுமை பெறாது
ரவிச்சந்திர அஸ்வின்(ட்விட்டர்)
லெஜென்ட் எப்போதும் தங்களுக்கே உரிய வழியில் ஓய்வு பெறுகிறார்கள். தோனி நாட்டுக்காக அனைத்தையும் கொடுத்திருக்கிறீர்கள். சேம்பியன்ஸ் கோப்பை, 2011 உலகக்கோப்பை, சிஎஸ்கேவுக்காக ஐபிஎல் கோப்பை என அனைத்தும் என் நினைவில் நிற்கும். உங்களின் சிறப்பான எதிர்காலத்துக்கு வாழ்த்துகள்
கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்(ட்விட்டர்)
கிரிக்கெட்டில் மிகச்சிறந்த கேப்டன்களில் தோனி ஒருவர். உங்களுடன் நான் சிறப்பான தருணங்களை செலவழித்துள்ளேன். உங்களின் அடுத்த இன்னிங்ஸ் சிறப்பாக அமைய வாழ்த்துகள்