லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு இருபது தொடரில் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணி வெற்றிக் கிண்ணத்தைக் கைப்பற்றியுள்ளது.
லங்கா பிரீமியர் லீக் தொடர் கடந்த நவம்பர் 26ஆம் திகதி ஆரம்பமாகியிருந்த நிலையில் நேற்று இறுதிப் போட்டி நடைபெற்றது.
இறுதிப் போட்டியில் காலி கிளாடியேற்றர்ஸ் மற்றும் யாழ்ப்பாணம் ஸ்ராலியன்ஸ் அணிகள் மோதியிருந்தன.
இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ்ப்பாண அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றாங்கள் நிறைவில் ஆறு விக்கெட்டுகள் இழப்பிற்கு 188 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
அணிசார்பாக, சொய்ப் மலிக் 46 ஓட்டங்களையும், திசர பெரேரா ஆட்டமிழக்காமல் 39 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 33 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்து வீச்சில் தனஞ்சய லக்சன் மூன்று இலக்குகளைக் கைப்பற்றினார்.
இந்நிலையில், பதிலுக்கு 189 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய காலி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 பந்துப்பரிமாற்றங்கள் நிறைவில் ஒன்பது இலக்குகளை இழந்து 135 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. இந்நிலையில் 53 ஓட்டங்களால் காலி அணி தோல்வியடைந்தது.
அணிசார்பாக, பானுக ராஜபக்ச 40 ஓட்டங்களையும் அசம் கான் 36 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.
பந்துவீச்சில், உஸ்மன் சின்வாரி மற்றும் சொய்ப் மலிக் ஆகியோர் தலா இரண்டு இலக்குகளைக் கைப்பற்றயிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இறுதிப்போட்டியின் ஆட்டநாயகனாக சொகைய்ப்மாலிக் தெரிவு செய்யப்பட்டதுடன் தொடரின்நாயகனாக ஹசரங்க தெரிவுசெய்யப்பட்டார்.