இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் என மூன்றுவிதமான போட்டிகளிலும் சதம் அடித்த முதல் வீரர் என்ற அடையாளத்தைக் கொண்ட சுரேஷ்ரெய்னா தனது 34ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்த பிறகு ரெய்னா கொண்டாடும் முதல் பிறந்த நாள் இதுவாகும். 2005ஆம் ஆண்டு இந்திய அணிக்காக ரெய்னா விளையாடத் தொடங்கினார். இந்த சூழலில் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி மகேந்திரசிங் தோனியுடன் இணைந்து சர்வதேச கிரிக்கெட்டில் ஓய்வுபெற்றார்.
தற்போது தனது 34ஆவது பிறந்தநாள் கொண்டாடுவதற்காக 34 பள்ளிகளைத் தத்தெடுத்து குடிநீர், சுகாதாரம் போன்ற வசதிகளைச் செய்துகொடுக்க சுரேஷ் ரெய்னா முன்வந்துள்ளார். இதன்மூலம் சுமார் 10 ஆயிரம் குழந்தைகள்ப் பயன்பெறுவார்கள். இதுபோக 500 ஏழைப் பெண் குழந்தைகளுக்கு உணவுப் பொருட்களும் வழங்கியுள்ளார் ரெய்னா.
இந்த உதவிகள் அனைத்தும் சில தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அடுத்த வருடம் முழுவதும் பல கட்டங்களாக நடைபெறும். காஷ்மிர், உத்திர பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ள மாணவர்கள் பயன்பெறும் வகையில் தனது மகள் பெயரில் இயங்கி வரும் கிரேசியா பவுண்டேசன் மூலம் சில தொண்டு நிறுவனங்களின் உதவியோடு குறிப்பிட்ட சேவையை மேற்கொள்ள ரெய்னா ஆயத்தங்களை செய்து வருகிறார்.
சுரேஷ் ரெய்னாவின் இந்த தொண்டு உள்ளத்தைப் பாராட்டி ரசிகர்கள் ட்வீட் செய்து வருகின்றனர்.