13ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்த செப்டம்பர் மாதம் 19ஆந் திகதி தொடங்கியது. தற்போது இந்த போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
இதில் 8 அணிகள் பங்கேற்றன. லீக் சுற்றில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோதின. கடந்த 3ஆம் திகதியுடன் லீக் ஆட்டங்கள் முடிவடைந்தன. இதன் முடிவில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து பிளேஆப் சுற்றுக்கு முன்னேறின.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் முறையே 5 முதல் 8ஆவது இடங்களை பிடித்து வெளியேறின.
பிளேஆப் சுற்று 5ஆம் திகதி தொடங்கியது. ’குவாலிபையர்-1’ ஆட்டத்தில் மும்பை அணி 57 ஓட்டங்களால் டெல்லியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. வெள்ளிக்கிழமை நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் ஐதராபாத் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரை வீழ்த்தி வெளியேற்றியது. நேற்று நடந்த ‘குவாலிபையர் 2’ ஆட்டத்தில் டெல்லி அணி 17 ஓட்டங்களால் ஐதராபாத்தை தோற்கடித்து இறுதி போட்டியில் நுழைந்தது.
இன்று ஓய்வு நாளாகும். இறுதிப்போட்டி நாளை 10ம் திகதி நடக்கிறது. துபாயில் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி ஸ்ரேயாஷ் அய்யர் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதுகின்றன.
மும்பை அணி 6ஆவது முறையாக இறுதிப் போட்டியில் ஆடுகிறது. இதில் 4 தடவை சாம்பியன் பட்டம் பெற்றது. 2013, 2015, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் ஐ.பி.எல் கோப்பையை அந்த அணி கைப்பற்றியது.
2010-ம் ஆண்டு இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்சிடம் தோற்றது. தற்போது மும்பை அணி 5ஆவது முறையாக ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றும் ஆர்வத்தில் உள்ளது.
டெல்லி அணி முதல் முறையாக இறுதிப் போட்டியில் விளையாடுகிறது. ஐ.பி.எல் கோப்பையை முதல் முறையாக கைப்பற்றும் வேட்கையில் அந்த அணி இருக்கிறது. ஐ.பி.எல். கோப்பையை கைப்பற்றப் போவது மும்பையா? டெல்லியா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சீசனில் மும்பை அணி 3 முறை டெல்லியை வீழ்த்தி இருந்தது. இதனால் அந்த அணி நம்பிக்கையுடன் இறுதிப்போட்டியில் விளையாடும். அதே நேரத்தில் டெல்லி அணி மும்பையை பழிதீர்க்க வேண்டும் என்ற ஆக்ரோஷத்தில் ஆடும். இரு அணியிலும் அதிரடியான வீரர்கள் உள்ளனர். இதனால் இறுதிப் போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை அணியில் குயின்டன் டிகாக், இஷான்கிஷன் (483ஓட்டங்கள் ), சூர்யகுமார் யாதவ் (461ஓட்டங்கள்), ஹர்த்திக் பாண்ட்யா (278ஓட்டங்கள்), போல்லார்ட் (259ஓட்டங்கள்) போன்ற அதிரடி பேட்ஸ்மேன்களும், பும்ரா (27 இலக்குகள்), போல்ட் (22இலக்குகள்) போன்ற சிறந்த இலக்குகள் உள்ளனர்.
டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். அவர் 2 சதம், 4 அரை சதத்துடன் 603 ஓட்டங்கள் குவித்து இந்த தொடரில் 2-வது இடத்தில் உள்ளார். மேலும் கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (454 ஓட்டங்கள்), ரிஷப் பண்ட் (287ஓட்டங்கள்), ஹெட்மயர் போன்ற சிறந்த துடுப்பாட்டவீரர்களும் , ரபடா (29 இலக்குகள்), நோர்கியா (20இலக்குகள்) போன்ற சிறந்த இலக்குகள் உள்ளனர். சகலதுறைவீரர் வரிசையில் ஸ்டோய்னிஸ் (352 ஓட்டங்கள், 12 இலக்குகள்) என சிறப்பான வீரர்களையும் கொண்டுள்ளது.
இரு அணிகளும் நாளை மோதுவது 28-வது ஆட்டமாகும். இதுவரை நடந்த 27 போட்டியில் மும்பை 15-ல் டெல்லி 12-ல் வெற்றி பெற்றுள்ளன.