தமிழ் மக்கள் எம் பக்கம்” – தமிழ் தலைவர்களுக்கு கடுப்பேத்துகின்றார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்
‘தமிழ் மக்கள், நாடாளுமன்ற தேர்தலில் திசைகாட்டியை தெரிவு செய்து அமோக வெற்றியை வழங்கியுள்ளனர். எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கும் எமக்கே ஆதரவு வழங்குவார்கள் ஆகவே தமிழ் கட்சிகள் காணும் கனவு பலிக்காது. தமிழர்களை எம்மிடம் இருந்து பிரிக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘தமிழ் மக்களுக்குத் தெரியும் தேசிய மக்கள் சக்தி நல்லதொரு திசையைக் காட்டுகின்றது’ என்றும் அவர்கள் ‘சொன்னதையே செய்வார்கள்’ என்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்தார்.
மேலும் ‘வடக்கு தமிழ்க் கட்சியினர் எம்மை விமர்சனம் செய்வதால் தமிழ் மக்களின் ஆதரவை எம்மிடம் இருந்து பிரிக்க முடியாது’ எனவும் ‘மக்களின் அரசியல் பொருளாதார கோரிக்கைகள் எம்மால் நிறைவேற்றப்படும்’ எனவும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கருத்து தெரிவிதுள்ளார்.
வடக்கு கிழக்கில் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தேசிய மக்கள் சக்தியின் பிரச்சாரத்தை தாங்க முடியாது தமிழ் தேசியக் கட்சிகள் தலைவெட்டப்பட்ட கோழிகள் போல் திக்குத் திசை தெரியாமல் ஓடித்திரிந்து உள்ளடக்கமற்ற உளறல்களை வெளியிடுகின்றனர். உள்ளுராட்சி சபைகளுடன் தொடர்பற்ற விடயங்களைப் பேசி மக்களை இனவாத உசுப்பேத்தலுக்குள் தள்ள எண்ணுகின்றினர்.
ஜனநாயகத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செல்வம் அடைக்கலநாதன் ஜேவிபி மன்னாரில் வென்றால் மன்னார் பறிபோய்விடும் என்கிறார். தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொன்னம்பலம் கஜேந்திரகுமார் மனிதப்புதைகுழிகள் பற்றிப் பேசுகின்றார். ஈபிஆர்எல்எப் சுரேஸ் பிரேமச்சந்திரன் உள்ளுராட்சித் தேர்தலுக்கு பிரதமர் ஏன் யாழ்ப்பாணம் வருகின்றார், ஜனாதிபதி ஏன் யாழ்ப்பாணம் வருகின்றார் என்று கேள்வி எழுப்புகின்றார். தமிழரசுக் கட்சியும் தன் பங்கிற்கு பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோருகின்றது. எல்லா தமிழ் கட்சிகளுமே, தேசிய மக்கள் சக்தி தேர்தல் இடம்பெற்று இவ்வளவு காலமாகியும் தேசிய மக்கள் சக்தி ஒரு ஆணியையும் புடுங்கவில்லை எனக் கோரஸ் போடுகின்றனர்.
ஆனால் தாங்கள் கடந்த 15 ஆண்டுகளாக உள்ளுராட்சி சபையை, மாகாணசபையை, பாராளுமன்ற ஆசனத்தை தந்த மக்களுக்கு எந்த ஆணியைப் புடுங்கினார்கள் என்பதைச் சொல்லவில்லை. இனிமேலாவது உள்ளுராட்சி சபையில் எந்த ஆணியைப் புடுங்கபோகிறார்கள் என்பதையும் சொல்லவில்லை.
ஆனால் தமிழ் மக்கள் ஏதோ ஜேவிபியும் என்பிபியும் வெவ்வேறு என்று தவறாக நினைப்பதாக தமிழ் கட்சிகள் முட்டாள்தனமாக நம்புகின்றனர். தமிழ் மக்களுக்கு மிகத் தெளிவாகத் தெரியும் என்பிபி இன் மீது ஏறியிருந்து சவாரி செய்வது தமிழ் மக்களுக்குத் தெரியும். கடிவாளம் ஜேவிபியின் கையில் இருப்பதை நன்கு தெரிந்து தான் தமிழ் மக்கள் ஜேவிபிக்கு வாக்களிக்கின்றனர். இது தெரியாமல் சுரேஸ் பிரேமச்சந்திரன் தான் இதை முதன்முதலில் கண்டு பிடித்து புட்டு புட்டு வைப்பதாக கதைசொல்கின்றார். ஈபிஆர்எல்எவ் போல் சில கட்சிகளுக்கு இது தான் கடைசித் தேர்தலாக அமைந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
ஏனெனில் ஜேவிபி மட்டுமே உள்ளுராட்சி சபையில் அவ்வவ் பிரதேசங்களுக்கு என்ன செய்வோம் என்பதை மிகத் திட்டவட்டமாகத் தெரிவித்து வருகின்றனர். யாழ் மாவட்ட மாநாகர முதல்வருக்கான வேட்பாளராக விரிவுரையாளர் கபிலனை அறிவித்து தங்களது வேலைத்திட்டங்களையும் வெளியிட்டு வருகின்றனர். ஏனைய கட்சிகளுக்கு மாநகர முதல்வருக்கான வேட்பாளரை அறிவிக்க முடியாமல் உள்ளனர்.