நாட்டை சரியான பாதையில் கொண்டு செல்கிறோம். எதற்காகவும் கொள்கைகளில் மாற்றம் இருக்காது – தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க
தேர்தலில் தோல்வி அடைந்தவர்கள் தற்போது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக சேறுபூசும் வேலைகளை ஆரம்பித்துள்ளனர். அவர்களை பார்த்து நாம் அனுதாபப்படுகிறோம் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பிரதி அமைச்சரிடம் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாம் அரசாங்கத்தை பொறுப்பேற்று இன்னும் ஒரு மாத காலம் கூட ஆகவில்லை. இந்த நாட்களில் நாம் எமது எதிர்கால பயணத்திற்கான திட்டங்களை வகுத்து வருகிறோம். எமக்கென்று தெளிவான கொள்கைகள், திட்டங்கள் உள்ளன.நாம் நாட்டு மக்களிடத்தில் தெளிவான திட்டங்களை முன்வைத்துள்ளோம். எனவே நாம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம். அதற்கு மாற்றமாக ஒருபோதும் செயல்படமாட்டோம். இந்த நாட்டை சரியான பாதையில் நாம் வழிநடத்துவோம் என்பதை உறுதியாகக் கூறிக்கொள்கிறோம். அதேபோன்று அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல கிளின் ஸ்ரீலங்கா திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம். வறுமை ஒழிக்கும் திட்டங்களை ஆரம்பித்துள்ளோம். டிஜிட்டல் வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். வீழ்ச்சியடைந்துள்ள இந்த நாட்டை நாம் மேம்படுத்துவோம்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.