உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

”வர்த்தமானியில் வெளிவந்த 20ஆவது திருத்த வரைவு இறுதியோசனையில்லை ” – ஜி.எல்.பீரிஸ்

“அரசமைப்பின் 20ஆவது திருத்தத்துக்கான நகல் வடிவைத் தயாரித்தது நான் இல்லை. இது இறுதி யோசனையும் இல்லை.” இவ்வாறு அமைச்சரும் அரசமைப்பின் 20ஆவது திருத்த வரைவை ஆராய்வதற்காகப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவால் நியமிக்கப்பட்ட விசேட குழுவின் தலைவருமான பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

சிங்கள ஊடகம் ஒன்றுக்கு அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“சில விடயங்களை விரைவாக தெளிவுபடுத்த வேண்டும் என நாங்கள் கருதுகின்றோம். உதாரணத்துக்கு ஜனாதிபதி பாதுகாப்பு அமைச்சராகப் பதவி வகிக்கலாமா என்பதற்குத் தீர்வைக் காணவேண்டியுள்ளது.

அரசமைப்பு மாற்றத்துக்கான நடைமுறையின் ஆரம்பமாகவே நாங்கள் 20ஆவது திருத்தத்தைக் கருதுகின்றோம்.

தேர்தல் நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொண்ட பின்னர் அரசமைப்பில்குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகள் இடம்பெறும்.

20ஆவது திருத்தத்துக்கான நகல் வடிவைத் தயாரித்தது நான் இல்லை. அமைச்சரவையின் அனுமதியுடன் 20ஆவது திருத்தத்தை முன்வைத்தது அரசே. அமைச்சர்கள் என்ற அடிப்படையில் நாங்கள் கூட்டுப் பொறுப்பை ஏற்கின்றோம்.

20ஆவது திருத்த வரைவு இறுதி யோசனையில்லை. இதனை வர்த்தமானியில் வெளியிட்டுள்ளோமே தவிர நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை” – என்றார்.

“20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திலுள்ள நன்மையைப் பார்த்து எதிர்க்கட்சியிலுள்ள எவரேனும் அதற்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடும்” – கெஹெலிய ரம்புக்வெல

புதிய அரசாங்கம் பதவியேற்ற நாள் முதல் நாட்டுக்கான 20வது திருத்தத்தை உருவாக்குவது தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகின்றது. ஒரு புறமாக 20வது திருத்தம் சர்வாதிகாரத்தை நோக்கி பயணிப்பதாக பல தரப்பினரும் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற போதிலுமு் கூட ஆளுமு்தரப்பினர் அது மக்களுக்காகவே உருவாக்கப்பட்டுள்ளதாக மிகத்தெளிவாக கூறுவதையும் காண முடிகின்றது.

இந்நிலையில் , 20 ஆவது திருத்தத்தில் உள்ள விடயங்களை நாடாளுமன்றத்தில் ஆராயவும் மக்களின் கருத்தாடலுக்கு விடவும் எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து, மூன்றில் இரண்டு பெரும்பான்மை எவ்வாறுள்ளது என்பதைப் பார்க்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சட்டமூலத்தில் உள்ள நன்மையைப் பார்த்து எதிர்க்கட்சியிலுள்ள எவரேனும் அதற்கு ஆதரவாக வாக்களிக்கக் கூடும் எனவும் அவர் இதன்போது நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

இதே நேரத்தில் இன்னுமொரு ஆளுங்கட்சி பாராளுமன்ற  உறுப்பினரான நாமல் ராஜபக்ஸ 20ஆவது திருத்தம் பற்றி குறிப்பிடும் போது ”20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை எழுதியது யார், கொண்டு வந்தது யார் என்பதை ஆலோசிக்க வேண்டிய நேரம் இதுவல்ல , 20 ஆவது திருத்தத்தில் எவருக்கேனும் சந்தேகங்கள் எழுந்தால் நீதிமன்றத்தை நாடலாம் என குறிப்பிட்டுள்ளார்.

”தியாகி திலீபன் நல்ல தேக ஆரோக்கியத்துடனேயே நல்லூரான் வீதியில் உண்ணாவிரத மேடை ஏறினார் ” – மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவுக்கு பொ. ஐங்கரநேசன் பதில்.

திலீபன் ஒரு அரசியற் போராளி என்றும் அவர் நோயாளி அல்ல, நல்ல தேக ஆரோக்கியத்துடனேயே நல்லூரான் வீதியில் உண்ணாவிரத மேடை ஏறினார்  என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ண திலீபனின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்பாக சமீபத்தில் தெரிவித்துள்ள கருத்துகளுக்குப் பதில் கொடுக்கும் விதமாக அவர் விடுத்திருத்திருக்கும் ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்திய – இலங்கை ஒப்பந்தத்துடன் ஏற்பட்ட அமைதிக் காலத்தில் அப்போது யாழ் மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த திலீபன், மலையகத்தில் தமிழ் உறவுகளுக்காக வீட்டுத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்கும் முயற்சியில் இருந்தார்.

ஆனால், ஒப்பந்தத்துக்கு மாறாகத் தமிழர் தாயகப் பிரதேசங்களில் புதிதாகக் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டதோடு, சிங்களக் குடியேற்றங்களும் நிகழத் தொடங்கின. அத்தோடு நிராயுத பாணிகளாக உலாவிய புலிகள் மீதுபிற ஆயுதக் குழுக்கள் தாக்குதலையும் தொடங்கினர்.

இவற்றைத் தடுக்கும் முகமாகவே திலீபன், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார் என ஐங்கரநேசன் சுட்டிக்காட்டினார்.

முள்ளிவாய்க்கால் யுத்தத்திற்குப் பின்னர் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு எதிரான தரப்பினர்களாலும் பேரினவாதிகளாலும் விடுதலைப் புலிகள் பற்றிய பல்வேறு ஊகங்களும், தவறான தகவல்களும் பரப்பப்பட்டுவருகின்றன.

அவற்றில் ஒன்றே திலீபன் உண்ணாவிரதத்தால் உயிரிழக்கவில்லை அவர் நோயாளி என்பதால் பிரபாகரன் உண்ணாவிரதம் இருக்க அனுப்பி வைக்கப்பட்டார் என்ற பாதுகாப்பு அமைச்சின் செயலர் கமால் குணரட்ண கூறியிருக்கும் நயவஞ்சகக் கருத்து என்றும் ஐங்கரநேசன் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகள் யுத்தத்தில் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்கள் பற்றிய உண்மைகள் ஒருபோதும் தோற்கடிக்கப்படாது என்றும் அஞ்சலி நிகழ்ச்சிகளுக்குத் தடை ஏற்பட்டாலும் மக்கள் மனங்களில் குடியேறியிருக்கும் திலீபன் பற்றிய எழுச்சி நினைவுகளுக்கு ஒருபோதும் தடைபோட முடியாது என்றும் அவர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

டெனிஸ்வரனிடம் மன்னிப்பு கேட்க முடியாது சி.வி.விக்கினேஸ்வரன் திட்டவட்டம் ! – வழக்கை விலக்க டெனீஸ்வரன் தரப்பு மறுப்பு.

வடமாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் மீது தொடுத்திருந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வாபஸ் பெறுவதாக வடமாகாண முன்னாள் அமைச்சர் பா.டெனீஸ்வரன் ஏற்கனவே தெரிவித்திருந்த போதிலும், இன்று காலை மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்த போது அதனை வாபஸ் பெறுவதற்கு டெனீஸ்வரன் தரப்பு மறுத்துவிட்டது.

சமரசமாகத் தீர்பதற்கு டெனீஸ்வரன் தரப்பில் முன்வைக்கப்பட்ட மூன்று நிபந்தனைகளை ஏற்பதற்கு விக்கினேஸ்வரன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். குறிப்பாக தன்னால் மன்னிப்புக் கேட்க முடியாது என்பதை அவர் உறுதியாகக் கூறிவிட்டார். இதனையடுத்து இந்த வழக்கு மீதான விசாரணை நாளையும், நாளை மறுதினமும் நடைபெற்று தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

சட்டத்தரணி டெனிஸ்வரன், முன்னாள் முதலமைச்சர் நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மீளப்பெறுமாறு அரசியல் அவதானிகள், தமிழ் தேசிய ஆர்வலர்கள் மற்றும் தமிழ் சட்டத்தரணிகள் பலர் அவரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தனர்.

சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என்றும் அவரை மீள அமைச்சராக உள்வாங்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் 29.06.2018 அன்று வழங்கிய இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த தவறிவிட்டார் என சட்டத்தரணி டெனிஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்திருந்தார்.

பிரதான வழக்கில் சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என வட மாகாண சபை கலைக்கப்பட்டதன் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் 05.08.2019 அன்று தீர்ப்பளித்தது.

இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த நீதியரசர் விக்கினேஸ்வரன் தவறிவிட்டார் என்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், “கட்சி வேறுபாடுகளுக்கப்பால் தமிழ் அரசியல்வாதி தொடுத்த வழக்கால் ஓர் நீதியரசர் குற்றவாளியாக காணப்பட்டார் என்றோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் என்ற இழி நிலை ஏற்படக் கூடிய சந்தர்ப்பத்தைத் தவிர்ப்பது அவசியம். சட்டத்தரணி டெனிஸ்வரன் இன்றைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பெருந்தன்மையாக கைவாங்க வேண்டும். அப்படி அவர் செய்தால் அவர் மீதான நன் மதிப்பு உயரும்” எனவும் அரசியல் ஆர்வலர்கள் பலரும் டெனீஸ்வரனுக்குத் தெரியப்படுத்தியிருந்தனர்.

இதற்கு தனது முகநூல் பக்கத்தில் பதிலளித்த டெனீஸ்வரன், “கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும், இன்று எந்தப் பாராளுமன்ற உறுப்பினரும் கதைக்காத ஒரு விடயத்தை எமது முதலமைச்சர் உரக்கச் சொல்லி இருக்கின்றார். முதற்கண் அதற்கு தலைவணங்குகிறேன். இதனை எமது இனம்சார்ந்த ஒரு விடயமாகவே நான் பார்க்கின்றேன். அதன் பொருட்டு அவருக்கு பக்கபலமாக நான் எப்போதும் இருப்பேன்” எனத் தெரிவித்திருந்தார். அதேவேளையில், இந்த வழக்கை தான் வாபஸ் பெறுவதாகவும் அவர் கூறியிருந்தார்.

இந்த நிலையில், இன்று காலை வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, டெனீஸ்வரன் தரப்பு மூன்று நிபந்தனைகளை முன்வைத்தது. விக்கினேஸ்வரன் பகிரங்க மன்னிப்புக் கோர வேண்டும். வழக்கின் செலவுத் தொகையை முழுமையாகத் தரவேண்டும், உச்ச நீதிமன்றத்தில் விக்கினேஸ்வரன் தரப்பால் டெனீஸ்வரனுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்கு வாபஸ்பெறப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டனர். மன்னிப்புக் கேட்பதற்கு விக்கினேஸ்வரன் திட்டவட்டமாக மறுத்துவிட்டார். இந்த நிலையில் வழக்கு விசாரணை நாளை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்ற தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் எம்.கே.சிவாஜிலிங்கம் கைது!

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் வாரம் இன்று (செவ்வாய்க்கிழமை) ஆரம்பாகியுள்ள நிலையில், குறித்த நினைவேந்தல் நிகழ்வினை நடத்த நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மற்றும் கோப்பாய் பொலிஸ் பிரிவில் யாழ்.நீதவான் நீதிமன்றில் தடையுத்தரவை பொலிஸார் பெற்றிருந்தனர்.

இந்த நிலையில் நீதிமன்ற தடையை மீறி தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தை அனுஷ்டித்த குற்றச்சாட்டில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரினால் சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தடைகளை மீறி எம்.கே.சிவாஜிலிங்கம் இன்றைய தினம் காலை கோண்டாவில் பகுதியில் தியாக தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

எம்.கே.சிவாஜிலிங்கம் கைது | Virakesari.lk

 

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டதன் எதிரொலி – தமிழ்க்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு மாவை.சேனாதிராஜா அழைப்பு.

தியாக தீபம் திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விடயம் குறித்து ஆராய்வதற்காக யாழ்ப்பாணத்தில் இன்று (15.09.2020) தமிழ்க் கட்சிகள் ஒன்றுகூடவுள்ளதாக மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றுகூடி அடுத்தகட்ட நகர்வை எவ்வாறு மேற்கொள்வது என்பது தொடர்பாக ஆராய்வதற்காக கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அழைப்பு விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில், “தியாகி திலீபனின் நினைவேந்தலை தாயகமெங்கும் மக்கள் வழக்கமாக அனுஷ்டித்து வருகிறார்கள். இம்முறை தடை உத்தரவு நீதிமன்றம் மூலம் பெறப்பட்டுள்ளது. இது அரசின் கொள்கை முடிவா அல்லது வடக்கு பாதுகாப்பு தரப்பு எடுத்த நடவடிக்கையா என்பது தெரியவில்லை. அதையும் ஆராய வேண்டும்.

அரசின் கொள்கை முடிவென்றாலும் பாதுகாப்பு தரப்பின் நடவடிக்கையென்றாலும் தமிழ் மக்களின் அஞ்சலி உரிமையை, தமிழ்ச் சட்டத்தரணிகள் நீதிப்பொறிமுறையின் ஊடாகவே பெற்றுக்கொள்ள நடவடிக்கையெடுப்பது பற்றியும் நாம் ஆராயவுள்ளோம்.

அதுதவிர, யாழ். மாநகரசபை எல்லைக்குள் நினைவேந்தலை தடை செய்து நீதிமன்ற உத்தரவை பெற்றுள்ளார்கள். இது தொடர்பாக இன்று மதியத்தின் பின் தமிழ்க் கட்சிகளின் பிரதிநிதிகள் ஒன்றாக கூடி ஆராயவுள்ளோம். தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் அநேகமான கட்சிகள் இன்று சந்திப்பில் கலந்துகொள்வார்கள்” என தெரிவித்துள்ளார்.

‘யுத்தம் நடைபெற்றபோது அரசுடன் பேரம் பேசி தமிழினத்தை நடுக்கடலில் தள்ளி விட்டவர்தான் இந்த கருணா’ – தவராசா கலையரசன்

யுத்தம் நடைபெற்றபோது அரசுடன் பேரம் பேசி தமிழினத்தை நடுக்கடலில் தள்ளி விட்டவர்தான் இந்த கருணா என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம்- பாண்டிருப்பு பகுதியில் நேற்று (14.09.2020) இடம்பெற்ற வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நிகழ்வில் தவராசா கலையரசன் மேலும் கூறியுள்ளதாவது,

“நாட்டில் ஏற்பட்ட இன ரீதியான பிரச்சினைகளில் பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள். கல்வியாளர்கள் , புத்திஜீவிகள் திட்டமிட்டு அழிக்கப்பட்டார்கள். தொன்மையான பூர்வீக நிலம், கட்டம் கட்டமாக அழிக்கப்பட்டு தமிழர்கள் ஒரு குறுகிய வட்டத்திற்குள் கொண்டு செல்லப்படுகின்றனர். இந்த நிலைமை நீடிக்குமானால் எதிர்காலத்தில் அம்பாறை மாவட்டத்தில் தமிழர்கள் வாழ்ந்திருக்கின்றார்களா என்ற நிலை தோற்றுவிக்கப்படும் .

தமிழ் தேசிய கூட்டமைப்பு, தமிழர்களுக்கு எதிராக ஒருபோதும் செயற்படாது. இந்த அரசு தமிழர்களை திட்டமிட்டு ஏமாற்றி வருகின்றது .

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கல்முனை வடக்கு பிரதேச செயலகம் தரமுயத்தி தருவதாக கொடுத்த வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்தனர்.

அதேபோன்று 2020 நாடாளுமன்ற தேர்தலில் அரசு வழங்கிய வாக்குறுதியை நம்பி, 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை தமிழ் தேசியத்திற்கு எதிராக வாக்களித்தனர். இது கல்முனை மக்களுக்கு எதிராக கிடைத்த ஏமாற்றம் அல்ல. இந்த நாட்டை ஆட்சி செய்யும் அரசாங்கங்கள் இதனையே செய்து வருகிறது.

நடைபெற்று முடிந்த  நாடாளுமன்ற தேர்தலில் 29 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை பெற்ற கருணா, வாக்கெண்ணும் நிலையத்தில் வைத்து தமிழ் தரப்பில் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது என்பதனை அறிந்தவுடன் எனது பணி நிறைவேறியது என வெளியேறினார்.

யுத்தம் நடைபெற்றபோது அரசுடன் பேரம் பேசி தமிழினத்தை நடுக்கடலில் தள்ளி விட்டவர்தான் இந்த கருணா, இவரை இன்னும் நம்பினால் தமிழர்கள் இனி அழியப்போகின்றோம் என்ற செய்தியைதான் குறிப்பிடுகின்றேன்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் கவனத்தை ஈர்த்த ஒரு பதாகை ! – உடனடியாக யாழ்.வந்த இராஜாங்க அமைச்சர்.

யாழ்ப்பாணம் – பொம்மைவெளி பகுதியில் வீடமைப்பு திட்டத்தை பெற்றுத் தருமாறு வலியுறுத்தி நேற்று முன்தினம் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டம் குறித்து ஆராய்வதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நடவடிக்கை எடுத்துள்ளார். வீடமைப்பு இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவை குறித்த பகுதிக்கு சென்று, விடயங்களை ஆராயுமாறு பிரதமர் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பொம்மைவெளி பகுதியில் வெள்ளப் பெருக்கு அபாயம் தொடர்ச்சியாக காணப்படுவதாகவும், தமக்கான வீடமைப்பு திட்டத்தை அமைத்து தர நடவடிக்கை எடுக்குமாறும் கோரி அந்த பிரதேசத்தில் வசிக்கும் முஸ்லிம் மக்கள் நேற்றும் ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர்.இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிறுவனொருவன் ‘மஹிந்த மாமா எங்களுக்கு வீடு கட்டி தரமாட்டிங்களா?”” என எழுதப்பட்ட பதாகையொன்றை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புகைப்படம் சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பகிரப்பட்டது.

இந்த புகைப்படத்தை நேற்று பார்வையிட்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, குறித்த பிரச்சினை தொடர்பில் உடனடியாக ஆராயுமாறு விடயத்திற்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்தவிற்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதையடுத்து, இராஜாங்க அமைச்சர் இந்திக்க அநுருத்த யாழ்ப்பாணத்திற்கு நேற்று விஜயம் மேற்கொண்டு இது தொடர்பில் ஆராய்ந்துள்ளார். யாழ் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனும் குறிப்பிட்ட இடத்துக்கு சென்று நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

தொடரும் பொலிஸாரின் கெடுபிடி! – திலீபன் நினைவேந்தல் வளைவுகளும் திருவுருவப்படங்களும் அகற்றப்பட்டது.

தியாக தீபம் திலீபன் 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் திகதி ஐந்து கோரிக்கைகைளை முன்வைத்து உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தவர் தியாகி திலீபன் . கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை தண்ணீர் அருந்தவும் போவதில்லை என்று அறிவித்தார். ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாததால் 12ஆம் நாளான செப்டம்பர் 26ஆம் திகதி வீரச்சாவடைந்தார்.  அவருடைய தியாகத்தை நினைவு கூர்ந்து தமிழர்களால் அவருடைய நினைவு தினம் வருடாவருடஇம் அனுஸ்டிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் – நல்லூர் மற்றும் யாழ். பல்கலைக்கழக வளாகப் பகுதிகளில் தியாக தீபம் திலீபன் நினைவாக அமைக்கப்பட்டிருந்த திருவுருவப்படங்கள், நினைவு வளைவுகளைப் பொலிஸார் அகற்றிக்கொண்டு சென்றுள்ளனர்.

தியாக தீபம் திலீபனின் 33ஆம் ஆண்டு நினைவேந்தலின் முதல் நாள் இன்றாகும். திலீபன் நினைவேந்தலை நடத்துவதற்கு தடை விதிக்குமாறு யாழ்.நீதிமன்றில் பொலிஸார் தாக்கல் செய்த வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் நிகழ்வுகளைத் தடை செய்து நேற்று உத்தரவிட்டிருந்தது.

இந்தநிலையில் நேற்று நள்ளிரவில் குறித்த நினைவேந்தல் வளைவுகள் மற்றும் திருவுருவப்படங்கள் பொலிஸாரால் அகற்றப்பட்டுள்ளன.

“மக்கள் எம்மீது கொண்ட ஜனநாயகத்தின் உன்னத விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கு ஒரு அரசாங்கமாக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்“ – பிரதமர் மகிந்த ராஜபக்ஸ

சர்வதேச ஜனநாயக தினம் இன்று  கொண்ட்டாப்படுகிறது. இதனை முன்னிட்டு  ஜனநாயகத்தை பாதுகாத்த ஒரு நாட்டின் பிரதமர் என்ற வகையில் சர்வதேச ஜனநாயக தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிடுவதற்கு கிடைத்தமை தொடர்பில் நான் மகிழ்ச்சியடைகின்றேன் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், ‘ஜனநாயகத்தை பலப்படுத்துவதற்கும் உறுதிபடுத்துவதற்கும் உலக நாடுகளை ஊக்குவித்து 2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் ஆண்டுதோறும் செப்டம்பர் 15ஆம் திகதி சர்வதேச ஜனநாயக தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

தற்போதைய மக்கள் சமூகத்தினுள் அனைவரும் தங்களது ஜனநாயக உரிமை உறுதிபடுத்தப்பட வேண்டும் என எதிர்பார்க்கின்றனர். அவர்களது வாழ்க்கையில் சுதந்திரம் மற்றும் சந்தோஷத்தை அனுபவிக்கும் உரிமையை பாதுகாத்தல் ஜனநாயகத்தின் குறிக்கோளாக காணப்பட வேண்டும் என நாம் நம்புவோம்.

எமது நாட்டு மக்களின் வாழும் உரிமைக்காக ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கு ஜெனீவா மனித உரிமைகள் பேரவைக்கு சென்ற கடந்த காலம் இந்த தருணத்திலும் எனது ஞாபகத்திற்கு வருகிறது. பயங்கரவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து நாட்டிற்கு சமாதானத்தை பெற்றுக்கொடுத்து, இலங்கையில் ஜனநாயகத்தை உறுதிபடுத்துமாறு அன்று நாம் பிரார்த்தித்தோம்.

நாம் ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பிரதிநிதித்துவ ஜனநாயகத்திற்காக முன்னிற்க முடிந்ததில் ஒரு நாடு என்ற வகையில் நாம் பெருமைப்படலாம்.

தேர்தல்களை நடத்தாத அரசாங்கங்களுக்கு எதிராக ஒன்றிணைந்து நாட்டு மக்களுடன் ஜனநாயகத்தின் வெற்றிக்காக நாம் செயற்பட்டோம்.

எதிர்காலத்திலும் சுதந்திரமான, நியாயமான தேர்தல்களை உரிய காலத்தில் நடத்தி மக்கள் எம்மீது கொண்ட ஜனநாயகத்தின் உன்னத விழுமியங்களை நிலைநிறுத்துவதற்கு ஒரு அரசாங்கமாக நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவோம் என்ற உறுதிப்பாட்டை நாங்கள் அறிவிக்கின்றோம்.

ஜனநாயகத்தை பாதுகாத்து சுதந்திரமான, இறையாண்மை கொண்ட அரசு என்ற வகையில் எதிர்காலத்தை நோக்கி முன்செல்வதற்கு சர்வதேச ஜனநாயக தினமான இன்று அனைத்து இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.