உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இலங்கையில் தியாகிதிலீபனின் நினைவு தினத்தை அனுஸ்டிக்க பொலிசார் மூலம் நீதிமன்றத் தடையுத்தரவு!

தியாகி திலீபனின் நினைவுதினத்தை அனுஸ்டிப்பதற்கு தமிழர்பகுதிகளில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக யாழ்ப்பாணம், மட்டக்களப்பு உள்ளிட்ட பகுதிகளில் தியாகி திலீபனின் நினைவுநாளை அனுஸ்டிக்க பொலிசார் மூலம் நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் யாழ்நீதிமன்றில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த விடயத்தின் மீதான வழக்கின் போது தடைசெய்யப்பட்ட அமைப்பு ஒன்றின் உறுப்பினரை நினைவு கூறுதல் , கொரோனா அச்சமுள்ள நிலையில் கூட்டம் கூடுதல், மீள ஆயுதக் கலாச்சாரமொன்றை ஆதரித்தல் போன்ற காரணங்களுக்காக தியாகி திலீபனின் நினைவு நாளை அனுஸ்டிக்க தடைவிதிப்பதாக யாழ்.நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதே நேரம் தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வினை மட்டக்களப்பில் மேற்கொள்வதற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னனியின் மட்டக்களப்பு இணைப்பாளருக்கு பொலிசார் மூலம் நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

நாளை 15ம் திகதி தொடக்கம் 26ம் திகதி வரையில் தியாகி திலீபனின் நினைவேந்தல் வடக்கு கிழக்கு மாகாணங்களில் அனுஸ்டிக்கப்படவுள்ள நிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் அந்நிகழ்வினை ஒழுங்கமைப்பு செய்யும் பிரதிநிதிகளுக்கு எதிராக நீதிமன்றத்தில் பொலிஸாரினால் தடையுத்தரவு பெறப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் புதிய அரசாங்கம் பதவியேற்றதை தொடர்ந்து மனித உரிமைகளில் பின்னடைவு – ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்செலெட் கவலை.

இலங்கையின் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் மனித உரிமைகள் தொடர்பான அர்ப்பணிப்புகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளமை தொடர்பாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பச்செலெட் கவலைகளை எழுப்பினார்.

ஐ.நா மனித உரிமை பேரவையின் 45வதுஅமர்வில் ஆரம்ப உரையை ஆற்றிய அவர், இலங்கையின் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் மனித உரிமைகள் தொடர்பான அர்ப்பணிப்புகளில் பின்னடைவு ஏற்பட்டுள்ளமை குறித்தும் கவலை வெளியிட்டார்.

30/1 தீர்மானத்திற்கான ஆதரவை மீள பெற்றமை காரணமாக பிற முன்னேற்றங்களுக்கிடையில், அரசியலமைப்பின் முன்மொழியப்பட்ட 20 வது திருத்தம் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் சுதந்திரத்தை பாதிக்கும் என மிச்சேல் பச்செலெட் சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோத கொலைகளில் பங்கேற்றதாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் இராணுவ சார்ஜெண்டிற்கு மார்ச் மாதம் வழங்கப்பட்ட மன்னிப்பு, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மூத்த இராணுவ அதிகாரிகள் பதவிகளில் அமர்த்தப்படுத்தல் போன்றவற்றினையும் மிச்சேல் பச்செலெட் சுட்டிக்காட்டினார்.

இத்தகைய குற்றங்களின் விசாரணையைத் தடுக்க பொலிஸ் மற்றும் நீதித்துறைக்குள் தலையிடுவதானது மிகவும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பங்கள், மனித உரிமை பாதுகாவலர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஆகியோரின் கண்காணிப்பு மற்றும் அச்சுறுத்தல் போன்றவற்றினையும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்றும் மிச்சேல் பச்செலெட் வலியுறுத்தினார்.

எனவே அமைதி, நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்திக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களைத் தடுக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என மிச்சேல் பச்செலெட் குறிப்பிட்டார்.

ஒன்பது மாகாணங்களுக்கு பதிலாக பண்டைய அரச கால மாகாண ஆட்சி?

பண்டைய காலத்தில் இருந்தததை போல  றுருண, பிஹிட்டி மற்றும் மாயா ஆகிய மாகாணங்களை மையப்படுத்தி 3 மாகாண சபைகளை மாத்திரம் கொண்டிருக்க வேண்டும் என்று முன்வைக்கப்பட்டுள்ள யோசனை குறித்து அரசாங்கம் இறுதி முடிவு இன்னும் எடுக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று திங்கட்கிழமை பகல் நடந்த ஊடக சந்திப்பில் பேசிய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இவ்வாறு கூறினார்.

தொடர்ந்தும் அங்கு பேசிய அவர்,

ஒன்பது மாகாணங்களுக்கு பதிலாக பண்டைய அரச காலத்தில் இருந்தததை போல றுருண, பிஹிட்டி மற்றும் மாயா ஆகிய மூன்று மாகாணங்களை மாத்திரம் உருவாக்கி முன்னெடுத்துச் செல்லலாம் என்று இராஜாங்க அமைச்சர் அட்மிரல் சரத் வீரசேகர முன்வைத்த யோசனை குறித்து அரசாங்கம் பரிசீலிக்கிறது என்று குறிப்பிட்டார்.

50,000 பட்டதாரிகளுக்கான திசைமுகப்படுதல் பயிற்சித் திட்டம் இராணுவ நிலையங்களில் இன்று ஆரம்பம்!

ஜனாதிபதியின் சுபீட்சத்திற்கான நோக்கு எனும் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட 50,000 பட்டதாரிகளுக்கான திசைமுகப்படுதல் பயிற்சித் திட்டம் ஜனாதிபதியின் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக பாதுகாப்புப் பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவின் வழிகாட்டுதல் நாடு முழுவதும் உள்ள பாதுகாப்புப் படை தலைமையகங்கள், படையணி தலைமையகங்கள் மற்றும் இராணுவ பயிற்சிப் பாடசாலைகள் என 51 இராணுவ நிலையங்களில் திங்கட்கிழமை (14.09.2020) கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்படுகின்றது.

ஐந்து கட்டங்களின் கீழ் செயல்படுத்தப்படும் இத்திட்டமானது ஒரு மாத கால வதிவிட பயிற்சி திட்டமாகும். ஒவ்வொரு கட்டத்திற்கும் 10,000 பட்டதாரிகள் வீதம் 5 மாதங்களுக்குள் 50,000 பட்டதாரிகளுக்கும் பயிற்சியளிக்கப்பட்டு, முழுமையான ஆற்றல்மிக்க பணியாளர்களாக தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பயனுள்ள பங்களிப்பை உறுதி செய்வதற்காக இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளின் அறிவு, திறன்கள் மற்றும் அணுகுமுறைகளை வளர்ப்பதற்காக பாதுகாப்பு அமைச்சின் நேரடி கண்காணிப்பில் 7 பாதுகாப்பு படை தலைமையகங்களின் ஒருங்கிணைப்பில் இராணுவ பயிற்சி பணிப்பகத்தினால் திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

ஒவ்வொரு கட்டமும் 10,000 பட்டதாரிகளுக்கு பயிற்சியளித்து, அரச துறையின் முழு திறனை ஒரே நேரத்தில் அடைவதற்கு ´தலைமைத்துவம் மற்றும் குழு செயற்பாட்டு பயிற்சி, முகாமைத்துவ பயிற்சி , தனியார் மற்றும் பொதுத் துறை நிறுவன பயிற்சி, திட்டமிடல் மற்றும் கள ஆய்வுகள் போன்ற பாடங்களை உள்ளடக்கியது. ´ஒத்திசைவு மற்றும் நெகிழ்வுத் தன்மை திறமையான பொதுத்துறை ஊழியரை வளர்ப்பதில் முக்கியத்துவம் பெறுகின்றது.

அதேவேளை மோசமான உற்பத்தித்திறனைக் குறைக்கும். இந்த பயிற்சியில் நிர்வாக திறன்கள், அரசாங்க பொறிமுறையின் குறிக்கோள்கள், அர்ப்பணிப்பு, ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு, தன்னம்பிக்கை, புதுமை, நெகிழ்வுத்தன்மை, காட்சிப்படுத்தல், சமூகத்தில் மரியாதை மற்றும் அங்கீகாரம் பற்றிய அறிவை பெற்றுக்கொள்ள முடியும்.

மாவட்டங்களின் படி பங்கேற்கும் பட்டதாரிகள் பிரிக்கப்பட்டுள்ளனர். பங்கேற்பாளர்களுக்கு திட்டமிடல் மற்றும் கள ஆய்வுகளில் ஈடுபடுவதற்கான கூடுதலான வாய்ப்புகள் வழங்கப்படுவதன் ஊடாக அவர்களின் அணுகுமுறைகள் மற்றும் திறன்களை மேம்படுத்திக்கொள்ள முடியும்.

ஆட்சேர்ப்பு முதல் ஓய்வு பெறும் வரை அரசத்துறை ஊழியர்களின் மனநிலையை மாற்றுவதற்கான முக்கியமான தேவையை மையமாகக் கொண்டு இராணுவப் பயிற்சியின் ஊடாக நீண்ட கால மற்றும் குறுங்கால இலக்குகளில் திறம்பட மற்றும் விளைத்திறனாக பணியாற்றுவதற்கான தலைமைத்துவம், நிர்வாக திறன், இலக்கு மீதான கவனம், தன்நம்பிக்கை மற்றும் அரச பொறி முறையின் நோக்கங்களை புரிதல் என்பவற்றை வளர்த்துக் கொள்ள முடியும்.

இந்த குறுகிய கால முயற்சியின் குறிக்கோளானது தலைமைத்துவ திறன்கள் மற்றும் பண்புகள், குழு உணர்வு ஆகியவற்றின் அடிப்படையில் நாட்டின் அனைத்து பொதுமக்களுக்கும் உயர்தர பொதுத்துறை சேவையை வழங்கக்கூடிய ஒரு ஆற்றல்மிக்க, இலக்கு சார், ஒழுக்கமான மற்றும் திறமையான பணியாளர்களை உருவாக்குவதாகும். நீண்டகால நோக்கங்களை 5 ஆண்டுகளுக்குள் அடையக்கூடிய வகையில் பொதுத்துறை ஊழியர் படையை திறமையான வழிமுறைகள், அணுகுமுறைகள் சமூகத்திற்கு உழைக்கும் கலாச்சார வளர்ச்சி, பொதுத்துறை சேவை அங்கிகாரம், மதிப்பு ,அடையாளம் செயல்பாட்டு அம்சங்களை மதிப்பீடு செய்தல் எனும் பகுதிகளில் அபிவிருத்தி செய்யப்படுகின்றது.

அதன்படி இராணுவப் பயிற்சித் திட்டம் விரிவுரைகள், கலந்துரையாடல்கள், வெளிக்கள பயிற்சி நடவடிக்கைகள், குழு கட்டமைத்தல் நடவடிக்கைகள், ஆய்வு சுற்றுப்பயணங்கள், திறன் ஆய்வுகள் மற்றும் கள ஆய்வுகள் ஆகியவற்றின் மூலம் ஐந்து சுயாதீனமான ஒன்றோடொன்று தொடர்புடைய தொகுதிகளின் கீழ் தொடங்கப்படும், இது பொதுத்துறையின் பங்களிப்பை ஆற்றல்மிக்கதாக மாற்றும் வழி. இராணுவ பயிற்சி நிறுவனங்கள், பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு, உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு, தேர்ந்தெடுக்கப்பட்ட அரச மற்றும் தனியார் துறைகள் மற்றும் சில அரச நிறுவனங்கள் இத் திட்டத்திற்கா செயல்படவுள்ளன.

இந்த 5 மாத முழுவதும் பட்டதாரி பயிற்சி திட்டத்தின் மூலோபாய கருத்துருவாக்கத்தினை ஜனாதிபதி செயலகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு என்பவற்றின் வழிகாட்டல்களில் இராணுவத் தலைமையக பயிற்சி பணிப்பகம் முன்னெடுக்கின்றது.

“விரைவில் தேர்தல் முறையில் மாற்றம் ஏற்பட்டு சிறுபான்மை பிரதிநிதித்துவம் ஒழிய போகிறது“ – எச்சரிக்கின்றார் மனோ கணேசன்.

அரசியலமைப்பு குழுவில் மலையக பிரதிநிதி இடம்பெறுவது தொடர்பிலும், நஷ்டமடையும் தோட்டங்கள், சிறுதோட்டடங்களாக மறுசீரமைப்பு செய்யப்படுவது தொடர்பாகவும், நாம் எழுப்பியுள்ள கோரிக்கைகளுக்கு அரசாங்கமும், அரசுக்கு உள்ள இருக்கும் இதொகாவும் பதில் குறை வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இது பற்றி மேலும் தெரிவித்த  அவர், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் என்ற முறையில், மலையக தமிழ் மக்கள் தொடர்பில், கடந்த இரு வாரங்களுக்குள், இரண்டு முக்கிய கோரிக்கைகளை நான் தேசிய அரங்கில் முன் வைத்துள்ளேன்.

முதலாவது, அரசியலமைப்பு குழுவில், ஏனைய சகோதர இன பிரதிநிதிகள் இடம் பெற்றிருப்பதை போன்று, மலையக தமிழ் பிரதிநிதி ஒருவரும் நியமிக்கப்பட வேண்டும்.

இரண்டாவது, பெருந்தோட்டங்களை, சிறு தோட்ட முறைமைக்குள் கொண்டு வந்து காணிகள் பிரித்து வழங்கப்படும் உத்தேச திட்டத்தில், தோட்ட தொழிலாளர்களையும் பங்காளிகளாக்கி அவர்களுக்கும் காணிகள் வழங்க வேண்டும்;

இந்த இரண்டு விஷயங்கள் தொடர்பிலும் இ.தொ.கா மெளனமாக இருக்கின்றது. அரசாங்கத்துக்குள் இருக்கும் மலையக கட்சியான இ.தொ.கா, இதுபற்றி தமக்கு எதுவுமே தெரியாதது போல், கள்ள மெளனம் காக்கிறது.

இவை பற்றி இவர்கள் ஜனாதிபதி, பிரதமருடன் இதுவரை பேசியதாக தெரியவில்லை. இவை பற்றி நடைபெற்றுள்ள உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் இ.தொ.கா பிரதிநிதிகளுக்கு கலந்துக் கொள்ள சந்தர்ப்பம் வழங்கப்படக்கூட இல்லை. மலையக மக்களின் இருப்பு சம்பந்தமான இந்த அடிப்படை பிரச்சினைகள் பற்றி இதொகா பிரதிநிதிகள் பாராளுமன்றத்திலும், பேசுவதில்லை. வெளியேயும் பேசுவதில்லை.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதே, தோட்டத்தொழிலாளருக்கு உறுதியளித்து, இந்த வருடம் ஜனவரி முதல் வழங்குவதாக சொன்ன ஆயிரம் ரூபா நாட்சம்பளம் போன்று இவையும் கிடப்பில் போடப்பட்டுள்ளன.

விரைவில் தேர்தல் முறையில் மாற்றம் ஏற்பட்டு சிறுபான்மை பிரதிநிதித்துவம் ஒழிய போகிறது. அப்போதும் இ.தொ.கா, அரசுக்கு உள்ளே பேசாமடந்தைகளாக இருக்கப்போகின்றதா? என கேட்க விரும்புகின்றேன்

இது தொடர்பில், மலையக அரசியல் சமூக இயக்கங்கள், இளைஞர் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், சமூக ஊடக போராளிகள், மலையக பிராந்திய மற்றும் தேசிய ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், சர்வதேச மலையக அமைப்புகள் ஆகியவை மத்தியில், தேசிய, சர்வதேச மட்டங்களில் கருத்து பரிமாற்றம் நடைபெற வேண்டும். அதற்கு நாம் ஆவன செய்வோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“இனப்பிரச்சினைக்கான தீர்வாக, நாடு தமிழ்கட்சிகள் முன்வைத்துள்ள சமஸ்டி முறையை நோக்கி செல்லவேண்டும்“ – அனுரகுமார திசநாயக்க

இனப்பிரச்சினைக்கான தீர்வாக, நாடு தமிழ்கட்சிகள் முன்வைத்துள்ள சமஸ்டி முறையை நோக்கி செல்லவேண்டும் எனவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவேண்டும் நாடாளுமன்றத்தை அடிப்படையாக கொண்ட ஆட்சிமுறை ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு எனவும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசநாயக்க தெரிவித்துள்ளார். பேட்டியொன்றில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

கேள்வி- ஜேவிபி ஏன் 20வது திருத்தத்தினை எதிர்க்கின்றது?

பதில்: 20வது திருத்தத்தை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம்.
அரசமைப்பு திருத்தங்கள் மூலம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் என்ன செய்ய முயல்கின்றது என்றால் ஜனாதிபதிக்கு முழு அதிகாரத்தையும் வழங்க முயல்கின்றது. இது ஆபத்தானது. இது அரசமைப்பு சர்வாதிகாரத்துக்கு வழிவகுக்கலாம் இதனை நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம்.

மேலும் உத்தேச 20வது திருத்தத்தின் மூலம் ஜனாதிபதியால் அவசர சட்டங்களை கொண்டுவரமுடியும். அமைச்சரவையில் அங்கம் வகிக்ககூடிய அமைச்சர்களின் எண்ணிக்கையை மாற்றமுடியும் கணக்காய்வு ஆணைக்குழுவையும் அவர் இரத்து செய்யமுடியும். 20வது திருத்தம் நடைமுறைக்கு வந்ததும் இலங்கையில் ஜனநாயக ஆட்சி முறை காணப்படாது இதன் காரணமாக நாட்டின் ஸ்திரதன்மையை பாதிக்கும்

கேள்வி – இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவது குறித்தும் நாடாளுமன்றம் செல்வது குறித்தும் உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில்- இரட்டை பிரஜாவுரிமை உள்ளவர்களை நாடாளுமன்றத்திற்கு அனுமதிப்பது குறித்து நாங்கள் விவாதிக்கவேண்டும் என நாங்கள் கருதுகின்றோம். நாடாளுமன்ற உறுப்பினர்களாக நாங்கள் மேற்கொள்ளும் சத்தியப்பிரமாணத்துக்கும், இன்னொரு நாட்டின் பிரஜையான பின்னர் நபர் ஒருவர் செய்யும் சத்தியப்பிரமாணத்துக்கும் இடையில் வித்தியாசம் உள்ளது.

மேலும் இது பொது மக்களின் பிரதிநிதிகளின் நாட்டிற்கும் ஆட்சி முறைக்குமான விசுவாசம் குறித்த கேள்வியை எழுப்புகின்றது.

கேள்வி – நகல்வடிவத்துக்கு எதிராக சட்டநடவடிக்கையை எடுப்பது குறித்து ஆராய்கின்றீர்களா?

பதில்- உத்தேச திருத்தம் குறித்து நீதிமன்றத்துக்கு செல்வது அவசியம் என நாங்கள் கருதவில்லை. 20வது திருத்தம் உருவாக்கப்பட்டுள்ள விதம் காரணமாக நாங்கள் நீதிமன்றம் செல்ல முடியாது.நீதிதுறை ஜனநாயகம் பறிபோவதற்கு எதிராக சவால் விடுக்காது.

குறிப்பிட்ட திருத்தத்தை நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியுமா அல்லது திருத்தத்தில் உள்ள விடயங்களுக்கு சர்வஜன வாக்கெடுப்பு அவசியமா என்பதை மாத்திரம் நீதிமன்றத்தினால் தீர்மானிக்க முடியும்.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிக்கப்படவேண்டும் நாடாளுமன்றத்தை அடிப்படையாக கொண்ட ஆட்சிமுறை ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே எங்கள் நிலைப்பாடு.

கேள்வி – நாட்டுக்கு மிகவும்பொருத்தமான ஆட்சி முறை என்ன?
பதில் – இனப்பிரச்சினைக்கான தீர்வாக, நாடு தமிழ்கட்சிகள் முன்வைத்துள்ள சமஸ்டி முறையை நோக்கி செல்லவேண்டும்.இலங்கையின் அரசியல் கலாச்சாரம் காரணமாக கூட்டணி அரசாங்கத்தை அமைப்பது என்பது ஒருபோதும் நிறைவேறாது. நல்லாட்சி அரசாங்கத்தின் தோல்வி இதனை தெளிவாக வெளிப்படுத்துகின்றது.

கேள்வி – எங்கள் அரசமைப்பில் மாற்றங்களை மேற்கொள்வதற்கான செல்வாக்கை இந்தியா செலுத்துவது குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?
பதில்- 13வது திருத்தம் தொடர்பான இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எங்கள் இறைமைக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளன. நாட்டில் ஆட்சி முறை அல்லது அரசியல் கலாச்சாரத்தை மாற்றுவதற்கு வெளிநாடுகள் செல்வாக்கு செலுத்த நாங்கள் அனுமதிக்ககூடாது. நாடாளுமன்ற ஜனநாயக நாடு என்ற வகையில் அவர்களின் வேண்டுகோள்களுக்கு நாங்கள் அடிபணிய கூடாது.

எனவும் அவர் குறித்த நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார்.

நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிரான வழக்கு விசாரணை நாளை !

சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என்றும் அவரை மீள அமைச்சராக உள்வாங்குமாறும் மேன்முறையீட்டு நீதிமன்றம் 29.06.2018 வழங்கிய இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த தவறிவிட்டார் என சட்டத்தரணி டெனிஸ்வரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கொன்றை நீதியரசர் விக்கினேஸ்வரனுக்கு எதிராக தாக்கல் செய்திருந்தார்.

பிரதான வழக்கில் சட்டத்தரணி டெனிஸ்வரன் அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தவறானது என வட மாகாண சபை கலைக்கப்பட்டதன் பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றம் 05.08.2019 தீர்ப்பளித்தது.

இடைக்காலக் கட்டளையை செயற்படுத்த நீதியரசர் விக்னேஸ்வரன் தவறிவிட்டார் என்ற நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணைக்காக நாளை எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.

இது தொடர்பில் கருத்து வெளியிட்ட சட்டத்தரணி கலாநிதி. குமாரவடிவேல் குருபரன்,

நீதியரசர் விக்னேஸ்வரன் தான் கடமை ஆற்றிய நீதிமன்றங்களில் கூண்டில் ஏறி சாட்சி சொல்வதை தவிர்ப்பது தமிழ் சட்ட சமூகத்தின் மாண்பை காப்பாற்றுவதற்கு அவசியம். கட்சி வேறுபாடுகளுக்கப்பால் தமிழ் அரசியல்வாதி – அதுவும் ஒரு சட்டத்தரணி தொடுத்த வழக்கால் ஓர் நீதியரசர் குற்றவாளியாக காணப்பட்டார் என்றோ பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இழந்தார் என்ற இழி நிலை ஏற்படக் கூடிய சந்தர்ப்பத்தைத் தவிர்ப்பது அவசியம். சட்டத்தரணி டெனிஸ்வரன் இன்றைய அரசியல் சூழலை கருத்தில் கொண்டு நீதிமன்ற அவமதிப்பு வழக்கை பெருந்தன்மையாக வாபஸ் பெற வேண்டும். அப்படி அவர் செய்தால் அவர் மீதான நன் மதிப்பு உயரும் எனக் குறிப்பிட்டார்.

 

“2020 ஆண்டு நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியவாதம் சிதைக்கப்பட்டுள்ளது” – சட்டத்தரணி மணிவண்ணன்

சிங்களத் தேசிய சக்திகள் அல்லது அவர்களோடு சேர்ந்து பயணிக்கின்ற கட்சிகள் வடக்கு கிழக்கை மையப்படுத்தி உருவெடுக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது என தமிழ் தேசிய இளைஞர் பேரவையை தலைமைதாங்கும் சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சிங்கள தேசிய சக்திகள் மையம்கொள்வதை தடுக்க ஒன்றிணைய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசிய இளைஞர் பேரவையின் கலந்துரையாடல் யாழ்.கொடிகாமம் நட்சத்திர மஹால் விடுதியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் பின்னல் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த மணிவண்ணன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இளையோர் அமைப்புபினருக்கான கலந்துரையாடலை இன்று சாவகச்சோரி கொடிகாமம் பகுதியில் நடத்தினோம்.

அதாவது, தமிழ் மக்களின் அரசியல் பல்வேறுபட்ட கட்சிகள் ஊடாக சிதைக்கப்பட்டுள்ளது. அதோடு 2020 ஆண்டு நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் தேசியவாதம் சிதைக்கப்பட்டுள்ளது. இது கண்ணூடாகத் தெரிகின்ற விடயம்.

சிங்களத் தேசிய சக்திகள் அல்லது அவர்களோடு சேர்ந்து பயணிக்கின்ற கட்சிகள் வடக்கு கிழக்கை மையப்படுத்தி உருவெடுக்கின்ற, ஆலமரமாக விஸ்தரிக்கின்ற சூழ்நிலை ஏற்பட்டிருக்கின்றது.

எனவே, அதனைச் சீர்செய்து ஒரு பலம் வாய்ந்த கட்சியாக மாற்றுவதற்கே இந்த ஒன்றுகூடலை கூட்டியிருந்தோம்” என தெரிவித்துள்ளார்.

“எம்.ஏ. சுமந்திரன், சிறிதரன் உள்ளிட்டவர்கள் குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்“ – சி.வி.கே.சிவஞானம்

இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு கிளையின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா,  எம்.ஏ. சுமந்திரன் இலங்கை தமிழரசுக் கட்சியில் இருந்து நீக்கப்பட வேண்டியவர் என கட்சியின் தலைமைக்கு கடிதம் அனுப்பியிருந்தார்.

குறித்த விடயம் தொடர்பில் இன்றையதினம் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் வழங்கும்  போது பாராளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. சுமந்திரன், சிவஜானம் சிறிதரன் உள்ளிட்டவர்கள் பற்றிய முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும், குறித்த முறைப்பாடுகள் தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கை குழு விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழரசுக் கட்சியின் மூத்த துணைத் தலைவருமான சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

குறித்த விடையம் தொடர்பில் சி.வி.கே.சிவஜானம் மேலும் தெரிவிக்கையில், இலங்கைத் தமிழரசு கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவின் ஒரு உறுப்பினர் என்ற வகையில் அவர் அந்த கடிதத்தினை அனுப்பியுள்ளார். அந்த கடிதம் எனக்கு கிடைத்துள்ளது.

அவரால் அனுப்பப்பட்ட கடிதத்தினை நான் இன்னும் முழுமையாக பார்க்கவில்லை, அதனை ஒழுங்கு நடவடிக்கை குழுவில் சமர்ப்பித்து, விடையங்களை ஆராய்ந்து, அந்த குழுவில் யார் யார் இருக்கின்றார்கள் என ஆராய்ந்து தீர்மானித்து அது பரிசீலிக்கப்படும்.

ஆனால் அது மட்டும் இல்லை ஏற்கனவே வேறு பல முறைப்பாடுகள் கிடைத்திருக்கின்றது.

சுமந்திரன், சிறிதரன் மற்றும் குணாளன் தொடர்பான முறைப்பாடுகள் என பல முறைப்பாடுகள் இருக்கின்றது. எனவே இந்த விடயங்கள் தொடர்பில் ஒழுங்கு நடவடிக்கை குழு விரைவில் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்துள்ளார்.

“கூட்டமைப்பின் புதிய செயலாளர் மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடு” – சி.வி.கே.சிவஞானம்

அண்மையில் தமிழ்தேசியகூட்டமைப்பினுடைய பொதுச்செயலாளர் பதவி விலகுவதாக தன்னுடைய ராஜினாமா வழங்கியதையடுத்து கூட்டமைப்பின் அடுத்த செயலாளர் விரைவில் தெரிவு செய்யப்படுவார் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பாக அக்கட்சியின் மூத்த உறுப்பினர் கே.சிவஞானம் கருத்து வெளியிட்டுள்ளார்.

தமிழரசுக் கட்சியின் புதிய செயலாளர் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவம் செய்பவராகவே அமையவேண்டும். குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருவரை நியமிப்பதே பொருத்தமானதாக அமையும் என சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

தமிழரசுக் கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துக்களை பகிரும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழரசுக் கட்சியின் செயலாளராக இருந்து துரைராஜா சிங்கம் அண்மையில் தனது பதவியில் இருந்து விலகுவதாக கட்சிக்கு எழுத்துமூலமாக அறிவித்திருந்தார். இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் பதவி தொடர்பில் பல கருத்துக்கள் பரப்பப்பட்டு வருகின்றன.எனினும் யாரை நியமிப்பது என கட்சி கூடி தீர்மானிக்கும்.

தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளராக ஏற்கனவே இருந்தவர் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரநிதித்துவம் செய்தே இருந்தவர். எனவே புதிதாக நியமிக்கப்படும் பொதுச் செயலாளரும் மட்டக்களப்பு மாவட்டத்தை பிரநிதித்துவம் செய்பவராக இருப்பதே பொருத்தமானதாக இருக்கும்.

பொதுச் செயலாளர் யார் என தீர்மானிக்கப்படவில்லை.ஆனால் அது தொடர்பில் பல தரப்பினரும் பலவாறான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். எனினும் எனது நிலைப்பாடு புதிய செயலாளர் மட்டகளப்பு மாவட்டத்தில் இருந்தே தெரிவு செய்யப்பட வேண்டும். இதனை நான் ஏற்கனவே கட்சியின் மத்திய குழுக் கூட்டத்திலும் கூறி உள்ளேன் என்றார்.