இலங்கையில் வாழும் முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக மாவட்டம் தேவை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியதாகவும், தற்போதும் அதே நிலைப்பாட்டில் உள்ளதாகவும் அந்த கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கடந்த திங்கட்கிழமை (07.09.2020) மாலை சாட்சியம் அளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
நாட்டில் ஸ்திரமற்றமையை உருவாக்க சஹ்ரான் உள்ளிட்ட வேறு ஒரு தரப்பினர் மற்றொரு தாக்குதலுக்கு திட்டமிடுவதாகவும், ஊடகங்கள் இல்லாத நிலையில் ஜனாதிபதி ஆணைக்குழுவில் அதனை தெரிவித்திருக்க முடியும் என்வும் ஹக்கீம் கூறினார்.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு சாய்ந்தமருதில் உள்ள வீடொன்றில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட சஹ்ரானின் சகோதரர் ரில்வான் ஹாசீமுடன் முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் காணப்படும் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள் தொடர்பில் ஆணைக்குழு நேற்று (07) ஹக்கீமிடம் வினவியது.
அதற்கு பதிலளித்த அவர், தனது கட்சியில் உறுப்பினராக இருந்த ஒரு கர்ப்பிணிப் பெண்ணைப் பார்க்க 2015 ஒகஸ்ட் 21 ஆம் திகதி மட்டக்களப்பு பொது வைத்தியசாலைக்கு சென்ற போது, காயமடைந்த ரில்வான் ஹாசீமின் உடல் நிலை குறித்தும் விசாரித்ததாகவும், அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ஊடகங்கள் மூலம் காண்பிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
தான் அவ்வாறு சந்தித்தது சஹ்ரான் ஹாசீமின் சகோதரர் என உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னரே அறிந்துக்கொண்டதாகவும் தாக்குதலுக்கு முன்னர் ஒரு போதும் அவரை அறிந்திருக்கவில்லை எனவும் ஹக்கீம் குறிப்பிட்டார்.
இதன்போது ஜனாதிபதி ஆணைக்குழு, தனியார் செய்தியில் ஒளிபரப்பப்பட்ட, சஹ்ரான் ஹாசிமுடன், சிபிலி பாரூக் மற்றும் சாட்சியாளர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் கலந்துரையாடிய வீடியோவை ஜனாதிபதி ஆணைக்குழு முன் வைத்தது.
அதற்கு பதிலளித்த ஹக்கீம், தேர்தல் காலத்தில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களினால் காத்தான்குடியில் உள்ள ´தேசிய தவூபிக் ஜமாத்´ அமைப்பின் பள்ளிவாசல் சேதமடைந்தாகவும் அதனை பார்வையிட அங்கு சென்றதாகவும் அவர் கூறினார்.
மேலும் இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பின் குடும்பங்கள் வாழ்வதாக முன்னாள் நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ பாராளுமன்றில் தெரிவித்த கருத்து குறித்து முன்னாள் அரச புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன முஸ்லிம் அமைச்சர்களை தெளிவுப்படுத்தினாரா? என ஆணைக்குழுவின் தலைவர் வினவினார்.
அவ்வாறு யாரும் தெளிவுப்படுத்தவில்லை என ஹக்கீம் பதிலளித்தார்.
புலனாய்வு தகவல் கிடைத்திருந்தும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தடுக்காமைக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வீர்களா? என ஆணைக்குழு வினவியதற்கு பதிலளித்த ஹக்கீம், அதற்கான பொறுப்பை தேசியமட்ட தலைவர்களுக்கு வழங்க போவதில்லை எனவும் புலனாய்வாளர்கள் தமக்கு கிடைக்கும் புலனாய்வு தகவல்களை உரியவாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு அறிவிக்க வேண்டும் என கூறினார்.
எவ்வாறாயினும் சஹ்ரான் உள்ளிட்ட குழுவுக்கு ஐ.எஸ் அமைப்புடன் நேரடி தொடர்பு இல்லை எனவும் ஹக்கீம் கூறினார்.
இதன்போது விசேட கேள்வி ஒன்றை தொடுத்த அரச சிரேஸ்ட சொலிட்டர் நாயகம், 2015 ஆம் ஆண்டு முஸ்லிம்களுக்கு தனி நிர்வாக மாவட்டம் தேவை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறியதா? என வினவினார்.
இதற்கு பதிலளித்த ஹக்கீம் 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் அம்பாறை மாவட்டத்தின் கரையோர பிரதேசங்கள் தமிழ் பேசும் மக்களுக்கான தனி ஒரு நிர்வாக மாவட்டமாக அமைய வேண்டும் என அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்தாக கூறினார்.
2015 ஆம் ஆண்டு கொண்டிருந்த அதே நிலைப்பாட்டையா? இப்போதும் கொண்டுள்ளீர்கள்? என ஆணைக்குழுவின் தலைவர் ஹக்கீமிடம் வினவினார்.
இதற்கு பதிலளித்த ஹக்கீம், தனது பேச்சு மொழியிலேயே நிர்வாக நீதியான கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள முடிந்தால் சிறந்தது என்ற நிலைப்பாட்டிலேயே தற்போதும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உள்ளதாகவும் ரவூப் ஹக்கீம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் தெரிவித்துள்ளார்.