உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

கிழமையின் ஒவ்வொரு புதனையும் மக்கள் பிரச்சினைகளை கேட்டறிவதற்காக ஒதுக்குமாறு அமைச்சர்கள் மற்றும் அரச உத்தியோகஸ்தர்களுக்கு ஜனாதிபதி பணிப்புரை !

நாட்டுமக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதற்காக அமைச்சர்கள் உள்ளடங்கலாக அரச உத்தியோகஸ்தர்கள் அனைவரும் ஒவ்வொரு புதன்கிழமையும் தத்தமது அலுவலகங்களிலேயே இருக்கவேண்டும் என்றும் அன்றைய தினம் வேறு வேலைகளுக்காகச் செல்வதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பணிப்புரை விடுத்திருக்கிறார்.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது, மக்களின் பிரச்சினைகளைக் கேட்டறிவதற்கான நேரம் போதுமானதாக இல்லை என்றும் அமைச்சரவை உபகுழுவின் பணிகள் உள்ளடங்கலாக தினமும் பல்வேறு வேலைகள் இருப்பதாகவும் அமைச்சர்கள் ஜனாதிபதியிடம் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்தே மக்களின் குறைகளையும் பிரச்சினைகளையும் கேட்டறிவதற்காக நாளொன்றை ஒதுக்கவேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இனிவரும் ஒவ்வொரு புதன்கிழமையும் மக்களின் முறைப்பாடுகளைக் கேட்டறிவதற்கு ஒதுக்கப்படுவதுடன் அன்றைய தினம் அமைச்சர்கள் உள்ளடங்கலாக அனைத்து அரச உத்தியோகஸ்தர்களும் தத்தமது அலுவலகங்களில் இருக்கவேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

எந்த மோசமான ஆட்சியாளர்களை வீழ்த்தினோமோ, அவர்கள் அதை விட அதிக பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளனர்! – சுமந்திரன்

19ஆவது திருத்தத்தை ஒழித்தால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை எதிர்க்குமென கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை மேம்படுத்தவே நாங்கள் 19ஆவது திருத்தத்தை உருவாக்கினோம். தற்போதைய அரசு இதனை ஒழிக்க முயல்கிறதென அவர் தெரிவித்துள்ளார்.

வடமராட்சியில் தனது அலுவலகத்தை திறந்து வைத்த பின் செய்தியாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

எந்த மோசமான ஆட்சியாளர்களை வீழ்த்தினோமோ, அவர்கள் அதை விட அதிக பலத்துடன் ஆட்சிக்கு வந்துள்ளனர்.

19ஆவது திருத்தத்தை அகற்றுவது நாட்டை மோசமான ஜனநாயக பாதையிலே கொண்டு செல்லும் வழி . இது நாட்டுக்கு கேடு, ஜனநாயக விரோதச்செயல், இதை நாங்கள் எதிர்ப்போம் என்பதை அரசுக்கு சொல்லி வைக்க விரும்புகிறோம் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் இன்னமும் ஏழு தீவிரவாத குழுக்கள் செயற்படுகின்றன ! – உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் இஸ்லாமிய மதகுரு தெரிவிப்பு.

உயிரித்த ஞாயிறு பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் நாட்டில் சில குழுக்கள் தொடர்ந்தும் இஸ்லாமிய தீவிரவாத சொற்பொழிவுகளை நடாத்தி வருவதாக இஸ்லாமிய மதகுரு ஒருவர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று (02.09.2020) சாட்சியம் அளித்துள்ளார்.

தாக்குதலுக்கு பின்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இரண்டு தீவிரவாத அமைப்புகளுக்கு மட்டுமே தடை விதித்திருந்தாலும், மேலும் ஏழு தீவிரவாத அமைப்புகள் நாட்டில் தீவிரமாக செயல்பட்டு வருவதாக அவர் சாட்சியமளித்தார்.

அந்த இஸ்லாமிய மத குருவின் பெயர் ஊடகங்களுக்கு வெளியிடப்படவில்லை.

ஆணைக்குழுவில் தொடர்ந்தும் சாட்சியமளித்த அவர், தான் நாட்டில் ஒரு பாரம்பரிய முஸ்லிம் என்றும், வஹாபிசத்திற்கு எதிராக சொற்பொழிவுகளை நடத்துவதால் வஹாபிசவாதிகளால் பல துன்புறுத்தல்களுக்கு உள்ளானதாகவும் கூறினார். 1991 ஆம் ஆண்டில், தான் புனித மக்காவிற்று சென்ற போது விமானத்தில் தன்னுடன் பயணித்த முஸ்லிம்களுக்கு பாரம்பரிய இஸ்லாமிய போதனைகள் குறித்து தெளிவுப்படுத்தியதன் காரணமாக சம்பந்தப்பட்ட ஒரு குழு கூர்மையான ஆயுதங்களால் தன்னை தாக்கியதாகவும் அவர் தெரித்தார்.

அதேபோல், 1994 ஆம் ஆண்டில் தவடகஹ பள்ளிவாசலில் பிரசங்கித்த போது வஹாபிகள் குழுவினரால் தாக்கப்பட்டதாக கூறிய அவர், மேலும் தான் அக்கரைப்பற்று பிரதேசத்தில் துப்பாக்கி பிரயோகத்திற்கு உள்ளானதாகவும் கூறினார்.

மேலும் சாட்சியமளித்த அவர், குர்-ஆனில் இஸ்லாத்தின் ஆரம்பகால போதனைகளில், முஸ்லிம் பெண்கள் என்ன அணிய வேண்டும் என்பதில் நேரடி சட்டம் ஒன்று இல்லை என்றும், ஆனால் சில முஸ்லிம் பெண்கள் தமது கௌரவத்தை பாதுகாக்க மட்டுமே அதனை அணிய வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

ஆனால் பிற்காலத்தில் பாரம்பரிய முஸ்லிம் பெண்கள் தமது தலையை மறைக்க ஆசைப்பட்டாலும், தற்போது முகத்தை முழுவதுமாக மூடி, உடலை முழுவதுமாக கருப்பு உடையால் மூடுவதானது முற்றிலும் தீவிரவாத கொள்ளைகளுக்கு உட்பட்டது எனவும் கூறினார்.

இதன்போது அமைச்சின் முன்னாள் செயலாளரும், ஜனாதிபதி ஆணைக்குழு உறுப்பினருமான ஒரு பிரதநிதி பேருவளையில் உள்ள ஜமியா நலிமியா என்ற பல்கலைக்கழகத்தைப் பற்றி கேள்விப்பட்டதுண்டா?  என விசாரித்தார்.

அதற்கு பதிலளித்த அவர், அது குறித்து தனக்கு நன்கு தெரியும் என்றும் அதேபோல் அந்த கல்வி நிறுவனத்தில் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு எதிரான போதனைகள் அங்கு இடம்பெறுவதாகவும் கூறினார்.

இதன்போது ஆணைக்குழுத் தலைவர், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பின்னரும் நாட்டில் தீவிரவாத உரைகள் நடைபெறுகிறதா? வினவினார்.

இதற்கு பதிலளித்த அவர், பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர், சில குழுக்கள் இன்னும் தீவிரவாத பிரசங்கங்களை நடத்தி வருவதாகவும், அவர்கள் வஹாபி சித்தாந்தங்களை நாட்டில் பரப்புவதாகவும் கூறினார்.

வஹாபிசத்தை பரப்புவதற்கு சவூதி அரேபியாவிலிருந்து உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும், தாக்குதலுக்குப் பின்னர் அரசாங்கம் அது குறித்து கவனஞ்செலுத்துவதால் வேறு வழிகளில் அந்த நிதி உதவிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் அந்த மதகுரு கூறினார்.

எவ்வாறாயினும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் நாட்டிலிருந்து தீவிரவாதத்தை ஒழிப்பதற்கான வாய்ப்பு இருந்த போதிலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த பிழையான முடிவால் அது சாத்தியப்படவில்லை எனவும் தெரிவித்தார்.

நாட்டில் ஒன்பது இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வந்தாகவும், முன்னாள் ஜனாதிபதி அவற்றில் இரண்டை மட்டுமே தடை செய்துள்ளதாகவும், மற்ற ஏழு குழுக்கள் இப்போதும் செயற்படுவதாகவும் அவர் கூறினார்.

தவ்ஹீத் ஜமாத், தப்லீ ஜமாஅத், சலாபிகள் மற்றும் குரா சபா போன்ற குழுக்களும் இன்னும் தீவிரவாதத்தை பரப்புகின்றன என்று அவர் மேலும் கூறினார்.

வடக்கு -கிழக்கு தமிழர் தாயகம் எனவும், பூர்வீகம் எனவும் நிரூபிப்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை – விக்கினேஸ்வரனின் கருத்துக்கு மேதானந்த தேரர் பதிலடி !

வடக்கு -கிழக்கு தமிழர் தாயகம் எனவும், பூர்வீகம் எனவும் நிரூபிப்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை ,  பெரும்பான்மையின மக்களுக்கு அவர்கள் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது எச்சரிக்கை கலந்த தொனியில்  கிழக்கு மாகாண தொல்லியல் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விக்கினேஸ்வரனின் அண்மைய நாடாளுமன்ற உரை தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்திருக்கின்றார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையின் முதல் சுதேசிகளின் மொழி தமிழ் என்றும், வடக்கு கிழக்கு தமிழர்களின் தாயகம் எனவும் விக்கினேஸ்வரன் சொல்லியிருப்பது அப்பட்டமான பொய். அதற்கான வரலாற்று ஆதாரங்கள் எதுவும் இல்லை” இதனால் தமிழ் மக்களுக்கு எந்தவிதமான நன்மையும் இல்லை. மாறாகப் பிரச்சினைகள்தான் உருவாகும்”  எனவும் அவர் தெரிவித்தார்.

“ஸ்ரீலங்காவில் தமிழ் மக்களுக்கு வாழும் உரிமை இருக்கின்றது.ஆனால் வாடகை வீட்டில் இருக்கும் போது வீட்டு உரிமையாளருக்குக் குழப்பம் விளைவிக்கக்கூடாது. இதனை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்து செயற்பட வேண்டும். பெரும்பான்மையின மக்களுக்கு அவர்கள் குழப்பம் ஏற்படுத்தக்கூடாது.” எனவும் அவர் அழுத்த திருத்தமாக குறிப்பிட்டுள்ளார்.

கூகிளில் Sex (‘செக்ஸ்’) எனும் வார்தையை தேடிய உலக நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம் . – முதல் நிலையில் எத்தியோப்பியா!

2020ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் கூகிளில் Sex (‘செக்ஸ்’) எனும் வார்தையை தேடிய 10 நாடுகளின் வரிசையில் எத்தியோப்பியா  முதலாம் இடத்திலும், இலங்கை இரண்டாம் இடத்திலும் உள்ளன.

இவ்வரிசையில் எத்தியோப்பியாவை தொடர்ந்து இலங்கை, பங்களாதேஷ், நேபாளம், இந்தியா, வியட்நாம், பாகிஸ்தான், மியன்மார், சிம்பாப்வே, உருகுவே ஆகிய நாடுகள் உள்ளன.

இதற்கு முன்னர் கூகிளினால் வெளியிடப்பட்ட வருடாந்த பட்டியலில் இலங்கை முதலாம் இடத்தையும் கடந்தாண்டு (2019) ‘செக்ஸ்’ எனும் வார்த்தையை தேடிய நாடுகளின் வரிசையில் இலங்கை மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளது

அத்தோடு, 2012ஆம் ஆண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரையான 5 வருட காலப்பகுதியில், கூகிளில் ‘செக்ஸ்’ எனும் வார்த்தையை தேடிய நாடுகளின் வரிசையில் தொடர்ச்சியாக இலங்கை முதலிடத்தை வகித்து வந்தது.

கூகிளின் கடந்த 2012ஆம் ஆண்டின் வருடாந்த அறிக்கையின் பிரகாரம்,  ‘செக்ஸ்’ எனும் வார்த்தையை தேடிய இடங்களில் மேல் மாகாணத்தின் கொழும்பு, நுகேகொடை, ஹோமாகம ஆகிய நகரங்கள் முன்னிலை வகிப்பதோடு, 2020ஆம் ஆண்டில் வடமத்திய மாகாணம் முதலிடத்திலுள்ளது.

குறிப்பாக வடமத்திய மாகாணத்தில் கட்டுவன்வில, கல்கடவெல, இராஜாங்கனை, புல்மோட்டை, பூனாவை ஆகிய நகரங்கள் முன்னிலையிலுள்ளன.

கூகிளில் ‘செக்ஸ்’ எனும் வார்த்தையை அதிகளவில் தேடிய மாகாணங்களின் வரிசையில் முறையே ஊவா, வடக்கு, கிழக்கு, சப்ரகமுவ, மேல், வடமேல், தென், மத்திய மாகாணங்களும் நகரங்களில் முறையே சியம்பலாண்டுவ, தேராவில், மஹாஓயா, பொரலுவகே அய்னா, ஹோமாகம, மேல் புளியங்குளம், வருகந்தெனிய, ஹரஸ்பெத்த ஆகியனவும்  அடங்குகின்றன.

தொடரும் உலக அரசியல் பிரபலங்களின் ட்விற்றர் கணக்கு முடக்கங்கள் . – இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ட்விற்றர் கணக்கு முடக்கம் !

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் ட்விற்றர் கணக்கு, ஹெக்கர்களால் முடக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அவருடைய தனிப்பட்ட இணையத்தள ட்விற்றர் கணக்கை, ஹெக்கர்கள் முடக்கியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அவரது தனிப்பட்ட இணையத்தளத்திற்கான @narendramodi_in என்ற ட்விற்றர் கணக்கு செயல்பட்டு வருகிறது. இதனை 25 இலட்சத்திற்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ட்விற்றர் கணக்கை, ஹெக்கர்கள் சிலர் முடக்கியுள்ளனர். இதையடுத்து தொடர்ச்சியான பல்வேறு பதிவுகளை இட்டனர்.
அதில் கொவிட்-19 பாதிப்பிற்கான பிரதமரின் தேசிய நிவாரண நிதியத்திற்கு அனைவரும் நிதியுதவி செலுத்துங்கள். இந்தியாவில் தற்போது கிரிப்டோ கரன்சி முறை பரவலாக தொடங்கியிருக்கிறது. எனவே பிட்காயின் மூலம் நிதியுதவி செலுத்துங்கள் என்று கூறி குறிப்பிட்ட குறியீடும் பதிவிடப்பட்டிருந்தது.
இது பற்றி தகவலறிந்த ட்விற்றர் நிறுவனம் உடனே மீட்பு நடவடிக்கையில் இறங்கியது. இதனைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ட்விட்கள் நீக்கப்பட்டுள்ளதாக, இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பாக ஈ-மெயில் வாயிலாக ட்விற்றர் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ‘‘பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட இணையத்தளத்திற்கான  ட்விற்றர் கணக்கை முழுவதுமாக மீட்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இந்த சம்பவம் குறித்து விசாரித்து வருகிறோம். வேறு ஏதேனும் ட்விற்றர் கணக்குகள் முடக்கப்பட்டிருக்கிறதா? என விசாரணை நடைபெறுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் தனிப்பட்ட ட்விற்றர் கணக்கிற்கும், பிரதமர் அலுவலகத்தின் ட்விற்றர் கணக்கிற்கும் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படவில்லை.’’ எனத் தெரிவித்துள்ளார்.
எனினும், இது தொடர்பாக பிரதமர் அலுவலகமோ அல்லது அவரது தரப்பிலோ எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜூலை மாதம் முதல் உலகின் பல்வேறு பிரபலங்களின் ட்விற்றர் கணக்குகள் ஹெக் செய்யப்பட்டன. இதில் அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் ஜோ பைடன், அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா, பிரபல கோடீஸ்வரர் எலன் மாஸ்க் உள்ளிட்டோர் அடங்குவர். இதனைத் தொடர்ந்து பிரதமர் நரோந்திர மோடியின் தனிப்பட்ட இணையத்தளத்திற்கான ட்விற்றர் கணக்கு ஹெக் செய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

நான் சாராயம் கொடுத்தோ ? 5000 ரூபா கொடுத்தோ? வெற்றி பெற்றதை விக்னேஸ்வரன் நிரூபிப்பாரேயானால் அரசியலை விட்டுவிட்டு விலக தயார் ! – அங்கஜன்.

தேர்தல் பிரசார காலத்தில் ஒருவருக்கேனும் சாராயம் கொடுத்ததையோ..? அல்லது 5000 ரூபா பணத்தைக் கொடுத்ததையோ..? சி.வி. விக்னேஸ்வரன் நிரூபிப்பாரேயானால் அரசியலை விட்டுவிட்டு போக தாம் தயாராக உள்ளதாக அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் யாழ். மாவட்டத்தில் இருந்து இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவாகியுள்ள முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் சிங்கள ஊடகமொன்றுக்கு நேர்காணலொன்றை வழங்கியிருந்தார்.

இதன் போது அங்கஜன் ராமநாதன் அதிகூடிய விருப்புவாக்குகளைப் பெற்றுள்ளமை குறித்து அந்த ஊடகம் கேள்வி எழுப்பியது. இதற்கு பதிலளித்த சி.வி. விக்னேஸ்வரன்,

சாராயம் மற்றும் பணத்தைக் கொடுத்ததன் மூலமே அது சாத்தியமானதாக கருத்து வெளியிட்டிருந்தார்.

இதுதொடர்பாக அங்கஜன் ராமநாதன் கருத்து வெளியிடுகையில்,

தன் மீதான குற்றச்சாட்டுக்களை சி.வி. விக்னேஸ்வரன் நிரூபிப்பாரேயானால் அரசியலை விட்டுவிட்டு போவதற்கு தாம் தயாராக உள்ளதாக ஆணித்தரமாக தெரிவித்தார்.

200 புத்தம் புதிய அதிநவீன வென்டிலேட்டர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது அமெரிக்கா!

முக்கியமாக தேவைப்படும் பொரு ட்களுக்கான ஜனாதிபதி ட்ரம்பின் சலுகை மற்றும் COVID-19 இற்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு உதவுதலின் அடிப்படையில் வழங்கப்படும் 200 புத்தம் புதிய அதிநவீன வென்டிலேட்டர்களை (மூச்சு க்காற்றூட்ட கருவி) சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஊடாக அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பு செய்துள்ளது. இந்த வென்டிலேட்டர்களானது இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸினால் சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கையளிக்கப்பட்டன.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த வென்டிலேட்டர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. அவை கச்சிதமானவை மற்றும் எளிதாகப் பயன்படுத்தக் கூடியவை என்பதுடன், இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் இலங்கைக்கு நெகிழ்வுத்தன்மையையும் வழங்கும்.

இலங்கையர்களின் நலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பில் அமெரிக்கா நீண்டகால உறுதிப்பாடொன்றைக் கொண்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா இலங்கைக்கு 26 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான சுகாதார உதவிகளை வழங்கியுள்ளது.

எமது நீடித்த உதவியானது அமெரிக்க மக்களிடமிருந்தான இன்னுமொரு அன்பளிப்புடன் தொடர்கிறது.

அமெரிக்க புத்தாக்கங்கள் மற்றும் தனியார் தொழில்துறையின் சக்தியை பயன்படுத்துவதன் மூலம், COVID-19 இற்கு எதிராக போராடுவதற்கும் உயிர்களை காக்க உதவுவதற்கும் இந்த அதிநவீன வென்டிலேட்டர்களை இலங்கைக்கு வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம், என்று தூதுவர் டெப்லிட்ஸ் தெரிவித்தார்.

COVID-19 தொற்றுப் பரவலினால் அதிகம் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு முக்கியமான சேவைகளை வழங்கிய இலங்கைக்கான 6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான COVID-19 உதவிக்கு மேலதிகமானதாகவே இந்த வென்டிலேட்டர் அன்பளிப்பு அமைந்துள்ளது.

” பிளவுபடாத இலங்கைக்குள் விடுதலைப்புலிகளின் வடக்கு ஆளுகையை ஏற்பதாக மகிந்தராஜபக்ஷ என்னிடம் கூறினார் ” – எரிக் சொல்ஹெய்ம்

தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருந்தார்; என நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை விடுதலைப் புலிகளின் தலைவருடன் சந்திப்பொன்றை மேற்கொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விருப்பம் வெளியிட்டார் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனுடன் மாநாடொன்றை நடத்துவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக தன்னிடம் மஹிந்த ராஜபக்ச தெரிவித்ததாகவும்  பிளவுபடாத இலங்கைக்குள் விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிப்பதற்கு தான் தயார் என மஹிந்த தன்னிடம் கூறியதாகவும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின்போது கப்பல்கள் மூலம் பொதுமக்களை வெளியேற்ற நோர்வே முன்வந்தது என குறிப்பிட்டுள்ள சொல்ஹெய்ம், அனைத்து பொதுமக்களையும் விடுதலைப் புலிகளையும் பதிவு செய்யவேண்டும் என தாங்கள் வேண்டுகோள் விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த பெயர்களை கொண்டவர்களை கண்டுபிடித்து கப்பல் மூலம் தென்பகுதிக்கு கொண்டு செல்வதற்கான வேண்டுகோளை தாம் முன்வைத்தபோதிலும் பிரபாகரன் அதனை நிராகரித்துவிட்டார் எனவும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளா

இன ஒற்றுமையுடன் கூடிய நாட்டில் வாழும் மக்களிடையே விக்னேஸ்வரன் இன முரண்பாட்டை தோற்றுவிக்க முனைகின்றார்! – எஸ்.பீ. திஷாநாயக்க

நாட்டில் ஜாதி மதம் பாராது ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற மக்கள் இடையில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் இனவாதத்தை தூண்ட முயற்சிப்பதாகவும் பாராளுமன்றில் கன்னி அமர்வின் போது அவர் தெரிவித்த கருத்து முற்றிலும் பிழையான ஒரு கருத்து எனவும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான எஸ்.பீ. திஷாநாயக்க தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா சமன் தேவாலயத்தில் இன்று (01.09.2020) விஷேட வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது, மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சி.வி. விக்னேஸ்வரன் தேவையில்லாத ஒரு கருத்தினை கூறியிருக்கிறார். நாட்டில் முதல் மொழி தமிழ், சிங்களம் என்று கூறுவதற்கு அவர் அனைத்தும் அறிந்தவர் அல்ல. அவர் ஒரு நீதிபதி. நாட்டில் முதல் மொழி எதுவென்று கூற அனைத்தும் அறிந்தவர்கள் அதிகமாக உள்ளனர். தொல்பொருள் அறிஞர்கள் உள்ளார்கள்.

ஆகையால் அவர் முதலில் சிங்கள மொழியை கற்றுகொள்ள வேண்டும். தமிழ் மொழியை முறையாக கற்றுகொள்ள வேண்டும். அவருடைய பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை கற்றுகொடுக்க வேண்டும். ஆகவே அவர் கூறிய கருத்து தமிழ், சிங்களம், முஸ்லிம் போன்ற மதங்களை சார்ந்த மக்கள் மத்தியில் பிரச்சினையை தோற்றுவிக்க கூடிய ஒரு கருத்தினை கூறியிருக்கிறார்.

நாட்டில் இன்று அதிகமான போதைபொருள் விற்பனை செய்வோர்களை தொடர்ந்தும் பொலிஸார் கைது செய்து வருகின்றனர். இதன் பின்னால் யாராவது இருக்க கூடும் சிறைச்சாலையிலும் இது இடம் பெற்று இருக்கிறது. சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் கைது செய்யபட்டு இருக்கிறார்கள். எனவே எமது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அதிரடி நடவடிக்கை ஊடாக இது போன்ற சட்டவிரோதமான வியாபாரங்களில் ஈடுபடுவோர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எதிர்வரும் காலங்களில் எமது நாடு போதைபொருள் அற்ற ஒரு புனித நாடாக மாற்றம் பெறும்.

நுவரெலியா மாவட்ட மக்களுக்கு சேவை செய்ய எனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதனை நான் பயன்படுத்தி எமது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியினை நிச்சயமாக நிறைவேற்றுவேன் என குறிப்பிட்டார்.