உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

200 புத்தம் புதிய அதிநவீன வென்டிலேட்டர்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது அமெரிக்கா!

முக்கியமாக தேவைப்படும் பொரு ட்களுக்கான ஜனாதிபதி ட்ரம்பின் சலுகை மற்றும் COVID-19 இற்கு எதிரான இலங்கையின் போராட்டத்திற்கு உதவுதலின் அடிப்படையில் வழங்கப்படும் 200 புத்தம் புதிய அதிநவீன வென்டிலேட்டர்களை (மூச்சு க்காற்றூட்ட கருவி) சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பின் (USAID) ஊடாக அமெரிக்க அரசாங்கம் இலங்கைக்கு அன்பளிப்பு செய்துள்ளது. இந்த வென்டிலேட்டர்களானது இலங்கை மற்றும் மாலைத்தீவுக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸினால் சுகாதாரத்துறை அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியிடம் கையளிக்கப்பட்டன.

அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட இந்த வென்டிலேட்டர்கள் அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டுள்ளன. அவை கச்சிதமானவை மற்றும் எளிதாகப் பயன்படுத்தக் கூடியவை என்பதுடன், இந்த வைரஸினால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் இலங்கைக்கு நெகிழ்வுத்தன்மையையும் வழங்கும்.

இலங்கையர்களின் நலம் மற்றும் ஆரோக்கியம் தொடர்பில் அமெரிக்கா நீண்டகால உறுதிப்பாடொன்றைக் கொண்டுள்ளது.

கடந்த 20 ஆண்டுகளில் அமெரிக்கா இலங்கைக்கு 26 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான சுகாதார உதவிகளை வழங்கியுள்ளது.

எமது நீடித்த உதவியானது அமெரிக்க மக்களிடமிருந்தான இன்னுமொரு அன்பளிப்புடன் தொடர்கிறது.

அமெரிக்க புத்தாக்கங்கள் மற்றும் தனியார் தொழில்துறையின் சக்தியை பயன்படுத்துவதன் மூலம், COVID-19 இற்கு எதிராக போராடுவதற்கும் உயிர்களை காக்க உதவுவதற்கும் இந்த அதிநவீன வென்டிலேட்டர்களை இலங்கைக்கு வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகிறோம், என்று தூதுவர் டெப்லிட்ஸ் தெரிவித்தார்.

COVID-19 தொற்றுப் பரவலினால் அதிகம் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு முக்கியமான சேவைகளை வழங்கிய இலங்கைக்கான 6 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான COVID-19 உதவிக்கு மேலதிகமானதாகவே இந்த வென்டிலேட்டர் அன்பளிப்பு அமைந்துள்ளது.

” பிளவுபடாத இலங்கைக்குள் விடுதலைப்புலிகளின் வடக்கு ஆளுகையை ஏற்பதாக மகிந்தராஜபக்ஷ என்னிடம் கூறினார் ” – எரிக் சொல்ஹெய்ம்

தமிழீழ விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருந்தார்; என நோர்வேயின் முன்னாள் விசேட சமாதான பிரதிநிதி எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஆங்கில ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளை விடுதலைப் புலிகளின் தலைவருடன் சந்திப்பொன்றை மேற்கொள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விருப்பம் வெளியிட்டார் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

பிரபாகரனுடன் மாநாடொன்றை நடத்துவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக தன்னிடம் மஹிந்த ராஜபக்ச தெரிவித்ததாகவும்  பிளவுபடாத இலங்கைக்குள் விடுதலைப் புலிகள் வடக்கில் ஆட்சி செய்வதை அனுமதிப்பதற்கு தான் தயார் என மஹிந்த தன்னிடம் கூறியதாகவும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார்.

இறுதி யுத்தத்தின்போது கப்பல்கள் மூலம் பொதுமக்களை வெளியேற்ற நோர்வே முன்வந்தது என குறிப்பிட்டுள்ள சொல்ஹெய்ம், அனைத்து பொதுமக்களையும் விடுதலைப் புலிகளையும் பதிவு செய்யவேண்டும் என தாங்கள் வேண்டுகோள் விடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அந்த பெயர்களை கொண்டவர்களை கண்டுபிடித்து கப்பல் மூலம் தென்பகுதிக்கு கொண்டு செல்வதற்கான வேண்டுகோளை தாம் முன்வைத்தபோதிலும் பிரபாகரன் அதனை நிராகரித்துவிட்டார் எனவும் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளா

இன ஒற்றுமையுடன் கூடிய நாட்டில் வாழும் மக்களிடையே விக்னேஸ்வரன் இன முரண்பாட்டை தோற்றுவிக்க முனைகின்றார்! – எஸ்.பீ. திஷாநாயக்க

நாட்டில் ஜாதி மதம் பாராது ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற மக்கள் இடையில் பாராளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் இனவாதத்தை தூண்ட முயற்சிப்பதாகவும் பாராளுமன்றில் கன்னி அமர்வின் போது அவர் தெரிவித்த கருத்து முற்றிலும் பிழையான ஒரு கருத்து எனவும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி குழு தலைவருமான எஸ்.பீ. திஷாநாயக்க தெரிவித்துள்ளார்.

மஸ்கெலியா சமன் தேவாலயத்தில் இன்று (01.09.2020) விஷேட வழிபாடுகளில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன் போது, மேலும் கருத்து தெரிவித்த அவர்,

சி.வி. விக்னேஸ்வரன் தேவையில்லாத ஒரு கருத்தினை கூறியிருக்கிறார். நாட்டில் முதல் மொழி தமிழ், சிங்களம் என்று கூறுவதற்கு அவர் அனைத்தும் அறிந்தவர் அல்ல. அவர் ஒரு நீதிபதி. நாட்டில் முதல் மொழி எதுவென்று கூற அனைத்தும் அறிந்தவர்கள் அதிகமாக உள்ளனர். தொல்பொருள் அறிஞர்கள் உள்ளார்கள்.

ஆகையால் அவர் முதலில் சிங்கள மொழியை கற்றுகொள்ள வேண்டும். தமிழ் மொழியை முறையாக கற்றுகொள்ள வேண்டும். அவருடைய பிள்ளைகளுக்கு தமிழ் மொழியை கற்றுகொடுக்க வேண்டும். ஆகவே அவர் கூறிய கருத்து தமிழ், சிங்களம், முஸ்லிம் போன்ற மதங்களை சார்ந்த மக்கள் மத்தியில் பிரச்சினையை தோற்றுவிக்க கூடிய ஒரு கருத்தினை கூறியிருக்கிறார்.

நாட்டில் இன்று அதிகமான போதைபொருள் விற்பனை செய்வோர்களை தொடர்ந்தும் பொலிஸார் கைது செய்து வருகின்றனர். இதன் பின்னால் யாராவது இருக்க கூடும் சிறைச்சாலையிலும் இது இடம் பெற்று இருக்கிறது. சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் கைது செய்யபட்டு இருக்கிறார்கள். எனவே எமது ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் அதிரடி நடவடிக்கை ஊடாக இது போன்ற சட்டவிரோதமான வியாபாரங்களில் ஈடுபடுவோர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

எதிர்வரும் காலங்களில் எமது நாடு போதைபொருள் அற்ற ஒரு புனித நாடாக மாற்றம் பெறும்.

நுவரெலியா மாவட்ட மக்களுக்கு சேவை செய்ய எனக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இதனை நான் பயன்படுத்தி எமது மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதியினை நிச்சயமாக நிறைவேற்றுவேன் என குறிப்பிட்டார்.

கிராமிய மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதும் நகர மக்களை உயர் வாழ்க்கைச் செலவு சுமையிலிருந்து விடுவிப்பதும் ஒருசேர நடக்க வேண்டும் – ஜனாதிபதி கோட்டாபாய

40% வீதமான கிராமிய விவசாயிகள் நிலையான மற்றும் போதியளவு வருமானத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் தமது விளைச்சலுக்கு உயர்ந்த விலை மற்றும் நிலையான சந்தை வாய்ப்பு உள்நாட்டில் இருக்கின்றது என்ற நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும் என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

நேற்று (31) ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரவை உப குழுவின் முதலாவது கூட்டத்திலேயே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.

முன்வைத்த காலை பின்வைக்காது, எடுத்த தீர்மானங்களை நிலையான கொள்கையிலிருந்து செயற்படுத்தி வாழ்க்கைச் செலவை குறைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

குறுகிய கால கஷ்டங்கள் ஏற்பட்டாலும் கிராமிய பொருளாதாரத்தை பலப்படுத்தி விவசாயிகளை கட்டியெழுப்புவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கையில் இருந்து பின்னோக்கி செல்ல மாட்டேன் என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

சில அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வடைந்துள்ளதால் நகர மத்திய தரப்பினரின் பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

40% வீதமான கிராமிய விவசாயிகள் நிலையான மற்றும் போதியளவு வருமானத்தை பெற்றுக்கொள்ள வேண்டுமெனில் தமது விளைச்சலுக்கு உயர்ந்த விலை மற்றும் நிலையான சந்தை வாய்ப்பு உள்நாட்டில் இருக்கின்றது என்ற நம்பிக்கையை உறுதி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாது கிராமிய மக்களை விவசாயத்திற்காக ஊக்கப்படுத்த முடியாது என குறிப்பிட்ட ஜனாதிபதி அவர்கள், இறக்குமதிக்கு விடுக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவதன் கஷ்டத்தையும் சுட்டிக்காட்டினார்.

அந்நியச் செலாவணி விகிதங்களை கட்டுப்படுத்துவதற்கும் உயர் கடன் சுமையிலிருந்து விடுபடுவதற்கும் இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.  இந்தியா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளும் கொவிட் நோய்த் தொற்றினால் இறக்குமதியை கட்டுப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

குறைந்த வருமானமுடையவர்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதே வறுமையை ஒழிப்பதை நோக்கமாகக்கொண்டு செயற்படுத்திய ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் நோக்கமாகும். சமூர்த்தி பயனாளிகளின் வளர்ச்சிக்கு பங்களிக்க வேண்டும். வீட்டுத் தோட்டம். முட்டைக்காக கோழிகளை வழங்குவதன் மூலம் அவர்களின் போசாக்கு மற்றும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த முடியும்.

பொருட்களின் விலை அதிகரிக்கும்போது நகர, மத்திய தரப்பினர் முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்குவதற்கு முறையான வேலைத்திட்டமொன்றின் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார். கொவிட் நோய்த் தொற்று காலத்தில் விவசாய பொருட்களை மலிவு விலையில் நேரடியாக நுகர்வோருக்கு வழங்குவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தது. அந்த வழிமுறையை பின்பற்றி இடைத்தரகர்களின் சுரண்டலை தடுத்து, விவசாயியையும் நுகர்வோரையும் பாதுகாக்க முடியுமென்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

கிராமிய மக்களின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதும் நகர மக்களை உயர் வாழ்க்கைச் செலவு சுமையிலிருந்து விடுவிப்பதும் ஒருசேர நடக்க வேண்டுமென்று ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

அதற்காக சதொச, கூட்டுறவுத்துறை, விவசாய சேவை மத்திய நிலையம் மற்றும் பாதுகாப்பு பிரிவினரின் உதவியுடன் விவசாய விளைச்சலை நேரடியாக நுகர்வோருக்கே விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுப்பது பற்றியும் அவதானம் செலுத்தப்பட்டது.

நாடு பூராவும் உள்ள பொருளாதார மத்திய நிலையங்களை சரியான பொறிமுறையின் கீழ் கொண்டு வந்து விவசாய விளைச்சல்களை கொள்வனவு செய்வதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்குவது தொடர்பாகவும் வாழ்க்கை செலவு உபகுழு கலந்துரையாடியது.

வாரத்திற்கு ஒரு தடவை சந்தை நிலைமைகள் தொடர்பாக தனக்கு அறிவிக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

தேசிய மற்றும் மாவட்ட ரீதியாக ஒரு நபருக்கு தேவையான உணவின் அளவை இனங்காணல், பிரதேச செயலக தொகுதிவாரியாக வீட்டுத் தோட்ட முகாமைத்துவம் மற்றும் கோழி வளர்ப்பை அதிகரிப்பது தொடர்பாகவும் கவனம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செலணியின் தலைவர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

கௌப்பி, உழுந்து, நிலக்கடலை, எள்ளு, குரக்கன் மற்றும் வெங்காய பயிர்ச் செய்கை வெற்றி கண்டுள்ளதால், எதிர்காலத்தில் அவற்றை இறக்குமதி செய்ய அவசியமில்லை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பந்துல குணவர்தன, ரமேஷ் பத்திரன, மஹிந்தானந்த அழுத்கமகே மற்றும் இராஜாங்க அமைச்சர்களான அருந்திக்க பெர்ணான்டோ, ஷசீந்திர ராஜபக்ஷ, லசந்த அலகியவன்ன மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுந்தர, அமைச்சுக்களின் செயலாளர்களும் அதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

பாராளுமன்றில் விக்னேஸ்வரன் தெரிவித்த கருத்துக்களில் துளியளவும் இனத்துவேசமில்லை ! – சட்டத்தரணி சந்திரகாந்தா.

விக்னேஸ்வரன் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமின்றி, அவர் தெரிவித்த கருத்துக்கள் எதிலும் இனத்துவேஷம் என்பது ஒரு துளியளவு கூட இருந்திருக்கவில்லை எனவும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சி. வி விக்கினேஸ்வரன் நிகழ்த்திய நாடாளுமன்ற உரைகள் கடந்த சில நாட்களாக ஓர் பாரிய சர்ச்சையின் மையப்பொருளாக, சிங்கள தீவிரவாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரால் உருமாற்றப்பட்டுள்ளன எனவும்  தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான என். ஶ்ரீகாந்தா ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

விக்னேஸ்வரனுக்கு எதிராக நாடாளுமன்றத்திற்குள்ளே, ஆளும் கட்சி மற்றும் பிரதான எதிர்க்கட்சி என்ற நிலையான வேறுபாடுகளைக் கடந்து, உக்கிரத்தோடு தொடுக்கப்பட்டிருக்கும் கண்டனக் கணைகள் அனைத்தும், நாடாளுமன்ற ஜனநாயகத்தில் காலங்காலமாக கடைப்பிடிக்கப்பட்டு வந்திருக்கும் அடிப்படை மரபுகளை அப்பட்டமாக மீறுவதாகவும்,முரட்டுத் திமிர்த்தனத்தோடு கூடிய இனவெறிச் சிந்தனையை வெளிச்சம் போட்டுக் காட்டுவதாகவும் அமைந்திருக்கின்றன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இத்தனைக்கும் விக்னேஸ்வரன் புதிதாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் மாத்திரமின்றி, அவர் தெரிவித்த கருத்துக்கள் எதிலும் இனத்துவேஷம் என்பது ஒரு துளியளவு கூட இருந்திருக்கவில்லை.

மாறாக, தன்னைத் தெரிவு செய்த மக்கள் சார்ந்த இனத்தின் வரலாற்றுத் தொன்மையையும், அதன் தாய் மொழியின் பெருமையையும் நாகரீகத்தோடு கூடிய வார்த்தைகளில் அவர் நாசூக்காக வெளிப்படுத்தியிருந்தார். அது அவரது உரிமை. கடமையும் கூட. இருந்தும், ஆளும் கட்சி, எதிர்கட்சி, என்ற வேறுபாடு இன்றி, மிரட்டலும் சண்டித்தனமும் நிறைந்த தொனியில், இந்த இரண்டு தரப்பிலிருந்தும் ஆத்திரத்தை வெளிப்படுத்தும் ஆக்ரோஷப் பேச்சுகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன.

இவை அனைத்தும் தமிழ் மக்களுக்கும், அவர்களால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் பிரதிநிதிகளுக்கும் ஒரு அரசியல் செய்தியை திட்டவட்டமாக சொல்லிவைக்க முயன்றிருக்கின்றன என்பதில் சந்தேகம் இருக்கமுடியாது. இந்த நாட்டின்’ பெரும்பான்மை மக்கள் சிங்களவர்கள்-எமது சிங்கள மக்களிடம் தான் ஆட்சி அதிகாரம் இருக்கின்றது. எனவே, தமிழ்ப் பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் அடக்கி வாசிக்க வேண்டும்.

கடந்த சில வருடங்களாக நாடாளுமன்றம் சந்தித்த மென்மையானதும் குழைவானதுமான சமரசப் பேச்சுக்களுக்கு மாறாக, தமிழர் தரப்பிலிருந்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் எவராவது, வரலாற்றைச் சுட்டிக்காட்டி சுய நிர்ணய உரிமை பற்றியெல்லாம் பேச முயன்றால், அவற்றை சகித்துக் கொள்ள இயலாது.

அப்படிப்பட்டவர்கள் நாடாளுமன்றத்தில் இருக்கமுடியாது. அவர்களின் நடவடிக்கைகளுக்கு அவர்களைத் தெரிவு செய்த மக்களும் விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்ற தோரணையில் ஒர் அரசியல் அராஜகமே அரங்கேற்றப்பட்டிருக்கின்றது. அத்துடன், தனி ஒரு உறுப்பினராக இருந்தாலும் கட்சி ஒன்றின் தலைவர் என்ற முறையில், நாடாளுமன்ற சம்பிரதாயங்களுக்கு இசைவாக, விக்னேஸ்வரனுக்கு ஒதுக்கப்பட்டுள்ள முன்வரிசை ஆசனத்தைக் கூட பறித்தெடுத்து,அவரை இரண்டாம் வரிசைக்குத் தள்ளி விடுவதற்கான முஸ்தீபுகளும் முடுக்கி விடப்பட்டிருக்கின்றன.

இந்த நாடாளுமன்றக் களேபரத்தில் முன்னணியில் நிற்கும் நான்கு ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர், முன்னாள் கடற்படை அட்மிரல் சரத் வீரசேகரவின் நடத்தை ஆச்சரியத்திற்கு உரியதல்ல. அவரைப் போன்ற சிங்கள தேசபக்தரிடமிருந்து வேறு எதனையும் எதிர்பார்க்க முடியாது.

அதே நேரத்தில் 2010 ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பேராதரவைப் பெற்ற முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, தான் யார் என்பதை தமிழ் மக்களுக்கு தெட்டத் தெளிவாக ஞாபகப்படுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில், வாய் திறந்து பேசாமலே செயற்பட்டுக் கொண்டிருக்கும் மிக முக்கியமான சூத்திரதாரி எதிர் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா.

அவரும் சரத் பொன்சேகாவைப் போலவே, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் பேராதரவை பெற்றிருந்தவர். அதற்கு நன்றிக்கடனாக,அவரின் தலைமைத்துவத்தின் கீழ், அவரின் கட்சி எம் பிக்கள் இருவர் விக்னேஸ்வரனின் பேச்சை கையில் எடுத்திருக்கின்றார்கள். சரத் பொன்சேகா அதற்கு உத்வேகம் கொடுத்து உச்சத்திற்கு கொண்டு சென்றிருக்கின்றார்.

2010 இலும் 2019இலும் முறையே இந்த இரண்டு சிங்கள அரசியல் வாதிகளுக்கும்,அவரவர் போட்டியிட்ட ஜனாதிபதித் தேர்தல்களில் தமிழ் மக்கள் கொடுத்த பேராதரவு வெறும் செல்லாக் காசு என இப்பொழுது நிரூபிக்கப்பட்டுள்ளது.

2010ல் அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நிராகரித்தும், 2019ல் இன்றைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவை எதிர்த்தும்,தமிழ் மக்கள் அளித்த எதிர்மறையான வாக்குகள் தான்,சரத்பொன்சேகாவுக்கும் சஜித் பிரேமதாசாவுக்கும் கிடைத்த தோல்விகளில் கூட, ஒர் மரியாதையை இணைத்திருந்தன என்பதை நினைத்துப் பார்க்கக் கூட இந்த இருவரும் இப்பொழுது தயாராக இல்லை.

கிடைக்கும் அடுத்த சந்தர்ப்பத்தில் ஆட்சி அதிகாரத்தைப் பிடிப்பதற்கான இவர்களின் நெடுந்தூரக் கனவில், தமிழர் வாக்குகள் எந்த நிலையிலும் தமக்குத் தான் என்கிற அறிவீனத்தோடு கூடிய மமதை மிளிர்ந்து நிற்கின்றது. எமது தமிழ் மக்கள் இனியாவது ஒரு விடயத்தை தெட்டத் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

தவிர்க்கப்பட முடியாத அரசியல் நிர்ப்பந்தம் ஏற்பட்டாலொழிய, சிங்கள பௌத்த அரசியல் சக்திகளுக்கிடையிலான அதிகாரப் போட்டியில் சம்பந்தப்படுவதால், தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும், நன்றி உட்பட,கிட்டப்போவதில்லை என்பது தான் அந்த உண்மை.

சிங்கள அரசின் ஒரு இனச்சார்பான நகர்வுகளுக்கு எதிராக குரல்கொடுக்கக்கூடிய எவரும் தமிழ் இனவாதிகள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் பிரபாகரனின் வாரிசுகள் என்றும் முத்திரை குத்தப்படுகின்றார்கள் ! – சுரேஷ்பிரேமச்சந்திரன்.

பிற தேசிய இனங்களின் அடையாளத்தையும் இருப்பையும் அச்சுறுத்துவதுதான் ராஜபக்ஷக்களின் அரசாங்கத்தின் நோக்கமா என தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.

இதேவேளை, புதிய அரசாங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள அமைச்சரவையில் இந்து மத விவகாரம், அரச கருமமொழிகள் அமுலாக்கம், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் ஆகிய அமைச்சுக்கள் இல்லாமல் செய்யப்பட்டுவிட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் நடவடிக்கைகளைக் கண்டித்து அவர் இன்று (செவ்வாய்க்கிழமை) விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அறிக்கையில், “இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் பிரகாரம் தமிழ் மொழி அரசகரும மொழியாக ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் இதுவரை அது முழுமையாக நடைமுறையில் இல்லை என்பதும் அரசாங்கத்தினுடைய பல்வேறு திணைக்களங்களிலும் அமைச்சுக்களிலும் இன்னமும் தனிச்சிங்களத்திலேயே சகல நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. என்பதும் தமிழாசிரியர்கள் உட்பட பல அரச தரப்பினரும் இன்னமும் சிங்கள மொழியிலேயே கடிதங்களையும் சுற்றுநிரூபங்களையும் பெறுகிறார்கள் என்பதும் வெளிப்படையான உண்மை.

இவ்வாறான சூழ்நிலையில், தமிழ் மொழி அமுலாக்கல் அமைச்சு அல்லது அரச கருமமொழி அமுலாக்கல் அமைச்சு என்பதை இல்லாமல் செய்தது என்பது, தான் விரும்பியவாறு தனிச் சிங்களத்தில் அரச கருமங்களை நடத்துவதற்கான ஓர் முயற்சியாகவே நாங்கள் கருதுகிறோம்.

அதனைப் போலவே, இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சியாக கடந்த அரசாங்கத்தில் பெயரளவிற்காவது தேசிய நல்லிணக்க அமைச்சு என்று ஒன்று உருவாக்கப்பட்டிருந்தது. இன்று அதுவும் இல்லாமல் செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும், இந்து சமய கலாசார அமைச்சோ, கிறிஸ்தவ, இஸ்லாமிய சமயங்கள் தொடர்பான அமைச்சுக்களோ உருவாக்கப்படவில்லை என்பதும் இந்த அரசாங்கத்தினுடைய சிங்கள பௌத்த மேலாதிக்க சிந்தனையை மிகத் தெளிவாக வெளிப்படுத்தி நிற்கின்றது.

பௌத்த சிங்கள வாக்குகளால் மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் பொறுப்பேற்றுள்ள இந்த அரசாங்கமானது பத்தொன்பதாவது திருத்தத்தை மாற்றுவது, பதின்மூன்றாவது திருத்தத்தை மாற்றுவது, புதிய அரசியல் சாசனத்தைக் கொண்டு வருவது என்று பல்வேறுபட்ட கருத்துருவாக்கங்களில் ஈடுபட்டுவருகின்ற அதேசமயம், ஒரு குடும்ப ஆட்சியை உருவாக்கக்கூடிய வகையிலும் அந்த குடும்ப ஆட்சியினூடாக சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்தக்கூடிய வகையிலும் செயற்பட்டு வருகின்றது.

இலங்கை ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் அண்மைக்காலமாக எடுத்துவரும் ஒவ்வொரு முடிவுகளும் நடவடிக்கைகளும் சிறுபான்மைத் தேசிய இனங்களை அழித்தொழிக்கும் அடிப்படையிலும் அவர்களின் இருப்புக்களைக் கேள்விக்குள்ளாக்கும் அடிப்படையிலுமே மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

கிழக்கு மாகாணத்தில் உருவாக்கப்பட்ட தொல்பொருள் சின்னங்களை அடையாளமிடுவதற்கும் பாதுகாப்பதற்கும் முழுக்க முழுக்க பௌத்த சிங்கள மேலாதிக்க சிந்தனையில் மூழ்கித் திளைக்கின்ற அதிகாரிகளை உள்ளடக்கிய ஜனாதிபதி செயலணியை உருவாக்கியதென்பது குறிப்பிடக்கூடியது.

வடக்கு மாகாணத்தில் மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் காணிகளைச் சுவீகரிப்பதும் அதேபோன்று படையினர் தமிழ் மக்களுக்கு உரித்தான காணிகளைப் பலாத்காரமாக பறித்து வருவதும் இங்கு குறிப்பிட வேண்டிய விடயங்களாகும்.

அத்துடன், காலாதிகாலமாக செய்கை செய்யப்பட்டுவந்த வயல் நிலங்கள் உட்பட தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகள் மிகப்பெருமளவில் வனவளப் பாதுகாப்புக்கும் வனஜீவராசிகள் பாதுகாப்பிற்குமாக தான்தோன்றித்தனமான முறையில் பறிமுதல் செய்யப்படுவதையும் பார்க்கின்றோம்.

தமிழ் மக்கள் தமது உயிர்ப்பாதுகாப்புக்கு அச்சப்படுவதற்கும் மேலாக, தமது வாழ்வாதாரங்கள், காணிகள், நிலங்கள் அனைத்தும் அவர்களின் கைகளைவிட்டுப் பறிக்கப்படும் ஒரு அச்சசூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இவற்றுக்கு எதிராகக் குரல்கொடுக்கக்கூடிய எவரும் தமிழ் இனவாதிகள் என்றும் பிரிவினைவாதிகள் என்றும் பிரபாகரனின் வாரிசுகள் என்றும் முத்திரை குத்தப்படுகின்றார்கள்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சர்கள் உட்பட அனைவருமே சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிரான பல்வேறுபட்ட கொள்கைகளை வெளியிடுபவர்களாகவே தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர்.

‘ஒரே நாடு ஒரே சட்டம்’ என்று பேசுபவர்கள், இந்த நாட்டில் பல்வேறுபட்ட தேசிய இனங்கள் இருக்கின்றன, அவர்களுக்கான மத, கலாசார, பண்பாட்டு அடையாளங்கள் இருக்கின்றன என்பதுடன், அம்மக்களுக்கான பாரம்பரியம் மிக்க தேசவழமைச் சட்டங்களும் அவர்களது மதவிழுமியங்களைக் காப்பதற்கான சட்டதிட்டங்களும் இருந்து வருகின்றன.

அவை பாதுகாக்கப்படவேண்டும் என்பதற்காக பல இலட்சம் மக்களை இழந்து அவர்கள் போராடி வந்துள்ளனர் என்பதை மறந்து, அவ்வாறானவர்களின் கருத்துக்களைத் தூக்கியெறிந்து அதனை ஒரு பொருட்டாகவே மதிக்காமல், இவர்கள் எதேச்சாதிகாரமாக நடப்பது என்பது இந்த நாட்டில் இனங்களுக்கிடையில் மேலும் மேலும் விரிசல்களை உருவாக்குவதற்கே உதவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

18 வயதுக்குட்பட்டவர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் பயன்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை! – டக்ளஸ் தேவானந்தா.

சர்வதேச சட்டம் மற்றும் இலங்கை செயல்பாட்டுச் சட்டத்தின் கீழ் 18 வயதுக்குட்பட்ட நபர்க பணிபுரிய அனுமதி இல்லை. ஆகவே 18 வயதுக்குட்பட்ட நபர்களை மீன்பிடி நடவடிக்கைகளில் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இதேவேளை அவர்களை முறையான கல்விக்கு வழிநடத்துவது கட்டாயமாகும் என்றார்.

நீங்கள் ஒரு மீனவராக இருந்தால், சிறுவர்களை உதவியாளராகவோ அல்லது வேலைவாய்ப்பாகவோ எடுத்துக் கொள்வதால், அவர்களின் கல்வி சீர்குலைவு மற்றும் அவர்கள் மன மற்றும் உடல் ரீதியான துஷ்பிரயோகம் போன்ற பல சமூக பிரச்சினைகளை உண்டாக்கும். மேலும் நீங்களும் சட்டத்தால் தண்டிக்கப்படுவீர்கள் என்றார்.

ஒவ்வொரு மீன்பிடி பயணத்திலும் உங்கள் உதவியாளரின் சேவைகளைப் பெறும்போது அவர்களின் தேசிய அடையாள அட்டை அல்லது மீன்வள அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டியது அவசியம்.

கூறப்பட்ட அடையாள அட்டைகள் இல்லாத நிலையில், மூன்று மாதங்களுக்குள் பெறப்பட்ட புகைப்படத்துடன் ஒரு கடிதத்தை தயாரிப்பது கட்டாயமாகும்.

அந்த நபரின் அடையாளத்தை அவரது வசிப்பிடத்தின் கிராம உத்தியோகத்தர் உறுதிப்படுத்த வேண்டும். என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பொதுமக்களை கொலை செய்ய வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இருக்கவில்லை ;இராணுவமே அவர்களை கொலை செய்தது – சி.வி.விக்கினேஸ்வரன்.

முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

 

கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறித்த நேர்காணலின் சுருக்கமான கேள்விகளும் பதில்களினதும் தொகுப்பு.

 

கேள்வி :- விடுதலைப் புலிகள் அமைப்பை எவ்வாறு பார்க்கிறீர்கள் ?

பதில்:- விடுதலைப் புலிகள் அமைப்பை ஒரு பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ள முடியாது . தங்கள் சமூகத்திற்கு அநீதி இழைத்ததால்தான் அவர்கள் ஆயுதம் ஏந்தி போராட தூண்டப்பட்டனர்.

கேள்வி :- உலக நாடுகள் விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்கையில் நீங்கள் இதனை ஏன் பயங்கரவாத அமைப்பாக ஏற்றுக்கொள்ளவில்லை?

பதில் :- அரசாங்கம் தான் செய்யும் தவறுகளை மூடி மறைத்து, அது குறித்து கேள்வி எழுப்புகின்றவர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கிறது.

கேள்வி :- இராணுவத்தினர் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களைத் தவிர்த்து அப்பாவி மக்களை கொலை செய்தனரா.?

பதில் :- 2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பயங்கரவாதிகள் அல்ல என்றும் அவர்கள் அனைவரும் அப்பாவி தமிழ் மக்கள். பொதுமக்களை கொலை செய்ய வேண்டிய அவசியம் விடுதலைப் புலிகளின் தலைவருக்கு இருக்கவில்லை என்றும் இராணுவமே அவர்களை கொலை செய்தது.

கேள்வி :-முள்ளிவாய்க்காலில் பயங்கரவாதிகள் மயானத்தில் ஏன் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டீர்கள் என  கேள்வி எழுப்பப்பட்டது.

பதில் :- அந்த இடத்திற்குச் சென்று மக்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டிய கடமை உள்ளதாகவும் அதனாலேயே நான் அங்கு சென்று சத்தியப்பிரமாணம் செய்துகொண்டேன்.

கேள்வி :- தமிழ் மொழியை இலங்கையின் முதன் மொழியாக கூறியமைக்கு ஆதாரம் உள்ளதா..?

பதில் :- இலங்கை பண்டையகாலம் முதல் தமிழ் மக்களின் தாயகம் என்பதை உறுதிப்படுத்துவதற்கு என்னிடம் சாட்சியங்கள் இருக்கின்றன.

என்றும் சி.வி.விக்னேஸ்வரன் இந்த நேர்காணலில் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பொது மன்னிப்பில் சிறுகுற்றங்கள் செய்த 444 சிறைக்கைதிகள் விடுதலை!

சிறு தவறுகள் தொடர்பில் சிறைப்படுத்துப்பட்டுள்ள சிறைக்கைதிகள் சிலரை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் 444 சிறைக்கைதிகள் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறசை்சாலைகள் ஆணையாளர் துஷார உப்புல் தெனிய தெரிவித்துள்ளார்.

29 சிறைச்சாலைகளை சேர்ந்த் 18 பெண்கள் உட்பட 444 கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளனர்.

அவர்களுள் அதிகமானவர்களான 83 பேர் வெலிகட சிறைச்சாலையை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

தண்டப்பணம் செலுத்த முடியாமல் சிறு தவறுகளுக்காக சிறையில் உள்ளவர்கள் மற்றும் 65 வயதிற்கு மேற்பட்ட சிறு தவறுகளுக்காக சிறையில் உள்ளவர்கள் இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொலை, கொள்ளை, கற்பழிப்பு மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற தவறுகளுடன் தொடர்புடைய எவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் கல்வி வளர்ச்சிக்கு உதவ சீனா இணக்கம்!

நாட்டின் கல்வி மற்றும் தொழிற் கல்வி அபிவிருத்தி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிர்மாணிக்கப்படவுள்ள கைத்தொழில், மற்றும் டயர் தொழிற்சாலை செயற்றிட்டங்களில் உதவுவதற்கு சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.

சீனத் தூதுவர் ஹுவெய்க்கும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிசுக்குமிடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் போதே இந்த இணக்கம் எட்டப்பட்டுள்ளது.

மேற்படி பேச்சுவார்த்தையின் போது நாட்டின் கல்வித் துறை மற்றும் தொழிற்கல்வி ஆகியவற்றில் அபிவிருத்தியை மேற்கொள்ளும் வகையில் மேற்கொள்ள வேண்டிய வேலைத் திட்டங்கள் தொடர்பில் முக்கிய கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டின் கல்வி அபிவிருத்தி தொடர்பில் கல்வி அமைச்சு மேற்கொள்ளும் செயற்திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நீண்ட கால வேலைத் திட்டங்கள் தொடர்பில் சீன அரசாங்கம் எவ்வாறு உதவ முடியும் எனவும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளது.

குறிப்பாக பாடசாலைக் கல்வி, உயர் கல்வி, தொழிற் கல்வி ஆகிய துறைகளை அபிவிருத்தி செய்வதற்கு சீன அரசிடமிருந்து இலங்கை அரசாங்கம் எதிர்பார்க்கும் ஒத்துழைப்பு தொடர்பில் இதன்போது அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெளிவுபடுத்தியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உத்தேச திட்டமான கைத்தொழில் மற்றும் முதலீட்டு வலயங்களில் மருந்து உற்பத்தி மற்றும் டயர் தொழிற்சாலை உள்ளிட்ட அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பிலும் அதற்கான மனித வள விருத்தியை மேம்படுத்துவது தொடர்பிலும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

அபிவிருத்தி வேலைத் திட்டங்களை துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்காக நிர்மாணத்துறை மற்றும் வளங்கள் துறையின் திறன பிவிருத்தி அவசியம் தொடர்பில் அமைச்சர் இங்கு சுட்டிக்காட்டியுள்ளார்.

அது தொடர்பில் இருவருக்கிடையில் இணக்கம் ஏற்பட்டுள்ள நிலையில், எதிர்வரும் சில மாதங்களில் அது தொடர்பான துரித நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான புரிந்துணர்வு மற்றும் ஒத்துழைப்புகளை பலப்படுத்துவது தொடர்பில் செயற்படுவதற்கு தாம் விருப்பமாக உள்ளதாக சீனத் தூதுவர் இதன்போது தெரிவித்துள்ளார். அதன் அடுத்தகட்ட நடவடிக்கையான வீடியோ கலந்துரையாடல் மூலம் மேலும் விடயங்கள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்குமிடையிலான ஒத்துழைப்புகளை வலுப்படுத்தும் வகையில் இரு தரப்பு அதிகாரிகளுக்கிடையில் இணைப்புகளை ஏற்படுத்துவது தொடர்பிலும் இங்கு இணக்கம் காணப்பட்டுள்ளது.