உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

இனப் பிரச்சினைகளுக்கு தீர்வாக முன்வைக்கப்பட்ட 13 ஆவது திருத்தத்தை இந்தியாவின் அனுமதியின்றி இலகுவில் இரத்து செய்ய முடியாது ! – வாசுதேவ நாணயக்கார.

இனப் பிரச்சினைகளுக்கு தீர்வாக கொண்டு வரப்பட்ட அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை இந்தியாவின் அனுமதியின்றி இலகுவில் இரத்து செய்ய முடியாது என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 19வது திருத்தம் இரத்து செய்யப்படுவதுடன் 13 ஆவது திருத்தமும் இரத்து செய்யப்பட வேண்டும் என அரசாங்கத் தரப்பில் கூறப்பட்டுவருகின்ற போதும் 13 ஆவது திருத்தத்தின் நோக்கம் மாகாண சபை தேர்தலில் தங்கியுள்ளது என அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்தோடு மாகாண சபைகள் இல்லாமல் மாகாணங்களின் நிர்வாகம் ஜனாதிபதியின் பிரநிதியான ஆளுநர்களினால் முன்னெடுக்கப்படுவதால் மாகாண சபை முறைமையை முழுமையாக இல்லாதொழிக்க வேண்டும் என குறிப்பிடப்படுகிறது.

அரசியலமைப்பின் 19 ஆவது திருத்தத்தை இலகுவில் இரத்து செய்தாலும் 13 ஆவது திருத்தத்தை இலகுவில் இரத்து செய்ய முடியாது என்றும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

இந்தியாவின் தலையீட்டினால் 13 ஆவது திருத்தம் உருவாக்கிக் கொள்ளப்பட்ட நிலையில் அவர்கள் இலங்கையின் நட்பு நாடாக இருப்பதனால் இந்த விடயத்தின் தீவிரத்தன்மை குறித்து அவதானம் செலுத்துவார்கள் என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை நல்லாட்சி அரசாங்கம் உள்ளுராட்சித் தேர்தலில் தோல்வியடைந்ததை தொடர்ந்து உரிய காலத்தில் இடம்பெறவிருந்த மாகாண சபைத் தேர்தலை பிற்போட்டது என குற்றம்சாட்டிய வாசுதேவ நாணயக்கார இதற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பும் முழுமையான ஆதரவு வழங்கியது என்றும் தெரிவித்தார்.

வடக்கில் அதிகரிக்கும் வன்முறைச்சம்பவங்கள் , வரணி பகுதியில் இளைஞன் ஒருவர் மீது வாள்வெட்டு!

யாழ்ப்பாணம் வரணி பகுதியில் இளைஞன் ஒருவன் கடத்திச் செல்லப்பட்டு வாளால் வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் நேற்று (25) மாலை வரணி, இயற்றாலை பிரதேசத்தில் இந்த சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

வேலைக்கு சென்றுவிட்டு பேருந்தில் வந்து சுட்டிபுரம் பகுதியில் இறங்கும் போது அங்கு நின்றிருந்த இனந்தெரியாத கும்பல் ஒன்று குறித்த இளைஞனை கடத்திச் சென்று வாளால் வெட்டி படுகாயப்படுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது போன்றதான வன்முறைச்சம்பவங்கள் தமிழர் பகுதிகளில் அதிகரித்து வருவதை காணக்கூடியதாகவுள்ளது. வாள்வெட்டுக்கள் மட்டுமன்றி போதைப்பொருள்பாவனை, திருட்டு சம்பவங்கள் , என பல்வேறுபட்ட சமூக சீர்கேடுகள் அதிகரித்து வருகின்ற இவற்றினுடைய பின்னணி என்ன..? இவற்றுக்கான முடிவு என்ன..?  இவை தொடருமாயின் எதிர்கால தலைமுறையின் நிலை என்ன ..? என பல்வேறு கோணங்களில் சிந்திக்க வேண்டியவர்களாக நாம் உள்ளோம்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக ஆரம்பப் புள்ளியாக முன்னெடுக்கப்பட்ட ஒன்றே மாகாண சபை முறைமை , மாகாண சபை முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.! – சி.வி.கே.சிவஞானம்

மத்தியில் மட்டும் அதிகாரங்கள் குவிக்கப்படாமல் மாகாணங்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். அதனாலேயே மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. எனினும் மாகாண சபைகளுக்கு கூட முழுமையான அதிகாரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை என தெரிவித்துள்ள வடக்கு மாகாண அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தற்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரின் கருத்துக்களை அரசாங்கம் கூட கணக்கில் எடுக்காது என்றும் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று  (25.08.2020) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,

மாகாண சபை முறைமை என்பது ஆரம்ப காலத்தில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்காக ஆரம்பப் புள்ளியாக முன்னெடுக்கப்பட்ட ஒன்று. தனியே அது வடக்கு கிழக்குக்கு மட்டுமன்று உருவாக்கப்படவில்லை.

நாட்டின் அனைத்துப் பிரதேசங்களுக்கும் என்றே மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. எனினும் அந்த மாகாண சபை முறைமை கூட போதாது அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்று தமிழ் மக்களாகிய நாம் கூறி வருகின்றோம். ஏனெனில் மத்தியில் மட்டும் அதிகாரங்கள் இருத்தல் நாட்டுக்கு நல்லதல்ல நாட்டில் வாழும் சிறுபான்மை இனத்திற்கும்  நல்லது அல்ல.

மத்தியில் மட்டும் அதிகாரங்கள் குவிக்கப்படாமல் மாகாணங்களுக்கும் அதிகாரங்கள் பகிரப்படவேண்டும். அதனாலேயே மாகாண சபை முறைமை உருவாக்கப்பட்டது. எனினும் மாகாண சபைகளை கூட முழுமையான அதிகாரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. தற்போதைய அரசாங்கத்தில் இருக்கின்ற சரத் வீரசேகர என்பவர் படு இனவாதி. ஐநாவிற்கு பல தடவைகள் சென்று இலங்கையில் இனப்படுகொலை நடைபெறவில்லை என்ற கருத்தைக் கூறி வருபவர்.

கோட்டபாய அரசில் தற்போது அங்கம் வகிக்கின்ற சரத் வீரசேகர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில ஆகியோரது கருத்துக்களை அரசாங்கம் கூட கணக்கில் எடுக்காது என்றே நான் கருதுகின்றேன்.

எனவே இவர்களின் விஷமத் தனமான கருத்துக்களை நாம் கணக்கில் எடுக்கத் தேவையில்லை. மாகாண சபைகளுக்கு காணி பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். எனவே இந்த நாட்டில் மாகாண சபை முறைமை நீக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஏற்றுக்கொள்ள முடியாது. தமிழர்களின் பிரச்சினைக்கு ஆரம்பப் புள்ளியாக முன்னெடுக்கப்பட்ட மாகாண சபை முறைமை இருக்க வேண்டும். மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.

ஏனெனில் முழு அதிகாரங்களும் மத்தியில் குவிந்தால் ஏனைய இனத்தவர்களின் உரிமைகள் கேள்விக்குறியாகவே இருக்கும். எனவே சரத் வீரசேகர போன்றவர்களின் கருத்துக்கள் நாட்டின் ஐனநாயகதரதிற்கு பாதகத்தை ஏற்படுத்தலாம் என்றார்.

”விக்னேஸ்வரன், பிறந்து வளர்ந்தது எல்லாம் கொழும்பில். இப்போது தமிழர்களை ஏமாற்றும் வகையில் பொய்யான ஒரு நாடகமாடுகிறார்.” – விமல் வீரவன்ஸ

சம்பந்தனை விட பெரிய தலைவராக வரவேண்டும் என்பதே சி.வி.விக்னேஸ்வரனின் ஆசை எனவும் தமிழர்களுக்கு யார் தலைவர்?  என்பதில் இவர்கள் இருவருக்கும் இடையில் போட்டி நிலவுகிறது எனவும் அமைச்சர் விமல் வீரவன்ஸ தெரிவித்துள்ளார்.

அத்துடன் அனைத்து இனங்களுக்கும் சம அந்தஸ்து வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

நேற்றையதினம் (24.08.2020) ஹோமாகமவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

திருமண வீடொன்றுக்கு ஒருவர் குடித்து விட்டு வந்து சர்ச்சைகளில் ஈடுபட்டால், ஏனையவர்கள் அச்சப்படமாட்டார்கள். அதுபோன்றுதான், சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகளும் காணப்படுகின்றன.

அவருக்கு, சம்பந்தனைவிட பெரிய தலைவராக வேண்டும் என்பதுதான் ஆசை. தமிழர்களுக்கு யார் தலைவர் என்பதில், இவர்கள் இருவருக்கும் இடையில் போட்டி நிலவிவருகிறது. ஆனால், விக்னேஸ்வரனுக்கு அதற்கான தகுதி கிடையாது. அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் கொழும்பில். றோயல் கல்லூரியில் கல்வி பயின்றவர். இப்போது தமிழர்களை ஏமாற்றும் வகையில் பொய்யான ஒரு நாடகத்தைத்தான் அவர் அரங்கேற்றி வருகிறார்.

இதன் ஓர் அங்கமாகத்தான், நாடாளுமன்றுக்கு வந்து உலகிலேயே மூத்த மொழி தமிழ் மொழி என கருத்து வெளியிட்டுள்ளார். அவருக்கு நன்றாகத் தெரியும், அப்படி கூறினால் இனவாதத்தை இலகுவாகத் தூண்டிவிட முடியும் என்று. எம்மைப் பொறுத்தவரை யாழில் இருந்து வந்த சுதந்திரக் கட்சி உறுப்பினருக்கும் கிழக்கிலிருந்து வந்த அதாவுல்லா போன்றோருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் வாய்ப்பை வழங்க வேண்டும்.

இதுதான் எமது நிலைப்பாடாகும். இதுதான் ஜனநாயகத்தை பலப்படுத்தும் வழிமுறைகளாகும். நாம் இவ்வாறான செற்பாடுகளை மேற்கொள்ளும்போதுதான் அனைத்து சமூகங்களும் முன்னேற்றமடையும்.

அப்போது மட்டும்தான், சம்பந்தன் மற்றும் விக்னேஸ்வரனின் இனவாத அரசியலுக்கும் தேவை ஏற்படாது போகும். இன்னும் சில நாட்களில் புதிய அரசியலமைப்பு ஸ்தாபிக்கப்படவுள்ளது. இதன் ஊடாக இந்த நாடு மேலும் பலமடையும்.

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்க்ஷ, ஒரு நாடு – ஒரு சட்டம் என்ற கொள்கையில் மிகவும் தெளிவாக இருக்கிறார். ஒவ்வொருவருக்கும் தேவையான வகையில் சட்டங்களை வகுக்க நாம் ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை.

ஜனாதிபதி இம்முறை நாடாளுமன்றுக்கு வருகைத் தந்ததை நாம் அனைவரும் அவதானித்தோம். எந்தவொரு ஆடம்பரமும் இல்லாமல்தான் அவர் தனது வாகனத்தில் வந்தார்.

இதனை மதிக்கத் தெரியாதவர்கள்தான் இன்று எதிரணியில் இருந்துகொண்டு கூச்சலிடுகிறார்கள். அவர்களுக்கு குறைக்கூற எந்தவொரு காரணமும் கிடையாது என்பதால், ஜனாதிபதியின் வாகனம் வீதியின் கோட்டுக்கு இடையில் வந்ததாகக்கூட கூறுகிறார்கள்.

நாடாளுமன்ற வீதிக்கு, பொதுப்போக்குவரத்து சட்டங்கள் இல்லை என்பதுகூட அந்த தரப்புக்கு தெரியாமல் இருக்கிறது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரனின் கருத்து தொடர்பில் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் எதிர்ப்பை வெளிப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் ! – சஷிந்திர ராஜபக்ஸ

தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் உறுப்பினர் சி.வி.விக்கினேஸ்வரன் ,  9வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் தமிழ்மொழி தொடர்பாகவும் தமிழ் மக்கள் தொடர்பாகவும் பேசியமை தொடர்பாக ஆளுங்கட்சியினுடைய அங்கத்தவர்கள் பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டு வரும் நிலையில்  அடுத்த நாடாளுமன்ற அமர்வில் எதிர்ப்பை வெளியிப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷிந்திர ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

தமிழர் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன், நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

9ஆவது நாடாளுமன்றத்தின் முதல் அமர்வில் விக்னேஸ்வரன் ஆற்றிய உரையானது இந்த நாட்டிலுள்ளவர்களுக்கானது அல்ல. மாறாக, புலம்பெயர்ந்துள்ளோருக்கு ஆற்றிய உரையாகும். ஆகவே, அது தொடர்பாக குழப்பமடையத் தேவையில்லை.

மேலும், விக்னேஸ்வன் கூறியது போன்று வட, கிழக்கு மக்களுக்கும் தேவையானது இதுவல்ல. ஆகவே, விக்னேஸ்வரனின் கருத்து தொடர்பில் அடுத்த நாடாளுமன்ற அமர்வில் எதிர்ப்பை வெளிப்படுத்த எதிர்பார்த்துள்ளோம் என்றும் அவர் மேலும் தெரவித்துள்ளார்.

வறுமையை ஒழிப்பதற்கு முன்னுரிமை வழங்கி சமுர்த்தி செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் ! – ஜனாதிபதி கோட்டாபய

குறைந்த வருமானம் பெறுவோருக்கு புதிய வருமான வழிகளை ஏற்படுத்திக்கொடுத்து அவர்களின் வருமானத்தை அதிகரிப்பதன் மூலமே வறுமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வை குறைக்க முடியும் எனவும் சமுர்த்தி நிவாரணத்தை குறைந்த வருமானம் பெறும் மக்களை பலப்படுத்தும் செயற்திட்டமாக மாற்ற வேண்டுமெனவும்  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

சமுர்த்தி, மனைப் பொருளாதார, நுண்நிதி, சுயதொழில், தொழில் அபிவிருத்தி மற்றும் கீழ் உழைப்பு அரச வளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடலின்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து குடும்பங்களினதும் வருமானத்தை அதிகரித்தல், கிராமிய பொருளாதாரத்தின் வளர்ச்சி மக்கள் மைய பொருளாதாரத்தை மேம்படுத்தல் என்ற விடயங்களை இதற்காக பயன்படுத்திக்கொள்ளலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சமுர்த்தி வழங்குவதற்காக வருடாந்தம் 50 ஆயிரம் மில்லியன் ரூபாய் செலவிடப்படகின்றது என்றும் இந்த தொகை நாட்டுக்கு முதலீடாக வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமுர்த்தி பயனாளிகளை நிவாரணம் பெறும் மனநிலையில் இருந்து மீட்டெடுத்து நுண் தொழில் முயற்சியாளர்கள் என்ற நிலைக்கு மாற்றும் வேலைத்திட்டத்தை உடனடியாக திட்டமிட வேண்டும் என்றும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

வலுவூட்டப்பட்ட சமுர்த்தி பயனாளிகளை சமுர்த்தி செயற்திட்டத்தில் உள்வாங்கி நாட்டுக்கு நன்மை கிடைக்கும் வழிமுறை ஒன்று தயாரிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி, நுண்நிதி கடன்கள் மூலம் பிரதிபலனை வழங்குவதற்கு ஒழுங்குபடுத்தல் அவசியம் என்றும் நிதி இயலுமை குறித்து விளங்கிக்கொள்வது நுண்நிதி நிறுவனங்களின் மிக முக்கிய பணியாகும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சமூக மாற்றத்துக்கு மக்கள் மத்தியில் உத்வேகம் தோன்றியிருக்கும் இந்த நேரத்தை வீட்டுப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் போன்ற சவால்மிக்க நிலைக்கு முகங்கொடுத்த மக்களுக்கு தமது பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக வங்கிகள் சலுகை வேலைத்திட்டங்களை அறிமுகப்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி இதன்போது தெளிவுபடுத்தியுள்ளார்.

இதன் மூலமே மக்களுக்கும் நாட்டுக்கும் சிறந்த பொருளாதாரத்தை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

மக்கள் எங்களுக்கு ஒரு தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர், எங்களுக்கு யாரும் விதிமுறைகளை கட்டளையிட முடியாது ! – மஹிந்த ராஜபக்ஸ

அனைத்து சிறுபான்மை கட்சிகளுக்கும் நாட்டுக்கு சேவை செய்ய அரசாங்கத்தில் சேர பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று பகிரங்க அழைப்பை விடுத்தார்.

சிறுபான்மை கட்சிகள் எங்களுடன் சேர்ந்து இந்த நாட்டை வளர்ப்பதில் பங்காளிகளாக இருக்க முடியும், அதில் எவ்வித தடையுமில்லை. ஆனால் அவர்களுக்கு எந்தவொரு அமைச்சரவை அமைச்சு பதவிகளும் வழங்கப்பட மாட்டாது, என பிரதமர் ராஜபக்ஷ ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

சில சிறுபான்மை கட்சிகள், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அரசாங்கத்தில் சேர விருப்பம் தெரிவித்திருந்தன, ஆனால் அவர்களில் யாரும் இதுவரை உத்தியோகபூர்வ கோரிக்கையை முன்வைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

அத்தகைய கோரிக்கை ஏதேனும் இருந்தால், நாங்கள் அவர்களை அரசாங்கத்தில் தங்க வைப்போம், ஆனால் அவர்களின் நிபந்தனைக்கு ஏற்ப அல்ல.

மக்கள் எங்களுக்கு ஒரு தெளிவான ஆணையை வழங்கியுள்ளனர், எங்களுக்கு யாரும் விதிமுறைகளை கட்டளையிட முடியாது. என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

சி.வி. விக்னேஸ்வரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறுபவர்கள் உண்மையான வரலாற்றை நாட்டு மக்களுக்குச் சொல்லத் தயாரா? – ஊடக அறிக்கையில் சுரேஷ்பிறேமச்சந்திரன் கேள்வி

9 வது பாராளுமன்றத்தில் சபாநாயகரை வாழ்த்திப் பேசுகையில், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி. விக்னேஸ்வரனின் உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறுபவர்கள் உண்மையான வரலாற்றை நாட்டு மக்களுக்குச் சொல்லத் தயாரா?  என்று தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் இணைப் பேச்சாளரும், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவருமான சுரேஷ்பிறேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு,

பாராளுமன்றத்தில் விக்னேஸ்வரன் முதன் முதலாக ஆற்றிய கன்னி உரை பாராளுமன்றத்திலும் தென் பகுதியிலும் பலத்த சலசலப்புக்களை ஏற்படுத்தி இருக்கின்றது. தமிழ் மிகவும் தொன்மையானமொழி என்றும் இலங்கையில் மூத்த குடிமக்களாக தமிழர்களே இருந்தார்கள் என்றும் அவ்வாறான மக்களுக்கு இறையாண்மை இருப்பதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் சொல்லிய கருத்தினை பாராளுமன்ற உறுப்பினர்களால் ஜீரணித்துக் கொள்ள முடியவில்லை.

இதன் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார, விக்னேஸ்வரனினுடைய உரை சிங்கள மக்களுக்கு எதிரானது என்ற தொனியில் அதனை விமர்சித்ததுடன், அவரது உரையை ஹன்சாட்டில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இலங்கையினுடைய வரலாறு என்று கூறப்படும் மகாவம்சத்தில் விஜயன் இந்தியாவில் இருந்து தனது 700 நண்பர்களுடன் இலங்கைக்கு வந்ததாகக் கூறப்படுகின்றது. இவ்வாறு அவன் இலங்கைக்கு வந்து குவேனி என்ற பெண்ணை மணந்ததாகவும் கூறப்படுகின்றது. விஜயன் இலங்கைக்கு வந்த பொழுது இலங்கையில் திருகோணேஸ்வரம், திருக்கேதீஸ்வரம், முன்னேஸ்வரம், நகுலேஸ்வரம், தொண்டீஸ்வரம் ஆகிய ஐந்து ஈஸ்வரங்கள் இலங்கையைச் சுற்றிலும் இருந்ததாகவும் இங்கிருந்தோர் சிவனை வழிபட்டு வந்ததாகவும் அவர்கள் பேசியது தொன்மையான தமிழ் மொழி எனவும் சிங்கள, தமிழ் மற்றும் சர்வதேச வரலாற்று ஆய்வாளர்கள் கூறியிருக்கின்றார்கள்.

இதனையே தான் பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரன் தனது கன்னி உரையில் குறிப்பிட்டு, அவ்வாறான தொன்மையான ஓர் மக்கள் இனத்துக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தார். இது எந்த விதத்தில் ஒரு இனவாதக் கருத்தாக அமையும் என்பதை கற்றறிந்த சிங்கள மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனுடைய கருத்துக்களை பாரிய இனவாத கருத்துக்களாகவும் இவை அடக்கப்பட வேண்டும் எனவும் இந்தக் கருத்துக்கள் தமிழீழக் கோரிக்கைக்கு ஒப்பானது என்றும் பிரதமர் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் பேசுவதானது அவர்களின் உள்நோக்கத்தையே வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றது.

போர்த்துக்கேயர் இலங்கையைக் கைப்பற்றிய போது இலங்கை முழுவதிலும் தமிழே நீதிமன்ற மொழியாக இருந்தது என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

தமிழ் மக்களினுடைய மொழி அதனுடைய தொன்மை அவர்களது கலாசாரம், பண்பாடு, அவர்களுக்கு உரித்தான அதிகாரங்கள் அவர்களுடைய பாதுகாப்பு இவை எதனைப் பற்றிப் பேசினாலும் ஒட்டுமொத்த சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இவை இனவாதக் கருத்துக்களாகவே தோன்றுகின்றது. இன்னும் சொல்லப்போனால் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மொழி தொடர்பாகவோ, தமது பிறப்புரிமைகள் தொடர்பாகவோ, அவர்களது பாதுகாப்பு தொடர்பாகவோ பேசக்கூடாது என எதிர்பார்க்கின்றார்கள்.

அரசாங்கத்தின் காணி அபகரிப்பு, எமது புராதன சின்னங்களை அழித்து ஒழித்தல், தமிழ் மக்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள மறுத்தல் போன்ற அனைத்தையும் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். தமிழ் இனத்துக்கு எதிரான இனப் படுகொலைகள், யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் மானுடத்திற்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக பாராளுமன்றத்திலோ, வெளியிலோ தமிழர் தரப்புக்கள் பேசக் கூடாது என்று எதிர்பார்க்கின்றார்கள்.

இவ்வாறு பேசுவது எல்லாம் இனவாதக் கருத்துக்கள் என முத்திரைகுத்த முயற்சிக்கின்றார்கள். பாராளுமன்றத்தில் இருக்கக் கூடிய சிங்கள பௌத்த இனவாத சக்திகளும் அரசும் இவ்வாறான முயற்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றார்கள். இவ்வாறான கருத்துக்களை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதனை தெளிவாக கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

விக்னேஸ்வரன் அவர்கள் கூறிய கருத்துக்கள் தவறான கருத்துக்கள் என்று கருதினால் அதில் எந்தவிதமான உண்மையும் இல்லை அவை பாராதூரமான கருத்துக்கள் என்று கருதினால் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உண்மையான கருத்துக்களைக் கூறி தங்கள் கருத்து சரி என வாதிட வேண்டுமே தவிர அவை எதனையும் கூறாமல் அதனை பாராளுமன்ற குறிப்பேட்டில் இருந்து எடுக்கும்படி வற்புறுத்துவதானது அவர்களது இயலாத் தன்மையை வெளிப்படுத்துகிறது.

விக்னேஸ்வரன் அவர்களுடைய கருத்துக்களை சவாலுக்கு உட்படுத்துவதற்கோ அல்லது அது பொய்யானது என்றோ நிரூபிக்கமுடியாத சூழ்நிலையில் சபாநாயகரைப் பயன்படுத்தி அவரது கருத்தை ஹன்சாட்டில் இருந்து அகற்ற முற்சிப்பது சரியான ஓர் செயற்பாடாகத் தோன்றவில்லை.

பாராளுமன்றம் என்பது மக்கள் பிரதிநிதிகள் தங்களது மக்களின் குறைநிறைகளை அது தொடர்பான சட்டங்களை பேசுவதற்கும் உருவாக்குவதற்குமான சபையாகவே உள்ளது. அதாவது மக்கள் தமது இறையாண்மையை தமது பிரதிநிதிகள் ஊடாக பாராளுமன்றத்தில் செயற்படுத்துகின்றார்கள் என்பதே அதன் அர்த்தம் ஆகும்.

ஆகவே, அந்த வகையில் சிறுபான்மை தேசிய இனம் ஒன்றின் பிரதிநிதிகள் அத் தேசிய இனத்தினுடைய உரிமைகள் தொடர்பாகவும், அவர்களுடைய இருப்புக்கள் தொடர்பாகவும், அவர்களுடைய பாதுகாப்பு தொடர்பாகவும் பாராளுமன்றத்தில் எடுத்துரைப்பதற்கு உரித்துடையவர்கள். அதற்கான உரித்துக்கள் அனைத்தும் வரலாற்றுபூர்வமாக அவர்களுக்கு இருக்கிறது என்பதையும் பெரும்பான்மை இனத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் பெரும்பான்மை இனத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசும் புரிந்து கொள்ள வேண்டும்.

புதிய பாராளுமன்றத்தில் வந்திருக்கக் கூடிய அரச தரப்பினரும் எதிர் தரப்பில் இருக்கக் கூடிய சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும் தம்மை சிங்கள பௌத்த பெரும் தேசியவாதிகள் எனக் கருதிக் கொள்வதும் ஏனைய தேசிய இனங்கள் தங்களுக்கு அடிமையாக சேவை செய்ய வேண்டும் என்று கருதுவதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒரு நிலைப்பாடாகும்.

உண்மையான வரலாற்றைத் திரிபுபடுத்தி, அதனை மறைத்து உண்மைக்கு எந்த விதத்திலும் தொடர்பற்ற கற்பனையில் தோற்றுவிக்கப்பட்ட வரலாற்றை பாடப் புத்தகங்களில் நுழைத்து மக்களை திசை திருப்பி விட்டவர்கள் இந்நாட்டில் தொடர்ந்தும் மாறிமாறி ஆட்சி செய்துவரும் சிங்கள பௌத்த மேலாதிக்கவாத சக்திகளே அன்றி, தமிழ் மக்கள் அல்லர் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

நாட்டின் உண்மையான வரலாற்றை மறைத்து, இந்த நாடு சிங்கள மக்களுக்கு மட்டுமே உரித்தானது என்று நிறுவ முற்படுவது தான் இனப் பிரச்சினைக்கான ஆணி வேர். இதனைப் புரிந்து கொண்டு இனியாவது உண்மையான வரலாற்றை மக்களிடம் எடுத்துச் சென்று இதுவரை காலமும் தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்துவிடப்படுகின்ற அரச வன்முறைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து அனைவரும் அவரவர் உரிமைகளுடன் வாழ வழிவகுக்க வேண்டும்.

எனவே, பலமொழிகள், பலமதங்கள், பல இனங்கள் இருக்கக் கூடிய ஒரு நாட்டில் சிங்கள பௌத்தர்கள் மாத்திரம் தான் தீர்மானிக்கும் சக்திகள் என கருதி ஏனையோரை அடக்கி ஒடுக்கும் கருத்துக்களை கைவிட்டு இனங்களுக்கு இடையில் புரிந்துணர்வை உருவாக்கக் கூடிய வகையில் அரசும் சிங்கள பாராளுமன்ற உறுப்பினர்களும் முன்வரவேண்டும் எனகேட்டுக் கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரஜாவுரிமை தொடர்பான சட்டங்களை ராஜபக்ஷ குடும்பம் ஒரு போதும் அரசியலுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்துடனேயே  மேற்கொண்டனர் ! – ஜி.எல்.பீரிஸ்

இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சட்டங்களை ராஜபக்ஷ குடும்பம் ஒரு போதும் அரசியலுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்துடனேயே  மேற்கொண்டனர் என  கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (24.08.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரட்டை பிரஜாவுரிமையுள்ள ஒருவருக்கு புதிய அரசியல் திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றம் செல்ல முடியுமா?  என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், நாம் முதலில் சிந்தித்து பார்க்க வேண்டும். ஏன் அதனை அதாவது இரட்டை பிரஜாவுரிமை உள்ள ஒருவருக்கு எதிராக இதனை செய்தார்கள் என்று! நாட்டின் நலனுக்காக இதனை செய்தார்களா.?  அரசியல் கலாசாரம் சட்டம் முதலானவற்றை சிந்தித்து பார்த்து இதனை செய்யவில்லை. உண்மையில் போலியான நடவடிக்கையே இது. ராஜபக்ஷ குடும்பம் ஒரு போதும் அரசியலுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்துடனேயே இதனை மேற்கொண்டனர். தூரநோக்குடன் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தம் அல்ல. தனிப்பட்டவரை கேந்திரமாகக் கொண்டே இது கொண்டுவரப்பட்டது என்றார்.

புதிய திருத்தம் மேற்கொள்ளப்படுவதன் மூலம் தேசிய பட்டியலில் ஒருவர் விலகுவதன் மூலம் அந்த பட்டியல் ஊடாக பெஸில் ராஜபக்ஷ பாராளுமன்றம் செல்வாரா என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில் , அது அரசியல் தீர்மானம். அது உரிய நேரத்தில் தீர்மானிக்கப்படும். நாடு குறித்து சிந்தித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றார்.

துணை பிரதமர் பதவி தொடர்பில் அரசாங்கத்தில் எவ்வித உத்தியோக பேச்சுவார்த்தையும் இல்லை அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

19 ஆவது அரசியலமைப்பில் காணப்படும் நெருக்கடிகளை சீர்செய்வது இதன் நோக்கமாகும். அப்போதைய இந்தத் திருத்தத்தினால் நாட்டின் பாதுகாப்பு, ஜனநாயகம், பொருளாதாரம் என்பனவும் சீர்குலைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக தொகுதிகளுக்கு பொறுப்புக்கூறும் பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கும் நோக்குடன் கலப்பு தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதால் எமது மக்கள் பட்டபாடுகள் அனைத்தும் போதும்! – கிளிநொச்சியில் டக்ளஸ் தேவானந்தா.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான காணிகள் பல்வேறு திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அவற்றை விடுவித்து அடுத்த போகத்திற்கான பயிர்செய்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும்  துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதால் எமது மக்கள் கடந்த காலங்களில் பட்டபாடுகள் அனைத்தும் போதும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாற்று வழியை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் முன்னாய்வு கூட்டம் நேற்று (24.08.2020)  கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிலையில் அமைச்சரினால் குறித்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற குறித்த முன்னாய்வு கூட்டத்தில், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் குரங்குத் தொல்லைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்ட போது, சிறிய ரகத் துப்பாக்கிகளை விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம், பயிர்செய்கைகளுக்கு நாசம் விளைவிக்கும் குரங்குகளை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம் என்று சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்ட போதே மேற்குறித்த கருத்தினை தெரிவித்த அமைச்சர், மாற்று வழிகள் தொடர்பாக ஆராயுமாறு தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை என்பவற்றின் அடிப்படையில், பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயத்தில் தன்னிறைவு எட்டுவதே நோக்கமாக இருககின்ற நிலையில் வன வளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள காணிகளை பயிர் செய்கைக்கு பயன்படுத்துவதற்கு ஜனாதிபதியின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறப்பிடத்தக்கது.