உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

தனியார் மருத்துவ பீடங்களை வடக்கில் உருவாக்க வேண்டும் – மருத்துவர் சி.யமுனாநந்தா

வடக்கில் தனியார் மருத்துவ பீடங்களை உருவாக்குவதே வடக்கில் நிலவும் வைத்தியர்கள் பற்றாக்குறையை நிவர்த்திசெய்வதற்கான தீர்வாக அமையும் என யாழ் போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் சி.யமுனாநந்தா தெரிவித்தார் வடக்கில் காணப்படுகின்ற வைத்தியர்கள் பற்றாக்குறை நிலைமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

வடபகுதியில் வைத்தியர்கள் பற்றாக்குறை இருப்பதாக அண்மைக்காலங்களில் பொதுமக்களின் பங்களிப்புடன் ஆர்ப்பாட்டங்கள் முல்லைத்தீவு மாவட்டத்திலே நடாத்தப்பட்டிருக்கின்றது. குறிப்பாக, யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து வைத்தியர்கள் அங்கு கடமைக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டது.  ஆனால் யாழ் போதனா வைத்தியசாலையில் சுமார் 80க்கும் மேற்பட்ட மருத்துவ நிபுணர்கள் கடமையாற்றுகின்றார்கள். குழந்தை மருத்துவம் உட்பட சிறு குழந்தைகளுக்கு உரிய சிறப்பு மருத்துவர்கள், இதய சிகிச்சைக்குரிய மருத்துவர்கள், சிறுநீரக சிகிச்சை நிபுணர்கள் கடமையாற்றுகிறார்கள் தற்போது மருத்துவத்துறை நன்கு விருத்தியடைந்துள்ளது

ஒவ்வொரு மருத்துவ நிபுணருக்கும் குறைந்தது மூன்று மருத்துவர்கள் பணியாற்றினால் மாத்திரமே அந்த பிரிவினை சிறப்பாக செயற்படுத்த முடியும் யாழ் போதனா வைத்தியசாலையானது மிகவும் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகின்றது. தற்போதுள்ள பணிப்பாளரின் அயராத முயற்சியின் காரணமாக அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்து
வருகின்றது .

இதனால், மருத்துவ படிப்பு மட்டுமல்ல மருத்துவபடிப்பின் பின் பட்டப்படிப்பு அதேபோல தாதிய பயிற்சி போன்ற பல்வேறு துறைகளில் யாழ் போதனா வைத்தியசாலை விருத்தியடைந்து வருகின்றது. யாழ் போதனா வைத்தியசாலையிலிருந்து வைத்தியர்களை வேறு வைத்தியசாலைக்கு மாற்றும் போது சில சேவைகள் இடைநிறுத்த படக் கூடிய சூழ்நிலை காணப்படுகின்றது. இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டுமேயானால் புதிதாக பல மருத்துவர்களை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது. குறிப்பாக, யாழ் மாவட்டத்தில் தனியார் மருத்துவ பீடம் ஒன்றை உருவாக்கும் பட்சத்தில் இந்த குறைபாட்டை நீக்கலாம்.

ஏனென்றால், இன்று மருத்துவம் உலகளாவிய ரீதியில் அதிகளவில் விருத்தியடைந்து காணப்படுகின்றது ஒவ்வொரு துறையிலும் பல மருத்துவர்கள் உள்ளார்கள் அவர்களின் கீழ் பணி புரிவதற்கும் பல மருத்துவர்கள் தேவை. அதே போல் மருத்துவ நிபுணர்கள் இளைப்பாறும் போது புதிய மருத்துவ நிபுணர்கள் உருவாக்கப்பட வேண்டும். எனவே எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தொழிற்சங்க போராட்டங்களை கைவிட்டு புதிதாக மருத்துவ பீடங்களை உருவாக்குவதற்குரிய முயற்சியில் ஈடுபடவேண்டும் அரசாங்கத்திடம் போதியளவு பணம் இல்லாத படியினால் தனியார் மருத்துவ பீடங்களை உருவாக்குவதே இந்த காலகட்டத்தில் தேவையாக உள்ளது என்றார்.

9வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்விலேயே ஆழ்ந்து உறங்கிய உறுப்பினர்கள் !

இலங்கையின் 9வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்றையதினம் நடைபெற்றது.

இந்த முதலாவது அமர்விலேயே சில பாராளுமன்ற உறுப்பினர்கள் நன்றாக உறங்கிக்கொண்டிருந்தனர். இதனை இணையதளவாசிகள் பலரும் நகைப்பாகவும் இவர்களை தான் நாம் தெரிவுசெய்துள்ளோம் என வேதனையாகவும் சமூக வலைத்தளங்களில்  பகிர்ந்து வருகின்றனர்.

புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் அரசியல் பயணம் !

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்த்தன ஏகமனதாகத் தெரிவுசெய்யப்பட்டார். இதனையடுத்து சபாநாயகர் அவர்கள் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க திஸநாயக்க முன்னிலையில் உறுதியுரை எடுத்துக்கொண்டார்.

சபாநாயகர் பதவிக்கு மஹிந்த யாப்பா அபேவர்த்தனவின் பெயரை சபைமுதல்வர் அமைச்சர் தினேஷ் குணவர்த்தன முன்மொழிந்ததுடன். ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்துமபண்டார இதனை வழிமொழிந்தார்.

புதிய சபாநாயகரை முன்மொழிந்த மற்றும் வழிமொழிந்த உறுப்பினர்கள் அக்கிராசனத்துக்கு அவரை அழைத்துச் சென்றனர்.

1945 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10ஆம் திகதி மாத்தறை பிரதேசத்தில் பிறந்த மஹிந்த யாப்பா அபேவர்தன 30 வருடங்களுக்கு மேலாக அரசியல் அனுபவம் மிக்க அரசியல்வாதியாகத் திகழ்ந்து வருகிறார்.

1983 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஐக்கிய தேசியக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தி முதன்முறையாகப் பாராளுமன்றத்துக்குச் சென்ற இவர் 23 ஆண்டுகளாக பாராளுமன்ற உறுப்பினராகத் தொடர்ந்து வருகிறார்.

2020 பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனையை பிரதிநிதித்துவப்படுத்தி மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டு 80,895 விருப்பு வாக்குகளுடன் இவர் பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்டார்

1993,94 ஆண்டில் தென்மாகாண சபையின் முதல்வராக இருந்ததுடன், 1994-2001 ஆண்டு காலப் பகுதியில் மீண்டும் அப்பதவியை வகித்திருந்தார்.

இவர் சுகாதாரம், கலாச்சார விவகாரங்கள் மற்றும் தேசிய பாரம்பரியம், நீர்ப்பாசனம் மற்றும் ஊடக வளர்ச்சி, தொழில் மற்றும்வர்த்தகம், பாராளுமன்ற விவகாரம் மற்றும் விவசாயம் போன்ற பல்வேறு துறைகளில் இவர் அமைச்சுப் பதவிகளை வகித்துள்ளார்.

1987 ஆம் ஆண்டில் கோப் குழுவின் உறுப்பினராகவும் அவர் பணியாற்றியிருந்தார்

மஹிந்த யாப்பா அபேவர்தன அவர்கள் கடந்த 2002ஆம் ஆண்டு சீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற அமைதிக்கான ஆசிய பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்ததுடன், பங்களாதேஷின் டாக்கா நகரில் நடைபெற்ற 50 வது சீ.பி.ஏ மாநாட்டிலும், 2005ஆம் ஆண்டு பீஜிங் நகரில் இடம்பெற்ற மாநாட்டிலும் அவர் கலந்து கொண்டுள்ளார்

மஹிந்த யாப்பா அபேவர்த்தன தனது 75 ஆவது வயதில் இலங்கையின் 21 ஆவது பாராளுமன்ற சபாநாகராக 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் திகதி தெரிவானார்.

தேசபிதாவினுடைய கௌரவத்தை பாதுகாக்க வேண்டிய கடமை இன்று ராஜபக்ஷர்களுடைய கையில்தான் உள்ளது ! – மஹிந்த ராஜபக்ஷவுக்கு எழுதிய கடிதத்தில் வீ.ஆனந்தசங்கரி தெரிவிப்பு.

ஐந்து ராஜபக்ஷர்களும் இணைந்து பிரச்சினைகளை கையிலெடுத்து அதற்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் தார்மீக கடமை காணப்படுவதாக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவர் இன்று (வியாழக்கிழமை) எழுதியுள்ள கடிதத்திலேயே குறித்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த கடித்ததில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “நீங்கள் பிரதம அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டதற்கு எனது உள்ளங்கனிந்த வாழ்த்துக்கள். இப்பதவி தங்களுக்கு புதிதல்ல என்பதையும் அனைவரும் அறிவோம்.

2007ஆம் ஆண்டு மாசி மாதம் 4ஆம் திகதி காலி முகத்திடலில் 59ஆவது சுதந்திரதின விழாவில்  நீங்கள், என்னையும் டக்ளஸ் தேவானந்தாவையும் குறிப்பிட்டு ஆற்றிய உரையின் பகுதியை தங்களிற்கு ஞாபகமூட்டுவதற்காக இங்கே தந்துள்ளேன்.

‘தமிழ், இஸ்லாமிய மக்களின் உயிர்களையும், சொத்துக்களையும் பாதுகாக்க வேண்டியது எமது கடமை. அத்துடன் அவர்களின் பிள்ளைகளின் எதிர்கால உலகத்தை வளம்பெற வைக்க வேண்டும், என்று மொறக்ககாகந்த மகா சமுத்திர திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட போது நான் கூறியதை, மீண்டும் வற்புறுத்தி கூறுவது யாதெனில், பயங்கரவாதத்தை இல்லாமல் செய்வதற்கு மிகப்பொருத்தமான ஆயுதம் அப்பாவித் தமிழ் மக்களுக்கு நீதி வழங்குவதே.

அதற்கு தற்போது தென்னிலங்கை சிங்கள மக்கள் தயாராகிவிட்டார்கள். விடுதலைப் புலிகளின் வெறித்தனமான வேண்டுகோளிற்கு இடமளியோம். இருப்பினும் நாம் நியாயமாகவும் நேர்மையாகவும் நடப்பின் குறைந்தபட்சம் திருவாளர்கள் ஆனந்தசங்கரி, டக்ளஸ் தேவானந்தா போன்றவர்களுடன் இசைந்து செயற்பட வேண்டும்’

என்னைப்பற்றி குறிப்பிட்டதில் இருந்து உங்கள் சிந்தனை என்ன என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. எனது ஞாபகசக்திக்கு எட்டியவகையில் உங்களைப் போன்ற தரத்தில் உள்ள ஒருவர் பிரச்சினையையும் கூறி அதற்குரிய தீர்வையும் குறிப்பிட்டமை முதற் தடவையாகும்.

ஆகவே, ஐந்து ராஜபக்ஷர்களாகிய நீங்கள், சுயமாக முன்வந்து பிரச்சினையை கையில் எடுத்து அதற்கு தீர்வு காண வேண்டிய தார்மீக கடமையை புரிந்து, உங்களின் மூதாதையர்களின் நற்பெயரை காப்பாற்றி அவர்களின் ஆத்மா சாந்தியடைய வைப்பீர்கள் என நம்புகின்றேன்.

தேசபிதாவினுடைய கௌரவத்தை பாதுகாக்க வேண்டிய கடமை இன்று ராஜபக்ஷர்களுடைய கையில்தான் உள்ளது என” கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரச வேலைவாய்ப்புக்களில் வறுமை நிலையிலுள்ளோருக்கே முன்னுரிமை , சிபாரிசுகளுக்கு இடமேயில்லை. – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் கொள்கைப் பிரகடன உரையின் சுருக்கம்.

9ஆவது நாடாளுமன்றத்தின் வைபவ ரீதியான நிகழ்வு நாடாளுமன்றத்தில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்றது.அரசியல் யாப்பின் மூலம் தமக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையினை இதன்போது நிகழ்த்தினார்.

இதன்போது கருத்து வெளியிட்ட அவர், “ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் சபாநாயகராக தெரிவு செய்யப்பட்ட மஹிந்த யாப்பா அபேவர்தன உள்ளிட்ட இன்று புதிதாக தெரிவு செய்யப்பட்டவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். மேலும் வரலாற்று வெற்றிக்கு வித்திட்ட மக்களுக்கு நன்றி.

புராதன பௌத்த உரிமையைக் காப்பாற்றுவதற்கு முழு நடவடிக்கை எடுக்கப்படும். அதேநேரம் மத உரிமையை காப்பாற்றுவதற்கு பௌத்த மதகுருமார்களின் அறிவுரைகளை கேட்டு வருகிறேன். அதற்கான அமைச்சொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது.

பாரம்பரிய உரிமை, கிராமிய கலை தொடர்பாக விசேட அவதானம் செலுத்தப்படுகிறது. மேலும் போதைப்பொருள், பாதாள உலகக் குழுவிடமிருந்து மக்களைக் காப்பாற்றும் பணியையும் தொடங்கியுள்ளேன்.

உள்நாட்டு உற்பத்தியை வலுவடையச் செய்துள்ளேன். அதனை மெய்பிக்கும் வகையில் தேசிய விவசாயிகளுக்கு இலவச உரம், பயன்படுத்தப்படாத நிலங்களை மீண்டும் பயன்படுத்துவதற்கான வழிவகைகள், கடன் உதவித் திட்டங்கள், குறைந்த வட்டிவீதங்கள் என்பவற்றை அமுல்படுத்தியுள்ளளேன்.

சமீப காலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் பயணம் செய்தபோது மக்களின் அடிப்படைப் பிரச்சினையாக வீடு இல்லாமை காணி பத்திரம் இல்லாமை போன்ற பிரச்சினைகளையே பெரும்பாலானோர் முன்வைத்தனர்.

சுதந்திரம் கிடைத்து 72 ஆண்டுகள் நிறைவடைந்தபோதிலும் நிறைவடையாத இந்த காணிப்பிரச்சினைகளுக்கு முடிவு எட்டப்பட்டு காணிப்பத்திரம் வழங்கப்படும்.

மேலும் நாட்டில் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளமை யானைகளின் தொல்லைகளால் மக்கள் படும் சிரமங்களே. இந்த நிலையில், இதற்கு குழுவொன்று அமைக்கப்பட்டு இந்த பிரச்சினை தீர்க்கப்படும். நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் காணப்படும் நீர் விநியோகப் பிரச்சினை தீர்க்கப்படும்.

பெற்றோரின் எதிர்பார்ப்பாக தங்களது பிள்ளைகளுக்கு சிறந்த கல்வி, தரம் வாய்ந்த பாடசாலை என்பனவே உள்ளன. ஆனால் நாட்டில் உள்ள பெரும்பாலான பாடசாலைகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை, நூலகம் மற்றும் மைதானம் இல்லாமை போன்ற பல குறைபாடுகள் உள்ளன.

இந்த தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டு மாணவர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை ஏற்படுத்திக்கொடுக்க அரசாங்கம் முயற்சி செய்யும்.

வேலை வழங்குவதைவிட வேலைகளை உருவாக்குவதே எமது நோக்கம். முதற்கட்டமாக வறுமையில் வாடும் ஒரு இலட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு பெற்றுத்தரப்படவுள்ளது.

மேலும் அரசாங்க வேலையைப் பெறுபவர்களில் வறுமையில் உள்ளவர்களுக்கே முதலிடம் வழங்கப்படும். அனைத்து பிரதேசங்களில் உள்ளவர்களுக்கும் சமமான அளவில் வேலை வாய்ப்பு வழங்கப்படும். வேலைகளைப் பெற்றுக்கொள்வதற்கு எவ்வித பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

தேயிலை, றப்பர், தேங்காய் தொழில் செய்பவர்களுக்கு அரசாங்கம் கட்டாயம் உதவி செய்யும். குறிப்பாக தேயிலை தோட்டத் தொழிலாளர்களுக்கு உதவி செய்வதற்கு அரசாங்கம் மிகவும் கவனம் செலுத்தும்.

உலகப் புகழ் பெற்ற சிலோன் டீயின் மதிப்பு தற்போது மங்கியுள்ளது. அதனை புதுப்பொலிவுடன் மீண்டும் உருவாக்கும் முயற்சியை அரசாங்கம் மேற்கொள்ளும்.

இயற்கை எழில் பொங்கும் இலங்கை, பலவிதமான இயற்கை வளங்களைக் கொண்டுள்ள போதிலும் உலக நாடுகளைப்போன்று இலங்கை தமது வளங்களைப் பயன்படுத்தவில்லை.

நாட்டிற்கே உரித்தான உற்பத்திகளான பத்திக், பித்தளை, ஆபரணங்கள் போன்றவற்றை விருத்தி செய்ய வேண்டும் .

கடலால் சூழப்பட்டுள்ள இலங்கைக்கு மீன் இறக்குமதி தேவையில்லை என்பதால், மீன் இறக்குமதி தடை செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இலங்கை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடிக்கவும் முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் உள்ள அரச அலுவலகங்கள் பலவற்றிற்கு நான் சென்றிருந்தபோது பெரும்பாலும் மக்கள் முன்வைத்த குற்றச்சாட்டு, அரச அலுவலகங்களில் உரிய நேரத்திற்கு சேவைகள் வழங்கப்படவில்லை என்பதே.

எனவே அரச அலுவலகங்களில் நேரத்தை வீண்விரயமாக்காமல் செயற்பட பல புதிய வழிமுறைகளை உருவாக்க வேண்டும்.

மக்கள் எதிர்பார்ப்பது போன்று 19ஆவது திருத்த சட்டம் இல்லாமல் செய்யப்டும். அதற்கு பதிலாக புதிய திருத்த சட்டமொன்று கொண்டுவரப்படும். ஒரே நாடு ஒரே நீதியின் கீழ் அனைத்தும் கொண்டுவரப்படும்.

மதம், இனம், கட்சி அனைத்தையும் கடந்த, ஒரு வளமிக்க சௌபாக்கியமான நாட்டை கட்டியெழுப்ப அனைவரையும் நட்புடன் அழைக்கின்றேன்” என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

விளையாட்டு சபைக்கு ஆலோசகராக செயற்பட சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தனவுக்கு நாமல் அழைப்பு!

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோரை தேசிய விளையாட்டு சபைக்கு ஆலோசகராக செயற்படுமாறு விளையாட்டுதுறை  அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டில் விளையாட்டுத்துறையை சிறந்த முறையில் செயற்படுத்துவது தொடர்பாக, விளையாட்டு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதற்காக  குறித்த இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தேசிய விளையாட்டுச் சபைக்கு புதிய உறுப்பினர்கள் விரைவில் பெயரிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விளையாட்டு அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர்  இவ்விடயம் தொடர்பாக குறிப்பிட்டுள்ளதாவது, “முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் இருவர், 1973 ஆம் ஆண்டின் விளையாட்டுச் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகளுக்கு நியமிக்கப்படுவார்கள்.

அவர்கள் விளையாட்டுகளை மேம்படுத்துவது தொடர்பான விடயங்கள் குறித்து அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதே அவர்களின் முக்கிய பணியாக இருக்கும்” எனவும்  குறிப்பிட்டுள்ளார்.

சங்கக்கார மற்றும் ஜெயவர்தன தவிர இலங்கையில் விளையாட்டுகளை மேம்படுத்துவதில் தொடர்ச்சியாக  பங்காற்றிவரும் தொழில் வல்லுநர்களும் இந்த பட்டியலில் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதியபாராளுமன்றின் பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதி தவிசாளர், எதிர்க் கட்சித் தலைவர் பதவிகளுக்கானவர்கள் தெரிவு!

9 ஆவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரது பெயரை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீர முன்மொழிந்ததுடன், பாராளுமன்ற உறுப்பினர் நிமல் லங்சா வழிமொழிந்தார்.

இதனால் பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை, அங்ஜன் இராமநாதன் குழுக்களின் பிரதி தவிசாளராகவும் வாக்கெடுப்பு இன்றி தெரிவு செய்யப்பட்டார்.  முன்னதாக சபாநாயகராக யாப்பா அபேவர்த்தன தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் எதிர்க் கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச, சபாநாயகரால் அறிவிக்கப்பட்டார்.

 

மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சந்தர்ப்பத்தை பெற்றுத் தருமாறு புதிய சபாநாயகரிடம் பிள்ளையான் கோரிக்கை !

மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சந்தர்ப்பத்தை பெற்றுத் தருமாறு புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரான பிள்ளையான் என அறியப்படும் சிவநேசத்துறை சந்திரகாந்தன் கோரிக்கை விடுத்தார்.

9ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் பங்கேற்பதற்கு மட்டக்களப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து  பிள்ளையான் நேற்றைய தினம் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து கொழும்புக்கு அழைத்துவரப்பட்டார்.

இதனையடுத்து, தற்போது இடம்பெற்று வரும் 9ஆவது நாடாளுமன்றத்தின் கன்னி அமர்வில் பங்கேற்ற பிள்ளையான் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பாக புதிய சபாநாயகராக பொறுப்பேற்ற மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தார்.

மேலும் தான் 5 வருடங்கள் சிறை வாசம் அனுபவிப்பதாக தெரிவித்த அவர், மக்களுக்கு சேவையாற்றக்கூடிய சந்தர்ப்பத்தை பெற்றுத் தருமாறு புதிய சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கோரிக்கை விடுத்தார்.

தான் சிறையில் உள்ளமையினால் நாடாளுமன்றத்திற்கு வரவேண்டிய ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். இதனால் மக்களுக்கு சேவை செய்ய முடியாதுள்ளதாகவம் குறிப்பிட்டார்.

26 வருடங்களாக ரணில் விக்ரமசிங்கவால் எதனையும் செய்ய முடியவில்லை ! – ஐ.தே.க பிக்குகள் முன்னணி அதிருப்தி.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு, ரணில் விக்ரமசிங்கவை தாம் கேட்டுக் கொண்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிக்குகள் முன்னணி தெரிவித்துள்ளது.

எனினும் தமது கோரிக்கையை ரணில் விக்ரமசிங்க நிராகரித்தாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிக்குகள் முன்னணியின் பிரதம செயலாளர் கீனியாவல பாலித்த தேரர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (19.08.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ´கடந்த 26 வருடங்களாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ரணில் விக்ரமசிங்கவால் எதனையும் செய்ய முடியவில்லை. அவர் எடுத்த பிழையான தீர்மானங்களே இன்றைய நிலைக்கு காரணம். நாம் அவருடன் தனியாக பேசினோம். ஏம்மால் கையளிக்கப்பட்ட கடிதத்தை அவர் போபிட்டிய தேரரின் முகத்தில் வீசி அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என கூறினார்.

ஆகவே, அவ்வாறான தலைவருடன் எப்படி முன்நோக்கி பயணிப்பது? ரணிலால் எதிர்காலத்தில் 10 தேரர்களின் ஆதரவை கூட பெற முடியாது. மஹிந்தவுடன் 14,000 தேரர்கள் உள்ளனர். காரணம் அவர் தேர்களை கௌரவப்படுத்துகின்றார்´ என்றார்.

மஹிந்த ராஜபக்ச எடுக்கின்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு எமது ஆதரவு தொடர்ந்து இருக்கும் – இரா.சம்பந்தன்

பிரதமர் மஹிந்த ராஜபக்ச எடுக்கின்ற ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு எமது ஆதரவு தொடர்ந்து இருக்கும் என்பதைக் கூறிக்கொள்ள விரும்புகின்றோம். ஒருமித்து இந்தக் கருமத்தை நிறைவேற்றக்கூடிய வகையில் அனைவரும் செயற்பட வேண்டும் என்று நாம் விரும்புகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

எனவே, பிரதமர் மஹிந்த ராஜபக்ச வழங்கியுள்ள வாக்குறுதியையும், அவர் மீது நாம் வைத்துள்ள நம்பிக்கையையும் அவர் வீணடிக்கக்கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான அரசே தமிழ் மக்களுக்குத் தீர்வு வழங்கியது என்ற வரலாற்றுப் பதிவை இந்த ஆட்சியில் நாம் ஏற்படுத்துவோம் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்தமை தொடர்பில் சம்பந்தனிடம் கேட்டபோதே மேற்கண்டவாறு பதிலளித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் எந்தவொரு கட்சிக்கும் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் நாடாளுமன்றத்தில் நீடிக்கவில்லை. கடந்த ஆட்சியில் அந்தப் பெரும்பான்மைப் பலம் இருந்த போதிலும் கூட இடையில் ஏற்பட்ட குழப்பத்தால் அந்தப் பெரும்பான்மைப் பலத்தைப் பயன்படுத்தக்கூடிய சூழல் இருக்கவில்லை.

ஆனால், தற்போது பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் தலைமையில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்துடன் அவருடைய கட்சி இருக்கின்றது.

அவர் நேர்மையாகச் செயற்பட்டு நாட்டினுடைய முன்னேற்றத்துக்கும் நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களது முன்னேற்றத்துக்கும் தடையாக இருக்கின்ற தேசிய இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண்பார் என்று நாம் நம்புகின்றோம் என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, ‘மஹிந்த அரசுடன் சர்வதேச மத்தியஸ்தத்துடனான பேச்சுக்கள் முன்னெடுக்கப்படுமா?’ என்று சம்பந்தனிடம் கேட்டபோது,​ இப்போது அதற்குப் பதிலளிக்க விரும்பவில்லை சம்பந்தன் என தெரிவித்துள்ளார்.