உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 1,50,000 வேலைவாய்ப்புக்கள் பற்றி வெளியான தகவல்..!

பொதுத் தேர்தல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்ந , ஒரு இலட்சத்து 50 ஆயிரம் வேலைவாய்ப்பு திட்டத்தை உடனடியாக செயற்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை தெரிவித்துள்ளது.

அதன்படி, வேலையற்ற பட்டதாரிகளின் பெயர் பட்டியல் எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை (16.08.2020) ஜனாதிபதி செயலகத்தின் இணையத்தளத்தில் வௌியிடப்படவுள்ளது.

தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நியமக்கடிதம் அனுப்பும் செயற்பாடு எதிர்வரும் திங்கட்கிழமை (17) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

நியமனம் பெற்றவர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி தனக்குரிய பிரதேச செயலகத்திற்கு வர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தகுதிபெற்ற பட்டதாரிகளின் பெயர், பட்டியலில் உள்ளடங்காவிடின் ஜனாதிபதி செயலகத்திற்கு அழைத்து வினவ முடியும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கான ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் பணிகள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி முதல் அதற்காக ஸ்தாபிக்கப்பட்டுள்ள செயலணியினால் செயற்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது.

வட்டுக்கோட்டைப்பகுதியில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை!

வீட்டில் தனியாக இருந்த பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளதாக வட்டுக்கோட்டைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொல்புரம் பத்தானைக்கேணியடிப் பகுதியில் நேற்று மதியம் இடம்பெற்றுள்ளது.

அதே இடத்தைச் சேர்ந்த குணரத்தினம் விமலவர்ணா (19வயது) என்ற மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சுழிபுரம் விக்டோறியா கல்லூரியில் கலைப்பிரிவில் இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள குறித்த மாணவி க.பொ.த சாதாரண தரத்தில் ஒரு சிலபாடத்திற்கு பரீட்சைக்குத் தோற்றுவதற்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்துள்ளது.

உயர்தரப் பரீட்சைக்கு பரீட்சைக்குத் தன்னைத் தயார்படுத்கொண்டிருந்த காரணத்தினால் அவர் கடந்த சில நாட்களாக அவர் பாடசாலைக்குச் செல்லவில்லை, பரீட்சை விண்ணப்பதாளில் கையொப்பம் இடுவதற்கு வருமாறு பாடசாலையின் பரீட்சைக்குப் பொறுப்பான ஆசிரியர் மாணவியின் தந்தைக்கு தொலைபேசியூடாக தெரிவித்திருந்தார்.

மதியம் வீட்டிற்கு வந்த தந்தை கதவினைத் திறக்கும் படி மகளை அழைத்துள்ளார். நீண்ட நேரமாக கதவினை திறக்கவில்லை, அதனால் அவர் மதில் மேல் ஏறி வீட்டிற்குள் சென்று பார்த்த போது மகள் தூக்கில் தொங்கி இறந்த நிலையில் காணப்பட்டுள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக வட்டுக்கோட்டைப் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பட்டு இன்று சடலம் உறவினர்களிடம் கையளிக்கட்டது.

ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு எதிர்வரும் 20ம் திகதி!

20.08.2020 அன்று நடைபெறவிருக்கும் 9வது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்கவிருக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.

இதற்கமைய பிற்பகல் 3 மணிக்கு ஜனாதிபதி வைபவரீதியாக முதலாவது அமர்வை ஆரம்பித்து வைக்கவிருப்பதுடன், அரசியலமைப்பின் 33 (2) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்துக்கு அமைய அவர் புதிய அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்தவுள்ளார்.

அன்றையதினம் காலை 9.30 மணிக்கு புதிய பாராளுமன்ற அமர்வு இடம்பெறவிருப்பதுடன் முதலில் சபாநாயகர் தெரிவு, அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிச்சத்தியம் அல்லது உறுதியுரை என்பன இடம்பெறும். இதன் பின்னர் பிரதி சபாநாயகர் மற்றும் குழுக்களின் பிரதித் தவிசாளர் ஆகியோர் தெரிவுசெய்யப்படுவர்.

பாராளுமன்ற அமர்வை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைக்க ஜனாதிபதி வருகைதரும் போது சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தஸநாயக்க ஆகியோர் பாராளுமன்றத்தின் பிரதான நுழைவாயிலில் அவரை வரவேற்பார்கள். அதன்போது ஜனாதிபதியின் கொடி ஏற்றி வைக்கப்படும்.

படைக்கல சேவிதர், பிரதிப் படைக்கல சேவிதர் மற்றும் உதவி படைக்கல சேவிதர், சபாநாயகர் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் உள்ளிட்ட குழுவினரால் ஜனாதிபதி சபைக்குள் அழைத்துச் செல்லப்படுவதுடன், அக்கிராசனத்தில் அமரும் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடன உரையை நிகழ்த்துவார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து சட்டத்தரணி மணிவண்ணன் நீக்கம்…?

அண்மைய காலத்து யாழ்ப்பாண தமிழ் அரசியலில் அதிகம் பேசப்பட்ட அதே நேரம் தேர்தலில் வெற்றிபெறுவார் என எதிர்பார்கக்ப்பட்டவர்  சட்டத்தரணி விஸ்வலிங்கம் மணிவண்ணன் ஆவார். தேர்தல் பிரச்சாரங்கள் தொடர்பாக பல குழப்பங்கள்   தமிழ் கட்சிகளிடையே இந்த முறை அதிகம் காணப்பட்டது. இந்நிலையில் இது போன்றதான ஒரு பிரச்சினையின் பின்னணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் மற்றும் ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்துள்ளது.

நேற்று வியாழக்கிழமை இரவு கூடிய மத்திய குழு, சட்டத்தரணி வி.மணிவண்ணனை முன்னணியின் பதவி நிலைகளிலிருந்து நீக்கும் இந்த முடிவை எடுத்தது.

இந்தக் கூட்டத்துக்கு மத்திய குழு உறுப்பினரான சட்டத்தரணி வி.மணிவண்ணன் அழைக்கப்பட்டிருக்கவில்லை.

அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் சார்பில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி இம்முறையும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டது. மூன்றாவது முறையாகவும் சட்டத்தரணி வி.மணிவண்ணன் போட்டியிட்டார். எனினும் சட்டத்தரணி வி. மணிவண்ணனை விலக்கிவைத்தே அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சி நடவடிக்கைகளை முன்வைத்திருந்தது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அமைப்பாளர்கள், மணிவண்ணனுக்கு பரப்புரைகளை முன்னெடுக்கக் கூடாது என்ற பணிப்பும் தலைமையினால் விடுக்கப்பட்டிருந்தது.. அத்தோடு சட்டத்தரணி வி.மணிவண்ணன் சார்பில் இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பரப்புரைக் கூட்டங்களுக்கும் முன்னணியின் உயர்மட்டம் குறுக்கீடு செய்தது.

சட்டத்தரணி வி.மணிவண்ணனின் ஆதரவுத் தளம் பொதுத் தேர்தலில் அதிகரித்தது. அதனை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பொதுத் தேர்தலுக்கு முன்னர் ஊடகவியலாளர்களிடம் ஏற்றுக்கொண்டிருந்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் நாடாளுமன்றுக்கு தெரிவானதில் மணிவண்ணனின் பங்கும் கணிசமாக இருந்தது..

பொதுத் தேர்தலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் விருப்பு வாக்குகளின் அடிப்படையில் சட்டத்தரணி வி.மணிவண்ணன் மூன்றாம் நிலையைப் பெற்றார். அதனால் அவர் அண்மைய நாள்களாக ஒதுக்கப்பட்டார்.

மேலும் மணிவண்ணனை முன்னணியின் தலைமையுடன் சமரசம் செய்யும் பணியும் கல்வியாளர்களால் முன்னெடுக்கப்பட்டது. மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர் நிலை வழங்குவதாகவும் உறுதியளிக்கப்பட்டது.

இந்த நிலையில் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தொடர்பில் முடிவெடுக்க கட்சியின் மத்திய குழுவை செயலாளர் நேற்றிரவு கூட்டியிருந்தார். இந்தக் கூட்டத்துக்கு முன்னதாக நேற்று மாலை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வேட்பாளர்களில் ஒருவரான சட்டத்தரணி க.சுகாஷ், மணிவண்ணன் தரப்பு மீது குற்றச்சாட்டு ஒன்றை தனது முகநூல் பக்கம் ஊடாக முன்வைத்திருந்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் மத்திய குழுவில் இல்லாத சட்டத்தரணி க.சுகாஷ், மத்திய குழுவில் அங்கம் வகிக்கும் அமைப்பாளர்களுக்காக இந்த தகவலை பகிர்ந்திருந்தார்.

கட்சியின் தலைமையை துதி பாடும் உறுப்பினர்கள் இடையே சட்டத்தரணி வி.மணிவண்ணன் மட்டுமே தன்னால் எவற்றை செய்ய முடியும் என பரப்புரையில் வெளிப்படுத்தினார் என்று இளைஞர்களால் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, சட்டத்தரணி வி.மணிவண்ணனின் எதிர்கால நிலைப்பாடு தொடர்பில் அவரிடம் கேட்ட போது,;கட்சியின் தேசிய அமைப்பாளர், ஊடகப் பேச்சாளர் பதவிகளிலிருந்து நீக்கப்பட்டதாக கட்சியின் தலைவரால் அறிவிக்கப்படவில்லை. அதன் பின்னரே எமது நிலைப்பாட்டை அறிவிக்க முடியும் என்று பதிலளித்தார்

அனைத்து இனங்களையும் அணைத்துச் செல்லும் ஒரே தலைவர் சஜித் மட்டுமே – மனோகணேசன்

தேசிய பட்டியலில் ஒரு ஆசனத்தை பெறுவது மட்டும் தான் எங்கள் இறுதி இலக்கு அல்ல. அதை பெறாதது எங்கள் பலவீனமும் அல்ல. அது எங்கள் இயலாமையும் அல்ல. இது தொடர்பாக நாம் எடுத்த முடிவு வரலாற்று சிறப்பு மிக்க முடிவாகும்.

இந்நாட்டில் இன்று ஒப்பீட்டளவில், அனைத்து இனங்களையும் அணைத்து செல்லும் ஒரே சிங்கள தலைவராக இருக்கும் சஜித் பிரமதாசவை, சிங்கள மக்கள் மத்தியில், இன்னொரு ரணில் விக்கிரமசிங்கவாக, பலவீனமானவராக காட்ட முயலும் அரசின் சதி முயற்சிகளுக்கு நாம் ஒருபோதும் துணை போக முடியாது. சிறுபான்மை தமிழ், முஸ்லிம் கட்சி தலைவர்கள், சஜித் பிரேமதாசவை சுவரில் சாய்த்து, பயமுறுத்தி காரியம் செய்து கொள்கிறார்கள் என்ற அபிப்பிராயத்தை இந்நாட்டில் சிங்கள மக்கள் மத்தியில் ஏற்படுத்த அரசாங்க ஊடகங்கள் மற்றும் அரசு சார்பு தனியார் ஊடகங்கள் பெரும் முயற்சி எடுத்தன. இப்படி சொல்லியே ரணில் விக்கிரமசிங்கவை இந்த அரசாங்க கட்சி அணி, அரசு சார்பு பெளத்த பிக்குகள் அணி என்பவை அழித்தன. ஆகவே சஜித் பிரேமதாசவையும், இன்னொரு ரணில் விக்கிரமசிங்கவாகவும், பலவீனமான தலைவராகவும் சித்தரித்து, ஆரம்பத்திலேயே அழித்துவிட இந்த அரசாங்கம் மிகப்பெரும் முயற்சி எடுத்தது. இவற்றை நாம் உணர்ந்தோம்.

இந்த தொலைநோக்கு பார்வையினாலேயே, தமிழ் முற்போக்கு கூட்டணி, தேசிய பட்டியல் தொடர்பில் நிதானமாக நெகிழ்வு தன்மையுடன் முடிவெடுத்தது. நாங்களே உருவாக்கிய ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணியை நாமே சிதைக்க கூடாது என நாம் முடிவு செய்தோம். இந்நாட்டில் இன்று ஒப்பீட்டளவில், அனைத்து இனங்களையும் அணைத்து செல்லும் ஒரேயொரு சிங்கள தலைவராக இருக்கும் சஜித் பிரமதாசவையும், ரணில் விக்கிரமசிங்கவை போன்று, சிங்கள மக்கள் மத்தியில் பலவீனமானவராக காட்டும் அரசின் சதி முயற்சிகளுக்கு நாம் துணை போக முடியாது என தீர்மானித்தோம்.

ஆகவே, இது தொடர்பில் முடிவு எடுக்கும் அதிகாரத்தை அவருக்கு நாம் வழங்கினோம். இந்த நிதானமான பொறுப்பு வாய்ந்த தொலைநோக்கு கொண்ட எமது நிலைபாட்டை எமது வாக்காளர்கள், சிவில், சமூக பிரதிநிதிகள், வர்த்தக சமூக பிரதிநிதிகள், மத தலைவர்கள், ஆசிரியர்கள், ஊடகத்துறை தலைமை பிரதானிகள், தமிழ் சமூக ஊடக முன்னோடிகள் உள்ளிட்ட அனைத்து தமிழ் பேசும் மக்களும் இன்று புரிந்துக்கொண்டுள்ளார்கள் என நான் நம்புகிறேன் தெரிவு செய்யப்பட்டுள்ள கொழும்பு மாவட்ட எம்பி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இந்த முன்னணி விவகாரம் தொடர்பில் மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது, தமது முன்னாள் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி தலைமையின் பிடிவாதம் காரணமாக, புதிய ஒரு கட்சியை அமைத்த, சில நாட்களுக்கு உள்ளேயே, தேர்தலை சந்திக்க வேண்டி ஏற்பட்டதால், மாவட்டங்களில் போட்டியிட்டு வெற்றிபெற கூடிய பலரை கொழும்பில் கட்சி தலைமையகத்தில் தங்கியிருந்து தேர்தல் பணி செய்யுமாறு தாம் பணித்துள்ளதாக, சஜித் பிரேமதாச தமிழ், முஸ்லிம் பங்காளி கட்சிகளிடமும், ஜாதிக ஹெல உறுமயவிடமும் விளக்கி கூறினார். நாம் எதிர்பார்த்த பத்து தேசிய பட்டியல் கிடைத்து இருக்குமாயின் இந்த தர்ம சங்கடம் ஏற்பட்டு இருக்காது எனவும் கூறியிருந்தார்.

நமது கட்சிக்கு உரிய தேசிய பட்டியலை தேடி பெறுவது என்பதில் நாம் மிகவும் அக்கறையுடன் இருந்தோம். ஆகவே, நாம் அமைதியாக இருக்கவில்லை. அது தொடர்பில் எமது குரலை நாம் உரக்க எழுப்பினோம். எனினும் முடிவு எடுக்கும் போது நாம் நிதானமாக முடிவுகளை எடுத்தோம். எமது தேசிய கூட்டணியை உடைத்துக்கொண்டு நாம் சென்றால் அரசாங்கம் மகிழ்வடையும். அதுதான் அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு. ஐக்கிய மக்கள் சக்தி என்ற எமது தேசிய கூட்டணி உடையுமானால், அது இரண்டு நாட்களுக்கு தலைப்பு செய்திகளாக இருக்கும். பின், இந்நாட்டில் வாழும் தமிழ் பேசும் மக்களுக்கு எஞ்சி இருக்கும் ஒரே தேசிய நம்பிக்கையும் இழந்து, நாம் மேலும் பலவீனமடைவோம்.

ஏற்கனவே வடக்கில், கிழக்கில் இந்த அரசாங்கம் தமிழ் கட்சிகளை மிகவும் பலவீனடைய செய்துள்ளது. அங்கே ஊடுருவி உள்ளது. இந்நிலையில் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களை இணைத்து நாம் உருவாக்கியுள்ள ஐக்கிய மக்கள் சக்தி என்ற இந்த தேசிய கூட்டணியையும் நாம் சிதைக்கவும், பலவீனமடையமும் விட முடியாது. ஆகவே தான் எமது தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு உள்ளேயும், தமிழ் சிவில் சமூக பிரதிநிதிகளிடமும் கலந்து பேசி இந்த முடிவுகளை எடுத்தோம்.

தேசிய பட்டியல் என்பது வேறு. நமது மக்கள் வாழும் மாவட்டங்களில் தமிழ் எம்.பி.க்கள் தெரிவு செய்யப்படுவது என்பது வேறு. இரண்டையும் போட்டு குழப்பிக்கொள்ள கூடாது. இரத்தினபுரி, கேகாலை மாவட்டங்களில் வாழ்கின்ற தமிழ் வாக்காளர்கள் இன்னமும் சற்று அதிகமாக சிந்தித்து வாக்களித்திருந்தால், கொழும்பு மாவட்டத்தில் இன்னமும் அதிகமாக வாக்களித்து இருந்தால், இந்த மாவட்டங்களில் தமிழ் எம்பீக்கள் மேலதிகமாக உருவாக வாய்ப்பு பிரகாசமாக இருந்தது. ஆனால், மக்கள் வாக்களிக்காமல் தவறு செய்து விட்டார்கள்.

இரத்தினபுரியில் மொத்த தமிழ் வாக்காளர் தொகை சுமார் 75 ஆயிரம். ஆனால், எமது வேட்பாளர் சந்திரகுமாருக்கு சுமார் 36 ஆயிரம் பேர் தான் வாக்களித்துள்ளார்கள். இன்னமும் சுமார் 9 ஆயிரம் பேர் அவருக்கு வாக்களித்திருந்தால், சந்திரகுமார் அங்கே தமிழ் எம்.பி.யாக உருவாகி இருப்பார். கேகாலை மாவட்டத்தில் மொத்த தமிழ் வாக்கு 40 ஆயிரம். எமது வேட்பாளர் பரணீதரன், சுமார் 23 ஆயிரம் வாக்குகளை பெற்றார். அங்கே இன்னமும் 5 ஆயிரம் வாக்குகளை அவர் பெற்றிருந்தால் அவர் அங்கே தமிழ் எம்.பி.யாக வெற்றி பெற்று இருப்பார்.

இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா போன்ற மாவட்டங்களில் எமது தொலைபேசி சின்னத்துக்கு எதிரான அணிகளில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்கள் என்ற போலி நபர்களில் ஒருவர்கூட அவ்வந்த மாவட்டங்களில், இருநூறு (200) விருப்பு வாக்குகள் கூட பெறவில்லை. பணம் வாக்கிக்கொண்டு எம்மை அழிக்க வேண்டும் என கெட்ட எண்ணத்தோடு மட்டும் செயற்பட்ட இவர்கள் படுதோல்வி அடைந்துள்ளார்கள். ஆனாலும், தேர்தல் காலங்களில் இவர்கள் செய்த பொய், புரட்டு போலி பிரசாரங்கள் மக்களை அதைரியப்படுத்தின. ஆகவே இவர்கள் தான், இரத்தினபுரி, கேகாலை, கம்பஹா மாவட்டங்களில் தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெறாமைக்கு மூலக்காரணங்கள் ஆகும்.

அதேவேளையில், தேர்தல் காலங்களில் எமக்காக ஒரு துரும்பும்கூட எடுத்து போடாத, எமக்கு ஆதரவாக ஒரு ஊடகங்களில் எழுதாத, சமூக ஊடகங்களில் பதிவு போடாத, தேர்தல் நிதி இல்லாமல் நாம் பட்ட எமது நடைமுறை கஷ்டங்களை உணராத, எமக்கு எந்தவித உதவியும் செய்யாத, அதையும் மீறி சென்று எமக்கு உபத்திரவம் செய்வதற்காக, எமக்கு எதிரான அணி அரசியல்வாதிகளிடம் பணம் வாங்கிக்கொண்டு, எமக்கு எதிரான அணியில் சேர்ந்து, போலி வேட்பாளார்களாக போட்டியிட்டு, எமக்கு எதிராக பொய் பிரசாரங்களை செய்து, கூசாமல் எமது வாக்கை சிதறடித்த, சோரம்போன அரசியல் வியாபாரிகள், இன்று வெட்கமில்லாமல் “தேசிய பட்டியலை சண்டையிட்டு எடுங்கள்” என்றும், அதை எடுத்து, “இவருக்கு கொடுங்கள்” என்றும், “அவருக்கு கொடுக்க வேண்டாம்” என்றும் எமக்கு அறிவுரை கூறுகிறார்கள். கூக்குரலிடுகிறார்கள். நிறுவனரீதியான பாரம்பரியமற்ற, சில சுயாதீன ஊடகங்களிலும் இத்தகைய பல போலிகள் ஒளிந்து தேர்தல் கால வியாபாரம் செய்து பணம் தேடியுள்ளார்கள். இத்தகைய சோரம்போன போலி நபர்களுக்கு நாம் எமது வெற்றிகளின் மூலம் மறக்க முடியாத பாடங்களை கற்று கொடுத்துள்ளோம். இனியும் இத்தகைய நபர்களிடம் ஏமாற வேண்டாம் என மக்களை கேட்டுக்கொள்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார்

புலம்பெயர் முதலீடுகளை கடந்தகாலத் தமிழர் தலைமைகள் முறையாக கையாளவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

நாட்டில் நிலையான அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில் புலம்பெயர் மக்கள் தங்களுடைய தாயக பிரதேசங்களில் முதலீடுகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் என்றும் அதற்கான உத்தரவாத்தினை தான் வழங்குவதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு விடுத்துள்ளார்.

மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் இன்று (13 ) கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே கடற்றொழில் அமைச்சர் டகளஸ் தேவானந்தா இதனைத் தெரிவித்தார்.

இதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், பொருத்தமான சூழலை உருவாக்குவதல் மற்றும் உருவாகின்ற சூழலை பயன்படுத்துதல் என்ற தன்னுடைய நீண்ட கால கோட்பாட்டின் அடிப்படையில் தற்போது உருவாகியுள்ள அரசியல் சூழலை தமிழ் மக்களும் தமிழ் தரப்புக்களும் பயன்படுத்த வேண்டும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், புலம்பெயர் தேசங்களில் வாழ்ந்து வருகின்ற தமிழ் மக்கள் கடந்த காலங்களில் பல்வேறு முதலீடுகளை மேற்கொள்வதற்கு ஆர்வம் செலுத்திய போதிலும் தமிழ் தலைமைகள் என்று சொல்லிக் கொண்டோர் அவற்றை சரியாக கையாளவில்லை எனவும் இடைத் தரகர்கள் சிலர் தங்களுடைய குறுகிய நலன்களுக்காக புலம்பெயர் முதலீட்டாளர்களை தவறாக பயன்படுத்த முயற்சித்திருந்தனர் எனவும் அமைச்சரினால் குற்றஞ்சாட்டப்பட்டது.

மேலும், தற்போது நிலையான அரசாங்கம் உருவாகியுள்ள நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ ஆகியோர் தவறான செயற்பாடுகள் எவற்றையும் அனுமதிப்பது இல்லை என்பதில் உறுதியாக இருக்கின்ற நிலையில், அதற்கான உத்தரவாதத்தினை தன்னால் வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.

அத்துடன், வடக்கு கிழக்கு பிரதேசங்களில் புலம்பெயர் முதலீடுகள் அதிகரிக்கும் பட்சத்தில் தமிழ் மக்கள் எதிர்கொள்ளுகின்ற அபிவிருத்தி மற்றும் அன்றாடப் பிரச்சினைகளை விரைவாகத் தீர்த்துக் கொள்ள முடியும் எனவும், புலம்பெயர் முதலீட்டாளர்கள் தமக்கிருக்கும் தார்மீக கடமையை உணர்ந்து முதலீடுகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்தள்ளமை குறிப்பிடத்தக்கது.

செஞ்சோலை நினைவுகூரல் நிகழ்வுகளுக்கு தடை !

கடந்த 2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி முல்லைத்தீவு – வள்ளிபுனம் பகுதியில் அமைந்திருந்த செஞ்சோலை சிறுவர் இல்லத்தின் மீது ஸ்ரீலங்கா விமானப் படையினர் நடத்திய குண்டுத் தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் படுகொலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வருடந்தோறும் வள்ளிபுனம் இடைக்கட்டுச் சந்தியில் நினைவுகூரல் நிகழ்வுகள் நடத்தப்படும். அதற்கமைய இம்முறையும் நாளை – காலை நினைவுகூரல் நிகழ்வுகள் நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தது. செஞ்சோலைப் படுகொலையின் 14ஆம் ஆண்டு நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த முடியாதென புதுக்குடியிருப்பு பொலிஸார் தடை விதித்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிலேயே புதுக்குடியிருப்பு பொலிஸார் நினைவுகூரல் நிகழ்வுகளை நடத்த முடியாதென தெரிவித்துள்ளனர்.

இந்த உத்தரவை மீறி நிகழ்வை நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என பொலிஸார் எச்சரிக்கை விடுத்ததாக நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

 

புதிய அமைச்சரவை பதவியேற்பில் புறக்கணிக்கப்பட்ட சிறுபான்மையினர் !

கண்டியில் நேற்றைய தினம் அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்வு இடம்பெற்றது. இதன் போது பறக்கவிடப்பட்டிருந்த தேசியக்கொடியில் சிறுபான்மையினரை பிரதிபதிபலிக்கும் நிறங்கள் அகற்றப்பட்டிருந்தது.

அத்துடன் நிகழ்வில் தேசிய கீதம் சிங்களத்தில் மாத்திரம் இசைக்கப்பட்டது. அழைக்கப்பட்டிருந்த மதத்தலைவர்களுள் தமிழ், முஸ்லிம் மதத் தலைவர்களும் காணப்படவில்லை என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

மேலும் தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய அமைச்சரவையில் இந்து மற்றும் முஸ்லிம் கலாசாரங்களுக்கான அமைச்சு நீக்கப்பட்டுள்ளதுடன், இன நல்லிணக்க அமைச்சும் நீக்கப்பட்டுள்ளது.

அரச கரும மொழிகள் அமைச்சு நீக்கப்பட்டுள்ளது என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

இந்த நிலையில் பல்வேறுபட்ட தரப்பினரும் தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்திய வண்ணமுள்ளனர். இதே நிலையில் பதவி ஏற்பிற்காக அங்கு சென்றிருந்த தமிழ் மற்றும் முஸ்லீம் மக்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட இது பற்றி எந்த ஒரு எதிர்ப்பான கருத்துக்களையும் முன்வைத்திருக்காமையையும் பலரும் சுட்டிக்காட்டி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் – வியாழேந்திரன்

சதாசிவம் வியாழேந்திரன் கடந்த 05ஆம் திகதி நடைபெற்ற 09ஆவது பாராளுமன்ற தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு 22,218 விருப்பு வாக்குகளைப் பெற்று மாவட்டத்தில் தெரிவானார்.

இந்நிலையில் கண்டி தலதா மாளிகை வளாகத்தில்(12.08.2020) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் வியாழேந்திரன் தபால், வெகுசன ஊடகத்துறை இராஜாங்க அமைச்சராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

அதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பி அவர்களின் தேவைகளை நிறைவேற்றுவதில் அர்ப்பணிப்புடன் செயற்படப்போவதாக தெரிவித்தார்.   தொடர்ந்தும் பேசுகையில்

தேர்தல் தொனிப்பொருளிலும் தாம் மக்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளதை நினைவுகூர்ந்த இராஜாங்க அமைச்சர், பல்வேறு தேவைகளுடன் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் மக்களுக்கு சேவை செய்வதை நோக்காகக் கொண்டுள்ளதாக தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான புதிய அரசாங்கத்துடன் இணைந்து தமது தொழில்சார் அனுபவங்களுக்கு அப்பால் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார். குறிப்பாக யுத்தத்தினால் பாதிப்படைந்த மக்கள் தமது வாழ்வாதாரம் உள்ளிட்ட தேவைகளை பெற்றுக்கொள்வதற்காகவே அதிகளவு வாக்குகளால் தம்மை தெரிவு செய்துள்ளார்கள் என்றும் மக்கள் எதிர்பார்ப்பை உச்சளவில் தாம் நிறைவேற்றுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

முள்ளிவாய்க்காலில் இருந்து தன்னுடைய பாராளுமன்ற பயணத்தை ஆரம்பிக்கிறார் சி.வி.விக்னேஸ்வரன் !

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் சற்று முன்னர் முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபிக்கு சென்று அஞ்சலி செலுத்தி தன்னுடைய பாராளுமன்ற அரசியலை ஆரம்பித்துளார்.

இலங்கையில்  நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சரான சி.வி.விக்னேஸ்வரன் நாடாளுமன்றம் செல்வதற்கு முன்னதாக பல்லாயிரக்கணக்கான மக்கள் 2009இல் உயிர் நீத்த இடமாகிய முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருக்கின்ற நினைவு தூபியில் சற்று முன்னர் அஞ்சலி நிகழ்வு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பங்காளி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்ததக்கது.