உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

பிரஜாவுரிமை தொடர்பான சட்டங்களை ராஜபக்ஷ குடும்பம் ஒரு போதும் அரசியலுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்துடனேயே  மேற்கொண்டனர் ! – ஜி.எல்.பீரிஸ்

இரட்டை பிரஜாவுரிமை தொடர்பான சட்டங்களை ராஜபக்ஷ குடும்பம் ஒரு போதும் அரசியலுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்துடனேயே  மேற்கொண்டனர் என  கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (24.08.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இரட்டை பிரஜாவுரிமையுள்ள ஒருவருக்கு புதிய அரசியல் திருத்தத்தின் ஊடாக பாராளுமன்றம் செல்ல முடியுமா?  என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில், நாம் முதலில் சிந்தித்து பார்க்க வேண்டும். ஏன் அதனை அதாவது இரட்டை பிரஜாவுரிமை உள்ள ஒருவருக்கு எதிராக இதனை செய்தார்கள் என்று! நாட்டின் நலனுக்காக இதனை செய்தார்களா.?  அரசியல் கலாசாரம் சட்டம் முதலானவற்றை சிந்தித்து பார்த்து இதனை செய்யவில்லை. உண்மையில் போலியான நடவடிக்கையே இது. ராஜபக்ஷ குடும்பம் ஒரு போதும் அரசியலுக்கு வரக்கூடாது என்ற எண்ணத்துடனேயே இதனை மேற்கொண்டனர். தூரநோக்குடன் கொண்டுவரப்பட்ட சட்ட திருத்தம் அல்ல. தனிப்பட்டவரை கேந்திரமாகக் கொண்டே இது கொண்டுவரப்பட்டது என்றார்.

புதிய திருத்தம் மேற்கொள்ளப்படுவதன் மூலம் தேசிய பட்டியலில் ஒருவர் விலகுவதன் மூலம் அந்த பட்டியல் ஊடாக பெஸில் ராஜபக்ஷ பாராளுமன்றம் செல்வாரா என்ற கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில் , அது அரசியல் தீர்மானம். அது உரிய நேரத்தில் தீர்மானிக்கப்படும். நாடு குறித்து சிந்தித்து தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றார்.

துணை பிரதமர் பதவி தொடர்பில் அரசாங்கத்தில் எவ்வித உத்தியோக பேச்சுவார்த்தையும் இல்லை அடிப்படை உரிமைகளை பாதுகாப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

19 ஆவது அரசியலமைப்பில் காணப்படும் நெருக்கடிகளை சீர்செய்வது இதன் நோக்கமாகும். அப்போதைய இந்தத் திருத்தத்தினால் நாட்டின் பாதுகாப்பு, ஜனநாயகம், பொருளாதாரம் என்பனவும் சீர்குலைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் 20ஆவது அரசியலமைப்பு திருத்தத்தின் ஊடாக தொகுதிகளுக்கு பொறுப்புக்கூறும் பாராளுமன்ற உறுப்பினர்களை உருவாக்கும் நோக்குடன் கலப்பு தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதால் எமது மக்கள் பட்டபாடுகள் அனைத்தும் போதும்! – கிளிநொச்சியில் டக்ளஸ் தேவானந்தா.

கிளிநொச்சி மாவட்டத்தில் பெருமளவான காணிகள் பல்வேறு திணைக்களங்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலையில், அவற்றை விடுவித்து அடுத்த போகத்திற்கான பயிர்செய்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேலும்  துப்பாக்கிகளைப் பயன்படுத்தியதால் எமது மக்கள் கடந்த காலங்களில் பட்டபாடுகள் அனைத்தும் போதும் என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மாற்று வழியை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுவின் முன்னாய்வு கூட்டம் நேற்று (24.08.2020)  கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற நிலையில் அமைச்சரினால் குறித்த கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தின் அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்ற குறித்த முன்னாய்வு கூட்டத்தில், மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கலந்துரையாடப்பட வேண்டிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதன்போது, கிளிநொச்சி மாவட்டத்தில் காணப்படும் குரங்குத் தொல்லைகள் தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்து முன்வைக்கப்பட்ட போது, சிறிய ரகத் துப்பாக்கிகளை விவசாயிகளுக்கு வழங்குவதன் மூலம், பயிர்செய்கைகளுக்கு நாசம் விளைவிக்கும் குரங்குகளை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம் என்று சம்மந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகளினால் தெரிவிக்கப்பட்ட போதே மேற்குறித்த கருத்தினை தெரிவித்த அமைச்சர், மாற்று வழிகள் தொடர்பாக ஆராயுமாறு தெரிவித்தார்.

அத்துடன், நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார கொள்கை என்பவற்றின் அடிப்படையில், பயன்படுத்தப்படாமல் இருக்கின்ற காணிகளில் விவசாய நடவடிக்கைகளை மேற்கொண்டு விவசாயத்தில் தன்னிறைவு எட்டுவதே நோக்கமாக இருககின்ற நிலையில் வன வளத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் போன்றவற்றினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ள காணிகளை பயிர் செய்கைக்கு பயன்படுத்துவதற்கு ஜனாதிபதியின் பூரண ஒத்துழைப்பு கிடைக்கும் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறப்பிடத்தக்கது.

நான் கிழக்கு மாகாண ஆளுநராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராக அல்லது உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படலாம்! – எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா

ஒவ்வொரு வேட்பாளரும் தான் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற முயற்சியிலும் அதனைத்தொடர்ந்த நம்பிக்கையிலுமே பிரசாரத்தில் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ள அவர், தோல்வியை ஏற்றுக்கொள்ள வேண்டும் எனவும் தனது மூச்சு இருக்கும் வரையிலும் மக்களுக்கான அரசியல் பயணம் தொடரும் என முன்னாள் அமைச்சர் எம்.எல்.ஏ.எம் ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளார்.

எனது பல்கலைக்கழகத்தை பாதுகாக்கவே பாராளுமன்றத் தேர்தலில் வேண்டுமென்றே தோல்வியை தழுவியதாகவும் சில சமூக வலைத்தளங்களில் கூறப்படும் பிரசாரங்கள் முற்றிலும் பொய்யானவை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கல்குடா தொகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றிலே அவர் இதனை தெரிவித்தார். இணைப்பாளர் அஷ்ஷெய்க் ஹாரூன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்து உரையாற்றும்போது,

யாராவது இந்த நாட்டில் தனது வெற்றியை விட்டுக்கொடுத்த வரலாறுகள் காணப்படுகின்றதா? சிறுபிள்ளைத்தனமான சந்தேகங்களை மக்கள் மத்தியில் விதைப்பவர்கள் எதை எதிர்பார்த்து இவ்வாறு பிரசாரம் செய்கிறார்கள். மட்டக்களப்பு மாவட்ட தமிழ் மக்கள் மிகவும் புத்திசாதுரியமான முறையில் தங்கள் வாக்குகளை அளித்ததால் வழமையாக வரவேண்டிய இரண்டு முஸ்லிம் பிரதிநிதிகளில் ஒரு முஸ்லிம் பிரதிநிதி இல்லாமல் ஆக்கப்பட்டார். உரிமைக்கென்று தமிழ்க்கூட்டமைப்புக்கும் அபிவிருத்திக்கென்று தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சிக்கென்றும் அவர்கள் வாக்களித்தார்கள்.

மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த முஸ்லிம் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர்களான அலிசாஹிர் மௌலானா, அமீரலி ஆகியோரும் என்னைப்போலவே தேர்தலில் தோல்வியடைந்துள்ளனர்.அவர்களது தோல்வியையும் நாங்கள் பெருந்துயரமாகவே கருத வேண்டும். சிரேஷ்ட முஸ்லிம் பாராளு மன்ற உறுப்பினர்களை இழந்த மாவட்டமாக மட்டக்களப்பு இப்போது காணப்படுகின்றது. எம்மைப்போல ஆளுமைகளின் தேவை அரசுக்கு வேண்டும் எனக்கருதினால் அதற்கான வாசலை இறைவன் தனது அதிகாரத்தினால் திறந்து வைப்பான்.

நான் கிழக்கு மாகாண ஆளுநராகவோ அல்லது பாராளுமன்ற உறுப்பினராக அல்லது உயர்ஸ்தானிகராக நியமிக்கப்படலாம் என்று எனது ஆதரவாளர்கள் நம்பிக்கை கொண்டு வருகின்றனர். இந்த அரசு பயணிக்கும் பாதையை பொறுத்தே அதனைப் பெற்றுக்கொள்வதா?இல்லையா?என்பது குறித்து தீர்மானம் எடுக்கப்படும்.

எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கபட்டோருக்கான நீதி கேட்டு மாபெரும் கவனயீர்ப்பு போராட்த்துக்கு அழைப்பு !

தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கபட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் 4 வருடங்களை எட்டுகின்றது. இதுவரையிலும் தமது பிள்ளைகளை தேடியபடி போராடி வந்த 72 க்கும் மேற்பட்ட தாய் தந்தையர் நீதியே இன்றி இறந்து போயுள்ளார்கள் . தொடர்ந்தும் கேட்பார் யாரும் இன்றி இவர்களின் போராட்டம் தொடர்கிறது .
இந்நிலையில் எதிர்வரும் 30 ஆம் திகதி ஞாயிற்றுகிழமை சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கபட்டோர் தினத்தில் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையம் முன்பாகவும் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு கல்லடி பாலத்தடியிலும் வடக்கு-கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டங்கள் முன்னெடுக்க படவுள்ளது .
பாதிக்கப்பட்டவர்களாக தொடர்ந்தும் வலிகளோடு போராடி வரும் தாய்மாருக்கு வலு சேர்க்க இந்த போராட்டங்களில் இன ,மத ,அரசியல் பேதங்கள் கடந்து அனைவரும் பங்கெடுக்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடபகுதி தொடர்பில் பேசக்கூடியவராக நான் இருக்கின்றேன் ! – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகிய நான், தற்போதைய அரசாங்கத்தின் அமைச்சரவையில் வடபகுதி தொடர்பில் பேசக்கூடியவராக இருப்பதோடு, அதனூடாக வடக்கின் அபிவிருத்தி திட்டங்களை முடிந்த வகையில் செயல்படுத்துவேன் என கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கு – கிழக்கு தமிழ் மக்கள் தொடர்பில் நான் மிகுந்த கரிசனையாக உள்ளதோடு மக்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள் தொடர்பில் எனது பலத்தைப் பிரயோகித்து மக்களின் பிரச்சினைகளை இலகுபடுத்துவேன். வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்துத் திட்டங்களையும் மக்களுக்கு பயன் அடையக்கூடிய திட்டங்களாக செயல்படுத்துவதோடு குறித்த திட்டங்களை நான் செயற்படுத்துவதை யாரும் தடுக்க முடியாதெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் வடக்கில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படுகின்ற அனைத்துத் திட்டங்களையும் மக்களுக்கு பயன் அடையக்கூடிய திட்டங்களாக செயல்படுத்துவதோடு குறித்த திட்டங்களை நான் செயல்படுத்துவதை யாரும் தடுக்கவும் முடியாது.

கடந்த காலத்தில் மக்கள் நலத்திட்டங்கள் சுயலாப அரசியல் கூட்டுக்களால் தடுக்கப்பட்டதோடு மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்திகள் உரிய மக்களுக்கு சென்றடையவில்லை. இம்முறை தேர்தலில் வடமாகாணத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சிக்கு இரண்டு ஆசனங்களை மக்கள் வழங்கியுள்ளனர்.

இதன் மூலம் இருப்பதை பாதுகாத்து முன்னோக்கிச் செல்வதே எமது நிலைப்பாடாகும். தற்போது நடைபெற்ற தேர்தலில் தமிழ் மக்கள் சட்டியிலிருந்ததை அடுப்பில் விழ வைத்து விட்டார்கள்.

ஏனெனில் சில தமிழ் அரசியல் கட்சிகள் மக்களுக்குத் தேவையானது எது என சிந்திக்காமல் விதண்டாவாத பேச்சுக்களால் தமிழ் மக்களுக்கு இருக்கின்றவற்றை கூட இழக்கக் கூடிய நிலைக்கு இட்டுச் செல்கிறார்கள்.

இந் நிலையில் இவ் அரசியல்வாதிகள் தொடர்பில் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் விளிப்படையாமல் விட்டால் அதன் விளைவுகளை மக்களே ஏற்றுக்கொள்ளும் நிலை உருவாகி விடும் 19 ஆவது திருத்தச் சட்டம் நீக்கப்பட்டு 20 ஆவது திருத்தம் கொண்டு வரப்படவுள்ளது.

இத் திருத்தத்தின் மூலம் அரசாங்கத்தை நடத்திச் செல்வதற்கு தடையாக இருந்த விடயங்கள் நீக்கப்பட்டு புதிய விடயங்கள் உட்சேர்க்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கடமையில் ஈடுபட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் உயிரிழக்கும் ஊழியர்களுக்கு 20 இலட்சம் நட்டஈட்டு!

வேலைத்தளத்தில் அல்லது கடமையில் ஈடுபட்டிருக்கும் சந்தர்ப்பத்தில் உயிரிழக்கும் ஊழியர்களுக்கு தற்போது வழங்கப்படும் 5 இலட்சம் ரூபா நட்டஈட்டு தொகையை 20 இலட்சமாக அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

குடும்பத்தில் சம்பாதிக்கும் ஒருவர் உயிரிழந்தால் அந்த குடும்பம் முழுமையாக நிர்க்கதியற்று இருக்கும் சந்தர்ப்பத்தில் 5 இலட்சம் ரூபா நட்டஈடு எந்த விதத்திலும் போதுமானதாக இருக்காது என அவர் தெரிவித்துள்ளார். தொழிலாளர் திணைக்களத்தில் இடம்பெற்ற தொழிலாளர் ஆலோசனைக் குழுவில் உரையாற்றும் போது அவர்  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போது வரையில் நிலுவையில் உள்ள தொழிலாளர் நட்டஈட்டு வழக்குகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

விக்னேஸ்வரனின் பிள்ளைகளுக்கே தமிழ் மொழி தெரியாது ! – எஸ்.பி. திஸாநாயக்க

விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் பெரிய தந்தையாவதற்கே விக்னேஸ்வரன் முயற்சிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திஸாநாயக்க கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் விக்னேஸ்வரன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இதனை கூறினார்.

“இலங்கையின் பூர்வீக மொழி சிங்களம் அல்ல தமிழ் என விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

அவரின் இந்த உரையால் நாம் குழப்பம் அடையவில்லை என்றும், ஏனெனில் விக்னேஸ்வரனின் பிள்ளைகளுக்கே தமிழ் மொழி தெரியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

பிரபாகரனுக்கு மலையக மக்கள் ஆதரவளிக்கவில்லை,ஆதரவளித்திருந்தால் பெருந்தோட்ட மக்கள் இன்று பல துன்பங்களை அனுபவிக்க மாட்டார்கள் என சஹ்ரான் கூறினார். – ஜனாதிபதி ஆணைக்குழுவின் முன்பு தேரர் .

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமிழ் மக்களுக்காக போராடிய போதிலும் அவருக்கு பெருந்தோட்ட துறை மக்கள் ஆதரவளிக்காமையினாலேயே துன்பத்தை அனுபவிக்கின்றனர் என சஹ்ரான் கூறியதாக கண்டி நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலையத்தின் நிறுவனர் வத்துருகும்புரே தம்மரத்தன தேரர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைணக்குழுவில் நேற்று (22) கண்டி நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலையத்தின் நிறுவனர் வத்துருகும்புரே தம்மரத்தன தேரர் முன்னிலையாகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

கண்டி முருத்தலாவ நகருக்கு அருகிலுள்ள அரசுக்கு சொந்தமான நிலத்தில் 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் திகதி நில ஆணையராளர் நாயக திணைக்களத்தின் அனுமதியுடன் நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலையத்தின் கட்டுமாண பணிகள் கடந்த 2014 நவம்பர் 9 ஆம் திகதி ஆரம்பித்ததாக தெரிவித்தார்.

இருப்பினும், அந்த நிலையத்தை சுற்றியுள்ள காணிகள் முஸ்லிம்களுக்கு சொந்தமானது என்றும், எனவே அங்குள்ள ஏனைய காணிகளுக்கு பணம் செலுத்தியதாகவும், அதன் பின்னரே விஹாரையின் அபிவிருத்தி நடவடிக்கைகளை ஆரம்பித்தாகவும் தேரர் தெரிவித்தார்.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரதேச இளைஞர்களுடன் இணைந்து விஹாரையின் தாது கோபுரம் அமைக்கும் பணிகளை முன்னெடுக்கும் போது ஐந்து முஸ்லிம் இளைஞர்கள் அங்குள்ள காணியொன்றில் நடமாடியதை கண்டதாகவும், அவர் கூறினார்.

அது தொடர்பான புகைப்படத்தை விஹாரையின் சிறிய தேரர் ஒருவர் தனது கைப்பேசியில் புகைப்படம் எடுத்ததாகவும், அவர்கள் சஹ்ரான் ஹாஷிம் அணிந்திருந்த ஆடையை ஒத்த ஆடையை அணிந்திருந்தாகவும் தேரர் ஆணைக்குழுவில் தெரிவித்தார்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, தேரர்கள் அருகே இருந்த குழுவுடன் பேச்சு தொடுத்தாகவும் அதற்கமைய சஹ்ரான் ஹாசிம், தான் காத்தான்குடியில் இருந்து வந்ததாக கூறியதாகவும் அவர்கள் சிங்களத்தை நன்றாக பேசியதாகவும் கூறினார்.

அப்போது சஹ்ரான் ´காணியை வாங்குவதை நீங்கள் எதிர்க்கிறீர்களா?´ என தேர்களிடம் வினவியதாகவும் கூறினார்.

ஆம், அதற்கு எதிரானவர் என்று கூறியபோது, சஹ்ரான் தான் ஒருபோதும் அங்கு ஒரு பள்ளியை கட்ட மாட்டேன் என்றும் மாறாக அங்கு ஒரு ´மையத்தை´ கட்டவுள்ளதாகவும் கூறியதாக தேரர் குறிப்பிட்டர்.

அந்த காணியில் ஒரு சமூக சேவை மையம் கட்டப்பட வேண்டும் என்று அப்போது தான் உணர்ந்ததாக தம்மரதன தேரர் கூறினார். இருப்பினும், அவர்கள் சென்ற பிறகு, சஹ்ரானும் அவரது குழுவும் அந்த காணியின் முஸ்லீம் உரிமையாளரைக் கவனித்தனர், ´இதை விற்கிறீர்களா?´ என்று அவர் கேட்டபோது, அந்த நிலத்தை விற்கும் எண்ணம் தனக்கு இல்லை என்று அவர் கூறியதாக தேரர் தெரிவித்தார்.

அதன் பின்னர் சஹ்ரான் 2017 மார்ச்சில் இரண்டாவது முறையாகவும், ஒகஸ்ட் 2017 இல் மூன்றாவது முறையாகவும் நெல்லிகல பௌத்த சர்வதேச மத்திய நிலையத்திற்கு வந்தாகவும் தேரர் குறிப்பிட்டார்.

அப்போது சஹ்ரான் கிறிஸ்தவம் மற்றும் பௌத்த மதம் குறித்தும் அதிலுள்ள விசேட கலாசார விழுமியங்கள் தொடர்பில் விவாதித்தார் எனவும் அதன் பின்னர் அவர் பாரம்பரிய முஸ்லிம்களுக்கு தலைவர்கள் இல்லை என்று குற்றம் சாட்டியதாகவும் தேரர் தெரிவித்தார்.

விடுதலை புலிகளின் தலைவர் தமிழ் மக்களுக்காக போராடிய போதிலும் அவருக்கு பெருந்தோட்ட துறை ஆதரவளிக்க வில்லை எனவும் அவ்வாறு அவ்வாறு அவர்கள் ஆதரவளித்திருந்தால் பெருந்தோட்ட மக்கள் இன்று பல துன்பங்களை அனுபவிக்க மாட்டார்கள் எனவும் கூறியதாக வத்துருகும்புரே தம்மரத்தன தேரர் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு உரிமைகள் வழங்கினாலே இந்த நாட்டுக்கு சுபீட்சம் கிடைக்கும் ! – பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வில் சி.வி.சி.வி.விக்னேஸ்வரன்

தேசம் என்ற அடிப்படையில் தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமையை ஏற்றுக்கொண்டு உரிமைகள் வழங்கினாலே இந்த நாட்டுக்கு சுபீட்சம் கிடைக்கும் என்று நாடாளுமன்ற முதல் அமர்வில் (20.08.2020)  தமிழ் தேசிய கூட்டணியின் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

மேலும்,

“எமக்கு இப்பொழுது மிகவும் பலமான ஒரு அரசாங்கம் அமைந்துள்ளது. 1977ம் ஆண்டு இதேமாதிரியான ஒரு அரசாங்கம் ஜே.ஆர். ஜெயவர்த்தனாவின் கீழ் இருந்தது. அந்த ஆட்சியின்போதே 1983ம் ஆண்டு கலவரம் இடம்பெற்றது. அந்தக்காலத்து யானையாக இருந்து இன்று தனி ஒரு உறுப்பினராக குறுகிப்போயுள்ள பாதையை இந்த அரசாங்கமும் நிச்சயமாக எதிர்காலத்தில் தொடரக்கூடும். ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யமாட்டார்கள் என்று நம்புகிறேன். கடந்த காலத்தில் நாம் விட்ட பிழைகளில் இருந்து பாடம் படித்து எல்லா சமூகங்களும் ஒருவருக்கு ஒருவர் மதிப்புடனும் சமனாகவும் உணருகின்ற வகையிலும் இலங்கை தாய் நாட்டின் பிள்ளைகள் நாம் என்ற இறைமையுடனும் பெருமையுடனும் நடைபோடும் வகையிலுமான சமாதானமும் செழிப்பும் மிக்க ஒரு காலத்தை ஏற்படுத்துவார்கள் என்றும் நம்புகிறேன்.

குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கையுடன் மரபு, பாரம்பரிய உரிமைகளின் அடிப்படையில் தேசம் என்று அங்கீகரிக்கப்படுவதன் பிரகாரம் சுய நிர்ணய உரிமைக்கு உரித்துடைய வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் உள்ளார்ந்த உரிமைகளை அங்கீகரிப்பதுடன் கடந்த காலம் பற்றிய தவறான வரலாற்று கண்ணோட்டங்களை களைந்தால் மட்டுமே சுதந்திரமும் சமத்துவமும் உதயமாக முடியும்.

சபாநாயகர் அவர்களே, பௌத்த மதத்தை பின்பற்றும் ஒரு நாட்டிலே, மேலாதிக்க அதிகார பிரயோகத்தை நாங்கள் எவரிடம் இருந்தும் எதிர்பார்க்கவேண்டியதில்லை. ஏனென்றால், சிங்கள கிராமத்தவர்கள், ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை இருக்கும் என்பதற்காக பின்வரும் பழமொழியை கூறுவார்கள் என்பது எமக்கு தெரியும். அதாவது, (கல கல டே பல பல வே) முற்பகல் செய்த வினை பிற்பகல் விளையும் என்பதே அது.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மக்கள் அதிகாரத்தை ஒரு கட்சிக்கு மாத்திரம் வழங்காமல் பிரித்து வழங்கியுள்ளனர் ! – கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்

நடந்து முடிந்துள்ள பொதுத் தேர்தலில் வடக்கு மக்கள் அதிகாரத்தை ஒரு கட்சிக்கு மாத்திரம் வழங்காமல் பிரித்து வழங்கியிருப்பதை காணமுடிகின்றது எனவும் இதனால் வடக்கில் அரசியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால், தமிழ் மக்களின் இந்த மாற்றத்தை நாங்கள் பயன்படுத்திக்கொண்டு அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை வடக்குக்கும் கொண்டு செல்வோம் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கண்டிக்கு சனிக்கிழமை (22.08.2020) விஜயம் மேற்கொண்டிருந்த அமைச்சர், அஸ்கிரி மற்றும் மல்வத்து மகாநாயக்க தேரர்களிடம் ஆசிர்வாதத்தை பெற்றுக்கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும், வடக்கில் தமிழ் மக்களின் ஏக பிரதிநிதி தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாத்திரமாகும் எனவும் தமிழ் மக்களின் உரிமைகள் தொடர்பாக தங்களுக்க மாத்திரம்தான் கதைக்க முடியும் என்றும் கடந்த காலங்களில் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் தெரிவித்து வந்தபோதும் இனிமேல் அவ்வாறு கூறமுடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இம்முறை, தேர்தலில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு மாத்திரம் அதிகாரத்தை வழங்காமல் சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மட்டக்களப்பில் பிள்ளையான், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கும் மக்கள் ஆணை வழங்கியுள்ளார்கள்.

இந்த சூழலில் தமிழ் மக்களின் இந்த மாற்றத்தை நாங்கள் பயன்படுத்திக்கொண்டு அரசாங்கத்தின் அபிவிருத்தி வேலைத் திட்டங்களை வடக்குக்கும் கொண்டு செல்வோம் என்றும் அபிவிருத்தித் திட்டங்கள் தெற்குக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்ட ஒன்றல்ல எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, தனது கல்வி அமைச்சின் பாடசாலை அபிவிருத்தித் திட்டங்களை வடக்கு பிரதேசத்துக்கும் கொண்டுசெல்ல உள்ளதாகவும் வடக்கும் தமது நாட்டின் ஒரு தொகுதி என்றும் குறிப்பிட்டுள்ள அவர், அனைவருடனும் இணைந்து செயற்படவே தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.