இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்கு பதிவுகள் நேற்றைய தினம் (05.08.2020) இடம்பெற்றிருந்த நிலையில், இன்றைய தினம் வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் மதியம் 02 மணி முதல் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதனடிப்படையில் தற்போதுவரை வெளியாகியுள்ள 2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகளுக்கு அமைய தென்னிலங்கையில் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிர்பார்த்திராத வகையில் வரலாற்றில் மிகப் பெரிய பின்னடைவை எதிர்நோக்கியுள்ளது.
நாடு முழுவதும் உள்ள வாக்கு எண்ணும் நிலையங்களில் இருந்து கிடைக்கும் உத்தியோகபூர்வமற்ற தகவல்களின்படி ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் குறைவான வாக்கு வீதத்தை பெற்றுக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
முதலாவதாக வெளியான காலி மாவட்ட தபால் மூல தேர்தல் முடிவுகளுக்கு அமைய ஐக்கிய தேசியக் கட்சி 3.96 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றிருந்தது. காலி மாவட்டம் என்பது ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தில் அரச நிர்வாகம் மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சராக பணியாற்றிய வஜிர அபேவர்தன பிரதிநித்துவப்படுத்தும் மாவட்டமாகும். அது மட்டுமன்றி காலியில் ஐக்கிய தேசியக் கட்சியை விட மிக அதிக ஓட்டுக்களை ஐக்கிய மக்கள் சக்தி பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் கூட்டணியின் ஊடாக தேர்தலில் போட்டியிடுவது அந்த கட்சி தீர்மானித்திருந்தது. எனினும் அந்த கூட்டணியின் தீர்மானிக்கும் அதிகாரத்தை சஜித் பிரேமதாசவுக்கு வழங்க ரணில் விக்ரமசிங்கவும் அவருக்கு சார்பான அணியினரும் விரும்பவில்லை என்பதால், சஜித், ஐக்கிய தேசிய முன்னணியின் அங்கம் வகித்த ஏனைய சிறிய கட்சித் தலைவர்களுடன் இணைந்து வௌியேறி ஐக்கிய மக்கள் சக்தி என்ற கூட்டணியை உருவாக்கி இந்த தேர்தலில் போட்டியிட்டார். இதன் காரணமாகவே ஐக்கிய தேசியக் கட்சியின் வாக்கு பலம் பாரியளவில் சிதைந்து போனதாக தென்னிலங்கை அரசியல் ஆர்வளர்கள் பலரும் பலரும் குறிப்பிடுகின்றனர்.