உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் துரித அபிவிருத்தியை அடைய வேண்டும் என்பது அரசாங்கம் மற்றும் மக்களின் அபிலாஷையாக இருந்தது“ – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச

“2009 ஆம் ஆண்டு பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் துரித அபிவிருத்தியை அடைய வேண்டும் என்பது அரசாங்கம் மற்றும் மக்களின் அபிலாஷையாக இருந்தது“ என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கடந்த அரசாங்கம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியது எனினும் அது வர்த்தக நோக்கில் மாத்திரமே பயன்படுத்தப்பட்டு வருகிறது எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச கூறியுள்ளார்.

இலங்கைக்கான தூதுவர்களாக நியமிக்கப்பட்ட 4 ராஜதந்திரிகள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வில் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி,

பயங்கரவாதம் காரணமாக நாட்டின் பொருளாதாரம் கடும் வீழ்ச்சிக்கு உள்ளானது. இதனால், துரித அபிவிருத்தியை செய்ய எமக்கு வெளிநாட்டு உதவிகள் தேவைப்பட்டன. இலங்கையின் அபிவிருத்தித் திட்டங்களில் முதலீடு செய்ய சீனா முன்வந்தது. எமது நாடுகளுக்கு இடையில் கொடுக்கல் வாங்கல்களே நடந்தன. எனினும் சிலர் இதனை சீனாவுக்கு சார்பான நடவடிக்கையாக வர்ணித்தனர். இலங்கை சகல நாடுகளுடனும் நட்புறவுடன் இருக்கின்றது.

இலங்கை பூகோள ரீதியில் முக்கியமான இடத்தில் அமைந்துள்ளது. இதனால், எமது நாடு பல தரப்பினரை ஈர்த்துள்ளது. இந்த சூழ்நிலையில் இலங்கை நடு நிலையான வெளிநாட்டுக் கொள்கையை தெரிவு செய்துள்ளது. நெருக்கமான பிரதிபலன்களுடன் கூடிய அபிவிருத்திக்கு நாங்கள் முக்கியத்துவம் கொடுப்போம். இலங்கை வெளிநாட்டு முதலீடுகளுக்காக திறந்துள்ளது.

இந்து சமுத்திரத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் திறக்கப்பட்ட மற்றும் சுதந்திரமான பிராந்தியமாக இருக்க வேண்டும். இந்து சமுத்திர பிராந்தியத்தை அமைதியான பிராந்தியமாக மாற்ற வேண்டும் என இலங்கையையே 5 தசாப்தங்களுக்கு முன்னர் முதலில் யோசனை முன்வைத்தது. 2009 ஆம் ஆண்டு பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர் துரித அபிவிருத்தியை அடைய வேண்டும் என்பது அரசாங்கம் மற்றும் மக்களின் அபிலாஷையாக இருந்தது எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

ஜோன்க் ஹூன்ஜிங்க் இலங்கைக்கான தென் கொரிய தூதுவராகவும் ஹோல்கர் லோதர் சோய்பொயட், இலங்கைக்கான ஜேர்மனிய தூதுவராகவும் மொன்சிஞ்ஞோர் யுரந்தர பிரயன் உடய்வே, இலங்கைக்கான வத்திகான் தூதுவராகவும் டொமினிக் ஃபர்க்லர் இலங்கைக்கான சுவிஸர்லாந்து தூதுவராகவும் நியமிக்கப்பட்டுள்ளதுடன் இவர்கள் தமது நியமனக் கடிதங்களை ஜனாதிபதியிடம் கையளித்தமையும் குறிப்பிடத்தக்கது.

“இலங்கை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, பல இனங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

“இலங்கை சிங்கள பெரும்பான்மை மக்களுக்கு மட்டும் சொந்தமானதல்ல, பல இனங்களைக் கொண்ட நாடென்பதை சிங்கள மக்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தியுள்ளார்.

20ஆம் திருத்தத்திற்கு எதிராக சமூக நீதிக்கான தேசிய இயக்கம், இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான கட்சிகளை இணைத்து கொழும்பிலுள்ள ஜானகி ஹோட்டலில் நடத்திய சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தினார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

இந்த நாட்டின் அரசியலமைப்பை கேள்விக்கு உட்படுத்திக்கொண்டு, நிராகரித்துக்கொண்டு
இருப்பவர்களாகிய நாங்கள், ஏன் இந்த அரசியலமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள 20ஆம் திருத்தத்தை எதிர்க்கும் இந்த நிகழ்வில் உங்களுடன் இணைந்திருக்கிறோம் எனும் கேள்வி சிலருக்கு எழலாம்.

உண்மையில் தமிழர்களை பொறுத்தவரை இலங்கையின் அரசியலமைப்புக்கள் எதுவும் தமிழர்களுக்கு ஒரு போதும் நேர்மையாக இருந்திருக்கவில்லை. இந்த நாட்டில் நிறைவேறிய, பெரும்பான்மைத்துவ வாதத்தை மையப்படுத்திய மூன்று ஒற்றையாட்சி அரசியலமைப்புகளுமே, அடிப்படையில் தமிழர்களுக்கு எதிரான ஒரு ஜனநாயக மீறலாகவேதான் அமைந்திருந்தன.

இந்த அரசியலமைப்பில் ஏற்படுத்தப்படுத்தப்பட்ட 17ஆம் 19ஆம் திருத்த சட்டங்கள் மூலம் ஜனநாயகம் பாதுகாக்கப்படும் என சொல்லப்பட்ட போதிலும் உண்மையான நடைமுறையில் தமிழர்களுக்கு எதுவித நீதியும் ஜனநாயகப் பாதுகாப்பும் கிடைத்திருக்கவில்லை என்பது தான் உண்மை.

கடந்த 72 வருடமாக, எண்ணிக்கையில் சிறிய இனங்களின் ஜனநாயக உரிமைகளை தொடர்ச்சியாக பறித்து பழக்கப்பட்டு வந்த சிங்கள அரசுகள், இன்று இந்த 20ஆம் திருத்த சட்டத்தின் மூலம் எதுவித கூச்சமும் இன்றி தனது சொந்த மக்களின் ஜனநாயக உரிமைகளிலேயே கைவைக்க தொடங்கியிருக்கிறது. இன்று உங்களின் அடிப்படை உரிமைகள் பறிக்கப்பட்டு ஜனநாயக உரிமைகள் மட்டுப்படுத்தப்படுகின்ற போது அதற்கு எதிராக நாமும் உங்களுடன் இணைந்து குரல்கொடுக்க முன்வந்துள்ளோம். மேலும், 20ஆம் திருத்ததுக்கு எதிரான சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் முயற்சி வெற்றிபெற வாழ்த்துவதுடன் அதற்கான எமது பூரண ஆதரவையும் இத்தால் வெளிப்படுத்துகின்றேன் என்றார்.

“இலங்கையில் பன்னாட்டு பொறுப்புக் கூறல் பொறிமுறையை நிறுவவேண்டும்” – ஐ.நா கூட்டத்தொடரில் அபிவிருத்தி மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைப்பின் பிரதிநிதி கெவின் கணபதிபிள்ளை.

“நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், இந்த மனித உரிமை பேரவை இலங்கையில் பன்னாட்டு பொறுப்புக் கூறல் பொறிமுறையை நிறுவவேண்டும்” என அபிவிருத்தி மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைப்பின் பிரதிநிதி கெவின் கணபதிபிள்ளை தெரிவித்துள்ளார்.

இதன்போது, மனித உரிமை பேரவை இலங்கையில் பன்னாட்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை நிறுவவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் சபையின் 45 ஆவது கூட்டத்தொடர் பலத்த சுகாதார கட்டுப்பாடுகளுடன் செப்டம்பர் 14ஆம் திகதி ஆரம்பமாகி ஜெனீவாவில் இடம்பெற்று வருகிறது .

இதில் இரண்டாவது வாரத்தில் ஐ.நா மனித உரிமைகள் சபையின் பிரதான அவையில், அனைத்து மனித உரிமைகள் உட்பட சிவில், அரசியல், பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல் அபிவிருத்திக்கான உரிமை தொடர்பான பொது விவாதம் இடம்பெற்றது.

இதன்போது, அபிவிருத்தி மற்றும் சமூக வலுப்படுத்தல் அமைப்பின் (Society for Development and Community Empowerment) சார்பாக உரையாற்றிய கெவின் தனது உரையில் இதனை வலியுறுத்தினார்.

அவர் அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில், “ஈழத்தமிழர்கள் தங்களது அரசியல் பண்பாட்டு உரிமைகளை நிலைநிறுத்த அரசு தடைவிதிப்பது மனித உரிமை மீறல் என்று இந்த அவையின் கவனத்திற்கு கொண்டுவருகின்றேன்.

இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் மக்களாட்சி நடைமுறைகள் இடம்பெறவில்லை.

இலங்கை பொதுத்தேர்தலில் போட்டியிட்ட கிழக்கு, வடக்கு மாகாண வேட்பாளர்களை குறிப்பாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் இயங்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சி வேட்பாளர்களையும் சி.வி.விக்கினேஸ்வரன் தலைமையில் இயங்கும் தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வேட்பாளர்களையும் இராணுவமும் பொலிஸாரும் அச்சுறுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டனர்.

தேர்தல் பரப்புரையின்போது கண்காணிப்பு குழுவையும் இருசக்கர வாகன குழுவையும் இராணுவம் பயன்படுத்தியது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியினர் தேர்தல் போட்டியிலிருந்து விலகிக்கொள்ள கட்டாயப்படுத்தல், வேட்பாளர்களை அச்சுறுத்தல் போன்ற செயல்களை இராணுவத்தின் புலனாய்வு பிரிவு தொடர்ந்து செய்ததென வழக்கு பதிவு செய்தது. குருநகருக்கு பரப்புரைக்காக சென்ற விக்னேஸ்வரனை இருசக்கர வாகன குழு இடையூறு செய்தது.

நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் ஆகியவற்றிற்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இந்த நிலையில், இந்த மனித உரிமை பேரவை இலங்கையில் பன்னாட்டு பொறுப்புக் கூறல் பொறிமுறையை நிறுவவேண்டும்” என தனது உரையில் அவர் வலியுறுத்தினார்.

குவைத் மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் காலமானார் !

கடந்த 2006-ம் ஆண்டு முதல் குவைத் மன்னராக  உள்ளவர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் ( வயது 91) .   தந்தையின் மறைவுக்குப் பின் நீண்டகாலம் ஆட்சிப் பொறுப்பை நிர்வகித்து வந்த நிலையில் இவர் வயது (91) முதிர்வுகாரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். கடந்த ஜூலை 18-ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு ஜூலை 23-ம் தேதி அழைத்து செல்லப்பட்டார். அவரது சிகிச்சை விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. அவருக்கு பதிலாக, குவைத் பட்டத்து இளவரசர் ஷேக் நவாப் அல் அகமது சபா(83), தற்காலிக மன்னர் பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மன்னர் அமீர் ஷேக் சபா அல் அஹ்மத் இன்று காலமானார். மன்னர் இறப்பை அடுத்து, குவைத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனவும், கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

எண்ணெய் வளம்மிக்க நாடான குவைத், அமெரிக்காவுடனும், இங்கிலாந்துடனும் நெருங்கிய நட்பு பாராட்டியதற்கு வழிவகுத்தவர் அமீர் ஷேக் சபா. அரபு நாடுகளில் முக்கிய நாடாக குவைத் மாறியதற்கு அமீர் ஷேக் சபாவின் வெளியுறவுக் கொள்கை முக்கிய பங்காற்றியது எனக்கூறப்படுகிறது. அமீர் ஷேக் சபாவின் ஆட்சிக் காலத்தில் குவைத் பொருளாதார ரீதியில் சக்தி வாய்ந்த நாடாக மாறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

குவைத் மன்னர் ஷேக் சபாவின் மறைவுக்கு இலங்கை  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது இரங்கலை தெரிவித்துள்ளார். குவைத் மன்னர் ஷேக் சபாவின் மறைவு தொடர்பான இரங்கல் பதிவை  தனது ருவிட்டர் பக்கத்தில் ஜனாதிபதி பதிவேற்றியுள்ளார்.

குறித்த இரங்கல் பதிவில் ஜனாதிபதி மேலும் கூறியுள்ளதாவது, “கெளரவத்துக்குரிய குவைத்தின் எமிரான ஷேக் சபா அல்-அஹமட் அல்-ஜாபர் அல்-சபாவின் இழப்பை கேட்டு நான் மிகவும் வருத்தப்படுகிறேன். இந்நிலையில் இலங்கை மக்கள் சார்பாக அவரது குடும்பத்தினருக்கும், குவைத் மக்களுக்கும் எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” என குறிப்பிட்டுள்ளார்.

“20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை ஐக்கியதேசியகட்சி முழுமையாக எதிர்க்கின்றது” – அகிலவிராஜ் காரியவசம்.

மக்களின் இறையாண்மை தனிநபர் ஒருரிடம் வரையறுக்கப்படுகின்றமைக்கு நாங்கள் எதிரானவர்கள் என ஐக்கிய தேசியக்கட்சியின் பொதுச்செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

20ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணைக்காக, நேற்று (29.09.2020) நீதிமன்றத்திற்கு அவர் வருகை தந்திருந்தார்.இதன்போது ஊடகவியலாளர்களை சந்தித்த அகிலவிராஜ் காரியவசம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“ஐக்கியதேசியக் கட்சி 20 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்துக்கு எதிராக 2 மனுக்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்தவகையில், நாங்கள் 20ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தை முழுமையாக எதிர்க்கின்றோம்.

மக்களின் இறையாண்மை தனிபர் ஒருவரிடம் வரையறுக்கப்படுகின்றமையே நாங்கள் முழுமையாக எதிர்க்கின்றோம்.

குறிப்பாக, சுயாதீன ஆணைக்குழுக்கள், கணக்காய்வு திணைக்களம் மற்றும் ஜனாதிபதியின் அதிகாரம் உள்ளிட்ட முக்கிய பல விடயங்களில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம்.

அதாவது, ஐக்கிய தேசியகட்சி என்ற வகையில் குறித்த 20ஆவது திருத்தத்துக்கு எதிர்ப்பை தெரிவிப்பது மட்டுமன்றி  அதற்காக நீதிமன்றம் செல்ல முடிவு செய்தோம்.

குறித்த 20ஆவது திருத்த சட்டமூலத்தை நாடாளுமன்றம் முழுமையாக ஒப்புக் கொண்டால், அது ஒரு பிரச்சினையாக இருக்காது.

ஆனால் பிரச்சனை என்னவென்றால், அரசாங்கம் 20ஆவது திருத்த சட்டமூலத்தை, வரைவாகக் கொண்டு வந்ததைப் பார்க்கும்போது, ​​இந்த நாட்டின் சுதந்திரத்தையும் மக்களின் இறையாண்மையையும் மதிக்கும் எவருடனும் நாம் ஒருபோதும் உடன்பட முடியாதென தோன்றுகிறது. ஜனாதிபதிக்கு மக்களின் இறையாண்மை வழங்கப்படவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கே  வழங்கப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“நாமல் ராஜபக்ஸவினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளை இதுவரையில் அவர் நிறைவேற்றவில்லை ” – துரைராசா ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட பல வீட்டுத்திட்டங்கள் நிதிகள் கிடைக்கப்பெறாததால், இடை நடுவே நிறுத்திவைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வீட்டுத் திட்டங்களுக்கான, உதவிகளை ஆறு மாதங்களுக்குள் பெற்றுத்தருவதாக நாமல் ராஜபக்ஷ வாக்குறுதியளித்திருந்தார்.தற்போது ஆறுமாதங்கள் கடந்த நிலையிலும் குறித்த வாக்குறுதியை நாமல் ராஜபக்ச நிறைவேற்றவில்லை என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

முல்லைத்தீவு – துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் நேற்று(29.09.2020) இடம்பெற்ற நிலையில் அங்கு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட கடன் வீட்டுத்திட்டம், மாதிரிக் கிராம வீட்டுத்திட்டம், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டோருக்கான வீட்டுத்திட்டம் போன்ற திட்டங்களுக்கான நிதிகள் கிடைக்கப்பபெறாமையினால் குறித்த திட்டங்கள் இடை நடுவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

எனவே குறித்த திட்டங்களுள் உள்ளீர்க்கப்பட்ட பயனாளிகள் மிகுந்த சிரமங்களுக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த வருட இறுதியில் இடம்பெற்ற துணுக்காய் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்திலும் இந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைகள் தொடர்பாகப் பேசப்பட்டது.

அதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் இந்த வீட்டுத்திட்டப் பிரச்சினைகள் தொடர்பில் தெரிவிக்கப்பட்டதாகவும், நாமல் ராஜபக்ஷ ஆறு மாதகாலத்திற்குள் குறித்த வீட்டுத்திட்டங்கள் தொடர்பான உதவிகளை பெற்றுத் தருவதாக கூறியிருந்ததாக கடந்த கூட்டத்தின் அறிக்கையும் சுட்டிக்காட்டுகின்றது.

இந்த மக்களுக்கு பொறுப்பு வாய்ந்தவர்கள் வாக்குறுதி வழங்கியிருந்தும், அவ்வாறு வழங்கப்பட்ட வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இந்நிலையில் தற்போதும் மக்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றனர். இதை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவரின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றேன் என்றார் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இந்தியாவின் அழுங்குப் பிடியிலிருந்தும், அதை நிறைவேற்றுவோம் என்று இலங்கை அளித்துள்ள வாக்குறுதியிலிருந்தும் ராஜபக்ச அரசு தப்பவே முடியாது” – எச்சரிக்கிறார் இரா.சம்பந்தன் !

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றக் கோரும் இந்தியாவின் அழுங்குப் பிடியிலிருந்தும், அதை நிறைவேற்றுவோம் என்று இலங்கை அளித்துள்ள வாக்குறுதியிலிருந்தும் ராஜபக்ச அரசு தப்பவே முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டியுள்ளார்

அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடனான காணொளிக் கலந்துரையாடலில் தெரிவித்திருந்தார். இது தொடர்பில் இரா.சம்பந்தனிடம் கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையும் இந்தியாவும் ஒருமித்துச் செயற்படுவதை நாங்கள் வரவேற்கின்றோம். பல துறைகளில் ஒருமித்துச் செயற்படுவதற்கு இலங்கைப் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் சம்மதமும் தெரிவித்திருக்கின்றார்கள். இதுவும் வரவேற்க வேண்டிய விடயம்.

விசேடமாக இரு நாட்டு மக்களுக்கிடையில் தொடர்புகளை ஏற்படுத்துவதற்குப் பல வசதிகளை இரு நாட்டு அரசுகளும் செய்துள்ளன. அதுவும் வரவேற்க வேண்டிய விடயம்.

இலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைப் பொறுத்த வரையில் நீதியின் அடிப்படையில் – சமத்துவத்தின் அடிப்படையில் – கௌரவத்தின் அடிப்படையில் – சமாதானத்தின் அடிப்படையில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் என்பதே இந்திய அரசின் தொடர்ச்சியான கருத்தாகவும் வலியுறுத்தலாகவும் உள்ளது.

இந்தியாவின் இந்தக் கருத்தை தற்போதைய பாரதப் பிரதமரும் முன்னாள் பிரதமர்களும் தற்போதைய அரசும் முன்னாள் அரசுகளும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்துள்ளன.

இலங்கை தமிழ் மக்கள் தொடர்பில் இந்தியாவின் இந்த நிலைப்பாட்டை இலங்கை அரசு நிறைவேற்றியே ஆகவேண்டும்.

அதை நிறைவேற்றுவதற்கு நல்லிணக்கப் பொறிமுறை ஒன்று ஏற்படுத்தப்பட வேண்டும். அதேவேளை, அரசமைப்பில் உள்ள சகல விடயங்களும் நிறைவேற்றப்பட வேண்டும்.

இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் பிரகாரம் உருவாக்கப்பட்ட அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தில் பல விடயங்கள் இன்னமும் நிறைவேற்றப்படாமல் இருக்கின்றன. அவை முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும்.

இதனூடாகத் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு ஒரு நிரந்தரமான – உறுதியான தீர்வு ஏற்படுத்தப்பட வேண்டியது மிகவும் அத்தியாவசியமானது. இதைப் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை அரசிடம் மீண்டும் இடித்துரைத்துள்ளார்.

அதேவேளை, இலங்கை அரசும் அரசமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நிறைவேற்றுவோம் என்று இந்திய அரசிடம் மீண்டும் வாக்குறுதியளித்துள்ளது. எனவே, என்ன நடக்கப் போகின்றது என்பதை நாம் பொறுத்திருந்து பார்ப்போம்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது .

மன்னாரில் பெண்ணிடம் முத்த இலஞ்சம் கோரிய கிராமசேவகர் கைது !

மன்னார் முசலி பிரதேச செயலக பிரிவில் உள்ள முத்தரிப்புத்துரையை சேர்ந்த பெண் ஒருவரிடம் ஆவணம் ஒன்றை வழங்குவதற்கு பாலியல் இலஞ்சம் கோரிய கிராம சேவகர் ஒருவர் நேற்று (29.09.2020) இரவு சிலாவத்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,

முத்தரிப்பு துறை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் ஆவணம் ஒன்றை கிராம சேவகரிடம் கோரியிருந்த நிலையில் குறித்த கிராம சேவகர் பிரதேச செயலகத்தில் நாளைய தினம் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என்பதால் பெண்ணை கஷ்டப்படுத்த கூடாது என்பதற்கான தான் வீட்டிலேயே கொண்டு வந்து தருவதாக தெரிவித்ததுடன் ஆவணத்துடன் முத்தம் ஒன்றும் தருவதாக தெரிவித்துள்ளார்.

குறித்த விடயத்தை உடனடியாக முசலி பொலிஸாருக்கு பெண் கொண்டு சென்றதை தொடர்ந்து குறித்த கிராம சேவையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முத்தரிப்பு துறை மேற்கு கிராம அலுவலராக கடமையாற்றும் கிராம அலுவலகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த கிராம அலுவலர் ஆவணம் ஒன்றை உறுதிப்படுத்துவதற்காக பாலியல் இலஞ்சம் கோரியதாக மனித உரிமை ஆணைக்குழு, மற்றும் பொலிஸ் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து நேற்று மாலை சிலாவத்துறை பொலிசாரால் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணைகளை சிலாவத்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

“திலீபன் ஒரு கொலையாளி , எனது தம்பியையும் அவர்தான் கடத்தி கொன்றார்” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

தியாகி திலீபன் ஒரு கொலையாளி என்றும் அவரை வைத்து அரசியல் செய்கிறார்கள் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

பத்திரிகைகளின் செய்தி ஆசிரியர்கள் மற்றும் தொலைக்காட்சி, வானொலி நிலையங்களின் செய்தி பணிப்பாளர்களுடன் அலரி மாளிகையில் இன்று (29.09.2020) இடம்பெற்ற சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவிடம் ‘வடக்கு கிழக்கில் ஹர்த்தால் அனுஷ்டிப்பு மற்றும் உண்ணாவிரதம் குறித்து பிரதமரிடம் கேள்வியெழுப்பட்டது.

இதற்கு பதிலளித்த டக்லஸ் தேவானந்தா, திலீபன் ஒரு கொலையாளி. அவருக்கு நினைவேந்தல் நடத்த வேண்டியதில்லை. எனது தம்பியையும் அவர்தான் கடத்தி கொன்றார். அவரை வைத்து அரசியல் செய்கிறார்கள் என கூறினார்.

 

இலங்கையில் மாடுகளை இறைச்சிக்காக வெட்டுவதை தடைசெய்வது தொடர்பான பிரதமர் மஹிந்தவின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி !

இறைச்சிக்காக மாடுகளை வெட்டுவதை தடை செய்வது தொடர்பாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்த யோசனைக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெற்றது. இதன்போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்மொழிந்த யோசனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த செப்டெம்பர் 8ஆம் திகதி, பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவினால் முன்மொழியப்பட்ட குறித்த திட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக்கூட்டத்திலும் அனுமதி வழங்கப்பட்டது.

அத்துடன், நாட்டில் மாடுகளை வெட்டுவதற்கு பதிலாக ஏனைய நாடுகளில் இருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதற்கான திட்டத்தையும் பிரதமர் முன்வைத்திருந்தார்.

இந்நிலையிலேயே மஹிந்தவினால் முன்மொழியப்பட்ட, மாடுகளை வெட்டுவதை தடை செய்வது தொடர்பான திட்டத்திற்கு அமைச்சரவையும் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.