உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மீதும் தாக்குதல் !

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மீது தாக்குதல்

ஒரு குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் அவர் காயமடைந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

கொழும்பு கங்காராமவிற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது

மேலும் கூட்டத்தை கலைக்க பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது.

காலிமுகத்திடலில் நேற்று இடம்பெற்ற கலவரத்தின்போது முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுடன் பிரதிப் பொலிஸ் மா அதிபர் இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பதிவாகியுள்ளது.

அத்தோடு, தாக்குதலை தடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அவர் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

கொளுத்தப்பட்டது பசிர்ராஜபக்ஷவின் வீடு – வேடிக்கை பார்க்கும் விசேட அதிரடிப்படையினர் !

கம்பஹா மாவட்டம் மல்வானையில் உள்ள முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு சொந்தமான வீட்டின் மீது இன்று முற்பகல் பிரதேச மக்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

அரசுக்கு எதிராக அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் நடத்தியமையை தொடர்ந்து நேற்றும் இன்றும் பொதுமக்கள் முக்கிய அரசியல் பிரமுகர்களின் வீடுகள் மீது தாக்குதல் நடாத்தி வருகின்றனர்.

இந்தவகையில் பசிலின் வீடும் தற்பொழுது முற்றுகையிடப்பட்டுள்ளது. பசிலின் வீட்டுக்கு சென்ற மக்கள் கல், மற்றும் பொல்லுகளை பயன்படுத்தி தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் நடைபெற்ற போது, விசேட அதிரடிப்படையினர் அங்கு இருந்த போதிலும் மக்களை தடுக்க அவர்கள் நடவடிக்கை எதனையும் எடுக்கவில்லை.

அரச பணத்தை தவறான முறையில் பயன்படுத்தி, மல்வனை பிரதேசத்தில் மிகப் பெரிய காணி ஒன்றை கொள்வனவு செய்து, அதில் ஆடம்பர வீடு மற்றும் நீச்சல் குளத்தை நிர்மாணித்தார் என்ற குற்றச்சாட்டில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ச மற்றும் அவரது உறவினர் திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக கம்பஹா மேல் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்ககது.

நேற்றைய ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான வன்முறையில் சிறைக்கைதிகளும் பங்கேற்பு ? – 58 கைதிகள் மாயம் !

கொழும்பில் நேற்றைய தினம் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களில் கைதிகளின் பங்கேற்பு குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலங்கை சிறைச்சாலைகள் திணைக்களம் விளக்கமளித்துள்ளது.

வட்டரெக்க திறந்தவெளி சிறைச்சாலை முகாமில் உள்ள கைதிகளும் தாக்குதல் நடத்தியவர்களில் ஒரு பகுதியினர் என்று கூறப்படும் செய்திகளை சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க மறுத்துள்ளார்.

சிறைச்சாலை திணைக்களத்தின் வழமையான புனர்வாழ்வு வேலைத்திட்டத்தின் கீழ் 3 கட்டுமான தளங்களில் புனர்வாழ்வு பணிகளுக்காக வட்டரெக்க சிறைச்சாலையில் இருந்து 181 கைதிகள் சிவில் உடையில் கொண்டுசெல்லப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த கைதிகள் நேற்று கொள்ளுப்பிட்டி, ராஜகிரிய மற்றும் பத்தரமுல்லை ஆகிய இடங்களில் உள்ள இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு மீண்டும் சிறைச்சாலைக்கு திரும்பும்போது பொதுமக்களால் தாக்கப்பட்டதாக சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.

நேற்று மாலை தலஹேன பகுதியில் கைதிகளை ஏற்றிச் சென்ற பேருந்தில் இருந்து பொதுமக்கள் அப்புறப்படுத்தியதாகவும், அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாகவும் அவர் கூறினார்.

இலங்கை பொதுஜன பெரமுன (SLPP) தலைமையிலான கொழும்பில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல்களில் கைதிகள் அங்கம் வகித்தவர்கள் என நினைத்து பொதுமக்கள் இவ்வாறு செயற்பட்டுள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.

புனர்வாழ்வுத் திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டுமானப் பணிகளுக்கு அனுப்பப்பட்ட 181 கைதிகளில் 58 கைதிகள் தற்போது காணாமல் போயுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கைதிகள் யாரேனும் உதவிக்காக தம்மை அணுகினால் அவர்களுக்கு உதவுமாறும் அவர்களை அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறும் சந்தன ஏக்கநாயக்க பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.

இராணுவ ஆட்சிக்குள் இலங்கை ? – எச்சரிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி !

தற்போதைய சூழ்நிலையில் நாட்டில் இராணுவ ஆட்சி அமுல்படுத்தப்படும் என இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரித்துள்ளார்.

 

ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த சில வாரங்களாக அலரிமாளிகைக்கு அருகாமையிலும், கொழும்பு காலிமுகத்திடலிலும் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பொதுமக்கள் மீது பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் நேற்று தாக்குதல் நடத்தியதை அடுத்து நாட்டில் அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் ருவிட்டரில் பதிவிட்டுள்ள இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி பொதுமக்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

“நீதி மற்றும் ஜனநாயக ஆட்சிக்காக அற்புதமான போராட்டத்தை நடத்தி வரும் அனைத்து குடிமக்களுக்கும் நான் வேண்டுகோள் விடுக்கிறேன், இராணுவ ஆட்சிக்கு வழி வகுக்கும் வகையில் வன்முறையைத் தூண்டுவதற்கு நாசகாரர்கள் பயன்படுத்தப்படலாம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். தயவு செய்து இதை நிறுத்த உங்கள் திறமையைப் பயன்படுத்தவும்” என பதிவிட்டுள்ளார்.

இலங்கையை விட்டு தப்பிக்க முயலும் பிரமுகர்கள் – கட்டுநாயக்கவில் போராட்டக்காரர்கள் தீவிர கண்காணிப்பு !

கட்டுநாயக்க விமான நிலையப் பகுதியில் போராட்டக்காரர்கள் குழுவொன்று சோதனைப் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பிரமுகர்கள் குழுவொன்று நாட்டை விட்டு வெளியேறத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படும் நிலையில் அவர்களது அடிச்சுவடுகளைப் பின்பற்றுவதற்காக போராட்டக்காரர்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
விமான நிலையத்தை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்து வருவதாகவும் தெரிய வருகிறது.

திருகோணமலை கடற்படை தளத்தில் பதுங்கிய ராஜபக்ஷ குடும்பம் – சுற்றி வளைத்து பொதுமக்கள் போராட்டம் !

திருகோணமலையில் உள்ள கடற்படை முகாமை முற்றுகையிட்டு தற்போது பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்பத்தினர் திருகோணமலை கடற்படை தளத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் அங்கு கூடியுள்ளனர்.

இதே நேரம் நாமல் ராஜபக்சவின் மனைவி மற்றும் மகன் உலங்குவானூர்தியில் {ஹெலிகாப்டரில்} தப்பிச் செல்லும் காணொளி காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

நாமல் ராஜபக்சவின் மனைவி லிமினி மற்றும் அவரது மகன் கேசரா ஆகியோர் இன்று காலை கொழும்பில் இருந்து திருகோணமலைக்கு தப்பிச் சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

“அரச பயங்கரவாதம், இன்று தன் சொந்த மக்கள் மீதே அகோரமாக பாய்ந்துள்ளது.” – மனோகணேசன் விசனம் !

இந்நாட்டில் 2005ம் வருடத்தில் இருந்து தலைவிரித்தாடிய ராஜபக்ச அரச பயங்கரவாதம், உச்ச கட்டத்தை அடைந்து, இன்று தன் சொந்த மக்கள் மற்றும் வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய மக்கள் மீதே அகோரமாக பாய்ந்துள்ளது.

அதன்மூலம் ராஜபக்சர்களின் கோர பயங்கரவாத முகம், சகோதர சிங்கள மக்கள் மத்தியில் இன்று அம்பலமாகியுள்ளது என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி மனோ கணேசன் மேலும் கூறியுள்ளதாவது,

உலகின் மிக அமைதியான 31-நாள் கொழும்பு காலிமுக திடல் போராட்டம், பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையில் இருந்து கிளம்பி வந்த அரச பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது. இதனால், இனி இலங்கையர்களின் கோ-ஹோம்-கோதா, கோ-ஹோம்-ராஜபக்ச (GoHomeGota & GoHomeRajapaksasa) என்ற கோஷங்கள், இலங்கையை நோக்கிய சர்வதேச சமூகத்தின் கோஷமாகவும் மாற வேண்டும்.

கொழும்பில் இருக்கின்ற மிகப்பல அல்லது அனைத்து வெளிநாட்டு ராஜதந்திரிகளும், கொழும்பு காலிமுகதிடல் போராட்டத்தை, சமகாலத்தில் உலகில் நடைபெற்ற மிக அமைதியான, ஒழுக்கமான போராட்டம் என தனிப்பட்ட முறையிலும், பகிரங்கமாகவும் கூறி இருந்தார்கள். இந்நிலையில் இப்போராட்டம் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம், இன்று இலங்கையின் வெட்கமற்ற அரச பயங்கரவாதம் மீண்டுமொருமுறை அம்பலமாகி உள்ளது.

முடிவுக்கு வரும் ராஜபக்ஷக்களின் ஆட்சி – அலரி மாளிகையை விட்டு வெளியேறும் மகிந்த !

பிரதமர் மகிந்த ராஜபக்ஸவின் உத்தியோகபூர்வ  ராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, ஏற்றுக்கொண்டுள்ளார். அதனையடுத்து மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியிலிருந்து விலகுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ சற்று முன்னர் அலரிமாளிகையிலிருந்து வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

உடைத்து வீழ்த்தப்பட்டது டி.ஏ.ராஜபக்ச நினைவுத் தூபி !

ஹம்பாந்தோட்டை மடமுலனவில் உள்ள டி.ஏ.ராஜபக்ச நினைவுத் தூபி ஆர்ப்பாட்டக்காரர்களால் இடித்தழிக்கபட்டுள்ளது.

கொழும்பு காலி முகத்திடலில் இன்று இடம்பெற்ற போராட்ட வன்முறை சம்பவங்களை தொடர்ந்து நாட்டில் பல இடங்களில் கலவரங்கள் இடம் பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

சேதப்படுத்தப்பட்ட டி. ஏ. ராஜபக்ச நினைவுச் சின்னம்!

இலங்கையில் தொடரும் பதற்றம் – மேலும் இருவர் பலி !

வீரகெடிய பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும் 8 பேர் காயமடைந்து வீரகெடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

படுகாயமடைந்த சிலர் வீரகெடிய வைத்தியசாலையில் இருந்து மேலதிக சிகிச்சைக்காக தங்காலை வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வீரகெடிய பிரதேச சபைத் தலைவரின் வீட்டுக்கு தீ வைப்பதற்காக சிலர் வருகை தந்துள்ளனர்.

இதன்போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.