உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

ஈராக் மற்றும் சிரியாவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஐ.எஸ் தீவிரவாதிகள் செயல்பாட்டில் உள்ளனர் ! – ஐ.நா

ஈராக் மற்றும் சிரியாவில் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஐ.எஸ் தீவிரவாதிகள் செயல்பாட்டில் உள்ளனர் என்று ஐ.நா. தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூறும்போது, “ஐ.எஸ் தீவிரவாதிகள் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் சிரியா மற்றும் ஈராக்கில் சிறு குழுக்களாக இயங்கத் தொடங்கிள்ளனர். சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான தீவிரவாதிகள் இவ்விரு நாடுகளில் செயல்பட்டு வருகின்றனர்.

கரோனா பரவலால் உலகமே முடங்கி இருக்கும் நேரத்தில் ஆள் சேர்ப்பது, நிதி திரட்டல் போன்ற நடவடிக்கைகளில் எப்படி அவர்கள் ஈடுபடுகிறார்கள் என்பது தெரியவில்லை. எனினும் ஐஎஸ் தீவிரவாதிகள் மீண்டும் தலையெடுக்கத் தொடங்கியுள்ளது அச்சுறுத்தல்தான்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகளின் எழுச்சியால் பெரும் குழப்பம், அமைதியின்மை ஏற்பட்டது. இந்த நிலையில் இராக்கிலிருந்து 2014-ம் ஆண்டில் அமெரிக்கப் பாதுகாப்புப் படையினர் வாபஸ் பெற்றுக்கொண்டனர். அங்கு ஐஎஸ் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகமானது. இதையடுத்து ஐ.எஸ் தீவிரவாதிகளை ஒடுக்க ஈராக் அரசு நடவடிக்கையில் ஈடுபட்டது.

இதனைத் தொடர்ந்து ஈராக் நாட்டுக்கு உட்பட்ட மோசூல் உள்ளிட்ட பகுதிகளைக் கைப்பற்றிய ஐ.எஸ்.பயங்கரவாதிகளுக்கு எதிராக உள்நாட்டுப் போர் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் 2017 ஆம் ஆண்டு போரில் வெற்றி பெற்றதாக ஈராக் அரசு அறிவித்தது.

அது போல சிரிய அதிபர் ஆசாத் அரசுப் படைகளால்  ஐ.எஸ் படைகள் பெருமளவு தோற்கடிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

 

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு பின்னால் எமது மக்கள் சென்றால் இன்னும் தமிழ்ச் சமூகம் குழி தோண்டிப் வைக்கப்படுவார்கள்.! – கருணாஅம்மான்

வடக்கு கிழக்கு மக்கள் இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பை தூக்கி வீசியிருக்கிறார்கள். இதனை மக்கள் நன்கு புரிந்து கொள்ள வேண்டும். இன்னும் தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு பின்னால் எமது மக்கள் சென்றால் இன்னும் தமிழ்ச் சமூகம் குழி தோண்டிப் வைக்கப்படுவார்கள் என தமிழர் மகா சபை சார்பில் கடந்த 9 ஆவது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணாஅம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் குறிப்பிட்டார்.

நடைபெற்று முடிந்த தேர்தல் தொடர்பாக அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்திருந்த தமிழர் மகா சபை சார்பில் பாராளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் தனது ஆதரவாளர்களை நேற்று (26.08.2020) மாலை சந்தித்து கலந்துரையாடிய வேளை மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும், எனது விருப்பு வாக்கினை விட குறைந்த வாக்குகளை பெற்ற சம்பந்தன் உள்ளிட்ட குழுவினர் பாராளுமன்றம் சென்றுள்ளதாகவும் அம்பாறை மாவட்ட மக்களின் எதிர்காலத்தை கருத்திற் கொண்டு மக்களுடன் இணைந்து தொடரந்தும் பயணிக்க உள்ளதாக கூறிய அவர்  தனது கருத்தில், அம்பாறை மாவட்டத்தில் பாரிய சவால் எதிர்காலத்தில் எனக்கு இருக்கின்றது. நான் வெற்றி பெற்று பாராளுமன்றம் செல்லவில்லை என நினைக்க வேண்டாம். நான் வெற்றி பெற்றுள்ளேன். இதற்காக தொடர்ந்து உழைத்த புலம்பெயர் வாழ் சொந்தங்கள் இளைஞர்கள் இந்த வெற்றிக்கு பெரும் பங்காற்றி உள்ளனர். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க வேண்டிய தேவை இருக்கின்றது நான் வெற்றி அடைந்தவுடன் அரசுடன் கதைத்து அமைச்சுக்கள் ஊடாகவும் அந்த வளங்களை பெற்றுக் கொண்டு மக்களுக்கு வழங்வேன் என இவ்இடத்தில் கூறுகின்றேன்.

மேலும், கல்முனை பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தும் முயற்சி தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளேன். அத்துடன் எமது கட்சியின் கிளைகளை அம்பாறை உள்ளிட்ட பகுதிகளில் நிறுவ ஏற்பாடு செய்துள்ளேன். எதிர்காலத்தில் எமது மக்களுக்கு நல்ல செய்தி வரும் எனவும் தெரிவித்தார்.

பிளவுபட்ட இலங்கையை விக்னேஸ்வரன் ஊக்குவிக்கின்றார் ! – பாராளுமன்றில் மனுசநாணயக்கார.

கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் உரையாற்றியிருந்த விக்னேஸ்வரன், தமிழர்கள் பூர்வீக குடிகள் என்றும், தமிழர்களின் இருப்புத் தொடர்பிலும் விளக்கமாக உரையாற்றியிருந்தார். இந்நிலையில் இன்று பாராளுமன்றம் கூடிய போது நாடாளுமன்றத்தின் கன்னியுரையில் விக்னேஸ்வரன் ஆற்றிய உரை தொடர்பில் ஆராயப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தென்னிலங்கையில் காரசாரமான விவாதங்கள் எழும்பின. இதனையடுத்து ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பின மனுசநாணயக்கார விக்னேஸ்வரனின் உரையை நாடாளுமன்ற குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்றைய தினம் நாடாளுமன்றம் கூடிய போது, மனுசநாணயக்கார வெளியிட்ட கரிசனைகளை சபாநாயகர் நிராகரித்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இன்று நாடாளுமன்றம் கூடியவேளை விக்னேஸ்வரனின் கருத்துக்களுக்கு பதிலளிக்கவேண்டும் என கோரிய மனுசநாணயக்கார பிளவுபட்ட இலங்கையை விக்னேஸ்வரன் ஊக்குவிக்கின்றார் என தெரிவித்தார்.

எனினும் இதனை நிராகரித்த சபாநாயகர் விக்னேஸ்வரனின் உரை குறித்து ஆராயப்படும் என தெரிவித்தார். எனினும் சபாநாயகரின் நிலைப்பாட்டை ஏற்க மறுத்த நாணயக்கார விக்னேஸ்வரனின் நிலைப்பாட்டிற்கு தனது எதிர்ப்பை வெளியிட்டார்.

இதேவேளை இதன்போது உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் கருத்து சுதந்திரத்தினை நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களும் மதிக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அதேபோன்று, அவர் சபாநாயகரின் நிலைப்பாட்டை வரவேற்றார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

கிழக்கு தொல்லியல் செயலணியில் ஒரு தமிழரை கூட உள்வாங்காதது குறித்து சார்ள்ஸ் நிர்மலநாதன் பாராளுமன்றில் கேள்வி!

தமிழர்களுடைய வரலாறு, கலாசார அடையாளங்கள் என்பன அழிக்கப்பட்டு எதிர்காலத்தில் பௌத்த சிங்கள மயமாக்கலை ஏற்படுத்தவா..? தமிழர்கள் இல்லாத கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமையை பாதுகாக்கும் செயலணி அமைக்கப்பட்டுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

புதிய அரசாங்கத்தின் இடைக்கால கணக்கறிக்கை இன்று (வியாழக்கிழமை) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இதனையடுத்து, இடம்பெற்று வரும் விவாதத்தில் கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பாக கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமையை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் செயலணியொன்ற ஸ்தாபிக்கப்பட்டது. 12 பேர் அங்கம் வகிக்கும் அந்த செயலணியில் தமிழர் ஒருவர்கூட உள்வாங்கப்பட்டிருக்கவில்லை. அதனையடுத்து, அதற்கு தமிழர் தரப்பில் எதிர்ப்பு வெளியிடப்பட்டதுடன், குறித்த செயலணியில் தமிழர்களும் உள்வாங்கப்பட வேண்டும் என தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டது.

இந்த நிலையில், கடந்த பொதுத் தேர்தலின் பின்னர், அந்த செயலணியின் உறுப்பினர்களாக மேலும் நால்வர் உள்வாங்கப்பட்டுள்ளனர். எனினும் அவர்களிலும் தமிழர்கள் ஒருவர்கூட உள்வாங்கப்படவில்லை. கிழக்கு மாகாண தொல்பொருள் மரபுரிமையை பாதுகாக்கும் செயலணியில் தமிழர் ஒருவர்கூட ஏன் நியமிக்கப்பவில்லை என நான் ஜனாதிபதியிடம் கேட்க விரும்புகிறேன்.

கிழக்கு மாகாணத்தின் மரபுரிமைகளை பாதுகாக்க பௌத்த மதகுருமார் அடங்கிய செயலணி உருவாக்கப்பட்டது, தமிழர்களுடைய வரலாறு, கலாசார அடையாளங்கள் என்பன அழிக்கப்பட்டு எதிர்காலத்தில் பௌத்த சிங்கள மயமாக்கலை ஏற்படுத்தவா..? என கேட்க விரும்புகிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் 30 க்குப் பின்னரான இரண்டு மாதங்களில் இலங்கையில் கொவிட் -19 தொற்று எதுவும் பதிவாகவில்லை !

தற்போது, வெளிநாடுகளில் இருந்து இலங்கை வரும் வெளிநாட்டில் உள்ள இலங்கையர்கள் மட்டுமே கொவிட்-19 வைரஸ் நோய்த் தொற்றுக்குள்ளாக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் ஏப்ரல் 30 க்குப் பின்னரான இரண்டு மாதங்களில் இலங்கையில் கொவிட் -19 தொற்று எதுவும் பதிவாகவில்லை. இன்றைய நிலவரப்படி, 65 தனிமைப்படுத்தல் மையங்களில் 7058 பேர் தனிமைப்படுத்தலில் உள்ளனர், மேலும் தனிமைப்படுத்தல் பரிசோதனைக்கு பின்னர் மொத்தம் 32,000 க்கும் அதிகமானோர் தங்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர். இதேபோல், இன்றுடன் 26,000 க்கும் மேற்பட்ட இலங்கை வெளிநாட்டவர்கள் இன்று வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

ஆயினும் கூட, நாம் சமூகத்தில் வைரஸ் தொற்றை வெகு விரைவில் ஒழிப்பது கடினம். மேலும் நாம் இன்னும் நமது சுகாதார நடைமுறைகளைத் தொடர வேண்டும், இருப்பினும் சில பிரிவுகள் அதன் நோய் தொற்று பரவுவதை புறக்கணிப்பதாக தெரிகிறது. அது நமக்கு ஏற்படும் பொறுப்பு. எங்கள் பங்கில் ஏதேனும் சிறிய குறைபாடு ஏற்பட்டால், இந்த வைரஸ் நோய் பரவக்கூடும், ´எனவே நேற்று (26) பிற்பகல் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது கொவிட் -19 பரவலை தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவரும் பாதுகாப்பு தலைமை பிரதானியும், இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த சந்திப்பானது சுகாதார அமைச்சர் திருமதி பவித்ரா வன்னி ஆராச்சி மற்றும் கொவிட் – 19 மைய தலைவரும், பாதுகாப்பு தலைமை பிரதானியும் மற்றும் இராணுவ தளபதியுமான லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றதுடன் மருத்துவ நிபுணர் மற்றும் சுகாதார சேவை பணிப்பகத்தின் பதில் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ். ஸ்ரீதரன் மற்றும் சில நிபுணர்கள் மற்றும் பிற பங்குதாரர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் இந்த சந்திப்பில், கொரோனா தொற்று பரவல் தடுப்பு தொடர்பான புதுப்பிப்புகள் சாத்தியமான புதிய கருத்துக்கள் மற்றும் நாட்டில் நோய் தொற்று பரவலை தடுப்பு தொடர்பாக பல கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன.

லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நொப்கோ பணிக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிதிகளை வரவேற்றதோடு, குறித்த சந்திப்பின் கருத்துக்களை தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பில் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் தொடர்ந்து இலங்கைக்கு வருவதை மையமாகக் கொண்டு கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன. ´தற்போது 26,000 மற்றும் அதற்கு அதிகமான வெளிநாட்டவர்கள் இலங்கை வந்துள்ளதுடன், மேலும் 55,000 பேர் பிற மூலோபாய தேவைகள் ஏற்ப திருப்பி அனுப்பப்பட உள்ளனர். நடைமுறையில், மேலும் வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் தனிமைப்படுத்தலில் இருக்கும் அனைத்து தனிமைபடுத்தல் நிலையங்கள் மற்றும் ஹோட்டல்களுக்கும் பாதுகாப்பு வழங்கும் நோக்கத்தோடு, ஒவ்வொரு தனிமைபடுத்தல் நிலையங்களில் இராணுவம் ஒரு மருத்துவ அதிகாரியை நியமிக்கின்றது,, ´என்று இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

இந்த கொரோனா நோய் தொற்றின் தேசிய பணியின் செயல்திறனில் இராணுவம் பெற்ற மகத்தான வழிகாட்டுதல், ஆதரவு மற்றும் உத்வேகம் ஆகியவற்றைப் பாராட்டிய இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா ஜனாதிபதி, பிரதமர், சுகாதார அமைச்சர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தொற்றுநோயியல் நிபுணர்கள், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். தளபதிகள், மருத்துவ அதிகாரிகள், பொது சுகாதார ஆய்வாளர்கள், சுகாதார அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகள் மற்றும் அனைத்து முதன்மை மற்றும் தரை பங்குதாரர்கள். ´அந்த உறுதியான தொலைநோக்குத் தலைமை ஏற்படவில்லை என்றால், இது இராணுவத்திற்கும் நாட்டிற்கும் ஒரு புதிய அனுபவமாக இருந்ததால் எங்களுக்கு ஒரு கடினமான நேரம் கிடைத்திருக்கும்,´ என்று அவர் கூறினார்.

சுகாதார அமைச்சர் நிலவரங்களை விரிவாகக் கூறி, தொற்றுநோயை எதிர்கொண்டு நாட்டை பாதுகாப்பானதாகவும், நிலையானதாகவும் மாற்றியமைத்த ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பணிக்குழுவுக்கு நன்றி தெரிவித்தார். ´கொடிய வைரஸ் பரவுவதை திறம்பட தணித்த ஒரு தேசமாக இலங்கை உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்க முடியும்,´ என்று அவர் குறிப்பிட்டார். அரசுத் துறையில் மேற்கொள்ளப்படும் பி.சி.ஆர் சோதனைகள் குறித்து, சுகாதார சேவைகள் பதில் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் எஸ்.ஸ்ரீதரன் விளக்கினார். அரசுத் துறை இதை ஒரு நாளைக்கு 2000 ஆகவும், தனியார் துறை ஒரு நாளைக்கு 1000 சோதனைகளாகவும் அதிகரித்தது. இதற்கிடையில், சமூகத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக சமூகத்தில் எழுமாற்று சோதனைகளும் நடத்தப்படுகின்றன என்று அவர் கூறினார்.

அரசியல் அமைப்பு திருத்தங்கள் ஊடாக தமிழ் மொழிக்கான உரிமையை இல்லாது செய்வதற்கு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன ! – ஹர்ஷ டி சில்வா

 

19ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டம் இரத்து செய்யப்பட்டு 20ஆவது திருத்தச் சட்டம் உருவாக்கப்படும் என கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்த விடயமே தற்போது இலங்கை அரசியலில் பேசும் பொருளாக மாறியுள்ளது.  இந்நிலையில் அரசியல் அமைப்பு திருத்தங்கள் ஊடாக தமிழ் மொழிக்கான உரிமையை இல்லாது செய்வதற்கு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், 19ஆவது அரசியல் அமைப்பில் திருத்தம் செய்ய முன்னெடுக்கப்படும் முயற்சியில் 13ஆவது திருத்தம் உள்ளிட்ட மேலும் சில அரசியல் அமைப்புக்களையும் திருத்தம் செய்வதன் ஊடாக தமிழ் மொழிக்கான உரிமையை இல்லாது செய்வதற்கு சூழ்ச்சிகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கையில் மொழி அடிப்படையிலான பிரச்சினைகள் அதிகம் எழுந்துள்ள நிலையில், தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் தமிழ் மற்றும் சிங்கள மொழியில் நிர்வாகம் செய்வதற்கான வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதனைவிடுத்து தற்போதைய சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ்மொழி பயன்படுத்தப்படும் சந்தர்ப்பத்தை இல்லாதொழிக்கக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சிங்கள பத்திரிகையொன்றில் காணப்பட்ட ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரது நேர்காணல் இனவாதத்தை தூண்டும் விதத்தில் இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக வடக்கில் எவ்வாறு தமிழ் மொழியில் வழக்கு விசாரணை செய்ய முடியும்? வடக்கில் சிங்கள் மொழியிலேயே வழக்கு விசாரணை செய்யப்பட வேண்டும் என ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளதோடு, 16ஆவது திருத்தத்தை நீக்க வேண்டும் என கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, தற்போது முன்னெடுக்கப்படும் திருத்தமானது, 19ஆவது திருத்தத்தில் மட்டுமல்லாது மாறாக 13, 14, 16, 17 மற்றும் 19 ஆகிய அனைத்து திருத்தங்களிலும் திருத்தங்களை முன்னெடுக்கும் மிகப் பெரிய சூழ்ச்சியே அரங்கேற்றப்படுவதாகவும் முன்னாள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கையில் எந்த இனமானாலும் , திருமணம் முடிப்பதற்கான வயதெல்லை 18 ! – பாராளுமன்றத்தில் முதலாவது தனிநபர் பிரேரணை .

9 ஆவது பாராளுமன்றத்தில் முதலாவது தனிநபர் பிரேரணையை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரமித்த பண்டார தென்னகோன் சமர்பித்துள்ளார்.

இந்த பிரேரணையை நேற்று (26.08.2020) பாராளுமன்ற செயலாளர் தம்மிக தசாநாயக்கவிடம் கையளித்தாக பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்துள்ளார்.

திருமணம் முடிப்பதற்கான வயதெல்லை 18 ஆக நிர்ணயிப்பது இந்த பிரேரணையின் நோக்கம் என அவர் கூறினார்.

எந்த இனமானாலும் எல்லோருக்கும் பொதுவான சட்டம் என்ற வகையில் இந்த பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த சட்டத்தை வெகுவிரைவில் அமுல்படுத்துவதற்கான அவசியம் தேவையானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“13வது மற்றும் 19வது திருத்தங்களில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனத்தை செலுத்தவேண்டும் ” – அமெரிக்க தூதுவரிடம் இரா.சம்பந்தன்.

அமெரிக்க தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் (Alaina Teplitz) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை நேற்று (26.08.2020) திருகோணமலையில் சந்தித்துள்ளார். தொடர்ந்து இருவருக்குமிடையில் நிகழ்கால இலங்கை அரசியல் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதன்போது 13 மற்றும் 19ஆவது திருத்தங்களில் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் குறித்து விரைவில் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இந்த விடயம் தொடர்பாக சர்வதேச சமூகம் கவனம் செலுத்தவேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்க தூதுவருடனான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே சம்பந்தன் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “13வது மற்றும் 19வது திருத்தங்களில் அவர்கள் மேற்கொள்ளவுள்ள மாற்றங்கள் என்னவென்பது எங்களுக்கு தெரியாது. இந்த விடயம் குறித்து அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளோம். இந்த விடயம் குறித்து சர்வதேச சமூகம் அதிக கவனத்தை செலுத்தவேண்டும்.

நீண்ட கால தேசியப் பிரச்சினைகளுக்கு இன்னமும் தீர்வுகள் காணப்படவில்லை. முன்னைய அரசாங்கம்கூட தனக்குள் ஏற்பட்ட பிளவினால் தீர்வை முன்வைக்க தவறிவிட்டது.

ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா, நோர்வே, இந்தியா போன்ற நாடுகளுக்கு இலங்கை பல வாக்குறுதிகளை வழங்கியிருக்கின்றது.

அரசாங்கம் அவர்களின் ஆதரவுடன் விடுதலைப் புலிகளை தோற்கடித்த போதிலும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு முன்வைக்கப்படவில்லை. இதனை  அமெரிக்க தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளேன்.

நடந்து முடிந்த தேர்தல் தொடர்பாக அமெரிக்க தூதுவருடன் கலந்துரையாடினேன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வடக்கு, கிழக்கில் அடைந்த பின்னடைவுக்கான காரணங்கள் தொடர்பாக நாம் அவர்களுக்கு விளக்கங்களை அளித்தோம்.

தமிழ் கட்சிகள், தேசிய கட்சிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக நடந்துகொண்ட அல்லது மக்கள் மத்தியில் கொடுக்கப்பட்ட உதவிகள்,பண உதவிகள் ஏனைய நடவடிக்கைகள், அத்துடன் விருப்பு வாக்குகள் என்று சொல்லப்படுகின்ற வேட்பாளர்கள் தங்களுடைய வாக்குகளை பெறுவதற்காக முயற்சி செய்ததன் காரணமாக அதிக வாக்குகள் கிடைக்கப் பெறாத காரணத்தினால் கட்சி கடந்த காலங்களைப்போல போதிய ஆசனங்களைப் பெற முடியவில்லை.

கட்சிக்குள் இருக்கின்ற ஒரு சில முரண்பாடுகள் காரணமாக மக்கள் மத்தியிலும் பாரிய பின்னடைவுக்கு காரணமாக இருந்த காரணத்தினால்தான் நாங்கள் கடந்த காலத்தைப்போல பாரிய வெற்றியை அடைய முடியாமல் போய்விட்டது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை.

அதேபோல இது தொடர்பாக எதிர்காலத்தில் கூடிய கவனம் செலுத்தி இந்த குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இரா. சம்பந்தனுக்கு ஏற்பட்டுள்ள திடீர் சுகவீனம் – செல்வம் அடைக்கலநாதன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முக்கிய பொறுப்புக்களில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக கூட்டமைப்பின் பாராளுமன்ற குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் எனக் கூறப்பட்ட நிலையில் தற்போது அக் கூட்டம் கூட்டப்படுவது தாமதப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஏற்பட்டுள்ள திடீர் சுகவீனம்  காரணமாகவே கூட்டமைப்பின் பாராளுமன்ற குழு கூடாது என கூட்டமைப்பின் பங்காளிக் கட்சியான ரெலோவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளர் மற்றும் கொறடா தொடர்பான நிலைப்பாடுகள்  தொடர்பில் பாராளுமன்ற குழு கூட்டத்தில் முடிவெடுத்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பில்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

மேலும் கூறுகையில்,

கூட்டமைப்பின் பேச்சாளராக என்னை நியமிப்பதாக பங்காளி கட்சித் தலைமைகளின் கூட்டத்தின் போதே முடிவு எடுக்கப்பட்டது. எனினும் பாராளுமன்றக் குழு கூட்டத்தின் போதே அது உத்தியோகபூர்வமாக தெரிவு செய்யப்பட வேண்டும்.  அது இன்னும் கூடவில்லை. அதன்போதே தெரிவுகளை மேற்கொள்ள முடியும்.

எனவே உத்தியோகபூர்வமான பேச்சாளர் என்று நான் இப்போது கூறமுடியாது. இந்தவாரம்  பாராளுமன்ற குழுக் கூட்டம் கூடுவதாக இருந்தது. எனினும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனுக்கு சுகவீனம் ஏற்பட்டுள்ளமையால் அது தாமதமாகியுள்ளது. எனவே கூட்டம் இடம்பெறும் போது அந்த தெரிவுகள் இடம்பெறும். அதில் எந்த பிரச்சினையும் இருக்கப்போவதில்லை என்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற ஐக்கிய மக்கள் சக்தி இணக்கம் ?

நிபந்தனைகளின் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து பணியாற்ற கட்சி தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சி நிபந்தனைகள் ஏதும் இல்லாமல் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்கப்படுவதே ஒரு நிபந்தனை என கூறினார்.

மேலும் மாறுபட்ட அரசியல் கருத்துக்களை கொண்டவர்கள் அனைவரையும் ஓரணியில் ஒன்றிணைக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு புதிய தலைவர் நியமிக்கப்பட்டால் ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தியை இணைத்துக்கொள்ள வேண்டும் என்பது மற்ற நிபந்தனை என்றும் ஐக்கிய தேசியக் கட்சியை கட்சியை மறுசீரமைக்க அதிக காலம் தேவைப்படும் என்றும் சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய தேசியக் கட்சி,  பொதுமக்கள் அனுப்பிய செய்தியைப் புரிந்துகொண்டு பிரச்சாரத்தை வலுப்படுத்த ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க வேண்டும் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க கேட்டுக்கொண்டார்.

இதேவேளை பொதுத்தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சக்தியை ஆதரித்த குற்றச்சாட்டில் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சுமார் 60 பேர் குறித்து கருத்து தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது தேவையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பது வருந்தத்தக்கது, இது ஒரு பாரிய குறைபாடு என்றும் குறிப்பிட்டார்.

குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவின் ஒப்புதலுடன் உருவாக்கப்பட்டது என்றும் அதன் அடிப்படையிலேயே அடிமட்ட அரசியல்வாதிகள் இவ்வாறு செயற்பட்டதாகவும் கூறினர்.