உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் உருவாக்கத்துக்கான குழு நியமனம் !

இலங்கை அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் உருவாக்கத்துக்கான சட்ட மூல வரைபை தயார்படுத்த ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

நீதியமைச்சர் அலிசப்ரி,  கல்வி அமைச்சர் பேராசிரியர். ஜி.எல்.பீரிஸ், தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா,  மற்றும் வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன, சக்திவலு அமைச்சர் உதய கம்மன்பில ஆகியோர் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ  தலைமையிலான முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று  ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.

அரசியலமைப்பின் 19வது  திருத்தம்  இரத்து செய்யப்பட்டு 20வது திருத்தம் உருவாக்குவதற்கு    அமைச்சரவை அங்கிகாரம் வழங்கியதை தொடர்ந்து சட்ட வரைபு நடவடிக்கைகளை மேற்கொள்ள ஐவர் அடங்கிய குழு நியமிக்கப்பட்டுள்ளது.

20 ஆம்  திருத்திற்கான சட்ட வரைபை உருவாக்கும் உபகுழுவின் நடவடிக்கைகள் செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து முன்னெடுக்கப்பட்டு ஒக்டோபர் மாதத்திற்கு  முன் திருத்தத்தை நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மூன்றில் இரண்டு பெரும்பான்மை 20வது திருத்தத்தை நிறைவேற்றுவதற்கு முழுமையாக செயற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தில் 11 வீதம் இளைஞர்கள் !

நாளையதினம் இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்தின் முதலாவது கூட்டம் நடைபெறவுள்ள நிலையில் இலங்கையின் 09 வது நாடாளுமன்றம் கிட்டத்தட்ட 11 வீதம் இளைஞர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதாக நாடாளுமன்ற தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவ திணைக்களம் தெரிவித்துள்ளது.

25 முதல் 40 வயதுக்குட்பட்ட இருபத்தைந்து உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதேவேளை 04 உறுப்பினர்கள் 25 முதல் 30 வயதுக்கு உட்பட்டவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

21 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 31 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் அதில் 09 பேர் முதல் முறையாக நாடாளுமன்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக எண்ணிக்கையிலான 67 நாடாளுமன்ற உறுப்பினர்கள் 41-50 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் 54 உறுப்பினர்கள் 51 முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்கள் என்று கூறப்படுகிறது.

கட்சித் தலைவர்களான சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, பட்டாலி சம்பிக்க ரணவக்க, பழணி திகம்பரம், மனோ கணேசன் ஆகியோர் இதில் உள்ளடங்குகின்றனர்.

69 வயதான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உட்பட 37 உறுப்பினர்கள் 61 மற்றும் 70 வயதிற்குட்பட்டவர்களாவர்.

இதேவேளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவரது சகோதரர் சாமல் ராஜபக்ஷ உட்பட ஒன்பது உறுப்பினர்கள் 71 மற்றும் 80 வயதுக்கு இடைப்பட்டவர்கள்.

மேலும் 81-90 வயதுக்கு இடைப்பட்ட வாசுதேவ நானாயக்கார, சி.வி.விக்னேஸ்வரன், இரா.சம்பந்தன் ஆகிய மூன்று உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் உள்ளதாகவும் நாடாளுமன்ற தகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவ திணைக்களம் அறிவித்துள்ளது.

மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானின் மகன் ஜீவன் தொண்டமான் இளம் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதோடு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் அதிக வயதுடையவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.

முடிவெட்டுபவராக மாறிய அதிபர் – நெகிழவைக்கும் செயல்.

தனித்து ஆசிரியப்பணியை ஒரு பணம் ஈட்டும் தொழிலாக மட்டுமே  மேற்கொள்ளாது அதனை ஒரு சேவையாகவே உளமாற எண்ணி செய்யும் ஆசிரியர்கள் உள்ளதாலேயே ஆரோக்கியமான மாணவர் சமுதாயமொன்று இன்னமும் உருவாகிக்கொண்டிருக்கிறது என்பதை மட்டக்களப்பில் கற்பிக்கும் அதிபர் ஒருவர் தன்னுடைய செயல் மூலம் காட்டியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேசத்தில் பின்தங்கிய கிராமமொன்றில் தொடர்ந்து பாடசாலைக்கு வருகை தராத மாணவர்களின் காரணத்தினை அறிந்த ஆசிரியர் சலூன்காரராக மாறிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வாகரைப் பிரதேச செயலாளர் பிரிவில் பின்தங்கிய கட்டுமுறிவு கிராமத்திலுள்ள கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை அதிபர் ஜே.ஜீவனேஸ்வரன் (ஜீவன்) தமது பாடசாலை மாணவர்கள் ஒரு வார காலமாக பாடசாலைக்கு வரவில்லை என்பதால் வீடு தேடிச் சென்று காரணம் கேட்ட போது முடி வெட்டவில்லை. அதனால் பாடசாலைக்கு வரவில்லை.

அத்தோடு முடி வெட்டுவதானால் 20 கிலோ மீற்றர் தொலைவில் இருக்கும் கதிரவெளி கிராமத்திலுள்ள சலூன் கடைக்குப் போக வேண்டும். அதற்கு வசதியுமில்லை என்று மாணவர்கள் கூறினார்கள்.

பாடசாலை வருவதற்கு தலை முடி ஒரு தடையாக இருக்கக் கூடாதென எண்ணிய நல்லுள்ளம் கொண்ட ஆசிரியர் தமது கடமைக்கு அப்பால் முடிவெட்டுபவராக மாறி இந்த மனித நேயப்பணியினை செய்துள்ளார்.

கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாகரை கட்டுமுறிவு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையானது ஆசிரியர் பற்றாக்குறையாக நிலவும் பாடசாலையாகவும், அடிப்படை வசதிகள் குறைந்த பாடசாலையாகவும், வறிய நிலையில் வாழும் மாணவர்கள் கல்வி பயிலும் மிகவும் பின்தங்கிய பாடசாலை என்பது குறிப்பிடத்தக்கது.

 

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலுள்ள மூன்று இயந்திரங்களை சீர்செய்ய 9 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் தேவை – சுலக்‌ஷன ஜயவர்தன

நாடளாவிய ரீதியில் ஏற்பட்ட  மின்சார துண்டிப்பினால் சுமார் 230 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கெரவலப்பிட்டிய மற்றும் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையங்களில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக நேற்று முன்தினம் சுமார் எட்டு மணித்தியாலத்திற்கும் மேலாக நாடாளவிய ரீதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட மின்சார துண்டிப்பின்  காரணமாகவே சுமார் 230 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபை தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் நேற்று முன்தினம் மாத்திரம்,  சுமார் ஆயிரத்து 200 மெகாவோட்ஸ் மின்சாரம் தடைப்பப்பட்டதாகவும் இலங்கை மின்சார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக மின்சார சபையின் ஊடகப் பணிப்பாளர் சுலக்‌ஷன ஜயவர்தன மேலும் தெரிவித்துள்ளதாவது, “பழுதடைந்துள்ள இயந்திரங்களை சீர் செய்வதற்கு சுமார்  9 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகின்றது.

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு மற்றும் அதன் தாக்கம் நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது,  நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலுள்ள மூன்று இயந்திரங்கள் செயழிலந்து காணப்படுகின்றது. அவற்றை சீர் செய்வதற்கு 9 ஆயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் தேவைப்படுகின்றது.

எனினும் அதற்கான நிதி இதுவரை கிடைக்கவில்லை. ஆகவே அரசாங்கம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசன்னமில்லாத இலங்கை வரலாற்றின் முதல் பாராளுமன்ற அமர்வு!

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர்கூட இன்றி நாளை (20.08.2020)(வியாழக்கிழமை) நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.இந்த நிலையில், இலங்கையில் வரலாற்றில் முதன் முறையாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர் ஒருவர்கூட இன்றி இடம்பெறும் முலாவது நாடாளுமன்ற அமர்வாக நாளைய அமர்வு அமையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் முதற்பாராளுன்றில் டி.எஸ்.சேனநாயக்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியின் வெற்றியுடன் தொடங்கி ஒவ்வொரு பாராளுமன்ற தேர்தல்களிலும் கணிசமானளவு பிரதிநிதிகள் இக்கட்சி மூலம் பாராளுமன்றம் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

9ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளை காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

இம்முறை இடம்பெற்ற பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட எவரும் நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்படவில்லை

எவ்வாறிருப்பினும் தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குச் செல்வதற்கு ஒருவருக்கு வாய்ப்பு காணப்பட்டது.

எனினும் பொதுத் தேர்தல் நிறைவடைந்து இரு வாரங்கள் கடந்துள்ள போதிலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய பட்டியல் உறுப்பினர்  குறித்து இதுவரையில் எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்று கட்சியின் பொதுச் செயலாளர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வாரங்களில் இதற்கான தீர்வினைக் காண எதிர்பார்த்துள்ளதாகவும் இறுதி தீர்மானம் எடுத்ததன் பின்னர் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர், கட்சி உறுப்பினர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஸ்திரமானதொரு தீர்மானம் எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

 

கிளிநொச்சியில் சட்டவிரோதமான மண் அகழ்வால் இரணைமடு குளத்திற்கு பாதிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்து வரும் சட்டவிரோத மணல் அகழ்வைத் தடுக்க இராணுவத்தின் உதவியை நாடவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பில் ஊடகவியலாளர்களுடன்(18.08.2020) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிளிநொச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றமை ஊடகங்கள் உட்பட பலரும் தங்களின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.

குறிப்பாக இரணைமடுக் குளத்தின் கீழான சட்டவிரோத மணல் அகழ்வால் குளத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். எனவே இதனைக் கட்டுப்படுத்த இராணுவத்தின் உதவியை பெறவுள்ளதாகவும்  இது தொடர்பில் இன்று புதன்(19) கிழமை கிளிநொச்சி படைகளின் கட்டளைத்தளபதியை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் அரச அதிபர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு, பன்னங்கண்டி, கண்டாவளை, பெரியகுளம், கல்லாறு, தட்டுவன்கொட்டி, ஊற்றுப்புலம், அக்கராயன், கிளாலி, முகமாலை, சோரன்பற்று, புளோப்பளை, மற்றும் பளையின் மேலும் பல பிரதேசங்கள் உட்பட பல இடங்களில் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகிறன்றது.

இதே நேரம் வடமாகாணமெங்கும் மண் அகழ்தல், காட்டு மரங்களை வெட்டுதல் என பல்வேறுபட்ட இயற்கை அழிப்பு நடவடிக்கைகள் வேகமாக இடம்பெறுவதையும்  காணக்கூடியதாகவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

2019ஆம் ஆண்டு தேர்தலுக்காக ரிஷாத்பதியுதீன் அரசநிதியை பயன்படுத்திமை உறுதிசெய்யப்பட்டுள்ளது !

2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக தனது, ஆதரவாளர்களை புத்தளத்திலிருந்து மன்னாருக்கு அழைத்து செல்ல அரச நிதியை பயன்படுத்தியது தொடர்பான முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிரான விசாரணைகளை சி.ஐ.டி.யினர் நிறைவுசெய்துள்ளனர்.

விசாரணையின் மூலம் வெளிப்படுத்தப்பட்ட விடயங்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக சட்ட மாஅதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ரிஷாத் பதியுதீன் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான 222 பஸ்களை பயன்படுத்தி, ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க புத்தளத்திலிருந்த தனது ஆதரவாளர்களை மன்னாருக்கு அழைத்துச் சென்றமை சி.ஐ.டி.யின் விசாரணைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.

மாணவர்கள் புதியதை கற்றுக் கொள்வதற்காக பொருத்தமான கல்வியை பெற்றுக் கொடுப்பது அவசியமாகும் – பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ்

நாட்டில் நடைமுறையிலுள்ள கல்வி முறையில் மாற்றம் மேற்கொள்ளப்படுவது அவசியமெனவும் தற்போது நடைமுறையிலுள்ள கல்வி முறைமையில் குறைபாடுகள் காணப்படுவதால் மாணவர்கள் உரிய முறையில் தமது கற்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாதுள்ளது என்பதையும் புதிய கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கல்வி அமைச்சில் நேற்று (18.08.2020) நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் நேற்று மேலும் தெரிவித்த அமைச்சர்,

கல்வி முறைமையில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பாக விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். தற்போதைய கல்வி முறை நாட்டுக்கு பொருத்தமானதல்ல என்பதை சகலரும் ஏற்றுக்கொள்கின்றனர்.

அதற்கிணங்க அடுத்த மாதம் நாடு முழுவதும் சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.

பாடநெறிகளை நவீனமயப்படுத்துவது, பாடங்களின் எண்ணிக்கை, பாடவிதானங்களின் தன்மை, கற்பிக்கப்படும் முறைமை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு அவற்றில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படுவது அவசியம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அவ்வாறு மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் போதே மாணவர்கள் சுதந்திரமாக சிந்தித்து தைரியத்துடன் கற்க முடியும் என்பதையும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எதையாவது சிந்தித்துக் கொண்டு பரீட்சையில் சித்தியடைய வேண்டுமென்று பரிட்சையில் அமர்வது கல்வி முறையின் நோக்கமல்ல.எமது நாட்டில் அதுபோன்றதொரு கல்வி முறையே உள்ளது. சகல குறைபாடுகளும் நீக்கப்படவேண்டும்.

புதிய விடயங்கள் உள்ளீர்க்கப்படவேண்டும்.மாணவர்கள் புதியதை கற்றுக் கொள்வதற்காக பொருத்தமான கல்வியை பெற்றுக் கொடுப்பது அவசியமாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோகத்தில் 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் அறுவடை ! – பிரதி விவசாயப்பணிப்பாளர் அற்புதச்சந்திரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் இவ்வாண்டு சிறுபோகத்தில் 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் அறுவடை செய்யப்பட்டிருப்பதாக மாகாண பிரதி விவசாயப்பணிப்பாளர் அற்புதச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பாரிய நீர்த்தேக்கமாக காணப்படுகின்ற இரணைமடு குளம் உள்ளிட்ட பாரிய நடுத்தர மற்றும் சிறுகுளங்களில் மேற்கொள்ளப்பட்ட 2019, 2020 இற்கான காலபோக அறுவடையை தொடர்ந்து இவ்வாண்டுக்கான சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நிறைவு பெற்றுள்ளன.

அதாவது இரணைமடு குளம், கல்மடு குளம், அக்கராயன் குளம், புதுமுறிப்பு குளம், வன்னேரிக்குளம், கரியாலை நாகபடுவான் குளம், குடமுருட்டிக்குளம் உள்ளிட்ட பாரிய நீர்ப்பாசனக் குளங்கள் மற்றும் சிறு நீர்ப்பாசனக் குளங்கள் என்பனவற்றின் கீழ் சுமார் 8688 ஹெக்டேயர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நிறைவு பெற்றுள்ளன. இதன்மூலம் ஏறத்தாழ 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் அறுவடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாண்டு கிளிநொச்சி மாவட்டத்தில் பெரிய மற்றும் நடுத்தரக் குளங்களின் கீழ் 8592 ஹெக்டெயரிலும் சிறிய நீர்ப்பாசனக் குளங்களின் கீழ் 96 ஹெக்டெயரிலுமாக மொத்தமாக 8688 ஹெக்டெயர் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு அறுவடைகள் நிறைவு பெற்றுள்ளன.

இவ்வாறு அறுவடைகள் மூலம் சுமார் 42 ஆயிரம் மெற்றிக்தொன் நெல் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இதேபோல் மறுவயற் பயிர் செய்கைகளானவை பல்வேறு செயற்திட்டங்களினூடாக ஊக்குவிக்கப்பட்டு சுமார் 1300 ஹெக்டெயர் நிலப்பரப்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதேவேளை கடந்த காலபோகத்தின் போது 23 ஆயிரத்து 466 ஹெக்டெயர் நிலப்பரப்பில் காலபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டு வெற்றிகரமாக அறுவடைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பிலிப்பைன்ஸை அடுத்து தெற்கு சுமத்ராவில் நிலநடுக்கம் !

இந்தோனேசியாவின் தெற்கு சுமத்ராவில் நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ள நிலையில் இதன் காரணமாக இலங்கைக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆகப் பதிவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இன்று (19.08.2020) அதிகாலை 03.59 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

எனினும் நிலநடுக்கம் காரணமாக கரையோர பிரதேச மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படவில்லை என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிவிப்பு தேசிய மற்றும் சர்வதேச நிறுவனங்களின் இணக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக பிலிப்பைன்சிலும் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோலில் 6.6 ஆக பதிவாகி உள்ளது.