இலங்கையில் இராணுவமயப்படுத்தல் பரவலடைய ஆரம்பித்துள்ளமை தொடர்பாக பலரும் தங்களுடைய அதிருப்தியயை வெளிப்படுத்தி வருகின்றனர்.இலங்கையில் இராணுவமயப்படுத்தலின் ஒரு பகுதியாக அண்மையில் மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தன. இதனை கண்டித்து எம்.ஏ சுமந்திரன் அவர்கள் தன்னுடைய அதிருப்தியை வெளியிட்டுள்ளார்.
நாடு இராணுவ மயமாவதாக நான் கூறியபோது அதனை அரசும் அரசுடன் இணைந்த கட்சிகளும் மறுப்பு தெரிவித்தன. ஆனால் இப்போது மாவட்ட செயலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்களை பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது நாட்டின் நிர்வாகத்தை இராணுவத்திடம் தாரைவார்ப்பதற்கு சமானனது என எம்.ஏ. சுமந்திரன் எச்சரித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த அவர்,
நாட்டின் சிவில் நிர்வாகத்தை மேற்கொள்ளும் உள்நாட்டு அலுவல்கள் விடயங்கள் தற்போது பாதுகாப்பு அமைச்சின் கீழ் கொண்டு செல்வதானது மிக மோசமான நிலையை ஏற்படுத்தும்.
அதேவேளை சகல அதிகாரிகளையும் இராணுவம் கட்டுப்படுத்தும் நிலை ஏற்படும் என்றும் சுமந்திரன் சுட்டிக்காட்டினார்.
ஒரு நாட்டின் சிவில் நிர்வாகங்களுடனேயே சர்வதேச நாடுகள் தொடர்பினை பேண விரும்பும் நிலையில் அந்தநிலை தற்போது கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேநேரம் இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் கீழ் சிவில் நிர்வாகத்தினை ஒப்படைக்கும் நடவடிக்கைக்கு அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அத்தனை தமிழ் அமைச்சர்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் சுமந்திரன் குறிப்பிட்டார்.