உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

எரிபொருள் வரிசையில் காத்திருந்து மேலும் ஒருவர் பலி !

எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக வரிசையில் காத்திருந்த மற்றும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹொரண, அங்குருவதொட்ட, படகொட எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் வரிசையில் காத்திருந்த நபரொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவர் 63 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

டீசல் பெறுவதற்காக சுமார் ஏழு நாட்களாக எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசைகள் காணப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

“மக்கள் போராட்டத்தை மீண்டும் உயிர் பெறச் செய்ய போகிறோம்.” – ஜே.வி.பி அறிவிப்பு !

அரசாங்கத்தை பதவி விலகச் செய்வதற்கான மக்களின் ஆர்ப்பாட்டங்களை புத்துயிர் பெறச் செய்வதற்கு தயாராகவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று(22) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போதே மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் இந்த அமைச்சரவைக்கு தொடர்ந்தும் நாட்டை நிர்வகிக்கும் உரிமை கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மக்களைப் பற்றி எவ்வித கவலையும் அற்ற அரசாங்கமே தற்போது நாட்டை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றது.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷ குடும்பத்தின் பாதுகாவலராக செயற்பட்டுக் கொண்டிருக்கின்றார்.

கோட்டாபய ராஜபக்ஷவும் ரணில் விக்கிரமசிங்கவும் மீண்டும் அவர்களின் அரசியல் விளையாட்டுக்களை ஆரம்பித்துள்ளனர்.

எனவே மக்களின் ஆர்ப்பாட்டங்களை மீண்டும் புத்துயிர் பெறச் செய்து, அவர்களுடன் இணைந்து போராடுவதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

இதற்கமை எதிர்வரும் 26ஆம் திகதி அநுராதபுரத்திலும், 27ஆம் திகதி குருணாகலிலும், 28ஆம் திகதி மாத்தறையிலும், 29ஆம் திகதி களுத்துறையிலும் ஜூலை முதலாம் திகதி அம்பலாந்தோட்டையிலும் தொடர் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

இதே போன்று ஏனைய நகரங்களிலும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

,………..

மிக நீண்டகாலமாக ஏற்படுத்தப்பட்ட – செயற்படுத்தப்பட்ட  முறையற்ற பொருளாதாரக் கொள்கைகளே இன்று இலங்கை எதிர்கொள்ளும் எல்லா பொருளாதார நெருக்கடிக்கும் காரணம்.  போராட வேண்டுமாயின் எல்லோர்க்கும் எதிராக தான் போராட வேண்டும்.

ஜே.வி.பியும் எந்தவிதமான முன்யோஙனசனையுமின்றி மக்களை தூண்டிவிடுகின்ற அரசியலைத்தான் மேற்கொள்ள முயல்கிறதே தவிர மக்களுக்கான அரசியல் இல்லை. முடிந்தால் மே மாதம் ஏற்பட்ட போராட்டங்களில் கலந்துகொண்ட குற்றத்துக்காக ஆயிரக்கணக்கான சிங்கள இளைஞர்கள் கைதாகியுள்ளனர். அவர்களை விடுவிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த அரசியல் கட்சிகள் எல்லாமுமே வழமை போல் மக்களை தூண்டி விட்டு பிரச்சினைகளை பெரிதாக்கி அதில் அரசியல் செய்யும் மிருகத்தனமான அரசியலையே தொடர்ந்தும் செய்கின்றனர்.

ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து ஏதுமில்லை. கடந்தகாலம் நாட்டை ஆண்டவர்ளும் தான் இந்த பழியை ஏற்க வேண்டியவர்கள். எல்லோரும் ஒரே பக்கத்தை நோக்கி கையை காட்டி விட்டு தங்களை நல்லவர்களாக்க முற்படும் போக்கே இன்றைய இலங்கை அரசியலில் தொடர்கிறது.

ஹிருணிகா பிரேமச்சந்திரவின் தாய்மையை அவமதிக்க வேண்டாம் – பிரதமர் ரணில்

மூன்று பிள்ளைகளின் தாயான ஹிருணிகா பிரேமச்சந்திரவின் புகைப்படங்களை வெளியிட வேண்டாம் என சமூக ஊடக ஆர்வலர்கள் மற்றும் பாவனையாளர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஒழுக்கமான சமுதாயத்தில் தாய்மை அவமதிக்கப்படக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்லாவற்றிற்கும் முன் தாய்மை என்ற கருத்து மதிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

ஹிருணிகா பிரேமச்சந்திர, பிரதமரின் தனிப்பட்ட இல்லத்திற்கு வெளியே நேற்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தபோது எடுக்கப்பட்ட அவமானகரமான புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதற்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் விடயமாக ஹிருணிகா தனது இல்லத்திற்கு வந்ததாகவும்  அவரது தாய்மையை அவமதிக்கும் வகையில் யாரும் நடந்து கொள்ளக்கூடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மதுபோதையில் மனைவியின் கழுத்தை வெட்டிய கணவன் – திருகோணமலையில் சம்பவம் !

திருகோணமலை – செல்வநாயகபுரம் பகுதியில் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டுள்ள நிலையில் பெண் ஒருவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக உப்புவெளி பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

செல்வநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த திவ்யா எனும் 30 வயதுடைய பெண்ணே இவ்வாறு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், குடும்பத் தகராறு காரணமாகவே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மதுபோதையில் வந்த கணவன் மனைவியான குறித்த பெண்ணின் கழுத்தை கத்தியால் வெட்டியுள்ளார்.

இதனையடுத்து காயமடைந்த மனைவி அயலவர்களால் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த பெண்ணின் கணவனை அயலவர்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர் என்றும் சந்தேக நபரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதோடு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் உப்புவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“ரணில் ஒரு பக்கம் கூட்டம் நடத்துகிறார். கோட்டாபாய இன்னொருபக்கம் கூட்டம் நடாத்துகிறார்.” மனோகணேசன் காட்டம் !

ஒன்று, இந்தியா எதையாவது தர வேண்டும். இல்லாவிட்டால் உலகம் தரவேண்டும் என்று நம் நாட்டை நாளாந்தம் உலக நாடுகளிடம் கையேந்தும் பிச்சைக்கார நாடாக்கி விட்டார், ராஜபக்ச என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன், பொது எதிரணியாக சபையில் ஒருவார சபை பகிஸ்கரிப்பு முடிவை அறிவித்து நாடாளுமன்றில் இருந்து வெளியேறும் முன் அரசாங்கத்தை விமர்சித்தார்.

பல்லாண்டுகளுக்கு முன் ஜே. ஆர். ஜெயவர்தன சான்-பிரான்சிஸ்கோ நகரில் நிகழ்ந்த உலக மகாநாட்டில் ஜப்பானுக்கு ஆதரவாக ஆற்றிய உரையின் காரணமாக, ஜப்பான் வரலாறு முழுக்க எமக்கு மிக அதிக உதவிகளை வழங்கும் நன்றியுள்ள நாடாக இருந்தது. இந்த பாராளுமன்றம், ஜப்பான் தந்ததாகும். பக்கத்தில் இருக்கும் ஸ்ரீ ஜெயவர்ந்தபுர மருத்துவமனை ஜப்பான் தந்ததாகும். ரூபவாஹினி ஜப்பான் தந்ததாகும். கண்டி பேராதெனிய மருத்துவமனை ஜப்பான் தந்ததாகும். இதற்கு பிறகு இலகு ரயில் திட்டத்துக்காக, எமது நாட்டுக்கு 1.4 பில்லியன் டொலர்களை தரவிருந்த ஜப்பான் நாட்டை, நன்றிகெட்ட முறையில் நிராகரித்து, அந்நாட்டின் மனதை உடைத்தமை ராஜபக்சவின் டிப்ளமடிக் க்ரைம் என்றும் மனோ கணேசன் கூறினார்.

தன்னை ஜனாதிபதி கோதாபயவே அழைத்து பிரதமராக நியமித்ததாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறுகிறார். ரணிலை நியமித்த ஜனாதிபதி கோதாபய, பிரதமர் ரணில் இல்லாமல் தனியாக அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்துகிறார். பிரதமர் ரணிலும் தனியாக அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்துகிறார். இதனால்தான் இதை ஒரு அலங்கோல அரசாங்கம் என்கிறேன் என்றும் மனோ கணேசன் மேலும் கூறினார்

கொழும்பில் மத்தியதர மற்றும் பின்தங்கிய மக்கள் படும்பாடு சொல்லும்தரமன்று. எரிவாயு, மண்ணெண்ணெய், பெட்ரோல், மருந்து, உணவு பிரச்சினைகளால், மக்கள் சாவை நோக்கி நகர்கிறார்கள். தொடர்மாடிகளில் வாழும் மக்கள் படும்பாடு அகோரம். இவர்களுக்கு குறிப்பிட்ட சில மாதங்களுக்கு, ஒவ்வொரு நாளும் ஒருவேளையாவது, சமைத்த உணவு கொடுக்க சொன்னேன். இதுவரை ஒன்றும் நடக்கவில்லை என மனோ கணேசன் மேலும் கூறினார்

மலைநாட்டில் தோட்டங்களில் தொழிலாளருக்கு, டொலர் பெறுமதி கூடியதற்கு இணங்க நாட்சம்பளத்தையும் கூட்ட சொன்னேன். முடியவில்லை என்றால், தோட்டங்களில் இருக்கும் பயிரிப்படாத தரிசு காணிகளில், உணவு பொருட்களை பயிரிட்டு வாழ அனுமதி, வழங்கும்படி சொன்னேன். இதுவரை ஒன்றும் நடக்கவில்லை என மனோ கணேசன் மென்மேலும் கூறினார்

மக்கள் பிரச்சினைகளை தீர்க்க அரசுக்கு ஒத்துழைப்பு வழங்கும்படி நண்பர் நிமல் லான்சா எம்பி கூறுகிறார். நாம் எதிர்கட்சியாக இருந்தாலும், பிரதமர் கூட்டும் கூட்டங்களுக்கு போய் ஒத்துழைப்பு வழங்குகிறோம் என்பதை அவருக்கு ஞாபகப்படுத்துகிறேன். எனக்கு அமைச்சு பதவிகளில் இப்போது ஆர்வமில்லை. நாம் இருக்கும் இடத்தில் இருந்தவாறே, எமது மக்களின் பிரச்சினைகளை தீர்க்க எவருடனும் ஒத்துழைக்க தயார். ஆனால், எமது கோரிக்கைகள், ஆலோசனைகள் தொடர்பில் எதுவும் இதுவரை உருப்படியாக நடக்க வில்லையே. ஆகவே, பிரதமர் கூட்டும் கூட்டங்களுக்கு போய் வருவதில் பிரயோஜனம் இருப்பதாக எனக்கு தோன்றவில்லை. அவசியமானால், எமது கட்சி பிரதிநிதிகளை நாம் அனுப்புவோம் என மனோ கணேசன் மேலும் கூறினார்.

மின்தடை நேரத்தில் மின் வயர்களை வெட்டி விற்ற மூவர்கைது – யாழில் சம்பவம் !

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட வேளையில் மின் தட மின் வயர்களை வெட்டி விற்ற மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை குறித்த சம்பவத்துடன் மின்சார சபை ஊழியர் ஒருவர் தொடர்பு பட்டு உள்ளதாகவும் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, வடமராட்சி குடாரப்பு பகுதியில் மின் தட வழியில் சென்ற மின் வயர்கள் வெட்டப்பட்டு களவாடப்பட்டது. இது தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் ஆழியவளை பகுதியில் உள்ள பண்ணை ஒன்றுக்கு திருடப்பட்ட மின் வயர்கள் 2 இலட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டமை தொடர்பில் அறிந்து கொண்டனர்.

அதனை அடுத்து பண்ணை உரிமையாளருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அவரின் வாக்கு மூலத்தின் அடிப்படையில் மூவரை கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

அதேவேளை 2 இலட்ச ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட வயரின் பெறுமதி சுமார் 10 இலட்ச ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

“இலங்கையின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணவே நான் வந்துள்ளேன்.”- பதவிப்பிரமாணம் செய்த பின் தம்மிக்க பெரேரா !

நாட்டிற்குப் பணி செய்யவே நாடாளுமன்றத்திற்குள் வந்ததாக இன்று நாடாளுமன்ற உறுப்பினராக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பிரபல வர்த்தகர் தம்மிக்க பெரேரா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்திற்கு வெளியே ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே தம்மிக்க பெரேரா இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் தெரிவித்த அவர்,
‘நாட்டிற்குப் பணி செய்யவே நான் இங்கு வந்தேன். நான் நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் செய்துகொள்வதற்கு முன்னதாக சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கைகளையும் வரி அனுமதி அறிக்கைகளையும் சபாநாயகரிடம் சமர்ப்பித்தேன். அது மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன்.
நாட்டில் பிரச்சினை இருப்பதால்தான் நான் நாடாளுமன்றத்துக்கு வந்தேன். இப்போது என் கடமை பிரச்சினைக்கு தீர்வு காண்பதுதான். அதை செய்து வெற்றி பெற முடியும் என்று நினைக்கிறேன். நல்லதொரு அமைச்சு கையளிக்கப்படும் என நினைக்கிறேன்.
எனவே எப்படியிருந்தாலும் எனது பங்களிப்பு என்னவென்றால், நான் நாட்டின் மீது மிகவும் அக்கறை கொண்டுள்ளேன். எனவே நான் எந்த அமைச்சகத்தைப் பெற்றாலும் பங்களிக்கவும் பொறுப்பேற்கவும் இங்கு வந்தேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டறை நாய் மாதிரி. தாங்களும் செய்ய மாட்டார்கள்..,” – அமைச்சர் டக்ளஸ்

தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டறை நாய் மாதிரி. அதாவது தாங்களும் செய்ய மாட்டார்கள். செய்பவர்களையும் விட மாட்டார்கள். என கடற்றொழில் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்த இன்று கடற்றொழில் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குறித்த துறைமுகத்தை பார்வையிட்ட பின்னர் அங்கு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஒலுவில் துறைமுகத்தை அபிவிருத்தி செய்து மக்கள் பாவனைக்கு உட்படுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை வளப்படுத்தி கட்டியெழுப்புவதற்கு பல வேலைத் திட்டங்கள் உள்ளன. இந்த மாவட்டத்தின் மக்களுக்கு தான் முன்னுரிமை வழங்கப்படும். தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வைக்கோல் பட்டறை நாய் மாதிரி. அதாவது தாங்களும் செய்ய மாட்டார்கள். செய்பவர்களையும் விட மாட்டார்கள். எனவே, நான் கொண்டு வருகின்ற திட்டங்கள் யாவும் மக்கள் நலன் சார்ந்ததாகும்.

கடந்த 2008 ஆம் ஆண்டில் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட ஒலுவில் மீன்பிடித் துறைமுகம் 2013 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியும், துறைமுக அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஸவால் திறந்து வைக்கப்பட்டது. 2013 ஆம் ஆண்டு திறந்து வைக்கப்பட்ட போதிலும் ஒரு வர்த்தக கப்பல் கூட ஒலுவில் துறைமுகத்துக்கு இது வரை வரவே இல்லை. ஏனெனில் மணல் நிரம்புவதால் இதுவரை எவ்வித பயனையும் பெற்றுக்கொள்ள முடியாதுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதன் பிரகாரம் ஒலுவில் மீன்பிடி துறைமுகத்தின் செயற்பாடுகளை சம்பிரதாயபூர்வமாக மீள ஆரம்பிப்பதற்கும் குறித்த துறைமுகத்திற்கு மறைந்த முன்னாள் அமைச்சர் எம்.எச்.எம் அஸ்ரப்பின் பெயரினை வைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக குறிப்பிட்டார். எனவே, இவ்விடயத்தில் வீணான அரசியல் செய்யாமல் அனைத்து தரப்பினரும் முன்வந்து ஒத்துழைப்புகளை வழங்க வேண்டு என கேட்டுக்கொண்டார். இதன் போது துறைசார் அதிகாரிகள் மீனவ சமூகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

கடந்த கால விஜயத்தின் போது முதல் கட்டமாக மீன் பதனிடும் தொழில் கூடங்கள் போன்றவை நிர்மாணிக்கப்பட்டு செயற்படுத்தப்ட்ட நிலையில் மீனவ சமூகத்தின் பாவனைக்கு அமைச்சரால் கையளிக்கப்பட்டுள்ளன.

பல மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட துறைமுகத்தை பராமரிப்பதற்கு துறைமுக அபிவிருத்தி அதிகார சபை மாதாந்தம் 56 இலட்சம் ரூபாய் வரை செலவிட நேர்ந்தது. இந்நிலையில் கடற்றொழில் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பகீரத முயற்சிகளை தொடர்ந்து துறைமுக அமைச்சு, கடற்றொழில் வள் அமைச்சு ஆகியன கூட்டாக அண்மையில் சமர்ப்பித்த அமைச்சரவை யோசனை மூலமாக கடற்றொழில் அமைச்சின் பொறுப்பில் ஒலுவில் துறைமுகம் வந்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

டொலருக்கு பெற்றோல் விற்கும் முறையை இலங்கையில் அறிமுகப்படுத்துமாறு கோரிக்கை !

அமெரிக்க டொலர் அல்லது ஏற்றுக் கொள்ளப்பட்ட வெளிநாட்டு நாணயங்களுக்கு மாத்திரம் எரிபொருளை விற்பனை செய்யும் எரிபொருள் நிலையங்களை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகரவிடம் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் பியதிஸ்ஸ கோரிக்கை விடுத்துள்ளார்.

இவ்வாறான பெற்றோல் நிலையங்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் திறக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள விடுத்துள்ள அவர் நாட்டில் டொலர் கையிருப்பு வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்துள்ள நேரத்தில் மறைத்து வைக்கப்பட்டுள்ள டொலர்கள் அல்லது பிற வெளிநாட்டு நாணயங்களை வெளிக்கொணர இது உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

“முழு இலங்கையுமே அகதியாகியுள்ளது.”- சஜித் பிரேமதாச விசனம் !

இலங்கையினால் வெளியிடப்பட்ட இறையாண்மை பிணைமுறிக்கு முதலீடு செய்த அமெரிக்க வங்கியொன்று தனது பணத்தையும் வட்டியையும் தரக் கோரி மன்ஹாட்டன் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதோடு, இது மிகவும் துரதிஷ்டவசமான நிலை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

இன்று (22) எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் குழுவுடனான சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இன்று முழு நாடும் அகதிகள் முகாமாக மாறியுள்ளதாக தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், அலாவுதீனின் அற்புத விளக்கு போல தன்னிடம் ஓர் அதிசய விளக்குள்ளது என கூறிய பொருளாதார வல்லுனர்களின் உண்மை தன்மை இன்று வெளிப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்றத்தைப் புறக்கணித்தது குறித்து பிரதமர் கேள்வி எழுப்புகிறார் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர், தமது தேசியப் பட்டியல் ஆசனத்தை ஓராண்டு காலம் வெற்றிடமாக வைத்துக் கொண்டு, ராஜபக்ஸக்களுக்கு தேவையான ஏற்ப்பாடுகளை செய்து கொடுத்தது பிரதமர் தானேயன்றி, ஐக்கிய மக்கள் சக்தி அல்ல எனவும் அவர் தெரிவித்தார்.

மக்களின் இன்னல்களை அறியாத தர்மசங்கடத்திற்குள்ளான அரசாங்கம் பாராளுமன்றத்தை முட்டாள்தனமான ஒரு இடமாக மாற்றியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இன்று வெளிநாட்டு நீதிமன்றத்திலும் கூட நாடு பிரதிவாதியாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

.