உள்நாட்டுச் செய்திகள்

Sunday, January 23, 2022

உள்நாட்டுச் செய்திகள்

கடுமையான டொலர் நெருக்கடி – துறைமுகத்தில் சிக்கியுள்ள 1,500 கொள்கலன்கள் !

அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏற்றி வந்த சுமார் 1,500 கொள்கலன்கள் துறைமுகத்தில் சிக்கியுள்ளமை தெரியவந்துள்ளது.

நாட்டில் நிலவும் கடுமையான டொலர் நெருக்கடியே இதற்குக் காரணம். இந்த கொள்கலன்களில் சுமார் 30,000 மெட்றிக் தொன் அத்தியாவசிய பொருட்கள் இருப்பதாக அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த அத்தியாவசிய உணவு கொள்கலன்களை துறைமுகத்திலிருந்து விடுவிக்காவிட்டால் , நாட்டில் பொருட்களின் விலை வேகமாக உயரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோதுமை மாவைத் தவிர ஏனைய அத்தியாவசிய உணவுப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஒரு மாதத்திற்கு சுமார் 110 மில்லியன் டொலர்கள் நாட்டுக்கு செலவாகிறமை தெரிய வந்துள்ளது.

“இலங்கையின் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்க்க பங்களிப்பு வழங்குங்கள்.” – ஜுலி ஜியோன் சங்கிடம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை !

இலங்கையில் நிலவும் தேசிய இனப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அவசியமான பங்களிப்பை வழங்குமாறு, இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள ஜுலி ஜியோன் சங்கிடம் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

அமெரிக்கத் தூதுவராக நியமிக்கப்பட்டமைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து 6 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் விடுத்துள்ள அறிக்கையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மறுக்க முடியாத அச்சுறுத்தல்கள் மற்றும் மோசமான நிலைமைகளை கருத்திற்கொண்டு சாதகமான பங்களிப்பை வழங்குமாறு தமிழ் அமைப்புக்கள் வலியுறுத்தியுள்ளன.

ஜனநாயக ரீதியில் அரசியல் தீர்வை அடைந்து கொள்ள, சர்வதேச மட்டத்திலான கண்காணிப்புடன் பொதுசன வாக்கெடுப்பொன்றை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இனப்படுகொலை, மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கைக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

“இலங்கையில் நெல்லின் விலை அதிகரித்து பஞ்சம் ஏற்படும்.” – சாணக்கியன் எச்சரிக்கை !

நாட்டில் பஞ்சம் ஏற்பட்டு கொள்ளை சம்பவங்கள் அதிகரிக்கக்கூடிய நிலை ஏற்படும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் எச்சரித்துள்ளார்.

திருக்கோவில் காவல் நிலையத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் உயிரிழந்த கல்முனை பாண்டிருப்பு பகுதியைச் சேர்ந்த காவல்துறை உத்தியோகத்தரின் இறுதி கிரியை நேற்று (27) இடம்பெற்றது.

அதில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துரைத்த அவர், தேசியப் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதாக அறிவித்த அரசாங்கம், அதனைச் செய்வதற்குத் தவறியுள்ளதாகக் குறிப்பிட்டார்.

நெல்லின் விலை அதிகரித்து பஞ்சம் ஏற்படுவதோடு இதன் காரணமாகக் கொள்ளை சம்பவங்களும் அதிகரிக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய இலங்கைக்குள் மூவின மக்களுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க நாம் தயார்.” – அனுரகுமார திசாநாயக்க

ஐக்கிய இலங்கைக்குள் மூவின மக்களுடன் ஒன்றிணைந்து ஆட்சியை முன்னெடுக்க நாம் தயாரென மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் நிகழ்கால அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடி நிலைமைகள் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் நிலைப்பாட்டை முன்வைக்கும் போதே அவர் இதனை கூறினார். மேலும் பேசிய அவர்,

இதுவரை காலமாக அரசியல் நோக்கங்களுக்காக மக்கள் ஆட்சி மாற்றத்தை செய்தனர். இன்று பொருளாதார நெருக்கடி நிலையொன்று ஏற்பட்டுள்ளது. இதில் ஆட்சி செய்த இரண்டு பிரதான கட்சிகளுமே பொறுப்புக்கூற வேண்டியுள்ளது. இந்த இரண்டு கட்சிகளினாலும் இனியும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது.

எனவே இன்று மாற்று அணியொன்றும், மாற்று பொருளாதார திட்டமொன்றும் உருவாக்கப்பட வேண்டும். அதற்கான சரியான தருணம் இதுவாகும்.  மக்கள் இப்போது சரியான அரசியல் தீர்மானம் எடுக்க வேண்டும். இதுவரை காலமாக பிரதான இரண்டு கட்சிகள் உருவாக்கிய பொய்களில் ஏமாற்றப்பட்டே மக்கள் ஆட்சியை உருவாக்கியுள்ளனர். ஆனால் இன்று அந்த பொய்களை மக்கள் கேட்க தயாராக இல்லை.

இந்த நாட்டில் விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையில் யுத்தம் இடம்பெற்றதே தவிர தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்கும் அல்ல. 2005  ஆம் ஆண்டில் நாம் எடுத்த சில தீர்மானங்கள் தாமதாகியிருந்தால் இந்த நாட்டில் தமிழ் சிங்கள யுத்தமொன்று உருவாகியிருக்கும்.

நாட்டில் இன்று தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் ஒன்றிணைந்து பயணிக்க வேண்டிய கட்டாய தேவை உள்ளது. இன நல்லிணக்கத்தை உருவாக்கி ஆட்சியை கொண்டுசெல்லும் மனநிலையில் இந்த ஆட்சியாளர்கள் இல்லை.

எனவே தான் சகல மக்களின் மனங்களையும் வெற்றிகொண்டு ஐக்கிய இலங்கையை கட்டியெழுப்ப நாம் முயற்சிக்கின்றோம். அதன் மூலமாகவே நாட்டின் பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்றார்.

விசாரணைக்கு சமூகம் அளிக்கும்படி கோரி மனோகணேசனுக்கு தமிழ் மொழியில் அழைப்பாணை !

கடந்த ஆட்சிக்கு முந்தைய ஆட்சியின் போது நடைபெற்றதாக கூறப்படும் ஊழல்களை விசாரிக்க, கடந்த ஆட்சியில் அமைக்கப்பட்ட ஊழல் எதிர்ப்பு குழு மற்றும் அதன் செயலகம் தொடர்பாக இந்த ஆட்சியின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழு, சார்பாக ஆணைக்குழுவின் செயலாளர் எச். எம். பீ. பி. ஹேரத், தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசனை இம்மாதம் 29ம் திகதி விசாரணைக்கு சமூகம் அளிக்கும்படி கோரி தமிழ் மொழியில் அழைப்பாணையை மனோவின் இல்லத்துக்கு அந்த வலய பொலிஸ் நிலையம் மூலம் அனுப்பி வைத்துள்ளார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணைக்கு சமூகம் அளிக்கும்படி, கடந்த வாரம் தனி சிங்கள மொழியில் இந்த அழைப்பாணை மனோ கணேசனுக்கு அனுப்பட்ட போது, அதை ஏற்க மறுத்து தமிழ் மொழியில் அழைப்பாணையை அனுப்பும்படி மனோ கூறி இருந்தார். இந்நடவடிக்கை ஊடகங்களில் பேசுபொருளாக இருந்தது.

இந்நிலையில் தற்போது தமிழ் மொழியில், இந்த அழைப்பாணையை மனோ எம்பியின் இல்லத்துக்கு அந்த வலய பொலிஸ் நிலையம் மூலம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்ட விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவின் சார்பாக ஆணைக்குழுவின் செயலாளர் எச். எம். பீ. பி. ஹேரத் அனுப்பி வைத்துள்ளார்.

“எங்களை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிடம் நிதி வசதிகள் இல்லை.” – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா

எங்களை அபிவிருத்தி செய்வதற்கு எங்களிடம் நிதி வசதிகள் இல்லை, வெளிநாடுகள் வரும்போது நாட்டிற்கும் மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் யார் வந்தாலும் நாங்கள் வரவேற்போம் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி இரணைமடு குளத்தின் கீழுள்ள விவசாயிகளின் பிரச்சினை மற்றும் பல்வேறுபட்ட மாவட்டத்தின் பிரச்சினைகள் தொடர்பில் நேற்று (28) கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது இந்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இரணைமடு குளத்தின் கீழ் உள்ள விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக உழவர் சந்தை அவசியம் தேவை என்பதனை வலியுறுத்தி இருந்தார்கள். அதனை நடைமுறைப் படுத்துவதற்கும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது என்று குறிப்பிட்டிருந்தார்.

கிளிநொச்சி கௌதாரிமுனை பிரதேசத்தில் இந்திய நிறுவனம் ஒன்றுக்கு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்குரிய காணி வழங்குவது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர், யாருக்கும் அவ்வாறு காணிகள் வழங்கப்பட வில்லை. எங்களை அபிவிருத்தி செய்வதற்கு நிதி வசதிகள் இல்லை வெளிநாடுகள் வரும்போது நாட்டிற்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும் யார் வந்தாலும் அதனை நாங்கள் வரவேற்போம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

“இலங்கைக்கு புதிய ஆட்சி ஒன்று தேவை.” – முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

நாட்டின் தற்போதைய குழப்பத்தில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் நோக்கில் புதிய தொலைநோக்குப் பார்வை கொண்ட புதிய ஆட்சியை உருவாக்க வேண்டியதன் அவசியத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வலியுறுத்தினார்.

சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் கோட்டை தேர்தல் அமைப்பின் கூட்டத்தில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

முன்மொழியப்பட்ட விதி இதுவரை இருந்த பாரம்பரிய அரசாங்க வடிவங்களில் இருந்து வேறுபட்டதாக இருக்க வேண்டும். நாடு இதுவரை இல்லாத பாரிய நெருக்கடிக்குள் தள்ளபட்டுள்ளது. தற்போது உணவுப் பற்றாக்குறையை நோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றது. இன்னும் ஓரிரு மாதங்களில் அரிசி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்கும் தட்டுப்பாடு ஏற்படும்.

எந்தவொரு கட்சியும் தனித்து அரசாங்கத்தை அமைக்கவில்லை. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போதைய அரசாங்கத்திற்கு 6.9 மில்லியன் வாக்குகளை வழங்குவதற்கு 12 அரசியல் கட்சிகள் பங்களிப்பை வழங்கியுள்ளது.

இன்று சமூக, அரசியல் மற்றும் சர்வதேச துறைகளில் நெருக்கடியை காண்கின்றோம். மேலும் சர்வதேச உறவுகளை நிர்வகிப்பதில் பரிதாபகரமான தோல்வி உள்ளது. ஊழல் மோசடிகள் காரணமாக சர்வதேச சமூகத்தைச் சேர்ந்த எவரும் அதைக் காப்பாற்ற வரமாட்டார்கள்.

அண்மையில், மேற்கத்திய தூதரகத்தின் தூதுவர் ஒருவர் தனது இல்லத்திற்கு வந்து தன்னைச் சந்தித்ததார். ஐ.நா அமைப்பு மற்றும் உலக வங்கி மூலம் மேற்கத்திய நாடுகள் மட்டுமே இலங்கைக்கு தங்கள் உதவிகளை வழங்கும். இடதுசாரி சாய்வு, முற்போக்கு சக்திகள் உள்ளடக்கிய அரசியல் உருவாக்கத்தை உருவாக்க வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

“மக்களின் கோபம் அரசை பாதிக்கும்.” – ரணில் விக்கிரமசிங்க

“புத்தாண்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்படும்.” என முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

விசேட அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் டொலர் பற்றாக்குறை, வேலைவாய்ப்பு இன்மை, விவசாயிகள் பிரச்சினைகள் காணப்படுவதாகவும் கொரோனா தொற்றுக்கு மத்தியில், பல நாடுகள் 2020 மற்றும் 2021 ஆண்டுகளில் பொருளாதார முன்னேற்றத்தைக் காட்டியுள்ளன என்றும் அறிக்கையில்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே தற்போதைய அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தாய் நாடி உதவி பெற்றுக்கொள்ள வேண்டும் அல்லது ஏற்றுக் கொள்ளக்கூடிய மாற்று வழியை முனைவைக்க வேண்டும் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

எதிர்வரும் புத்தாண்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டால் மக்கள் மத்தியில் கடும் கோபம் ஏற்படும் என்றும் அது அரசாங்கத்தை பாதிக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.

குழந்தைகளுக்கு பால்மா இல்லை. ஆனால் அமைச்சர்கள் வெளிநாடு செல்ல டொலர்கள் எப்படி..? – ஐக்கிய தேசியக் கட்சி கேள்வி !

நாட்டின் பால் குடிக்கும் குழந்தைகளுக்கான பால் மா பொதியை இறக்குமதி செய்வதற்கு டொலர்கள் இல்லாத நேரத்தில் அரசாங்கத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் வெளிநாடு செல்ல டொலர்கள் எங்கிருந்து கிடைத்தது என்பதை உடனடியாக அறிவிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.

மக்களுக்கான அத்தியாவசிய மருந்துகளை இறக்குமதி செய்வதற்கு நாட்டில் டொலர்கள் இல்லை எனவும், அரசியல்வாதிகள் குடும்பத்துடன் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்வதற்கும், ஆலயங்களில் பூஜைகள் செய்வதற்கும் டொலர்கள் இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான இடது சாரி அரசாங்கங்கள் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்களுக்குப் பரம்பரை பரம்பரையாகப் பசியும் பட்டினியும் மட்டுமே என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செய லாளர் மேலும் தெரிவித்தார்.

“உலகின் தலைசிறந்த 10 ஜனாதிபதிகளில் கோட்டபாயவும் இடம்பிடிப்பார்.” – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ

“கொரோனா தொற்று நோயின் போது குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்த 10 சிறந்த உலக தலைவர்களில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவும் ஒருவர். ஜனாதிபதி வரலாற்றில் இடம் பெறுவார்.” என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

பதுளை-செங்கலடி வீதியின் பிபில முதல் செங்கலடி வரையிலான 87 கிலோமீற்றர் பகுதியை இன்று திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அங்கு மேலும் பேசிய அவர்,

ஒரு நகரத்திலிருந்து இன்னொரு நகரத்திற்கு ஆரோக்கியமான அபிவிருத்தியை உறுதி செய்வதே ஜனாதிபதியின் முயற்சியாகும். கொவிட் -19 தொற்றுநோய் ஏற்பட்ட போது அனைத்து நாடுகளும் பொருளாதார சவால்களை எதிர்கொண்டுள்ளது.  உலகத் தலைவர்கள் பொது உயிர்களைக் காப்பாற்றுவதில் பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது.

ஜனாதிபதியின் விடாமுயற்சியினால் நாடு முழுவதும் தடுப்பூசிகள் போடும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.  கொவிட்-19 தடுப்பூசி இயக்கத்திற்கு எதிர்க்கட்சிகள் ஆதரவளிக்கவில்லை என்றும், திட்டத்தை நாசப்படுத்தவே முயன்றது. குறுகிய காலத்தில் இலங்கை மிகவும் அபிவிருத்தி நாடாக அறியப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.