ஜி.எஸ்.பி. பிளஸ் பச்சைக் கொடி காட்டிய ஐரோப்பிய ஒன்றியக் குழு !
இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை வழங்குவது தொடர்பில் ஆராய இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றிய கண்காணிப்புக் குழுவுக்கும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திஸ்ஸநாயக்காவுக்கும் இடையில் நேற்றைய தினம் ஏப்பிரல் 30 ஆம் திகதி சந்திப்பு நடைபெற்றுள்ளது. அப்போது ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசிய பிரிவுக்கான தலைவர் சார்ல்ஸ் வைட்லி ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகை மீளாய்வு சாதகமான முறையில் கருத்தில் கொள்ளப்படும் என நம்பிக்கையாக தெரிவித்தார். மேலும் இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்குமான நீண்டகால நட்புற வர்த்தக ரீதியான பல வெற்றிகளை அடைய உதவியுள்ளது. இவ்வர்த்தக வெற்றிகளை இலங்கை பெற தாம் தொடர்ந்தும் இலங்கைக்கு ஆதரவளிக்க தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தின் வரிச்சலுகை தரப்படுத்தப்பட்ட மற்றும் தரமான பொருட்களை விநியோகிக்க இலங்கைக்கு மேலும் ஊக்கம் கிடைக்கும் என்றும் சார்ல்ஸ் வைட்லி தெரிவித்தார். அதேநேரம் அஜனாதிபதியும் இலங்கை பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்திருந்த நேரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் செய்த உதவிகளுக்கு நன்றி தெரிவித்தார். இலங்கை பொருளாதார ரீதியில் வீழ்ச்சியடைந்தமைக்கு கடந்தகால ஆட்சியாளர்களின் அரசியல் முறையும், வீண் விரயமும், மோசடியுமே காரணமாக அமைந்திருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இப்போது நாடு சரியான நிர்வாகத்தின் கீழ் மாறி வருவதாகவும் நிலமைகள் முழுமையாக சரியாக சிறிது காலவகாசம் தேவை எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். முக்கியமாக நாட்டில் வாழ்கின்ற சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லீம் மக்கள் என அனைத்து பிரதேச மக்களும் தமது அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்துள்ளதாகவும் ஐரோப்பிய ஒன்றிய குழுவிடம் தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை ஜனாதிபதி விரைவில் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் வாக்குறுதியளித்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.