உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“நவ்பர் மௌலவியே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி” – பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர-

நவ்பர் மௌலவியே உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி என புலனாய்வு பிரிவினர் உறுதி செய்துள்ளனர் என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
இப்ராஹிம் சகோதரர்களும் பல அமைப்புகளும் தாக்குதலை மேற்கொள்வதற்காக தவ்ஹீத் ஜமாத் அமைப்பிற்கு நிதி வழங்கியுள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
கட்டாரை தளமாக கொண்ட நவ்பர் மௌவலி ஜஹ்ரான் ஹாசிமை தாக்குதலை மேற்கொள்ளுமாறு தூண்டினார் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். இலங்கையில் பிறந்த அவுஸ்திரேலிய பிரஜைகளான லுக்மான் தலிப் லுக்மான் தலிப் அஹமட் என்ற இரு சகோதரர்கள் ஜஹ்ரான் ஹாசிம் மாலைதீவை சேர்ந்த நால்வரை சந்திப்பதற்கான ஏற்பாடுகளை செய்தார்கள் எனவும் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.
2016 முதல் தாக்குதல் இடம்பெறும்வரை இவர்கள் ஜஹ்ரான் ஹாசிமை அடிக்கடி சந்தித்துள்ளனர் என அவர் தெரிவித்துள்ளார்.
சேவ் த பேர்ல் என்ற அமைப்பு ஜஹ்ரான் ஹாசிமிற்கு சட்டரீதியான உதவிகளை வழங்கியுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

“இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும்” – பிரிட்டனின் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர்

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தை கடுமையாக சாடியுள்ள பிரிட்டனின் லிபரல் ஜனநாயக கட்சியின் தலைவர் எட் டேவி இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பாரப்படுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பிரிட்டிஸ் பிரதமர் பொறிஸ்ஜோன்சனிற்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானத்தின் நகல்வடிவம் மிகவும் தெளிவற்றது. சர்வதேச பொறுப்புக்கூறல் குறித்த வலுவான அர்ப்பணிப்பை கொண்டிராதது என லிபரல் கட்சியின் தலைவர் தெரிவித்துள்ளார்.
“1.ஆதாரங்களை சேகரித்து எதிர்கால விசாரணைகளிற்காக ஆவணங்களை தயாரிப்பதற்கா இலங்கை குறித்த உரிய சர்வதேச சுயாதீன விசாரணை பொறிமுறையை உருவாக்கவேண்டும்.
2.இலங்கையில் தமிழர்களிற்கு எதிராக இழைக்கப்பட்ட பாரதூரமான குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காக இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்தவேண்டும்.
3.ஜனவரி 2012 இல் ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் முன்வைத்த பரிந்துரைகளை தீர்மானத்த்தில் சேர்க்கவேண்டும்.” போன்ற விடயங்களை உள்ளடக்கியதாக நகல்வடிவில் மீண்டும் மாற்றங்களை மேற்கொள்ளவேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக இலங்கை அரசாங்கம் மற்றும் அதன் படையினருக்கு எதிராக சர்வதேச நியாயாதிக்க கொள்கைகளை பயன்படுத்தவேண்டும் என்ற அவரது வேண்டுகோளை உள்ளடக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

“யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைத் தேட, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தைப் பயன்படுத்த பிரித்தானியா மறுப்பது பெரிதும் வருத்ததிற்குரியது ” – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

“யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைத் தேட, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தைப் பயன்படுத்த பிரித்தானியா மறுப்பது பெரிதும் வருத்ததிற்குரியது ” என  நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கையை சர்வதேச  குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்க மறுத்துள்ள பிரித்தானியாவின் காரணத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கேள்விக்கு உட்படுத்தியுள்ளது.

ஐ.நா. பாதுகாப்புப் சபையில் இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தும் முன்மொழிவு வந்தால், உறுப்பு நாடுகளான சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தடுப்பதிகாரத்தைக் கொண்டு தடுக்க வாய்ப்புள்ளது என பிரித்தானியா அரசாங்கத்தின்  தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதாவது, உரோம் உடன்படிக்கையில் இலங்கை ஒப்பமிட்டவில்லை என்பதால், அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தின் மேலுரிமைக்கு இலங்கை உட்படாது என்றும், இலங்கையை அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துவதற்கு போதுமான ஆதரவு ஐ.நா. பாதுகாப்புச் சபையில் இல்லை என்பதும் பிரித்தானியாவின் நிலைப்பாடாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், இதுகுறித்துக் கேள்வியெழுப்பியுள்ள நாடு கடந்த தமிழீழ அரசாங்கம், “இனழிப்புக்கும் மானிடத்துக்கு எதிரான குற்றங்களுக்கும் போர்க் குற்றங்களுக்கும் இரையானவர்களுக்கு நீதியைத் தேட, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்தைப் பயன்படுத்த பிரித்தானியா மறுப்பது பெரிதும் வருத்ததிற்குரியது எனவும் தெரிவித்துள்ளது.

உரோம் உடன்படிக்கையில் இலங்கை ஒப்பமிட்டு ஒரு தரப்பாக இருந்திருந்தால் நாடு கடந்த தமிழீழ அரசாங்கமே நேரடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் வழக்குத் தொடுப்பரிடம் சான்றியத்தை அளித்திருக்கும். மனித உரிமைப் பேரவையோ பிரித்தானிய அரசாங்கமோ இதில் தலையிட வேண்டி ஏற்பட்டிருக்காது.

எனவே, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் போதிய ஆதரவு இல்லையென்று பிரித்தானிய அரசாங்கம் கூறியிருப்பதானது, முற்றுமுழுதாக ஏற்கக்கூடியது அல்லவெனவும், ஒரு அவசரப் போக்கு.

அத்துடன், இலங்கையை அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கு, ஐ.நா. பாதுகாப்புச் சபைக்குள் எதிர்ப்பேதும் இருப்பதாக பிரித்தானியாவுக்குத் தகவல் கிடைத்திருந்தால், அதன் விவரங்களைப் பொதுவெளியில் வெளிப்படுத்த வேண்டும். ஐ.நா. பாதுகாப்புப் சபையில் தடுப்பதிகாரம் படைத்த உறுப்பு நாடு என்ற முறையில் பிரித்தானியாவுக்குள்ள நம்பகத்தன்மையைக் காக்க இது பெரிதும் பயன்படும்.

மேலும், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்தும் ஐ.நா மனிதவுரிமைப் பேரவையின் வேண்டுகோள் என்பது, ஐ.நா. பாதுகாப்புச் சபையில் தடுப்பதிகாரம் கொண்டு தடுக்கப்பட்டாலும்கூட, அது, இலங்கையின் வடக்குக் – கிழக்குப் பகுதியில் மனிதவுரிமை உயராணையாளர் அலுவலகம் ஒன்றைத் திறப்பது போன்ற பிற தீர்மானப் பொருட்பாடுகள் மீதான உயராணையாளர் அலுவலகத்தின் மேலுரிமையை இல்லாமற்செய்து விடாது.

இதேவேளை, தற்போதைய வரைவுத் தீர்மானத்தில் உள்ளகூறுகள், இலங்கை அரசாங்கம் உள்ளகச் செயல்வழியைக் கடைப்பிடிக்கும் படி கோருகிறது. இதைவிட, இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி, ஒருவேளை தடுப்பதிகாரத்தினால் தடுக்கப்பட்டாலும் பரவாயில்லை.

அத்துடன், கடுங்குற்றங்களைப் புலனாய்வு செய்து வழக்குத் தொடரும் பொறுப்பை, அதே இலங்கை அரசாங்கத்தின் கையில் ஒப்படைப்பது என்பது, குற்றஞ்சாட்டப்பட்டவரே ஒருபோதும் நீதிபதியாக முடியாது என்ற அடிப்படையான நீதிக் கொள்கையோடு அப்பட்டமாக முரண்படுவதாகும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் எடுத்துரைத்துள்ளது.

“அமைச்சரவையிலுள்ள விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தங்கள் இன வெறி, மத வெறி பிரசாரங்களைப் பகிரங்கமாகவே மேற்கொண்டு வருகின்றனர்” – ரிஷாத் பதியுதீன் குற்றச்சாட்டு !

“அமைச்சரவையிலுள்ள விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமகே ஆகியோர் தங்கள் இன வெறி, மத வெறி பிரசாரங்களைப் பகிரங்கமாகவே மேற்கொண்டு வருகின்றனர்” என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாத் பதியுதீன் குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் உண்மையான குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்கள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு.

ஆனால், உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் இடம்பெற்றது முதல் என் மீதும், என் சமூகத்தின் மீதும் இல்லாத, பொல்லாத குற்றச்சாட்டுக்களை அரசிலுள்ள சிலர் சுமத்தி வருகின்றனர். அதில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, மஹிந்தானந்த அளுத்கமே ஆகியோரின் உளறல்கள் உச்சத்தில் உள்ளன.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலின் பின்னர் 2 ஆயிரத்து 500 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கைதுசெய்யப்பட்டனர். அதில் 250 இற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மட்டும் தற்போது சிறைகளில் இருக்கின்றார்கள். ஏனையோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். என்னையும் பல தடவைகள் அழைத்து விசாரணை செய்து சிறையில்  அடைக்க முயன்றனர். ஆனால், குற்றச்சாட்டுக்கள் எதுவும் நிரூபிக்க முடியாத சந்தர்ப்பத்தில் என்னை விடுவித்தனர்.

தேவையில்லாமல் என்னைச் சீண்டிப் பார்க்கும் அமைச்சர் விமலுக்கு எதிராக சி.ஐ.டியில் முறைப்பாடு செய்துள்ளேன். அடுத்த வாரம் அவருக்கு எதிராக மேலதிக சட்ட நடவடிக்கையையும் நாடவுள்ளேன். முஸ்லிம் சமூகத்தை இந்த அரசு தொடர்ந்து அடக்க முயன்றால் அதன் விபரீதங்கள் ஐ.நா. உள்ளிட்ட சர்வதேச மட்டத்தில் உச்சத்தில் இருக்கும் என்பதை இந்தச் சந்தர்ப்பத்தில் கூறிவைக்க விரும்புகின்றேன்” – என்றார்.

“ஐ.நாவில் இலங்கை மீது திருத்தங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவு ஐ.நா. உறுப்புரிமை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியே தீரும்.” – சம்பந்தன் நம்பிக்கை !

“ஐ.நாவில் இலங்கை மீது திருத்தங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவு ஐ.நா. உறுப்புரிமை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியே தீரும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அடிப்படைப் பிரச்சினைகள், அரச படைகளால் தமிழ் மக்கள் மீது இழைக்கப்பட்ட கொடூரங்கள் ஆகியவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் ஐ.நா. பிரேரணையின் புதிய வரைவில் பரிந்துரைகள் முன்மொழியப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையில் இலங்கை மீது திருத்தங்களுடன் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை வரைவு கனதியாகவே உள்ளது. இதை விமர்சிப்பவர்கள் விமர்சிக்கட்டும். ஆனால், இந்த வரைவு ஐ.நா. உறுப்புரிமை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியே தீரும். இது எமது அசைக்க முடியாத நம்பிக்கை.

பிரிட்டன் தலைமையில் முன்வைக்கப்பட்டுள்ள இந்தப் பிரேரணைக்கு பல நாடுகள் ஆதரவு வழங்க முன்வந்துள்ளன. பல நாடுகளின் தூதுவர்களுடன் நாம் பேச்சுக்களை நடத்தி பிரேரணைக்கு ஆதரவு வழங்குமாறும் கோரியுள்ளோம்.

அதேவேளை, பிரேரணைக்கு ஐ.நா. உறுப்புரிமை நாடுகளின் ஆதரவைக் கோரி பகிரங்க அறிக்கையொன்றையும் நாம் வெளியிட்டுள்ளோம்.

எனவே, இந்த வரைவு உறுப்புரிமை நாடுகளின் ஆதரவுடன் நிறைவேறியே தீரும். இது எமது அசைக்க முடியாத நம்பிக்கை – என்றார்.

“சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் எட்டப்பட்ட நாணய இடமாற்று ஒப்பந்தத்தை, உன்னிப்பாக அவதானிக்கப்படுகின்றது” – சர்வதேச நாணய நிதியம்

சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையில் எட்டப்பட்ட நாணய இடமாற்று ஒப்பந்தத்தை, உன்னிப்பாக அவதானிக்கப்படுவதாக  சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

இலங்கையுடன் 10 பில்லியன் யுவான் (1.54 பில்லியன் டொலர்) நாணய மாற்றத்திற்கு சீனா ஒப்புதல் அளித்துள்ளது.

குறித்த  ஒப்பந்தம்,  இலங்கையின் தற்போதைய சிரமங்களை எதிர்கொள்ள  ஏற்புடையதாக அமையும் என எதிர்ப்பார்ப்பதாக நிதி, மூலதனச்சந்தை மற்றும் அரசதொழில் முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்திருந்தார்.

இவ்விடயம் தொடர்பாக சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் ஜெர்ரி ரைஸ்  (Gerry Rice) ஊடகவியலாளரிடம் கூறியுள்ளதாவது,  சீனாவின் மக்கள் வங்கியுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் உள்ளிட்ட இலங்கையின் பொருளாதார கொள்கை நிதி முன்னேற்றங்களை சர்வதேச நாணய நிதியம் உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்துடன் நீட்டிக்கப்பட்ட நிதி திட்டம், கடந்த ஆண்டு ஜூன் 2020 இல் காலாவதியானது. இதேவேளை கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்திடன் அவசர நிதி உதவி கோரியுள்ளது.

அத்துடன் பொருளாதார சவால்கள் மற்றும் அதிகளவான பொது கடன்கள் காரணமாக குறித்த நிதியினை வழங்குவது தொடர்பில் மதிப்பீடு செய்வதற்கு காலதாமதம் ஏற்பட்டுள்ளது. ஆகவே அதனை விரைவுபடுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக தற்போது நாங்கள் ஆராய்ந்து வருகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

யாழில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை சந்திக்காமல் சென்ற இந்திய உயர்ஸ்தானிகர் !

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 13வது நாளாக இன்றும் தொடர்கின்றது.

இந்நிலையில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய உயர்ஸ்தானிகர், நீதி வேண்டி தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை  சந்திக்காமல் சென்றது போராட்டத்தில் ஈடுபட்டிருப்போரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதுடன் ஏன் அவ்வாறு செயற்பட்டார் என்ற கேள்வியையும் ஏற்படுத்தியுள்ளது.

நீதி வேண்டிய இந்த போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.

இன்றைய தினம் யாழ்ப்பாணத்துக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே மரியாதை நிமித்தமாக நல்லை ஆதீன குருமுதல்வரை சந்தித்திருந்தார். சந்திப்பினை முடித்து திரும்பும் வழியில், உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபடுவோரால் கோஷங்கள் எழுப்பப்பட்ட போதிலும் போராட்டத்தில் ஈடுபடுவோரை இந்திய உயர்ஸ்தானிகர் சந்திக்காமலேயே சென்றிருந்தார்.

குறித்த போராட்டத்திற்கு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்பினர், மத தலைவர்கள் என பரும் தனது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்.

“என்னுடைய பிறந்ததநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட நினைப்பவர்கள் ஏழைகளுக்கு உதவுங்கள்” – சிறையிலிருந்து ரஞ்சன் ராமநாயக்க கடிதம் !

“என்னுடைய பிறந்ததநாள் கொண்டாட்டங்களில் ஈடுபட நினைப்பவர்கள் ஏழைகளுக்கு உதவுங்கள்” என சிறையிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

சிறைத் தண்டனை அனுபவித்துவரும் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, தனது 58 ஆவது பிறந்த தினமான நேற்று சிறைச்சாலையில் இருந்தவாறு ஊடகங்களுக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது,

“அங்குணகொலபெலஸ்ஸ சிறையில் இருந்து எழுதுகிறேன்.
மார்ச் 11 என்பது விசேட நாள் ஆகும். இன்று (நேற்று) எனக்கு 58 வயது பூர்த்தியாகிறது.

நான்கு சுவர்களுக்குள் அடைபட்ட வாழ்க்கையின் முதலாவது பிறந்த நாளாக இன்றைய நாள் அமைந்துள்ளது. கடந்த வருடமும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சிறைக்குத் தள்ளினர். எனினும், பிறந்த நாளுக்கு ஓரிரு தினங்களுக்கு முன்னரே விடுதலை செய்யப்பட்டேன்.

‘தற்போது நான் சிறையில் இருந்தாலும் என்னை தலைப்பிட்டு வெளியில் பல கதைகள் பேசப்படுகின்றன. எனது விடுதலைக்காக பலர் வெளியில்
இருந்து செயல்படுகின்றனர். அவ்வாறு செயற்படுபவர்களுக்கு நான் ஒன்றைக் கூறுகிறேன். நான் சில நாட்கள் உள்ளே இருக்க வேண்டி இருக்கும். ஆகவே
பெரிய எதிர்பார்ப்பு எதனையும் வைத்துக்கொள்ள வேண்டாம்’
நான் யாரும் இல்லாத ஒருவன். நான் 60 வயதில் ஓய்வு
பெறப்போவதில்லை. 1963 இல் பிறந்த பலரை விட நான் பலசாலி.
ஆகவே, உயிர் இருக்கும் வரை நான் மக்கள் சேவகனாகச் செயற்படுவேன்’.

‘என்னால் தொடர்ச்சியாக கடிதம் எழுத முடியாது. வெளியில் வந்தாலும் கையசைக்க விடுகிறார்கள் இல்லை. முடியுமானபோது பின்னர் எழுதுகிறேன். இன்று கொண்டாட்டங்களில் ஈடுபட நினைப்பவர்கள் ஏழைகளுக்கு உதவுங்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

“மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கைக்கு ஆசியநாடுகள் ஆதரவளிக்கும்” – வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன நம்பிக்கை !

“ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தற்போதைய அமர்வில் இலங்கைக்கு ஆசியநாடுகள் ஆதரவளிக்கும் என எதிர்பார்ப்பதாக வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
பாக்கிஸ்தான், இந்தியா, பங்களாதேஷ் போன்ற நாடுகள் தங்கள் நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை. அதேவேளை இலங்கை குறித்து எதிர்மறையாக எதனையும் தெரிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
தீர்மானம் முன்வைக்கப்படும் வரை நாங்கள் காத்திருக்கவேண்டும் தீர்மானம் முன்வைக்கப்பட்ட பின்னரே நாடுகளின் நிலைப்பாடு தெரியவரும் என குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர் தீர்மானத்தின் உள்ளடக்கமே நாடுகளின் நிலைப்பாட்டை தீர்மானிக்கும் எனவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளா

இரும்புக் கம்பியினால் கொடூரமாக அடித்து, வீதியால் இழுத்துச் சென்று வீசிய கொடூரம் – யாழில் சம்பவம் !

கடற்கரை ஓய்வுக் கொட்டகையில் படுத்துறங்கிய இளைஞனை, இரும்புக் கம்பியினால் கொடூரமாக அடித்து, வீதியால் இழுத்துச் சென்று வீசிய கொடூர சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

பருத்தித்துறை- சுப்பர்மடம் பகுதியில் நேற்று (11.03.2021) மாலை இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சுப்பர்மடத்தைச் சேர்ந்த 22 வயதுடைய ஜெகதீசன் றீகன் என்ற இளைஞனே மிக மோசமான அடிகாயங்களுடன் மீட்கப்பட்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

முன் பகையின் காரணமாகவே இந்த கொடூரத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மூவர் இணைந்து இரும்புக் கம்பியினால் மிக மூற்க்கமாக தாக்கியதில், இளைஞன் மயக்கமடைந்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவரை வீதியால் இழுத்துச் சென்று, குறித்த சந்தேகநபர்கள் வீசியுள்ளனர்.

மேலும் சம்பவத்தில் தாக்கப்பட்ட இளைஞன், கை மற்றும் கால்கள் முறிந்த நிலையிலேயே வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.