“மே தின நிகழ்வுகளுக்கு தடை விதித்து அறிவிக்கப்பட்டுள்ள தீர்மானத்தை நாம் சவாலுக்கு உட்படுத்தப் போவதில்லை.” என முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் நேற்று அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“பங்காளிக் கட்சிகளுடனான கலந்துரையாடலின் பின்னர் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டத்தில் மே தின நிகழ்வை நாம் தனியே நடத்துவது என்று அறிவித்திருந்தோம். ஆனால், மே தின நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை என்று அரசு அறிவித்துள்ளது. ஜனாதிபதியின் மேற்பார்வையில் இயங்கும் கொரோனாத் தடுப்புச் செயலணியே இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.
கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இந்தச் செயலணி இது தொடர்பில் கலந்துரையாடியிருந்தது. அதன் பின்னர் மே தின நிகழ்வுகளுக்கு தடை விதித்துள்ளது. இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். கொரோனாதான் காரணம் எனில் அதை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் பேரணிகள் அல்லாமல் சிறு கூட்டங்களுடனாவது அந்த நிகழ்வை நடத்துவதற்கு அரசு அனுமதித்திருக்கவேண்டும்.
அரசின் இந்தத் தீர்மானத்தின் பிரகாரம் அரசுக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன என்று எதிரணியினரும், ஊடகங்களும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அரசு எடுத்த இந்தத் தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்த விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.