“பாடசாலை மாணவர்கள் 11 பேரை கடத்தி அவர்களை கொலை செய்து கடலில் போட்டவர்களை விடுவிப்பதற்கான முயற்சி தேமற்கொள்ளப்படுகின்றது.” என எதிர்க்கட்சி உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை(23.04.2021) நடைபெற்ற அரசியல் பழிவாங்கல்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைமீதான முதலாம் நாள் விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் கூறுகையில்,
அரசியல் பழிவாங்கல் குறித்து ஆராய ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ள ஆணைக்குழுவின் தலைவர் குறித்தும் இந்த ஆணைக்குழு குறித்தும் நாட்டிற்கு விசர்பூனை ஆணைக்குழு என கூறினால்தான் தெரியும்.
அந்தளவு மோசமான, கிறுக்குத்தனமான ஆணைக்குழுவாகும். நீதிமன்றத்தை பலவீனப்படுத்தி சட்டத்தை ஆணைக்குழு கையில் எடுக்கும் விதமாகவே இது அமைந்துள்ளது. இந்த ஆணைக்குழு மூலமாக எதிர்காலத்தில் எடுக்கும் நடவடிக்கைகள் குறித்தே இன்று பிரச்சினை எழுகின்றது.
ஆணைக்குழு அறிக்கைக்கு அமைய நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர்கள் மற்றும் ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் பிரஜாவுரிமை பறிக்கப்படும் நிலைமையொன்று பாராளுமன்றத்தின் ஊடாக முன்னெடுக்க அரசாங்கம் முயற்சிப்பதாக எமக்கு தெரியவருகின்றது. இதற்கு அரசாங்கத்தில் உள்ள பலர் விருப்பமில்லை என்பதும் எமக்கு தெரியும்.
எதிர்க்கட்சி உறுபினர்களின் பிரஜாவுரிமையை பறிப்பது ஜனநாயக செயற்பாடு அல்ல, இந்த செயற்பாடுகள் பயந்த, பலவீனமான அரசியல் நகர்வுகள் என்றே நாம் கருதுகின்றோம். இந்த ஆணைக்குழுவின் நோக்கம் என்னவெனில், முன்னைய ஆட்சிக்காலத்தில் குற்றவாளிகள் என அடையாளம் காணப்பட்டு தற்போது சிறையில் உள்ளவர்கள் மற்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளவர்களை விடுவிப்பதாகவும். முக்கியமாக முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் அவருடன் நெருக்கமாக செயற்பட்ட தசநாயக, சுமித் ரணசிங்க ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டு ஒன்று உள்ளது.
பாடசாலை மாணவர்கள் 11 பேரை கடத்தி அவர்களின் பெற்றோரிடம் கப்பம் கேட்ட குற்றச்சாட்டு. இதில் தமிழ் சிங்கள, முஸ்லிம் மாணவர்கள் இருந்தனர். இந்த உண்மைகள் வெளி வந்த நேரத்தில் அவர்களை கொலை செய்து கடலில் போட்டனர்.
இவ்வாறான சம்பவம் இன்று ஆட்சில் உள்ளவர்களின் குடும்பத்தினருக்கு நடந்தால் எவ்வாறு இருக்கும். இவ்வாறான நபர்களை விடுதலை செய்ய ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைப்பது ஏற்றுக்கொள்ளக் கூடிய விடயம் ?, இதுவா சட்ட நியாயாதிக்கம் ?, இவ்வாறன செயற்பாடுகளை நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டோம்.
அதேபோல் அவன்கார்ட் நிறுவன தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதி போன்றவர்களை விடுதலை செய்யவும் ஆணைக்குழு வலியுறுத்துகின்றது. இவர்களை காப்பாற்ற அன்றும் எமது தரப்பில் இருந்த சட்டத்தரணிகள் முன்வந்தனர், அவர் இன்று ஜனாதிபதியுடனும் மோதிக்கொண்டுள்ளார்.
அதேபோல் மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவை விடுதலை செய்யக்கோரியும் இந்த விசர் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளது. அதே போல் சுனில் ரத்நாயக்க உள்ளிட்ட இராணுவத்தினர் கடந்த 2000 ஆம் ஆண்டில் செய்த எட்டுப்பேர் கொலை, அவர்களை தாக்கி தலைகளை வெட்டிய சம்பவம் தொடர்பில் அவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டது.
ஒரு இராணுவ சிப்பாயாக இருக்கலாம், அல்லது இராணுவ அதிகாரி என்பதற்காக அநாவசியமான கொலைகளை செய்தவர்களை விடுதலை செய்ய முடியாது. அதே போல் குற்றவாளிகளை விடுதலை செய்துவிட்டு இராணுவ வீரர்களை பாதுகாத்தோம் என கூறவும் முடியாது. இதனை எவரும் ஏற்றுகொள்ள முடியாது, கொலைகாரர்களை விடுதலை செய்துவிட்டு எவராலும் புகழாரம் சூட்டிக்கொள்ள முடியாது என்றார்.