உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“மேய்ச்சல் தரை இன்மையால் இறந்து கிடக்கும் நூற்றுக்கணக்கான கால்நடைகள்” – நேரில் சென்று பார்வையிட்ட தவராசா கலையரசன் !

மேய்ச்சல் தரை இன்மையால் இறந்து கிடக்கும் நூற்றுக்கணக்கான கால்நடைகளால்  தவிக்கும் திருக்கோவில் பிரதேச பண்ணையாளர்களை  நேரில் சென்று பார்வையிட்டுள்ளார் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்.

பண்ணையாளர்கள் ஏதிர்கொள்ளும் பிரச்சினைகளை கேட்டறிந்து றூபஸ் குள பகுதிக்கு இன்று (28.1.2021) நண்பகல் சென்று பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்..

திருக்கோவில் பிரதேச மேய்ச்சல் தரை  விடையம் தொடர்பாக அமைச்சர் சீ.பி.ரத்நாயக்கா அவர்களை சந்தித்து பண்ணையாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடிய போது விரைவில் தீர்வை பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கியிருந்தார்.

IMG 20210128 144518

காலாகாலமாக ஜீவனோபாய தொழிலாக கால்நடை வளர்ப்பினை  மேற்கொண்டு வரும் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் பண்ணையாளர்கள் மனதில் எதிர்காலத்தில் இவ் இழப்பினை எவ்வாறு ஈடுகொடுக்க போகின்றோம் என்ற ஏக்கம் இவர்களது மனதில் உள்ளது.

வட்டமடு மேய்ச்சல் தரை விவகாரம் நீதிமன்ற வழக்காக உள்ள நிலையில் இருபதாயிரத்திற்கு மேற்பட்ட கால்நடைகளை பராமரிப்பதற்கு மேய்ச்சல் தரை இன்மையால் குறுகிய பரப்பினுள்  வைத்திருப்பதால் புதிய வகை நோய் தாக்கத்தினால் நூற்றுக்கணக்கான கால்நடைகள் இறந்து கிடக்கின்றது பல கால்நடைகள் இறக்கும் தறுவாயில் உள்ளது. இது தொடர்பாக பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் தலைமையில்  அவசர கூட்டமொன்றை ஏற்படுத்தி கால்நடை வைத்தியர் ,  உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்து கால்நடை இறப்பிற்கான காரணம் என்னவென்பதை அறிவதோடு மேய்ச்சல் தரையை பெற்று கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கால்நடை பண்ணையாளர்கள் கால்நடைகளுக்கு ஒரு வகையான நோய் தாக்கத்தினால் நூற்றுக்கும் மேற்பட்ட மாடுகள் உயிரிழந்துள்ளது என தெரிவித்தனர்.

1980-ஆம் ஆண்டு காலப்பகுதி தொடக்கம்  தற்போது வரை   மேய்ச்சல் தரை இல்லாததால் குறுகிய பகுதிக்குள் கால்நடைகளை பராமரிப்பதால்  கால்நடைகளுக்கு  நோய் ஏற்படக்கூடிய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட திருக்கோயில் பிரதேசத்துக்கு உட்பட்ட திருக்கோயில் விநாயகபுரம் தங்க வேலாயுதம் கஞ்சிகுடிச்சாறு மற்றும் தாண்டியடி, மண்டானை குடியிருப்பு முனை காஞ்சிரங்குடா போன்ற கிராமங்களில் உள்ள  பண்ணையாளர்களின் இருபது ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

“இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைமையை நிவர்த்தி செய்ய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” – சர்வதேச மன்னிப்புச் சபை

“இலங்கையில் மோசமடைந்து வரும் மனித உரிமைகள் நிலைமையை நிவர்த்தி செய்ய ஐ.நா. மனித உரிமைகள் பேரவை அவசர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என சர்வதேச மன்னிப்புச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

அடுத்த மாதம் மனித உரிமைகள் பேரவை கூடும் போது ஒரு வலுவான தீர்மானத்தை முன்வைக்க உறுப்பு நாடுகளுடன் இணைந்து பணியாற்றுவதற்கான அதன் உறுதிப்பாட்டைப் பின்பற்றுமாறும் பிரித்தானியாவை வலியுறுத்தியுள்ளது.

இலங்கை தொடர்பான ஐ.நா.வின் மோசமான அறிக்கையைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான நீதிகான சர்வதேச உந்துதலுக்கு பிரித்தானியா தலைமை தாங்க வேண்டும் என்றும் அச் சபை கேட்டுக்கொண்டுள்ளது.

போர் நிறைவடைந்து சுமார் 12 வருடங்கள் ஆகியும், மோசமடைந்து வரும் மனித உரிமை நிலைமை மற்றும் எதிர் காலத்தில் அதிகரிக்கூடிய ஆபத்து பற்றியும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகம் எச்சரித்துள்ளது.

இந் நிலையில் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை வழங்குவதில் இலங்கையின் மோசமான நிலையையும் நாட்டில் மனித உரிமைகள் மீது ஏற்படுத்தியிருக்கும் விளைவையும் காட்டுகிறது என சர்வதேச மன்னிப்புச் சபையின் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் இலங்கை குறித்து இன்னும் கடுமையான மேற்பார்வை செய்ய அறிக்கையின் முக்கிய பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையிடம் சர்வதேச மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது.

சொந்த மகளை பாலியில் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த தந்தைக்கு விளக்கமறியல் !

மட்டக்களப்பு தலைமையக காவற்துறை பிரிலுள்ள பிரதேசத்தில் 13 வயதுடைய சொந்த மகளை பாலியில் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்த கைது செய்யப்பட்ட  தந்தைக்கு எதிர்வரும் 11 திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் இன்று வியாழக்கிழமை (28) உத்தரவிட்டார்.

மீன்டிபி தொழிலை மேற்கொண்டுவரும் 38 வயதுடைய 4 பிள்ளைகளின் தந்தையான குறித்த நபர் சம்பவதினமான நேற்று புதன்கிழமை மதுபோதையில் இருந்துள்ளதுடன் 13 வயது மகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததோடு தன்னுடன் படுக்கவருமாறு அழைத்ததையடுத்து குறித்த சிறுமி தாயாரிடம் தெரிவித்ததையடுத்து காவற்துறையிரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது.

இதனையடுத்துகாவற்துறையினர் குறித்த நபரை உடனடியாக கைது செய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதவான் ரி.தியாகேஸ்வரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் 11 ம் திகதிவரை விளக்கமறியில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

“நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது” – எச்சரிக்கின்றார் முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய !

“நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது” என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய எச்சரிக்கை விடுத்துள்ளார் .

நாட்டின் சமகால அரசியல் நிலைவரம் தொடர்பில் கருத்துரைக்கும்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாட்டில் தற்போது உருவாக்கப்பட்டு வருகின்ற இனவாத அரசியல் கலாசாரம் இலங்கையை நீண்ட காலத்துக்கு நெருக்கடிக்குள் தள்ளப்போகின்றது. இந்த விடயத்தில் அனைவரும் குறுகிய நோக்கத்தில் பார்க்கின்றனர். ஆனால், தூரநோக்கு சிந்தனையுடன் இந்த நாட்டின் இன – மத உரிமைகளைப் பலப்படுத்தும், பாதுகாக்கும் நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.

புதிய அரசமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இந்தப் புதிய அரசமைப்பில் ஜனநாயகம், மனித உரிமைகள் முழுமையாகப் பாதுகாக்கப்பட வேண்டும். அரசமைப்பின் 20 ஆவது திருத்தத்தைக் கொண்டுவந்து அதன் மூலம் பறிக்கப்பட்ட உரிமைகள் முழுமையாக புதிய அரசமைப்பில் பாதுகாக்கப்பட வேண்டும். இதனை வென்றெடுக்கும் பொறுப்பு சிவில் அமைப்புகளைச் சார்ந்தது.

அடுத்த தேர்தலின் பின்னர் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்றால் சுயாதீன ஆணைக்குழுக்கள் தேவைப்படும். அதனை வலியுறுத்த சிவில் சமூகங்களின் முழுமையான ஆதரவு தேவைப்படும்.

புதிய அரசமைப்பை உருவாக்கி தமிழ், முஸ்லிம் மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டும். இனவாதத்தைத் தூண்டி அரசியலை முன்னெடுக்கும் தற்போதைய அரசியல் பயணம் தொடருமாயின் எதிர்காலத்தில் மிகப்பெரிய பிரச்சினைகள் நாட்டினுள் உருவாகும்.” என தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வது அவசியம்” – ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல் !

இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொண்டு, அதனை சர்வதேச தரத்துக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

இணைய வழியாக நடைபெற்ற ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை ஆகியன இணைந்த ஆணைக்குழுவின் 23 ஆவது சந்திப்பில் இவ்விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.

தகுந்த திருத்தங்களைச் செய்யும் நோக்கில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் விதிகளை மீள்பரிசீலனை செய்வதற்கு இலங்கை அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.

மனித மற்றும் தொழிலாளர் உரிமைகள், சுற்றுச் சூழல் மற்றும் நல்லாட்சி தொடர்பான ஜி.எஸ்.பி. பிளஸ் திட்டத்தின் கீழ் உள்ள 27 சர்வதேச சாசனங்களைச் திறம்படச் செயற்படுத்தவுள்ளதாகவும் இலங்கையின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இலங்கை மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் சார்ந்த பிரச்சினைகளில் தொடர்ந்தும் இணைந்து பணியாற்றுவதன் முக்கியத்துவம் குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டுள்ளன.

இதேநேரம், ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 30/1 தீர்மானத்தின் இணை அனுசரணையிலிருந்து இலங்கை விலகியிருப்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியம் கவலை வெளியிட்டுள்ளது.

இலங்கையின் பல்வேறு சமூகங்களிடையே நல்லிணக்கம், நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் அமைதியான சகவாழ்வை வளர்ப்பதன் முக்கியத்துவத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது.

“கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யத் தனியார் துறைக்கு அனுமதியில்லை” – அரசு திட்டவட்டம் !

இலங்கைக்குக் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யத் தனியார் துறைக்கு அனுமதியில்லை என்று அரசு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளைக் கையாளும் ஜனாதிபதியின் குழு இந்தத் தகவலை  வெளியிட்டுள்ளது.

களஞ்சிய வசதிகள் உள்ள தனியார் துறையினர் கொரோனாத் தடுப்பூசிகளை இறக்குமதி செய்யத் தயாராகி வருகின்ற நிலையிலேயே, இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளைக் கையாளும் பொறுப்பை அரசு கொண்டுள்ள நிலையில், தனியார் துறைக்குத் தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய அனுமதிப்பது பாதுகாப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசிகளை இறக்குமதி செய்யத் தனியார் துறை கோரிக்கை விடுத்த போதிலும், இறக்குமதி செய்யவோ, விற்பனை செய்யவோ அரசு தடை விதித்துள்ளது.

இந்தியாவிடம் இருந்து கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டார் ஜனாதிபதி – தடுப்பூசிகளை போடும்பணி வெள்ளிக்கிழமை ஆரம்பம் !

இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளை ஜனாதிபதி கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொறுப்பேற்றுள்ளார்.

இந்தியாவினால் அன்பளிப்பு செய்யப்பட்ட ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசிகளுடனான விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது.

No description available.

5 இலட்சம் தடுப்பூசிகள் இதன்போது கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய விமான சேவைக்கு சொந்தமான ஏ ஜ – 281 விமானத்தின் ஊடாக இன்று காலை 11.35 மணியளவில் குறித்த தடுப்பூசிகள் எடுத்துவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

42 பெட்டிகளில் அடைக்கப்பட்ட நிலையில் குறித்த தடுப்பூசிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதே நேரம் , கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வழங்கும் நடவடிக்கைகள் வெள்ளிக்கிழமை கொழும்பின் ஆறு மருத்துவமனைகளில் இடம்பெறவுள்ளன
பொதுசுகாதார சேவைகள் பிரதிபணிப்பாளர் நாயகம் ஹேமந்த ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை கொழும்பு தெற்குபோதனா வைத்தியசாலை கொழும்பு வடக்கு போதனா வைத்தியசாலை ஹோமாஹம ஆதார வைத்தியசாலை முல்லேரியா வைத்தியசாலை மற்றும் தொற்றுநோய் வைத்தியசாலை ஆகியவற்றில் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
அடுத்தவாரம் ஏனையவைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் மருந்தினை வழங்கும் நடவடிக்கைகள் இடம்பெறும் என அவர் தெரிவித்துள்ளார்.

“ஜனநாயகம் மனித உரிமைகள் குறித்து எவரும் கற்றுக்கொடுக்கவேண்டிய நிலையில் இலங்கை இல்லை” – வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே

ஜனநாயகம் மனித உரிமைகள் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை எவ்வாறு மேற்கொள்வது என்பது குறித்து எவரும் கற்றுக்கொடுக்கவேண்டிய நிலையில் இலங்கை இல்லை என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஜயனத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் இவை கடந்த வருடம் அழிக்கப்பட்டுவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சிலோன் டுடேயிற்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“மீறல்களில் ஈடுபடுபவர்களையும் வன்முறைகளையும் ஏனைய நாடுகளிலேயே காண்கின்றோம் இலங்கையில் இல்லை.

அமெரிக்கா மீண்டும் மனித உரிமை பேரவையில் இணைந்துகொள்ளக்கூடும். அமெரிக்கா உலகின் மனித உரிமைகள் குறித்து நேர்மையான அக்கறையை கொண்டிருந்தால் ,இலங்கை மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் நாடில்லை. நாட்டில் தற்போத அமைதி நிலவுகின்றது என்பதை நாங்கள் நினைவுபடுத்தவேண்டியிருக்கும்.

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பைடனின் வெற்றி முக்கியமானது என்பதை வலியுறுத்தியுள்ள அதேவேளை பைடன் தனது நாட்டில் ஒழுங்கை ஏற்படுத்தவேண்டிய நிலையில் ஜனநாயகத்தையும் மனித உரிமைகளையும் மீள ஏற்படுத்தவேண்டிய நிலையில் காணப்படுகின்றார்.

இலங்கை ஒரு வன்முறை நாடில்லை. இங்கு வன்முறைகள் இடம்பெறவில்லை ஏனைய நாடுகளில் இடம்பெறும் சிறிய சம்பவங்களே இடம்பெறுகின்றன .இலங்கையில் இனமத ஐக்கியம் நிலவுகின்றது இதனை நாங்கள் ஏனைய நாடுகளுடன் பகிர்ந்துகொள்ள தயாராகவுள்ளோம்.” எனவும் தெரிவித்துள்ளார்.

 

“தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையிலிருந்து காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் வழிபாட்டுச்சின்னங்கள் மீள நிறுவப்படவேண்டும்” – துரைராசா ரவிகரன் பொலிஸில் முறைப்பாடு !

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு குருந்தூர் மலையில் இருந்த தமிழர்களுடைய வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அப்பகுதி கிராம மக்களின் சார்பாக முல்லைத்தீவு காவல்துறை நிலையத்தில் இன்று (27.01.2020 ) முறைப்பாடொன்றினைப் பதிவுசெய்துள்ளார்.

அதேவேளை காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் மீண்டும் அவ்விடத்தில் நிறுவவேண்டும் எனவும், தொடர்ந்தும் தமிழ் மக்கள் குருந்தூர் மலைக்குச் சென்று தமது வழிபாடுகளை மேற்கொள்ள அனுமதிக்கவேண்டும் எனவும் ரவிகரன் குறித்த முறைப்பாட்டினூடாக கோரியுள்ளார்.

மேலும் குறித்த முறைப்பாடு தொடர்பில் ரவிகரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்,

கடந்த 18.01.2021அன்று முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலைப் பகுதிக்கு இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க படையினர் சகிதம் வருகைதந்து அங்கு தொல்லியல் அகழ்வுக்கான பணிகளை ஆரம்பித்து வைத்தார்.

இந் நிலையில் அங்கிருந்த முச்சூலம் உள்ளிட்ட தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலமாகவும், ஆலய நிர்வாகத்தினர் மற்றும் அங்குள்ள மக்கள் மூலமாக எனக்கு தகவல் தரப்பட்டது.

அதேவேளை குருந்தூர் மலைக்கு வழிபாட்டுக்குச் செல்லும் தமிழ் மக்களும் அங்கு செல்லவிடாமல் தடுக்கப்படுகின்றனர் எனவும் என்னிடம் கோவில் நிவாகத்தினர் முறையிட்டிருந்தனர்.

இந் நிலையில் மக்களின் இந்த முறைப்பாடுகளுக்கமைய குருந்தூர் மலை ஆதிசிவன், ஐயனார் கோவிலுக்கு 27.01.2021 இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன்,உள்ளிட்டவர்களுடன் நானும், சில பிரதேசசபை தவிசாளர்கள், உறுப்பினர்களோடும் சென்றிருந்தோம்.

அப்போது மக்களால் முறையிடப்பட்டதைப் போலவே, அங்கு சென்ற எங்களையே அங்கிருந்த இராணுவத்தினர் மலைப் பகுதிக்குச் செல்லவிடாது தடுத்திருந்தனர். பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் அவர்கள் இதுதொடர்பில் இராஜாங்க அமைச்சர் விதுர விக்கிரமாநாயக்க மற்றும் உரிய அதிகாரிகளுக்கு தெரியப்படுத்திய நிலையில் குருந்தூர் மலைப் பகுதிக்குச் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டோம்.

இதனைவிட ஆலயநிர்வாகத்தினர், ஊடகங்கள் வாயிலாக அறிந்ததைப்போலவே அங்கிருந்த தமிழர்களின் வழிபாட்டுச்சின்னங்களும் அங்கிருந்து அகற்றப்பட்டிருப்பதையும் அவதானிக்கமுடிந்தது.

மேலும் கடந்த 10.09.2020 அப்பகுதி மக்களின் முறைப்பாட்டிற்கு அமைய குருந்தூர்மலைப் பகுதிக்கு சென்றபோது அப்போதும் அங்கு இருந்த தமிழர்களின் வழிபாட்டுச்சின்னங்கள் அமைக்கப்பட்டிருந்த இடத்திலிருந்து இனந்தெரியாதவர்களால் காணாமல் ஆக்கப்பட்டிருந்தது.

அதேவேளை கடந்த 01.10.2020 அன்று குமுழமுனைப்பகுதித் தமிழ் மக்கள் அங்கு பொங்கல் வழிபாடுகளை மேற்கொள்வதற்காகச் சென்றபோது, அமைக்கப்பட்ட இடத்திலிருந்து காணாமல் போயிருந்த தமிழர்களின் வழிபாட்டுச் சின்னமான முச்சூலம், அருகே இருந்த காட்டிற்குள் உடைத்து வீசப்பட்டிருந்ததை அவதானித்திருந்தனர்.

இந்நிலையில் குறித்த சூலத்தினை எடுத்து ஏற்கனவே இருந்த இடத்தில் வைத்து அன்றைய பொங்கல் வழிபாடுகளை மேற்கொண்டிருந்தனர்.

அதன் தொடர்ச்சியாக கடந்த 18.01.2021 அன்று அமைச்சர் வருகைதந்தபோது மீண்டும் அங்கிருந்த தமிழர்களின் வழிபாட்டுச் சின்னங்கள் அங்கிருந்து அகற்றப்பட்டிருப்பதாக அறியமுடிந்தது.

இதிலே குறிப்பாக கடந்த 10.09.2020 நீதிமன்றில் இடம்பெற்ற இந்த குருந்தூர்மலை தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றில், தொல்லியல் திணைக்களம் குருந்தூர் மலையில் உள்ள தொல்பொருட்களைப் பாதுகாப்பதற்கு பாதுகாப்புக்கோரியிருந்தது.

இந் நிலையில் நீதிமன்று தொல்லியல் திணைக்களம் கோரியதற்கமைய குருந்தூர்மலை வளாகத்தில் ஊர்காவல்படையின் பாதுகாப்பு காவலரண் அமைப்பதற்கு அனுமதி வழங்கியிருந்தது.

20210127 152917

இவ்வாறானதொரு சூழ்நிலையிலேதான் அங்கு பாதுகாப்பு தரப்பினர் இருந்த நிலையில், அங்கிருந்து தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு அடையாளங்கள் அங்கிருந்து இனந்தெரியாதவர்களால் காணாமல் ஆக்கப்பட்டிருக்கின்றது.

இந் நிலையில் இவ்வாறு தமிழர்களின் பூர்வீக வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பிலே, 27.01.2020 இன்று முல்லைத்தீவு காவல்துறை நிலையத்தில் அப்பகுதி கிராமமக்களின் சார்பாக முறைப்பாடொன்றைப் பதிவுசெய்துள்ளேன்.

மேலும் குறித்த முறைப்பாட்டிலே, காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் வழிபாட்டுச்சின்னங்கள் மீள நிறுவப்படவேண்டும் எனவும், அங்கு தமிழ் மக்கள் வழிபாடுகளை மேற்கொள்வதற்கு தொடர்ந்து அனுமதிக்கவேண்டும் எனவும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளேன் ” என்றார்.

“போரில் ஒரு சில தவறுகள் இடம்பெறுபவை தவிர்க்க முடியாது” – கெஹலிய ரம்புக்வெல

“போரில் ஒரு சில தவறுகள் இடம்பெறுபவை தவிர்க்க முடியாது” என அமைச்சரவைப் பேச்சாளாரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல நேற்று(26.01.2021)  தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஜெனிவாவில் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 30/1 தீர்மானம் முற்று முழுதாக தேசத்துரோக செயல் என்பதே எமது நிலைப்பாடாகும்.

ஆணைக்குழுக்களை உருவாக்கி உள்ளகப் பொறிமுறை ஒன்றின் மூலமாக தீர்வுகளை எட்ட முயற்சித்த காலகட்டத்திலேயே 2015இல் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது எனவும் அவர் கூறினார்.

மங்கள சமரவீர, இலங்கையில் போர்க்குற்றங்கள் இடம்பெற்றன என்பதை ஏற்றுக்கொண்டு நாட்டுக்கு எதிரான நெருக்கடியை 2015 இல் ஜெனிவாவில் உருவாக்கினார். எனினும், இறுதி ஜெனிவாக் கூட்டத்தில் திலக் மாரப்பன, 2015 தீர்மானத்தில் இலங்கை அரசமைப்புக்கு முரணான பல சரத்துக்கள் உள்ளன என்று சுட்டிக்காட்டினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் அல்லது நிராகரிக்கும் அதிகாரம் எமக்கே உள்ளது. சுயாதீன நாடு என்ற அடிப்படையில் அரசு தீர்மானம் எடுக்கும் .

போரில் ஒரு சில தவறுகள் இடம்பெறுபவை தவிர்க்க முடியாது. தவறுகள் இடம்பெறவில்லை என எம்மால் கூற முடியாது. எனவே, அது குறித்து ஆராய்ந்து, பாதிக்கப்பட்ட நபர்களுக்கு நியாயம் பெற்றுக்கொடுப்பதில் அரசு  உறுதியான நிலைப்பாட்டில் உள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.