உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை !

நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

“யாழ்ப்பாண மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவினரால் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் மாதிரிகள் பெறப்பட்டு பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன.

அதன் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை நேற்று(12.01.2021) இரவு 9.30 மணிக்கு வெளியாகியுள்ளது. அதில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அறிக்கை கிடைத்துள்ளது” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது. அதனால் கடந்த 5ஆம் திகதி நாடாளுமன்றில் அவருடன் நெருக்கமாகப் பழகியவர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் நேற்று சுயதனிமைப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை !

நீதிமன்ற அவமதித்தமை தொடர்பில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவை பல்லன்சேன தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனை வழங்கி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

சிசிர டி ஆப்ரூ, விஜித் மலல்கொட மற்றும் பிரீதி பத்மன் சூரசேன ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இந்த தீர்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது

“ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்” – அமைச்சர் நாமல் ராஜபக்‌ச

“ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும்” என இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ச தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச தனக்குக் கடுமையான உயிர் அச்சுறுத்தல் விடுத்துள்ளதால், தனக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தாமதமின்றி மேற்கொள்ளுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின், நேற்றுமுன்தினம் காவற்துறை மா அதிபருக்குக் கடிதம் அனுப்பியிருந்தார்.

இது குறித்து கருத்துத் தெரிவிக்கும்போதே அமைச்சர் நாமல் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

“ஐக்கிய மக்கள் சக்தியினுள் ஹரின் பெர்னாண்டோவுக்குப் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. அவருக்கு மேலதிக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தியின் உள்ளக விடயங்களில் ஹரின் பெர்னாண்டோவுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், அதற்கும் ஜனாதிபதி பொறுப்புக்கூற வேண்டிய நிலை ஏற்படும்.

எனவே, கட்சியின் உள்ளகப் பிரச்சினைகளைக் கருத்தில்கொண்டு, ஹரின் பெர்னாண்டோவின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட வேண்டும் என குறிப்பிட்டார்.

“நாட்டில் இனப்பிரச்சினை என எதுவுமே கிடையாது. அது 2009ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்துவிட்டது” – அமைச்சர் காமினி லொகுகே

“நாட்டில் இனப்பிரச்சினை என எதுவுமே கிடையாது. அது 2009ஆம் ஆண்டுடன் முடிவுக்கு வந்துவிட்டது” என போக்குவரத்து அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதில் வழங்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சர் காமினி லொகுகே இது தொடர்பில் மேலும் கூறியுள்ளதாவது,

“தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் என்று கூறிக் கொள்பவர்கள் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண எவ்வித நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை.

மாகாணசபைத் தேர்தல் உரிமை வடக்கு மற்றும் கிழக்கு மக்களிடமிருந்து இல்லாமல் போனதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பினர் பொறுப்பு கூற வேண்டும்.

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்துமாறு ஆரம்ப காலத்தில் இருந்து பலதரப்பினரால் அழுத்தம் பிரயோகிக்கப்படுகின்றது.

13ஆவது திருத்தத்தை முழுமையாக செயற்படுத்தினால் நாட்டில் மாறுப்பட்ட பல பிரச்சினைகள் தோற்றம் பெறும். காணி மற்றும் பொலிஸ் அதிகாரம் ஒரு மாகாணத்திற்கு மாத்திரம் பிரித்து வழங்கினால் அங்கு சுயாட்சி தன்மையே நிலவும்.

காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்திற்கு மாத்திரமல்ல எந்த மாகாணங்களுக்கும் ஒருபோதும் பிரித்து வழங்கப்படமாட்டாது.

இவ்விடயத்தில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் விதிவிலக்கல்ல. ஏனைய மாகாணங்களுக்கு வழங்கப்படும் அதிகாரங்கள், சலுகைகள் மற்றும் அபிவிருத்தி திட்டங்கள் அனைத்தும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன.

நாட்டில் இனப்பிரச்சினை என்பதொன்று கிடையாது. 2009ஆம் ஆண்டுடன் இனப்பிரச்சினை முடிவுக்கு கொண்டுவரப்பட்டு தேசிய பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மாகாணசபை முறைமை நாட்டுக்கு அவசியம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். மாகாண சபை முறைமையில் ஒரு சில குறைப்பாடுகள் காணப்படுகின்றன.அவை திருத்தப்பட்டு மாகாண சபை தேர்தல் வெகுவிரைவில் நடத்தப்படும். எந்த இன மக்களின் உரிமைகளையும் பறிக்க வேண்டும் என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு கிடையாது.

பொது சட்டத்திற்கு அனைத்து இன மக்களும் கட்டுப்பட்டால் எவ்வித பிரச்சினைகளும் தோற்றம் பெறாது” என அவர் தெரிவித்துள்ளார்.

“எனது தந்தை உட்பட இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற பிரபாகரனின் மரணத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை” – சஜித் பிரேமதாச

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ , ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அம்பாறை ஆற்றிய உரை தொடர்பாக பொலிஸ்மா அதிபருக்கு கடிதம் ஒன்றை இன்று அனுப்பி வைத்துள்ளார் .

அண்மையில் அம்பாறை , உஹனவில் உள்ள லாத்துகல ள்ள லாத்துகல கிராமத்தில் இடம்பெற்ற ” கிராமத்துடன் உரையாடல் ” நிகழ்வில் ஜனாதிபதி ஆற்றிய உரையானது தனது உயிர் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் அமைந்துள்ளதாகவும் தனக்கு பாதுகாப்பினை வழங்குமாறும் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில் 82நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ ஆற்றிய உரைக்கு ஜனாதிபதி பதிலளித்தமை தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கண்டனம் வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிடும் போது ,

ஜனாதிபதியின் இந்த ‘வலுவான’ பதிலை ஒரு ஜனநாயக நாட்டில் நடக்கக் கூடாத ஒரு தீவிர அறிக்கையாக தான் பார்க்கிறேன் என்று கூறியுள்ளார்.

எனது தந்தை உட்பட இந்த நாட்டில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற பிரபாகரனின் மரணத்தில் எங்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. பிரபாகரன் ஒரு பயங்கரவாதி.

ஆனால் ஹரின் பெர்னாண்டோ இந்த நாட்டின் இளம் தலைவர், இந்த நாட்டின் ஜனநாயக சட்டத்திற்குள் அச்சமின்றி தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் என சஜித் கூறினார். 8293ஷ

82963.ஹரின் பெர்னாண்டோவுக்கு விடுக்கப்பட்ட இந்த அச்சுறுத்தலை ஐக்கிய மக்கள் சக்தியின் முழு நாடாளுமன்றக் குழுவிற்கும் விடுக்கப்பட்டதாக கருதுவதாக குறிப்பிட்டார்.

மேலும் ஹரின் பெர்னாண்டோவுக்கு ஏதேனும் தீங்கு ஏற்பட்டால் ஜனாதிபதியும் அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 

“நேர்மையான மனிதனுக்கு ஒரு முகமே இருக்க முடியும் . கோட்டாபாய எண்ணும் அந்தக் காலம் மலையேறி விட்டது” – ஜனாதிபதிக்கு அநுர குமார திசாநாயக்க பதிலடி !

“நேர்மையான மனிதனுக்கு ஒரு முகமே இருக்க முடியும் . கோட்டாபாய எண்ணும் அந்தக் காலம் மலையேறி விட்டது” என ஜே.வி.பியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனக்கு இரு வேறு முகங்கள் இருப்பதாகவும் தேவைப்பட்டால் ‘கடுமையான’ பக்கத்துக்கு மாறி தன்னால் தண்டனைகளைக் கொடுக்கவும் முடியும் எனும் தொனியில் அம்பாறையில் வைத்து ஜனாதிபதி வெளியிட்ட கடுமையான கருத்தை கண்டித்து பேசும் போதே ஜே.வி.பியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

ஒரு ஜனநாயக நாட்டில் இவ்வாறு பேசுவது ஏற்புடையதல்ல. ஷதற்போதிருக்கும் பொருட்களின் விலையுயர்வு, கொரோனா தடுப்பு மருந்தின் இறக்குமதி செலவு அதிகரிப்பு என பல்வேறு காரணங்களுக்காக ஜனாதிபதிக்கு வெறுப்பும் கோபமும் இருக்கலாம். ஆனால், அதனை பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் தெரிவிக்கும் கலாசாரத்துக்கு இடமளிக்க முடியாது.

ஜனாதிபதியின் கருத்துக்கள் தனது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருப்பதாக ஹரின் பெர்னான்டோ ஏலவே பொலிசில் முறையிட்டுள்ள அதேவேளை ஹரினுக்கு ஏதும் ஆபத்து ஏற்பட்டால் அதற்கு கோட்டாபய ராஜபக்சவே பொறுப்பென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

இந்நிலையிலேயே, நேர்மையான மனிதனுக்கு ஒரு முகமே இருக்க முடியும் எனவும் கோட்டாபாய எண்ணும் அந்தக் காலம் மலையேறி விட்டதெனவும் அநுரகுமார தெரிவித்துள்ளார்.

அமைச்சர் வாசுதேவவுடன் நெருங்கிய தொடர்பிலிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் சுயதனிமைப்படுத்தலில் !

அமைச்சர் வாசுதேவ நாணயக்கார கொவிட்-19 தொற்றுக்குள்ளானதாக உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து அவருடன் நெருங்கிய தொடர்புள்ளவர்களாக 10 பாராளுமன்ற உறுப்பினர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களும் பிசிஆர் சோதனைக்கு உட்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன் சுயதனிமைப்படுத்தலுக்கும் உள்ளாகியுள்ளனர்.

அமைச்சர் வாசுதேவ 2021ஆம் ஆண்டின் தொடக்கக் கூட்டத் தொடரின் நான்கு நாள் அமர்வுகளிலும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“யார் யாரெல்லாம் எப்படி எம்மை ஆளப்போகிறார்கள் என்கிற அச்சம் மிகுந்த சூழ்நிலையில்த்தான் நாம் இருக்கிறோம்” – சிறிதரன்

“யார் யாரெல்லாம் எப்படி எம்மை ஆளப்போகிறார்கள் என்கிற அச்சம் மிகுந்த சூழ்நிலையில்த்தான் நாம் இருக்கிறோம்” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் தெரிவித்துள்ளார்

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

மிகமுக்கியமாக இன்றைய காலகட்டம் என்பது எல்லோருக்குமே ஒரு அச்சம் மிகுந்த சூழ்நிலையைத்தந்திருக்கிறது. இன்று என்ன நடக்கிறது நாளை நாளை மறுதினம் என்ன நடக்கும் என்ற கேள்விகளோடு நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்

அடையாளத்தை தொலைத்த மனிதர்களாக அடையாளம் அற்ற மனிதர்களாக நாம் வாழவேண்டிய காலம் வருமோ? அல்லது யார் யாரெல்லாம் எப்படி எம்மை ஆளப்போகிறார்கள்? என்கிற அச்சம் மிகுந்த சூழ்நிலையில்த்தான் நாம் இருக்கிறோம்.

இந்த வேளையில் நான் இளைஞர்களை கோருவது இந்ம மண்ணிலே நாம் தமிழ்த்தேசிய இனமாக எங்கள் அடையாளத்தை தொலைத்து விடாமல் நிமிர்ந்து வாழ்கின்ற இனமாக உணர்வுகள் சூழ்ந்த இனமாக இந்த மண்ணிலே நாம் வாழவேண்டும்.

யாழ்ப்பாணம் இந்துக்கலர்லூரியின் மாணவன் ஒருவன் யாழ் பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவு தெரிவித்து உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். அந்த மாணவனிடம் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு உணர்வு என்பது என் உள்ளத்தில் மட்டும் இருந்து வந்தால் போதுமானது தாய்தந்தையிரிடம் கேட்கவேண்டும் என்று நான் யோசிக்கவில்லை. இங்கே எனது இனம் அழிக்கப்படுகிறது. என் இனத்தின் அடையாளங்கள் தொலைக்கப்படுகிறது அதனால் இந்தப்போராட்டத்தில் குதித்து இருக்கின்றேன் என்றும் குறிப்பிட்டிருந்தான்.

இந்த செய்தியெல்லாம் நாங்கள் இன்னும் இன்னும் எத்தனையோ இடர்களை சந்திக்கப்போகின்றோம்.சிங்கள பௌத்த அரசுகளால் சூழப்பட்டுள்ள இந்த நிலை மிகப் பெரிய கேள்விகளை எங்கள் முன்னால் வைத்திருக்கிறது. இவற்றுக்கெல்லாம் அஞ்சாது சோரம் போகாதவர்களாக வாழவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

“யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட நினைவுத்தூபி அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் என்பதால் அது அகற்றப்பட்டது” – பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ்

“யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கட்டப்பட்ட நினைவுத்தூபி அங்கீகரிக்கப்படாத கட்டுமானம் என்பதால் அது அகற்றப்பட்டது” என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் கூறியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சர்,

“ஒரு பொது விதி உள்ளது. அது சம்பந்தப்பட்ட பல்கலைக்கழக அதிகாரிகளின் அனுமதி இல்லாமல் எந்தவொரு பல்கலைக்கழக வளாகத்திலும் எந்தவொரு நினைவுச்சின்னத்தை அல்லது சிலையை அமைக்க முடியாதென அது கூறுகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலிருந்த நினைவுத்தூபி சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்றி கட்டப்பட்ட ஒன்றாகும் என்பதால் அதை அகற்ற வேண்டியிருந்ததாக அமைச்சர் கூறினார்.

இந்த நினைவுத்தூபி ஒரு சட்டவிரோத கட்டுமானம் என்பதால் அது குறித்து வாதிடுவதில் எந்தப் பயனும் இல்லை” என்றும் அவர் மேலும் கூறினார்.

“ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கினை தொடர்ந்து நடாத்தமுடியாது” – சட்டமா அதிபர் திணைக்களம்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப்பரராஜசிங்கத்தின் படுகொலை தொடர்பிலான வழக்கினை தொடர்ந்து நடாத்தமுடியாது என சட்டமா அதிபர் திணைக்களத்தினால் மட்டக்களப்பு மேல் நீதிமன்றுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில் எதிர்வரும் புதன்கிழமை குறித்த வழக்கு தொடர்பான தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள்  நாடாளுமன்ற  உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார். குறித்த சம்பவம் தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

ஐந்து பேரும் தொடர்ந்து விளக்கமறிலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் 2015ஆம் ஆண்டு தாங்கள் கைதுசெய்யப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் பெறப்பட்ட 1ஆம் 02ஆம் எதிரிகளின் வாக்கு மூலமானது சுயேட்சையாக வழங்கப்படவில்லை, தூண்டுதல் அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த வாக்குமூலத்தினை வழங்கியிருந்தார்கள்,பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் நேரடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் வழங்கியிருந்ததாக தெரிவித்து மேன் முறையீட்டு நீதிமன்றில் செய்யப்பட்ட மீளாய்வு விண்ணப்பித்ததன் பிரகாரம் குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தினை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்தன் அடிப்படையில் 24ஆம் திகதி மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் ஒப்புதலின் பேரில் பிணை வழங்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இன்று குறித்த வழக்கு இன்று மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. சட்டமா அதிபர் திணைக்களம் இந்த வழக்கினை தொடர்ந்து நடாத்தமுடியாது என்ற அறிவிப்பினை மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் தெரிவித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திகாந்தன் தெரிவித்தார். இதனடிப்படையில் குறித்த வழக்கின் தீர்ப்பு நாளை மறுதினம் புதன்கிழமை நாங்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்ற தீர்ப்பு வரும் எனவும் தெரிவித்தார்.