உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான ஆலோசனை குழு கூட்டம் வவுனியாவில் ஆரம்பம்

ஜெனிவா விடயங்களை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பான ஆலோசனை குழு ஒன்று அண்மையில் கிளிநொச்சியில் உருவாக்கப்பட்டிருந்தது.

அந்த ஆலோசனைக்குழு இன்று(03.12.2020) பிற்பகல் வவுனியா குருமன்காட்டில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் கலந்துரையாடல் ஒன்றைமுன்னெடுத்துள்ளது.

IMG c70577fe6fc5d1065af98b5a1b9e5276 V

குறித்த கலந்துரையாடலில் பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டுள்ள நிலையில் ஜெனிவா கூட்டத்தொடரில் முன்வைக்க வேண்டிய விடயங்கள் மற்றும் பரிந்துரைகள் தொடர்பாக ஆராயப்பட்டிருந்தது.

இதில் தமிழ்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் எஸ்.சிவகரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கயேந்தி்குமார் பொன்னம்பலம், செ.கயேந்திரன் , முன்னாள் மாகாண உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள், மதகுருமார்கள், பொது அமைப்புகள் கலந்து கொண்டுள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலங்களில் 90 வாகன விபத்துக்கள் – 09 பேர் பலி !

கடந்த 24 மணித்தியாலங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 09 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த காலப்பகுதியில் 90 வாகன விபத்துக்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வருடம் டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியில் வாகன விபத்துக்களில் 74 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

குறித்த காலப்பகுதியில் வாகன விபத்துக்களில் 149 பேர் படுகாயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், 2,045 பேர் குடிபோதையில் வாகன செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த 24 மணித்தியாலங்களில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டின் கீழ் 31 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்

“கொரோனா இறந்த உடல்களால் பரவுவதற்கான ஆதாரங்கள் இல்லை. இறந்த உடல்களை அடக்கம் செய்யலாம்.”  – இறந்த உடல்களை அடக்கம் செய்ய இலங்கை மருத்துவ சங்கம் சம்மதம் !

“தாம் மேற்கொண்ட அவதானிப்புகளின் அடிப்படையிலும் தற்போதுள்ள விஞ்ஞான ரீதியான தரவுகளை அடிப்படையாக வைத்தும் இலங்கையில் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம்” என்ற முடிவிற்கு வந்துள்ளதாக இலங்கை மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இலங்கை மருத்துவ சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கையில் சமீபகாலங்களில் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை கையாளும் விவகாரத்தினால் இனங்களிற்கு இடையிலான ஐக்கியம் பாதிக்கப்பட்டுள்ளது . இலங்கையின் கலாச்சார பன்முகதன்மையை கருத்தில் கொள்ளும்போது கொரோனாவைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவது தொடர்பில் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய முறையான கொள்கையொன்று அவசியம்.

ஆரம்ப கட்டத்தில் அவ்வேளை காணப்பட்ட தரவுகளை அடிப்படையாக வைத்து சுகாதார அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் உடல்களை தகனம் செய்வதற்கான முடிவை எடுத்தார்.

இதன் பின்னர் கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அகற்றுவதற்கு உடல்களை கட்டாயமாக தகனம் செய்வவதை பின்பற்றுவது என்ற அரசாங்கத்தின் முடிவு காரணமாக சில சமூகங்களின் மத்தியில் அமைதியின்மை உருவாகியுள்ளது. இதனால் சிவில் அமைதியின்மை உருவாகுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.  இதன் காரணமாக மக்கள் உடல்களை தகனம செய்யும் அரசாங்கத்தின் நடவடிக்கைகளுடன் ஒத்துழைக்க மறுப்பதும் தெரியவந்துள்ளது .

பலர் மருத்துவர்களை பார்ப்பதை தவிர்க்கின்றனர்,இதன் காரணமாக மருத்துவகிசிச்சைக்கு செல்லாமல் வீடுகளிலேயே இருப்பவர்கள் உயிரிழந்த பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த காரணங்களால் நாங்கள் நிலைமை குறித்து அவசரமாக ஆராய்ந்தோம், கொரோனா வைரஸ் தொடர்பாக கிடைக்கின்ற சில தரவுகளை பயன்படுத்தினோம்.

31ம் திகதி அனைத்துபிரிவு மருத்துவர்களுடனும் சந்திப்பொன்று இடம்பெற்றது. இந்த சந்திப்பின்போது பல விடயங்கள் குறித்து ஆராயப்பட்டநிலையில் கொவிட் சுவாசம் மூலமாக மாத்திரம் பரவுகின்றது. ஏனைய வழிமுறைகள் மூலம் பரவியமை குறித்த தகவல்கள் இல்லை என்ற முடிவிற்கு வந்துள்ளோம். உயிரிழந்த ஒருவரின் உடலில் வைரஸ் குறிப்பிட்ட காலத்திற்கு உயிர்வாழாது. பிரேதப்பரிசோதனையின் போது மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் சோதனையின் மூலம் நோயாளி பாதிக்கப்பட்டுள்ளமை உறுதியானமைக்காக உயிரிழந்தவரின் உடலில் தொற்றுள்ளது என்ற முடிவிற்கு வரமுடியாது எனவும் இலங்கை மருத்து சங்கம் தெரிவித்துள்ளது.

மேலும் உடல்களால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதை விட கொவிட் 19 காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் நிரம்பிக்காணப்படும் கழிவுநீரினால் நிலத்தடி நீர் மோசமாக பாதிக்கப்படும் எனவும் மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

“கொரோனாவினால் இறந்தோரின் உடலை தகனம் செய்வதற்கு எதிரான சில முஸ்லீம்களின் ஆர்ப்பாட்டம் அரசியல் நோக்கிலானது” – அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ

“கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக முஸ்லீம் சமூகத்தின் சில பிரிவினர் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்வது அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கையாக நான் கருதுகின்றேன்” என அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். “

ஊடகங்களுக்கு வழங்கிய பேட்டியொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

“கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்யும் முடிவை உலக சுகாதார ஸ்தாபனமே முதலில் எடுத்தது இந்த விதிமுறைகள் எங்கள் நாட்டிற்கும் பொருந்தும்,கொரோனா வைரசிரனை வெற்றிகரமாக கட்டுப்படுத்திய நாடாக நாங்கள் மாறினோம்.

உலக சுகாதார ஸ்தாபனம் உடல்களை தகனம் செய்யும் முடிவை எடுத்தவேளை எவரும் அதற்கு எதிராக கரிசனைகளை வெளியிடவில்லை.
கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக முஸ்லீம் சமூகத்தின் சில பிரிவினர் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதை அரசியல் நோக்கம் கொண்ட நடவடிக்கையாக நான் கருதுகின்றேன்.

கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்களை தகனம் செய்வதற்கு எதிராக முஸ்லீம்கள் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் -அது பிழை என தெரிவிப்பார்கள் என்றால் கத்தோலிக்க மக்களும் அது குறித்த கரிசனையை வெளியிடலாம். அவர்களுடைய மதத்திலும் உடல்களை தகனம் செய்வது அனுமதிக்கப்படவில்லை.

இது ஒரு இனத்திற்கு மாத்திரம் உரிய விடயமில்லை. சிலவங்குரோத்து நிலையிலுள்ள அரசியல்கட்சிகளும் அரசியல் தலைவர்களும் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக இதனை பயன்படுத்த முயல்கின்றனர். பொறுப்புணர்வுள்ள அரசாங்கம் என்ற அடிப்படையில் உடல்களை தகனம் செய்யவேண்டுமா? அடக்கம் செய்யவேண்டுமா? என ஆராய்வதை விட நாங்கள் பொதுமக்களை கொரோனா வைரசிலிருந்து பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.

தற்போது முக்கிய எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தங்கள் வங்குரோத்து அரசியல் காரணமாக மக்களை தவறாக வழிநடத்துவதற்காக பல அறிக்கைகளை வெளியிடுகின்றது. கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் இறுதிசடங்குகள் குறித்து ஜனாதிபதியோ? அரசாங்கமோ? தன்னிச்சையாக முடிவெடுக்க முடியாது. சுகாதார அதிகாரிகளே இது தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பர்.  ஒரு குழுவினர் இந்த விவகாரத்தினை இனரீதியிலானதாக மாற்றுகின்றனர்” எனவும் தெரிவித்துள்ளார்.

“பிறந்த சிசுவை குழிதோண்டி புதைத்த திருமணமாகாத தாயும் , அவரது பாட்டியும் ” – யாழில் சோகம் !

யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில் பிறந்த சிசு ஒன்றை குழிதோண்டி புதைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட இரண்டு பெண்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதை அடுத்து, சந்தேகநபர்களான இரண்டு பெண்களையும் எதிர்வரும் 15ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளதாககாவல்துறையினர் கூறினர்.

புதைக்கப்பட்ட சிசுவின் தாயும், பாட்டியுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கணக்கர்கடை சந்தி பகுதியில் உள்ள வீடொன்றின் வளாகத்தில் நேற்று முன்தினம் அதிகாலை பிறந்த சிசு புதைக்கப்பட்டுள்ளது. 24 வயதுடைய திருமணமாகாத பெண் ஒருவரே குழந்தையை பிரசவித்துள்ளார். பிரசவத்தின் பின்னர் ஏற்பட்ட அதிக குருதிப்போக்கு காரணமாக குறித்த தாய் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதனைக் கொண்டு குழந்தை பிறந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது, பின்னர் சிசுவை கொன்று புதைத்ததாக கண்டறியப்பட்டது என தெரிவிக்கப்படும் நிலையில் சந்தேகத்தில் பெண்ணின் தாயை காவல்துறையினர் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து இருவருக்கும் விளக்கமறியல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

“2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான ஐ.ம.சக்தியின் வேட்பாளர் சஜித்பிரேமதாஸ தான் ” – எரான் விக்கிரமரத்ன

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தொடர்பில் சஜித் பிரேமதாஸ, சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் கடும் போட்டி நிலவுகின்றது என வெளியாகும் தகவல்களை ஐக்கிய மக்கள் சக்தி நிராகரித்துள்ளது.

இது தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன கருத்துத் தெரிவிக்கையில்,

இந்தத் தகவலை நான் அடியோடு நிராகரிக்கின்றேன். அரசியல் எதிரிகளே திட்டமிட்ட அடிப்படையில் இவ்வாறான கதைகளைக் கட்டவிழ்த்துவிட்டு, முரண்பாடுகளை உருவாக்குவதற்கு முயற்சிக்கின்றனர். சஜித் பிரேமதாஸ, சம்பிக்க ரணவக்க, சரத் பொன்சேகா ஆகியோருக்கிடையில் எந்தவொரு போட்டியும் இல்லை.

ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பு என்பது ஜனநாயக அம்சம் கொண்டது. தலைவர் பதவிக்கு வருவதற்கு எவருக்கும் தடை இல்லை.

எனினும், பதுளையில் நடைபெற்ற சம்மேளனத்தின்போது சஜித்தைத் தலைவராக நியமிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆகவே, அவர் தலைமையில் முன்னோக்கிப் பயணிப்போம் – என்றார்.

“ ஊடகங்கள் மீது எவரும் கைவைக்க வேண்டாம். அது ஜனநாயகத்தின் மீது கைவைப்பதற்குச் சமமானதாகும். ” –  ‘உதயன்’ பத்திரிகை மீதான வழக்குத்தாக்கலுக்கு மைத்திரிபால சிறீசேன கண்டனம் !

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்த நாளன்று அவரது புகைப்படத்தையும் சொற்களையும் வெளியிட்டமை தொடர்பில் ‘உதயன்’ பத்திரிகை மீது யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் யாழ்.காவற்துறையினரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் “மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் ஊடகங்கள் மீது எவரும் கைவைக்க வேண்டாம். அது ஜனநாயகத்தின் மீது கைவைப்பதற்குச் சமமானதாகும். ” என தன்னுடைய கண்டனங்களை  முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்வைத்துள்ளார்.

இது தொடர்பில் வெளியிட்டுள்ள கண்டனத்திலேயே முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

ஜனநாயகத்தின் தூண்களாக இருக்கும் ஊடகங்கள் மீது வழக்குத் தாக்கல் செய்வது சிறுபிள்ளைத்தனமானது. விமர்சனங்களை எதிர்கொள்ள அனைவருக்கும் முதுகெலும்பு இருக்க வேண்டும்.

கடந்த நல்லாட்சியில் எமக்கு முதுகெலும்பு இருந்தபடியாலேயே விமர்சனங்களை எதிர்கொண்டோம். ஊடகங்களை முழுச்சுதந்திரத்துடன் இயங்க அனுமதித்தோம்.

உயிர்த்த ஞாயிறு தினமன்று இடம்பெற்ற தாக்குதலையடுத்து சில நாட்களுக்கு மட்டும் சமூக ஊடகங்ளை முடக்கி வைத்திருந்தோம். இன ரீதியான – மத ரீதியான முறுகல் நிலையைத் தவிர்க்கும் வகையிலேயே இந்த முடக்கல் நிலையை அன்று விதித்திருந்தோம். ஜனாதிபதி என்ற வகையில் – அரசு என்ற வகையில் விமர்சனங்களுக்குப் பயந்து அன்று சமூக ஊடகங்களை நாம் முடக்கவில்லை. எனினும், அன்றைய நாட்களில் பத்திரிகைகளும், வானொலிகளும், தொலைக்காட்சிகளும் சுதந்திரமாக இயங்கின.

நான் அன்று ஜனாதிபதி. இன்று முன்னாள் ஜனாதிபதி. அன்றும் சரி – இன்று சரி ஊடகங்களை மதிக்கின்றேன். விமர்சனங்களை ஏற்கின்றேன். ஆட்சிப்பீடத்தில் இருந்த ஜனாதிபதிகளில் நான் வித்தியாசமானவன். என்னைக் கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக சிறையிலிருந்த விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினருக்குக்கூட நான் பொதுமன்னிப்பு வழங்கியிருந்தேன். மூவின மக்களின் மனதையும் நான் வென்றிருந்தேன்.

அதனால் சில ஊடகங்கள் என்னை வாழ்த்தின. சில ஊடகங்கள் என்னைத் தூற்றின. ஆனால், நான் அமைதியாக வாழ்த்துதலையும், தூற்றுதலையும் ஏற்றேன்.

மீண்டும் மீண்டும் சொல்கின்றேன் ஊடகங்கள் மீது எவரும் கைவைக்க வேண்டாம். அது ஜனநாயகத்தின் மீது கைவைப்பதற்குச் சமமானதாகும். அந்தவகையில் ‘உதயன்’ மீதான வழக்குத் தாக்கலைக் கண்டிக்கின்றேன் என்றுள்ளது.

“இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. பயங்கரவாதிகளின் பிடிக்குள் சிக்கியிருந்த மக்கள் மீட்பதற்காக மனிதாபிமான நடவடிக்கையிலேயே ஈடுபட்டது” – சரத் வீரசேகர

“இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. பயங்கரவாதிகளின் பிடிக்குள் சிக்கியிருந்த மக்கள் மீட்பதற்காக மனிதாபிமான நடவடிக்கையிலேயே ஈடுபட்டது” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 22ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. மார்ச் 19ஆம் திகதி வரை நடைபெறும் குறித்த கூட்டத் தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பிலும் கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது என்று இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிந்தது. இந்தநிலையில், மேற்படி கூட்டத்தொடர் குறித்து விவரிக்கையிலேயே அமைச்சர் சரத் வீரசேகர மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

ஜெனிவாக் கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்படும் எந்தவொரு குற்றச்சாட்டுக்கும் உரிய பதிலை வழங்குவதற்கு அரசு தயாராகவே இருக்கின்றது.

இலங்கை இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை. பயங்கரவாதிகளின் பிடிக்குள் சிக்கியிருந்த மக்கள் மீட்பதற்காக மனிதாபிமான நடவடிக்கையிலேயே ஈடுபட்டது. உரிய சாட்சிகளுடன் இதனை நிரூபிப்போம்.

நல்லிணக்க ஆணைக்குழு மற்றும் பரணகம ஆணைக்குழு ஆகியனவற்றின் அறிக்கைகளை ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் திட்டமிடப்பட்டிருந்தது. எனினும், தாருஷ்மன் குழுவினர் மற்றும்  ஐ.நாவின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் – ஹுசைன் ஆகியோர் அதற்கு இடமளிக்கவில்லை. இந்த முறை இந்த இரு அறிக்கைகளையும் முன்வைப்பதற்கு அரசு எதிர்பார்க்கின்றது.

இலங்கையில் போர்க்குற்றம் இடம்பெறவில்லை என்பதைச் சாட்சியங்களுடன் ஜெனிவாவில் சுட்டிக்காட்டுவதற்கு அரசு தயாராக இருக்கின்றது. சீனா, கியூபா, பாகிஸ்தான் உள்ளிட்ட பல நாடுகள் இலங்கைக்கு ஆதரவளிக்கவுள்ளன என்றார்.

“அரசாங்கம் ஏற்கனவே பெரும்பான்மை மக்களுக்கான ஒரு அரசியல் யாப்பு வரைவை தயார் செய்து விட்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதாகப் பாசாங்கு செய்கிறது”  – சி.வி.விக்னேஸ்வரன்

“அரசாங்கம் ஏற்கனவே பெரும்பான்மை மக்களுக்கான ஒரு அரசியல் யாப்பு வரைவை தயார் செய்து விட்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதாகப் பாசாங்கு செய்கிறது”  என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார்

புதிய அரசியல் யாப்பு பற்றிய தமிழ் மக்கள் கூட்டணியின் கருத்துக்களை அனுப்பிய போது, இதனையும் தெரிவித்துள்ளார்.

அந்தக்கடிதத்தில் க.வி.விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

அண்மையில் நீதி அமைச்சினால் பொது மக்களிடம் இருந்து அரசியல் யாப்பு பற்றிய கருத்துக்களைக் கோரியது சம்பந்தமானது இக்கடிதம். மேன்மைமிகு மற்றும் படித்த பெரியோர்கள் உங்கள் நிபுணத்துவ குழுவை அலங்கரித்துக் கொண்டிருப்பினும் எங்களுடைய அதுவும் முக்கியமாக தமிழ் மக்களின் கருத்துரைகள் எதுவுமே உங்கள் குறித்த குழுவினால் பரிசீலிக்கப்பட மாட்டாது என்பது எமது பார்வை பாற்பட்ட கருத்தாகும்.

எமது சந்தேகப்படி பெரும்பான்மை சமூகத்தவருக்கு சார்பான ஒரு அரசியல் யாப்பு வரைவை நீங்கள் ஏற்கனவே தயாரித்து வைத்துக் கொண்டு பொதுமக்களிடம் கருத்துக் கேட்பதாகப் பாசாங்கு செய்து ஈற்றில் ஏற்கனவே தயாரித்த குறித்த வரைவை வெளிவிடுவதே உங்கள் எண்ணம் என்று நாம் கருதுகின்றோம்.

எம்மிடம் கருத்துக்கள் கோரி பத்திரிகைகளில் விளம்பரம் செய்தமைக்கு காரணம் எல்லோரினதும் கருத்துக்களையும் கேட்டறிந்தோம் என்று உலகத்திற்குப் பறைசாற்றவே என்று நாம் எண்ணுகின்றோம்.

இவ்வாறான எமது கருத்துக்கு வலுச் சேர்ப்பது என்னவென்றால் மனிதஉரிமைகள் ஆணைக்குழுவிற்கு எம்மிடம் இருந்து தமிழ்ப் பெயர்களைப் பெற்றபின் முதலில் முற்றிலும் சிங்கள மக்களைக் கொண்ட ஆணைக்குழுவையே நீங்கள் நியமித்தீர்கள். அதுவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு இவ்வாறான பெரும்பான்மையினரை மட்டுமே நியமித்தீர்கள். பொதுமக்கள் தமது ஏமாற்றத்தை வெளியிடப் போய் பின்னர் ஒரு தமிழரும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.

ஆகவே பெரும்பான்மையினருக்கு மட்டுமே சார்பான ஒரு அரசியல் யாப்பையே இந்த அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்க்கக் கூடியதாக இருக்கின்றது. நாட்டின் பல்வேறு வகைபாடுகளையும் பன்மைத்துவத்தையும் கருத்தில் எடுத்து அதற்கேற்ப ஒரு அரசியல் யாப்பு வரைவு கொண்டுவரப்படும் என்று நாங்கள் நம்பவில்லை.

ஏழு மாகாணபெரும்பான்மையினர் தமக்கு இயைபான சட்டத்தை இயற்றி மற்றைய இரு மாகாண பெரும்பான்மையினரின் உரிமைகளையும் எதிர்பார்ப்புக்களையும் பாதிக்கும் வண்ணம் நடவடிக்கைகளை எடுக்கவிருப்பதாக நாம் கணிக்கின்றோம். கடந்த 3000 வருடங்களுக்கு மேலாக தமிழ்ப் பேசும் பெரும்பான்மையிரே இவ்விரு மாகாணங்களிலும் இருந்து வந்துள்ளார்கள் என்பதே உண்மை.

ஆனால் புதிய அரசியல் யாப்பைத் தயாரிக்கும் செயற்பாட்டில் நாங்கள் கலந்துகொள்ளவில்லை என்ற அவச்சொல் வராதிருக்கவே நாம் எமது கருத்துக்களை பிறிதொரு ஆவணத்தில் உள்ளடக்கி இத்துடன் இணைத்துள்ளோம்.

11 விடயங்கள் பற்றி எமது கருத்துக்களைக் கோரி 12வதாக மேற்படி 11ல் உள்ளடங்காதவற்றைப் பற்றி குறிப்பிடலாம் என்று கூறியுள்ளீர்கள்.

ஆனால் நாம் முன்னுரையாக சில விடயங்களைக் கட்டாயமாக எடுத்துக்கூற வேண்டியுள்ளது. இதில் நாம் கடந்தகால உண்மைகளைச் சுட்டிக் காட்டியுள்ளோம். அரசாங்கம் வேண்டுமெனில் முன்னர் செய்த அதே தவறுகளை இம்முறையும் இழைக்காது இந்தப் புதிய முயற்சியின் போது இந் நாட்டின் சகல இன மக்களினதும் எதிர்பார்ப்புக்களையும் அரசியல் அபிலாஷைகளையும் நிறைவுசெய்யும் விதத்தில் ஒரு தகுந்த அரசியல் யாப்பை வரைந்துநாடாளுமன்றத்தில் பதிந்து நிறைவேற்றலாம்.” என  குறிப்பிட்டுள்ளார் விக்கினேஸ்வரன் .

‘எமது பொறுப்பினை உணர்ந்து செயலாற்றுவோம். பிறர் மீது சாட்டுதல் செய்யும் மனநிலையைக் கைவிடுவோம்’ – புத்தாண்டு உறுதி உரை நிகழ்வில் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் !

‘எமது பொறுப்பினை உணர்ந்து செயலாற்றுவோம். பிறர் மீது சாட்டுதல் செய்யும் மனநிலையைக் கைவிடுவோம்’ என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (01.01.2021) இடம்பெற்ற நீதித்துறை உத்தியோகத்தர்களின் புத்தாண்டு உறுதி உரை நிகழ்வில், தலைமை உரையாற்றியபோதே மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்றங்களில் மேல் நீதிமன்ற நீதிபதி,  நீதிபதிகள் உட்பட உத்தியோகத்தர்கள், அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக நேற்று காலை 9 மணிக்கு உறுதியுரை எடுத்தனர்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி விநாயகமூர்த்தி இராமக்கமலன், யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதவான் நளினி சுபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

Tamilmirror Online || யாழ்.நீதிபதிகள் உறுதியுரை

இதன்போது தேசியக் கொடியேற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் ஜே.ஜெயரஞ்சன், கணக்காளர் வி.ரதீஸ் மற்றும் உத்தியோகத்தர்கள் நீதிபதிகள் முன்னிலையில் உறுதியுரையை நிறைவேற்றினர்.

நாட்டில் தற்போது நிலவும் கோவிட் -19 நோய்த் தொற்று தொடர்பில் சிறப்புரை ஆற்றுவதற்காக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியின் அழைப்பின் பேரில் பங்கேற்றிருந்தார். அவர் கோவிட் – 19 தொற்றிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து கொள்ளும் நடைமுறைகள் பற்றி உரையாற்றினார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம், யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மற்றும் யாழ்ப்பாணம் தொழில் நியாய சபை ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.