உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

‘எமது பொறுப்பினை உணர்ந்து செயலாற்றுவோம். பிறர் மீது சாட்டுதல் செய்யும் மனநிலையைக் கைவிடுவோம்’ – புத்தாண்டு உறுதி உரை நிகழ்வில் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் !

‘எமது பொறுப்பினை உணர்ந்து செயலாற்றுவோம். பிறர் மீது சாட்டுதல் செய்யும் மனநிலையைக் கைவிடுவோம்’ என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் வலியுறுத்தினார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (01.01.2021) இடம்பெற்ற நீதித்துறை உத்தியோகத்தர்களின் புத்தாண்டு உறுதி உரை நிகழ்வில், தலைமை உரையாற்றியபோதே மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்றங்களில் மேல் நீதிமன்ற நீதிபதி,  நீதிபதிகள் உட்பட உத்தியோகத்தர்கள், அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைவாக நேற்று காலை 9 மணிக்கு உறுதியுரை எடுத்தனர்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்ற நீதிபதி விநாயகமூர்த்தி இராமக்கமலன், யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதவான் நளினி சுபாகரன் ஆகியோர் பங்கேற்றனர்.

Tamilmirror Online || யாழ்.நீதிபதிகள் உறுதியுரை

இதன்போது தேசியக் கொடியேற்றப்பட்டு, தேசிய கீதம் இசைக்கப்பட்டது. மங்கல விளக்கேற்றலைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றப் பதிவாளர் ஜே.ஜெயரஞ்சன், கணக்காளர் வி.ரதீஸ் மற்றும் உத்தியோகத்தர்கள் நீதிபதிகள் முன்னிலையில் உறுதியுரையை நிறைவேற்றினர்.

நாட்டில் தற்போது நிலவும் கோவிட் -19 நோய்த் தொற்று தொடர்பில் சிறப்புரை ஆற்றுவதற்காக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன், யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியின் அழைப்பின் பேரில் பங்கேற்றிருந்தார். அவர் கோவிட் – 19 தொற்றிலிருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக நடந்து கொள்ளும் நடைமுறைகள் பற்றி உரையாற்றினார்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம், குடியியல் மேன்முறையீட்டு மேல் நீதிமன்றம், யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம், யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் மற்றும் யாழ்ப்பாணம் தொழில் நியாய சபை ஆகியவற்றின் உத்தியோகத்தர்கள் பங்கேற்றனர்.

“சட்டவிரோத செயற்பாடுகள் போதைப்பொருள் மற்றும் கொள்ளை செயற்பாடுகளை கட்டுப்படுத்த  வடக்கில் மக்களுடைய ஒத்துழைப்பு தேவை” – சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண

“சட்டவிரோத செயற்பாடுகள் போதைப்பொருள் மற்றும் கொள்ளை செயற்பாடுகளை கட்டுப்படுத்த  வடக்கில் மக்களுடைய ஒத்துழைப்பு தேவை” என வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதி காவல்துறை மா அதிபர் சஞ்சீவ தர்மரட்ண தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாண தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர்  மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது ,

“கடந்த வருடம் உலகத்தினை அச்சுறுத்தலுக்குள்ளாகியுள்ள கொரோனா வைரஸ் அச்சத்துடன் கடந்து சென்றுள்ளது.

அதேபோல் எதிர்வரும் காலத்திலும் உலக நியதிக்கு இணங்க வட பகுதியிலும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்துவதற்குரிய கட்டுப்பாடுகள், நடைமுறைகளை பின்பற்றி பொது மக்களை செயற்படுத்துவதற்கு காவல்துறையினர் பூரண ஒத்துழைப்பினை வழங்குவார்கள்.

அதேபோல வடக்கு மாகாணத்தில் கடந்த வருடத்தை விட குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்குரிய மேலதிகமான சில வேலைத்திட்டங்களை மேற்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.

அத்துடன் வட மாகாணத்தில் தற்போது இடம்பெறுகின்ற சில கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் போதைப் பொருள் கடத்தல் செயற்பாடுகள் தொடர்பில் முப்படையினரும் காவல்துறையினரும் இணைந்து அதனை கட்டுப்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம்.

அதேபோல பொதுமக்களுக்கு ஒரு அழைப்பினை விடுக்க விரும்புகின்றேன். அதாவது சட்டவிரோத செயற்பாடுகள் போதைப்பொருள் மற்றும் கொள்ளை செயற்பாடுகளுடன் தொடர்புடையவர்கள் தொடர்பில் ஏதாவது தகவல்கள் அறிந்திருந்தால் அதனை தெரியப்படுத்தினால் குறித்த சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து நிறுத்த முடியும்”  என தெரிவித்தார்.

“இலங்கையில் இடம்பெறுகின்ற மனித உரிமைக்கு எதிராக எம்முடன் இஸ்லாமிய நாடுகளும் ஒன்று சேர வேண்டும்” – இரா.சாணக்கியன்

“இலங்கையில் இடம்பெறுகின்ற மனித உரிமைக்கு எதிராக எம்முடன் இஸ்லாமிய நாடுகளும் ஒன்று சேர வேண்டும்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை ஊடக அமையத்தில் நேற்று (01.01இ2021)  இடம்பெற்ற சமகால அரசியல் தொடர்பாக விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதன்போது இரா.சாணக்கியன் மேலும் கூறியுள்ளதாவது,

“இந்த வருடம் மூன்றாவது மாதம், ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை கூடவுள்ளது. கடந்த அரசாங்கத்தில் இப்பேரவையில் இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பில் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.ஆனால் தற்போதைய புதிய அரசாங்கம் இப்பேரவையில் இருந்து வெளியேறுவதாக குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் ஏனைய தமிழ் அரசியல் தரப்பினர் பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பாகிய நாமும் சகல தமிழ் தரப்பினரும் தற்போது இணைந்து ஒரு முன்மொழிவினை இப்பேரவையில் முன்வைக்கவே விரும்புகின்றோம்.

இது தொடர்பில் புலம்பெயர் அமைப்புகள் உள்ளிட்ட ஏனைய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளோம். சில அரசியல் தரப்பினர் அரசியல் இலாபங்களுக்காக இவ்விடயத்தில் செயற்பட முயல்கின்றனர். இந்த பேரவையில் 47 நாடுகள் வாக்களிக்கவுள்ளன. இதில் 24 நாடுகளின் ஆதரவினை நாம் பெற்றால் மாத்திரமே இலங்கைக்கு எதிரான பிரேரணையை நகர்த்த முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் காலஅவகாசம் கேட்டுள்ளதாக கருத்துக்கள் வெளிவந்தன. இவை முற்றுமுழுதான பொய்கள் ஆகும். இப்பொய்களை முழுமையாக நாம் நிராகரிக்கின்றோம். இப்பேரவையின் விடயங்கள் குறித்து அறிக்கை விடும் சிலருக்கு இப்பேரவை எவ்வாறு இயங்குகின்றது என கூட தெரியாமல் உள்ளது.

அண்மையில் ஒரு சிலர் சர்வதேச நீதிமன்ற விசாரணையை இவ்விடயத்தில் கோருகின்றனர். அவ்வாறு இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதென்றால் இன்னுமொரு நாடு பிரேரணையை முன்வைக்க வேண்டும். யுத்தம் நிறைவடைந்து 11 வருடங்கள் கடந்தும் இனி ஒரு நாடு வந்து பிரேரணை சமர்ப்பித்து நடவடிக்கை எடுக்கும் என்பதை நாம் நம்பவில்லை. இதை சிலர் குறுகிய இலாப அரசியலுக்காக தெரிவிக்கின்றனர்.

இலங்கையில் புதிய அரசியல் சீர்திருத்தத்தை அமுல்படுத்துவது குறித்து நாம் இப்பேரவையினை பயன்படுத்த முடியும். 11 வருடங்களாக எமது உறவுகளுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை மறக்காது இவ்விடயத்தில் அக்கறை செலுத்த வேண்டும். நீதி கிடைக்கும் வரை நாம் போராட வேண்டும்.

இலங்கையில் இஸ்லாமியர்களுக்கு எதிராக இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் குறித்தும் முஸ்லீம் நாடுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இலங்கையை இப்பேரவையின் நடவடிக்கையில் இருந்து காப்பாற்ற இலங்கை அரசாங்கம் முஸ்லீம் நாடுகளின் ஆதரவினை பெற இஸ்லாமிய மதகுருக்களை அங்கு அழைத்து சென்றிருந்துடன் ஆதரவு கோரிக்கையை முன்வைத்திருந்தது. இதனால் இஸ்லாமிய நாடுகளும் அதன்போது ஆதரவாக வாக்களித்திருந்தது. இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக மனித உரிமை மீறல்கள் இடம்பெற்ற போதிலும் அரசாங்கத்தை காப்பாற்ற வாக்களித்திருந்தனர். ஆனால் இன்று அச்சமூகத்திற்கு எதிராக மனித உரிமை மீறல் நடைபெறுகிறது. அதாவது நல்லடக்கம் செய்யும் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையில் இடம்பெறுகின்ற மனித உரிமைக்கு எதிராக எம்முடன் இஸ்லாமிய நாடுகளும் ஒன்று சேர வேண்டும். 2013 ஆண்டு திகண அளுத்கம வில் தொடங்கி தற்போது ஜனாசா வரை இடம்பெற்று வருகின்ற மனித உரிமை மீறல்கள் குறித்து முறைப்பாடு செய்ய முன்வர வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மாகாண சபையை மீண்டும் செயற்பாட்டுக்கு கொண்டு வருவதானது முட்டாள்த்தனமான விடயம்” – சரத் பொன்சேகா

“மாகாண சபையை மீண்டும் செயற்பாட்டுக்கு கொண்டு வருவதானது முட்டாள்த்தனமான விடயம்” என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று(01.010.2021) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது ,

“அரசாங்கத்தின் அசமந்தப் போக்கே நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஏற்பட்டக் காரணம் என குற்றம் சாட்டினார். அத்துடன் தொற்றின் இரண்டாவது அலை ஏற்படக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், அரசாங்கம் அதனை எதிர்கொள்ள தயாராக இருக்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும்,கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர், பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் உள்ளிட்ட தரப்பினர் அர்ப்பணிப்புடன் செயற்பட்ட போதிலும், அரசாங்கத்தின் இயலாமை காரணமாக அதனை கட்டுப்படுத்த முடியாது போனதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மாகாண சபையை மீண்டும் செயற்பாட்டுக்கு கொண்டு வருவதானது முட்டாள்த்தனமான விடயம் எனவும் மாகாண சபைக்கு புதிய முகங்களையே மக்கள் எதிர்பார்ப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இன்னும் இணக்கம் தெரிவிக்கவில்லை” – அமைச்சர் ரமேஷ் பத்திரன

“பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் இன்னும் இணக்கம் தெரிவிக்கவில்லை” என பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

எனினும், சம்பள உயர்வை பெற்றுக்கொடுப்பதற்கான முயற்சியில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தீவிரமாக ஈடுபட்டுவருகின்றார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“பெருந்தோட்டக் கம்பனிகளுடன் இவ்விவகாரம் தொடர்பில் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன. எனினும் தீர்வு எட்டப்படவில்லை. இம்மாதத்துக்குள் முடிவொன்றை எடுப்பதற்கு எதிர்ப்பார்க்கின்றோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு ஜனவரி முதலாம் திகதி முதல் ஆயிரம் ரூபாய் பெற்றுக்கொடுக்கப்படுமென்ற உறுதிமொழியை அரசாங்கம் வழங்கியிருந்தது.

தமக்கு அடிப்படை நாட் சம்பளமாகவே ஆயிரம் ரூபாய் வேண்டுமென தொழிலாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதுபற்றி அரச தரப்பில் இருந்தோ அல்லது கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்க தரப்புகளிலிருந்தோ இன்னும் உரிய விளக்கம் வழங்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“நாம் உயிர்களை கொன்றொழித்த இராணுவோ அல்லது போர்க்குற்றங்களை செய்த இராணுவுமோ அல்ல. மனித உயிர்களை காப்பாற்றிய இராணுவம்” – ஜெனரல் கமால் குணரட்ண பெருமிதம் !

“நாம் உயிர்களை கொன்றொழித்த இராணுவோ அல்லது போர்க்குற்றங்களை செய்த இராணுவுமோ அல்ல. மனித உயிர்களை காப்பாற்றிய இராணுவம்” என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமால் குணரட்ண தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்தாவது,

“போதைப்பொருள் கடத்தல் நாட்டில் குறைந்துள்ளது. என்றாலும் சில சில இடங்களில் அவை பரிமாற்றப்படுகின்றன. போதைப்பொருளை ஒழிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுத்துள்ளோம். புத்தாண்டில் இதற்கும் மேலதிகமான நடவடிக்கைகளை நாம் எடுக்கவுள்ளோம்.

அடிப்படைவாதிகளும், தீவிரவாதிகளும், பிரிவினைவாதிகளும் மீண்டும் இந்த நாட்டில் தலைத்தூக்க முடியாது. அதற்கு நாம் இடமளிக்கப் போவதில்லை. இளைஞர்கள் ஆயுதங்களை மீண்டும் தூக்குவார்களென அண்மையக்காலமாக கருத்துகள் வெளியிட்டு வருகின்றன. அவ்வாறானதொரு நிலை ஏற்பட நாம் இடமளிக்க மாட்டோம்.

வேலுப்பிள்ளை பிரபாகரன் என்று ஒருவர் இருந்தார். அவர் ஆயுதங்களை கையில் எடுத்துக்கொண்டு நாட்டை துண்டாட முற்பட்டார். என்றாலும் அவரின் முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை. அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் பிரிவினைவாதிகளால் ஒருதுளி பாதிப்பேணும் ஏற்பட இடமளிக்க மாட்டோம்.

மனிதவுரிமை மீறல்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுகள் 2009ஆம் ஆண்டுமுதல் எமது இராணுவத்தின்மீது சுமத்தப்பட்டன. நாம் உயிர்களை கொன்றொழித்த இராணுவோ அல்லது போர்க்குற்றங்களை செய்த இராணுவுமோ அல்ல. மனித உயிர்களை காப்பாற்றிய இராணுவம் என்பதால் மனிதவுரிமைகள் தொடர்பிலான குற்றச்சாட்டுகளுக்கு பயப்பட போவதில்லை என்றார்.

தேசிய மருந்து அதிகார சபையில் பதிவு செய்யப்படாத சானிடைசர் நிறுனங்களுக்கு தடை !

தேசிய மருந்து ஒழுங்குமுறை அதிகார சபையில் பதிவு செய்யப்படாத சானிடைசர் நிறுனங்கள், மொத்தமாக சேமித்து வைத்திருத்தல் மற்றும் சில்லறை வர்த்தகத்தில் ஈடுபடுதலை தடை செய்து வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.

குறித்த வர்த்தமானி அறிவித்தல் 2021 பெப்ரவரி 01 ஆம் திகதி தொடக்கம் அமுலுக்கு வருவதாக குறித்த வர்த்தமானி அறிவித்தலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“கொத்து பிரியர்களுக்கு எச்சரிக்கை – உடலில் கொரோனாவை எதிர்க்கும் சக்தி குறைவடையும்” – பேராசிரியர் நிலிகா மலவிகே

“கொத்து மற்றும் சிற்றுண்டி உணவுகளால் உடலில் கொரோனாவை எதிர்க்கும் சக்தி குறைவடையும்”  என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நிலிகா மலவிகே இதனை குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு பேசிய இவர் கொத்து மற்றும் சிற்றுண்டி உணவுகளை உண்பதனை தவிர்த்துக்கொள்ள வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான உணவுகளை உண்பதனால், உடலில் கொரோனாவை எதிர்க்கும் சக்தி குறைவடைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.நாட்டில் தற்சமயம் காணப்படும் கொரோனா அச்சத்தை குறைப்பதற்கு மக்கள் தமது பங்களிப்பினை முழுமையாக வழங்க வேண்டும் ” அவர் மேலும் கூறியுள்ளார்.

“எமது நாட்டின் சனத்தொகையில் 20 சதவீதமானவர்களுக்கு இவ்வருடத்தின் முதல் காலாண்டில் கொவிட்19 தடுப்பூசி கிடைக்கும்” – வைத்திய நிபுணர் சுதத் சமரவீர நம்பிக்கை !

2021ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் சனத்தொகையில் 20 சதவீதமானவர்களுக்கு கொவிட் தடுப்பூசி கிடைக்கப்பெறுமென தொற்று நோய் தடுப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சமரவீர தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று(01.01.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

உலகில் ஒவ்வொரு மில்லியனுக்கும் 522 கொரோனா தொற்றாளர்கள் கடந்த 2020ஆம் ஆண்டில் இனங்காணப்பட்டுள்ளனர். தெற்காசியாவில் இது மிகவும் அதிகமாகும். ஒவ்வொரு மில்லியனுக்கும் 5,809 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். எமது நாட்டில் மில்லியனுக்கு 1,886 பேர் கொவிட்19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு மில்லியன் சனத்தொகைக்கும் 09 பேர் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளனர். தெற்காசியாவில் ஒவ்வொரு மில்லியனுக்கும் 89 பேர் உயிரிழந்துள்ளனர். என்றாலும் எமது நாட்டில் ஒவ்வொரு மில்லியன் சனத்தொகைக்கும் 09 பேர் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளனர்.

உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட பல நிறுவனங்கள் இணைந்து கொவிட்19 தடுப்பூசியை மக்களுக்கு பெற்றுக்கொடுக்க பணியாற்றிவரும் நிலையில் எமது நாட்டின் சனத்தொகையில் 20 சதவீதமானவர்களுக்கு இவ்வருடத்தின் முதல் காலாண்டில் கொவிட்19 தடுப்பூசி கிடைக்குமென உறுதியளிக்கப்பட்டுள்ளது என்றார்.

மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வளைவு பாதை திறப்பு !

முன்னேறும் நாட்டை கட்டியெழுப்ப “சுபீட்சத்தின் நோக்கு” எனும் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்திற்கு இணங்க புதிய ஆண்டில் கல்முனை பிரதேச செயலகத்தின் முதலாவது வேலைத்திட்டமாக மாற்றுத்திறனாளிகளுக்கான சக்கர நாற்காலி வளைவு பாதை(Wheelchair ramp) திறப்பு விழா நேற்று(01) கல்முனை பிரதேச செயலாளர் எம்.எம் நஸீரினால் திறந்து வைக்கப்பட்டது.

இவ் திறப்பு விழாவில் கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஐ.ரிஸ்னி, கல்முனை பிரதேச செயலக கணக்காளர் வை.ஹபிபுல்லா,பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் எம்

ஜெளபர், நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம் ரம்சான் சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.ஏ சாலீஹ்,அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் கே.எல் யாஸீன் பாவா உட்பட பலர் கலந்து கொண்டனர்.