உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை நிராகரித்தது இலங்கை !

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படவுள்ள புதிய தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளை இலங்கை நிராகரித்துள்ளது.

இலங்கையின் இந்த நிராகரிப்பை தொடர்ந்து இலங்கை குறித்த தீர்மானத்திற்கு பிரதான அனுசரணை வழங்கிய ஐந்து நாடுகளான கனடா, ஜேர்மனி வடமசெடோனியா, மொன்டினீக்ரோ, பிரிட்டன் ஆகிய நாடுகள் புதிய தீர்மானத்தை கொண்டுவரவுள்ளன.

புதிய தீர்மானத்தின் உள்ளடக்கங்கள் சமரச போக்கை வெளிப்படுத்துபவையாக காணப்படலாம் என சிவில் சமூக பிரதிநிதிகள் தெரிவித்துள்ள அதேவேளை ஒருமித்த தீர்மானமொன்றை ஏற்றுக்கொள்வது கூட இலங்கைக்கு அரசியல் ரீதியில் சவாலான விடயமாக காணப்படலாம் என வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அட்மிரல் ஜயனத்கொலம்பகே தெரிவித்துள்ளார்.

அவ்வாறான தீர்மானமொன்றை இலங்கை ஏற்றுக்கொண்டால் அது இலங்கை ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை எதிர்க்கவில்லை என்ற கருத்தை உருவாக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை தீர்மானமொன்றிற்கு இணைஅனுசரணை வழங்குவது குறித்த கேள்விக்கே இடமில்லை என தெரிவித்துள்ள வெளிவிவகார செயலாளர் அவ்வாறானதொரு தீர்மானமே அரசாங்கத்தின் வீழ்ச்சிக்கு காரணமாகஅமைந்தது, அது அரசமைப்பிற்கும் இறைமைக்கும் மக்களிற்கும் எதிராக காணப்பட்டது என தெரிவித்துள்ளார்.

கருத்தொருமைப்பாட்டுடனான தீர்மானம் என்பது கூட சாத்தியமா இல்லையா என்பதை என்னால் தெரிவிக்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ள வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஆனால் அரசியல் ரீதியில் இது ஒரு பெரும் சவாலாக காணப்படும் என தெரிவித்துள்ளார்.

மனித உரிமை பேரவையின் தீர்மானத்திலிருந்து வெளியேறியது குறித்த முடிவில் இலங்கை உறுதியாகவுள்ளது என குறிப்பிட்டுள்ள அவர் 2019 ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளருக்கு, முன்னைய இணை அனுசரணை வழங்கப்பட்ட ஆணை குறித்து மறுபரிசீலனை செய்வதற்காக மக்கள் ஆணை வழங்கியுள்ளனர் என கருதப்படுவதாக தெரிவித்துள்ளார்.

முன்னைய தீர்மானத்திற்கு பிரதான அனுசரணை வழங்கிய ஐந்து நாடுகளும் புதிய தீர்மானத்தை உருவாக்குவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இலங்கை அரசாங்கம் ஆதரவளித்தாலும் ஆதரவளிக்காவிட்டாலும் அந்த தீர்மானம் சமர்ப்பிக்கப்படும் என சிவில் சமூகத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

“கருணாவிற்கு ஆதரவாக பொத்துவில் பிரதேசத்தில் செயற்பட்டவர்களே என் மீது காட்டுமிராண்டித்தனமாக வாள்  வெட்டு தாக்குதலை மேற்கொண்டுனர் ” – தாக்கப்பட்ட பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் !

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில்  கருணாவிற்கு ஆதரவாக பொத்துவில் பிரதேசத்தில் செயற்பட்ட சுரேஷ்குமார் , காவற்துறை உத்தியோகத்தரான ருக்சன் , ராஜேந்திரன் என்பவர்களே  என் மீது காட்டுமிராண்டித்தனமாக வாள்  வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்  என பொத்துவில் பிரதேச சபையின் பிரதி தவிசாளர் பெருமாள் பார்த்தீபன் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் அவர்  மேலும் தெரிவிக்கையில் ,

ஊறணியில்  உள்ள எனது விடுதியில் தங்கியிருந்த நேரம் தொலைபேசி அழைப்பொன்றில் கதைத்து கொண்டிருந்தேன் அந்த நேரம் மதில் மேலால் பாய்ந்து வந்தவர்கள் என் பின்னால் வந்து தலையில்  வாளினால் தாக்குதலை மேற்கொண்டனர்.  என்னால் முடிந்த அளவிற்கு தாக்கும் போது தடுத்திருந்தேன்  அதன் பின்னர் நான் அப்பாவை சத்தமிட்டு அழைத்திருந்தேன் அவர் சம்பவ இடத்திற்கு ஓடி  வந்ததும் தாக்கியவர்கள் ஓடி சென்றனர் .

தாக்கியவர்களை அடையாளம் கண்டேன் . பின்னர் பொத்துவில் வைத்தியசாலைக்கு அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக அம்பாறை ஆதார வைத்தியசாலைக்கு வந்துள்ளேன் .

என்னை தாக்கியவர்கள்  கடந்தநாடாளுமன்றத் தேர்தலில் கருணாவிற்கு ஆதரவாக செயற்பட்டவர்கள் அந்த நேரம் காரைதீவு பிரதேச சபை தவிசாளர் ஜெயசிறில் மீதும் தாக்குதலை மேற்கொண்டார்கள் . இவர்களுக்கு எதிராக பல வழக்குகள் பொத்துவில் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளன.  தாக்குதலை நடத்தியவர்களில் ஒருவர் வவுனியாவில்காவற்தறை உத்தியோகத்தராக கடமை புரிபவர்  .

இவர்களை போன்று கருணாவிற்கு பின்னால் போகும்  இளைஞர்கள் அடி தடி என வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.  இவ்வாறானவர்களை மக்கள் அடையாளம் கண்டுகொள்ள வேண்டும் .   எந்த எதிர்ப்புகள் வந்தாலும் நான் பிரதி தவிசாளர் பதவியை ஏற்றுக்கொண்டு தொடர்ந்து மக்களுக்கு எனது சேவைகளை செய்யவுள்ளேன்.  என குறிப்பிட்டார்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்துமாறு கோரி 47 உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் கடிதம் !

“இலங்கையை இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கும் வேறு பொருத்தமானதும் செயற்படுத்தக்கூடியதுமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கும் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ. நா. பொதுச்சபை, ஐ. நா. பாதுகாப்புச் சபை போன்றவை எடுக்க வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய தீர்மானத்தில் உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்” என வலியுறுத்தி ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 47 உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு இலங்கை நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் மூன்று தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்களும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கூட்டாக ஒப்பமிட்டுக் கடிதம் அனுப்பிவைத்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோரின் கூட்டுக் கையொப்பங்களுடன் அனுப்பிவைக்கப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

15 ஜனவரி 2021

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 47 உறுப்பு நாடுகளின் தூதரகங்களுக்கு!

மாண்புமிகு தூதர்களே,

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடரில் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு கோரல்!

இலங்கையின் நிலைமை குறித்து ஆராயப்படவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபையின் 46ஆவது கூட்டத் தொடருக்கு ஆயத்தமாகின்ற இவ்வேளையில், இலங்கையிலுள்ள தமிழ் மக்களின் தெரிவுசெய்யப்பட்ட  பிரதிநிதிகள், தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள், பாதிக்கப்பட்ட சமூகங்களின் உறுப்பினர்கள் மற்றும் தமிழ் சிவில் அமைப்புக்கள் ஆகியோர் தரப்பு சார்பில் இந்தக் கடிதத்தை எழுதுகின்றோம்.

இலங்கையின் இனப்பிரச்சினையால் ஏற்பட்ட ஆயுதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு வாரகாலத்துக்குள் இலங்கைக்கு விஜயம் செய்த ஐ.நா. செயலாளர் நாயகத்தோடு 2009ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் திகதி விடுக்கப்பட்ட கூட்டறிக்கையில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

இலங்கை தனது சர்வதேச கடப்பாடுகளுக்கும், சர்வதேச மனித உரிமை விழுமியங்களுக்கும் அமைவாக, மனித உரிமைகளைப் பாதுகாக்கவும், வளர்க்கவும் தாம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை இலங்கை மீண்டும் வலியுறுத்தியது. சர்வதேச மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்டங்கள் மீறப்பட்டதை விசாரிப்பதற்கான பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றின் முக்கியத்துவத்தை செயலாளர் நாயகம் வலியுறுத்தினார். இந்த முறைபாடுகளை விசாரிப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும்.

மேற்சொன்ன உறுதிமொழிகளை நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை அர்த்தமுள்ள நடவடிக்கை எதுவும் எடுத்திராத பின்புலத்தில், இலங்கையில் நிகழ்ந்த ஆயுதப் போராட்டத்தின் இறுதிக்கட்டங்களில் எழுந்த மனித உரிமைகள், பொறுப்புக்கூறல் விடயங்களை ஆராய்வதற்கென்று, 2010ஆம் ஆண்டு ஜூன் மாதம் 22ஆம் திகதி மூவரடங்கிய குழு ஒன்றை செயலாளர் நாயகம் நியமித்தார்.

நிபுணர்கள் குழுவின் இந்த அறிக்கை 2011ஆம் ஆண்டு மார்சில் செயலாளர் நாயகத்திடம் கையளிக்கப்பட்டது. இதன் பின்பு 2011ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் இந்த அறிக்கையை செயலாளர் நாயகம் ஐ.நா. மனித உரிமைகள் சபையின் தலைவரிடத்திலும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரிடத்திலும் பாரப்படுத்தினார்.

பின்பு ஐ.நா. மனித உரிமைகள் சபை, இலங்கையில் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல் என்ற19/02 தீர்மானத்தை நிறைவேற்றியது. அதன்பின்பு இவ்விடயத்தை தன்னகத்தே வைத்திருந்து 2013ஆம் ஆண்டு மார்ச்சில், 2014ஆம் ஆண்டு மார்ச்சிளும் தீர்மானங்கள் நிறைவேற்றியது. மேலும், தீர்மானங்கள் 30/01 (ஒக்டோபர் 2015), 34/01 (மார்ச் 2017) மற்றும் 40/01(மார்ச் 2019) ஆகியவற்றுக்கு இலங்கை அரசு இணை அனுசரணை வழங்கியது.

இலங்கையின் அரசியல் வெளியில் இரண்டு பிரதான அரசியல் கட்சிகள் உள்ளடங்கலாக அரசியல் தலைவர்கள், விதிவிலக்கு இல்லாமல், இலங்கையின் படைத்தரப்பினரை நீதி விசாரணையிலிருந்து பாதுகாப்போம் என்று கூறி வந்துள்ளார்கள். ஓர் உள்ளூர் பொறிமுறை மூலமாக இலங்கையில் பொறுப்புக்கூறலை ஏற்படுத்த முடியாது என்பதை உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது.

இராணுவ மயமாக்கல், அரசியல் கைதிகளைக் காலவரையறையின்றி தடுத்து வைத்திருத்தல், தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரில் நில அபகரிப்பு, மேய்ச்சல் தரை போன்ற தமிழ் மக்களின் பாரம்பரியமானதும் கூட்டு நில உரிமைகளை மறுப்பது, அரசியல் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களைக் கண்காணிப்பதைத் தீவிரப்படுத்துதல், கொரோனா நோயால் இறக்கும் முஸ்லிம் சகோதரரின் ஜனாஸா அடக்கத்தை மறுத்தல், நினைவேற்றல் உரிமையை மறுத்தல் போன்ற  தமிழ் மக்களுக்கு எதிராகத் தீவிரமாக்கப்பட்டிருக்கும் ஒடுக்குமுறையானது மோசமாகி கொண்டிருக்கும் சூழ்நிலையை கோடிட்டுக் காட்டுகின்றன.

ஐ.நா. மனித உரிமைகள் சபை எதிர்வரும் பெப்ரவரி, மார்ச் மாதங்களில் தீர்மானம் 40/01 இன் கீழ் இலங்கை அரசு உறுதிமொழி கொடுத்த விடயங்கள் சம்பந்தமாக ஆராய்வதற்காகக் கூடுகையில் இவ்வாறான முடிவெடுத்து இறுதித் தீர்மானமொன்றை நிறைவேற்றவேண்டும்.

இந்தத் தீர்மானமானது, இனப்பிரச்சினையால் ஏற்பட்ட ஆயுதப்போராட்டத்தின் போது இழைக்கப்பட்ட இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள், போர்க்குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிக்கும் பொறுப்பிலிருந்து இலங்கை தவறிவிட்டது என்றும், இதனை ஓர் உள்ளூர் பொறிமுறை மூலமாகவோ அல்லது கலப்புப் பொறிமுறை மூலமாகவோ இலங்கை செய்யும் என்பதற்கான வாய்ப்பு இல்லை என்றும்  பிரகடனப்படுத்த வேண்டும்.

நாம் பின்வருவனவற்றைக் கோருகின்றோம்:-

1) இலங்கையை இனப்படுகொலை, மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் போர்க்குற்றங்கள் உள்ளிட்ட குற்றங்களை விசாரிப்பதற்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கும் வேறு பொருத்தமானதும் செயற்படுத்தக்கூடியதுமான சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கும் பாரப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ஐ. நா. பொதுச்சபை, ஐ. நா. பாதுகாப்புச் சபை போன்றவை எடுக்க வேண்டும் என்று இந்தப் புதிய தீர்மானத்தில் உறுப்பு நாடுகள் வலியுறுத்த வேண்டும்.

2) ஐ. நா. மனித உரிமைகள் சபையின் தலைவர் இவ்விடயத்தை மேல் கூறப்பட்டபடி நடவடிக்கைக்காக மீளவும் செயலாளர் நாயகத்துக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

3) ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அலுவலகம் இலங்கையில் தொடர்ந்து நடைபெறுகின்ற மீறுதல்களைக் கண்காணிக்கவும் இலங்கையில் அவ்வலுவலகமொன்றை ஸ்தாபித்தல் வேண்டும்.

4) மேலே 1) இல் கூறியதற்குப் பங்கமில்லாமல் ஐ. நா. பொதுச் சபையின் உப பிரிவாக, சீரியா சம்பந்தமாக உருவாக்கப்பட்ட சாட்சிகளைச் சேகரிக்கின்ற பொறிமுறை போன்றதொன்றை (கடுமையான 12 மாத அவகாச நிபந்தனையோடு) ஏற்படுத்துதல்.

பொறுப்புக்கூறல் சம்பந்தமாக பலமான நடவடிக்கை எடுப்பதற்காக உயரிய தளங்களுக்கு இவ்விடயம் கொண்டுசெல்லப்படல் வேண்டும் என்பதை நாம் மீளவும் வலியுறுத்துகின்றோம்.

ஆகையால் இதுவரைக்கும் நீதி மறுக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தீர்க்கமாகவும் காலம் கடத்தாமலும் நடவடிக்கை எடுக்குமாறு நாம் உறுப்பு நாடுகளிடம் வலியுறுத்துகின்றோம் – என்றுள்ளது.

கொரோனா தடுப்பூசிகளை எதிர்பார்த்து சீன ஜனாதிபதிக்கு ஜனாதிபதி கோட்டாபாயராஜபக்ஷ கடிதம் !

கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசிகளை சீனாவிடம் இருந்து பெற்றுக்கொள்வதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச, சீன ஜனாதிபதி ஷி ஜின் பிங்குக்குக் கடிதம் அனுப்பிவைத்துள்ளார்.

ஜனாதிபதியின் இந்தக் கடிதத்தை சீனாவுக்கான இலங்கையின் தூதுவர் பாலித கோஹன, சீன வெளிவிவகார அமைச்சின் நிறைவேற்றுப் பணிப்பாளருக்குக் கையளித்துள்ளார்.

இந்த ஆண்டு நடுப்பகுதிக்குள் இலங்கைக்கான தடுப்பூசிகளை இறக்குமதி செய்து, 70 வீதமான பொதுமக்களுக்கு வழங்க எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி தெரிவித்துள்ளார்.

கொரோனா மூன்றாம் அலை அல்லது தற்போது காணப்படும் இரண்டாம் அலையின் பரவல் நிலைமைகள் மேலும் விரிவடைய இடமளிக்காது மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் சுகாதார அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.

“வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.” – புதிய அரசியலமைப்புக்கான ஆலோசனையில் புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆலோசனை !

“வடக்கு கிழக்கு மாகாணங்கள் நிரந்தரமாக ஒன்றிணைக்கப்பட்டு தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.மலையக மக்கள் ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். ” போன்ற அம்சங்கள் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தில் உள்வாங்கப்பட வேண்டும்  என புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி ஆலோசனை வழங்கியுள்ளது.

அத்துடன், இவ்வாறு உருவாக்கப்படும் சுயாட்சிப் பிரதேசம் ‘வடக்கு கிழக்கு மாகாண சுயாட்சி’ அல்லது ‘மாநில சுயாட்சி’ என பெயரிடப்பட வேண்டும் என புதிய அரசியல் அமைப்புக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான ஆலோசனைகள் அரசாங்கத்தினால் அனைத்து தரப்புகளிடமிருந்தும் கோரப்பட்டிருந்த நிலையில், குறித்த கட்சியின் அரசியல் குழுவால் கடந்த மாதம் அனுப்பிவைக்கப்பட்ட ஆலோசனை அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆலோசனை அறிக்கையில்,

“இந்த நாட்டின் நான்கு தேசிய இனங்களாக சிங்களவர், தமிழர், இஸ்லாமியர், மலையகத் தமிழர் ஆகியோரும் தேசிய சிறுபான்மையினராக பறங்கியர், மலாயர், வேடுவர், ஆபிரிக்கர் (கபீர்), பறதர், குறவர், கொழும்பு செட்டி, மலையாளிகள், தெலுங்கர் ஆகியோரும், சமயங்களாக பௌத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களும் மொழிகளாக சிங்களம், தமிழ் ஆகியனவும் எவ்வித பாரபட்சமும் பாராட்டப்படாதவையாக அங்கீகரிக்கப்பட வேண்டும். இலங்கையின் தேசியக் கொடியானது இந்த அம்சங்களைப் பிரதிபலிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட வேண்டும்.

அரசானது பிராந்திய சுயாட்சி அமைப்புகளை உடையதாக உள்ளாட்சி நிறுவனங்களுக்கிடையே அதிகாரம் பகிரப்பட்ட இறையாண்மையும் தன்னாதிக்கமும் உடைய ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருக்க வேண்டும். இலங்கையானது இன, மத, மொழி, கலாசார பல்வகைமை கொண்ட நாடு என்ற வகையில் வர்க்க, மத, சாதி, மொழி, பாலினம் மற்றும் அனைத்து வகை பாகுபாடுகளையும் நீக்குவதன் மூலமும் பங்குபற்றும் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதன் மூலமும் பொருளாதார சமத்துவத்துவமும் சமூக நீதியும் நிலை நாட்டப்பட வேண்டும்.

இலங்கை சுதந்திரமும் மக்களின் இறைமையும் மக்கள் அதிகாரத்தை வலுப்படுத்தும் ஆட்சியமைப்பையும் கொண்டதாக இருப்பதுடன், அந்த இறைமை நாட்டின் தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், அரச ஊழியர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களுக்கும் தேசிய இனங்கள், தேசிய சிறுபான்மையினர், பெண்கள் உட்பட அனைவருக்கும் உரித்தானதாகும்.

இத்தகைய மக்களின் இறைமை, நிர்வாகத் துறை, நீதித் துறை, சட்டவாக்கத் துறை ஆகியவற்றுக்கு சர்வஜன வாக்கெடுப்பு மூலமான மக்கள் தீர்ப்பு ஊடாக பங்குபற்றும் உரிமை, திருப்பி அழைக்கும் அதிகாரம், அடிப்படை உரிமைகள் பாதுகாப்பு, அதிகாரப் பரவலாக்கம், பொறுப்புக் கூறல் என்பவற்றை உள்ளடக்கியதாகத் தற்காலிகமாகக் கையளிக்கப்பட வேண்டும்.

தொடரும் இனப் பிரச்சினைக்குத் தீர்வாக, இலங்கையின் அனைத்து தேசிய இனங்களினதும் சிறுபான்மை தேசியங்களினதும் வளர்ச்சி, பாதுகாப்பு, இன அபிலாசைகளை உறுதிப்படுத்தும் வகையிலும் காணி, வீடமைப்பு போன்ற அடிப்படை உரிமைகள், பொருளாதார சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்தும் வகையிலும் தேசிய இனங்களின் பாரம்பரிய வாழ்விடப் பிரதேசங்கள் கலாசார விழுமியங்களுக்கு இடையூறு இல்லாத வகையிலும் சுயாட்சி அதிகார அலகுகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

இந்தச்  சுயாட்சி அதிகார அலகுகள் மாகாணங்கள் அல்லது மாநிலங்கள் என அறியப்படலாம். இந்த அலகுகளின் எண்ணிக்கை இலங்கையின் சனத்தொகை செறிவிற்கு ஏற்ப நிர்வாக நடைமுறைகள் மக்களுக்கு இலகுவாக சென்றடையும் வகையில் வரையறுக்கபட வேண்டும்.

தமிழ் பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசங்களான வடக்கு கிழக்கு மாகாணங்களை நிரந்தரமாக ஒன்றிணைத்து தமிழ் மக்களுக்கான சுயாட்சி அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இவ்வாறு உருவாக்கப்படும் சுயாட்சிப் பிரதேசம் ‘வடக்கு கிழக்கு மாகாண சுயாட்சி’ அல்லது ‘மாநில சுயாட்சி’ என பெயரிடப்பட வேண்டும். இங்கு வாழும் சிங்கள, முஸ்லிம், மலையக மக்களுக்கான சுயாட்சி உள்ளமைப்புகள் அவர்களின் சன செறிவிற்கேற்ப நிலத்தொடர்புகளை இணைத்தோ, தனித்தனியாகவோ உருவாக்கப்பட வேண்டும்.

முஸ்லிம் மக்கள் தனித்துவமான ஒரு தேசிய இனமாக ஏற்று அதன் அடிப்படையில் அந்த மக்கள் பாரம்பரியமாக செறிந்து வாழும் பிரதேசங்களையும் பரந்து வாழும் பிரதேசங்களையும் இணைத்தோ அல்லது தனித்தனியாகவோ கொண்ட சுயாட்சி அதிகார அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.

சுமார் 200 வருடங்கள் வரலாற்றையும் தனித்துவமான சமூக பொருளாதார அரசியல் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்ட மலையக மக்கள் ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். மலையக மக்கள் செறிந்து வாழும் நிலத்தொடர்புடைய பிரதேசங்களை இணைத்து மலையக மக்களுக்கான சுயாட்சிப் பிரதேசம் உருவாக்கப்பட வேண்டும்.

சிங்கள மக்களுக்கான சுயாட்சி அதிகார அலகுகள், சனத்தொகை செறிவிற்கேற்ப வரையறை செய்யப்பட வேண்டும். அவை அவற்றின் பாரம்பரிய அடையாளங்களுக்கு ஏற்ப பெயரிடப்பட வேண்டும். இவ்வாறு உருவாக்கப்படும் சுயாட்சி பிரதேசங்களில் வாழும் சிறுபான்மை மக்களினதும் ஏனைய தேசிய சிறுபான்மையினரதும் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் சுயாட்சி உள்ளமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும். சுயாட்சி உள்ளமைப்புகளின் அதிகாரம் அவ்வமைப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்றவாறு வரையறுக்கப்பட வேண்டும்.

சிங்கள மக்களின் சுயாட்சி பிரதேசத்தில் வாழும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களுக்கான சுயாட்சி உள்ளமைப்புகள் அவர்களின் வாழ்விட பிதேசங்களையும் சன செறிவையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட வேண்டும். ஏனைய தேசிய சிறுபான்மையினரின் சனத்தொகை பரம்பலுக்கேற்ப அவர்களின் விருப்புக்கேற்றவாறு அவர்களின் அடையாளம், பண்பாடு, பாதுகாப்பு என்பனவற்றை உறுதிப்படுத்தக்கூடிய இணைந்த சுயாட்சி உள்ளமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்.

இச்சுயாட்சி அமைப்புகள் அப்பிராந்தியத்தின் விவசாயம் கைத்தொழில் உள்ளிட்ட ஏனைய தொழில் துறைகளை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அபிவிருத்தி, கைத்தொழில், வேலைவாய்ப்பு, இயற்கை வனவள ஜிவராசிகள் மற்றும் கடல் வளப் பாதுகாப்பு, நிலப் பகிர்வு, நீர்ப்பாசனம், விவசாயம், வீதிப் போக்குவரத்து, குடியேற்றம், வீடமைப்பு அபிவிருத்தி, கல்வி, பண்பாடு, சுகாதாரம் என்பவற்றிற்கான தலையீடற்ற சுயாதீனமான கொள்கை வகுப்பினை கொண்டிருக்க வேண்டும்.

அத்துடன் இவை மத்திய அரசின் திட்டங்களை உரிய கலந்தாலோசனையின் அடிப்படையில் ஏற்கவோ அல்லது மறுக்கவோ பூரண அதிகாரம் உடையவையாக இருக்க வேண்டும். மேலும் சட்டம் ஒழுங்கைப் பேணல் உள்ளூர் பாதுகாப்பு என்பவற்றிற்கு பூரண வகை கூறலை கொண்டிருக்க வேண்டும்.

அந்நிய அச்சுறுத்தலோ ஆக்கிரமிப்போ இல்லாதவிடத்து இராணுவத் தளங்களை உருவாக்குதல் அல்லது விரிவாக்குதல் தொடர்பாக சுயாட்சி நிர்வாகத்திடம் கலந்து பேசி முடிவெடுக்கப்படல் வேண்டும். நீதி, நிதி, நிர்வாகம் ஆகியவற்றை அரசியல் அமைப்புக்கு அமைய அப்பிரதேச மக்களின் தேவைக்கேற்ப வளர்க்கவும் முன்னெடுக்கவும் முடியுமாய் இருத்தல் வேண்டும்” போன்ற பல விடயங்கள் குறித்துக் காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முடிவுக்கு வந்தது அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கு !

இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவால் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணையினை இனிமேல் தொடர மாட்டோம் என கொழும்பு மேல் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

2010ஆம் ஆண்டு தொடக்கம் 2014ஆம் ஆண்டு வரையில் வர்த்தக அமைச்சராக செயற்பட்ட போது ச.தொ.ச நிறுவனத்தின் 153 ஊழியர்களை அவருடைய அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடுத்தியதோடு, அதனால் அரசாங்கத்திற்கு 4 கோடி ரூபா நஷ்டத்தை ஏற்படுத்தியதாகக் குறிப்பிட்டு நல்லாட்சி அரசாங்கத்தின் போது இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இந் நிலையில் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு முறையானது சட்டத்திற்கு முரணானது என கடந்த ஒக்டோபர் மாதம் தீர்பளித்த கொழும்பு மேல் நீதிமன்றம் குறித்த வழக்கை தள்ளுபடி செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

அண்மையில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ஜோசப்பரராசசிங்கம் என்பவருடைய கொலை வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் (பிள்ளையான்) விடுவிக்கப்பட்டமையும் நினைவிற்கொள்ளத்தக்கது.

“மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது தடுப்புமருந்து பற்றி யோசிக்காத அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டதும் மருந்துக்காக கூடிய கவனம் செருலுத்துகின்றது” – இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

“மக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்ட போது தடுப்புமருந்து பற்றி யோசிக்காத அரசாங்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்டதும் மருந்துக்காக கூடிய கவனம் செருலுத்துகின்றது” என அகில இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் பெருமளவானவர்கள் பாதிக்கப்பட்டவேளை கொரோனா வைரஸ் மருந்து குறித்து கருத்து தெரிவிக்காத அதிகாரிகள் தற்போது கொரோனா மருந்தினை வழங்குவது குறித்து கருத்து வெளியிட ஆரம்பித்துள்ளனர் என அகில இலங்கை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் கிசாந்த தசநாயக்க தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்காக பல நிறுவனங்கள் மருந்துகளை தயாரித்துள்ளன என குறிப்பிட்டுள்ள அவர் எனினும் இலங்கை இந்த மருந்துகளை கொண்டுவருவது குறித்து கவனம் செலுத்தவில்லை புராணக்கதைகளில் தெரிவிக்கப்பட்டுள்ள தீர்வுகளையே நாடியது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

உறுதிப்படுத்தப்படாத ஆயுர்வேத மருந்துகளில் கவனம் செலுத்தியதால் அரசாங்கம் மருந்தினை இறக்குமதி செய்வதை தாமதப்படுத்தியது என அவர் குறிப்பிட்டுள்ளார்.நாடாளுமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட பின்னரே அரசாங்கம் மருந்துகள் குறித்து கவனம் செலுத்துகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மக்கள் வாழ்க்கையுடன் விளையாடிய பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஏற்பட்ட தலைவிதியைப் பார்த்திருப்பீர்கள்” – இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த எச்சரிக்கை !

“மக்கள் வாழ்க்கையுடன் விளையாடிய பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஏற்பட்ட தலைவிதியைப் பார்த்திருப்பீர்கள்” என இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த எச்சரித்துள்ளார்.

களுத்துறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“சிங்கங்களாக வேடமிட்டிருக்கும் அரசியல் நரிகளால், மக்களைக் குழப்பமுடியாது. அசாத்சாலி, சிங்கம்போல வேடமிட்டிருக்கும் நரி. தீர்மானிக்கும் பொறுப்பை, சுகாதார பிரிவின் நிபுணர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.

சுகாதார பிரிவினரின் தீர்மானத்தை நாட்டுப் பிரஜைகள் என்றவகையில் நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும். அசாத் சாலியை விட திமிர்பிடித்து இருந்தவர்கள் அழிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் பொருளாதாரத்தில் மட்டுமன்றி, மக்கள் வாழ்க்கையுடன் விளையாடிய பிரபாகரன் உள்ளிட்ட விடுதலைப் புலிகள் அமைப்புக்கு ஏற்பட்ட தலைவிதியைப் பார்த்திருப்பீர்கள். பயங்கரவாதத்தையோ தீவிரவாதத்தையோ உருவாக்க முயற்சிக்கும் எந்தவொரு நபருக்கோ குழுக்களுக்கோ அதே நிலைமையை ஏற்படுத்துவதற்கு இந்த அரசாங்கம் பின்வாங்காது.

பலமிக்கம் தலைமைத்துவம் நாட்டை ஆட்சி செய்கிறது. ஆகையால், எதிர்க்கட்சி உள்ளிட்ட அரசியல்வாதிகள் மிகவும் புத்திசாதுரியத்துடன் செயற்பட வேண்டும்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலில் போது, அன்று எதிர்க்கட்சியாகச் செயற்பட்ட நாம், அனைத்து மதத் தலைவர்களையும் ஒன்றிணைத்து, கலவரம் ஏற்படாத வகையில், சகல இன மக்களையும் வழிநடத்தி, பொறுப்புடன் செயற்பட்டோம்.“ எனத் தெரிவித்துள்ளார்.

“ரஞ்சன்ராமநாயக்கவின் பிரஜாவுரிமை ரத்து”- சட்டத்தரணி பிரதீபா மஹானாமஹேவா

நீதித்துறையை அவமதித்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன்ராமநாயக்க கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ரஞ்சன் ராமநாயக்க தண்டனையை நிறைவு செய்யும் நாள் முதல் 7 வருடங்களுக்கு அவருடைய பிரஜாவுரிமை இரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேராசிரியர் சட்டத்தரணி பிரதீபா மஹானாமஹேவா இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார்.

இந்த காலப் பகுதியில் அவருக்கு எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும், ஜனாதிபதி மன்னிப்பு வழங்கினால், அவருக்கு மீண்டும் அந்த சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் பிரதீபா மஹானாமஹேவா தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், உயர்நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட 4 வருட சிறைத் தண்டனை மற்றும் 7 வருட பிரஜாவுரிமை இரத்து ஆகிய காலப் பகுதிகள் நிறைவடைந்ததன் பின்னரே அவருக்கு தேர்தல்களில் போட்டியிடுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த தீர்ப்புக்கு அமைய சுமார் 11 வருடங்கள் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு தேர்தல்களில் போட்டியிட முடியாது என பேராசிரியர் சட்டத்தரணி பிரதீபா மஹானாமஹேவா சுட்டிக்காட்டியுள்ளார்.

“அரசாங்கம் மக்களின் உயிர்களுடன் விளையாடுகின்றது” – ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு !

அரசாங்கம் மக்களின் உயிர்களுடன் விளையாடுகின்றது என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்து ஜயவர்த்தன இந்த குற்றச்சாட்டினை முன்வைத்துள்ளார்.

இங்கிலாந்தில் புதியவகை வீரியமிக்க கொரோனா வைரஸ் பரவிவரும் வேளையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை இலங்கைக்கு அழைப்பதற்கு அரசாங்கம் முடிவு செய்தமை குறித்து அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அரசாங்கம் மக்களின் உயிர்களுடன் விளையாடுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏனைய நாடுகள் புதியவகை வைரஸ் பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வேளை இலங்கை இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களை நாட்டிற்கு அழைத்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.