உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“சரத் பொன்சேகா கூறுவதுபோல் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சி ஒருபோதும் அமையாது.” – அருந்திக்க பெர்னாண்டோ

“சரத் பொன்சேகா கூறுவதுபோல் சஜித் பிரேமதாஸ தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆட்சி ஒருபோதும் அமையாது.” என இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோ தெரிவித்தார்.

எமது ஆட்சியில் ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நாடாளுமன்ற தெரிவுக்குழுதான் கண் துடைப்பு நாடகம். ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை என்பது இறுதியானது அல்ல. அதில் நல்ல விடயங்களும் உள்ளன. ஏற்றுக்கொள்ள முடியாத சில விடயங்களும் உள்ளன. எது எப்படி இருந்தாலும் குற்றவாளிகள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள்” – என்றார்.

“எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் கத்தோலிக்க மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும்.” – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

“எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியின் கீழ் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் அனைத்து விடயங்களும் கண்டறியப்பட்டு, கத்தோலிக்க மக்களுக்கு நீதி பெற்றுக்கொடுக்கப்படும்.” என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி விசாரணை அறிக்கை தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று(10.03.2021) நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

“உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சூத்திரதாரி சஹ்ரான் அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். ஆனாலும், அவர்தான் பிரதானி எனக் காண்பிப்பதற்கு சிலர் முயற்சிக்கின்றனர். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்குக் கூட தற்கொலை தாக்குதல் போராளி ஒருவரை உருவாக்குவதற்குப் பல வருடங்கள் எடுத்தன. எனவே, சஹ்ரான் திடீரென உருவான நபர் கிடையாது. 2005 காலப்பகுதியில் இருந்து அவர் கருத்தியலை விதைத்து வந்துள்ளார். 2014 வரை அவருக்கு சம்பளம் வழங்கப்பட்டுள்ளது எனக் கூறப்படுகின்றது. இது தொடர்பில் உரிய தகவல் வெளியிடப்படவேண்டும்.

ஜனாதிபதி ஆணைக்குழு என்பது நாடகம். எனவே, நாடகம் முடியும்போது நிச்சயம் உண்மை தெரியவரும்.

எமது ஆட்சியின்கீழ் உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனைத்து விடயங்களும் கண்டறியப்படும். கத்தோலிக்க மக்களுக்கு நீதி நிவாரணம் பெற்றுக்கொடுக்கப்படும். அப்போது இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் அனைவருக்கும் அறிந்து கொள்ளக்கூடியதாக இருக்கும்” என்றார்.

“அரசு தன் கூலிப்படைகளைக் கொண்டு எங்களைத் துரத்திக் கொண்டே இருக்கின்றது.” – அ.அமலநாயகி

“அரசு தன் கூலிப்படைகளைக் கொண்டு எங்களைத் துரத்திக் கொண்டே இருக்கின்றது.”என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்க மட்டக்களப்பு மாவட்ட தலைவி அ.அமலநாயகி தெரிவித்துள்ளார்.

தங்கள் உறவுகளுக்கான நீதி கோரிய ஜனநாயக ரீதியான உரிமைப் போராட்டங்களை நீதிமன்றத் தடையுத்தரவின் மூலம் தடுப்பது தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

யுத்தம் முடிவுற்ற காலம் தொடக்கம் இன்று வரை நாங்கள் எங்கள் உறவுகளுக்கு என்ன நடந்தது என்ற அவர்களுக்கான நீதி கோரி கையில் புகைப்படங்களுடனும், கண்ணீருடனும் வீதிகளில் போராடிக் கொண்டிருக்கின்றோம். ஒரு பிரதேசத்தில் ஆரம்பித்த எமது அமைப்பு பின்னர் மாவட்டங்கள் தோறும் ஆரம்பிக்கப்பட்ட எமது உறவுகளுக்காகப் பல அச்சுறுததல்களுக்கும் மத்தியில் போராடிக் கொண்டிருக்கின்றோம்.

வடக்கு கிழக்கு இணைந்த தாயகத்தில் எட்டு மாவட்டங்களும் இணைந்து எமது போராட்டங்கள் வலுப்பெற்று இன்று சர்வதேச நீதியைக் கோரி நிற்கின்றோம். இன்று எம்மோடு இணைந்து போராடிய பல தாய்மார்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் தங்கள் உறவுகளைத் தேடி, அவர்கள் வருவார்கள் என்ற நம்பிக்கையோடும், ஏக்கங்களோடும் மரணித்துள்ளார்கள். அவர்கள் அழிக்கப்பட்ட சாட்சியங்களாக உள்ளது மாத்திரமே பெறுபேறாகக் கிடைத்திருக்கின்றது.

இலங்கை அரசினூடாக எவ்வித தீர்வும் கிடைக்கப் பெறாமையினாலேயே எமது போராட்டங்களை நாங்கள் சர்வதேசத்தை நோக்கி நகர்த்தியிருக்கின்றோம். இருப்பினும் அரசு தன் கூலிப்படைகளைக் கொண்டு எங்களைத் துரத்திக் கொண்டே இருக்கின்றது. இலங்கையின் நீதித்துறை முன் எங்களைப் பயங்கரவாதிகளாகச் சித்தரிக்கின்றது அரசு.

சிறு குற்றங்கள் புரிந்தவர்களுக்கு வருடக் கணக்கில் தண்டனைகளைக் கொடுக்கும் இந்த நீதித்துறை எங்கள் உறவுகளைத் தேடும் எங்களையும் பயங்கரவாதிகளாகக் காட்டி எமது உரிமைக்கான போராட்டங்களைக் கூடச் செய்யவிடாது, தடையத்தரவுகளையும் வழங்குகின்றது. இதனால் நாங்கள் தற்போது நீதி கேட்கக் கூட இயலாத நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். இதுதான் தற்போது இலங்கையின் ஜனநாயகமாக இருக்கின்றது.

ஆனால், எங்கள் உறவுகளைக் காணாமல் ஆக்கச் செய்த குற்றவாளிகளும், படுகொலை செய்த குற்றவாளிகளும் அவர்கள் குற்றவாளிகளாக அடையாளம் காணப்பட்டும் நீதிமன்றத்தின் மூலம் அவர்கள் விடுதலை செய்யப்பட்ட அவர்களுக்கான பதவியுயர்வுகளைக் கொடுக்கும் வண்ணமான ஜனநாயகத்தினையே இந்த அரசாங்கம் செய்து கொண்டிருக்கின்றது.

ஒரு இனத்தை அழித்தவர்களுக்கும், கொலை செய்தவர்களுக்கும் கிடைக்கும் மதிப்பு வேதனையோடு வீதிகளில் போராடும் எமக்கு இல்லை. இந்த நாட்டில் சிறு பிள்ளை தொடக்கம் கற்பினித் தாய்மார், வயதானவர்கள் என்று கொலை செய்தவர்களுக்கு உயிரின் மதிப்பு தெரியாது. ஆனால் சர்வதேச நாடுகளும் அவ்வாறு இருப்பதை நினைத்தால் எமக்கு மேலும் வேதனையாகவே இருக்கின்றது.

இங்கு நீதி கிடைக்காமையினாலேயே ஐநா சபையை நாங்கள் நாடி வந்திருக்கின்றோம். எங்களை கைவிட்டு விடாதீர்கள். எமது உறவுகள் எமக்கு வேண்டும். அவர்களுக்கு என்ன நேர்ந்தது என்பது எங்களுக்குத் தெரிய வேண்டும். அதற்காகவே எமது போராட்டங்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. எமது தாய்மாரையும் இழந்து கொண்டிருக்கின்றோம். எமது சாட்சியங்களும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. எனவே இனியும் தாமதிக்காமல் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எமது பிரச்சினைகைளப் பாராப்படுத்தி எமது உறவுகளுக்கான நீதியைப் பெற்றுத் தர வேண்டும் என்று தெரிவித்தார்.

“ஏப்ரல் குண்டுத்தாக்குதல் யாருடைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இடம்பெற்றது என்பதே கண்டறியப்படவேண்டும்.” – நாடாளுமன்றில் எம்.ஏ.சுமந்திரன் !

“ஏப்ரல் குண்டுத்தாக்குதல் யாருடைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இடம்பெற்றது என்பதே கண்டறியப்படவேண்டும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சபையில் நேற்று (11.03.2021) தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட
ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை தொடர்பில் ஆளும் கட்சி
கொண்டுவந்த சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் மிக மோசமான தற்கொலைத் தாக்குதல் இடம்பெற்றது. இதில் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதியைப் பெற்றுக்கொடுக்கவும், குற்றவாளிகளுக்கு தண்டனையை பெற்றுக்கொடுக்கும் கடப்பாடு அரசாங்கத்துக்கு உள்ளது. ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தில் நீதியை வழங்குவதில் தோல்வியடைந்துள்ளது என்றே கூற வேண்டும்.

இந்தத் தாக்குதலுக்கு பிரதான சூத்திரதாரி யார் என பேராயர் மல்கம் ரஞ்சித்
ஆண்டகை கேள்வி எழுப்புகின்றார். ஆனால் அமைச்சர் மஹிந்தானந்த அளுத் கமகே சஹ்ரானே பிரதான சூத்திரதாரி என சபையில் கூறுகின்றார். அவ்வாறு கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. ஜனாதிபதி ஆணைக்குழுவின்
அறிக்கையில் பிரதான சூத்திரதாரி யார் என்பது தெரிவிக்கப்படவில்லை. முதலில் பாராளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையை வாசிக்க வேண்டும். குற்றவாளிகளைக் கண்டறியும் வழிமுறையை பாராளுமன்ற தெரிவுக்குழு தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதல் குறித்து ஆராய நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்
குழு அறிக்கையின் பல விடயங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஜனாதிபதி
ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டுள்ளன. இந்தத் தாக்குதலை யார் திட்டமிட்டது, யார் பின்னால் இருந்து இயங்கியது, யாருடைய நிகழ்ச்சி நிரலுக்கு அமைய இந்தத் தாக்குதல் இடம்பெற்றது என்பதே கண்டறியப்படவேண்டும்.

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையிலும், ஜனாதிபதி ஆணைக்குழுவிடம்
விசாரிக்கப்பட்டும் இப்போது வரையில் பிரதான சூத்திரதாரி யார் என்பது தெரியாது என அரசாங்கம் கூறுகின்றது என்றால், இதன் பின்னணியில் எதோ தவறு இடம்பெறுகின்றது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
அதுவே பொறுப்பான அரசாங்கத்தின் கடமையாகும். எந்த அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டிய கடமை அரசாங்கத்திற்கு உள்ளது.

இந்த நாட்டில் எமக்கு எதிராக இடம்பெற்ற இன அழிப்பில் நியாயத்தைக் கேட்டு நிற்கின்ற வேளையில், சர்வதேச விசாரணையை நடத்தக்கோரி நிற்கின்ற நிலையில், சர்வதேச விசாரணை அவசியமில்லை, உள்ளக விசாரணைகளில் தீர்வு காண்போம் எனக் கூறியவர்கள் இப்போது இந்த விடயத்தில் சர்வதேச விசாரணை வேண்டும் எனக் கேட்கின்றனர்.

ஏன் சர்வதேச விசாரணை வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது? ஏனென்றால் பொறுப்புக்கூறலை நிறைவேற்றவும், தமது மக்களுக்கான நியாயத்தை, நீதியை நிலைநாட்டவும் இலங்கை அரசு தோற்றுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் இப்போது
இடம்பெறுகிறது. எமது மக்களுக்கு பொறுப்புக்கூறல் நிறைவேற்றப்பட
வேண்டும் என நாம் தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் கேட்டுக்கொண்டுள்ளோம்.

2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆரம்பித்த எமது கோரிக்கை இன்று
வரை தொடர்கின்றது. இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற போர்க் குற்றங்களை ஆராயவும் பொறுப்புக் கூறவும் வலியுறுத்துகின்றோம்” என்றார்.

“ஐ.நாவின் தற்போதைய வரைவு சிறிலங்கா இனவாத அரசுக்கும் அதன் குற்றவாளிகளுக்கும் மேலதிக நேரமும் வெகுமதியும் அளிப்பதாக அமைகிறது” – நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்

“உலகெங்கும் போரினாலும் இனப் படுகொலைகளினாலும் பாதிக்கப்பட்டவர்கள் தமக்கான நீதியினைப் பெற்றுக்கொள்வதில் ஐ.நா.வின் தேவை தற்போது கேள்விக் குறியாகியுள்ள நிலையில், இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன்பு நிறுத்துவதன் மூலம் கடந்த காலத் தவறுகளை சரிசெய்வதற்கு ஐ.நா.வுக்கு தற்போது வாய்ப்புக் கிட்டியுள்ளது” என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம், ஐ.நா. மனித உரிமைச்சபை தனது தலைமைத்துவத்துக்கும் முன்னேற்றத்துக்கும் வாய்ப்பாக இது அமையும் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கை தொடர்பாக ஐ.நா. மனித உரிமைச் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவு குறித்து, நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாட்டினை ஐ.நா. அங்கத்துவ நாடுகளுக்கு அனைத்துலகத் தொடர்பாடலுக்கான அமைச்சர் மாணிக்கவாசகர், காணொளி தொடர்பாடல் ஊடாக முன்வைத்திருந்தார்.

இந்நிலையில் அவர் தனது உரையில்,

“கடந்த 12 ஆண்டுகளாக நாங்கள் இன்னமும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்காகக் காத்திருக்கிறோம்.

ஐ.நா. தீர்மானங்கள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் தொடர்ந்து இணங்காதது மற்றும் போர்க் குற்றங்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் உட்பட இடைக்கால நீதி வழிமுறைகளை நிறுவுவதில் தாமதம் என்பன போரில் பாதிக்கப்பட்ட ஆயிரக் கணக்கானோருக்கு உண்மை மற்றும் நீதியை வழங்குவதைத் தவிர்ப்பதற்கான ஒரு முயற்சியாகும்.

எந்தவொரு தீர்மானத்தையும் நடைமுறைப்படுத்தி நீதி மற்றும் பொறுப்புக் கூறலுக்கான சூழலை உருவாக்கும் நம்பிக்கை மற்றும் நல்லிணக்கத்தை உள்நாட்டுப் பொறிமுறை மூலம் செய்யமுடியாது என்பதை சிறீலங்கா மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வந்ததன் மூலம் தெளிவாகிவிட்டது. உங்களது தற்போதைய தீர்மான வரைவு, பாதிக்கப்பட்டவர்களை மேலும் துன்பத்திற்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்குவதோடு சிறிலங்கா இனவாத அரசுக்கும் அதன் குற்றவாளிகளுக்கும் மேலதிக நேரமும் வெகுமதியும் அளிப்பதாக அமைகிறது.

உலகெங்கும் போரினால் பாதிக்கப்பட்டவர்கள், கட்டமைக்கப்பட்ட இனப் படுகொலை, போர்க் குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களுக்கு உட்படுத்தப்படுவதால் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதியைப் பெற்றுக் கொள்வது தொடர்பாக ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் தேவை இப்போது கேள்விக் குறியாகியுள்ளது.

சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன்பு நிறுத்துவதன் மூலம், தனது தலைமைத்துவத்தைக் காண்பிப்பதற்கும் கடந்த காலத் தவறுகளைச் சரிசெய்வதற்கும் முன்னேறுவதற்கும் ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு இதுவொரு வாய்ப்பாக அமையும் என உறுதிபடத் தெரிவிக்கின்றோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அது தொடர்பான விசாரணைக்கு ஏன் அஞ்சுகின்றீர்கள் ?” – சம்பந்தன் கேள்வி !

“இலங்கை இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அது தொடர்பான விசாரணைக்கு ஏன் அஞ்சுகின்றீர்கள்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊடகம் ஒன்றின் கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

‘இலங்கையில் இறுதிப்போரில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் நீதியான விசாரணை நடாத்தப்பட்டு குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பரிகாரம் கிடைக்க வேண்டும் என்பதும் எமது வேண்டுகோளாகும்.

இதை நாம், 2009இல் போர் நிறைவுக்கு வந்தது தொடக்கம் உள்நாட்டிலும், சர்வதேச மட்டத்திலும் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றோம்.

இலங்கை மீதான ஐ.நா. தீர்மானங்களும் இதையே வலியுறுத்தி நிற்கின்றன. ஆனால், அரசுதான் ஐ.நாவின் பரிந்துரைகளை நிறைவேற்றாமல் தான்தோன்றித்தனமாகச் செயற்படுகின்றது.

இராணுவத்தினர் போர்க்குற்றங்களை இழைக்கவில்லையெனில் அவர்களும், அரச தரப்பினரும் அது தொடர்பான விசாரணைக்கு அஞ்சுவது ஏன்? யார் குற்றம் செய்திருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்.

யார் பாதிக்கப்பட்டிருந்தாலும் அவர்களுக்குப் பரிகாரம் கிடைக்க வேண்டும். இதுதான் சர்வதேச நியதி. இதை மீறி எவரும் செயற்பட முடியாது. சர்வதேசத்தைப் புறந்தள்ளி இந்த அரசு செயற்படுமானால் நாடுதான் பேராபத்தைச் சந்திக்கும்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.

“பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள திட்டம்” – சுரேஷ் பிரேமச்சந்திரன்

“பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ள திட்டமிடப்பட்டு  காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான ஆவணங்கள் வடமாகாண அலுவலகத்திலிருந்து இரவோடு இரவாக அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டிருக்கலாம்” என  என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்த அவர்,

அண்மைக் காலங்களில் சர்ச்சைக்குரிய விஷயமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கும் காணி சீர்திருத்த ஆணைக்குழுவிற்கு சொந்தமான ஆவணங்கள் வடமாகாண அலுவலகத்திலிருந்து இரவோடு இரவாக அனுராதபுரத்துக்கு மாற்றப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும்.

அண்மையில் இடம்பெற்ற மின்சாரத்தடை சந்தர்ப்பத்தை பயன்படுத்தி இரவோடு இரவாக அனைத்து ஆவணங்களையும் அனுராதபுரத்துக்கு கொண்டு சென்றமையினால் எமக்கு பல சந்தேகங்கள் எழுகின்றது.

மேலும் கிளிநொச்சி மாவட்டத்தில் குறிப்பாக பச்சிலைப்பள்ளி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மூவாயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் காணிகளில் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்வதற்காக இவ் இடமாற்றம் இடம்பெற்றிருக்கலாம் எனவும் சந்தேகங்கள் எழுகின்றன எனவும் தெரிவித்துள்ளார்.

“கொள்ளைக்கார நுண்கடன் பற்றிய கடன் கணக்கு பரிசோதனை செய்யும் வரை , கடன் மீள அறவிடுவதை இடைநிறுத்து ! ” – பொலனறுவையில் பெண்கள் போராட்டம் !

நுண் நிதிக்கடனால் பாதிக்கப்பட்ட மக்கள் பொலனறுவை இங்கிராங்கொடையில் கடந்த மகளிர் தினம் தொடக்கம் உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்றைய தினம் அவர்களுக்கு ஆதரவளிக்கும் முகமாக வடக்குமாகாணத்தை பிரதிபலிக்கும் வகையில் அவர்களுக்கு வலுச்சேர்க்க யாழ்ப்பாணம் ,கிளிநொச்சி ,வவுனியா போன்ற பகுதிகளில் இருந்து மகாசக்தி மகளிர் சம்மேளனம், வல்லமை அமைப்பு, கிராமிய பெண்கள் அமைப்பு மற்றும் நுண்கடன் பிடியிலிருந்து விடுவோம் (பியன் ஹீலங்கா) ஆகிய அமைப்புகளை பிரதிநிதித்துவப்படுத்தி பலர் அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நுண்கடன்களால் பாதிக்கப்பட்ட பெண்களின் கூட்டமைப்பு எனும் பெயரில் பாதிக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்து, “அனைத்து நுண்கடன்களையும் இரத்துச்செய் , கொள்ளைக்கார நுண்கடன் பற்றிய கடன் கணக்கு பரிசோதனை செய்யும் வரை ,கடன் மீள அறவிடுவதை இடைநிறுத்து , நுண்கடன்களால் பாதிக்கப்பட்டவர்கள் மீதான நீதி நடவடிக்கைகள் அனைத்தையும் உடனே நிறுத்து , நுண்கடன்களால் பாதிக்கப்பட்டர்களின் விபரங்களை கிரிப் தரவுகளில் இருந்து அகற்று, பாதிப்புற்ற ,சமூக முன்னேற்றத்துக்கான பெண்களுக்கான, பெண்களாலான நிதி முறைமை ஒன்றை உருவாக்கு”  போன்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

நாடளாவிய ரீதியில் நுண்கடங்களால் தற்கொலைகள், குடும்ப வன்முறைகள், பாலியல் தொல்லைகள் என சமூக சீரழிவுச் சம்பவங்கள் அதிகரித்தவண்ணமே உள்ளது எனவும் அரசாங்கம் இதனை கருத்தில் கொண்டு உரிய தீர்வினை வழங்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டது.

வடக்கு மாகாண பாதிக்கப்பட்டவரின் சார்பிலான ஆய்வு கோரிக்கையின் அடிப்படையில் கடந்த அரசாங்கத்தின் போது 2019ஆம் ஆண்டு 500மில்லியன் ரூபா மங்கள சமரவீரவால் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த நிதி கிடைத்து இரண்டு வாரங்களில் பாதீடும் நிறைவேறியது.

ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அந்த நிதி உரியவாறாக கிடைக்கப்பெறவில்லை என்று குறிப்பிடப்பட்டது. அதே நேரம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கான 1400 மில்லியன் ரூபா கடன் வழங்கும் செயற்திட்டமும் ஆரம்பித்து வைக்கப்பட்டது – அதன் மூலமும் பயனடைந்தவர்கள் குறைவே,

நாளாந்தம் வடக்கிலும் நுண்கடன் சார்ந்த சீரழிவுகள் தொடர்ந்த வண்ணமே உள்ளதென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எமது செய்தியாளரிடம் தெரிவித்தனர்.

மேலும் “நுண்கடன் வழங்கும் நிதிநிறுவனங்களின் பாரிய சூரையாடல்கள் காரணமாக எமது நாட்டில் 2,8மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 24இலட்சத்தி 38ஆயிரம் பேர் பெண்களாகும். அதேபோன்று 200பெண்கள் வரை நுண்கடன் திட்டத்தில் சிக்கிக் கொண்டு கடனை செலுத்த முடியாமல் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்” என நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஹரினி அமரசூரிய பாராளுமன்றில் குறிப்பிட்டடிருந்தமையும் நோக்கத்தக்கது.

“சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைந்துகொள்வதற்கும் சிவபெருமான் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன் ” – ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ

“சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைந்துகொள்வதற்கும் சிவபெருமான் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்” என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மகா சிவராத்திரி தின தீப ஒளி இந்து மக்களின் ஆன்மீகத்தை ஒளியூட்டுவதைப் போன்றே சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைந்துகொள்வதற்கும் சிவபெருமான் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சிவராத்திரியை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் இதனைத் தெரிவித்துள்ள ஜனாதிபதி அதில் மேலும் கூறியிருப்பதாவது :

இலங்கையிலும் உலகெங்கிலும் உள்ள இந்து பக்தர்கள் சிவபெருமானின் அருள் ஒளி கொண்டு அறியாமை இருள் அகற்றி, ஞானத்தின் மகிமையை அடைவதற்கான பிரார்த்தனையுடன், பழங்காலத்திலிருந்தே மகா சிவராத்திரி தினத்தில் மிகுந்த பக்தியுடன் சமயக் கிரியைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகின் சக்திவாய்ந்த தெய்வமாக அவர்கள் கருதும் சிவபெருமானின் ஆசீர்வாதம் சமூக, பொருளாதார சுபீட்சத்திற்கும் சிறந்த ஆரோக்கியத்திற்கும் மற்றும் ஆன்மீக வளர்ச்சிக்கும் ஒரு பலமான உந்துசக்தி என்பது இந்துக்களின் நம்பிக்கையாகும்.

இந்து சமய பக்தர்களினால் அனுஷ்டிக்கப்படும் ஒரு மகத்தான நாளான மகா சிவராத்திரி தினத்தில், அவர்கள் கண் விழித்து பல்வேறு கலாச்சார பெறுமானங்களுடன் கூடிய செயல்களில் ஈடுபட்டு சிவபெருமானுக்கு பூஜை செய்கிறார்கள். இதன் மூலம் நித்திய ஆசீர்வாதங்களை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். மனதை ஒருநிலைப்படுத்தி பக்தி சிரத்தையுடன் சிவ வழிபாட்டில் ஈடுபடுவதன் மூலம் ஆன்மீக உயர்வை அடைய முடியம் என்று இந்து பக்தர்கள் நம்புகிறார்கள்.

பழங்காலத்திலிருந்தே இலங்கை வாழ் இந்துக்களின் இந்த அற்புதமான கலாச்சார விழா எமது சமூகத்திற்கு அளவிடற்கரிய பெறுமதியை சேர்த்துள்ளது. இந்த சமய நடைமுறைகள் பல்வகை கலை இலக்கிய அம்சங்களைப் போன்றே சிறந்த நடனப் பாரம்பரியத்திற்கும் வழிவகுத்துள்ளது.

கடந்த ஆண்டு கொவிட் தொற்றுநோய் பரவலின் காரணமாக, இந்து பக்தர்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றி மகா சிவராத்திரி கிரியைகளில் ஈடுபட வேண்டியிருந்தது. அந்த கட்டுப்பாடுகளில் இம்முறை சிறிது தளர்வு இருந்தாலும், கடந்த வருடத்தைப் போன்றே இவ்வருடமும் சுகாதார ஆலோசனைகளைப் பின்பற்றி மகா சிவராத்திரி தினத்தை அனுஷ்டிப்பார்கள் என்று நாம் நம்புகிறோம்.

மகா சிவராத்திரி தின தீப ஒளி இந்து மக்களின் ஆன்மீகத்தை ஒளியூட்டுவதைப் போன்றே சமூகத்தில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை அடைந்துகொள்வதற்கும் சிவபெருமான் அருள்புரிய வேண்டும் என்று பிரார்த்திக்கின்றேன்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“திலீபனின் உயிரை தியாகம் செய்யும் வரை பார்த்துக்கொண்டிருந்தது போல அம்பிகை செல்வகுமாரும் மரிக்க வேண்டும் என சர்வதேசம் விரும்புகிறதா ?” – மு. சக்திவேல்

“தியாகிகள் உயிர் நீப்பதையா சர்வதேசம் விரும்புகிறது. எமது கண்ணீருக்கு ஐக்கிய நாடுகள் பதில் சொல்ல வேண்டும்” என அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் தலைவர் மு. சக்திவேல் தெரிவித்துள்ளார்கள்.

இலங்கையை சர்வதேச குற்றவியில் நீதிமன்றில் நிறுத்தக்கோரி யாழ் நல்லூர் பகுதியில் இடம்பெற்றுவரும் சுழற்சிமுறையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தில் நேற்று கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ் மக்களுடைய நீண்ட கால போராட்டமானது அரசியல் சார்ந்தது. இந்த போராட்டத்தை தெற்கின் அரசாங்கம் பயங்கரவாத போராட்டமாக சித்தரித்து பல்வேறு அழிவுகளை செய்தது மட்டுமல்லாமல் இன அழிப்பினை மேற்கொண்டதையும் நாம் அனுபவித்துள்ளோம்.

இந்த இன அழிப்புக்கு சர்வதேச நீதி வேண்டும் என கேட்கும் அதே வேளையில் 1987 ஆம் ஆண்டு தியாகி திலீபன் சாகும் வரையான உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொண்டு தமது பிரச்சனையை தீர்க்குமாறு இந்தியாவிடம் வேண்டுகோள் விடுத்தார் ஆனால் இந்தியா தலைசாய்க்கவில்லை. அதே போல தற்போதும் எமக்கு எதிராகத்தான் உள்ளது. அதே போல சர்வதேச நாடுகளும் எமக்கு எதிராக இருக்கின்றதா ? என சந்தேகிக்கிறோம். ஏனெனில் தற்போது வெளியாகிய ஐ.நா சபையினுடைய தீர்மானம் எமக்கு சார்பானதாக இல்லை.

இதனால் லண்டனில் அம்பிகை செல்வகுமார் என்ற பெண்மணி சாகும்வரை உண்ணாவிரதம் ஆரம்பித்துள்ளார். அவருடைய கோரிக்கைக்கும் அமைவாக சர்வதேசம் நீதியை பெற்றுத்தருமாறு கேட்கிறோம். எமது தியாகத்தை ஏற்றுக்கொள்ளாமல் கடந்த முறை இந்தியா திலீபனின் உயிரை தியாகம் செய்யும் வரை பார்த்துக்கொண்டிருந்தது. அதே போல இம்முறையும் தியாகிகள் மரிக்க வேண்டும் என சர்வதேசம் விரும்புகிறதா ? இதுவா மனித நீதி.

எமது அரசியல் பயணத்தில் மைல் கல்லை எட்டியுள்ளோம். எனவே அம்பிகை அவர்களின் உயிரை பாதுகாக்க வேண்டும் என்றால் எமக்கு நீதி வேண்டும். அதை விடுத்து உயிர்நீப்பதை தான் இந்த உலகம் விரும்புகிறது என்றால் அவரின் பின்னால் பலர் வர ஆயத்தமாக உள்ளார்கள்.

நாம் தற்போது மிகவும் வேதனையுடனும் கவலையுடனும் உள்ளோம். எமது கண்ணீருக்கு ஐக்கியநாடுகள் சபையும் சர்வதேச நாடுகளும் பதில் சொல்ல வேண்டும்” என்றார்.