உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

அரசுக்கு மேலும் கால அவகாசம் வழங்குவதாக கூறி சுமந்திரனின் முன்மொழிவு யோசனையை நிராகரித்தனர் விக்கினேஸ்வரனும் கஜேந்திரகுமாரும்! 

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 2021 மாரச் மாத கூட்டத் தொடரில் தமிழ்த் தேசியக் கட்சிகள் சார்பில் முன்வைப்பதற்காவென சுமந்திரனால் முன்மொழியப்பட்ட திட்ட யோசனையை விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகியோர் அடியோடு நிராகரித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான ம.ஆ.சுமந்திரனால் முன்வைக்கப்பட்ட ஜெனிவாவுக்கான முன்மொழிவு யோசனையை தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அடியோடு நிராகரித்துள்ளனர்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் சார்பில் ஜெனிவா அமர்வு தொடர்பில் கூட்டாக செயற்படுவதற்கான முன்மொழிவு யோசனை ஒன்றை தயாரித்து, விக்னேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் ஆகிய இருவருக்கும் அவர்கள் தரப்பு கருத்துகளை அறியும் வகையில் சுமந்திரனால் அனுப்பிவைக்கப்பட்டிருந்தது.

அது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணி மற்றும் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் சுமந்திரனுக்கு அனுப்பிய பதிலில் குறித்த திட்ட யோசனை இலங்கை அரசுக்கு மீண்டும் கால அவகாசத்தை பெற்றுக் கொடுப்பதாகவே அமையும் என்பதை சுட்டிக்காட்டி அடியோடு நிராகரித்துள்ளார்.

அத்துடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது ஐ.நா.வினால் விசேடமாக உருவாக்கப்பட்ட சர்வதேச குற்றவியல் ஆயத்திற்கு இலங்கை விடயத்தைக் கொண்டு செல்லுமாறு ஐ.நா.பொதுச் சபையையும், ஐ.நா.பாதுகாப்புக் கவுன்சிலையும் கோருமாறு தமிழ்க் கட்சிகள் எல்லாம் ஒன்றுபட்டு ஏன் கோரக்கூடாது என்றும் அதற்கு தமிழ்த் தேசியத்தை வலியுறுத்தும் அனைதது தமிழ்க் கட்சிகளது ஆதரவு நிச்சயம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து விரைவில் பதில் வழங்குவதாக தெரிவித்திருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் அதனை நிராகரிப்பதாக சுமந்திரனுக்கு பதிலளித்திருப்பதாக அறியமுடிகின்றது.

சுமந்திரனின் குறித்த திட்ட வரைபில், இருதரப்பு போர்க்குற்றம் என்ற விடயத்தை வலியுறுத்திக் குறிப்பிட்டிருப்பது, தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைத்து சர்வதேசத்தை கையாள்வது என்ற பெயரில் மறைமுகமாக இலங்கை அரசுக்கு மீண்டும் கால அவகாசத்தை பெற்றுக்கொடுப்பதுடன் சார்வதேச ஆதரவையும் தொடர்ந்து வழங்கவைக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருப்பதே, அதனை இரு தரப்பும் அடியோடு நிராகரிக்கக் காரணம் என அறியமுடிந்தது.

“நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவுள்ள தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் கட்டாயம் உயர்த்தப்பட வேண்டும்” – இரா.சாணக்கியன்

“நாட்டின் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகவுள்ள தோட்ட தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் கட்டாயம் உயர்த்தப்பட வேண்டும்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

இன்று (18.12.2020) மலையகத்திற்கு விஜயம் செய்திருந்த நிலையில், அதுகுறித்து கருத்து வெளியிடும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“இன்றைய தினம் மலையகத்திற்கு சென்ற வேளை, சில விசேட கோரிக்கைகளுக்கு அமைவாக பலரை சந்தித்து பேசினேன்.

பல பிரச்சினைகளை எனது கவனத்துக்கு கொண்டு வந்தனர். அதில் மிகவும் பிரதான பிரச்சினையானது எமது நாட்டின் பிரதான ஏற்றுமதிப் பொருளான தேயிலை உற்பத்தியில் மிக முக்கிய பங்கு வகிக்கும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் பிரச்சினை ஆகும்.

தற்போதைய அரசாங்கமானது, மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக உத்தரவாதம் அளித்துள்ளது. ஆனால் தொழிலாளர்களின் தற்போதைய கூற்றுப்படி மாதத்திற்கு 10,000 தொடக்கம் 12,000 கிடைப்பதாக சொல்கின்றனர்.

அதுவும் 26 வேலைநாட்களுக்குரிய தொகையாக இதனை வழங்குகின்றனர். இதனடிப்படையில் ஒருவரின் நாள் வருமானமானது 500 ரூபாய்க்கு குறைவாகவே காணப்படுகின்றது.

அதிலும் சில கழிவுகளை கழித்துவிட்டுத்தான் சம்பளத்தினை வழங்குகின்றனர். இவ்வாறான பிரச்சினைகளை அரசாங்கம் முக்கியமாக கவனித்து, அவர்களுக்கு உரிய சரியான சம்பளத்தை உறுதி அளித்தது போன்று மிக விரைவில் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எமது நாட்டின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்று  தேயிலை ஆகும். அத்துடன் உலக சந்தையில் இலங்கை தேயிலைக்குரிய மதிப்பு மிக அதிகமாகும். இவற்றுக்கு பல தலைமுறைகளாக பெரும் பங்காற்றும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரம் கட்டாயம் உயர்த்தப்பட வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

” கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்காவிட்டால் அது முஸ்லிம் இளைஞர்களை ஆயுதமேந்த வைக்கும் ” – நீதியமைச்சர் அலி சப்ரி எச்சரிக்கை! 

” கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அனுமதிக்காவிட்டால் அது முஸ்லிம் இளைஞர்களை ஆயுதமேந்த வைக்கும் ” என நீதி அமைச்சர் அலி சப்ரி எச்சரிக்கை விடுத்துள்ளாார்.

சமூகலைத்தளமொன்றில் இயங்கிவரும் ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இந்தக் கருத்துக்களைக் கூறியுள்ளார்.

அந்த நேர்காணலில் அவர் மேலும் கூறும் போது,

கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை மாலைதீவில் புதைக்க முடியும் என்றால் , அவற்றை ஏன் இலங்கையில் புதைக்க முடியாது என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்வதன் ஊடாகத் தொற்று பரவாது என்பதை தொற்று நோய் மற்றும் வைரஸ் குறித்த பிரபல்யம் வாய்ந்த பேராசிரியர் மலித் பீரிஸ் குறிப்பிட்டுள்ளார் என்றும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார் .

இலங்கையில் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது உடன் நிறுத்தப்பட வேண்டும் எனவும் , அவை முஸ்லிம் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க உரிய முறையில் அடக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் இதன்போது அவர் வலியறுக்தியள்ளார் .

மேலும் எமது இந்த தீர்மானத்தால் முஸ்லிம் இளைஞர்களில் சிலர் அடிப்படைவாதத்தினபால் தள்ளப்படுவார்களோ என்ற அச்சம் எனக்கு இருக்கின்றது எனவும் மரணிப்பவர்களை அடக்கம் செய்யக்கூட உரிமை இல்லை என்ற மன அழுத்தத்துக்கு இளைஞர்கள் தள்ளப்பட்டு , அடிப்படைவாதிகளுடன் இணைந்துகொண்டால் அது பாரிய விபரீதத்திலேயே முடிவடையும். இதற்கு இடமளிக்கக்கூடாது என நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் மாலைதீவுக்கு கொண்டுசெல்வது தொடர்பாகவும் பேசப்பட்டு வருகின்றது . இதற்கு அனுமதிப்பது சர்வதேச ரீதியில் எமக்கு மேலும் பிரச்சினையை ஏற்படுத்தும் . மாலைதீவில் அடக்க அனுமதிக்க முடியுமானால் ஏன் எமது நாட்டில் முடியாது என்றே நாங்கள் கேட்கின்றோம் என்றார் .

“பிரபாகரனிடம் சகோதர படுகொலைகளை கைவிட சொல்லுமாறு கூறினேன். கெடுகுடி சொற்கேளாது என்பது போல் எல்லாம் முடிந்து விட்டது ” – அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா!

“பிரபாகரனுடன் பேசுமாறு என்னை கேட்டபோது முதலில் சகோதரபடுகொலைகளை நிறுத்த சொல்லுங்கள் என கூறினேன்” – அமைச்சர் டக்ளஸ் தேவானாந்தா தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது மேலும் பேசிய அவர்,

ஆயுத போராட்டத்தின் ஊடாகதான் பிரச்சினையை தீர்க்கலாம் என்று நினைத்து போராட்டத்தில் ஈடுபட்டோம்.

அந்த வகையில் எமக்கு இந்திய இலங்கை ஒப்பந்தம் கிடைத்தது. அது ஒரு பொன்னான வாய்ப்பு. அந்த வாய்ப்பை நாங்கள் பயன்படுத்தியிருந்தால் எவ்வளவோ இழப்புக்கள், துயரங்கள் அனைத்தையும் தவிர்த்திருக்கலாம்.

துரதிஸ்டவசமாக அன்றிருந்த தமிழ்த் தலைமைகள் என சொல்லப்பட்டவர்கள் அதனை சரியாக முன்னெடுக்கவில்லை.

நாங்கள் இப்போது அந்த ஆயுத போராட்டத்தை கைவிட்டு, தேசிய நல்லிணக்கம் என்ற ஆயுதத்தினை இன்று முன்னெடுத்திருக்கின்றோம்.

அந்த தேசிய நல்லிணக்கத்திற்கு ஊடாக கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள மக்கள் மாத்திரமல்ல, வடக்கு மகாணத்தில் உள்ள மக்கள் அனைவருக்கும் உள்ள பிரச்சினைகள் அனைத்தையும் நாங்கள் தீர்த்து தருவோம்.

முன்னர் பிரபாகரனுடன் பேசுமாறு இங்குள்ளவர்கள் கேட்ட இடத்தில், முதலில் சகோதர படுகொலையை நிறுத்த சொல்லுங்கள் என்று கூறியிருந்தேன். அதன் பின்னர் நான் கதைக்க தயாராக இருக்கின்றேன் என்றேன். ஆனால் கெடுகுடி சொற்கேளாது என்பது போல எல்லாம் முடிந்தது” என்றார்.

“நாங்கள் தொடர்ந்தும் எம்.சி.சி உடன்படிக்கையை முன்னெடுக்க விரும்பவில்லை எங்களிற்கு அதுதேவையில்லை ” – அமைச்சரவை பேச்சாளர் ரமேஷ் பத்திரன 

“நாங்கள் தொடர்ந்தும் எம்.சி.சி உடன்படிக்கையை முன்னெடுக்க விரும்பவில்லை எங்களிற்கு அது தேவையில்லை” என அமைச்சரவை பேச்சாளர்களில் ஒருவரான ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.

சிலோன் டுடேயிற்கு அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எம்.சி.சி உடன்படிக்கை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட நால்வர் கொண்ட குழு தனது அறிக்கையை சமர்ப்பித்தவுடன் நாங்கள் அதனை நிராகரித்துவிட்டோம் என ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.

நிபுணர் குழு தனது பரிந்துரையில் எம்;சி.சி உடன்படிக்கை இலங்கைக்கு பொருத்தமானதில்லை என தெரிவித்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் எம்.சி.சி உடன்படிக்கையில் காணப்படுகின்ற அம்சங்கள் குறித்து பேச்சுவார்த்தைகளை கூட மேற்கொள்ளவில்லை, அதில் மாற்றங்களை கோரவில்லை என தெரிவித்துள்ள ரமேஸ் பத்திரண நாங்கள் நேரடியாக அதனை நிராகரித்துவிட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

நாங்கள் தொடர்ந்தும் எம்.சி.சி உடன்படிக்கையை முன்னெடுக்க விரும்பவில்லை எங்களிற்கு அதுதேவையில்லை என அதிகாரிகளிற்கு தெரிவித்தோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

. “கடந்த காலங்களை நினைத்து வேதனைப்படுவதால் எவ்வித பலனும் ஏற்பட போவதில்லை” – ரணில் விக்ரமசிங்க 

“கடந்த காலங்களை நினைத்து வேதனைப்படுவதால் எவ்வித பலனும் ஏற்பட போவதில்லை” என .ஐ.தே.க.தலைவர் ரணில் விக்ரமசிங்க  தெரிவித்துள்ளார்.

நேற்று (17.12.2020) கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள ஐ.தே.க தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் இல்லத்தில், கட்சி உறுப்பினர்களுடனான சந்திப்பொன்று நடைபெற்றது

குறித்த சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“எம்.சி.சி ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கைக்கு கிடைக்கப்பெறவிருந்த 480 மில்லியன் அமெரிக்க டொலர்களும் தற்போது இல்லாமல் போயுள்ளது. மிலேனியம் சவால் பணிப்பாளர் சபை இதனை உத்தியோகப்பூர்வமாகவே அறிவித்து விட்டது. கடனற்ற வெறும் நிதி உதவியான 89 பில்லியன் ரூபாய் இலங்கைக்கு இனி கிடைக்காது.

குறித்த எம்.சி.சி ஒப்பந்தத்திற்கான கால எல்லை நீடிக்குமாறு ஏற்கனவே இரு முறை கோரப்பட்டது. மூன்றாவது முறையும் கோரிக்கை விடுக்கப்பட்ட நிலையிலேயே ஒப்பந்தம் இரத்து செய்யப்பட்டது.

ஆனால், தாங்கள் நிராகரித்து விட்டதாகவே தற்போது அரசாங்கம் கூறும். எவ்வாறாயினும் அடுத்த ஆண்டு நாட்டின் பொருளாதாரத்திற்கு தீர்க்கமான காலப்பகுதியாக அமையும்.

எனவே, புதியதொரு பயணமொன்று நாம் செல்ல வேண்டியதுள்ளது. எம்முடன் இருப்பவர்களை பாதுகாத்தும் எம்மை விட்டு சென்றவர்களை கைவிட்டும் செல்ல நாம் தயாராக வேண்டும்.

கடந்த காலங்களை நினைத்து வேதனைப்படுவதால் எவ்வித பலனும் ஏற்பட போவதில்லை. எனவே அனைத்திற்கும் தயாரானவர்களாக இருக்க வேண்டும்.

மாகாண சபை தேர்தலில் புதிய முகங்களை போன்று பழைய முகங்கள் பலவும் ஆளும் கட்சி சார்பில் போட்டியிடும். தேர்தலுக்கு செலவிட வேட்பாளர்களிடம் பணமிருக்காது.

அத்துடன் கொரோனா அச்சுறுத்தலான சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலை நடத்துவது  சிக்கலான சவால்மிக்கதான விடயமாகும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவால் இறந்தவர்களின் உடல்களை எரிக்கப்படுவதை கண்டித்து மயானத்தின் முன்பு கிறிஸ்தவ பாதிரியார்கள் போராட்டம்! 

கொவிட்-19க்குப் பலியானவர்களின் உடலங்களை கட்டாயத் தகனம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக பொரளை மயானத்துக்கு வெளியே நேற்று (17.12.2020) அங்கிலிக்கன், கத்தோலிக்க மற்றும் மெதடிஸ்த பாதிரியார்கள் வெள்ளைத் துணிகளைக் கட்டி எதிர்ப்பு வெளியிட்டனர்.

மனித உரிமை ஆர்வலர் ருகி பொ்னாண்டோ இது குறித்துக் கூறுகையில், 20 நாள் குழந்தை பெற்றோரின் விருப்பத்திற்கு எதிராக எரிக்கப்பட்டதற்கு எதிராகவும் இலங்கையில் கட்டாயத் தகனத்தை நிறுத்தக்கோரியும் பாதிரியார்கள் வெள்ளைத் துணிகளைக் கட்டி எதிர்ப்பு தெரிவித்தனர்.

“கிறிஸ்தவர்களின் முதன்மையான கடமை ஒற்றுமையுடன் இருக்க வேண்டும். ஒடுக்கப்பட்டவர்களுக்கும் துன்பப்படுவோருக்கும் ஆதரவளிப்பதும் அநீதியை எதிர்ப்பதும் ஆகும். இதற்காகத்தான் எங்கள் கிறிஸ்தவக் கடமையைச் செய்ய இன்று காலை நாங்கள் சென்றோம்” என அவர் கூறினார்.

பேராசிரியர் மலிக் பெரேரா உள்ளிட்ட மருத்துவ நிபுணர்கள் கொவிட்-19 பாதித்து இறந்தவர்களை அடக்கம் செய்வதன் மூலம் சுகாதார ஆபத்தில்லை என்று கூறியதையும் சில கிறிஸ்தவர்கள் கட்டாயத் தகனங்களை எதிர்ப்பதையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.

இதேவேளை வைரஸ்கள் உயிருள்ள உயிரணுக்களில் மட்டுமே பிரதிபலிக்கின்றன என்றும் இறந்த உடலிலிருந்து பரவுவது மிகவும் குறைவு என்றும் கொவிட்-19 நோயால் இறந்த உடல், நோய் பரவுவதற்கான முக்கிய ஆதாரம் என நம்புவதற்கு எந்தக் காரணமும் இல்லை என்றும் பேராசிரியர் பீரிஸ் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வாசுதேவ நாணயக்காரவுக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்! 

எஹெலியகொட- தராபிட்டிய  பகுதியில் இடம்பெற்ற நிகழ்விற்கு வருகைதந்த அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு எதிராக மக்கள் ஆர்பாட்டமொன்றை நேற்று (வியாழக்கிழமை) முன்னெடுத்திருந்தனர்.

குறித்த பகுதியில் நீர் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கான நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காகவே வாசுதேவ நாணயக்கார விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இதன்போது, அவ்விடத்திற்கு வந்த அமைச்சருக்கு எதிராக அப்பிரதேச மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த நீர் திட்டம் ஆரம்பிக்கப்பட்டால் பல சிக்கல்களுக்கு நாம் முகம்கொடுக்க நேரிடும் என அவருக்கு சுட்டிக்காட்டியே எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

மேலும் குறித்த பகுதியில் இருந்து வேறு பகுதிகளுக்கு நீரை வழங்கும்போது எதிர்காலத்தில் நீர் இன்றி எமது பிள்ளைகள் துன்பத்திற்கு உள்ளாக நேரிடும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த நிகழ்வை நடத்துவதற்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவுக்கு மக்கள் இடமளிக்கவில்லை. இதனால் அவ்விடத்தில் இருந்து வெளியேறினார்.

அதனைத் தொடர்ந்து, அங்கு வந்திருந்த அமைச்சரின் செயலாளரை அப்பகுதி மக்கள் கடுமையாக எதிர்த்துள்ளனர்.

“நான்காளி. உங்கள் தாய். உலகை காக்கவே கொரோனா மருந்தை உருவாக்கியுள்ளேன் ” – தம்மிக்க பண்டார

கொரோனா வைரசிற்கான மருந்தினை தயாரித்துள்ளதாக தெரிவித்து வரும் கேகாலை வைத்தியர் தம்மிக்க பண்டார பௌத்தமதகுருவர் முன்னிலையில் நான் காளி என ஆவேசப்பட்டுள்ளார்.

அனுராதாபரத்தில் உள்ள அட்டமஸ்தானயவின் தலைமை மதகுரு முன்னிலையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கேகாலை வைத்தியர் இன்;று அனுராதபுர ஜய ஸ்ரீமாகபோதிக்கு செல்ல முயன்றுள்ளார்.
அவருக்கு அதற்கான அனுமதி மறுக்கப்பட்டவேளை அவர் தான் அங்குள்ள ஸ்ரீமாகபோதிக்கு தனது மருந்தினை வழங்கி வழிபாடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது அந்த பகுதியில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
அவ்வேளை கேகாலை மருத்துவர் தலைமை மதகுருவிடம் நான் காளி நான் உங்கள் தாய் என தெரிவித்துள்ளார்.
உலகை பாதுகாக்கவே மருந்தினை உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மாநகர சபையின் 2021 வரவு செலவு திட்டம் மீள தோற்கடிப்பு – பதவி இழக்கிறார் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இரண்டாவது தடவையாகவும் தேற்கடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் தனது பதவியை இழக்கின்றார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட்டினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. 45 உறுப்பினர்களை கொண்ட யாழ்.மாநகர சபையில் 21 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 24 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 21 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்தி கட்சியின் 1 உறுப்பினர் என 24 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர். இதனால் யாழ் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவு திட்டம் தேற்கடிக்கப்பட்டதன் காரணமாக இன்றைய நாளிலிருந்து 14 நாட்களுக்குள் யாழ்.மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு இடம்பெற வேண்டும் என்பது சட்ட ஏற்பாடாகும். யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த 2 ஆம் திகதி முதன் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட போது 5 மேலதிக வாக்குகளால் தேற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.