உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

கட்டுப்பாட்டுக்குள் வந்தது புதுக்கடை நீதிமன்ற வளாக தீ !

இன்று கொழும்பு, புதுக்கடையில் உள்ள நீதிமன்றக் கட்டடத் தொகுதியில் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் தீ தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

அத்துடன், இதுகுறித்து ஆராய குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவில் இருந்து எட்டு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, மின் கசிவு காரணமாக இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளர்.

“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உன்னதமான தலைவர். அவருக்கு நிகர் அவர்தான். அதேவேளை, அவர் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகளும் மிகவும் பலம் பொருந்தியவர்கள்” – பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா

“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உன்னதமான தலைவர். அவருக்கு நிகர் அவர்தான். அதேவேளை, அவர் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகளும் மிகவும் பலம் பொருந்தியவர்கள்” என ஐக்கிய மக்கள் சக்தியின்கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் உன்னதமான தலைவர். அவருக்கு நிகர் அவர்தான். அதேவேளை, அவர் தலைமையிலான தமிழீழ விடுதலைப்புலிகளும் மிகவும் பலம் பொருந்தியவர்கள். அவர்களின் வீரத்தையும் தியாகத்தையும் நான் கொச்சைப்படுத்தமாட்டேன்.

ஆனால், நாட்டின் சட்டத்தை மீறி அவர்கள் செய்த மோசமான பயங்கரவாத நடவடிக்கைகளை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். அதனால்தான் அவர்களைப் பகிரங்கமாக நினைவுகூரும் மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுக்கு எதிராக நாடாளுமன்றில் நான் உரையாற்றினேன்.

ஆயுதப் போராட்டத்தால் தமிழ் மக்கள் அனுபவித்த அவலங்களை நேரில் கண்டறிந்தவன் நான். போர் முடிவுக்கு வந்திராவிட்டால் அவர்களின் அவலங்கள் தொடர்ந்திருக்கும். மீண்டுமொரு போரை தமிழ் மக்கள் ஒருபோதும் விரும்பமாட்டார்கள்.

2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் நான் போட்டியிட்டபோது வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் எனக்குத் தந்த அமோக ஆதரவை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன்.

மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வைப் பகிரங்கமாக நடத்த அனுமதிக்க முடியாது என நான் வலியுறுத்திய காரணத்தால் என்னைத் தமிழ் மக்களுக்கு எதிரானவனாக வெளிக்காட்ட அரசியல்வாதிகள் சிலர் முயன்றுள்ளார்கள். ஆனால், நான் ஒருபோதும் தமிழ் மக்களுக்கு எதிரானவன் அல்ல. இன்றும் தமிழ் மக்களை நான் நேசிக்கின்றேன். அரசியல் தீர்வே அவர்களின் கனவாக இருக்கின்றது. எனவே, முழு நாடும் ஏற்கும் ஒரு தீர்வு உடனடியாகக் காணப்பட வேண்டும்.”எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக பாராளுமன்றில் பொன்சேகா மாவீரர் தினத்தன்று புரவி புயல் வடக்கில் வீசியிருந்தால் மகிழ்வடைந்திருப்பேன் என கூறியமையும் குறிப்பிடத்தக்கது.

குறைந்த வசதியுள்ள வீடுகளிலுள்ள குடும்பங்களுக்கு இலவச வீடு – பிரதமர் பணிப்புரை! 

நாட்டில் குறைந்த வசதிகளை கொண்ட வீடுகளில் வாழும் மக்களுக்காக 7500 வீடுகளை நிர்மாணிக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பணிப்புரை விடுத்துள்ளார்.

வீடு அமைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு பிரதமர், நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு உத்தரவிட்டுள்ளார்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் செயற்பாடு தொடர்பாக அதிகாரிகளுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் பிரதமர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

அதற்கமைய இந்த மாத இறுதிக்கு முன்னர் குறித்த வீட்டுத் திட்டத்தை ஆரம்பிப்பதற்கு நகர அபிவிருத்தி அதிகார சபை இணக்கம் வெளியிட்டுள்ளது.

புதிதாக நிர்மாணிக்கப்படும் 7500 வீடுகளில் 4000 வீடுகள் குறைந்த வசதிகள் கொண்ட வீடுகளில் வாழ்வோரை மீள் குடியேற்றம் செய்யும் நோக்கில் நிர்மாணிக்கப்படுகின்றது. 3000 வீடுகள் மத்திய வர்க்கத்தினருக்காக நிர்மாணிக்கப்படவுள்ளது.

மத்திய வர்க்கத்தினருக்காக வீடு வழங்கும் போது குறைந்த அடிப்படை கொடுப்பனவை செலுத்தி வீட்டை உரிமையை வழங்கும் முறை ஒன்றை தயாரிக்குமாறு பிரதமர் அறிவித்துள்ளார்.

அதற்கமைய மத்திய வர்க்கத்தினருக்கு 30 வருடங்களுக்கு 6.25 வீத வட்டி வீதத்தின் கீழ் வீடு வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.இந்த நடவடிக்கையை தாமதப்படுத்த வேண்டாம் என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

வவுனியாவில் இருந்து பிரான்ஸ் சென்ற இளைஞர்கள் இருவர் மாயம் ! 

வவுனியாவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு சென்ற இளைஞர்கள் இருவர் காணாமல் போயுள்ளதாக வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

வவுனியா கோதண்டர் நொச்சிகுளம் மற்றும் குருமன்காடு பகுதிகளை சேர்ந்த இருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

குறித்த இளைஞர்கள் கடந்த இரண்டு வருடங்களிற்கு முன்னர் பி்ரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக முகவர் ஒருவரூடாக இலங்கையில் இருந்து பயணித்துள்ளனர். இந்நிலையில் ஆபிரி்க்காவின் பல்வேறு நாடுகளில் அவர்கள தங்கியிருந்த நிலையில் வவுனியாவில் உள்ள அவர்களது குடும்பத்தினருடன் தொடர்பினை ஏற்படுத்தி கதைத்து வந்துள்ளனர்.

கோதண்டர் நொச்சிகுளத்தை சேர்ந்த மகேந்திரன் கவிஞன் (வயது 23) என்ற இளைஞர் இறுதியாக இம்மாதம் 3 ஆம் திகதி தனது குடும்பத்தினருடன், கதைத்துள்ளார். அதன் பின்னர் அவருடனான தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது. அத்துடன் வவுனியா குருமன்காட்டை சேர்ந்த பிரசன்னா (வயது27) என்ற இளைஞரது தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

இதேவேளை கடந்த வாரமளவில் மொரோக்கோவில் இருந்து ஸ்பெயின் நோக்கி பயணிகளை ஏற்றிசென்ற படகு ஒன்று கடலில் மூழ்கியதில் சிலர் மரணமடைந்ததாக, அந்த படகில் பயணித்து தப்பிய இளைஞர் ஒருவர் காணாமல் போன இளைஞனின் உறவினர் ஒருவருக்கு தகவல் வழங்கியுள்ளார். குறித்த படகில் வவுனியாவில் இருந்து பயணித்த சிலரும் இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாகவும் வவுனியாவில் உள்ள இரு இளைஞர்களின் குடும்பத்தினருக்கும் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

“பாடத்திட்டங்களை நவீன முறைக்கேற்ற வகையில் மாற்றியமைப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளது” – கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ்

பாடத்திட்டங்களை நவீன முறைக்கேற்ற வகையில் மாற்றியமைப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தற்போதைய சமூகத்திற்கு ஏற்ற வகையில் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க வேண்டும் என்றும் இந்த விடயம் தொடர்பாக சகல தரப்பினரிடமும் கருத்துக்கள் பெறப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கல்வி நிறுவனங்களில் இளம் சமூகத்தினருக்கு வழங்கப்படும் கல்விக்கும், தொழில் வாய்ப்புக்களுக்கும் இடையிலான தொடர்பு மிகவும் குறைவு என்றும் ஜீ.எல். பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

ஆகையால் இதனை மாற்றி அமைப்பதற்கான நடவடிக்கைகள் மாவட்ட ரீதியில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் பெற்றோர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் சங்கம் ஆகியோருடன் கலந்துரையாடி, அவர்களின் கருத்துக்களைப் பெற்று பாடத்திட்டங்களை முழுமையாக நவீன மயப்படுத்தவுள்ளதாக அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் மேலும் குறிப்பிட்டார்.

8Shares

“எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மறைப்பதற்கு நாம் இடமளிக்கமாட்டோம்”அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி

“எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கையையும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் மறைப்பதற்கு நாம் இடமளிக்கமாட்டோம் ‘ அமைச்சர் என சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்பான குழப்பம் மற்றும் அதனை அறிவிப்பது தொடர்பான குழப்பம் என்பன மக்கள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் இது தொடர்பில் ஊடகவியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் வழங்கும் போதே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“ஒவ்வொரு வைத்தியசாலை நிர்வாகமும் தத்தமது வைத்தியசாலையில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கையை அந்தந்த மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்துக்கு அறிவிக்க வேண்டும்.

குறித்த மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தத்தமது மாகாணங்களில் நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையை சுகாதார அமைச்சுக்கு அறிவிக்க வேண்டும்.

சுகாதார அமைச்சு, அனைத்து மாகாணங்களிலும் நாளாந்தம் அடையாளம் காணப்படும் தொற்றாளர்களின் எண்ணிக்கையைக் கொரோனாத் தடுப்பு தேசிய செயற்பாட்டு மையத்துக்கும் அரச தகவல் திணைக்கள அலுவலகத்துக்கும் அறிவிக்கும். அதனடிப்படையில் ஒவ்வொரு இரவும் நாடளாவிய ரீதியில் அடையாளம் காணப்படும் கொரோனாத் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கையும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கையும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படும். இதுதான் நடைமுறை. இந்த நடைமுறை வடக்கு மாகாணத்தில் மீறப்படுகின்றதா? என்பது தொடர்பில் நாம் ஆராய்ந்துதான் பார்க்க வேண்டும்” எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

“கொரோனாவை கட்டுப்படுத்துவதாக கூறும் உள்ளூர் மருத்துவ முறைகளை பின்பற்ற வேண்டாம் ” – தேசிய உள்நாட்டு மருத்துவ அமைச்சகம் வேண்டுகோள் !

கொவிட்-19 நோய்த்தொற்றைத் தடுக்க அல்லது வைரஸைக் குணப்படுத்துவதாகக் கூறி சமூக ஊடகங்களில் பரப்பப்படும் மூலிகை மருந்துகளின் சமையல் குறிப்புகளை பரிசோதனை செய்ய வேண்டாம் என்று தேசிய உள்நாட்டு மருத்துவ அமைச்சகம் இன்று மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொவிட்-19 ஐ குணப்படுத்த உதவும் என்று கூறி உள்ளூர் பொருட்களுடன் கூடிய சமையல் குறிப்புகள் பெருமளவில் சமூக ஊடகங்களில் பரப்பப்படுகின்றன என்று தேசிய உள்நாட்டு மருத்துவ ஊக்குவிப்பு, கிராம மற்றும் ஆயுர்வேத மருத்துவமனைகள் அபிவிருத்தி மற்றும் சமூக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“இவ்வாறான வைத்தியங்களை முயற்சிக்க வேண்டாம் என்று நாங்கள் மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்” என்று அமைச்சின் செயலாளர் குமாரி வீரசேகர கூறினார்.

பல உள்நாட்டு மருந்துகள் குறித்த பரிசோதனைகள் தற்போது நடத்தப்பட்டு வருவதாகவும், சோதனைகள் முடிந்ததும் மக்களுக்கு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

“தமிழ் மீனவர்களை  பாதுகாக்கின்ற பொறுப்பும், அவர்களின் வாழ்வாதாரத்தினைக் கட்டி எழுப்புகின்ற பொறுப்பும் இந்தியாவிற்கு உள்ளது” – மாவை சேேனாதிராஜா 

“இலங்கைத் தமிழ் மீனவர்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பும், அவர்களின் வாழ்வாதாரத்தினை கட்டியெழுப்புகின்ற பொறுப்பும் இந்திய அரசுக்கு உள்ளது  ” இந்தியாவின் பொறுப்புவாய்ந்த அதிகாரியிடம் இலங்கை தமிழ் அரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா வலியுறுத்தியுள்ளார்.

முல்லைத்தீவு மீனவர்கள் இந்திய இழுவைப்படகுகளால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தலைமையில் கரைதுறைப்பற்று பிரதேசசபை உறுப்பினர்களான மரியநாயகம் தொம்மைப்பிள்ளை, சின்னராசா லோகேஸ்வரன் உள்ளிட்ட குழுவினர் மாவை சோனாதிராசா அவர்களைச் சந்தித்து 14.12.2020 நேற்றைய தினம் கலந்துரையாடியிருந்தனர்.

குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுக்கொண்டிருக்கும்போது முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் அவர்களுக்கு இந்தியாவிலிருந்து பொறுப்புவாய்ந்த அதிகாரி ஒருவர் தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தியிருந்தார்.

அவ்வாறு தொடர்பினை ஏற்படுத்தியிருந்த குறித்த பொறுப்புவாய்ந்த அதிகாரி ரவிகரனுடன் பேசும்போது, கடந்த வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு கடற்றொழிலாளர் கூட்டுறவுச்சங்கங்களின் சமாசம் மற்றும் மீனவர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்களை ஊடகங்களில் பார்வையிட்டதாகவும், இலங்கை மீனவர்களின் கோரிக்கை நியாயமானது எனவும் அதனைத் தாம் ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்தார்.

அத்தோடு இந்திய மீனவர்களின் அத்துமீறிய நடவடிக்கையினைக் கட்டுப்படுத்துவதற்குரிய செயற்பாடுகளைத் தாம் முன்னெடுத்திருப்பதாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து தமிழரசுக்கட்சித் தலைவர் மாவை சேனாதிராசா குறித்த அதிகாரியுடன் பேசும்போதே இலங்கை மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் அவர்களின் வாழ்வாதாரத்தினைக் கட்டி எழுப்பும் விடயங்களில் இந்திாவிற்குப் பொறுப்பிருப்பதாக வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் மாவை சேனாதிராசா மேலும் கருத்துத் தெரிவிக்கையில்.

வரலாறு முழுவதும் போர்க்காலத்திலும், இயற்கை அனர்த்தத்திலும், குறிப்பாக சுனாமி அனர்த்தக் காலத்திலும் கரையோர பிரதேசங்களில் இடம்பெறும் அனைத்துப் பாதிப்புக்களுக்கும் மீனவர் சமூகமே முகங்கொடுத்துவருகின்றது.

எனவே அவர்களைப் பாதுகாக்கின்ற பொறுப்பும், அவர்களின் வாழ்வாதாரத்தினைக் கட்டி எழுப்புகின்ற பொறுப்பும் இந்தியாவிற்கு உள்ளது என்பதை இந்திய அரசுக்கு நீங்கள் சிபாரிசு செய்யவேண்டும். என குறித்த பொறுப்பு வாய்ந்த இந்திய அதிகாரியிடம் மாவை சேனாதிராசா வலியுறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“புலிகள் இயக்கத்தை தோற்கடித்த போது அதன் பினாமியும் அரசியல் கரமுமான தமிழ் தேசிய கூட்டமைப்பை நாம் தடை செய்யாமல் விட்டு விட்டோம்” – அமைச்சர் சரத் வீரசேகரக

“புலிகள் இயக்கத்தை தோற்கடித்த போது அதன் பினாமியும் அரசியல் கரமுமான தமிழ் தேசிய கூட்டமைப்பை நாம் தடை செய்யாமல் விட்டு விட்டோம்” என பொதுமக்கள் பாதுகாப்புக்கான அமைச்சர் ஓய்வு பெற்ற ரியர் அட்மிரல் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

தமிழ் பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அட்மிரல் சரத்வீரசேகர இதனை கூறியுள்ளார்.

அந்த செவ்வியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ,

“இந்த நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு ஆதரவாக கூட்டமைப்பினர் சத்தியப் பிரமாணம் செய்துள்ளனர். அதை விடுத்து எமது நாட்டில் கூட்டாட்சியை அறிமுகப்படுத்துவது தொடர்பாக அவர்கள் மற்றைய நாடுகளுடன் கலந்துரையாடினால், அவர்கள் செய்து கொண்ட சத்தியப்பிரமாணத்துக்கு எதிராகவே நடந்து கொள்கின்றனர்.

அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு பிழை செய்து விட்டாரென நான் நினைக்கிறேன். இந்த தமிழ் அரசியல்வாதிகளுக்கு அவர் அனுதாபம் காட்டியுள்ளார்.

ஹிட்லர் தோற்கடிக்கப்பட்ட போது அவரது நாசி அரசியல் கட்சி அழிக்கப்பட்டது. அதேபோல் பொல்பொட் கொல்லப்பட்ட போது கைமர்ரோக் அரசியல் கட்சியும் அழிக்கப்பட்டது. அவ்வாறே சதாம்ஹூசெய்ன் கொல்லப்பட்ட போது அவரது பாத் அரசியல் கட்சி முடக்கப்பட்டதுடன்,ஹொஸ்னி முபாரக் தோற்கடிக்கப்பட்ட போது அவரது தேசிய அரசியல் கட்சியும் முடக்கப்பட்டது.

எனினும் உலகின் மோசமான பயங்கரவாத இயக்கமான புலிகள் இயக்கத்தை தோற்கடித்த போது அதன் பினாமியும் அரசியல் கரமுமான தமிழ் தேசிய கூட்டமைப்பை நாம் தடை செய்யாமல் விட்டு விட்டோம். அதுதான் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விட்ட தவறு.

அவர் தமிழ் அரசியல்வாதிகள் மீது அனுதாபம் காட்டி அவர்களை மன்னித்து விட்டார். அதனால் புலிகளின் பினாமி கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இப்போது அந்த அனுதாபத்தை தனக்கு அனுகூலமாக்கிக் கொள்ள முயற்சிக்கிறது.

சுமந்திரன் மற்றும் ஏனைய தமிழ் அரசியல்வாதிகள் சிங்களவர்களை வெறுப்பூட்டும் பேச்சுகளை பேசி வருவதுடன் சிங்களவர்கள் நாடாளுமன்றத்துக்கு வரக் கூடாது என்றும் கூறி வருகின்றனர்.

நாம் யுத்தக் குற்றங்களை இழைத்திருந்தோம் என்பதை நல்லாட்சி அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருந்ததால்தான் நான் ஜெனீவா சென்றேன்.

அங்கு உலகப் பிரபல்யம் பெற்ற யுத்த குற்றங்கள் தொடர்பான சட்டவிற்பன்னர்கள் இலங்கை யுத்தக் குற்றங்களில் ஈடுபடவில்லை என்று அறிக்கை சமர்ப்பித்திருந்தனர்.

எவ்வாறெனினும் அப்போதைய இலங்கை வெளிநாட்டமைச்சராக இருந்த மங்களசமரவீர ஜெனீவாவுக்குச் சென்று நாம் யுத்தக் குற்றங்களை இழைத்ததாக ஏற்றுக் கொண்டதுடன், எமக்கு எதிரான ஐக்கிய நாடுகளின் 30/1 தீர்மானத்தையும் இணைஅனுசரணைக்கு உட்படுத்தினார்.

எந்தவொரு வாக்கெடுப்பும், விவாதமும் இன்றி ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழு அதனை அங்கீகரித்தது. 47 நாடுகள் எம்மை ஆதரிக்கப் போவதில்லை என்பதை தெரிந்து கொண்ட பின்னர், நான் ஜெனீவா சென்று எனக்குக் கொடுக்கப்பட்ட சிறிய காலவரையறையில் எமது பக்கத்து வாதத்தை முன்வைத்தேன். என்னால் முடிந்ததை நான் செய்தேன்.” என்றார்.

“அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, விசேட பொறிமுறையை உருவாக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்கும்” – அங்கஜன் இராமநாதன்

“அரசியல் கைதிகளின் விடுதலைக்காக, விசேட பொறிமுறையை உருவாக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்கும்” என ஆளும் தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று(14.12.2020) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“தமிழ் அரசியல், சிங்கள அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. அரசியல் கைதிகள் என்றால் அனைவரும் ஒன்றே. அவர்களின் விடுதலைக்காக, விசேட பொறிமுறையொன்றை உருவாக்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுக்கும்.

இந்த விடயம் தொடர்பாக அரசாங்கத்தில் உள்ள சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கதைத்துள்ளோம். அவரும் இந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார்.

அதேநேரத்தில் எதிர்க்கட்சியில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இது குறித்த பிரதமரிடம் கலந்துரையாடியுள்ளனர். இதற்கு எனது பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.