உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“தமிழர்கள் தோற்கடிக்கப்பட்ட மக்களாகவே இங்கு நடத்தப்படுகிறார்கள். நாங்கள் எவரும் தோற்கடிக்கப்படவில்லை. நாம் சுதந்திரத்துக்கான தீபத்தை ஏந்திக்கொண்டிருக்கிறோம் ” – பாராளுமன்றில் சி.வி.விக்னேஸ்வரன் !

“நீங்கள் தமிழர்களை சக மனிதர்களாக அன்றி தோற்கடிக்கப்பட்ட மக்களாகவே இந்த தீவில் தொடர்ந்து நடத்துகிறீர்கள். நாங்கள் எவரும் தோற்கடிக்கப்படவில்லை. நாம் சுதந்திரத்துக்கான தீபத்தை ஏந்திக்கொண்டிருக்கிறோம் ” என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நேற்று(09.12.2020)  பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை  தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

“நீதியே இந்த நாட்டின் எல்லா மக்களினதும் இன்றைய எதிர்பார்ப்பாகும். நீதியானது தவிர்க்கமுடியாத வகையில், தமிழ் மக்களின் நாளாந்த வாழ்வுடனும் எதிர்காலத்துடனும் பிணைந்துள்ளது. யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் கொடூரமாகவும் இரக்கம் இன்றியும் கொலைசெய்யப்பட்ட அப்பாவி மக்களுக்கான நீதியை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவினர்களுக்கான நீதியை அவர்கள் எதிர்பார்க்கிறார்கள். தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக தமக்கான நீதியை எதிர்பார்க்கிறார்கள். தமது சமூகத்தை சார்ந்த ஒருவர் நீதிக்கு அமைச்சராக இருக்கின்ற போதிலும் முஸ்லிம்கள் தமது ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான நீதியை எதிர்பார்க்கிறார்கள். 2010 ஏப்பிரல் 21 ஆம் திகதி குண்டுவெடிப்புக்களில் கொல்லப்பட்டவர்களுக்கான நீதியை கத்தோலிக்க மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

நீதியும் சமாதானமும் ஒன்றை ஒன்று சார்ந்துள்ளன. உடல், உள, புத்தி ரீதியாகவும் தாற்காலிகமாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் சமாதானத்தை அடைவதற்கான முதல் படி அவர்களுக்கு நீதியை பெற்றுக்கொள்வதாகும்.

இன்றைய அரசாங்கம் சமாதானத்தை அடைவதற்கும் அதனால் நீதிக்காக உழைப்பதற்கும் தயாராக இருக்கிறதா?

இலங்கைக்குள் உங்களின் சக பிரஜைகளான சுதேச தமிழ் மக்களின் துன்பங்கள், துயரங்கள், பிரச்சினைகள் பற்றி உங்களுக்கு உண்மையான கரிசனை உணர்வு இருக்குமானால் அவர்களின் நிலங்களை அபகரிக்க மாட்டீர்கள். எமது கலாசார சின்னங்களை அழிக்க மாட்டீர்கள். தமிழ் பேசும் மக்கள் வாழும் வடக்கு கிழக்கில் பெரும் எண்ணிக்கையான சிங்கள இராணுவத்தை வைத்திருக்கமாட்டீர்கள். பாதிக்கப்பட்டவர்கள் மீதும் நலிந்தவர்கள் மீதும் உணர்வு இருக்குமானால் அவர்களிடம் இருந்து அபகரிக்கமாட்டீர்கள். மாறாக, அவர்களுக்கு கொடுத்து உதவிசெய்து ஆறுதல் கூறுவீர்கள். ஆனால், நீங்கள் எமது நிலங்கள், எமது பாரம்பரிய வாழ்வு மற்றும் சுதந்திரம் ஆகியவற்றை இல்லாமல் செய்வதில் அக்கறை கொண்டிருக்கிறீர்கள். நீங்கள் எம்மை சக மனிதர்களாக அன்றி தோற்கடிக்கப்பட்ட மக்களாகவே இந்த தீவில் எம்மை தொடர்ந்து நடத்துகிறீர்கள். நாங்கள் எவரும் தோற்கடிக்கப்படவில்லை. எமது இதயங்களில் இன்னமும் நாம் சுதந்திரத்துக்கான தீபத்தை ஏந்திக்கொண்டிருக்கிறோம்.

அப்பாவிகள் பக்கமாக அன்றி தவறிழைப்பவர்கள் பக்கமாகவே இந்த நாட்டில் நாம் செயற்படுவதை நீதி தொடர்பாக பேசுகின்றபோது நான் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். 1956, 1958,1961,1977,1981 மற்றும் 1983 ஆண்டு இனக்கலவரங்களின்போது கொலைகள், சித்திரவதைகள், தீவைப்பு மற்றும் பாலியல்வல்லுறவுகளில் ஈடுபட்ட ஒருவரையேனும் நாம் தண்டித்திருக்கிறோமா? 97,000 நூல்களையும் ஓலைச்சுவடிகளையும் கொண்டிருந்த யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டமைக்கு ஒருவரையாவது தண்டித்திருக்கிறோமா? அப்போது தென்கிழக்கு ஆசியாவிலேயே மிகச்சிறந்த நூலகமாக அது திகழ்ந்தது. அண்மைக்காலங்களில் முஸ்லிம் மக்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபட்ட எவரையாவது தண்டித்திருக்கிறோமா? ஆகக்குறைந்தது இந்த விடயங்களில் பொறுப்புக்கூறலுக்காவது முயற்சித்திருக்கிறோமா? தொடர்ந்துவந்த அரசாங்கங்களுக்கு சமர்ப்பிக்கப்பட்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளை அமுல்படுத்தி இருக்கிறோமா? இவை எல்லாமே வசதியாக தட்டுக்களில் வைக்கப்பட்டுள்ளன.

ஒரு முஸ்லிம் மற்றும் ஒரு தமிழர் அமைச்சர்களாக இருக்கின்ற போதிலும் அதிகாரம் பெரும்பான்மை சமூகத்தின் கைகளிலேயே இருக்கிறது. தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் எமக்கு எது நல்லது என்பதை அவர்களே தீர்மானிக்கிறார்கள். சுதந்திரம் கிடைத்த நாள் முதல் இதுதான் நிலைமை. அனைவருக்குமான நீதி ( inclusive justice ) என்பது இந்த நாட்டில் இல்லை. பக்கச்சார்பான நீதியே ( selective justice) காணப்படுகின்றது. சிங்கள பௌத்த மக்களின் நல்வாழ்வுக்காக ‘நீதி’ தெரிவுசெய்யப்பட்டு வழங்கப்படுகின்றது.

இங்கு ஒரு புதுமையான அரசியல் கலாசாரம் வளர்க்கப்படுகின்றது. எண்ணிக்கை அடிப்படையில் சிறுபான்மை மக்களுக்கு எவ்வளவுக்கு எவ்வளவு ஒருவர் கூடுதலான குற்றங்களையும் துன்பங்களையும் செய்கிறாரோ அவ்வளவுக்கு அவ்வளவு அவருக்கு வெகுமதிகளும் பதவி உயர்வுகளும் கொடுக்கப்படுகின்றன. இதன் தாக்கத்தை இந்த சபையிலும் உணர முடிகின்றது. அதனால் தான் படித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் முஸ்லிம் மக்களின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது சமுகம் பற்றியும் அரசாங்கம் பற்றியும் உண்மைகளை பேசும்போது கூச்சல் போட்டு குழப்புகிறார்கள்.

இந்த நாட்டிலே தமிழ் மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் எதிராக காணப்படுவது முழுமையான ஒரு இனவாதமாகும் (Systemic Racism). அரச நிறுவனங்களின் செயற்பாடுகளின் ஊடாக இது முன்னெடுக்கப்படுகின்றது. இந்த இனவாதம் என்பது ஒரு சித்தாந்தம் (Ideology) ஆகியுள்ளது. இந்த சபையில் முறைகேடாக நடக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த சித்தாந்தத்தை காவுகிறார்கள். இனவாதத்தை விதைக்கும் கருவிகளாக ஊடகங்களும் மாறிவிட்டன. இந்த இனவாதம் எம்மை எங்கேயும் கொண்டுசெல்லப்போவதில்லை. இது இந்த நாட்டின் சமாதானத்துக்கும் நல்லிணக்கத்துக்கும் பெரும் குந்தகத்தையும் ஒட்டுமொத்த நாட்டுக்கும் பேரழிவையும் ஏற்படுத்தப்போகின்றது.

இன்றைய விவாதம் நீதி அமைச்சு பற்றியது என்பதால், நிதி அமைச்சின் இணையத் தளத்துக்கு சென்று பார்த்தேன். அதில் பூகோள முன்னேற்றங்கள் மற்றும் மக்களின் அபிலாஷைகளுக்கு அமைவாக சமூகங்களின் தேவைககளை பூர்த்திசெய்யும் வகையில் சட்ட மறுசீரமைப்பு செய்தல் இந்த அமைச்சின் நோக்கம் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. நாங்கள் இந்த நோக்கத்தை முன்னெடுக்கிறோமா ? இந்த நாட்டில் நீதியுடன் சம்பந்தமான எல்லா விடயங்களுமே உலக நடப்புக்கள், உலக நியதிகள், ஒழுக்க எதிர்பார்ப்புக்கள் ஆகியவற்றில் இருந்து முரண்பட்டு செல்வதே யதார்த்தமாக இருக்கிறது. தனி மனித உரிமைகள், சமூகங்களின் கூட்டு உரிமைகள், நல்லிணக்கம் , சமாதானம், சகவாழ்வு போன்ற பண்புகளை முன்னிலைப்படுத்தி நாகரிகத்தின் வளர்ச்சிப்பாதையில் எவ்வாறு முன்னேறிச்செல்லலாம் என்று சிந்தித்து அவற்றுக்கு ஏற்ப தமது நாடாளுமன்றங்களில் சட்டங்களை இயற்றி உலக நாடுகள் பயணம் செய்கையில் இந்த பண்புகளுக்கு முரணாக அல்லவா இந்த நாடு பயணம் செய்கின்றது? குறிப்பிட்ட ஒரு சமுகத்தை சார்ந்த மக்களின் நிலங்களை பறிப்பதுடன் அவர்களின் கலாசாரம், பாரம்பரியம் மற்றும் வாழ்க்கை முறைகளை இல்லாமல் செய்வதற்கு முயலுகின்றது.

சிங்கள பௌத்த தொல்பொருள் எச்சங்களை பாதுகாப்பது என்ற போர்வையில் எமது சமூகத்தின் நிலங்களை அபகரிக்கும் நோக்குடன் அவசர அவசரமாக விசேட ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன. பௌத்த எச்சங்கள் இருக்கின்றன என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அந்த புராதன எச்சங்கள் தமிழ் பௌத்த காலத்தில் இருந்தனவை. சிங்கள மொழி பிறப்பதற்கு முன்னரேயே தமிழ் மக்கள் பௌத்தத்தை தழுவியிருந்தனர்.

தமிழ் பௌத்தர்கள் காலத்தில் இருந்த எச்சங்களை நீங்கள் பேணி பாதுகாக்க விரும்பினால் இந்த ஆணைக்குழுக்களில் பெரும்பான்மையானவர்கள் தமிழ் ஆணையாளர்களாகவே இருக்க வேண்டும். தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து சிங்கள மக்களுக்கு கொடுக்கவா முயலுகிறீர்கள்? இதுவா இந்த ஆணைக்குழுக்களின் நோக்கம் ? 3000 ஆண்டுகளாக தொடர்ச்சியாக வடக்கு கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் இணக்கம் மற்றும் இசைவு இன்றி எந்த ஒரு செயற்பாடும் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படக்கூடாது.

சிங்கள மக்களுக்கு எதிராகவோ அல்லது அவர்களின் இறைமைக்கு எதிராகவோ எமது இளையோர்கள் ஆயுதம் ஏந்தவில்லை. அதேநாட்டில் தமது பகுதிகளின் இறைமைக்கு ஆபத்து ஏற்பட்டதாலேயே அவர்கள் ஆயுதம் ஏந்தினார்கள். அவர்கள் தமது அடையாளத்தை பாதுகாக்க வேண்டியிருந்தது. ஆனால், அவர்கள் பயங்கரவாதிகளாக அழைக்கப்பட்டு 20 க்கும் அதிகமான நாடுகளின் உதவியுடன் கொடூரமாக அழிக்கப்பட்டார்கள்.

ஒன்றை தெளிவாக புரிந்துகொள்ளுங்கள். நாட்டின் இறைமையை விட மக்களின் இறைமையே மேலானது. இன்றைய சர்வதேச உறவில் அப்படித்தான் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த அடிப்படையில் தான் சர்வதேச சட்டங்களும் கோட்பாடுகளும் உருவாக்கப்பட்டுவருகின்றன. நாட்டின் இறைமையின் பின்னால் ஒளிந்துநின்றுகொண்டு எமது மக்களின் இறைமையை இல்லாமல் செய்யலாம் என்று கனவு காணாதீர்கள். 18 ஆம் நூற்றாண்டு காலத்துக்குரிய நாட்டின் இறைமையை பாதுகாக்கும் கோட்பாடு இன்று பொருத்தம் அற்றதாகி வலுவிழந்துவிட்டது. ஒரு நாட்டின் மனித உரிமைகள் மோசமாக மீறப்படும்போது மனித உரிமைகளை பாதுகாப்பதற்காக அந்த நாட்டின் இறைமையை உதாசீனம் செய்யலாம் என்பதே இன்றைய உலக நடப்பு என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

இறுதிப் போரில் மனிதக் கேடயங்களாக அப்பாவி மக்களை விடுதலைப்புலிகள் பயன்படுத்தியதாகவும், அந்த மக்களை நீங்கள் மீட்டதாகவும், எந்த ஒரு போர்க்குற்றத்தையும் படையினர் செய்யவில்லை என்றும் கூறுகிறீர்கள். இது உண்மையானால், இதை நீங்கள் கூறவேண்டியதில்லை. பாதிக்கப்பட்ட மக்கள் தான் கூறவேண்டும். ஆனால், இறுதி யுத்தத்தில் நீங்கள் காப்பாற்றியதாக கூறும் மக்கள் நீங்கள் தமது உறவுகளை கொலை செய்ததாக அல்லவா கூறுகிறார்கள். நீங்கள் அந்த மக்களை உண்மையாக மீட்டு அவர்களுக்கு வாழ்வு அளித்திருந்தால், 2009 ஆம் ஆண்டுக்கு முன்னர் பின் வந்த சகல தேர்தல்களிலும் உங்களையல்லவா அவர்கள் ஆதரித்திருந்திருப்பார்கள்? ஆனால், தங்களை மனித கேடயங்களாக பயன்படுத்தியதாக நீங்கள் கூறும் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் என்று நீங்கள் இன்றும் கூறும் தமிழ் தேசிய கூட்டமைப்பை அல்லவா மக்கள் தேர்தல்களில் பல தடவைகள் வெல்ல வைத்துள்ளார்கள் ? எவ்வாறு 2013 ஆம் ஆண்டு முதன்முதலாக நடைபெற்ற வட மாகாண சபை தேர்தலில் வட மாகாணத்தின் ஆகக்கூடுதல் சாதனை வாக்குகளாக 133,000 வாக்குகளை மக்கள் எனக்கு அளித்தனர்?

விடுதலைப்புலிகள் மக்களை மனித கேடயங்களாக பயன்படுத்தினார்கள் என்றும் படையினர் மக்களை பாதுகாத்தார்கள் என்றும் நீங்கள் சொல்வது உண்மையானால் ஏன் சர்வதேச சுயாதீன விசாரணைக்கு தயங்குகிறீர்கள்? நீங்கள் சொல்வது உண்மையானால் சர்வதேச விசாரணை மூலம் அது நிரூபிக்கப்பட்டு உங்கள் மீதான விமர்சனங்கள் களையப்படவேண்டும். நீங்கள் அப்போது உங்கள் சர்வதேச அரங்கில் உங்கள் தலையை நிமிர்த்திக்கொண்டு வலம்வரமுடியும்.

ஆனால் உண்மை மாறாக இருக்கிறது. அதனால் தான் சர்வதேச விசாரணையை முகம்கொடுக்க நீங்கள் அஞ்சுகிறீர்கள். நீங்கள் சர்வதேச விசாரணைக்கு அஞ்சுவதும் சீனாவின் பின்னால் ஓடுவதும் உங்கள் படையினர் போர்க்குற்றங்கள், மனிதாபிமானத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் இனப்படுகொலையை இழைத்திருக்கிறார்கள் என்பதையே காட்டுகின்றது.

அடுத்தவருடம் மார்ச் மாதம் நாம் ஐ. நா மனித உரிமைகள் சபையை எதிர்கொள்கின்றோம். சர்வதேச சமுகத்தின் பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு. மார்ச் மாத நடுப்பகுதி தொலைவில் இல்லை என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள். தப்புவதற்கு சிறிய சந்தர்ப்பமே உள்ளது. ஆனால் ஒரு வழி உண்டு. அரசாங்கம் புதிய அரசியல் அமைப்பை கொண்டு வருகின்றது. இந்த நாட்டின் எல்லா சமூகங்களும் சமத்துவம், ஒற்றுமை, சுதந்திரம், ஒத்துழைப்பு ஆகியவற்றுடன் வாழும் வகையில் ஒரு சமஷ்டி அல்லது அரை சமஷ்டி அல்லது கூட்டு சமஷ்டி அரசியல் அமைப்பை தயாரித்து நிறைவேற்றுங்கள். உங்கள் அரசாங்கம் மட்டுமே இதை செய்ய முடியும். பெரும்பான்மை சமூகத்துடன் சமத்துவம் மற்றும் சக வாழ்வுடன் வடக்கு கிழக்கு தமிழ், முஸ்லிம் மக்கள் மற்றும் மலையக மக்களும் கூட வாழும்வகையில் உண்மையான அதிகார பகிர்வை ராஜபக்ஸ குடும்பம் உறுதிசெய்யட்டும்.

நீங்கள் தவறினால், யுத்தம் நடைபெற்றபோது பேச்சுவார்தைகளுக்காக நாடுகளின் தலை நகரங்களுக்கு ஏறி இறங்கியதுபோல மீண்டும் ஏறி இறங்குவீர்கள். இந்த நாட்டில் இன முரண்பாடுகளை மேலும் கூர்மையாக்கி சர்வதேச வல்லரசுகள் காலூன்றுவதற்கு (இதுவரை அப்படி செய்திருக்கவில்லை என்றால்) இடமளிக்காதீர்கள் என்று இந்த அரசாங்கத்திடம் வேண்டிக்கொள்கின்றேன்.

“கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றங்களுக்காக ரணில் விக்ரமசிங்கவையே சிறைக்கு அனுப்ப வேண்டும்” – மஹிந்தானந்த அளுத்கமகே

“கடந்த காலங்களில் இடம்பெற்ற குற்றங்களுக்காக ரணில் விக்ரமசிங்கவையே சிறைக்கு அனுப்ப வேண்டும்” என பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று(09.12.2020)  2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் நீதி, தொழில் அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகள் மீதான நிதி ஒதுக்கீட்டு விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார்.

மேலும் அவர் பாராளுமன்றில் கூறுகையில்,

நல்லாட்சியில் இடம்பெற்ற குற்றங்களுக்கு ரணில் – மைத்திரி மீது மாத்திரம் குற்றம் சுமத்தாது எதிர்க்கட்சியில் இன்று அமர்ந்துள்ள அனைவரும் பொறுப்புக்கூற வேண்டும். நல்லாட்சியில் நீதமன்ற சுயாதீனம் முழுமையாக நாசமாக்கப்பட்டது, ஆனால் எமது அரசாங்கம் நீதிமன்ற சுயாதீனத்தை அழித்துள்ளதாக கருத்தொன்றை உருவாக்க நினைக்கின்றனர்.

எமது ஆட்சியில் நீதிமன்ற சுயாதீன பலவீனம் குறித்து பேசிக்கொண்டு நல்லாட்சியில் ராஜபக்ஷவினரை சிறையில் அடைக்கும் முயற்சிகள் எடுக்கப்பட்டது நியாயமானதா? நீதிபதிகளை அலரிமாளிகைக்கு வரவழைத்து தீர்ப்புகளை தீர்மானிக்கும் நிலைமை காணப்பட்டது, எமக்கு எதிராக வழக்குகள் தொடுக்கப்பட்டது,

ஆனால் நாம் ஒருபோதும் அரசியல் பழிவாங்கலை மேற்கொள்ள மாட்டோம். பொய் குற்றங்களை சாட்டி எவரையும் சிறையில் அடைக்க மாட்டோம். ஆனால் கடந்த காலத்தில் நடந்த குற்றங்களுக்காக வழக்கு தொடுக்க வேண்டிய நபர்களுக்கு எதிராக வழக்கு தொடுப்போம், ரஞ்சன் ராமநாயகவிற்கு எதிராக இரண்டு வழக்குகளை தொடுப்பேன், அதில் நிச்சயமாக ரஞ்சன் ராமநாயக குற்ற்வாளியாவர்.

ஆனால் இறுதி நேரத்தில் வழக்கை வாபஸ் பெறுவேன். ஏனெறால் உண்மையில் சிறைக்கு அனுப்ப வேண்டியது ரஞ்சனையோ வேறு எவரையுமோ அல்ல, ரணில் விக்ரமசிங்கவையே சிறைக்கு அனுப்ப வேண்டும். அன்றே எனக்கு நித்திரை வரும்” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற நோக்கம் அரசுக்கு இல்லை” – அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில திட்டவட்டம் !

“அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்பதால் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற நோக்கமும் அரசுக்கு இல்லை”  என அமைச்சரவை பேச்சாளர் உதய கம்மன்பில திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று செவ்வாய்க்கிழமை (08.12.2020) அரச தகவல் திணைக்களத்தினால் இணையவழியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன்போது செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்-

நாட்டின் சிறைச்சாலைகளில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை. ஆகவே அரசியல் கைதிகள் என்ற அடிப்படையில் சிறைகளில் உள்ளவர்களின் எண்ணிக்கை பூச்சியமாகவுள்ளது. தமது தனிப்பட்ட அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் உள்ளவர்களே அரசியல் கைதிகள் எனப்படுவர்.

ஆனால் நாட்டின் அரசமைப்பின் அடிப்படையில் பார்க்கும்போது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களே நாட்டின் சிறைகளில் உள்ளனர். அவர்கள் விடுவிக்கப்படவேண்டியது அவசியமானதாகும். அத்துடன், அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்பதால் அரசியல் கைதிகளை விடுவிக்கவேண்டும் என்ற நோக்கமும் அரசுக்கு இல்லை.

எந்தக் கைதிகளும் சிங்கள, தமிழ் கைதிகள் என வேறுபடுத்தப்படுவதில்லை. மாறாக அவர்களது குற்றச்செயல்களின் அடிப்படையிலேயே சிறை வைக்கப்படுள்ளனர். அந்த வகையில் நான்கு வருடத்திற்கு ஒரு முறை கைதிகளின் நடத்தை தொடர்பான அறிக்கையின்படி அவர்களின் தண்டனைக் காலத்தை குறைக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.

ஆனால் கடந்த காலத்திலிருந்து அந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவில்லை. ஆகவே தான் சிறைச்சாலைகள் அமைச்சர் இந்த நடவடிக்கையை மீண்டும் ஆரம்பித்துள்ளார். அதற்கமைய மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளுக்கு அவர்களது நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலம் குறைக்கப்பட்டு ஆயுள் தண்டனையாகவும், பின்னர் ஆயுள் தண்டனை வருட அடிப்படையில் 20 வருட தண்டனையாகவும் குறைக்கப்படும் .

இந்தச் செயற்பாடுகள் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு பொருந்தாது. ஆனால் போதைப்பொருள் பாவனையாளர்கள் இதனுள் உள்ளடக்கப்படுவர். அவர்களுக்கு புனர்வாழ்வழிக்கும் நடவடிக்கை இடம்பெறும்” என்றார்.

அதே நேரம் தமிழ் அரசியல்கைதிகளை விடுவிக்குமாறு கோரி இன்றையதினம் (09.12.2020) தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதமரிடம் கோரிக்கை ஒன்றை முன்வைத்து சந்திப்பை நடத்தியிருந்தமையும்  குறிப்பிடத்தக்கது.

தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துரையாடல் !

சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 80 இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தமிழ் அரசியல் கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று சந்தித்துப் பேச்சு நடத்தினர்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு 1994 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து சிறையில் இருக்கும் 80 இற்கும் மேற்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரியே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்ள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், வினோநோகராதலிங்கம் மற்றும் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் பிரதமரை இன்று சந்தித்திருந்தனர்.

இதன்போது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி இரா.சம்பந்தன், ம.ஆ. சுமந்திரன், க.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், மனோ கணேசன், சிவஞானம் சிறீதரன், செல்வம் அடைக்கலநாதன், த.சித்தார்த்தன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வினோநோகராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன், வே.இராதாகிருஷ்ணன், இரா.சாணக்கியன், கோவிந்தன் கருணாகரம் மற்றும் தவராசா கலையரசன் உள்ளிட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதமும் பிரதமரிடம் கையளிக்கப்பட்டது.

charles 2

“நாட்டில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. எமது மக்களின் பிரச்சினைகள் வேறு ஒரு கோணத்தில் இருந்தே பார்க்கப்படுகின்றது” – எம்.ஏ.சுமந்திரன்

“நாட்டில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. எமது மக்களின் பிரச்சினைகள் வேறு ஒரு கோணத்தில் இருந்தே பார்க்கப்படுகின்றது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்

நாடாளுமன்றத்தில் இன்று(09.12.2020) உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இன்று பாராளுமன்றில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

“இலங்கையில் சிறுபான்மை மக்களுக்கான நீதி நிலைநாட்டப்படுவதில் நீண்டகால இழுத்தடிப்புகள் காணப்படுகின்றன. இதனாலேயே மோசமான குற்றங்களுக்கு நீதியைப் பெற்றுக்கொள்ள சர்வதேச நீதிமன்ற தலையீட்டைக் கொண்ட விசாரணைகளைக் கேட்கின்றோம்.

இலங்கையின் நீதித்துறை சுயாதீனமாக இல்லை என்பதை ஆட்சி செய்தவர்களும், ஆட்சி செய்கின்றவர்களும் முன்வைக்கும் விமர்சனங்களில் இருந்தே வெளியாகி விட்டன.நாட்டில் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுவதில்லை. எமது மக்களின் பிரச்சினைகள் வேறு ஒரு கோணத்தில் இருந்தே பார்க்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக சிறுபான்மை மக்களின் பிரச்சினைகள் மேலெழுகின்ற போது, நீதி அமைச்சர் ருவிட்டர் மூலமாக கருத்துக்களைக் கூறுவதை மட்டுமே செய்து வருகின்றார். அதனை மாத்திரமே அவரால் செய்ய முடியும்.

சிறைச்சாலைகளில் 1983, 2000 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில், அரச பாதுகாப்புடன் மேற்கொள்ளப்பட்ட படுகொலைகள் குறித்த விசாரணைகள் இன்னமும் முன்னெடுக்கப்படவில்லை. இந்தநிலையில், தற்போது மஹர சிறைச்சாலையிலும் படுகொலை அரங்கேற்றப்பட்டுள்ளது.

திருகோணமலையில் 5 மாணவர்கள் படுகொலை, கொழும்பில் 11 இளைஞர்கள் கடத்தல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராஜசிங்கம், சிவநேசன், ரவிராஜ் மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க போன்றோரின் படுகொலைகள், ஊடகவியலாளர் கீத் நோயர் கடத்தப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட சம்பவம், ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டுக் காணமால் ஆக்கப்பட்ட சம்பவம், 34 தமிழ் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் ஆகியவற்றுக்கு இன்னமும் நீதி நிலைநாட்டப்படாதது ஏன்?

நாட்டில் மோசமான, சர்வதேச குற்றங்கள் பல இடம்பெற்றுள்ள காரணத்தாலேயே சர்வதேச விசாரணைகளைக் கேட்கின்றோம். அதனை ‘வேண்டாம்’ எனக் கூற முடியாது” எனவும் அவர் பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்

“ஜனநாயக நாட்டில் நினைத்த படியெல்லாம் கட்சிகளை தடை செய்ய முடியாது” – சீ.வீ.கே.சிவஞானம்

“ஜனநாயக நாட்டில் நினைத்த படியெல்லாம் கட்சிகளை தடை செய்ய முடியாது” என வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று(09.12.2020) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சீ.வீ.கே.சிவாஜானம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முதல் இரு கூட்டங்களில் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் வரவில்லை. அவர்கள் புறக்கணிக்கிறார்களா? அல்லது வரவில்லையா? என்பதை அவர்களிடம் தான் கேட்க முடியும். அவர்களுக்குரிய அறிவித்தல் முறையாகவே கிடைக்கின்றது. பாராளுமன்றில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒத்திசைவாகவே செயற்படுகின்றனர். சாணக்கியன், விக்கினேஸ்வரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் கூட பொது இலக்கில் செயற்படுகின்றனர்.

கஜேந்திரகுமார், விக்னேஸ்வரன், சுமந்திரன், சிறிதரன், சாணக்கியன் போன்றோர் சபைகளில் ஆவேசமாக பேசுகின்றனர். முன்னர் அடக்கிவாசித்தார்கள். நாட்டில் அடக்குமுறை அதிகரித்ததால் அவர்களும் ஆவேசமடைந்துள்ளனர். கஜேந்திரகுமார், சாணக்கியன் போன்றோர் சரத் வீரசேகரவிற்கு எதிராக நாடாளுமன்றில் பதிலளிக்கும் போதே கூட்டமைப்பை தடைசெய்ய வேண்டும், புணர்வாழ்வு அளிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டது. இதற்கு பொன்சேகாவும் தனது கடும் எதிர்பை வெளியிட்டிருந்தார்.

கூட்டமைப்பை தடை செய்வதென்பது மேலோட்டமான பேச்சே. ஜனநாயக நாட்டில் நினைத்தபாட்டில் ஒரு கட்சியை தடைசெய்ய முடியாது. தடை செய்தாலும் நாம் எமது கொள்கைகளை முன்னிறுத்தி வேறு கட்சியில் போட்டியிடுவோம்” என தெரிவித்துள்ளார்.

“இலங்கையில் முஸ்லீம்களின் உடல்கள் தகனம் செய்யப்படும் விடயத்தில் பிரிட்டன் தலையிடவேண்டும்” – பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு கடிதம் !

இலங்கையில் கொரோனா வைரசினால் உயிரிழந்த முஸ்லீம்களின் உடல்கள் தகனம் செய்யப்படும் விடயத்தில் பிரிட்டன் தலையிடவேண்டும் என பிரிட்டனின் பாராளுமன்ற உறுப்பினர் அவ்சல்கான் வேண்டுகோள் விடுத்துள்ளார் .

பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.பிரிட்டனில் உள்ள இலங்கை முஸ்லீம் அமைப்புகளின் பேரவைக்கான அனைத்து கட்சி நாடாளுமன்ற குழுவின் துணை தலைவர் என்ற அடிப்படையில் தான் இந்தகடிதத்தை எழுதுவதாக அவர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அந்தக்கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களை கட்டாயமாக தகனம் செய்யவேண்டும் என இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எனது கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

இது இலங்கையில் உள்ள முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மை மதத்தினரின் மதசுதந்திரத்தை மறுக்கின்றது.இந்த சிறுபான்மை மதத்தினரிற்கு உடல்களை தகனம் செய்வது தடை செய்யப்பட்ட விடயம் என அவ்சல்கான் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள அவ்சல்கான் ,

உலகசுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்கள் கொரோனா வைரசினால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யலாம் தகனம் செய்யலாம் என தெரிவித்துள்ள போதிலும்,மனித உரிமை அமைப்புகளின் மன்றாட்டமாக வேண்டுகோள்கள் வெளியாகியுள்ள போதிலும் இலங்கை அரசாங்கம் பதிலளிக்கவில்லை. இறுதிநிகழ்வுகள்,குறிப்பாக இறந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வது சுதந்திரத்தின் ஒரு பகுதி முஸ்லீம்களிற்கு உடல்கள் அடக்கம் செய்யப்படுவது கட்டாயமானது என தெரிவித்துள்ளார்.

உடல்களை தகனம் செய்வது முஸ்லீம்களை பொறுத்தவரை தடை செய்யப்பட்டுள்ளதுடன் உடல்களை அவமதிப்பதாகும். கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டவர்களின் நம்பிக்கை சுதந்திரத்தினை பாதுகாப்பதற்காக மேலும் உடல்கள் கட்டாயமாக தகனம் செய்யப்படுவதை தடுப்பதற்காக அவசர இலங்கை வெளிவிவகார அமைச்சருடன் இது குறித்து பேச்சுவார்த்தையை மேற்கொள்ளுமாறு பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சருக்கான கடிதத்தில் பிரிட்டனின் நாடாளுமன்ற உறுப்பினர் அவ்சல்கான் வேண்டுகோள் விடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

“தென்பகுதியில் கொல்லப்பட்ட சிங்களவர்களும் சரி வடக்கில் கொல்லப்பட்ட தமிழர்களும் சரி எல்லோரும் நம்நாட்டின் பிள்ளைகளே” – மங்களசமரவீர !

“தென்பகுதியில் கொல்லப்பட்ட சிங்களவர்களும் சரி வடக்கில் கொல்லப்பட்ட தமிழர்களும் சரி எல்லோரும் நம்நாட்டின் பிள்ளைகளே”  என முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகத்தில் மங்களசமரவீர வெளியிட்டுள்ள காணொளி ஒன்றிலேயே  அவர் இதனைக் கூறியுள்ளார்.

அவர்  அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஒரு நாடு ஒருசட்டம் என்பதை வெறும் வார்த்தைகளுக்கு அப்பால் சென்று உண்மையில் நடைமுறைப்படுத்துவது எப்படி என நாட்டை நேசிப்பவர்கள் சிந்திக்க வேண்டிய தருணம் வந்துள்ளது. மஹர சிறைச்சாலை கலவரத்தின் பின்னர் சிறைச்சாலை வாசலில் தாய்மார்கள் கண்ணீர்விட்டு அழுதது தென்பகுதியில் கண்ணீர்விட்ட தாய்மார்களை நினைவுபடுத்தியது.

அதேவேளை, வடக்கின் தாய்மார்களின் கண்ணீரை மாத்திரமில்லை அரச பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட தாய்மார்களின் கண்ணீரையும் நாங்கள் பார்த்துள்ளோம். தென்பகுதியில் கொல்லப்பட்ட சிங்களவர்கள், வடபகுதியில் கொல்லப்பட்ட தமிழர்கள், மஹர சிறைச்சாலையில் கொல்லப்பட்ட கைதிகள், 2012இல் வெலிக்கடையில் கொல்லப்பட்ட கைதிகள் எங்களின் உறவுகள், எங்கள் நாட்டின் பிள்ளைகள் என்பதை நாங்கள் மறக்க முடியாது.

தொடர்ச்சியாக இடம்பெறும் விடயங்களைப் பார்க்கும்போது சுதந்திரத்துக்குப் பின்னர் தாய்மார்களின் கண்ணீரைத் தவிர மக்களுக்கு வேறு எதுவும் கிடைக்கவில்லை என்ற கருத்தை நிராகரிக்க முடியாதது போல் தோன்றுகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா சுதேச மருந்தை பெற குவிந்த மக்கள் கூட்டம் – மருந்து விநியோகத்துக்கு தடை !

கேகாலையில் வைத்தியர் ஒருவர் கொரோனாவை கட்டுப்படுத்தும் என தெரிவித்து விற்பனை செய்த மருந்தினை விநியோகிப்பதற்கு பிரதேச செயலாளர் தடை விதித்துள்ளார்.

குறிப்பிட்ட மருந்தினை பெறுவதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் சமூகவிலகல் விதிமுறைகளை மீறி கேகாலையின் ஹெட்டிமுல்ல பகுதியில் காணப்பட்டதால் கொரோனா பரவல் ஆபத்து குறித்து சுட்டிக்காட்டப்பட்ட நிலையிலேயே பிரதேச செயலாளர் மருந்தினை விநியோகிப்பதற்கு தடை விதித்துள்ளார்.

தம்மிக பண்டார என்பவர் கொரோனாவை குணப்படுத்தும் மருந்து தன்னிடமுள்ளதாக தெரிவித்ததை தொடர்ந்து அதனை பெறுவதற்காக ஆயிரக்கணக்கானவர்கள் ஹெட்டி முல்ல பகுதிக்கு நேற்று சென்றனர்.

பெருமளவு மக்கள் அப்பகுதிக்கு செல்லத்தொடங்கியதால் நிலைமையை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார் அங்கு அனுப்பப்பட்டனர்.

“புலிகள் அமைப்பை மீண்டும் தலை தூக்க இடமளிக்கமாட்டோம்.மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிட்டு சுதந்திரமாக இருப்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு” – அமைச்சர் பிரசன்ன ரணதுங்க

“தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் தலை தூக்க இடமளிக்கமாட்டோம்.மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிட்டு சுதந்திரமாக இருப்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பு” என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்றையதினம் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து பேசிய அவர்,

வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் ஆகிய திட்டங்களின் ஊடாக வடக்கு, கிழக்கு மாகாணங்களைக் கட்டியெழுப்புவதற்கு மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.தமிழீழ விடுதலைப்புலிகளால் அழிக்கப்பட்ட ரயில் பாதைகள் புனரமைக்கப்பட்டன. வடக்கு மக்களின் உற்பத்திகளை வெளியிடங்களுக்குக் கொண்டு செல்லக்கூடிய சூழ்நிலை உருவானது.

போருக்குப் பின்னர் வடக்கின் கல்வி நிலையை மேம்படுத்துவதற்கு மேல் மாகாணத்தில் இருந்த தமிழ் ஆசிரியர்களை அங்கு அனுப்புவதற்கும் நடவடிக்கை எடுத்தோம். ஆனால் 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு என்ன நடந்தது? எல்லாம் நிறுத்தப்பட்டன.நல்லாட்சிக்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு  வழங்கியது. பாராளுமன்ற உறுப்பினர்கள் விலைக்கு வாங்கப்பட்டனர். ஆனால், வடக்கு மக்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கவில்லை.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் உரையாற்றுவதைச் செவிமடுக்கும் போது வேதனையளிக்கின்றது. இனவாதத்தைத் தூண்டுகின்றனர். 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது நான் யாழ்ப்பாணம் சென்றிருந்தேன்.தெற்கு மக்கள் தொடர்பில் வடக்கிலுள்ள சில அரசியல்வாதிகள் அங்கு குரோதமனப்பான்மையை உருவாக்கியிருந்தனர். அங்குள்ள மக்களிடம் நாம் உரையாடினோம்.

மூன்று வேளையும் நன்றாகச் சாப்பிட்டு சுதந்திரமாக வாழும் சூழ்நிலை உருவாகுவதே அவர்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும், புலம்பெயர் அமைப்புகளுக்கும் சோரம் போயுள்ள தமிழ் அரசியல் தலைவர்கள் தான் வடக்கு மக்களைக் குழப்பியுள்ளனர். எனவே,இனவாதத்தைத் தூண்ட வேண்டாம் எனத் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரிடம் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் பிரபாகரனின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக்கொள்வதற்கு இந்த நாட்டு மக்கள் ஒரு போதும் இடமளிக்கமாட்டார்கள். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீண்டும் தலை தூக்கவும் இடமளிக்கமாட்டோம்.ஆகவே, எம்முடன் கரம் கோர்த்துச் செயற்படுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கின்றோம்” என்றார்.