உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“ஜெனீவாவில் முஸ்லீம் நாடுகளுடைய ஆதரவை பெறவே அரசு ஜனசாக்கள் எரிப்பதை நிறுத்தியுள்ளது”- காலம் கடந்த ஞானம் என்கிறார் எம்.ஏ.சுமந்திரன்! 

“ஜெனீவாவில் முஸ்லீம் நாடுகளுடைய ஆதரவை பெறவே அரசு ஜனசாக்கள் எரிப்பதை நிறுத்ததியுள்ளது” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமாகிய எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இன்று[26.02.2021] வவுனியாவில் இடம்பெற்ற சர்வமதத் தலைவர்கள் மற்றும் தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகளின் பிரதிநிதிகளுடனான சர்வதேச நகர்வும் தமிழ் தேசிய ஒற்றுமைைகுறித்து இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

இன்றைய காலகட்டத்திலே தமிழ் மக்களின் அரசியல் ஒற்றுமை இன்றியமையாதது என்கின்ற கருத்தை நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொள்கின்றோம்.

மதத் தலைவர்களும் அதனை வலியுறுத்தியிருக்கின்றார்கள். இந்த ஒற்றுமையயை நாங்கள் எவ்வாறு தீவிரமாக முன்நகர்த்துவது என்பது பற்றி ஒன்று சேர்ந்திருக்கின்ற கட்சிகளின் அவற்றின் தீர்மானம் எடுக்கின்ற கூட்டங்களிலே பேசி தீர்மானங்களை எடுத்து வெகு விரைவிலே ஒரு கட்டமைப்பாக நாங்கள் முன்னேறுவது குறித்து நடவடிக்கை எடுப்போம்.

நேற்யை தினம் இலங்கை சம்மந்தமான விவாதத்தின் போது பல்வேறு நாடுகள் தங்கள் கருத்துகளைத் தெரிவித்திருக்கின்றார்கள். தென்பகுதிகளில் வருகின்ற பத்திரிகைகளைப் பார்த்தால் 21 நாடுகள் இலங்கைக்கு ஆதரவாகப் பேசியதாகச் சொல்லியிருக்கின்றார்கள்.

20 நாடுகளை என்னால் கணக்கிட முடிந்தது. ஆனால், அதிலே 10 நாடுகள் தான் வாக்குரிமை பெற்ற நாடுகள். எனவே 47 நாடுகளில் 10 நாடுகள்தான் இலங்கைக்குச் சார்பாகப் பேசியிருக்கின்றன. ஆனால் பல நாடுகள் நடுநிலைமை பேணக் கூடும் என்கின்ற ஒரு நிலைப்பாடு இன்று காணப்படுகின்றது.

எனவே இந்தத் தீர்மானத்தை நிறைவேற்றுவது சம்மந்தமாக இந்த இணை அனுசரணை நாடுகள் முயற்சிகளை எடுத்திருக்கின்றார்கள். அதை நீர்த்துப் போகப் பண்ணுவதற்காகத் தான் இந்த நாடுகளின் கருத்துக்களைச் செவிமடுத்த பின்னர் தான் கட்டாய ஜனாசா எரிப்பினை நீக்கியிருக்கின்றது இந்த அரசு.

அவர்களுடைய எண்ணம் அப்படிச் செய்தால் முஸ்லீம் நாடுகளை அந்தப் பிரேரணைக்கு வக்களிக்காமல் செய்யப் பண்ணலாம் என்ற நப்பாசையில் தான் இதனைச் செய்திருக்கின்றார்கள்.

ஆனால் இரண்டு நாட்களுக்கு முன்னர் முஸ்லீம் நாடுகளினுடைய அமைப்பின் பொதுச் செயலாளர் மிகத் தெளிவான அறிக்கையினை வெளியிட்டுள்ளார். எனவே இஸ்லாமிய நாடுகள் தங்கள் நிலைப்பாட்டைமாற்ற மாட்டார்கள் என்று நம்புகின்றோம். ஜெனீவாவிலே அவர்களின் வாக்குகளை மழுங்கடிப்பதற்காக இலங்கை அரசாங்கம் இறுதி நேரத்திலே செய்திருக்கின்ற முடிவு அவர்களது முடிவை மாற்றாது என்று நாங்கள் நம்புகின்றோம்.

அடுத்த விடயமாக காணாமல் போன உறவுகளுடன் ஜனாதிபதி பேச இருக்கின்றார் என்று சொல்லி சில நாடுகளினுடைய ஆதங்கத்தைக் குறைப்பதற்காக கடைசி நேரத்திலே காலம் கடந்த ஞானமாக இலங்கை அரசாங்கம் ஓடித்திரிகின்றது என்றுதான் சொல்ல வேண்டும்.

எனவே தமிழ்த் தேசியம் சார்ந்த கட்சிகள் அடுத்த கட்டமாக நாங்கள் எவ்வாறு முன்நகர்த்த வேண்டும் என்ற விடயத்தை ஒவ்வொரு கட்சிகளும் தங்கள் தங்கள் கூட்டங்களில் தீர்மானித்ததன் பிறகு அந்த யோசனைகளை ஒன்று சேர்ந்து இறுதித் தீர்மானங்களை மேற்கொள்வோம்.

தமிழ்த் தேசியப் பேரவை என்பது எவ்வித தேர்தல் நோக்கத்திற்காகவும் உருவாக்கப்படவில்லை. இது தேர்தல் கட்டமைப்பே கிடையாது. இது இன்றைக்கு எற்பட்டிருக்கின்ற தமிழ் மக்களுக்கான ஒரு அத்தியாவசியத் தேவை. அதைப் பொறுப்போடு நாங்கள் அணுக வேண்டுமாக இருந்தால் தமிழ்த் தேசியப் பரப்பில் உள்ள அனைவரும் ஒன்றாகச் செயற்பட வேண்டும். அவ்வாறு செயற்படுவதற்குத் தேவையான ஒரு கட்டமைப்பே இது என்று தெரிவித்தார்.

முஸ்லிம் மக்களின் ஜனாசா நல்லடக்கத்திற்கு அனுமதித்து வர்த்தமானி வெளியீடு! 

கொரோனா வைரஸின் தாக்கத்திற்குட்பட்டு இறந்த முஸ்லிம் மக்களின் ஜனாசா நல்லடக்கத்திற்கு அனுமதித்து வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் வெளியிட்டுள்ளது.

இலங்கையில் கொரோனா மரணங்கள் அதிகரித்த காலத்தில் இருந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களுடைய சடலங்களை புதைக்க அனுமதி வழங்குமாறு முஸ்லீம்கள் கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அரசு அதனை மறுத்தே வந்தது.

இந்நிலையில் இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜெனீவா கூட்டத்தொடரில் பங்கேற்கவுள்ள காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களிடம் பயங்கரவாததடுப்பு பிரிவு விசாரணை! 

இலங்கையில் யுத்தம் நடந்த காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டோரை தேடி, அவர்களின் உறவினர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்தில் பங்கெடுப்போரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காணப்படும் நிலையிலேயே, ஜெனீவா அமர்வு நடத்தப்பட்டு வருகிறது.

முந்தைய ஆண்டுகளைப் போலவே இம்முறையும் இலங்கை யுத்த விவகாரம், ஜெனீவா அமர்வில் முக்கிய விவாதமாகியிருக்கிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக, இந்த அமர்வில் பங்கேற்பதற்காக இலங்கை மத்திய அரசாங்க தரப்போ தமிழர் தரப்போ இம்முறை செல்லவில்லை. எனினும், காணொளி காட்சி வழியாக ஜெனீவா அமர்வுகளில் இந்த இரண்டு தரப்பினரும் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில், ஜெனீவா மனித உரிமை பேரவை கூட்டத் தொடரில் தமது குரலை மௌனிக்க செய்வதற்கு இலங்கை அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேசி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.

இதன் ஒரு கட்டமாக தான் பயங்கரவாதத் தடுப்பு பிரிவினரால் புதன்கிழமை (பிப்ரவரி 24) முதல் முறையாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

கிளிநொச்சி பயங்கரவாதத் தடுப்பு பிரிவின் அலுவலகத்தில் வைத்து, கொழும்பு பயங்கரவாதத் தடுப்பு பிரிவு அலுவலக அதிகாரிகளால் தான் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.

தனது வங்கிக் கணக்கு விவரங்கள், போராட்டங்கள் நடத்தப்படுவதற்கான காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை ஊக்குவிப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கின்றீர்களா என்ற கோணத்திலும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் தன்னிடம் விசாரணை நடத்தியதாக அவர் கூறினார்.

தன்னைப்பற்றிய அனைத்து தகவல்களையும் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் வைத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். வெளிநாடுகளில் இருந்து தனது வங்கிக் கணக்குக்கு வரும் பணம் தொடர்பிலும் தன்னிடம் விசாரணை நடத்தப்பட்டதாக கூறிய அவர், அந்த பணம், பிரித்தானியாவிலுள்ள தனது மகனால் அனுப்பப்படும் பணம் என தான் பதிலளித்ததாகவும் லீலாதேசி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.

போராட்டம் நடத்துவதற்கு வெளிநாடுகளிலிருந்து பணம் கிடைக்கிறதா என பயங்கரவாதத் தடுப்பு பிரிவினர் வினவியதற்கு, தான் “இல்லை” என பதிலளித்ததாகவும் அவர் கூறினார்.

இலங்கை ராணுவத்திற்கு எதிராக முறைப்பாடுகளை செய்தீர்களா என தன்னிடம் ஒரு அதிகாரி விசாரணை செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

தான் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ராணுவத்திற்கு எதிராக முறைப்பாடு செய்யவில்லை எனவும், அரசாங்கத்தின் மீதே தாம் கோபம் கொண்டுள்ளதாகவும் லீலாதேசி ஆனந்த நடராஜா தெரிவித்தார்.

இதேவேளை, 2010ஆம் ஆண்டில் ஜெனீவா அமர்வுகளில் கலந்து கொண்டீர்களா என பயங்கரவாத தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் தன்னிடம் கேட்டதற்கு, 2010ஆம் ஆண்டில் நடந்த ஜெனீவா அமர்வுகளுக்கு செல்லவில்லை எனவும், 2018ம் ஆண்டு ஜெனீவா அமர்வுகளிலேயே தான் முதல் முறையாக கலந்து கொண்டதாகவும் அதிகாரிகளிடம் தெரிவித்ததாக லீலாதேசி ஆனந்த நடராஜா கூறினார்.

ஜெனீவா அமர்வில் முன்வைக்கப்படும் விஷயங்கள் குறித்தும் அவரிடம் அதிகாரிகள் கேட்டுள்ளதாக தெரிகிறது. காணாமல் ஆக்கப்பட்ட தமது பிள்ளைகளை கண்டுபிடித்து தருவதற்கு இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தங்களை கொடுக்கவே இதுபோன்ற போராட்டங்களை தமது சங்கத்தில் உள்ளவர்கள் மேற்கொள்வதாக லீலாதேசி கூறினார்.

தற்போது நடைபெற்று வரும் ஜெனீவா அமர்வுகளில் தான் கலந்து கொள்ளாதிருப்பதற்கு விடுக்கப்பட்ட அச்சுறுத்தலாகவே அதிகாரிகளின் விசாரணையை நடவடிக்கையை கருதுவதாக லீலாதேசி ஆனந்த நடராஜா மேலும் தெரிவித்தார்.

 

குறிப்பாக 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி முதல் தொடர்ச்சியாக வடக்கு, கிழக்கு பகுதிகளில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சூழற்சி முறையிலான இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

இந்த போராட்டம் தொடங்கப்பட்டு, இன்றுடன் 1,468 நாட்கள் கடந்துள்ளது. இவ்வாறான நிலையில், ஜெனீவாவில் மனித உரிமை பேரவையின் இந்த ஆண்டுக்கான கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகிறன்றமையும் குறிப்பிடத்தக்கது.

தரம் 1 வகுப்புக்கான புதிய மாணவர்களை இணைக்கும் தொகை வட-கிழக்கில் பயங்கர வீழ்ச்சி.

இந்த வருடம் பாடசாலைகளுக்கு தரம் 1 மாணவர்களுக்கான அனுமதியில் வடக்கு-கிழக்கில் இணைக்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கையில் முன்னைய ஆண்டுகளைக்காட்டிலும் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது அபாயகரமானது என எச்சரிக்கை விடுத்துள்ளார் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சரா.புவனேஸ்வரன்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட ஊடக அறிக்கை வருமாறு,

கடந்த காலங்களோடு ஒப்பிடுகையில் 2021ஆம் ஆண்டு வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முதலாம் தரத்துக்கு இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரக்கணக்கால் குறைவடைந்துள்ளது. இந்நிலைமை அபாயகரமானது.

உலக மக்கள் தொகை வருடம்தோறும் அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறைவடைவதில்லை. இலங்கையிலும் அதே நிலைதான்.

ஆனால் தமிழர் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இம்முறை மாணவர் தொகை குறைவடைந்துள்ளமை கவலையான விடயம் என்பதற்கு அப்பால் அபாயகரமானது.

நாட்டில் நடைபெற்ற யுத்தம் நான்கு தசாப்தங்களைக் கடந்தது. அந்தக்காலங்களில்கூட பாடசாலைக்கு முதலாம்தரத்தில் இணைந்த மாணவர்களின் எண்ணிக்கை வருடம்தோறும் அதிகரித்தே சென்றது.

ஆனால் இம்முறை வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயிரக்கணக்கில் மாணவர் எண்ணிக்கை குறைவடைந்தமை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதற்கான காரணங்களில் பிறப்பு வீதம் குறைவடைந்தது என தனியாகக் கூறிவிட முடியாது. நாட்டின் பொருளாதார நிலை மிகவும் முக்கியமானது.

இதைவிட கிராமப்புறங்களில் உள்ள மக்கள் பெருமளவானோர் நகர்ப் புறத்தை நோக்கி நகர்ந்துள்ளனர். அதற்கு தொழில் வாய்ப்பு ஒரு காரணம் என்பதற்கு அப்பால் பாரம்பரிய தொழில்கள் பல அழிவடைந்துள்ளன. இதனால் வருமானமின்றி பிள்ளைகளை வளர்க்க முடியாத அளவுக்கு பலர்தள்ளப்பட்டுள்ளனர். அரச சேவையில் உள்ள பலர் வங்கிகளில் பெருமளவு பணம் கடனாகப்பெற்று வாழ்க்கை நடத்துகின்றனர் என்றார்.

“ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்” – சுவிட்ஸர்லாந்து இலங்கையிடம் வேண்டுகோள் !

“ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் பரிந்துரையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்த வேண்டும்” என சுவிட்ஸர்லாந்து இலங்கையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

மேலும் முன்னைய தீர்மானங்களின் உள்ளடக்கங்களையும் நடைமுறைப்படுத்துமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மனித உரிமை பேரவை இலங்கையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்காக மேலதிக நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் எனவும் சுவிட்ஸர்லாந்து வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் தீர்மானத்திலிருந்து விலகுவது குறித்து இலங்கை அறிவித்தவேளை தேசிய அளவில் உருவாக்கப்பட்ட நல்லிணக்க மற்றும் பொறுப்புக்கூறல் நடைமுறையை தொடரவுள்ளதாக இலங்கை தெரிவித்திருந்தது.

எனினும் இந்த அறிக்கையில் உள்ளுர் முயற்சிகள் எவையும் பலன்களை அளிக்கவில்லை, தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்படுவது தொடர்கின்றது.

இதன் காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் அமைப்பின மீதான நம்பிக்கை மேலும் குறைவடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளது.

இராணுவ வாகனத்தில் ஹெரோயின் கடத்திய இராணுவ சிப்பாய் கைது! 

இராணுவ வாகனமொன்றில் 45 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற போது ஹொரன பிரதேசத்தில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இராணுவ சிப்பாய் மற்றும் இராணுவத்திலிருந்து விலகிச் சென்ற சிப்பாய் ஆகியோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அவசியமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

கொழும்பில் இராணுவத்தின் நிர்வாக நோக்கங்களுக்காக குத்தகை அடிப்படையில் பயன்படுத்தப்படும் இந்த வாகனம் தம்புளை இயந்திரவியல் காலாட்படை பிரிவுக்கு சொந்தமானது என்பதுடன் நிரந்தர வாகன ஓட்டுனர் விடுமுறையில் சென்றிருந்தமையால் அவருக்கு மாறாக நியமிக்கப்பட்ட சாரதியால் இந்த வாகனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவல் கிடைத்தவுடன், பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும், இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா, மேற்படி இராணுவ சிப்பாய் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன் சட்ட விதிகளின் படி அவருக்கு எடுக்ககூடிய அதிகபட்ச நடவடிக்கைகளை எடுக்குமாறு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகளுக்கும் இராணுவ பொலிஸ் பிரிவின் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.

“இலங்கை தமிழ்மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை நிறைவேற்று இலங்கையின் நலன்களிற்கு உகந்த விடயம்” – ஜெனீவா கூட்டத்தொடரில் இந்தியா!

“இலங்கை தமிழர்களின் உரிமைகளை மதிக்கப்பட வேண்டும்” என இந்தியா ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் 46 வது அமர்வில் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை தொடர்பான கலந்துரையாடலில் கருத்து தெரிவிக்கையில் இந்தியா இதனை தெரிவித்துள்ளது.

ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை தொடர்பான அறிக்கையை கருத்தில் எடுத்துள்ளதாக ஜெனீவாவிற்கான இந்தியாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி மனிபான்டே தெரிவித்துள்ளார்.

இலங்கையின் மூன்று தசாப்தகால மோதல் முடிவிற்கு வந்த பின்னர் ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கையில் மனித உரிமைகள் தொடர்பில் ஏழு தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா இந்த தீர்மானங்கள் தொடர்பிலான கலந்துரையாடல்களில் ஆர்வமாக பங்கெடுத்துள்ளது இந்தியா தொடர்ந்தும் இலங்கையின் நண்பராகவும் நெருங்கிய அயல்நாடாகவும் காணப்படுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தொடர்ச்சியான நிலைப்பாடு இரண்டு விடயங்களை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ள அவர் ஒன்று இலங்கையின் ஐக்கியம் மற்றும் ஆள்புல ஒருமைப்பாட்டை ஆதரிப்பது மற்றையது தமிழ் மக்களின் நீதி சமத்துவம் கௌரவம் சமாதானம் ஆகியவற்றிற்கான அபிலாசைகளின் மீதான நிலையான அர்ப்பணிப்பு என குறிப்பிட்டள்ளார்.

அர்த்தபூர்வமான அதிகாரப்பகிர்வு மூலம் தமிழ் மக்களின் உரிமைகளை மதிப்பது இலங்கையின் ஐக்கியத்திற்கும் ஒருமைப்பாட்டிற்கும் நேரடியாக பங்களிப்பு செய்யும் என நாங்கள் கருதுகின்றோம் என குறிப்பிட்டுள்ள இந்திய பிரதிநிதி இதன் காரணமாக தமிழ்மக்களின் நியாயபூர்வமான அபிலாசைகளை நிறைவேற்று இலங்கையின் நலன்களிற்கு உகந்த விடயம் என நாங்கள் தெரிவிக்க விரும்புகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு நல்லிணக்கம் மற்றும் 13வது திருத்தத்தினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதன் மூலம் இலங்கை அவசியமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கையில் 12 வருடங்கள் முடிந்த பின்னர் காணப்படும் நிலை குறித்த மனித உரிமை ஆணையாளரின் மதிப்பீடுகள் மிகவும் முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்சலட் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரிக்கின்றது” – ஜெனீவா கலந்துரையாடலில் தினேஸ் குணவணவர்த்தன !

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்சலட் இலங்கையின் மனித உரிமைகள் தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையை இலங்கை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.

அத்தோடு, நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தமது மக்களின் வாழ்க்கை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நியாயமான நடவடிக்கைகளுடன், சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய அட்டூழியங்களை சமன் செய்வதாகத் தோன்றும் உண்மைத் தவறுகளால் நிறைந்திருக்கின்றன எனவும் இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் சுவிட்சர்லாந்தின் ஜெனீவா நகரில் இடம்பெற்று வருகிறது.

இலங்கை தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளதுடன், குறித்த அறிக்கையை நேற்று இரவு இடம்பெற்ற அமர்வில் சமர்ப்பித்தார்.

இதனையடுத்து, ‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ தொடர்பான அறிக்கை மீதான ஊடாடும் உரையாடலில், காணொளி மூலம் உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன, குறித்த அறிக்கையை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்தார்.

மேலும் உரிய நீதிமன்றத்தினால் அல்லது வேறு பொறிமுறையினூடாக உறுதிப்படுத்தப்பட்ட நம்பத்தகுந்த ஆதாரங்கள் இன்றி சிலரை இலக்கு வைத்து தடை விதிப்பதற்கும், பயணத் தடை விதிப்பதற்கும் யோசனை முன்வைத்துள்ளமை இறைமையுள்ள நாடொன்றுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அரசியல் நிகழ்ச்சி நிரல் என என அவர் இதன்போது தெரிவித்தார்.

அது நாட்டின் உரிமையை மீறும் செயல் என்பதுடன், இறையாண்மைக்கான அடிப்படை விடயங்களை மீறும் செயற்பாடு எனவும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையின் அமைதி காக்கும் படையின் செயற்பாடுகளை மீண்டும் மீளாய்வு செய்ய வேண்டும் என மனித உரிமை ஆணையாளர் முன்வைக்கும் யோசனையை நிராகரித்துள்ள அவர், தொழில் ரீதியாக செயற்படும் இறைமையுள்ள ஒரு நாட்டின் இராணுவம் மீது சுமத்தப்படும் அழுத்தம், ஐக்கிய நாடுகளின் கொள்கைகளை மீறுவதாகவும் தெரிவித்தார்.

20ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்தினூடாக நீதிமன்றத்தின் கட்டுப்பாடு மற்றும் சமநிலைக்கு அழுத்தம் ஏற்படுவதாக மிச்சேல் பச்சலட் தனது அறிக்கையில் சுமத்தும் குற்றச்சாட்டையும் இலங்கை அரசாங்கம் முழுமையாக நிராகரிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வேறு நாடுகளின் அழுத்தம் காரணமாக இலங்கை போன்ற ஒரு தனி நாட்டை, எவ்வித சாட்சியங்களும் இன்றி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு மேற்கொள்ளும் முயற்சி மிகவும் அபாயகரமானது என்பதால் இது குறித்து ஏனைய நாடுகளும் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

அறிக்கையின் உள்ளடக்கங்கள், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தமது மக்களின் வாழ்க்கை உரிமை ஆகியவற்றைப் பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நியாயமான நடவடிக்கைகளுடன், சர்வதேச அளவில் தடைசெய்யப்பட்ட ஒரு பயங்கரவாத அமைப்பான தமிழீழ விடுதலைப் புலிகள் நடாத்திய அட்டூழியங்களை சமன் செய்வதாகத் தோன்றும் உண்மைத் தவறுகளால் நிறைந்திருக்கின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த சபை மற்றும் அனைத்து ஐக்கிய நாடுகள் அமைப்புக்களுடனான தமது தொடர்ச்சியான ஒத்துழைப்பு மற்றும் ஈடுபாடுகள் இருந்தபோதிலும் வெளிப்புறமாக இயக்கப்படும் சக்திகளை தொடர்ந்தும் வலியுறுத்துவதானது பல சவால்களை ஏற்படுத்துவதாக அமைவதுடன், இதுபோன்ற செயன்முறைகள் ஐக்கிய நாடுகளின் அனைத்து உறுப்பு நாடுகளையும் பாதிக்கும் ஆபத்தான முன்னுதாரணத்தையும் அமைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அரசியல் உந்துதல்களால் உந்தப்பட்டு, இந்த சபையால் இலங்கை மீது செலுத்தப்பட்டுள்ள கவனத்திற்காக தாங்கள் வருந்துவதாக தெரிவித்த தினேஸ் குணவர்த்தன,  இந்த அறிக்கையை அடிப்படையாகக்கொண்ட எந்தவொரு தீர்மானமும் சபையால் நிராகரிக்கப்பட்டு மூடப்பட வேண்டும் என இலங்கை இந்த சபை உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது எனவும் அவர் குறிப்பிட்டார்.

“வடக்கின் தீவுகளை சீனாவுக்கு வழங்கும் இறுதிதீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை”- அரசாங்கம் 

வடக்கில் உள்ள மூன்று தீவுகளில் நிர்மாணிக்க தீர்மானித்துள்ள மின் உற்பத்தி திட்டத்தை இந்தியாவிற்கோ அல்லது சீனாவிற்கோ வழங்குவது குறித்து இறுதித் தீர்மானம் எதனையும் எடுக்கவில்லையென அரசாங்கம் அறிவித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்ற வாய்மூல வினாக்கான நேரத்தில் வடக்கின் நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு ஆகியவற்றில் புதிதாக நிர்மாணிக்கும் காற்றாலை மற்றும் சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டம் குறித்து எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜயசிறி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்து உரையாற்றும்போதே மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் டலஸ் அழகபெரும இதனைத் தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “வடக்கின் மூன்று தீவுகள் சீனாவிற்கு குத்தகைக்கு கொடுக்கப்பட தீர்மானித்துள்ளதாக கூறப்படுகின்றது. இது தவறான கருத்தாகும்.

அதேபோல் இந்த மூன்று தீவுகளுக்குமான மின்சாரம் இன்றும் டீசல் மற்றும் ஜெனரேட்டர் மூலமாகவே பெற்றுக்கொள்ளப்படுகின்றன.

எனவே இப்பகுதி மக்கள் மிகவும் கஷ்டப்பட்ட வாழ்கையை வாழ்ந்து வருகின்றனர். இதனை தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் ஏற்றுக்கொள்வார்கள் என நினைக்கிறேன். எனவே மின்சாரத்தை பெற்றுக்கொடுக்க வேண்டியது தேசிய தேவையாகும்.

மேலும் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் இது குறித்து சர்வதேச விலைமனுக்கோரலுக்கு விடப்பட்டது.

இது இலங்கையின் முதலாவது கலப்பு விலைமனுக்கோரலாகும். காற்று மற்றும் சூரிய சக்தியினால் மின்சாரத்தை உருவாக்கும் முதலாவது வேலைதிட்டமாகவே இது அமைந்தது.

எனவே, இதற்கான வேலைத்திட்டத்தை முன்னெடுக்க சர்வதேச விலைமனுக்கோரல் விடப்பட்ட வேளையில், அதற்காக முன்வந்த தரப்பினர் பலவீனமானவர்களாக இருந்தனர்.

எனவே 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இரண்டாவது விலைமனுக்கோரலை அறிவித்தனர். இதற்கு நான்கு நிறுவனங்கள் முன்வந்தனர். இந்த நான்கு நிறுவனங்களில் ஒன்று சீனாவினதும் மற்றயது இந்திய நிறுவனமாகவும் இருந்தது.

இந்த விலைமனுக்கோரலில் இந்திய நிறுவனம் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் அடிப்படையில் இந்த வேலைத்திட்டத்தை பெற்றுக்கொண்டது.

எனவே இந்த விலைமனுக்கோரலில் எந்த தவறும் இல்லை. ஆனால் அமைச்சரவையில் இந்த திட்டம் இன்னமும் அங்கீகரிக்கப்படவில்லை.

ஏனென்றால் திறைசேரி ஏற்கனவே இந்த திட்டத்தை எவ்வாறு கையாளப்போகின்றது என்ற தொழில்நுட்ப ரீதியிலான தகவல்களை முன்வைக்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்தியா இந்த திட்டத்திற்காக நிதி உதவியொன்றை செய்யவும் ஆர்வமாக உள்ளதாக இந்திய உயர் ஸ்தானிகர் எமக்கு அறிவித்தார்.

இந்த விடயத்தில் இப்போது வரையில் எந்தவித இறுதித் தீர்மானமும் எடுக்கவில்லை. எவருக்கும் அங்கீகாரம் கொடுக்கவும் இல்லை. எனவே இதில் எந்தவொரு நாட்டின் தலையீடுகளோ அல்லது, இராஜதந்திர நகர்வுகளோ இல்லை.

இலங்கையின் தேசிய வளங்களை வேறு எந்தவொரு நாட்டுக்கும் கொடுக்கும் நோக்கமும் எமக்கு இல்லை.

எமது நாட்டின் தேசிய கொள்கையை உலகின் எந்தவொரு பலமான நாட்டின் கொள்கைத்திட்டத்திற்கும் அடிபணிந்து தீர்மானம் எடுக்க மாட்டோம் என்பது தெளிவாக தெரிவித்துக்கொள்கிறோம்” என மேலும் தெரிவித்தார்.

“கண்டி எசல பெரஹெராவில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொள்வதே ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் பிரதான திட்டமாக இருந்தது” – ஜனாதிபதி ஆணைக்குழு

“கண்டி எசல பெரஹெராவில் தற்கொலை குண்டுத் தாக்குதலை மேற்கொள்வதே ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாஷிமின் பிரதான திட்டமாக இருந்தது” என ஜனாதிபதி ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஈஸ்டர் தாக்குதல் குறித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை நேற்று (24.02.2021) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

குறித்த அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

உள்நாட்டுப் போர் முடிவடைந்த பின்னர், மிகப் பெரிய அளவிலான வெடிபொருள் 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 16ஆம் திகதி புத்தளம் – வண்ணாத்தவில்லு பகுதியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் 2019 ஏப்ரல் 4ஆம் திகதி சஹ்ரான் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் பெயர்கள் உள்ளிட்ட தாக்குதல் பற்றிய தகவல்களை இந்திய அதிகாரிகள் புலனாய்வு சேவைகளுக்கு வழங்கியிருந்தாலும் பாதுகாப்பு செயலாளர், தேசிய புலனாய்வுத் தலைவர், பொலிஸ்மா அதிபர், புலனாய்வு பணிப்பாளரும் தங்கள் கடமைகளை நிறைவேற்றத் தவறிவிட்டதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எனினும் இந்த தாக்குதலை தடுக்க சட்ட அமுலாக்க அதிகாரிகள் தவறிவிட்டனர் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேநேரம், ஏப்ரல் 20ஆம் திகதி சஹ்ரான் மற்றும் ஏழு தற்கொலை குண்டுதாரிகள் ஈஸ்டர் தாக்குதலை நியாயப்படுத்தும் உறுதிமொழியை எடுத்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மாவனெல்லயில் புத்தர் சிலைகளை இடித்த சம்பவத்தின் முக்கிய சந்தேகநபர்களான ஷாஹீத் மற்றும் சாதிக் ஆகியோர், க.பொ.த. சாதாரண தர தேர்வுக்கு தோற்றவிருந்த 30 மாணவர்களுக்கு பயிற்சி முகாம் ஒன்றை நடத்தியதாக ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.