உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“இலங்கை கிரிக்கெட் அணியில் இதுவரை தமிழ் வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படாமைக்கு அரசியல் காரணமல்ல.அவர்களிடம்  திறமையின்மையே காரணம்” – முத்தையா முரளிதரன்

“இலங்கை கிரிக்கெட் அணியில் இதுவரை தமிழ் வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படாமைக்கு அரசியல் காரணமல்ல.அவர்களிடம்  திறமையின்மையே காரணம்” என முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பு தனியார் ஊடகமொன்றிற்கு செய்தி வழங்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளதாக குறித்த செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

அதில் மேலும் கருத்து தெரிவித்துள்ள முத்தையா முரளிதரன்,

“வடக்கு, கிழக்கில் பெரும்பான்மையாக தமிழர்களே உள்ளனர். யுத்தம் காரணமாக 30 வருடங்களாக அங்கு கிரிக்கெட் விளையாடப்படவில்லை. யுத்தத்திற்கு முதல் பலர் விளையாடியிருப்பார்கள் எனினும் அப்போது இலங்கை டெஸ்ட் அந்தஸ்தை பெற்றிருக்காததால் அவர்களிற்கு வாய்ப்பு கிடைக்காமலிருந்திருக்கலாம்,

அத்துடன் 30 வருடங்களின் பின் விளையாடும்போது அவர்களின் திறமை கொஞ்சம் குறைவாகத்தான் இருந்தது. பயிற்சி, வசதிகள் அங்கு குறைவாக இருந்தது. வீரர்கள் திறமையை காட்டினாலும், நாட்டின் தெற்கு, மத்திய பகுதி வீரர்களை விட குறைவாக இருந்தமையினாலேயே அவர்களிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை என்றும் இலங்கை கிரிக்கெட் அணியில் இதுவரை வடக்கு கிழக்கை சேர்ந்த வீரர்கள் இணைத்துக் கொள்ளப்படாமைக்கு அரசியல் காரணங்கள் கிடையாது என்றுமுரளிதரன் தெரிவித்ததாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தும் படி கருத்து வெளியிட்டுள்ள சரத்பொன்செகாவின் கருத்துக்களை கண்டிக்கின்றோம்” – வீ.இராதாகிருஷ்ணன்

“தமிழ் மக்களின் மனங்களை புண்படுத்தும் படி கருத்து வெளியிட்டுள்ள சரத்பொன்செகாவின் கருத்துக்களை கண்டிக்கின்றோம்” –  என மலையக மக்கள் முன்னணியின் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான வீ.இராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

அத்துடன், மஹர சிறைச்சாலை சம்பவத்தின் தாக்கம் ஜெனிவா மனித உரிமைகள் மாநாட்டில் எதிரொலிக்கும் என்பதால் அரசாங்கம் அதற்கு பொறுப்புகூறியாகவேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.

தலவாக்கலையில் இன்று (06.12.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

குறித்த ஊடக சந்திப்பில் அவர் மேலும் கூறியதாவது,

” தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜனநாயக முறைப்படியே பாராளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளனர். மக்கள் சார்பில் பாராளுமன்றத்தில் கருத்துகளை கூறுவதற்கும்,உணர்வுகளை வெளிப்படுத்துவதற்குமான உரிமை அவர்களுக்கு இருக்கின்றது. தடை செய்யப்பட்ட ஓர் அமைப்பு தொடர்பில் அல்லாமல் ஏனைய விடயங்களை பேசுவதற்கான அனுமதி அவர்களுக்கு இருக்கின்றது.

தற்போதைய நாடாளுமன்றத்தில் துவேசம் கக்கும் உறுப்பினர்களே அதிகம் இருக்கின்றனர். அவ்வாறு துவேசம் பேசும் ஒரு அமைச்சர்தான் கூட்டமைப்பினரை தடைசெய்யவேண்டும் என சொல்கின்றார்.

அவருக்கு அதற்கான அதிகாரம் கிடையாது. மக்கள் நினைத்தால் மட்டுமே அதனை செய்யமுடியும். அவரின் கருத்தை நாம் கண்டிக்கின்றோம். சரத் பொன்சேகாவும் தமிழ் மக்களின் மனம் புண்படும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார். அதனையும் கண்டிக்கின்றோம்.

பிள்ளையானை விடுதலைசெய்தது எமக்கு பிரச்சினை இல்லை. அவ்வாறு தமிழ் கைதிகளும் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதே எமது கோரிக்கை. அப்போதுதான் ஒரே நாடு, ஒரே சட்டம் என்பது நடைமுறை சாத்தியமாகும். மஹர சிறைச்சாலையில் கைதிகள் தாக்கப்பட்டுள்ளனர், கொல்லப்பட்டுள்ளனர். இதற்கு அரசாங்கம் பொறுப்புக்கூறவேண்டும். இச்சம்பவத்தின் தாக்கம் ஜெனிவா மனித உரிமை மாநாட்டிலும் எதிரொலிக்கும்.

இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு அச்சுறுத்தலான சூழ்நிலையே தொடர்ந்தது. தற்போது அது அதிகரித்துள்ளது.” -என்றார்.

“தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த பின்னரே பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்தார்கள்” – அமைச்சர் சரத் வீரசேகர பேட்டி !

“தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த பின்னரே பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்தார்கள்” என அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

வார இதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அந்த பேட்டியில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கேள்வி – தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் வெளிநாடுகளின் தலைவர்களின் பின்னால் சென்று ஜெனீவாவில் உள்நாட்டு விவகாரங்களை விவாதிப்பதற்கு பதில் ஏன் அவர்கள் அரசாங்கத்துடன் தங்கள் சமூகத்தின் பிரச்சினைகளை விவாதிக்க கூடாது ? எனக்கேட்கப்பட்ட கேள்விக்கு  அமைச்சர் பதில் கூறும்போது  “அது தவறு,அவர்கள் நாட்டின் பிரதேச ஒருமைப்பாட்டிற்காக சத்தியப்பிரமாணம் செய்துள்ளனர். இலங்கையில் சமஸ்டியை அறிமுகப்படுத்துவது குறித்து அவர்கள் வேறு நாட்டுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொள்வார்கள் என்றால் அது அவர்கள் மேற்கொண்ட சத்திய பிரமாணத்திற்கு முற்றிலும் விரோதமானது” எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பதிலளித்த அவர், “முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தவறிழைத்துவிட்டார் என நான் கருதுகின்றேன், அவர் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து அனுதாபமுள்ளவராகயிருந்துள்ளார். ஹிட்லர் தோற்கடிக்கப்பட்டவேளை நாஜி அரசியல் கட்சி முற்றாக அழிக்கப்பட்டது,போல் பொட் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரர் கெமரூஜ் கட்சி காணாமல் போய்விட்டது.சதாம் ஹுசைன் கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது பாத்கட்சி அழிக்கப்பட்டது, ஹொஸ்னி முபாராக் ஆட்சியிலிருந்து அகற்றப்பட்டதை தொடர்ந்து அவரது தேசிய ஜனநாயக கட்சி தடைசெய்யப்பட்டது அது போல இங்கும் நடைபெற்றிருக்க வேண்டும் எனக்கூறிய அமைச்சர் அவ்வேளை ஜனாதிபதியாகயிருந்த மகிந்த ராஜபக்சவின் தவறு அது,அவர் தமிழ் அரசியல்வாதிகள் குறித்து அனுதாபம் கொண்டிருந்தார்,அவர் அவர்களை மன்னித்தார்,தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு அதனை சாதகமாக பயன்படுத்துகின்றது,என அவர் தெரிவித்துள்ளார்.

கடந்தகாலங்களில் தமிழ்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் விடுதலைப்புலிகளின் தலைவரின் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்த பின்னரே பாராளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்தார்கள் எனவும் குறித்த பேட்டியில் தெரிவித்த அவர் “விடுதலைப்புலிகளின் பிடியிலிருந்தவர்கள் உட்பட எங்கள் படையினரை கொலை செய்த பண்டிதரின் வீட்டிற்கு சென்று சுமந்திரன் மாவீரர் தினத்தை அனுஸ்டிக்கின்றார் அவருக்கு புகழாரம் சூட்டுகின்றார்” எனவும் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

தனது பாதுகாப்பிற்கு அளிக்கப்பட்ட விசேட அதிரடிப்படையினரை தனது வீட்டின் வெளியே வைத்துக்கொண்டே எங்கள் பாதுகாப்பு படையினரின் கொலையாளிக்கு அஞ்சலி செலுத்தும் தைரியம் சுமந்திரனுக்கு உள்ளது எனவும் பேட்டியில் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் அவர் நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு தனது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குறித்து பேசுகின்றார் எனவும் சிங்களவர்களிற்கு எதிரான வெறுப்புணர்வை வெளிப்படுத்தும் உரைகளை நிகழ்த்தும் தமிழ் அரசியல்வாதிகள் பாராளுமன்றத்திற்கு வருவதை தடை செய்யவேண்டும் எனவும் அமைச்சர் சரத்வீரசேகர தெரிவித்துள்ளார்.

வெள்ளக்காடான யாழ்ப்பாணம் – மக்களின் சமூக அக்கறையற்ற தன்மையே நிலைமைக்கு காரணம்” – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்

யாழ். மாவட்ட மக்கள் சமூக அக்கறையோடு செயற்படும்போது வெள்ள நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது ஏற்பட்டுள்ள அனர்த்த நிலை தொடர்பாக ஆராயும் விசேட கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை)  மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

யாழ்.மாவட்டத்தில் ஊடரங்கு சட்டம் தளர்த்தப்பட்டாலும் தேசிய அடையாள அட்டை  இலங்கத்தின் அடிப்படையிலேயே மக்கள் வெளிச்செல்ல முடியும் ...

குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இதனைத் தெரிவித்திருந்தார். இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “நீர் வடிந்து ஓடாத நிலைமை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்படுகின்றது. இதற்கு உள்ளூராட்சி சபை முயற்சி எடுத்தும் அதற்கு பொதுமக்களின் ஒத்துழைப்பின்மை காரணமாக மக்களின் சமூக அக்கறையற்ற செயற்பாடு காரணமாக இந்நிலைமை ஏற்பட்டிருப்பது இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொதுமக்கள் உள்ளூர் அதிகார சபையினருக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும். கழிவுப்பொருட்களை வீசுதல், வடிகால்களை மூடுதல், அல்லது தேவையற்ற பொருட்களை பொது இடங்களில் வீசுதல் போன்ற செயற்பாட்டை மேற்கொள்ளும் காரணத்தினாலும் வடிகால்களை சட்டவிரோதமாக தடுப்பதும் வெள்ள நீர் தேங்கும் அவல நிலை ஏற்பட காரணமாகிறது.

இந்த விடயத்தில் யாழ். மாநகர சபை மற்றும் மாநகர உத்தியோகத்தர்கள் இடர் ஏற்பட்ட பகுதிகளில் அதனை செயற்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.

எதிர்காலத்தில் உடனடியாக சீர் செய்ய வேண்டியவற்றை உடனடியாகவும் ஏனையவற்றை அதனை உரியவாறு செயற்படுத்துவதற்கு உரிய தகவலைப் பெற்று அதனை செயற்படுத்துவதற்கு உள்ளோம்” எனவும் தெரிவித்தார்.

“தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்” – ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள், நிதி அமைச்சர் அலி சப்ரியிடம் கூட்டாகக் கோரிக்கை !

நீண்டகாலம் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையைத் துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள், நிதி அமைச்சர் அலி சப்ரியிடம் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பான மகஜர் ஒன்றை நேற்றைய தினம் (05.12.2020), அமைச்சரிடம்  அவர்கள் கையளித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு அரசில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும்  உறுப்பினர்கள் கூட்டாகக் கோரிக்கை - No.1 Tamil website in the world | Tamil  News ...

குறித்த மகஜரை,  பாராளுமன்ற குழுக்களின் பிரதித்தவிசாளர் அங்கஜன் இராமநாதன், இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்,  பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான் மற்றும் மருதபாண்டி இராமேஸ்வரன் ஆகியோரே நிதி அமைச்சரிடம் கையளித்துள்ளனர்.

தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிறுபான்மை உறுப்பினர்கள் அனைவரும் இணைந்து, ஜனாதிபதியுடன் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்தால், சட்டமா அதிபர் உள்ளிட்ட தரப்பினரையும் அழைத்து இதுபற்றிக் கலந்துரையாட முடியும் என்றும் நீதி அமைச்சர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அரசியல் கைதிகள் விடயத்தில் கொள்கை ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்டால் இது தொடர்பில் துரித நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் அமைச்சர் இங்கு குறிப்பிட்டிருந்தார்.

அது மாத்திரமன்றி புதிய அரசியலமைப்புத் தயாரிப்பு விடயத்தில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்களின் நிலைப்பாடுகளும் உள்வாங்கப்பட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், இது தொடர்பில் எழுத்துமூலமான யோசனைகளை முன்வைக்குமாறு அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

கைதிகள் விடுதலை மாத்திரமன்றி சிறுபான்மை மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் தமிழ் பேசும் உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து, ஜனாதிபதியிடம் எடுத்துச் செல்வதற்கு நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்தார்.

“ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் பாரபட்சம் பார்க்காது தண்டிக்கப்படுவர்”  – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

“ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புடைய அனைவரும் பாரபட்சம் பார்க்காது தண்டிக்கப்படுவர்”  என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.

நேற்று (05.12.2020) பாராளுமன்றில், நிரோஷன் பெர்ணான்டோவின் உரைக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

நாமல் ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது,

“ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக எதிரணியினருக்கு தற்போது இருக்கும் அக்கறை , அன்றே இருந்திருந்தால் இத்தனை உயிரிழப்புக்கள் ஏற்பட்டிருக்காது. எதிரணியை சேர்ந்தவர்கள் தான் கொழும்பு பேராயரை வெளிப்படையாகவே விமர்சித்தார்கள். இதனை எதிரணியினர் புரிந்துக் கொள்ள வேண்டும்.

எமது அரசாங்கம் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகளை எந்தவொரு பக்கச்சார்பும் இன்றி தற்போது நடத்திக் கொண்டுதான் இருக்கிறது. இதனுடன் தொடர்புடைய அனைவரும் எந்தவொரு வேறுபாடும் இன்று தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள். இது எமது பொறுப்பாகும். இதற்கு எதிரணியினரும் ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்.

பேராயரை விமர்சித்தவர்களை கூட, எதிரணியினர் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றுக்கு கொண்டுவந்துள்ளார்கள். நாம் அவ்வாறு செயற்படவில்லை. எனவே, இந்த விடயத்தில் எமது அரசாங்கத்தை சந்தேகம் கொள்ள வேண்டாம் என நாம் கேட்டுக் கொள்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

வாழ்விட காணிகளை வழங்குமாறு கோரிய மக்கள் போராட்டம் ! மக்கள் கட்டியிருந்த பதாகையை பிடுங்கி எறிந்து பொலிஸார் மிரட்டல் !

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட புதுக்குடியிருப்பு மேற்கு கிராம அலுவலர் பிரிவின் வேணாவில் கிராமத்தில் காணி கோரி வீதிக்கு வந்த மக்கள் கொட்டில்கள் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 16 பேர் தமக்கு உறவினர்களின் காணிகளில் தொடர்ந்தும் வாழ வழியின்றி தமக்கான காணிகள் வழங்க கோரி வீதிக்கு வந்து வீதியோரத்தில் அரச காணி ஒன்றில் 16 பேரும் தனித்தனி கொட்டில்களை போட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக தமக்கான வாழ்விட காணிகளை வழங்குமாறு கோரி புதுக்குடியிருப்பு பிரதேச காணிக்கிளை பிரதேச செயலாளர் உள்ளிட்ட பலரிடம் தமது கோரிக்கைகளை முன் வைத்தும் எந்தவிதமான தீர்வுகளும் கிடைக்காத நிலையில் தமது கிராமத்தில் உள்ள அரச காணி ஒன்றில் வீதியோரத்தில் கொட்டில்களை அமைத்து காணி கோரி போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.
புதுக்குடியிருப்பு வேணாவில் கிராமத்தில் காணி கோரி மக்கள் போராட்டம் - தமிழ்க் குரல்
சிறிய குழந்தைகளுடன் வீதிக்கு வந்த இவர்கள் பல்வேறு துன்பங்களை சந்தித்து வருகின்றனர். சம்பவ இடத்துக்கு வருகை தந்த புதுக்குடியிருப்பு பொலிஸார் குறித்த குடும்பங்களை போராட்டம் செய்ய முடியாது என கொரோனாவை காரணம் காட்டி குறித்த இடத்தை விட்டு செல்லுமாறும் வரும் திங்கள்கிழமை பிரதேச செயலகத்துக்கு தங்களை அழைத்து சென்று பிரதேச செயலாளருடன் கலந்துரையாடி தீர்வை பெற்றுத்தருவதாகவும் இவர்களை கலைந்து செல்லுமாறும் கோரினர்.

இருப்பினும் குறித்த மக்கள் பிரதேச செயலாளர் வருகை தந்து தமக்கான உத்தரவாதம் வழங்க வேண்டுமென தொடர்ந்தும் போராடி வந்தனர். இந்நிலையில் உறவுகள் தமது போராட்டத்தை அடையாளப்படுத்தும் முகமாக குறித்த இடத்தில் பதாகை ஒன்றை காட்சிப்படுத்தினர்.

இதன் பின்னர் உறவுகள் தமக்கான மத்திய உணவை தயாரித்து வைத்திருந்த நிலையில் மீளவும் குறித்த இடத்துக்கு வந்த புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்டவர்கள் மக்கள் கட்டியிருந்த பதாகையை பிடுங்கி எறிந்து கொரோனாவை காரணம் காட்டி மக்களை அச்சுறுத்தியதோடு நீதிமன்றில் வழக்கு தொடர்வதாகவும் மிரட்டி குறித்த இடத்தில் வருகை தந்திருந்த கிராம அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளையும் பொலிஸ் நிலையம் வருகை தந்து வாக்குமூலம் தருமாறு குறித்த இடத்தில் இருந்த இளைஞர்கள் சிலரை கைது செய்வதாகவும் மிரட்டினர்.
புதுக்குடியிருப்பு வேணாவில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களை அச்சுறுத்திய காவல்துறை அதிகாரிகள் ! - தமிழ்க் குரல்
இதன்போது குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மற்ற இடங்களில் கொரோனா தொடர்பில் கண்டு கொள்ளாத பொலிசாருக்கு எமது போராட்ட இடத்தில் மட்டுமா கொரோனா வரும் எனவும், காணி வீடு இல்லாமல் இருப்பதை விட இதிலேயே கொரோனா வந்து சாகிறோம் என பொலிஸாருக்கு தெரிவித்தனர். நிலைமைகளை பிரதேச செயலாளருக்கு தெரிவித்ததன் அடிப்படையில் அவர் சம்பவ இடத்துக்கு வருகை தருவதாக உறுதியளித்துள்ளார். இந்நிலையில் உறவுகள் வீதியோரத்தில் இருந்து உணவருந்துவதோடு தொடர்ந்தும் போராடி வருகின்றனர்.

“கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் ஆதரித்தார்கள் என்பதற்காக அதை விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சி என்று எவரும் அழைக்க முடியாது” – இரா.சம்பந்தன் சரத்வீரசேகரவுக்கு பதில் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தொடர்ந்தும் தமிழீழ விடுதலைப்புலிகளை மீளுருவாக்கம் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டால் கட்சியைத் தடை செய்தே தீருவோம்’ என்று பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இது தொடர்பில் கூட்டமைப்பின் அங்கததவர்கள் பலரும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டு வரும் நிலையில் அக்கட்சியின் தலைவர் சம்பந்தன் இது தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது ,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சியாகச் செயற்பட்டதில்லை. கூட்டமைப்பை விடுதலைப்புலிகள் ஆதரித்தார்கள் என்பதற்காக அதை விடுதலைப்புலிகளின் அரசியல் கட்சி என்று எவரும் அழைக்க முடியாது. பிரதமர் மஹிந்த ராஜபக்ச அப்போது ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரச குழு பல தடவைகள் பேச்சுக்களை நடத்தியதை சரத் வீரசேகர உள்ளிட்ட ஆளுந்தரப்பினர் நினைவில்கொள்ள வேண்டும்.

கூட்டமைப்பு தமிழ் மக்களின் ஏகோபித்த கட்சி என்றபடியாலேயே அன்று எம்முடன் மஹிந்த அரசு பேச்சு நடத்தியது. இன்றும் நாம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச – பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான அரசுடன் உண்மையான – நேர்மையான – நீதியான பேச்சுக்குத் தயாராகவே இருக்கின்றோம்.

இந்தநிலையில், நாடாளுமன்றத்திலுள்ள ஆளுந்தரப்பினர் கருத்துக்களை வெளியிடும்போதும் மிகவும் அவதானத்துடன் செயற்பட வேண்டும். வாய்க்கு வந்த மாதிரி இனவாத ரீதியில் கருத்துக்களை வெளியிடுவதை அவர்கள் தவிர்க்க வேண்டும்” – எனவும் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்துள்ளார்.

“இலங்கை விளையாட்டுத் துறைக்குள் அரசியல் தலையீடு இல்லை” – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

“தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் விளையாட்டு துறைக்குள் அரசியல் தலையீடு இல்லை” என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (05.12.2020) கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கும் போது, “ விளையாட்டு அமைப்புகளின் நிதிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த மட்டுமே அரசாங்கம் ஈடுபடும். இருப்பினும் இலங்கை கிரிக்கெட் சபை உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகள் அரசியல் தலையீடு இல்லாமல் செயற்படும்.

இதேவேளை விளையாட்டு தொடர்பான புதிய சட்டம் தேவை , புதிய விளையாட்டுச் சட்டத்தை உருவாக்கும் செயன்முறை தற்போது நடைபெற்று வருகின்றது.

அத்தோடு லங்கா பிரிமியர் லீக் போட்டி தொடருக்கு விளையாட்டு அமைச்சினால் எந்தவொரு நிதியும் ஒதுக்கப்படவில்லை என குறிப்பிட்ட அமைச்சர் இலங்கை கிரிக்கெட் சபையினால் குறித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

“போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களைக் கைது செய்ய முடியாத பொலிஸார் பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரித்தவர்களைப் கைசெய்வது என்பது அரசின் இயலாமையை காட்டுகின்றது” – பாராளுமன்றில் இரா.சாணக்கியன் !

“போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களைக் கைது செய்ய முடியாத பொலிஸார் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரித்தவர்களைப் பொலிஸார் கைசெய்வது என்பது அரசின் இயலாமையை மூடி மறைக்கின்றனர்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று(05.12.2020) உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நான் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்ததாக சிலர் இங்கு கூறுகின்றனர். நான் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டே இந்த பாராளுமன்றம் வந்துள்ளேன் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

மட்டக்களப்பில் இளைஞர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 26, 27, 28ஆம் திகதிகளில் முகப்புத்தகத்தில் சில பதிவுகளை இட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 29 வயதான அரச ஊழியர் ஒருவரும் அடங்குகின்றார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தையும், மாவீரர் நாள் பதிவுகளையும் முகப்புத்தகத்தில் பதிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களைக் கைதுசெய்துள்ள அரசு, அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

முகப்புத்தகத்தில் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரித்தவர்களைப் பொலிஸார் கைசெய்வது என்பது அரசின் இயலாமையை மூடி மறைக்கும்படியான செயலாகும். இவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாகப் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களைக் கைதுசெய்து சிறையில் அடையுங்கள்.

அரசின் மீது குற்றச்சாட்டுக்களை வைக்க வேண்டும் என்பதல்ல எனது நோக்கம். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அதேபோன்று அரசு ஏனைய விடயங்களை மறைப்பதற்காக இவ்வாறு அப்பாவி இளைஞர்களைக் கைதுசெய்வதை நிறுத்த வேண்டும். கார்த்திகை விளக்கீடு என்பது ஒரு பண்டிகை. இப்படியான பண்டிகை நாளில் பொலிஸார் கார்த்திகை தீபம் ஏற்றத் தடை ஏற்படுத்தியுள்ளனர். இதனை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒருசில இடங்களில் மக்கள் விளக்குகளை – தீபங்களை ஏற்றுவதற்காகச் சிறிய அலங்காரங்களைச் செய்திருந்தனர். இதனையும் பொலிஸார் எட்டி உதைத்துள்ளனர். நீங்கள் உண்மையான பெளத்தர் என்றால் மனிதத்துவத்துக்கு மரியாதை செலுத்த முதலில் பழகிக்கொள்ளுங்கள்.

உண்மையிலேயே இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்கள் பாவம். நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் உரையாற்றியபோது, சரத் வீரசேகர உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தமை காரணமாகவே இவ்வாறு எதிர்ப்பை வெளியிட முடிந்தது எனக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். இவ்வாறு செய்து கொண்டு நீங்களே நாட்டில் பிரச்சினைகளை உரூவாக்குகின்றீர்கள்.

நீங்கள் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து சஹ்ரானை உருவாக்கியதாகக் கூறுகின்றீர்கள். நீங்கள் நாட்டில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றீர்கள். நீங்களே சஹ்ரானை உருவாக்கினீர்கள். நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் புதைப்பதற்குத் தொடர்ந்தும் மறுப்புத் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அவர்கள் தங்களுக்கு இறுதியாகவுள்ள உரிமையையே கேட்கின்றனர். அதனை வழங்குவதற்குக்கூட இந்த அரசு தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.இவ்வாறான செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” – என்றார்.