உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“எதிர்வரும் ஆண்டுகள் பொருளாதார ரீதியாக இலங்கையை வலுப்படுத்த வேண்டிய தீர்மானம் மிக்க ஆண்டுகளாகும்” – இலங்கை பொருளாதார மாநாட்டில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ !

“எதிர்வரும் ஆண்டுகள் பொருளாதார ரீதியாக இலங்கையை வலுப்படுத்த வேண்டிய தீர்மானம் மிக்க ஆண்டுகளாகும்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இலங்கை வர்த்தக சம்மேளனம் ஏற்பாடு செய்த 2020ஆம் ஆண்டுக்கான இலங்கை பொருளாதார மாநாட்டில் இணையவழி காணொளி ஊடாக நேற்று (02.12.2020) கலந்துகொண்ட பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ  இவ்வாறு தெரிவித்துள்ளார்.

குறித்த மாநாட்டில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

“இலங்கை வர்த்தக சம்மேளத்தினால் ஒழங்கு செய்யப்பட்ட வருடாந்த பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்டு ஒரு சில வார்த்தைகள் பேசுவதற்கு எமக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பில் முதலாவதாக அச்சம்மேளனத்தின் தலைவர் உட்பட நிர்வாகச்சபையினருக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

உலகிலுள்ள பல நாடுகளையும் விட இலங்கை, கொவிட் 19 தொற்றினை மிகவும் முறையான விதத்தில் கட்டுபாட்டுக்கள் வைத்திருப்பதனை அதிகளவானோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். அத்துடன் பொருளாதாரத்தை முறையாக நிர்வகித்து முன்னோக்கி செல்வதற்கு முடியும் என்பதனையும் ஏற்றுக்கொண்டுள்ளனர். அது மட்டுமின்றி, இதுவரை கொவிட்-19 தொற்றினை கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் நாடுகள் வரிசையில் இலங்கையானது முன்னிலை வகிப்பதுடன், பல துறைகளிலும் பொருளாதார முன்னேற்றத்தினை சாதகமான முறையில் பதிவு செய்வதற்கு எம்மால் முடிந்துள்ளது.

நண்பர்களே, எமது நாடு எதிர்நோக்கியுள்ள முதன்மையான சவாலானது, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நாட்டிற்கு வழங்கிய வாக்குறுதியின் படி மக்களை மையமாகக்கொண்ட பொருளாதார புத்தெழுச்சியினை ஏற்படுத்துவதாகும்.இதனிடையில் கொவிட் 19 தொற்றுக்கு மத்தியில் மதிப்பிடப்பட்ட பொருளாதார வீதம், அம்முயற்சிக்கு பாரிய தடைகள் உள்ளன எனவும் பலரினால் கணிக்கப்பட்ட போதிலும் அவ்வாறன தடைகள் ஏற்படுவதனை குறைத்து பொருளாதார புத்தெழுச்சியினை ஏற்படுத்துவது எமக்குள்ள பாரிய சவாலாகும்.

இக்குறிக்கோள்களை அடைய அரசாங்கம் புதிய உத்திகளை கையாண்டுள்ளது என உங்களுக்கு தெரியும். நாட்டிலுள்ள வர்த்தகர்களை பாதுகாக்கும் பொருட்டு அவர்களுக்காக ‘கடன் விலக்குகளை’ வழங்குமாறு அரச வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களுக்கு ஆலோசனை வழங்கினோம்.

நாட்டின் வெளிப்புற கணக்கினை முறையாக நிர்வகிப்பதன் மூலம் ரூபாய் மதிப்பினை பாதுகாத்து அரசாங்கத்தின் கடன் அழுத்தங்களை குறைப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்டோம். ஐந்து மில்லியனுக்கும் அதிகமான குடும்பங்களுக்கு கொவிட் -19 தொற்றுக்கு முகங்கொடுப்பதற்கு நேரடி நிதி ஒதுக்கீடுகளை வழங்குவதன் மூலம் வாழ்வாதார பிரச்சினைகளுக்கு நிவாரணம் வழங்க எம்மால் முடிந்தது.

சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வர்த்தக நடவடிக்கைகள் பாதிப்படையாதிருப்பதற்கு வரி மற்றும் வட்டி சலுகைகளை பெற்றுக் கொடுத்தோம். நீர், மின்சாரம், அனுமதி பத்திர கட்டணம் ஆகியவற்றை செலுத்த எம்மால் கால அவகாசம் வழங்கப்பட்டது. குத்தகை தவணை மற்றும் வட்டி செலுத்துவதற்கான சலுகைகள் வழங்கப்பட்டன.

இவ் அனைத்து நடவடிக்கைகளிலும் அரச ஊழியர்களை ஈடுபடுத்துவதன் மூலம் அவர்களின் செயல்திறன்களை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தமை காரணமாக நாட்டில் பெரும்பான்மையான மக்கள் நிர்கதியான நிலைக்கு தள்ளப்படும் அபாயமும் இருந்தது. மேலும் சில சந்தர்ப்பங்களில் சிலர் அவ்வாறு நடைபெறும் வரை எதிர்பார்த்திருந்திருப்பார்கள் என்றும் சந்தேகம் கொள்ள வேண்டியிருக்கும்.

ஆனாலும் இப்பிரச்சினைகள் அனைத்திற்கும் மத்தியில் இந்த சவால்களை நேரடியாக எதிர்கொள்வதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை உறுதிப்படுததுவதற்கு எமது அரசாங்கத்திற்கு முடிந்தது. இது தொடர்பில் வர்த்தகத்தில் ஈடுபட்டிருக்கும் நீங்கள் நன்றாக புரிந்து கொண்டிருப்பீர்கள் என நான் நம்புகின்றேன்.

எதிர்வரும் ஆண்டுகள் எமக்கு தீர்மானம் மிக்க ஆண்டுகளாகும். எமது நாட்டின் பொருளாதார ரீதியான முன்னோக்கிய பயணத்தை வலுப்படுத்தும் காலமாகும். எதிர்வரும் இக்காலப்பகுதி வெற்றியளிக்க வேண்டுமாயின், நாம் அனைவரும் ஒன்றிணைந்து இச்சவாலை நிர்வகித்துக் கொள்ள வேண்டும். அதற்கு, நாம் புதிய உத்திகளை செயற்படுத்த வேண்டும். இதுவரையான உங்களது வெளிப்பாடுகளிலிருந்து நீங்கள் அனைவரும் இச்சவாலை ஏற்பதற்கு தயாராகவிருக்கின்றீர்கள் என்பது புலப்படுகிறது.

அரசாங்கம் என்ற ரீதியில்,  நாமும் அந்த பொறுப்பை ஏற்பதற்கு தயாராகவுள்ளோம். அவ்வாறாயின் எம்முடன் இணைந்து, எமது நாட்டின் பொருளாதாரத்தை மறுமலர்ச்சியை நோக்கி கொண்டு செல்வதற்கு நாம் உங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“இலங்கையில் 2 இலட்சவழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது உள்ளன” – நீதி அமைச்சர் அலி சப்ரி

“இலங்கையில் 2 இலட்சத்து 31 ஆயிரம் வழக்குகள் மாவட்ட நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படாது உள்ளன” என்று நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே பாராளுமன்றத்தில் நேற்று(02.11.2020) எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“நீதி சேவை ஆணைக்குழுவின் தரவுகளுக்கு அமைய இந்தத் தகவலை வெளியிடுகின்றேன். அதற்கமைய 49 ஆயிரத்து 801 வழக்குகள் ஐந்து வருடங்களாக விசாரணை செய்யப்படுகின்றன. 20 ஆயிரத்து 568 வழக்குகள் 5 முதல் 10 வருடங்களாக விசாரணை செய்யப்படுகின்றன. 8 ஆயிரத்து 947 வழக்குகள் 10 முதல் 15 வருடங்களாக விசாரணை செய்யப்படுகின்றன. 3 ஆயிரத்து 418 வழக்குகள் 15 முதல் 20 வருடங்களாக விசாரணை செய்யப்படுகின்றன.

அத்துடன், 4 ஆயிரத்து 620 வழக்குகள் 25 முதல் 25 வருடங்களாக விசாரணை செய்யப்படுகின்றன.

வழக்குத் தாக்கல் செய்தல் மற்றும் வழக்கு விசாரணை ஆகியன இரு வேறு விடயங்களாகும்.

கொரோனாத் தொற்று பரவும் காலப் பகுதியில் வழக்கு விசாரணைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த நிலைமையின் கீழ் சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் 70 இற்கும் அதிகமான தீர்ப்புக்கள் இந்தக் காலப்பகுதியில் வழங்கப்பட்டுள்ளன” என குறிப்பிட்டார்.

மஹர சிறைச்சாலை விவகாரம் – “சிறைச்சாலை நிலவரத்தை அதிகாரிகள் மீண்டும் தம்வசப்படுத்திக்கொள்ள அவர்கள் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தினார்கள்” – மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன

சமூகத்தில் கொரோனா பாதிப்பை தடுக்கவே சிறையில் உச்சபட்ச அதிகாரத்தை பயன்படுத்த வேண்டியேற்பட்டது என்று பாதுகாப்பு செயலாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.

கொழும்பு – தேசிய அபாயகர ஒளடதங்கள் கட்டுப்பாட்டு சபையில் நேற்று (02.12.2020) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

‘மஹர சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவத்தால் கைதிகள் சிலர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்துள்ளதால் சிறைச்சாலை அதிகாரிகள் உயர்மட்ட அதிகாரத்தை பயன்படுத்தியுள்ளதாக சிலர் கூறுகின்றனர். இந்த சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு செயலாளர் என்ற ரீதியில் நான் ஒரு விடயத்தை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.

அதிகாரத்தை பயன்படுத்துவதற்காக சிறைச்சாலை கட்டளைச் சட்டத்தில் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்ட வேறு இடத்திற்கு மாற்றப்படவிருந்த 186 கைதிகள் சிறைச்சாலையிலிருந்து தப்பிச் சென்று சமூகத்தில் நடமாடுவார்களாயின் எந்தளவிற்கு அபாய நிலைமை ஏற்பட்டிருக்கும் என்பதை அனைவராலும் சிந்திக்க முடியும்.

எனவே சமூகத்திற்கு ஏற்படவிருந்த பாரிய பாதிப்பை தடுப்பதற்காக சிறைச்சாலை அதிகாரிகளுக்கு அந்த சந்தர்ப்பத்தில் உயர்மட்டத்தில் அதிகாரங்களை உபயோகிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. எனவேதான் வேறு சிறைச்சாலைகளிலிருந்து 200 அதிகாரிகளையும் விசேட அதிரடிப்படையினர் 200 பேரையும் மற்றும் பொலிஸார் 200 பேரையும் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

சிறைச்சாலை நிலவரத்தை அதிகாரிகள் மீண்டும் தம்வசப்படுத்திக்கொள்ள அவர்கள் உச்சபட்ச அதிகாரத்தைப் பயன்படுத்தினார்கள். அதற்கமைய செவ்வாய்கிழமை பகல் 1.30 மணியளவில் சிறைச்சாலைக்குள் சென்ற அதிகாரிகள் சுமார் 10 நிமிடங்களில் நிலைமையை வழமைக்கு கொண்டு வந்தார்கள். இதன்போது கைதிகளிடம் காணப்பட்ட மருந்துகள், சமையறையில் உபயோகிக்கப்படும் கத்திகள் என்பவை அவர்களிடமிருந்து அகற்றப்பட்டுள்ளன” என அவர் மேலும் தெரிவித்தார்.

ஒரே நாளில் 800க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று – 124 ஆக அதிகரித்தது கொரோனா உயிர்பலி !

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.மேலும்  இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார். இதனையடுத்து இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி, சிலாபம் பிரதேசத்தைச் சேர்ந்த 66 வயதான பெண் நவம்பர் மாதம் 30ஆம் திகதி சிலாபம் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானமையினால் ஏற்பட்ட மாரடைப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம், கொழும்பு 13 பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான ஆண் நவம்பர் மாதம் 30 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்றுக்குள்ளானதுடன் நிமோனியா ஏற்பட்டமை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நாட்டில் நேற்று மட்டும் 878 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 861ஆக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25 ஆயிரத்து 410ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, இதுவரை 18 ஆயிரத்து 304 பேர் , கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில், இன்னும் ஆறாயிரத்து 982 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதார அமைச்சின் கவனயீனமான செயற்பாட்டினால் இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று தீவிரமாக சமூகத்தினிடையே பரவும் அபாயம் உள்ளதென அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பணிப்பாளர் மருத்துவர் ஹரித்த அலுக்கே தெரிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புரவி புயலின் தாக்கம் – வட கிழக்கில் ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்கள் பாதிப்பு !

வங்காள விரிகுடாவில் உருவான புரவிப் புயல் நேற்றுப் பின்னிரவில் நாட்டின் கிழக்குத் திசையிலிருந்து திருகோணமலைக்கும் – முல்லைத்தீவுக்கும் இடையே கரையைக் கடந்து, கடுங்காற்றுடன் அனர்த்தங்களை விளைவித்தபடி வவுனியாவைத்தாண்டி, முன்னேறி, மன்னாரைக் கடந்து, தமிழகத் திசையை நோக்கி இன்று அதிகாலை நர்ந்தது என வட-கிoக்குச் செய்திகள் தெரிவிக்கின்றன.

புரவி புயலின் தாக்கத்தினால் வடக்கு மாகாணத்தில் அதிக மழை வீழ்ச்சி ஏற்பட்டது. புயலின் தாக்கமும் எதிர்கொள்ளப்பட்டது. சீரற்ற கால நிலை காரணமாக நேற்று நள்ளிரவு வரை வடக்கில் 750 இற்கும்மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 2 ஆயிரத்து 200ற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டனர் எனப் பதிவாகியுள்ளதோடு 10 பேர் படுகாயமடைந்துள்ளனர் என்றும் மூவர் காணாமல் போயுள்ளனர் என்றும் வடக்கு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

வடக்கின் 5 மாவட்டங்களும் அதிகம் பாதிப்புக்களை சந்தித்துள்ளமையோடு வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் நள்ளிரவுக்குப் பின் தாக்கம் காணப்படுகின்றது. இதுவரை முல்லைத்தீவில் களுக்கேணிக்குளம் ஒரு அடி வரையில் வான் பாய்கின்றது. கடற்கரையை அண்டிய பகுதிகளில் இருந்த 450 குடும்பங்கள் முன் ஆயத்தமாக நகர்த்தப்பட்டு 3 பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதேநேரம் கடும் மழை காரணமாக முல்லைத்தீவு நகரிற்குள் பிரவேசிக்கும் அனைத்து வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுகின்றது. இதில் வட்டுவாகல் பாலம், செல்வபுரம் பகுதியிலான வீதிகள் இந்த நிலமை காணப்படுகின்ற போதும் கேப்பாபுலவு முல்லைத்தீவு வீதியே தற்போது தப்பியுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் இரு வீடுகளின் மீது மரங்கள் முறிந்து வீழ்ந்தமையினால் இரு வீடுகளும் சேதமடைந்தன. இதனால் இரு குடும்பங்களும் இடப்பெயர்வை சந்தித்துள்ளன. இதேபோன்று யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அதிக மழை பொழிவு இருந்தது.

தாழ் நிலங்களில் வெள்ள நீர் தேங்கியுள்ளது பல குடும்பங்கள் பாதிப்பினை எதிர்கொண்டுள்ளன. யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று மீனவர்கள் கடலிற்கு சென்ற நிலையில் காணாமல்போயுள்ளனர். இதேநேரம் மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 167 குடும்பங்களைச் சேர்ந்த 523 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பருத்தித்துறையில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 206 பேரும், வேலணையில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களது உறவினர்களது வீட்டில் தங்கியுள்ளன எனவும், கல்லுண்டாய் பகுதியில் ஓர் இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மன்னார் மாவட்டத்தின் தேவன் பிட்டியில் 15 குடும்பங்களும், நானாட்டனில் 91 குடும்பங்களும் பாதுகாப்பாக நகர்த்தப்பட்டு இடம்பெயர்ந்தனர். கடற் கரையில் நிறுத்தி வைத்திருந்த இரு படகுகள் அலையில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. இவ்வாறு வடக்கின் அனைத்து இடங்களிளும் பாதிப்புக்கள் பதிவாகியுள்ளன. வடக்கு மாகாணத்தில் புரெவிப் புயலினால் 15 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளன என்றும் 140 வீடுகள் வரை பகுதியாகப் பாதிக்கப்படுள்ளன என்றும் தற்போது கிடைத்த செய்திகள் தெரிவித்தன

“தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து ஒரே நாட்டுக்குள் வாழ முடியாது என்பதை அரசாங்கம் தனது நடவடிக்கைகள் மூலம் தெரியப்படுத்துகின்றது” – சிவசக்தி ஆனந்தன்

“தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து ஒரே நாட்டுக்குள் வாழ முடியாது என்பதை அரசாங்கம் தனது நடவடிக்கைகள் மூலம் தெரியப்படுத்துகின்றது” தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.

இன்று(02.12.2020) சேமமடு, செட்டிகுளம், ஒதியமலை படுகொலையின் 36 ஆவது ஆண்டு நினைவு தினத்தை நினைவு கூர்ந்து ஊடகங்களுக்கு
அனுப்பி வைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“1984ம் ஆண்டு இலங்கை இராணுவம் சேமமடு, செட்டிகுளம், ஒதியமலை ஆகிய மூன்று கிராமங்களிற்குள் அதிகாலையில் புகுந்து அப்பாவி தமிழ் பொது மக்களை கைது செய்தது மட்டுமன்றி சுட்டும் ,வெட்டியும் கொலை வெறித்தாக்குதலை நடாத்தியிருந்தனர்.

சேமமடு பகுதியில் 52பேரும், ஒதியமலை பகுதியில் 32பேரும், செட்டிகுளம் பகுதியில் 22பேரும், மொத்தமாக 106 பேர் படுகொலை செய்யப்பட்டனர். படுகொலை செய்யப்பட்ட அனைத்து மக்களும் வறிய விவசாய குடும்பங்களை சேர்ந்த குடும்பத் தலைவர்கள் மற்றும் இளைஞர்களுமாவர்.

இப்படுகொலை நினைவு நாள் ஆண்டு தோறும் முன்னெடுக்கப்பட்டு உயிர் நீத்த ஆன்மாக்களுக்கான ஆத்ம சாந்திப் பிரார்த்தனைகளில் உறவினர்களும், அப்பிரதேச வாசிகளும் ஈடுபட்டே வந்தனர். இந்நிலையில் இத் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்ட அந்த அப்பாவி பொதுமக்களின் நினைவேந்தல் நாள் இன்றாகும் (02-12-2020) வழமைபோன்று உயிர் நீத்த உறவுகளின் நினைவாக வருடாந்த நினைவேந்தலை செய்வதற்கான ஏற்பாடுகள் அந்தந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. எனினும் செட்டிகுளம் பகுதியில் காவல்துறையினர் திடீரென பிரசன்னமாகி நினைவேந்தலுக்கு தடை விதித்ததோடு, உயிர்நீத்த உறவுகளை நினைவேந்த அனுமதிக்க முடியாது என்று எச்சரித்து சென்றிருக்கின்றார்கள்.

கடந்தவாரம் உயிர் நீத்த போராளிகள் மற்றும் பொதுமக்களை நினைவு கூருவதற்கு வடக்கு கிழக்கிலே நீதி மன்றத்தினுடாக காவல்துறையினர் தடைத்தரவு பெற்றிருந்தனர். இதே போல் இக்கிராம மக்களும் உறவுகளும் படுகொலை செய்யப்பட்ட தமது உறவுகளுக்கு தங்களின் சமய காலாச்சார முறைப்படி செய்ய வேண்டிய கடமைகளை கூட செய்யமுடியாத துர்பார்க்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

இந்த நாட்டிலே உண்மையான சமாதானம் நல்லிணக்கம் வரவேண்டுமாக இருந்தால் இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கமைவாக உயிர் நீத்தவர்களுக்கான கடமைகளை செய்வதற்கு அனுமதி வழங்கியிருக்க வேண்டும். அதை விடுத்து இவற்றை செய்யாத வரை எந்த காலத்திலும் தமிழ் மக்களும் சிங்கள மக்களும் ஒன்றாக இணைந்து ஒரே நாட்டுக்குள் வாழ முடியாது என்ற செய்தியை தான் இந்த அரசாங்கம் திரும்ப திரும்ப தமது நடவடிக்கைகள் மூலம் தெரியப்படுத்துகின்றது ”எனவும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சியில் பரீட்சை சென்று வீடு திரும்பிய பாடசாலை மாணவி தற்கொலை !

கிளிநொச்சி பிரமனந்தனாறு மகாவித்தியாலயத்தில் தரம் 11 இல் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்று(1.12.2020) பாடசாலைக்குச் சென்று பரீட்சை எழுதிவிட்டு நண்பிகளுடன் வீடு திரும்பும் போது சக மாணவிகளிடம் நான் இறந்தால் நீங்கள் எத்தனை பேர் வருவீர்கள் என கேட்டுச் சென்ற குறித்த மாணவி வீட்டில் தாயின் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். குறித்த மாணவி சுமார் 20 நிமிடங்கள் தொலைபேசியில் உரையாடிய பின்னர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பிரமனந்தனாறு 71 ஆம் வாய்க்கலைச் சேர்ந்த பத்மநாதன் அகவிழி என்ற க.பொ.த சாதாரண தர மாணவியே இவ்வாறு தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே படுகொலை – இலங்கை கண்டனம் !

ஈரானின் தலைமை அணு விஞ்ஞானியான மொசென் பக்ரிசாதே கடந்த சில தினங்களுக்கு முன்பு தலைநகர் டெஹ்ரானில் காரில் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்களால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த படுகொலையின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள ஈரான் அணு விஞ்ஞானியின் கொலைக்கு பழி தீர்ப்போம் எனவும் சூளுரைத்துள்ளது.

இந்நிலையில் “ஈரானின் உயர்மட்ட அணு விஞ்ஞானி மொஹ்சென் பக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டமைக்கு இலங்கை கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையின் வெளியுறவு அமைச்சகம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து இலங்கையின் கண்டன அறிக்கையில், “டாக்டர் மொஹ்சென் ஃபக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டதை இலங்கை கண்டிக்கிறது. பக்ரிசாதே படுகொலை செய்யப்பட்டதையும், மனிதகுலத்திற்கு எதிரான எந்தவொரு பயங்கரவாதச் செயல்களையும் இலங்கை கண்டிக்கிறது. மத்திய கிழக்கு மற்றும் பாரசீக வளைகுடா பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் பாதுகாப்பிற்கு இலங்கை அழைப்பு விடுக்கிறது.அத்துடன், பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான மிக வெற்றிகரமான வழிமுறையாக உரையாடல் மற்றும் ஈடுபாட்டை இலங்கை உறுதியாக நம்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தமிழ் மக்களின் வழிபாட்டு உரிமையை மறுத்தமைக்காக அரசு உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும்” – ஒன்றிணைந்த தமிழ்தேசிய கட்சிகள் அறிக்கை !

இந்து மக்களின் மிக முக்கிய பண்டிகைகளில் ஒன்றான கார்த்திகைத் தீப விளக்கீட்டினை இராணுவமும் காவல்துறையினரும் இணைந்து குழப்பியதற்கு எதிராகவும், அரசு இது குறித்து எத்தகைய நடவடிக்கையையும் மேற்கொள்ளாததைக் கண்டித்து ஒன்றிணைந்த தமிழ்தேசியகட்சிகளின் சார்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சோ. சேனாதிராஜா கையெழுத்திட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள கூட்டு அறிக்கையின் முழு விபரம் வருமாறு:-

“தமிழ் மக்கள் இந்த மண்ணின் பூர்வீகக் குடிகள். அவர்களுக்கு மிகவும் தொன்மையான மொழி, மத, கலாசார பண்பாடுகள் உண்டு. பாரம்பரியமாகவே மத அனுஷ்டானங்களையும், கலாசார பண்பாடுகளையும் மிக இறுக்கமாகப் பின்பற்றி வரும் ஒரு இனமாகவே தமிழ்த் தேசிய இனம் இலங்கை மண்ணில் வாழ்ந்து வருகின்றது.

அவர்களது கலாசாரப் பண்பாடுகளைப் பற்றிப் பிடிப்பதற்காகவும் அவற்றை யாரும் அழித்துவிடக்கூடாது என்பதற்காகவும் தமிழ்த் தேசிய இனம் தொடர்ந்தும் போராடி வருகின்றது. அவற்றைத் தட்டிப்பறிக்க முனைபவர்களுக்கு எதிராக விட்டுக்கொடுப்பின்றித் தொடர்ந்தும் போராடி வருகின்றார்கள்.

தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளுக்காகப் போராடி மரணித்துப் போனவர்களைத் தமிழ் மக்கள் அஞ்சலிக்கக்கூடாது என்பதற்காக, அரசு பொய்யான தவறான வழிகாட்டுதல்களை நீதிமன்றங்களுக்கு வழங்கி, தமக்காக மரணித்துப் போனவர்களுக்கு அஞ்சலிப்பதற்குத் தடையினைப் பெற்றிருந்தார்கள்.

அதை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, கடந்த 29ஆம் திகதி நடைபெற்ற தமிழ் இந்து மக்களின் பாரம்பரிய மத அனுஷ்டானமான கார்த்திகை விளக்கீட்டினை இராணுவமும் பொலிசாரும் இணைந்து பல இடங்களில் மிக அநாகரிகமான முறையில், அந்த மக்களின் மத நம்பிக்கைகளையும் கடவுள் நம்பிக்கையையும் அவமதிக்கும் வகையில் அதனைத் தடுத்து, அச்சுறுத்தி அவர்களை அடக்க முயற்சித்தார்கள்.

இலங்கையில் இருக்கக்கூடிய மக்கள், தாம்தாம் விரும்பிய மதங்களைப் பின்பற்றுவதற்கும், அதனை அனுஷ்டிப்பதற்கும் கடைப்பிடிப்பதற்கும் அரசியல் சாசன ரீதியாக சகல உரித்தும் உடையவர்கள். ஆனால், கடந்த 29ஆம் திகதி இந்து மக்களின் கார்த்திகை விளக்கீட்டின்போது புதுக்குடியிருப்பு, பரந்தன், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணத்தின் வடமராட்சி, வலிகாமம் போன்ற பல பகுதிகளில் இராணுவத்தினரும் காவல்துறையினரும் வீடுகளுக்குள் சென்றும், இந்து ஆலயங்களுக்குள் அத்துமீறி நுழைந்தும், அவர்கள் பக்தியோடு ஏற்றிய தீபங்களை சப்பாத்துக் கால்களால் எட்டி உதைத்து அவர்களது அனுஷ்டானங்களை அவமதித்ததுடன், சில பெரியோர்கள் தாக்கப்பட்டும் இருக்கின்றார்கள்.

கோவில் அர்ச்சகர்கள் எச்சரிக்கப்பட்டிருக்கின்றார்கள். கார்த்திகைத் தீபமேற்றிய யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவன் ஒருவர் கைதுசெய்யப்பட்டு அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுப் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்து மக்களின் மிக முக்கிய மத அனுஷ்டானமான கார்த்திகை விளக்கீட்டினை இலங்கை அரசின் காவல்துறையினரும் இராணுவத்தினரும் திட்டமிட்ட வகையில் ஆயுத முனையில் குழப்பியிருக்கிறார்கள். கார்த்திகை விளக்கீடு என்பது இந்து மக்களின் மிக முக்கியமான அனுஷ்டான நாள் என்பதும், காலாதிகாலமாக அதனை அவர்கள் அனுஷ்டித்து வருகிறார்கள் என்பதும், இலங்கை அரசுக்கும் காவல்துறைக்கும் படையினருக்கும் தெரிந்த விடயம்.

உண்மைநிலை அப்படியிருக்க, அதனை அச்சுறுத்தித் தடை செய்ய முயற்சிப்பது என்பது தமிழ் மக்களின் மத வழிபாட்டுரிமையைப் பறித்தெடுப்பதாகும். அரசின் திட்டமிட்ட இந்தச் செயற்பாடானது மிகவும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

தம்மை ஒரு ஜனநாயக அரசு எனக் கூறிக்கொள்ளக் கூடியவர்கள் இன்னுமொரு தேசிய இனத்தின் மத உரிமையை அச்சுறுத்திப் பறிப்பதென்பதும் தடை செய்வதென்பதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாத ஒன்றாகும்.படையினரதும் காவல்துறையினரதும் இந்தத் திட்டமிட்ட செயற்பாட்டுக்கு அரசு மன்னிப்புக் கோரவேண்டும். எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாது என்னும் உத்தரவாதம் வழங்கப்படவேண்டும்.

அரசு தமிழ் மக்களுடைய மொழி, மத, நில உரிமைகளைத் தொடர்ச்சியாகப் புறக்கணிக்குமாக இருந்தால், தமிழ் மக்களைத் தொடர்ச்சியான ஓர் அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு இலங்கை அரசே வழிசமைக்கின்றது என்று பொருள்படும்.

தமிழ்த் தேசியக் கட்சிகளின் இந்தக் கோரிக்கைகளுக்கு இசைவாக அரசு உடனடியாக தனது மன்னிப்பைக் கோரவேண்டும் என்றும் அல்லது குறைந்தபட்சம் நடந்து முடிந்த சம்பவங்களுக்குத் தனது வருத்தத்தையாவது தெரிவிக்க வேண்டும் என்றும் அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்டுள்ள மதத்தைப் பின்பற்றுவதற்கான உரிமை மற்றும் வழிபாட்டுரிமைக்கு எதிராகச் செயற்பட்டவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றோம்” – எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“யாழ்ப்பாண மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வர வேண்டும்” – யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை அழைப்பு !

“யாழ்ப்பாண மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வர வேண்டும்” என யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் யாழ்.இளைஞர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இராணுவத்துக்கு இளைஞர்,யுவதிகளைஇணைக்கும் தேசிய ரீதியான வேலைத்திட்டத்தின் கீழ் யாழ். மாவட்ட இளைஞர்களை இராணுவத்தில் இணைப்பது தொடர்பாக விளக்கமளிக்கும் விசேட கூட்டம் யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று(01.12.2020) இடம்பெற்றது.

இதில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு அவர் தெரிவித்தார்.

இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த ஒரு சந்தர்ப்பமாக இந்த வாய்ப்புக் காணப்படுகின்றது.  எனவே பிரதேச மட்டங்களில் கிராமசேவகர்கள் குறித்த ஆள் சேர்ப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு விளக்கமளிப்பதன் ஊடாக இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அதிலும் வடக்கு மாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்புச் சிக்கல் பாரிய பிரச்சினையாகக் காணப்படுகின்றது.

இதனால் யாழ்ப்பாண மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு தமிழ் இளைஞர்கள் இராணுவத்தில் இணைய முன்வர வேண்டும் என்றார்.