உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“நாம் இலங்கையின் பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் சகவாழ்வை அழித்த எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்தோம்” – பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ

“நாம் இலங்கையின் பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் சகவாழ்வை அழித்த எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்தோம்” என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சியாம்பலாண்டுவ புத்தம புரான ரஜமஹா விகாரையில் நடைபெற்ற ´மிஹிந்து நிவஹன´ திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர்,

“இலங்கையின் பொருளாதாரம், அபிவிருத்தி மற்றும் சகவாழ்வை 30 ஆண்டுகளாக அழித்த எல்.ரீ.ரீ.ஈ பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவித்தோம். அமைதி நிலைநாட்டப்பட்டது. அபிவிருத்தி தொடங்கியது.

அதன்பின்னர், நல்லாட்சியின் காலத்தில் நீங்கள் நினைவில் வைத்திருக்கும் அமைதியைக் கொண்டுவருவதில் கருவியாக இருந்த போர்வீரர்கள் மீதான ஜெனீவா தீர்மானங்களுக்கு இணை அனுசரணை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. நிலைமை எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதை நாங்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

இந்த நாட்டில் எம்.சி.சி ஒப்பந்தத்தில் கையெழுத்திட அனைத்து திட்டங்களும் தயாராக இருந்தன. இது மக்களுக்கு நில உரிமை மற்றும் இந்த நாட்டில் வாழும் உரிமையை பறிக்கும் என்று நான் நம்புகிறேன்.

அரசாங்கம் எத்தனை சிரமங்களை எதிர்கொண்டாலும் நாட்டின் சுதந்திரத்திற்காக தைரியமான முடிவுகளை எடுத்துள்ளோம்.

எனவே, நாட்டை நேசிக்கும் துறவிகள், மதத் தலைவர்கள் மற்றும் அனைத்து மக்களும் இந்த அரசாங்கத்தில் எங்களுடன் நிற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நாட்டின் சுதந்திரத்தைப் பாதுகாக்க பாரிய முடிவுகளை எடுத்த குழு நாங்கள்.

உங்கள் ஆதரவு மற்றும் புரிதலுடன் மட்டுமே நாங்கள் அவர்களை முன்னோக்கி நகர்த்த முடியும். மக்கள் எங்களை நம்பி எங்களுக்கு அதிகாரம் கொடுத்தார்கள். நாங்கள் உருவாக்கிய ஒவ்வொரு அரசாங்கமும் மக்களின் நம்பிக்கையைப் பாதுகாத்தது. உங்கள் நம்பிக்கையை நாங்கள் தொடர்ந்து பாதுகாப்போம் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்டுகிறேன்” என அவர் மேலும் தெரிவித்தார்

இலங்கை வருகிறார் பாகிஸ்தான் பிரதமர் !

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இரண்டு நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி அவர் எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட அரசியல் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்.

“ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை எதிர்கொள்வதற்கு இந்தியாவின் ஆதரவு மிகவும் முக்கியமானது” – பிரதீப மகநாமகேவ

“ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தை எதிர்கொள்வதற்கு இந்தியாவின் ஆதரவு மிகவும் முக்கியமானது” என இலங்கையின் மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் பிரதீப மகநாமகேவ தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானம் தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள தீர்மானங்களிற்கு எதிராக இடைக்கால யோசனையொன்றை முன்வைக்கலாம் .
அவ்வாறான சூழ்நிலையில் இந்தியாவின் ஆதரவு இலங்கைக்கு மிகவும் அவசியமானது . ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை எதிர்ப்பதை தானும் விரும்புவதாக முன்னாள் தலைவர் தெரிவித்துள்ளார்.
அந்த அறிக்கை நாட்டில் தற்போது காணப்படும் நிலைமைக்கு முரணானது.
ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவை இலங்கைக்கு எதிராக தீர்மானமொன்றை முன்வைத்தால் அதனை எதிர்கொள்வதற்கான திட்டம் அவசியம்.
இலங்கையில் மனித உரிமை நிலவரத்தை முன்னேற்றுவதற்கான திட்டமும் அவசியம். மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை அடிப்படையாக வைத்து சர்வதேச அமைப்புகள் இலங்கையை சர்வதேச நீதிமன்றத்திற்கு எடுத்து செல்வதற்கான வாய்ப்புள்ளது. மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து இதனை முன்னெடுக்கலாம்” என தெரிவித்துள்ளார்.

“பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டம் தொடர்ச்சியாக வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படும்” – சி.சிறிதரன்

“பொத்துவில் முதல் பொலிகண்டி வரை போராட்டம் தொடர்ச்சியாக வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்படும்” என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது.

தமிழ்மக்களின் தேசிய விடுதலை வரலாற்றிலே இது ஒரு முக்கியமான மைல்கல்.
ஆயுதவிடுதலை போராட்டத்திற்கு பிற்பாடு நிறைந்த நெருக்கடிகள்,அடக்குமுறைகள் தமிழ் மக்களிற்கு எதிரான வன்முறை கொடுமைகள் இவற்றையெல்லாம் தாண்டி பல்வேறு பட்டபோராட்டங்கள் நடைபெற்றிருந்தாலும் கூட,வரலாற்றுரீதியாக கொண்டுவரப்பட்டிருக்கின்ற, வடக்குகிழக்கு சிவில் அமைப்புகளின் ஏற்பாட்டிலே முன்னிலைப்படுத்தப்படுகின்ற இந்த போராட்டம் முக்கியபாத்திரத்தை வகித்திருக்கின்றது குறிப்பாக வடக்குகிழக்கில் வாழ்கின்ற தமி;ழ் மக்களினதும் தேசிய எழுச்சியையும் தேசிய இருப்பையும் இது முன்னிலைப்படுத்தியிருக்கின்றது.
இந்த போராட்டம் இந்த அடிப்படையில் இன்னும் பல வளர்ச்சி காணும்.
இந்த போராட்டம் இத்துடன் முடிவுறுத்தப்படாமல் தொடர்ச்சியாக இன்னும் சில மாதங்களில் வேறு வடிவங்களில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கொண்டுவரப்படுகின்ற பிரேரணைகளிற்கு சார்பாகவும் இ;ந்த இடத்திலே இன்னும் நடைபெறுகின்ற அடக்குமுறைகளையும் அடாவடிகளையும் உடைத்தெறியும் வகையிலும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படும்.

 

யாழ் தீவுப்பகுதிகளில் எரிசக்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீன நிறுவனங்களிற்கு இலங்கை அனுமதி – இந்தியா அதிருப்தி !

யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதிகளில் புதுப்பித்தக்க எரிசக்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீன நிறுவனங்களிற்கு இலங்கை அனுமதி வழங்கியுள்ளமை குறித்து  இந்தியாதனது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை இந்திய நிறுவனத்திடம் கையளிப்பதில்லை என அமைச்சரவை தீர்மானிப்பதற்கு முன்னரே இந்தியா இது குறித்த எதிர்ப்பை வெளியிட்டுள்ளது என சண்டேடைம்ஸ் தெரிவித்துள்ளது.

சீனா நிறுவனங்களிற்கு அனுமதியளிக்கும் அரசாங்கத்தின் முடிவு குறித்து அரசதகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டதை தொடர்ந்தே இந்தியா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கை அமைச்சரவை ஜனவரி 18ம் திகதி இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது. யாழ்ப்பாணத்தின் தீவுப்பகுதிகளில் புதுப்பித்தக்க எரிசக்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு சீன நிறுவனங்களிற்குஅனுமதி வழங்குகின்றமை பாதுகாப்பு கரிசனைகளை எழுப்பக்கூடும் என இந்தியா தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

நெடுந்தீவு நயினாதீவு அனலைதீவு ஆகிய தீவுகளிலேயே இந்த திட்டத்தை முன்னெடுப்பதற்கான அனுமதியை சீன நிறுவனங்களிற்கு இலங்கை அரசாங்கம்அனுமதிவழங்கியுள்ளது.

 

“ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் உண்மையான நண்பர்கள் இலங்கையின் பக்கம் நிற்பார்கள்” – அமைச்சர் உதயகம்மன்பில நம்பிக்கை !

“ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் உண்மையான நண்பர்கள் இலங்கையின் பக்கம் நிற்பார்கள்” என அமைச்சர் உதயகம்மன்பில நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

நடைபெறவுள்ள ஐ.நா கூட்டத்தொடரடதொடர்பாக குறிப்பிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடரடபில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது.

“ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை இரண்டு காரணங்களிற்காக நிராகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அந்த அறிக்கை ஆணையாளருக்கு வழங்கப்பட்ட ஆணைக்கு அப்பாற்பட்டது. இரண்டரை பக்கங்கள் மாத்திரமே அவருக்கு வழங்கப்பட்ட ஆணையின் அடிப்படையில் காணப்படுகின்றன.

அவர் தனது அறிக்கையில் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை. இதன் காரணமாக இந்த இரண்டு காரணங்களிற்காக அரசாங்கம் ஆணையாளரின் அறிக்கையை நிராகரிக்க தீர்மானித்தது. இலங்கையின் பதிலை ஏற்கனவே தெரிவித்துவிட்டோம்.

அமெரிக்காவுடன் இணைந்து தீர்மானத்திற்கு இணை அனுசரனை வழங்குவது என்ற முன்னாள் வெளிவிவகார அமைச்சரின் முடிவு காரணமாக இலங்கை பாதகமான விளைவுகளை எதிர்கொண்டுள்ளது.  இதன் காரணமாகவே இலங்கை அந்த தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. இல்லாவிடில் இந்த நிலையேற்பட்டிருக்காது.

இது 1815 கண்டி பிரகடனத்தில் கைச்சாத்திட்டதை விட மோசமான விடயம் கண்டிபிரகடனம் எங்கள் இறைமையை பிரிட்டனிடம் மாத்திரம் ஒப்படைத்தது,மங்கள சமரவீர எங்கள் இறைமையை முழு தேசத்திடமும் ஒப்படைத்துள்ளார்.

ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கையின் உண்மையான நண்பர்கள் இலங்கையின் பக்கம் நிற்பார்கள் எங்களால் கூட்டாக உள்நோக்கம் கொண்ட சக்திகளின் சவால்களை சந்திக்க முடியும்” என உதயகம்மன்பில தெரிவித்துள்ளார்.

 

 

 

“பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணி  சிங்கள மக்களை சீற்றமடையச் செய்யும் செயலாகும்” – அமைச்சர் சரத் வீரசேகர

“பொத்துவில் தொடங்கி பொலிகண்டி வரையான பேரணி  சிங்கள மக்களை சீற்றமடையச் செய்யும் செயலாகும்” என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது

ஒரே நாடு ஒரே சட்டம் என்ற கொள்கையுடன் செயற்படும் அரசு நாட்டு மக்களை சிங்களம், தமிழ், முஸ்லிம் என்று வேறுபடுத்திப் பார்க்கவில்லை.

சிங்கள – பௌத்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக, தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களால் பேரணியில் கோஷங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. இது சிங்கள மக்களை சீற்றமடையச் செய்யும் செயலாகும்.

ஆனால், தமிழ், முஸ்லிம் சமூகம்தான் நாட்டின் சட்ட திட்டங்களை மீறி, நீதிமன்ற உத்தரவுகளை மீறி போராட்டங்களை நடத்தி இன்று இரண்டு இனங்களுக்கிடையில் பிளவுகள் இருக்கின்றன என்று சர்வதேசத்துக்குப் பொய்ப்பித்தலாட்டம் ஆடுகின்றன.

இந்த நாட்டில் பிரச்சினை இருந்தால் அதனை அரசுதான் தீர்க்க வேண்டுமே தவிர சர்வதேசத்தால் அதனைத் தீர்க்க முடியாது. பேரணி ஏற்பாட்டாளர்கள் இதனைக் கவனத்தில்கொள்ள வேண்டும் – என்றார்.

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான பேரணி – முஸ்லிம் மக்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் – ரிஷாத் பதியுதீன் அழைப்பு !

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிக்கான எழுச்சிப் பேரணி தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுக்குப் பாலமாக அமைந்துள்ளது. இன்று யாழ்ப்பாணத்தில் இறுதியாக நடைபெறும் இந்தப் பேரணியிலும் அங்குள்ள முஸ்லிம் மக்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்” என  அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன்அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

சிறுபான்மை இன மக்களை இலக்குவைத்து இந்த அரசு மோசமான அடக்குமுறைகளைப் பிரயோகித்து வருகின்றது. இதற்கு எதிராகவும் ஐ.நாவிடம் நீதி வேண்டியும் வடக்கு, கிழக்கு சிவில் அமைப்புகளும் தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து ஏற்பாடு செய்த பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான மாபெரும் கவனயீர்ப்புப் பேரணிக்கு எமது அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஆதரவு வழங்கி அறிக்கை வெளியிட்டிருந்தது. அத்துடன் இந்தப் பேரணியில் முஸ்லிம் மக்கள் தவறாது பங்கேற்க வேண்டும் எனவும் அந்த அறிக்கையூடாக நாம் அழைப்பு விடுத்திருந்தோம்.

இந்தநிலையில், எமது அழைப்புக்கிணங்கவும் அரசுக்கு எதிரான தங்கள் மனக்குமுறல்களைப் பகிரங்கமாக வெளிப்படுத்தும் வகையிலும் முஸ்லிம் மக்கள், முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆகியோர் இந்த எழுச்சிப் பேரணியில் பங்கேற்றுள்ளனர்.

அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில்  பெருந்திரளான முஸ்லிம்கள் வீதியில் இறங்கி பேரணியில் பங்கேற்று தமது முழு ஆதரவை வழங்கியுள்ளனர். தமிழ் மக்களுடன் கைகோர்த்து எமக்கான உரிமைகளை வென்றெடுக்கும் போராட்டத்தில் பங்கேற்ற ஒட்டுமொத்த முஸ்லிம்களுக்கும் எனது கட்சி சார்பில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

இன்று யாழ்ப்பாணத்தில் இறுதியாக நடைபெறும் இந்தப் பேரணியிலும் அங்குள்ள முஸ்லிம் மக்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும். பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிக்கான இந்த எழுச்சிப் பேரணி தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவுக்குப் பாலமாக அமைந்துள்ளது.

தமிழ் – முஸ்லிம் சமூகத்தின் இந்தப் பேரெழுச்சியைப் பார்த்தாவது இலங்கை அரசின் அடக்குமுறைகளால் பாதிக்கப்பட்ட சிறுபான்மை இன மக்களுக்கு நீதியை வழங்க ஐ.நா. முன்வரவேண்டும். இது ஐ.நாவின் பிரதான கடமையாகும் என்றார்.

“தமிழர்களின் உரிமைப்போராட்டம் தமக்கான நீதியைப் பெறும்வரை ஒருநாளும் ஓயப்போவதில்லை என்பதை பொத்துவில் முதல் பொலிகண்டிப் பேரணி எடுத்துக்காட்டுகின்றது” – நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான்

“தமிழர்களின் உரிமைப்போராட்டம் தமக்கான நீதியைப் பெறும்வரை ஒருநாளும் ஓயப்போவதில்லை என்பதை பொத்துவில் முதல் பொலிகண்டிப் பேரணி எடுத்துக்காட்டுகின்றது” என நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசினுடைய அடக்குமுறைகளை எதிர்த்தல் என்னும் தொனிப்பாருளில் பொத்துவில் முதல் பொலிகண்டிப் பேரணி தமிழரின் பூர்வீக பகுதிகளில் இடம்பெற்று வருகின்றது. இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது

“ஈழத்தில் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட இனவழிப்புப் போரில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளைக் கேட்டு கிளிநொச்சி, கந்தசுவாமி கோயில் முற்றத்தில் நடைபெற்றுவரும் பட்டினிப் போராட்டமும், பொத்துவில் தொடங்கியிருக்கும் நடை பயணமும் நம்பிக்கையைத் தருகிறது.

பேரினவாத ஆட்சியாளர்களின் கோர அடக்குமுறைகளுக்கு மத்தியிலும் நெஞ்சுரத்தோடு போராட்டத்தை முன்னெடுத்திருக்கும் ஈழச் சொந்தங்களைப் பெரிதும் போற்றுகிறேன்.

கடந்த அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தாயக விடுதலைக்காகவும், தங்களது மண்ணுரிமைக்காகவும் போராடிய தமிழ் மக்கள் மீது, இனவெறியும், இனத்துவேசமும் கொண்டு, பல்வேறு அடக்குமுறைகளை ஏவி, அரச பயங்கரவாதத்தின் மூலமும் உள்நாட்டுப்போர் மூலமும் இரண்டு இலட்சம் தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த இனப் படுகொலை நிகழ்ந்து பத்தாண்டுகளாகியும் அதுகுறித்து எவ்விதப் பன்னாட்டு விசாரணையும் நடத்தப்படாத நிலையில் அதற்கான நீதியைக் கேட்டு நிற்கிறோம். அனைத்துலக நாடுகளும் கைவிட்ட கையறு நிலையிலும் சர்வதேசச் சமூகத்திடம் மன்றாடி வருகிறோம்.

தமிழர்களின் போராட்டங்களுக்குச் செவிசாய்க்காத இலங்கை அரசு இனவழிப்பு நடவடிக்கைகளை இன்னும் தீவிரப்படுத்தியுள்ளதை அண்மைக்காலமாக ஈழத்தில் நடைபெறும் நிகழ்வுகள் நமக்கு உணர்த்துகின்றன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களை முழுக்க இராணுவ மயமாக்குவது, தமிழர் காணிகளை ஆக்கிரமிப்பது, புதிய சிங்களக் குடியேற்றங்களை உருவாக்கி, பூர்வக்குடிகளான தமிழர்களின் இருப்பைக் குறைப்பது, இருநூறுக்கும் மேற்பட்ட தமிழர் வழிபாட்டுத் தலங்களைச் சிதைத்தழிக்க முயல்வது, புத்த விகார்களைப் புதிதாக நிறுவுவது, தமிழ் மக்களின் இன, மொழி, பண்பாடு ஆகியவற்றுக்கான வரலாற்று அடையாளங்களை முற்றலுமாக அழிப்பது என மறைமுகமாகவும், நேரடியாகவும் இனவழிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

மேலும், இசுலாமிய மக்களின் பாரம்பரிய சமயச் சடங்கான இறந்தவர்களைப் புதைக்கும் செயற்பாடுகளுக்குத் தடைவிதித்து, உடல்களை எரியூட்டி வருவதுடன், அதற்கு எதிராகப் போராடும் இசுலாமியர்களை அடக்கி ஒடுக்குவது, விசாரணை ஏதுமின்றி அரசியல் கைதிகளாகச் சிறைகளிலுள்ள தமிழர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்க மறுத்து சிங்களக் கைதிகளை மட்டும் விடுவிப்பது, மனித உரிமை மீறல்களை வெளிக்கொண்டு வரும் ஊடகவியலாளர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களை அச்சுறுத்தி அவர்களின் பேச்சுரிமை, எழுத்துரிமையைப் பறிப்பதெனப் பல்வேறு தொடர் இனவெறித் தாக்குதல்களை ஒவ்வொரு நாளும் நடத்திக் கொண்டிருக்கிறது இலங்கை அரசு.

இந்நிலையில், எத்தகைய அடக்குமுறைகளை ஏவினாலும், இனவழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும், தமிழர்களின் உரிமைப்போராட்டம் தமக்கான நீதியைப் பெறும்வரை ஒருநாளும் ஓயப்போவதில்லை என்பதை உணர்த்தும்விதமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் தற்போதையப் போராட்டங்கள் சிங்கள ஆட்சியாளர்களைக் கலக்கத்திற்குள் ஆழ்த்தியிருக்கிறது.

அந்தவகையில், கிளிநொச்சி கந்தசுவாமி கோயில் முன்றலில் சுழற்சி முறையிலான பட்டினிப் போராட்டமும், தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகளைக் கண்டித்துப் பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரை நடைப்பயணமும் தொடங்கப் பெற்றுள்ளதை அறிந்தேன்.

இலங்கை சுதந்திர நாளினை, கறுப்பு நாளாகக் கடைப்பிடித்து, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்ககளைக் கண்டுபிடித்துத் தரக்கோரி அவர்களது உறவுகளால் தொடங்கப்பட்டுள்ள நீதிக்கான இப்போராட்டத்தை முழுமையாக ஆதரிக்கிறேன்.

போராட்டம் வெற்றியை நிலைநாட்டவும், கோரிக்கைகள் நிறைவேற்றம் செய்யப்படவும் எமது உளப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர செய்முறை பரீட்சையை இடைநிறுத்த முடிவு !

நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதர செய்முறை பரீட்சையை இடைநிறுத்த முடிவு செய்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடிய பின்னர், பாடசாலையில் இடம்பெற்ற பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் புள்ளிகளை பெற்று அதன் அடிப்படையில் முடிவுகளை அறிவிக்க தீர்மானித்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

அதன்படி, தரம் 10 இல் மூன்று தவணையிலும் 11 ஆம் வகுப்பில் இரு தவணைகளிலும் பெறப்பட்ட மதிப்பெண்களை பரீட்சைகள் திணைக்களத்திற்கு அனுப்ப வேண்டும் என அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும், கல்வி வலையத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளதாக கூறினார்.

2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையை அடுத்த மாதம் 1 முதல் 11 வரை நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.