உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“இஸ்லாமியர்களின் மனதை நோகடித்து அவர்களை கோபத்துக்குள்ளாக்காதீர்கள். அது எமக்குப்பாவம் ” – பகவந்தலாவ ராகுல ஹிமி

“சடலங்களை வைத்துக் கொண்டு அரசியல் செய்வதற்கு இடமளிக்க வேண்டாம். இஸ்லாமியர்களின் மனதை நோகடித்து அவர்களை கோபத்துக்குள்ளாக்காதீர்கள். அது எமக்குப்பாவம் ” என பகவந்தலாவ ராகுல ஹிமி தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

இஸ்லாமியர் ஒருவர் மரணித்து விட்டால் அவரது உடலை என்ன செய்ய வேண்டும் என அம்மதத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. என்ன கொடுமை மனிதன், மனிதனால் பழிவாங்கப்படுகிறான். இப்போது நாட்டில் புதிய கதையொன்று ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இறந்தவர்களின் உடலை எரிப்பதா? அடக்கம் செய்வதா? என்று. இறந்தவர்களின் உடலை எரிப்பது பாவமென்று இஸ்லாமிய தர்மம் கூறியுள்ளது. இறந்தவர்களின் உடலுக்கு மரியாதை செய்ய வேண்டும்.

அங்கு சடலங்கள் எரிக்கப்படவில்லை. சுகாதாரத்துறை என்ன கூறுகிறதோ அதை நடைமுறைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். ஏன் இலங்கை நாட்டில் மாத்திரம் தகனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நாட்டின் தலைவர்களே இவ்விவகாரம் தொடர்பில் சரியான ஒரு பதிலை இந்நாட்டு மக்களுக்கு வழங்குங்கள். என்ன நடைமுறை என இலங்கை அரசாங்கம் சரியான சட்டமொன்றினை நடைமுறைப்படுத்தப்படுத்த வேண்டும். இல்லையேல் ஜனாதிபதி மக்களின் மனதை ஆறுதல்படுத்தும் வகையில் வார்த்தையொன்றினைக் கூறவேண்டும்.

மண்ணில், புதைத்தால் விஷக்கிருமிகள், வைரஸ் வெளியில் பரவும் என்கிறார்கள். வைரஸ் தொற்றாளர்கள் மருந்துவமனையில் இருக்கும்போது கழிப்பறை செல்வதில்லையா? மலசலம் கழிப்பதில்லையா? இதன் மூலம் விஷக்கிருமிகள் வைரஸ் பரவமாட்டதா? வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் கொவிட்-19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டால் மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறார்கள்.

அவர்கள் தமது வீடுகளில் கழிப்பறை செல்லவில்லையா? பக்கத்தில் வேறு வீடுகள் இல்லையா? அந்த வைரஸ் பக்கத்து வீடுகளுக்கு செல்லாதா? ஏன் இத்தனை முட்டாள்களாக கதை கூறுகிறார்கள். இதுவா நாட்டின் சட்டம். மக்கள் மனதை நோகடிக்காதீர்கள். கொவிட் -19 தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் உடல்களை அடக்கம் செய்யும் உரிமையைப் பெற்றுக் கொடுக்க ஜனாதிபதி ஆவன செய்ய வேண்டும்” எனவும் அவர் கூறியுள்ளார்.

“உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் தின நினைவேந்தலைப் பொது வெளியில் நடத்துவதற்கு இடமளிக்க முடியாது” – லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா

“உயிரிழந்த தமிழீழ விடுதலைப்புலிகளுக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையில் மாவீரர் தின நினைவேந்தலைப் பொது வெளியில் நடத்துவதற்கு இடமளிக்க முடியாது” என கொரோனாத் தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார் .

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டம் நடைமுறையில் உள்ளது. மக்கள் ஒன்று கூடுவது தொடர்பில் சுகாதாரப் பாதுகாப்பு வழிகாட்டல்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்படி நடைமுறைகளை மீறி ஏனையோரின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் பொதுவெளியில் எவராவது செய்யப்பட்டால் அவர்களுக்கு எதிராகப் காவல்துறையினரால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

போரில் மரணித்த சாதாரண மக்களை நினைவுகூர்வதற்கான உரிமை அவர்களின் உறவினர்களுக்கு இருக்கின்றது. அதனை வீட்டில் இருந்து செய்யலாம். ஆனால், பயங்கரவாத அமைப்பில் இருந்து பெரிய அழிவுகளை ஏற்படுத்திவிட்டு உயிரிழந்தவர்களை அதுவும் பொது வெளியில் குழுக்களாக இணைந்து நினைவுகூர்வது ஏற்புடைய நடவடிக்கையாக இருக்காது. உலகில் எந்தவொரு நாடும் இதற்கு அனுமதி வழங்காது.

எனவே, தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையிலும், அவ்வமைப்புக்குப் பரப்புரை செய்யும் நோக்கிலும் பொதுவெளியில் நினைவேந்தல் நிகழ்வு நடத்தப்படுமானால் – சுகாதாரப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விடுக்கப்படுமானால் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அண்மையில் இடம்பெற்ற பாராளுமன்ற அமர்வில் மாவீரர்களை நினைவுகூர்வதற்கான உரிமை தமிழர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வேண்டுகோள் விடுத்திருந்ததுடன் கூட்டமைப்பின் இன்னுமொரு  பாராளுமன்ற உறுப்பினரான சி.சிறீதரன் மாவீரர் தினத்தை நடாத்த அனுமதி வழங்குமாறு  கோரி ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  நாட்டு மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை” – சம்பிக்க ரணவக்க குற்றச்சாட்டு !

“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச  நாட்டு மக்களுக்கு வழங்கிய எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை” என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க குற்றஞ்சாட்டினார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நேற்று(15.11.2020) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:-

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஆட்சியமைத்து ஒருவருடம் பூர்த்தியாகிவிட்டது. ஆனால், மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள் எதனையும் இன்னும் நிறைவேற்றவில்லை. தேசிய பாதுகாப்பு மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாகக் குறிப்பிட்டனர். மேலும் சுபீட்சமான பொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாகத் தெரிவித்தனர். இதுவரையில் அதில் எதனையாவது செய்துள்ளார்களா?

நல்லாட்சி அரசுக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களில் உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்கள் மற்றும் மத்திய வங்கி பிணைமுறி மோசடி என்பன கொள்கை அடிப்படையில் காணப்படுகின்றன. ஜனாதிபதி தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரனை நாட்டுக்கு அழைத்து வருவோம் என்று கூறினர். ஆனால், பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைய இலங்கையிலுள்ள சந்தேகநபர்களுக்கு எதிராகக்கூட இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புடைவர்கள் ஆளும் தரப்பினருடனும் தொடர்பில் இருக்கின்றமையே இதற்குக் காரணமாகும். ஆளும் தரப்புக்கும் இந்தச் செயற்பாடுகளுடன் தொடர்புள்ளது என்று கூறுவதற்கு நாம் பின்வாங்கமாட்டோம்.

உயிர்த்த ஞாயிறு தினத் தொடர் குண்டுத் தாக்குதல் சம்பவம் எம் மீது சுமத்தப்பட்ட மற்றைய குற்றச்சாட்டாகும். இந்தத் தாக்குதல் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. அந்த விசாரணைகள் அனைத்துமே ஒரு பகுதியில் மாத்திரமே இடம்பெற்று வருகின்றன. அதாவது வெளிநாட்டுப் புலனாய்வுத் தகவல்கள் கிடைக்கப் பெற்றும் தாக்குதலைத் தடுக்க முடியாமல் போனமை தொடர்பிலேயே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இது தொடர்பில் மாறுபட்ட கோணத்தில் எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை. இந்தத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமை, 2017ஆம் ஆண்டு காத்தான்குடியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அவரைக் கைதுசெய்திருக்க வில்லை. அவர் இந்தியாவுக்குத்  தப்பிச் சென்றிருந்தார். அவருக்கு உதவி வழங்கிய நபர்கள் யார்? இதேவேளை, இவருடன் தொடர்பைப் பேணிய ஆளும் தரப்பு உறுப்பினர்கள் தொடர்பிலும் கூறப்படுகின்றது. அது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளலாம்தானே.

ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பினருடன் இலங்கையில் சிலர் தொடர்பு கொண்டுள்ளார்கள். அவ்வாறான 45 நபர்கள் தொடர்பிலும் வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவு தகவல் வழங்கியிருந்தது. எனினும், அது தொடர்பில நடவடிக்கை எடுக்காமைக்குக் காரணம் என்ன? இந்த விடயங்கள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்த வேண்டும்” என்றார்.

கொரோனா மூன்றாம் அலையினைத் தொடர்ந்து கொரோனா பரவலில் இலங்கைக்கு 100ஆவது இடம் !

நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 287ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 171 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை பதினொராயிரத்து 495 பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 734 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.

இதேவேளை, நாட்டில் இன்று ஐவர் கொரோனா தொற்றினால் மரணித்துள்ள நிலையில் மொத்த மரணங்கள் 58ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, நாட்டில் கொரோனாவின் மூன்றாம் அலையினைத் தொடர்ந்து ஏற்பட்ட வைரஸ் பரவலினால் உலகள அளவில் 134ஆவது இடத்தில் இருந்த இலங்கை தற்போது 100 ஆவது இடத்திற்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தமிழர் பகுதிகளில் அதிகரிக்கும் வன்முறை வாள்வெட்டுக்கலாச்சாரம் – முல்லைத்தீவில் வாளுடன் இளைஞர் கைது !

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் வாள்வெட்டு குழுவின் அட்டகாசம் தாங்க முடியாத நிலையில் உள்ளதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் வாளுடன் நடமாடிய குழுவினை சேர்ந்த ஒருவரை தேராவில் கிராம மக்கள் மடக்கி பிடித்து புதுக்குடியிருப்பு காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வாள்வெட்டு குழுவின் தொல்லை தாங்கமுடியாத நிலை காணப்படுவதாகவும் இரவு நேரங்களில் விதவை பெண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பு கொள்ளும் வாள்வெட்டு குழு, வீட்டிற்கு வரவா ? இல்லை உன் மகளை கடத்துவோம் அல்லது மகளுக்கு கை எடுப்போம் என மிரட்டல் விடுவதாகவும் இவ்வாறு கதைப்பவர்களின் ஒலி வடிவங்கள் பதிவு செய்யப்பட்டு காவல்துறையினருக்கு கொடுத்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில், இன்று (15.11.2020) காலை வாளுடன் வெட்ட வந்தவர்களை பிடித்த கிராம இளைஞர்கள் அதில் ஒருவரை பிடித்து வீட்டில் கட்டி வைத்து காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்கள்.

தேராவில் கிராமத்தினை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு இளைஞர் குழுக்களுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகள் காரணமாக வாள்களுடன் நடமாடுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளார்கள்.

வாளுடன் கைதுசெய்யப்பட்ட இளைஞனிடம் புதுக்குடியிருப்பு காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருவதுடன் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்கள்.

தமிழர் பகுதிகளில் வாள்வெட்டுச்சம்பவங்கள் அதிகரித்து வருவதுடன் சமூகத்தை இன்னும் தாழ்த்தக்கூடிய வாள்வெட்டுச்சம்பவங்கள் நாளுக்கு நாள் பதிவாகிய வண்ணமேயுள்ளன. குறிப்பாக இளைஞர்களே பெரும்பாலும் இந்த வாள்வெட்டுச்சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்களாக காணப்படுகின்றமையானது தமிழர் சமூகத்தின் எதிர்கால இருப்பினை கேள்விக்குள்ளாக்கியுள்ளது.

கிளிநொச்சியில் 40 வயதுடைய ஆண் இனந்தெரியாத நபர்களால் வெட்டிப்படுகொலை !

கிளிநொச்சி பளை பிரதேசத்தில் 40 வயதுடைய ஆண் இனந்தெரியாத நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று மாலை 3 மணியளவில் பதிவாகியுள்ளது.

கிளிநொச்சி பளை காவல்துறை பிரிவிற்குட்பட்ட தம்பகாமம் ஊடாக மாமுனை செல்லும் வீதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் செம்பியன்பற்று வடக்கு மாமமுனை பகுதியை சேர்ந்த 40 வயதான தனபாலசிங்கம் குலசிங்கம் என்பவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் பளை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் ஐவர் பலி !

நாட்டில் மேலும் ஐவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு-13 பகுதியில் 54 மற்றும் 88 வயதுடைய இருவர் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பினார் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், கொழும்பு-12 பகுதியில் 88 வயதுடைய ஒருவரும் கொழும்பு-15 பகுதியில் 39 வயதுடைய ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.  மேலும், பொரள்ள பகுதியைச் சேர்ந்த 79 வயதுடைய ஒருவரும் கொரோனா தொற்றினால் மரணித்துள்ளார்.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை 58 ஆக அதிகரித்துள்ளது.

இதே நேரம் நாட்டில் மேலும் 544 பேருக்கு தற்போது வரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி நாட்டில் இதுவரை தொற்று உறுதியானோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்து 127 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை கொரோனா தொற்றில் இருந்து கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 171 பேர் குணமடைந்துள்ள நிலையில் குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 495 ஆக காணப்படுகின்றது.

அரச காணிகளை தொழில்முனைவோருக்கு பிரித்து வழங்கும் வேலைத்திட்டம் – தமிழர்கள் விண்ணப்பிக்காதவிடத்து காணிகள் தென் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு சென்றடையவுள்ளது”  – தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் என். இன்பம்

“அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அரச காணிகளை தொழில்முனைவோருக்கு பிரித்து வழங்கும் வேலைத்திட்டம் – தமிழர்கள் விண்ணப்பிக்காதவிடத்து காணிகள் தென் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு சென்றடையவுள்ளது”   என தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட இணைப்பாளர் என். இன்பம் தெரிவித்துள்ளார்.

இன்றைய தினம்(15.11.2020)  யாழ்ப்பாணத்தில் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே என்.இன்பம் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

20201115 103949

அவர் மேலும் தெரிவிக்கையில்….

அரசினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அரச காணிகளை தொழில்முனைவோருக்கு பிரித்து வழங்கும் வேலைத்திட்டம் தொடர்பில் அரசியல்வாதிகளால் பொதுமக்களுக்கு பூரண விளக்கம் வழங்கப்படவில்லை.

குறித்த திட்டத்தின் முக்கியத்துவம் தொடர்பில் பொதுமக்களுக்கு போதிய விழிப்புணர்வின்மை காரணமாக பல பொதுமக்கள் இந்த விடயம் தொடர்பில் கரிசனை செலுத்த வில்லை. ஒரு சில அரசியல்வாதிகளை தவிர ஏனையவர்கள் குறித்த விடயம் தொடர்பில் பொது மக்களுக்கான விழிப்புணர்வினை ஏற்படுத்த தவறி விட்டார்கள் .

இதன் காரணமாக காணி வழங்குவது சம்பந்தமான விடயம் பொது மக்களை சென்றடையவில்லை எனவே தமிழர் பகுதிகளில் தமிழ் மக்கள் காணிக்கு விண்ணப்பிக்காத விடத்து தென் இலங்கையைச் சேர்ந்தவர்கள் குறித்த காணிகளை பெறக் கூடிய நிலைமை காணப்படுகின்றது.

எனவே தமிழ் மக்களுக்கு இந்த காணி வழங்குவது தொடர்பான விழிப்புணர்வை அரசியல்வாதிகள் ஏற்படுத்த தவறினால் தமிழர் பகுதியில் உள்ள காணிகள் தென் இலங்கையைச் சேர்ந்தவர்களுக்கு சென்றடையவுள்ளது எனவே இந்த விடயம் தொடர்பில் அரசியல் வாதிகள் இதுவரை கரிசனை செலுத்தாதது கவலையளிக்கின்றது.

நாளை வரை விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளது எனவே நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயத்தில் தலையிட்டு இந்த வருட இறுதி வரை விண்ணப்பிக்க அரசிடம் காலநீடிப்பை கோர முயற்சிக்க வேண்டும்” எனவும் தெரிவித்துள்ளார்.

தொழில் முனைவோருக்கு அரசினால் காணி வழங்கும் வேலைத்திட்டம் ஒன்றிற்கான விண்ணப்படிவங்கள் அரசினால் கோரப்பட்டிருந்ததுடன் கடந்த மாதம் 30ஆம் திகதியுடன் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் போதுமான விண்ணப்பங்கள் கிடைத்திராமையால் திகதி இந்த மாதம் (கார்த்திகை .15) நீட்டிக்கப்பட்டிருந்தது. குறிப்பாக இது தொடர்பாக மக்களிடையே தகவலை கொண்டு சென்று சேர்க்கவேண்டிய அரசாங்க அதிகாரிகளும் சரி அரசியல்வாதிகளுமு் சரி முறையாக தகவலை மக்களிடையே எடுத்துக்கூற தவறிவிட்டனர் என்பது தொடர்பாக பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

சுழிபுரம் மத்தி குடாக்கனை இரட்டைக்கொலை – “21 பேர், அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்” – பொலிஸ் ஊடகப் பேச்சாளர் !

யாழில் இரு குடும்பங்களுக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு மோதலாக உருவெடுத்து இருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் 12 பேரை வட்டுக்கோட்டை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, சுழிபுரம் மத்தி குடாக்கனை பகுதியில் நேற்றுமுன்தினம் (13.11.2020) வெள்ளிக்கிழமை மாலையளவில், மரணமடைந்த குறித்த நபர்கள் இருந்த இடத்திற்கு வந்த 21 பேர், அவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், DIG அஜித் ரோஹண தெரிவித்தார்.

இம்மோதல் சம்பவத்தில் அப்பகுதியை சேர்ந்த  சின்னவன் செல்வம் (55) மற்றும் இராசன் தேவராசா (32) ஆகிய இருவர் உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் நேற்றையதினம் (14) மல்லாகம்  நீதவானினால் மரண விசாரணை மேற்கொள்ளப்பட்டதோடு, பிரேதப் பரிசோதனையைத் தொடர்ந்து, சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இரு குடும்பங்களுக்கு இடையில் நீண்ட காலமாக நிலவி வந்த முரண்பாடு நேற்று முன்தினமும் ஏற்பட்டுள்ளது. மாலை இரு குடும்பங்களுக்கும் இடையில் கடும் வாய் தர்க்கம் ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறும் சூழல் காணப்பட்ட போது அயலவர்களால் இரு தரப்பினரும் சமாதானப்படுத்தப்பட்டனர்,

பின்னர் பின்னிரவு நேரம் ஒரு தரப்பினர் மற்றைய தரப்பினரின் வீட்டினுள் அத்துமீறி நுழைந்து வீட்டிலிருந்தவர்கள் மீது கூரிய ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

அதில்  சின்னவன் செல்வம் சம்பவ இடத்திலையே உயிரிழந்துள்ளார், மற்றையவரான இராசன் தேவராசா (32) சிகிச்சைக்காக வைத்திய சாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் குறித்த 21 பேரில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு, அவர்களை இன்றையதினம் (15.11.2020) மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி, விளக்கமறியலில் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வட்டுக்கோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

………………………………………………………………………………………………………………………..

வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை குணாதிசயங்கள் இன்மையினால் ஏற்படுகின்ற சொத்து இழப்புகள் உயிரிழப்புகள் மட்டுமல்ல வாழ்க்கையின் விலை மதிப்பற்ற சந்தோசங்களையும் மன அமைதியயையும் நாங்கள் இழக்கின்றோம். இந்த சண்டை சச்சரவுகளை தீர்க்க பொலிசார் அதனை தீர்த்து வைக்க நீதிமன்றம் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் இரு வருமானமீட்டுபவர்களை இழந்தால் அதற்கு அரசும் சுற்றியுள்ளவர்களும் நிதி உதவி வழங்க வேண்டும் உடல் உறுப்புக்களை இழந்தால் ஏற்படும் துன்பம். இவை எல்லாவற்றுக்கும் ஏற்படும் செலவை சிந்திப்பதற்கு சில நிமிடங்கள் செலவழித்து இருந்தால் தவிர்த்திருக்கலாமே. உளவியல் கற்கையயை அறிமுகப்படுத்தி முதலில் சிறந்த மனிதர்களை உருவாக்கினால் குடும்பம் மட்டுமல்ல உலகமே அமைதிப் பூங்காவாகும். (ஜெயபாலன்.த)

கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் துப்பரவு பணிகளில் ஈடுபட்ட சிவஞானம் சிறிதரன் மீது  பொலிஸார் வழக்கு பதிவு !

அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்தி போராடி யுத்தத்தில் உயிர் நீத்த வீரர்களை நினைவு கூறும் நாள் கார்த்திகை 27ஆம் திகதி தமிழ் மக்களினால்  மாவீரர் தினமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அதனை முன்னிட்டு இன்று (15.11.2020) காலை, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தின் துப்பரவு பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தலைமையிலும் அப்பகுதி மக்களுடைய இணைவிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்போது, குறித்த சம்பவம் அறிந்து அவ்விடத்திற்கு விரைந்த கிளிநொச்சி பொலிஸார், துப்பரவு பணிக்கு அனுமதி வழங்கியது யார்?  என வினவியதுடன், பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மீது  வழக்கு பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் துப்பரவு பணிகளில் மக்களும் ஈடுபட்டு வருகின்றனர்.  குறித்த துயிலுமில்லத்தை தூய்மைப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுப்பட்டுள்ள மக்களின் விபரங்களை கிளிநொச்சி காவல்துறையினர் பெற்றுச்சென்றுள்ளதாக வும் தெரிவிக்கப்படுகின்றது

இதேவேளை இம்முறை மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்கப்படுமா? என்பது தொடர்பில் இதுவரை எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது .

முன்னதாக மாவீரர் தினத்தை உணர்வு ரீதியாக அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்குமாறு கோரி ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களுக்கு சிவஞானம் சிறிதரன் கடிதம் ஒன்றினை அனுப்பியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.