உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

வவுனியா வடக்கு – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயவழிபாட்டுக்கு தடைநிற்கும் காவல்துறைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் வழக்கு தாக்கல் – எம்.ஏ.சுமந்திரன் உறுதி !

பல தலைமுறைகளாக தமிழர்கள் வழிபட்டு வரும் வவுனியா வடக்கு – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயவளாகத்தை தொல்பொருள்திணைக்களமானது சிங்கள- பௌத்த மயப்படுத்த முனைவதுடன் இதற்கு அப்பகுதி காவல்துறையினரும் துணைபோகின்றமையானது அப்பகுதி தமிழர்கள் மத்தியில் பாரிய எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் வவுனியா வடக்கு – வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலய வழிபாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் விரைவில் அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்யவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஆலய வழிபாட்டிற்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளமை தொடர்பாக, ஆலய நிர்வாகத்தினரை, வவுனியாவில் உள்ள தமிழரசுக் கட்சியின் தலைமையகத்தில், சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

வெடுக்குநாறி ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்திற்கு அடியவர்கள் சென்று வழிபடுவதற்கு நெடுங்கேணி காவல்துறையினர் தடைவிதித்து வருகின்றனர்.

ஆலயத்தில் பூசை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டிருக்கின்றது. அந்த ஆலயத்தின் பூர்வீகம், வரலாறு என்பனவற்றை கருத்தில் கொண்டு மக்கள் அங்கே வணங்குவதற்கான உரித்து உள்ளது. அதை எவரும் தடுக்க முடியாது என்ற ரீதியிலே அடிப்படை உரிமை மீறல் வழக்கு ஒன்றினை உடனடியாகத் தாக்கல் செய்யவுள்ளதாகவும், சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.

 

“என்னை பொறுத்த வரையில் சிங்களர்களாக இருந்தாலும் மலையக தமிழர்களாக இருந்தாலும் ஈழத்தமிழர்களாக இருந்தாலும் அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன்”- முத்தையாமுரளிதரன் !

இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான முத்தையா முரளிதரனின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘800’ என்கிற படம் உருவாகவுள்ளது. ஸ்ரீபதி ரங்கசாமி இயக்கும் இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். இதற்கான அறிவிப்பு வெளியானதில் இருந்தே இப்படத்திற்கான எதிர்ப்பும் அதிகரித்தது.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகும் 800 படத்திற்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இது நாள் வரை என் வாழ்க்கையில் பல சர்ச்சைகளை கடந்தே வந்துள்ளேன் அது விளையாட்டானாலும் சரி தனிப்பட்ட வாழ்க்கையானாலும் சரி, தற்போது எனது வாழ்க்கை வரலாற்று படமான திரைப்படத்தை சுற்றி பல்வேறு சர்ச்சைகள் விவாதங்கள் எழுந்துள்ள நிலையில் அதற்கான சில விளக்கங்களை கூற விரும்புகிறேன். என்னை பற்றிய திரைப்படம் எடுக்க நினைப்பதாக கூறி தயாரிப்பு நிறுவனம் என்னை அணுகியபோது முதலில் தயங்கினேன்.

பிறகு முத்தையா முரளிதரனாக நான் படைத்த சாதனைகள் என்னுடைய தனிப்பட்ட சாதனைகள் மட்டும் இல்லையென்பதாலும் இதற்கு பின்னால் எனது பெற்றோர்கள் என்னை வழிநடத்திய ஆசிரியர், எனது பயிற்சியாளர்கள் சக வீரர்கள் என பலராலும் உருவாக்கப்பட்டவன் என்பதாலும் அதற்கு காரணமானவர்களுக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும் என நினைத்துதான் இந்த திரைப்படத்தை உருவாக்க சம்மதித்தேன்.

இலங்கையில் தேயிலைத் தோட்ட கூலியாளர்களாக எங்கள் குடும்பம் தங்களது வாழ்க்கை பயணத்தை ஆரம்பித்தது. முப்பது வருடங்களுக்கு மேலாக நடைபெற்ற போரில் முதலாவதாக பாதிக்கப்பட்டது இந்திய வம்சாவழியான மலையக தமிழர்கள் தான். இலங்கை மண்ணில் எழுபதுகள் முதல் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கலவரங்கள் முதற்கொண்டு , ஜே வி பி போராட்டத்தில் நடந்த வன்முறை , பின்னர் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள் என எனக்கு நினைவு தெரிந்த நாள் முதலே தொடர்ந்து கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறோம்.

என் ஏழு வயதில் எனது தந்தை வெட்டப்பட்டார், என் சொந்தங்களில் பலர் பலியாகினர், வாழ்வாதாரத்தை இழந்து பல முறை நடுத்தெருவில் நின்றிருக்கிறோம். ஆதலால் போர் நிகழும் இழப்பு அதனால் ஏற்படும் வலி என்ன என்பது எனக்கும் தெரியும். முப்பது வருடங்களுக்கு மேல் போர் சூழ்நிலையில் இருந்த நாடு இலங்கை. அதன் மத்தியிலேயேதான் எங்கள் வாழ்க்கை பயணம் நடைபெற்றது. இந்த சூழ்நிலையில் இருந்து எப்படி நான் கிரிக்கெட் அணியில் இடம்பெற்று சாதித்தேன் என்பது பற்றியான படம் தான் 800.

இது இப்போது பல்வேறு காரணங்களுக்குக்காக அரசியலாக்கி எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. அதற்கு காரணம் நான் பேசிய சில கருத்துகள் தவறாக திரித்து சொல்லப்பட்டதால் வந்த விளைவு தான். உதாரணமாக நான் 2009 ஆம் ஆண்டு தான் என் வாழ்க்கையில் மிக மகிழ்ச்சியான நாள் என்று 2019-ல் கூறியதை தமிழர்களை கொன்று குவித்த நாள்தான் முத்தையா முரளிதரன் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என திரித்து எழுதுகிறார்கள்.

ஒரு சராசரி குடிமகனாக சிந்தித்துப் பாருங்கள் போர் சூழ்நிலையிலேயே இருந்த ஒரு நாட்டில் எங்கு எது நடக்கும் என்பது தெரியாது, என் பள்ளிகாலத்தில் என்னுடன் பள்ளியில் ஒன்றாக விளையாடிய மாணவன் மறு நாள் உயிருடன் இருக்க மாட்டார். வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் வீடு திரும்பினால்தான் நிஜம். இப்படி பட்ட சூழ்நிலையில் போர் முடிவுற்றது ஒரு சராசரி மனிதனாக பாதுகாப்பாக உணர்வது மட்டுமல்லாமல் போர் நிறைவடைந்ததால் கடந்த பத்து வருடங்களாக இரண்டு பக்கமும் உயிரிழப்புகள் ஏதும் இல்லாமல் இருப்பதை மனதில் வைத்தே 2009 ஆம் ஆண்டு எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்கிற கருத்தினைத் தெரிவித்தேன். ஒரு போதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை ஆதரிக்கவும் மாட்டேன்.

என்னை பொறுத்த வரையில் சிங்களர்களாக இருந்தாலும் மலையக தமிழர்களாக இருந்தாலும் ஈழத்தமிழர்களாக இருந்தாலும் அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன். ஒரு மலையக தமிழன் நான் என் மலையக மக்களுக்கு செய்த உதவிகளை காட்டிலும் ஈழமக்களுக்கு செய்த உதவிகளே அதிகம். நான் இலங்கை அணியில் இடம்பெற்று சாதனை படைத்த காரணத்தினாலேயே என் மீது ஒரு தவறான பார்வை இருந்து வருகிறது. நான் இந்தியாவில் பிறந்து இருந்தால் நான் இந்திய அணியில் இடம்பெற முயற்சித்திருப்பேன். இலங்கை தமிழனாக பிறந்தது எனது தவறா?

இவை அனைத்தும் விடுத்து சிலர் அறியாமையாலும் சிலர் அரசியல் காரணத்திற்காகவும் என்னை தமிழ் இனத்திற்கு எதிரானவர் என்பது போல் சித்தரிப்பது வேதனையளிக்கிறது.

எவ்வளவு விளக்கமளித்தாலும் எதிர்ப்பாளர்கள் யாரையும் சமாதானப்படுத்த முடியாது என்றாலும் என்னைப் பற்றி ஒரு பக்கம் தவறான செய்திகள் மட்டுமே பகிரப்பட்டு வரும் நிலையில் நடுநிலையாளர்களுக்கும் பொது மக்களுக்கும் இவ்விளக்கத்தை அளிக்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மட்டக்களப்பில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 15வயது சிறுவன் உட்பட ஐவர் கைது !

மட்டக்களப்பு – வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பதினொரு கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் வெவ்வேறு இடங்களில் ஐந்து பேர் இன்று (16.10.2020) கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்துள்ளார்.

வாழைச்சேனை பொலிஸ் நிலைய பிரிவில் சட்டவிரோத நிகழ்வுகள் இடம்பெற்று வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டு சட்டவிரோத நிகழ்வுகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதற்கமைய பிறைந்துறைச்சேனை பிரதேசத்தில் இருந்து 21, 22 வயதுடைய மூன்று இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 10 கிராம் ஹெரோயின் போதைப் பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்தோடு செம்மண்ஓடை கிராமத்தில் 15 சிறுவன், 26 வயது இளைஞன் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர்களிடமிருந்து தொல்லாயிரத்தி எண்பது மில்லி கிராம் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகினார் சட்டத்தரணி குருபரன் !

குமாரவடிவேல் குருபரன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்ட முதுநிலை விரிவுரையாளர் பதவியில் இருந்து விலகுவதற்கான இராஜினாமா கடிதத்தை பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த அதிகாரிக்கு, கலைப் பீடாதிபதி மற்றும் சட்டத்துறைத் தலைவர் ஊடாக ஏற்கனவே அனுப்பி வைத்திருந்தார்.

இந்நிலையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை விரிவுரையாளரான சட்டத்தரணி குருபரன் தன்னுடைய பல்கலைக்கழக கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகியுள்ளார்.

தான் பதவி விலகுவதற்கான காரணமாக, அவர் பல்கலைக்கழக பேரவை தன்னை சட்டத் தொழிலில் ஈடுபடுவதில் இருந்து தடைசெய்துள்ளமையை சுட்டிக்காட்டியிருந்தார் .

தன்னால் உயர் நீதிமன்றில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு பல்வேறு காரணங்களுக்காக விவாதத்திற்கு எடுக்கப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுக்கொண்டிருக்க தான் இவ்விடயத்தில் இனியும் காத்திருப்பதில் பயன் இல்லை என்றும்; தொடர்ந்து தனது வாழ்வில் நிச்சயத்தன்மை இல்லாதிருக்க தான் அனுமதிக்கப் போவதில்லை என்றும் தனது இராஜினாமா கடிதத்தில் கலாநிதி குருபரன் குறிப்பிட்டிருந்தார் .

நடைமுறை அனுபவம் இல்லாத ஓர் சட்ட ஆசிரியராக தான் கடமையாற்றுவது இயலாத விடயமென்றும் , தனது சட்டத் தொழில் மூலம்தான் செய்து வந்த சமூக பங்களிப்பும் தனது ஆசிரியப் பணியில் இணைபிரியா அங்கம் என்றும் அது இல்லாத சட்ட ஆசிரியர் பணியில் தனக்கு ஈடுபடுவது திருப்தியை தரமாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார் .

சட்டத் தொழிலில் ஈடுபடுவது கூடிய வருமானத்தை தரும் என்ற காரணத்திற்காக தான் இந்த முடிவை எடுக்கவில்லை என்றும் அவ்வாறாக எடுப்பதாயின் தான் அதனை 2010 ஆம் ஆண்டிலேயே அந்த முடிவை எடுத்திருப்பேன் என்றும், வகுப்பறையில் மட்டும் முடங்கியிருக்கும் ஆசிரியராக கடமையாற்ற தான் தயாரில்லை என்றும் மேலும் தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார் . தன் மீது விதிக்கப்பட்ட தடை பல்கலைக்கழகம் சுயாதீனத்தை முழுவதுமாக இழந்துவிட்டதற்கான முக்கியமான சான்று என்றும் தனது நலன்கள் தொடர்பில் சுயமாக முடிவு எடுக்க முடியாத பல்கலைக்கழகம் யாருக்காக செயற்படுகின்றது என்ற கேள்வியையும் அவர் இதன்போது எழுப்பியிருந்தார் .

நல்லாட்சி, சட்டத்தின் ஆளுகை , சுயாதீனம் ஆகியவற்றை தொலைத்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் நல்லாசிரியர்களை ஈர்க்கவும் முடியாமல் தொடர்ந்து வைத்திருக்கவும் முடியாமல் நலிவடைந்து கொண்டிருப்பதாக கலாநிதி குருபரன் தனது கடிதத்தில் சுட்டிக் காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“இன்று இறுதி நாள். இந்த தசாப்த காலப் பயணத்தில் அன்பும் ஆதரவும் தந்த நல்லுள்ளங்களுக்கு நன்றி . பயணம் வேறு பாதைகள் வழி தொடரும் ” என அவர் தனது வெளியேற்றம் தொடர்பில் பதிவிட்டுள்ளார் .

யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக கைக்குண்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் கிளிநொச்சி இளைஞர் கைது !

யாழ்ப்பாணத்தில் கைக்குண்டு வைத்திருந்த குற்றசாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக நேற்று (15.10.2020) மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்கிடமாக நின்ற இளைஞரிடம் இருந்தே கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளது.  22 வயது மதிக்கத் தக்க கிளிநொச்சி, பரந்தன் பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இவ்வாறு  யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இளைஞரிடம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக யாழ். பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பிரதமர் பணியாளர்சபை பிரதானியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ நியமனம் !

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணியாளர் சபை பிரதானியாக அவரது மகன் யோஷித ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் இலங்கைக்கான பதில் சீன தூதுவர் ஹுவெய், அண்மையில் யோஷித ராஜபக்ஷவை சந்தித்து வாழ்த்து தெரிவித்துள்ளதாக தூதரகத்தின் டுவிட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த கலந்துரையாடலில் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்ட சீனாவின் உயர்மட்ட தூது குழுவினர் மற்றும் இலங்கைக்கிடையில் இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பிலும் இரு தரப்பு நட்பு தொடர்பிலும் கலந்துரையாடல் மேற்கொண்டதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கைப்பிரதமர் மகிந்தராஜபக்ஸவின் இன்னுமொரு மகனான நாமல்ராஜபக்ஸ இலங்கையினுடைய விளையாட்டுத்துறை அமைச்சராக கடமையாற்றி வருவதும் குறிப்பிடத்தக்கது.

“ரிஷாத் கைது செய்யப்பட்டால் அதற்கு எதிராக நாம் போராடுவோம்” – சஜித் பிரேமதாஸ

“ரிஷாத் கைது செய்யப்பட்டால் அதற்கு எதிராக நாம் போராடுவோம்” என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குறிப்பிட்டுள்ளார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“ரிஷாத்தைக் கைது செய்யும் முயற்சி அரசின் திட்டமிட்ட பழிவாங்கல் நடவடிக்கை என்று நாட்டிலுள்ள அனைவருக்கும் தெளிவாகத் தெரிகின்றது. ரிஷாத் கைதுசெய்யப்பட்டால் அதை நாம் ஒருபோதும் ஏற்றுகொள்ளமாட்டோம். அதற்கு எதிராக நாம் போராடுவோம். நாடாளுமன்றத்தில் எமது எதிர்ப்பு நடவடிக்கைகள் பலமாக இருக்கும். இதேவேளை, நாட்டின் நீதித்துறை சுயாதீனத்தன்மையுடன் செயற்பட வேண்டும். பழிவாங்கல் நடவடிக்கைக்கு நீதித்துறை துணைபோகாது என்று நாம் நினைக்கின்றோம்.

“அரசுடன் இணையவில்லை என்ற காரணத்துக்காகப் பழிவாங்குவதற்காகவும், அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட வரைவுக்கு எதிரான தீர்ப்பால் ஏற்பட்டுள்ள அவமானத்தை மூடிமறைப்பதற்காகவும் முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனைக் கைது செய்ய முயற்சிக்கப்படுகின்றது. இந்தக் கைது நடவடிக்கையை அரசு உடன் நிறுத்த வேண்டும்” எனவும் மேலும் அவர் தெரிவித்தார் .

கொரோனா பாதுகாப்பு அங்கிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அடங்கிய பொதிகளை இலங்கைக்கு வழங்குகியது அமெரிக்கா !

கொரோனா பாதுகாப்பு அங்கிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் அடங்கிய ஒருதொகுதி பொதிகளை இலங்கைக்கு அமெரிக்கா வழங்கியுள்ளது. சுகாதார அமைச்சர் பவித்திரா வன்னியாராச்சியிடம் அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் இதனைக் கையளித்துள்ளார்.

1,91000 அமெரிக்க டொலர் பெறுமதியான பொதிகள் சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளன. கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இலங்கைக்கு குறித்த பாதுகாப்பு அங்கிகளின் பயன்பாடு மிகவும் முக்கியமானதாகக் காணப்படும் என அமெரிக்கத் தூதுவர் அலெய்னா ரெப்லிட்ஸ் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா தொடர்ந்தும் தனது பங்களிப்பினை வழங்கும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

கொரோனா தொற்று வேகமாக இலங்கையில் மீன்டும் பரவ ஆரம்பித்துள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துவது தொடர்பான பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகின்றது.  மேலும் கொரோனா பரவலால் வீழ்ச்சியடைந்த நாட்டினுடைய பொருளாதாரத்தை மேம்படுத்த அண்மையில் சீன அரசிடம் இருந்து குறிப்பிட்ட தொகைப்பணத்தை இலங்கை கடனாக பெற்றிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

“வருகின்ற மார்ச் மாதத்திற்குள் அரசு திருந்திநடக்க வேண்டும். இல்லையேல் அரசின் மீது சர்வதேச சட்டம் பாயும் ” – எச்சரிக்கின்றார் சம்பந்தன் !

“ சர்வதேசம் போற்றும் வகையில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் அரசு திருந்தி நடக்க வேண்டும். அந்தக் கால அவகாசத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தையும் அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் சர்வதேச சட்டங்கள்  அரசு மீது பாயும்.” என  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இரா. சம்பந்தன் மேலும் தெரிவிக்கும் போது –

“இந்த நாடு மூவின மக்களுக்கும் சொந்தமான நாடு. ஓர் இனத்துக்கும் மட்டும் இந்த நாடு சொந்தமல்ல. இங்கு மூன்று இனத்துக்குமான அரசியல் உரிமை, மொழி உரிமை மற்றும் மத உரிமை ஆகியன பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். ஆட்சியிலுள்ள அரசு சர்வதேசத்தை அவமதித்துச் செயற்பட முடியாது. அதன் அறிவுரைகளைக் கேட்டு நடக்க வேண்டும். நாட்டின் நலன் கருதிய சர்வதேசத்தின் தீர்மானங்களை அரசு நிறைவேற்ற வேண்டும்.

தமிழ் – முஸ்லிம் சமூகம் மீதான அடக்குமுறைகளையும், பழிவாங்கல் நடவடிக்கைகளையும் உடன் அரசு நிறுத்த வேண்டும். சர்வதேசம் போற்றும் வகையில் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் அரசு திருந்தி நடக்க வேண்டும். ஏனெனில், இலங்கைக்கு ஐ.நா. மனித உரிமைகள் சபையில் சர்வதேச நாடுகள் வழங்கியுள்ள கால அவகாசம் எதிர்வரும் மார்ச் மாதத்துக்குள் நிறைவடைகின்றது. அந்தக் கால அவகாசத்துக்குள் ஐ.நா. தீர்மானத்தின் பரிந்துரைகளை அரசு முழுமையாக நிறைவேற்ற வேண்டும். இல்லையேல் பாரிய விளைவுகளை இந்த அரசு சந்திக்கும். சர்வதேச தீர்மானங்களை நிராகரித்தால் சர்வதேச சட்டங்கள்தான் அரசு மீது பாயும். இதைக் கவனத்தில்கொண்டு ராஜபக்ச அரசு செயற்பட வேண்டும்” – எனவும் இரா.சம்பந்தன் அரசை எச்சரித்துள்ளார்.

அரசு தரப்பிலுள்ள தமிழ்பாராளுமன்ற உறுப்பினர்களிடம் எம்.ஏ.சுமந்திரன் முன்வைத்துள்ள வேண்டுகோள் !

இலங்கை அரசினால் கொண்டுவரப்பட்டுள்ள புதிய அரசியல் சீர்திருத்தமாகிய 20ஆவது அரசியலைப்பு திருத்த சட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களான வியாழேந்திரன் மற்றும் பிள்ளையான் உட்பட அனைத்து தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களிக்க கூடாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் நேற்று (14.10.2020) இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது குறித்த அவர் மேலும் தெரிவித்ததாவது,

அரசால் கொண்டுவரப்பட்டுள்ள 20ஆவது திருத்த சட்டமானது தமிழ் மக்களுக்கு பயனற்றது. அவற்றால் தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை எனவே அதற்கு ஆதரவாக தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் வாக்களிக்க கூடாது. மேலும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் அங்கஜன் இராமநாதன் ஆகியோருக்கும் வடக்கில் இதனைத்தான் கூறியுள்ளேன்” என மேலும் தெரிவித்துள்ளார்.