உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“நான்காளி. உங்கள் தாய். உலகை காக்கவே கொரோனா மருந்தை உருவாக்கியுள்ளேன் ” – தம்மிக்க பண்டார

கொரோனா வைரசிற்கான மருந்தினை தயாரித்துள்ளதாக தெரிவித்து வரும் கேகாலை வைத்தியர் தம்மிக்க பண்டார பௌத்தமதகுருவர் முன்னிலையில் நான் காளி என ஆவேசப்பட்டுள்ளார்.

அனுராதாபரத்தில் உள்ள அட்டமஸ்தானயவின் தலைமை மதகுரு முன்னிலையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

கேகாலை வைத்தியர் இன்;று அனுராதபுர ஜய ஸ்ரீமாகபோதிக்கு செல்ல முயன்றுள்ளார்.
அவருக்கு அதற்கான அனுமதி மறுக்கப்பட்டவேளை அவர் தான் அங்குள்ள ஸ்ரீமாகபோதிக்கு தனது மருந்தினை வழங்கி வழிபாடு செய்யப்போவதாக தெரிவித்துள்ளார்.

இதன்போது அந்த பகுதியில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.
அவ்வேளை கேகாலை மருத்துவர் தலைமை மதகுருவிடம் நான் காளி நான் உங்கள் தாய் என தெரிவித்துள்ளார்.
உலகை பாதுகாக்கவே மருந்தினை உருவாக்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழ்.மாநகர சபையின் 2021 வரவு செலவு திட்டம் மீள தோற்கடிப்பு – பதவி இழக்கிறார் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் !

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆளுகைக்குட்பட்ட யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் இரண்டாவது தடவையாகவும் தேற்கடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் யாழ்.மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட் தனது பதவியை இழக்கின்றார்.

யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் இரண்டாவது முறையாகவும் இன்றைய தினம் யாழ் மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆனோல்ட்டினால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. 45 உறுப்பினர்களை கொண்ட யாழ்.மாநகர சபையில் 21 உறுப்பினர்கள் ஆதரவாகவும், 24 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்துள்ளனர்.

அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 16 உறுப்பினர்களும், ஐக்கிய தேசியக் கட்சியின் 3 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலா ஒரு உறுப்பினர் என 21 உறுப்பினர்கள் ஆதரவாக வாக்களித்துள்ளனர்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் 13 உறுப்பினர்களும், ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் 10 உறுப்பினர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்தி கட்சியின் 1 உறுப்பினர் என 24 உறுப்பினர்கள் எதிராக வாக்களித்துள்ளனர். இதனால் யாழ் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 3 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

வரவு செலவு திட்டம் தேற்கடிக்கப்பட்டதன் காரணமாக இன்றைய நாளிலிருந்து 14 நாட்களுக்குள் யாழ்.மாநகர சபையின் புதிய முதல்வர் தெரிவு இடம்பெற வேண்டும் என்பது சட்ட ஏற்பாடாகும். யாழ்ப்பாணம் மாநகர சபையின் 2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் கடந்த 2 ஆம் திகதி முதன் முறையாக சமர்ப்பிக்கப்பட்ட போது 5 மேலதிக வாக்குகளால் தேற்கடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“வடக்கில் இன்னமும் கொரோனா கொத்தணிகள் உருவாகவில்லை” – வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ்

“வடக்கில் இன்னமும் கொரோனா கொத்தணிகள் உருவாகவில்லை” என வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருகின்றது. மேலும் வடக்கின் பல பகுதிகளிலும் மிக வேகமாக கொரோனா தொடர்பான அச்சமும் பரவி வருகின்ற நிலையில்,  சமகால நிலமைகள் குறித்து இன்று ஊடகங்களுக்கு கருத்து கூறும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இதன்போது மேலும் அவர் கூறுகையில்,

வெளியிடங்களில் இருந்து வருபவர்கள் தொடர்பான தகவல்களை வழங்குமாறு அறிவிறுத்தியிருந்த போதும் , சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் தகவல்களை வழங்கத் தவறியமையே கொரோனா தொற்றுப் பரவலுக்குக் காரணம் எனவும் அவர் கூறினார்.

மருதனார்மட தொற்று நிலைமை தொடர்பில் 500 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை கண்டறியும் நடவடிக்கைகளை சுகாதாரப் பிரிவினர் ஆரம்பித்துள்ளனர்.

தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்களை இனங்காணும்வரை, தொற்று சமூகப் பரவலாக உருமாருவதைத் தடுக்கும் நோக்கில், குறித்த இடங்களில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

ஏற்கனவே பொதுமக்களுக்கு வெளியிடங்களிலிருந்து யாராவது உங்கள் பிரதேசங்களுக்கு வந்தால் அது தொடர்பில் சுகாதாரப் பிரிவுக்கு அறிவிக்குமாறு ஒரு அறிவித்தலை வழங்கியிருந்தேன். எனினும் இந்த அறிவிப்பு தொடர்பில் பொதுமக்கள் எமக்கு ஒத்துழையாமையே இன்றைய தொற்றுப் பரவுவதற்கு ஏதுவாகிவிட்டது.

மேலும் வடக்கில் இன்னமும் கொரோனா கொத்தணிகள் உருவாகவில்லை என தெரிவித்த ஆளுநர் மக்கள் சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்றி, தொற்றிலிருந்து தம்மையும், சமூகத்தையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

“தவறான வழிநடத்தல்களாலே அவர்கள் கைதிகளாக உள்ளனர். அவர்களுள் என்னை கொல்ல வந்தவர்களும் உள்ளனர். ஆனாலும் அவர்கள் விடுவிக்க நான் பாடுபடுவேன் ” – அமைச்சர் டக்ளஸ்தேவானந்தா 

“தவறான வழிநடத்தல்களாலே அவர்கள் கைதிகளாக உள்ளனர். அவர்களுள் என்னை கொல்ல வந்தவர்களும் உள்ளனர். ஆனாலும் அவர்கள் விடுவிக்க நான் பாடுபடுவேன் ”  என்று கடற்தொழில் நீரியல் வழங்கல் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

வவுனியாவிற்கு இன்று(16.12.2020) விஐயம் செய்த அவர் போகஸ்வெவ பகுதியில் மின் இணைப்பு பணியை ஆரம்பித்து வைத்திருந்தார். அதன் பின்னர் தனியார் வி்ருந்தினர் விடுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த டக்ளஸ்தேவானந்தா ,

நானும் ஒரு அரசியல் கைதியாக இருந்து எங்களை நாங்கள் விடுவித்தவர்கள். 1983 ஆம் ஆண்டு சிறை உடைப்பு மூலம் யாரையும் நம்பாமல் நாங்களே விடுவித்தோம். பின்னர் இலங்கை இந்திய ஒப்பந்தம் மூலம் எமக்கு பொதுமன்னிப்பு கிடைத்தது. அந்த ஒப்பந்தம் ஒரு பொன்னான வாய்ப்பு. அந்த ஒப்பந்தத்தின் பிறகு எதனையும் விடுதலை போராட்டமாக நான் கருதவில்லை. அன்றிலிருந்து இதனை சொல்லிவருகிறேன்.

எனினும் தவறான வழிநடாத்தலால் அவர்கள் கைதிகளாக இருக்கின்றமையால் அவர்களும் விடுவிக்கப்பட வேண்டும். அதற்கான முயற்சியை செய்வேன். அவர்களில் என்னை கொல்லவந்தவர்களும் இருக்கின்றனர். எனக்கு அதிக ஆசனங்களை தந்திருந்தால் இதனை இலகுவாக தீர்த்திருக்கலாம். இன்று கூட்டமைப்பினர் குடி போதையில் கூட்டம் நடாத்துவதாக செய்தி வந்திருந்தது. அப்படியான போராட்டங்கள் இருக்கின்ற சூழலையும் கெடுக்கும் நோக்கமே.

எமது மீனவர்களுக்கு பின்னால் கடற்தொழில் அமைச்சர் நிற்பதாகவும் தகவல் வருகிறது. எது உண்மை என்று நீங்கள் தான் தெரியப்படுத்த வேண்டும். இந்திய மீனவர்களின் இழுவைப்படகு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளால் எமது வளங்கள் அழிகின்றது. இதனால் கடற்தொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுகின்றது. இந்நிலையில் வாழ்வா, சாவா என்றவகையில் அவர்கள் கிளர்ந்தெளுந்துள்ளனர். அந்தவகையில் 5 படகுகளையும் 36 இந்திய மீனவர்களையும் கடற்படை கைது செய்துள்ளது. அந்த நடவடிக்கை இன்றும் தொடரும்.

இது தொடர்பாக ஒரு பேச்சுவார்த்தையை நடத்துவதற்கு இந்திய மத்திய அரசு தூதரகம் ஊடாக அழைப்பு விடுத்துள்ளது. அதுவரை நல்லெண்ண நோக்கத்தில் அவர்களை விடுவிக்குமாறு கோரியுள்ளது. நல்லெணத்தை அவர்களே காட்டவேண்டும். ஏனெனில் தொடர்ந்து அத்து மீறி வருவது அவர்களே. இந்த பிரச்சனையில் இரண்டு நாடுகளிற்கும் இடையில் இருக்க கூடிய நட்பையும் பாதுகாக்க வேண்டும். எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பார்க்க வேண்டியுள்ளது. என்றார்.

குறித்த நிகழ்வுகளில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

அதே நேரம் அமைச்சர் உதயன்கம்மன்பில அரசியல்கைதிகள் என யாருமே இல்லை என ஊடகசந்திப்பில் கூறியுள்ளதுடன் இருந்தால் அவர்களின் பெயர்களை கூறுங்கள் எனவும் சவால் விடுத்துள்ளமையும் நினைவில் கொள்ளத்தக்கது.

சங்கானை சந்தைவர்த்தகர்கள் 08 பேருக்கு கொரோனா! 

இன்று யாழ் மருத்துவபீட ஆய்வுகூடத்தில் சங்கானை சந்தை வர்த்தகர்கள் 100 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது, இதில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் முழு விவரம் வருமாறு,

சங்கானை – 4

உடுவில் – 1

பண்டத்தரிப்பு – 1

மானிப்பாய் – 1

வடலியடைப்பு – 1 5

“தமிழர் என்பதற்காக இங்கு எவரும் கைது செய்யப்படவில்லை என்பதால் தமிழ்க் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை” – உதய கம்மன்பில

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர்களால் பிரதமரிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ள நிலையில் “தமிழர் என்பதற்காக இங்கு எவரும் கைது செய்யப்படவில்லை என்பதால் தமிழ்க் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை” அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான உதய கம்மன்பில மீண்டும் தெரிவித்துள்ளார்.

சிறைகளில் அரசியல் கைதிகள் அவ்வாறு இருப்பார்களாயின் அவர்களில் ஒருவரின் பெயரையாவது வெளியிடுமாறு அவர் சவால் விடுத்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று(15.12.2020) அரச தகவல் திணைக்களத்தில் காணொளி மூலம் நடத்தப்பட்டது. இதன்போது, ‘இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என நீங்கள் கடந்த வாரம் அறிவித்திருந்தீர்கள். ஆனால், அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு கோரி தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களால் பிரதமரிடம் மனு ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவை பிரதமரும் ஏற்றுக்கொண்டுள்ளார். சுமார் 80 பேர் வரை தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறப்படுகின்றது. இந்த விடயத்தில் அரசின் நிலைப்பாடு என்னவென்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“இலங்கையில் அரசியல் கைதிகள் என எவரும் இல்லை என்பதை அரசின் பேச்சாளர் என்ற வகையில் மிகவும் பொறுப்புடன் கூறுகின்றேன்.

தாம் வகிக்கும் அரசியல் நிலைப்பாட்டால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்படுபவர்களையே அரசியல் கைதிகள் என விளிக்கலாம். சிங்கப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட பின்னர், கம்யூனிஸ்ட் நிலைப்பாட்டை – சித்தாந்தங்களைக் கொண்டிருந்தவர்கள், இரகசியமாக அரசியலில் ஈடுபட்டவர்கள் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். அவ்வாறானவர்கள்தான் அரசியல் கைதிகள்.

இலங்கையில் 1983ஆம் ஆண்டு ஜே.வி.பி., கம்யூனிஸ்ட் கட்சி, நவசமசமாஜக் கட்சி ஆகியன தடைசெய்யப்பட்டன. கட்சிகளின் தலைவர்கள் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் குற்றங்கள் இழைக்கவில்லை. மேற்படி கட்சியில் இணைந்தமை, தலைவராகியமை, கொள்கைகளை முன்னெடுத்தமை ஆகியவற்றுக்காகவே அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இப்படியானவர்கள்தான் அரசியல் கைதிகளாவர்.

தமிழர் என்பதற்காக இங்கு எவரும் கைது செய்யப்படவில்லை என்பதால் தமிழ்க் கைதிகள் என எவரும் இல்லை. அரசியல் கைதிகளும் இல்லை.

பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் இருக்கலாம். குற்றமிழைத்தவர்கள் இருக்கலாம். அவ்வாறான கைதிகளை ஆண் மற்றும் பெண் கைதிகள் என்ற வகையிலும், அவர்கள் இழைத்த குற்றங்களின் அடிப்படையிலும், அனுபவிக்கும் தண்டனை அடிப்படையிலும், வயது அடிப்படையிலுமே வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மாறாக இன ரீதியாக எவரும் வகைப்படுத்தப்படவில்லை.

சிறைகளில் அரசியல் கைதிகள் 80 பேர் இருக்கின்றனர் எனில், அவர்களில் ஒருவரின் பெயரையாவது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளியிடட்டும். அப்போது அது பற்றி ஆராயலாம். எமக்குத் தெரியாமல்கூட யாராவது தடுத்துவைக்கப்பட்டுள்ளனரா? என்பது பற்றி விசாரணை நடத்தி உங்களுக்கும் அறிவிக்க முடியும்.

எனவே, ஒரு அரசியல் கைதியின் பெயரையும், அந்தக் கைதியின் இலக்கத்தையும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கட்டும்.

பிரதமரிடம் யார் வேண்டுமானாலும் மகஜர்களைக் கொடுக்கலாம். அதனை அவர் ஏற்ற பின்னர் சம்பந்தப்பட்ட துறையிடத்தில் அது ஒப்படைக்கப்படும். அதன்பின்னர் அதிலுள்ள காரணிகள் ஆராயப்படும். செய்ய முடியுமா, முடியாதா என்று முடிவு எடுக்கப்படும். ஆகவே, பிரதமரிடம் மகஜர் கையளித்தால், அதிலுள்ள பிரச்சினைகளை, கோரிக்கைகளை அவர் ஏற்றுக்கொண்டு விட்டார் என அமையாது.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளவர்கள் உள்ளனர். பயங்கரவாத சந்தேகநபர்கள், தண்டனை அனுபவித்தால் பயங்கரவாதிகள். அதைவிடுத்து அவர்களை அரசியல் கைதிகள் என விளிக்க முடியாது” – என்றார்.

ஜனாதிபதியும் இராணுவத் தளபதியும் காணாமற்போன நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் குறித்து சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டத்தின் படி பொறுப்பு கூற வேண்டியவர்கள்” – உண்மைக்கும் நீதிக்குமான திட்டம்

ஜனாதிபதியும் இராணுவத் தளபதியும் காணாமற்போன நூற்றுக்கணக்கான சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் குறித்து சர்வதேச மற்றும் உள்நாட்டுச் சட்டத்தின் படி பொறுப்பு கூற வேண்டியவர்கள் என சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் அறிவித்துள்ளது.

காணாமற்போனவர்கள் பற்றிய அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் படி இறுதிக் கட்டப் போரில் 330 தமிழர்களும் 1989 இன் இறுதிக் காலாண்டுப் பகுதியில் 154 சிங்களவர்கள் காணாமற் போனதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் காணாமற்போனவர்கள் பற்றிய இந்த அலுவலகத்தின் அறிக்கையில் பெரியளவில் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளன என்றும் சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் தமது அன்புக்குரியவர்களுக்கு என்ன நடந்தது, எங்கு இருக்கின்றார்கள் என்ற உண்மையைக் கண்டறிவதற்கான உரிமை குடும்பங்களுக்கு உண்டு என குறித்த அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா தெரிவித்துள்ளார்.

அத்துடன் வலிந்து காணாமற் போதல் என்பது ஒரு குற்றம் என்பதனால் இறுதிப் போரில் கட்டளைப் பொறுப்பில் இருந்த இராணுவ அதிகாரிகளும் யாருடைய பொறுப்பில் கீழ் அவர்கள் சரணடைந்தார்களோ அந்த அதிகாரிகள் சரணடைந்த நூற்றுக்கணக்கான தமிழர்களை எவ்வாறு தொலைந்து போக விட்டார்கள் என்பதைப் பற்றி விளக்கம் தருவதற்கான சட்ட ரீதியான கடப்பாடு உண்டு என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும், 1989 இல் ஜனாதிபதி பொறுப்பாக இருந்தபோது மாத்தளையில் இருந்து பல சிங்கள இளைஞர்கள் ஏன் காணாமற்போனார்கள் என்பதை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கை மக்களுக்கு விளக்கமளிக்கப் போகின்றாரா?  என்றும் ஜஸ்மின் சூக்கா கேள்வியெழுப்பியுள்ளார்.

அத்தோடு அரசாங்கத்தின் இந்தக் காணாமற்போனவர்களின் பட்டியல்கள் இலங்கையின் இராணுவத் தளபதிக்கு எதிராக வழக்கு தொடர முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை பதவியில் இருந்த வெளியேறிச் சென்ற பின்னர் ஒரு நாள் ஜனாதிபதிக்கு எதிராகவும் வழக்கு தொடரமுடியும் என்பதையும் காணாமற்போனவர்களின் பட்டியல்கள் காட்டுகின்றன என்றும் ஜஸ்மின் சூக்கா சுட்டிக்காட்டியுள்ளார்.

மரணச்சடங்கிற்கு சென்ற கொரோனா நோயாளி – யாழில் 50 பேர் தனிமைப்படுத்தலில் !

யாழ்.நாவாந்துறை பகுதியில் இடம்பெற்ற மரண சடங்கு ஒன்றுக்கு கொரோனா தொற்றாளர் ஒருவர் சென்றுவந்த நிலையில் குறித்த மரண சடங்கில் கலந்து கொண்ட 50ற்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றனர்.

மருதனார்மடம் சந்தை கொத்தணியுடன் தொடர்புடைய ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில் குறித்த நபர் நாவாந்துறை – கண்ணாபுரம் பகுதியில் மரண சடங்கு ஒன்றில் கலந்து கொண்டிருந்தார்.

இதனையடுத்து மரண சடங்கில் கலந்து கொண்டிருந்த சுமார் 50ற்கும் மேற்பட்டவர்களை உடனடியாக தனிமைப்படுத்த சுகாதார பிரிவினர் நடவடிக்கை எடுத்திருக்கின்றர்.

இறந்த முஸ்லீம்களின் உடல்கள் எரிக்கப்படுவதை தடைசெய்யுமாறு கூறி மன்னாரில் விழிப்புணர்வு போராட்டம்!  

சிறுபான்மை இன மக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்குமாறுக் கோரி மன்னாரில் அமைதியான முறையில் விழிர்ப்புணர்வு போராட்டம் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் (மெசிடோ) ஏற்பாட்டில், வடக்கு, கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவின் சார்பாக குறித்த விழிர்ப்புணர்வு போராட்டம் இடம் பெற்றது.

மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாக இன்று (புதன்கிழமை) காலை ஒன்று கூடிய மக்கள் அமைதியான முறையில் குறித்த போராட்டத்தை முன்னெடுத்தனர்.

குறித்த போராட்டத்திற்கு மன்னாரின் இளம் சட்டத்தரணிகள் ஆதரவு தெரிவித்து கலந்துகொண்டதோடு, நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன், மன்னார் நகர சபையின் உப தலைவர் மற்றும் உறுப்பினர்களும் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது சிறுபான்மை இன மக்களின் மத உரிமைக்கு மதிப்பளிக்க கோரியும் உயிருடன் இருக்கின்றபோது உடலுக்கு கொடுக்கின்ற மதிப்பினை அவர்கள் மரணிக்கின்றபோது அவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை விழிர்ப்புணர்வு போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் முன்வைத்தனர்.

மேலும் கொரோனா தொற்றால் இறந்த உடல்கள் தகனம் செய்யப்படுகின்றமை உறவினர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்துகின்றது. எனவே உலக சுகாதார ஸ்தாபனத்தின் செயற்திட்டங்களை உள்வாங்கி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்து குறித்த விழிர்ப்புணர்வு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது முல்லைத்தீவு மீனவர்கள் போராட்டம் !

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக தெரிவித்து முல்லைத்தீவு மீனவர்கள் ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் இன்று (புதன்கிழமை) இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது.

அண்மைய நாட்களாக முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் இழுவை படகுகளின் அத்துமீறிய செயல் காரணமாக தொடர்ச்சியாக தமது வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படுவதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் எல்லை தாண்டி வருகின்ற மீனவர்களை கட்டுப்படுத்த இலங்கை கடற்படையினர் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் உரிய வகையில் எல்லைதாண்டி வந்தவர்களை கட்டுப்படுத்தினால் தமது வாழ்வாதாரத் தொழிலை சிறந்த முறையில் செய்ய முடியும் எனவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்

இந்திய -இலங்கை அரசாங்கங்கள் உரிய வகையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி எல்லை மீறி தமது பகுதிகளில் வருகின்ற மீன்பிடி படகுகளை கட்டுப்படுத்துவதற்கான உரிய நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்தி தமக்கு  வாழ்வாதாரத் தொழிலை நிம்மதியாக செய்வதற்கான சூழலை ஏற்படுத்தித் தருமாறு கோரி இந்த போராட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.