உள்நாட்டுச் செய்திகள்

உள்நாட்டுச் செய்திகள்

“இலங்கை விளையாட்டுத் துறைக்குள் அரசியல் தலையீடு இல்லை” – அமைச்சர் நாமல் ராஜபக்ஷ

“தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியில் விளையாட்டு துறைக்குள் அரசியல் தலையீடு இல்லை” என விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (05.12.2020) கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கும் போது, “ விளையாட்டு அமைப்புகளின் நிதிகளில் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்த மட்டுமே அரசாங்கம் ஈடுபடும். இருப்பினும் இலங்கை கிரிக்கெட் சபை உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகள் அரசியல் தலையீடு இல்லாமல் செயற்படும்.

இதேவேளை விளையாட்டு தொடர்பான புதிய சட்டம் தேவை , புதிய விளையாட்டுச் சட்டத்தை உருவாக்கும் செயன்முறை தற்போது நடைபெற்று வருகின்றது.

அத்தோடு லங்கா பிரிமியர் லீக் போட்டி தொடருக்கு விளையாட்டு அமைச்சினால் எந்தவொரு நிதியும் ஒதுக்கப்படவில்லை என குறிப்பிட்ட அமைச்சர் இலங்கை கிரிக்கெட் சபையினால் குறித்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

“போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களைக் கைது செய்ய முடியாத பொலிஸார் பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரித்தவர்களைப் கைசெய்வது என்பது அரசின் இயலாமையை காட்டுகின்றது” – பாராளுமன்றில் இரா.சாணக்கியன் !

“போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களைக் கைது செய்ய முடியாத பொலிஸார் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரித்தவர்களைப் பொலிஸார் கைசெய்வது என்பது அரசின் இயலாமையை மூடி மறைக்கின்றனர்” எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்று(05.12.2020) உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,

“நான் தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்ததாக சிலர் இங்கு கூறுகின்றனர். நான் தேர்தலில் போட்டியிட்டு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பில் அதிக விருப்பு வாக்குகளைப் பெற்றுக்கொண்டே இந்த பாராளுமன்றம் வந்துள்ளேன் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

மட்டக்களப்பில் இளைஞர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 26, 27, 28ஆம் திகதிகளில் முகப்புத்தகத்தில் சில பதிவுகளை இட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 29 வயதான அரச ஊழியர் ஒருவரும் அடங்குகின்றார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தையும், மாவீரர் நாள் பதிவுகளையும் முகப்புத்தகத்தில் பதிவிட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதுவும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களைக் கைதுசெய்துள்ள அரசு, அவர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.

முகப்புத்தகத்தில் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தை பிரசுரித்தவர்களைப் பொலிஸார் கைசெய்வது என்பது அரசின் இயலாமையை மூடி மறைக்கும்படியான செயலாகும். இவர்களைக் கைது செய்வதற்குப் பதிலாகப் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர்களைக் கைதுசெய்து சிறையில் அடையுங்கள்.

அரசின் மீது குற்றச்சாட்டுக்களை வைக்க வேண்டும் என்பதல்ல எனது நோக்கம். நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் இருக்கின்றது என்பதை நான் ஏற்றுக்கொள்கின்றேன். அதேபோன்று அரசு ஏனைய விடயங்களை மறைப்பதற்காக இவ்வாறு அப்பாவி இளைஞர்களைக் கைதுசெய்வதை நிறுத்த வேண்டும். கார்த்திகை விளக்கீடு என்பது ஒரு பண்டிகை. இப்படியான பண்டிகை நாளில் பொலிஸார் கார்த்திகை தீபம் ஏற்றத் தடை ஏற்படுத்தியுள்ளனர். இதனை ஒருபோதும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.

ஒருசில இடங்களில் மக்கள் விளக்குகளை – தீபங்களை ஏற்றுவதற்காகச் சிறிய அலங்காரங்களைச் செய்திருந்தனர். இதனையும் பொலிஸார் எட்டி உதைத்துள்ளனர். நீங்கள் உண்மையான பெளத்தர் என்றால் மனிதத்துவத்துக்கு மரியாதை செலுத்த முதலில் பழகிக்கொள்ளுங்கள்.

உண்மையிலேயே இந்த நாட்டிலுள்ள சிங்கள மக்கள் பாவம். நாடாளுமன்றத்தில் கஜேந்திரகுமார் உரையாற்றியபோது, சரத் வீரசேகர உள்ளிட்டவர்கள் எதிர்ப்பு வெளியிட்டனர். கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்தமை காரணமாகவே இவ்வாறு எதிர்ப்பை வெளியிட முடிந்தது எனக் கூறி மக்களை ஏமாற்றுகின்றனர். இவ்வாறு செய்து கொண்டு நீங்களே நாட்டில் பிரச்சினைகளை உரூவாக்குகின்றீர்கள்.

நீங்கள் முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பார்த்து சஹ்ரானை உருவாக்கியதாகக் கூறுகின்றீர்கள். நீங்கள் நாட்டில் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கின்றீர்கள். நீங்களே சஹ்ரானை உருவாக்கினீர்கள். நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைப் புதைப்பதற்குத் தொடர்ந்தும் மறுப்புத் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.

அவர்கள் தங்களுக்கு இறுதியாகவுள்ள உரிமையையே கேட்கின்றனர். அதனை வழங்குவதற்குக்கூட இந்த அரசு தொடர்ந்தும் மறுத்து வருகின்றது.இவ்வாறான செயற்பாடுகளை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது” – என்றார்.

கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து – 2021 பெப்ரவரியில் இலங்கையில் !

உலகசுகாதார ஸ்தாபனத்தினால் அங்கீகாரமளிக்கப்பட்ட கொரோனா வைரஸ் மருந்து பெப்ரவரி நடுப்பகுதியில் கிடைக்கலாம் என்ற நம்பிக்கையில் இலங்கை உள்ளதாக மருந்தகங்களை ஒழுங்குபடுத்துதல்,உற்பத்தி விநியோகம் தொடர்பான இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜெயசுமன தெரிவித்துள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் கடந்த வாரம் இதனை தெரிவித்துள்ளது என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அதிகாரிகள் கொரோனா வைரஸ் மருந்து தொடர்பில் இரு குழுக்களை அமைத்துள்ளனர்,அமெரிக்கா ரஸ்யா சீனா இங்கிலாந்து போன்ற நாடுகளில் கொரோனா வைரஸ் மருந்து தொடர்பில் ஏற்படும் மாற்றங்களை அவதானித்து வருகின்றனர் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் மருந்தினை எந்த நாட்டிடமிருந்து பெறுவது என்பது குறித்து நாங்கள் திறந்த மனதுடன் இருக்கின்றோம் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பைசர்-பயோன்டெக் நிறுவனங்களின் மருந்து குறித்து கருத்து தெரிவித்துள்ள அமைச்சர் இலங்கை போன்ற நாடுகளில் அதனை சேமிப்பது கடினம் என தெரிவித்துள்ளார்.

“சரத் பொன்சேகாவை, ஜனாதிபதியாக்கி இருந்தால் மக்களின் நிலை என்னவாகியிருக்கும் என்பதை நினைத்து நாம் அச்சப்படுகின்றோம்” – செல்வம் அடைக்கலநாதன்

“சரத் பொன்சேகாவை, ஜனாதிபதியாக்கி இருந்தால் மக்களின் நிலை என்னவாகியிருக்கும் என்பதை நினைத்து நாம் அச்சப்படுகின்றோம்” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

‘வடக்கு, கிழக்கில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள புரவி புயல், மாவீரர் தினத்தன்று வந்திருந்தால் மகிழ்ச்சியடைந்திருபேன்’ என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா அண்மையில் பாராளுமன்றில் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இவருடைய கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே செல்வம் அடைக்கலநாதன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“தமிழர்களைப் புண்படுத்தும் விதத்தில் கருத்துக்களை வெளியிட்டு வரும் சரத் பொன்சேகாவுக்கு, ஜனாதிபதித் தேர்தலொன்றில் தமிழ் மக்கள் அதிகளவில் வாக்களித்தமை மன வேதனையளிக்கின்றது. சரத் பொன்சேகாவின் கருத்து மிகவும் மோசமானது. அதனைக் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

இன்று தமிழ் மக்களைக் கஷ்டப்படுத்தும் சரத் பொன்சேகா, ஜனாதிபதியாகி இருந்தால் மக்களின் நிலை என்னவாகியிருக்கும் என்பதை நினைத்து நாம் அச்சப்படுகின்றோம்.

விடுதலைப்புலிகளை அரசு எதிர்க்கின்றது என்பது உண்மையாக இருந்தாலும், விடுதலைப்புலிகள் அமைப்பில் இறந்தவர்களை அனுஷ்டிக்க உறவினர்களுக்கு உரிமை உண்டு. மனிதாபிமானமுள்ள எவரும் அதனை எதிர்க்க முடியாது” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்தமைக்காக தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனிகின்றார்கள்” – எம்.கே.சிவாஜிலிங்கம்

மாவீரர் தினத்தன்று புரெவி வீசியிருக்கலாம் என முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகா அண்மையில் பாராளுமன்றத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில் அவருடைய கருத்துக்கு பதிலளித்துள்ள வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் “ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்தமைக்காக தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனிகின்றார்கள்” என தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான யாழில் நேற்று (04.12.2020) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் அதரிவித்ததாவது,

“நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் முன்னாள் இராணவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்த கருத்துக்கள் தமிழ் மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.  குறிப்பாக புரெவி புயல் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினத்தன்று வீசியிருக்கலாம் என்று சொன்னதில் இருந்து அவருடைய கொடூர மனநிலை வெளிப்பட்டுள்ளது.

கொடூர மன நிலையில் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் புரிந்தவர், இராணுவம் போர்க் குற்றத்தைப் புரிந்ததென்று இதே இராணுவத் தளபதி கூறியிருக்கிறார்.இலங்கையில் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் நடைபெற்றுள்ளது எனவும் 40 ஆயிரம் மக்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு குழு தெரிவித்துள்ளது.

அதேபோல், இன்னொரு குழு 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டும் கணக்கில் வராமலும் உள்ளது என்றும் கூறியுள்ளது. ஆகவே, இவ்வாறு கொன்றுவிட்டு ஏழாயிரம் பேர் கொல்லப்பட்டதாகச் சொல்லுவது தமிழ் மக்களை ஏமாற்றுகின்ற இழிவுபடுத்துகின்ற செயலாகும்.

இதைவிட இன்றைக்கு இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவினுடைய கூற்றைப் பார்த்தால், இவர், புலிகளுடைய தற்கொலைப் படைத் தாக்குதலிலே கொல்லப்பட்டிருந்தால் நல்லாயிருக்கும் என்று மக்கள் நினைக்கக்கூடிய அளவிற்கு நிலைமை இருக்கிறது. இதேவேளை, ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகாவை ஆதரித்தமைக்காக தமிழ் மக்கள் வெட்கித் தலைகுனிகின்றார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“தொழிற்சாலைகளை உருவாக்கி தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் எனும் ஸ்ரீதரனின் கருத்தை வரவேற்கிறேன்” – பாராளுமன்றில் விமல்வீரவங்ச

புலம்பெயர் தமிழ் முதலீட்டாளர்கள் இலங்கையில் முதலீடுகளை செய்ய விரும்பினால் வடக்கில் மாத்திரம் அல்ல தெற்கிலும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட முழுமையான ஏற்பாடுகளை செய்துகொடுக்க தயாராக உள்ளோம் என அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

நேற்று (04.12.2020) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கைத்தொழில் வர்த்தக அமைச்சுகள் மற்றும் இராஜாங்க அமைச்சுகள் மீதான நிதி ஒதுக்கீட்டு குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த நாடாளுமன்ற விவாதத்தில் அமைச்சர் விமல் வீரவன்ச மேலும் கூறியுள்ளதாவது,

“வடக்கு- கிழக்கிலுள்ள தொழிற்சாலைகளை மீளவும் இயக்கி நாட்டின் தேசிய பொருளாதாரத்தில் பங்களிப்பை பெற்றுக்கொள்ளவே நாம் வேலைத்திட்டங்களை உருவாக்கியுள்ளோம்.வாழைச்சேனை தொழிற்சாலை, ஒட்டுச்சுட்டான் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் உள்ளிட்ட பிரதான தொழிற்சாலைகளை மீள் அபிவிருத்தி செய்வதுடன், பரந்தன் இரசாயன தொழிற்சாலையையும் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கவுள்ளோம். குறிப்பாக பரந்தன் இரசாயன தொழிற்சாலை உள்ள பிரதேசத்தை இரசாயான வலயமாக மாற்றியமைக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டங்களில் வடக்கு, கிழக்கு மக்களுக்கான பணிகளுக்கே முன்னுரிமை வழங்கப்படும். இதில் வடக்கு கிழக்கு மக்கள் எந்த சந்தேகமும் கொள்ளத்தேவையில்லை. வடக்கு மக்களின் அத்தியாவசிய பிரச்சினைகள் குறித்து பல காரணிகளை நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் சபையில் தெரிவித்தார். தொழிற்சாலைகளை உருவாக்கி தமிழ் மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்கு தீர்வு காண வேண்டும் என அவர் தெரிவித்தமையை நான் முழுமையாக வரவேற்கிறேன். அதேபோல் வெளிநாடுகளில் உள்ள தமிழ் செல்வந்தர்கள் இலங்கையில் முதலீடுகளில் விருப்பம் காட்டுவதாக தெரிவித்தார்.

அவ்வாறான முதலீட்டாளர்கள் இருந்தால் எம்முடன் தொடர்புபடுத்தி விடுமாறு ஸ்ரீதரனிடம் நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறான தமிழ் முதலீட்டாளர்கள் வடக்கில் மாத்திரம் அல்ல தெற்கில் வேண்டுமானாலும் முதலீட்டு நடவடிக்கைகளில் ஈடுபட நாம் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

“மக்களை ஏமாற்றுகின்ற ஒரு பொருளாதார கொள்கையை அரசு கடைப்பிடிக்கின்றது” – பாராளுமன்றில் சஜித்பிரேமதாஸ !

“மக்களை ஏமாற்றுகின்ற ஒரு பொருளாதார கொள்கையை அரசு கடைப்பிடிக்கின்றது” என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கைத்தொழில், வர்த்தக அமைச்சுக்கள் மற்றும்  இராஜாங்க அமைச்சுகக்ளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அரசு அதிகாரத்துக்கு வந்து முதல் காலாண்டில் நாட்டின் பொருளாதார அபிவிருத்தி வேகத்தை வெளியிட்டிருந்தது. அது – 1.6 ஆகவே இருந்தது. ஆனால், 2 மற்றும் 3ஆம் காலாண்டு பொருளாதார அபிவிருத்தி வேகத்தை இதுவரை வெளிப்படுத்தவில்லை. ஏன் இதனை மறைக்கவேண்டும். புள்ளிவிபரங்களை மறைப்பது பொருளாதார சந்தையில் பாரிய பிரச்சினையை ஏற்படுத்தும். நாட்டின் உள்நாட்டு உற்பத்தியை 9 வீதத்தில் இருந்து 14 வீதம் வரை அதிகரிக்க எதிர்பார்ப்பதாக வரவு – செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அது எப்படி முடியும்?

இந்த அரசின் வரிக்கொள்கை புதிய லிபரல்வாத கொள்கையைக் கடைப்பிடிப்பதாகவே தெரிகின்றது. அரசு மேற்கொண்டுள்ள வரிக்குறைப்பின் மூலம் நாட்டின் வருமானம் 600 தொடக்கம் 800 மில்லியன் ரூபா வரை இல்லாமல்போயுள்ளது. தனவந்தர்களைப் போஷிப்பதற்கே இதை அரசு செய்திருக்கின்றது. இவ்வாறான நிலையில் எவ்வாறு உள்நாட்டு உற்பத்தியை 9 வீதத்தில்  இருந்து 14 வீதம் வரை அதிகரிக்க முடியும்? மக்களை ஏமாற்றும் கொள்கையையே அரசு மேற்கொள்கின்றது.

அரசு வித்தியாசமான பொருளாதாரக் கொள்கையையே பின்பற்றி வருகின்றது. இறக்குமதிகளைத் தடைசெய்திருக்கின்றது. சர்வதேச நிலைப்பாடுகளை மதிக்காமல் பொருளாதார அபிவிருத்தியை கொண்டு செல்லவே அரசு முயற்சிக்கின்றது. தேசிய பொருளாதார தரப்படுத்தல் ஒன்றை ஏற்படுத்தி அதன் மூலம் சர்வதேச மூதலீட்டாளர்களைக் கொண்டுவர முடியுமா?

அரசின் இறக்குமதி தடைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியத்தின் எச்சரிக்கைக்கு அரசின் பதில் என்ன? ஐரோப்பிய நாடுகள் எமது ஏற்றுமதிப் பொருட்களுக்கு மிகவும் சக்தியாக இருக்கின்றன. அரசின் நிலைப்பாட்டால் ஐரோப்பிய சந்தைகள் எமக்கு இல்லாமல் போகும்.

அதனால் அரசின் இந்த நிலைப்பாடு தொடர்ந்தால் எமது நாடும் வடகொரியாவுக்கு நிகரான பொருளாதார நிலைக்கே செல்லும். இது அரசின் இயலாமையாகும். இது வங்குரோத்து அரசு – தோல்வியுற்ற அரசாகும்” என்றும் குறிப்பிட்டுள்ளார் .

“எமது பகுதியில் தொழிற்சாலைகள் இருந்த இடங்களில் இராணுவ முகாம்களே காணப்படுகின்றன” – சிவஞானம் சிறிதரன்

“எமது பகுதியில் தொழிற்சாலைகள் இருந்த இடங்களில் இராணுவ முகாம்களே காணப்படுகின்றன”என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று(04.12.2020) நடைபெற்ற 2021ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தில் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு மீதான விவாதத்திலேயே பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் மேற்கண்டவாறு கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“போர் முடிவடைந்து 11 வருடங்கள் கடந்துள்ள போதும் எமது பகுதியில் தொழிற்சாலைகள் இருந்த இடங்களில் இராணுவ முகாம்களே காணப்படுகின்றன. பரந்தன் இரசாயன தொழிற்சாலை, ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை, ஆனையிறவு உப்பளம் ஆகிய தொழிற்சாலைகளில் தொழில் முயற்சிகளை முன்னெடுக்க முடியாத நிலை தொடர்கின்றது. மேற்படி தொழிற்சாலைகளை மீண்டும் இயக்குவதினூடாக வேலையற்ற இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்க முடியும்.

வடக்கு, கிழக்கு பகுதிகளில் தொழில்சார் சூழலை உருவாக்கும் வாய்ப்புகள் பல இருந்தாலும் ஏதோவொரு காரணத்துக்காக அவை முடக்கப்பட்டு வருகின்றன. அரசு அரசியல் ரீதியாக அன்றி, ஜனநாயக அடிப்படையில் செயற்பட வேண்டும். வடக்கு அல்லது கிழக்கில் கைத்தொழில் வலயமொன்றை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதேவேளை, வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் இலங்கையில் முதலீடுகள் செய்யத் தயாராக உள்ளனர். அரசு அவர்களையும் தேசிய பொருளாதார அபிவிருத்தியில் இணைத்துக்கொள்ள வேண்டும்”எனவும் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழர்களின் அமைதி போராட்டங்கள் அடக்கப்பட்டமையினாலேயே விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடுகின்ற ஒரு மாபெரும் சக்தியாக வளர்ந்தார்கள்” – மாவை சேனாதிராஜா

அண்மையில் பாராளுமன்றில் அமைச்சர் சரத்வீரசேகர “விடுதலைப் புலிகளை ஒழித்தபோதே கூட்டமைப்பையும் தடை செய்திருக்க வேண்டுமென ” குறிப்பிட்டிருந்தமை தொடர்பாக பல தமிழ் அரசியல் தலைவர்களும் தங்களுடைய அதிருப்தியை வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் “சரத் வீரசேகரவின் கருத்து மிக மோசமான சர்வாதிகார, இராணுவ மய சிந்தனையின் வெளிப்பாடாகும்.” என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின்  தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

அமைச்சர் சரத்வீரசேகரவின் கருத்து தொடர்பில் கருத்துரைக்கும்போதே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி அவர் மேலும் கூறியதாவது:-

“சரத் வீரசேகரவின் கருத்து மிகமோசமான சர்வாதிகார, இராணுவமய சிந்தனையின் வெளிப்பாடாகும். அவர் உலக வரலாற்றை அறியாமல் பேசுகின்றார். உலக நாடுகள் பலவற்றிலும் விடுதலைக்காகவும் ஆட்சியைக் கைப்பற்றுவதற்காகவும் இத்தகைய போராட்டங்கள் நடத்தப்பட்டிருப்பதுடன் அவற்றில் பல போராட்டங்கள் வெற்றியும் கண்டிருக்கின்றன.

இலங்கையில் தமிழினத்தின் உரிமைகளைப் பறித்து இராணுவத்தின் ஊடாக அவர்களை அடக்கியொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அரசால் தமிழர்களின் அமைதிவழிப் போராட்டங்கள் அடக்கப்பட்டமையினாலேயே விடுதலைப்புலிகள் ஆயுதமேந்திப் போராடுகின்ற ஒரு மாபெரும் சக்தியாக இந்த நாட்டில் வளர்ந்தார்கள்.

எனவே, தமிழ் மக்களின் விடுதலை உணர்வையும் கொள்கையையும் சரத் வீரசேகரவினாலும் வேறு எந்தவொரு அரசுகளினாலும் அழித்துவிடமுடியாது. தற்போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சராகப் பதவியேற்றுக்கொண்டிருக்கும் சரத் வீரசேகர, விடுதலைப்புலிகளை அழித்ததைப்போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் இல்லாதொழிக்க வேண்டும் என்று இறுமாப்புடன் பேசுவது அவர் நாடாளுமன்றத்தில் இருப்பதற்குத் தகுதியற்றவர் என்பதையே வெளிப்படுத்துகின்றது” என குறிப்பிட்டுள்ளார்.

“அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் வர்த்தமானியுடன் நின்று விடுகின்றதே தவிர மக்களுக்கு கிடைப்பதில்லை” – அனுரகுமார திசாநாயக்க

“அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் வர்த்தமானியுடன் நின்று விடுகின்றதே தவிர மக்களுக்கு கிடைப்பதில்லை” என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க  அரசு மீதான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இன்று (04.12.2020) நாடாளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அங்கு மேலும் பேசிய அவர்,

“இன்னமும் எமது மக்கள், குறைந்த விலையில் அரிசியைக்கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர் .இந்த ஆண்டு நெல் உற்பத்தியில் அதிக விளைச்சல் கண்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள போதிலும், அரிசிக்கான நிர்ணய விலையை கொடுக்க முடியவில்லை.

மக்களுக்கு தரமான நுகர்வுப் பொருட்களை பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் அரசாங்கம் ஆட்சி செய்கின்றது. தேசிய உற்பத்தியை பலப்படுத்துவோம் என அரசாங்கம் கூறினாலும் அதற்கான வரிக் கொள்கையொன்று நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்புகள் வர்த்தமானியுடன் நின்று விடுகின்றதே தவிர மக்களுக்கு கிடைப்பதில்லை” என்றும் அனுரகுமார திசாநாயக்க கூறினார்.