மறுபிரசுரங்கள்

மறுபிரசுரங்கள்

”பத்மநாதன் அண்ணரின் கரங்களைப் பலப்படுத்துவோம்.” – தயா மோகன் விடுதலைப் புலிகள் மட்டு அம்பாறை அரசியற் துறை.

lttelogo.jpgஅன்பிற்கினிய புலம் பெயர் தமிழ் மக்களே! மிகவும் நெருக்கடியான ஒரு காலகட்டத்தில் நான் உங்களுடன் தொடர்பு கொள்கின்றேன் என்பதனால் இம்மடல் வழியாக வெளிப்படுத்தப்படுகின்ற விடயங்கள் மட்டில் கூடிய கரிசனை செலுத்துவீர்கள் என நான் திடமாகவே நம்புகின்றேன்.

இலங்கைத்தீவில் சுதந்திரத்திற்கு பின்னதான காலப்பகுதியில் பெரும்பான்மை இன மக்களால் தமிழ் மக்கள் பல வேளைகளில் கொடுமைப்படுத்தப்பட்டார்கள். தமிழ் மக்களுக்கான உரிமைகள் மறுக்கப்பட்ட நிலையில் அகிம்சைப்போராட்டங்கள் தோற்கடிக்கப்பட்ட காரணத்தினால் ஏறக்குறைய சுதந்திரமடைந்து முப்பது வருடங்களின் பின்னர் தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்தவேண்டிய தேவை ஏற்பட்டது.

கடந்த 30 வடங்களுக்கு மேலான காலப்பகுதியில் சிறிது சிறிதாக நமது தேசம் வளர்ந்து இறுதியில் ஒரு தேசத்திற்கு வேண்டிய பெரும்பாலான கட்டமைப்புகளோடு தலைநிமிர்ந்து நின்றது. எந்த ஒரு விடுதலைப் போராட்டத்திலும் இல்லாத அளவுக்கு நமது விடுதலைப்போராட்டம் பல சாதனைகளை செய்தது. சரித்திரங்களையும் படைத்தது. இதற்கு நமது தேசியத்தலைவர் முதன்மைக்காரணியாக இருந்தார். அவரது உறுதி தளராத கொள்கைக்கும் அயராத உழைப்பிற்கும் சர்வதேசமெங்கிலும் இருந்து எம்மக்கள் பலம் சேர்;த்தார்கள்.

ஆனால் இன்று யாருமே எதிர்பார்த்திராத அளவுக்கு நாம் சிங்களத்தினதும் சர்வதேசத்தினதும் சதியில் சிக்குண்டு சிதைந்து கிடக்கின்றோம். தலைமைகளை இழந்து தாங்க முடியாத வேதனையில் நாம் இன்று நிற்கின்றோம். சரித்திர நாயகர்களை இழந்தும் ஆயிரக்கணக்கிலான மக்களின் உயிர்களை இழந்த நிலையிலும் தான் சர்வதேசத்தின் பார்வை நமது பக்கம் திரும்பியுள்ளது. ஆயுத ரீதியிலான வரலாற்று வெற்றிகளை நாம் கண்டபோது நடந்திராத சில சம்பவங்கள் எம்மக்கள் இரத்தம் சிந்தியபோது நடந்துள்ளது என்ற உண்மையை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம். ஆயுதப்போர் ஒன்று மட்டுமே விடுதலையைப் பெற்றுத்தரும் என்கின்ற வரலாற்றுக்காலத்தை கடந்த நிலையில் இன்று நாம் வாழ்கின்றோம். உலகமும் அந்த நிலைக்கு வந்துவிட்டது.

வரலாற்றில் இப்படியான ஒரு நெருக்கடியை நாம் சந்தித்து நிற்பதற்கு பல காரணங்கள் பேசப்படுகின்றது. விமர்சனங்கள் பல எழுகின்றன. வரலாறு நமக்கு வழங்காத சில சாதகமான நிலைமைகள் நமக்குள் ஏற்பட்ட துரோகத்தனங்கள் எனப்பலவற்றை நாம் கூறிக்கொண்டு போகலாம். இவகைளைப்பற்றி இவ்வேளையிலே நாம் ஆராய்வதனை விடுத்து நமது அடுத்த கட்ட நகர்வுகள் எவ்வாறு அமையவேண்டும் அடுத்து நாம் என்ன செய்யவேண்டும் அதனை எப்படிச் செய்யப்போகின்றோம் என்பதே நம் முன் இன்று எழுந்துள்ள பெரிய கேள்விகளாக இருக்கின்றன.

நம் மக்களின் பிரச்சினை இன்று சர்வதேச அளவில் பேசப்படுகின்ற நிலைக்கு தற்போதூன் வந்துள்ளது எனலாம். அதற்கு நமக்கு முப்பது வருடங்கள் தேவைப்பட்டுள்ளன. அந்தளவுக்கு இராஜதந்திர ரீதியில் நாம் பலவீனப்பட்டு இருந்துள்ளோம்.

நமது வீர மறவர்களின் கனவை நாம் நனவாக்க வேண்டும். எம்மக்களுக்கான உரிமையை நாம் எம் தலைமையின் விருப்பப்படி பெற்றுக்கொடுக்கவேண்டும். அதற்கான ஏதுவான சில வழிமுறைகள் சிலவற்றை இன்று காணமுடிகின்றது. அதற்கு ஆயுதப்போர் மட்டும் தான் ஒரே வழி என்ற கருத்தினை நாம் மீண்டும் ஒருதடவை மீள்பார்வை செய்யவேண்டிய நிலையில் இருகின்றோம். அதாவது எம்மக்களின் உரிமையை மீட்டெடுக்க ஆயுதவழி ஒரு உந்துதலை ஏற்படுத்தும் என்பதோடு அதனை விடவேகமாக ராஜதந்நிதர ரீதியிலான நகர்வுகள் அமையவேண்டும். இன்றுள்ள உலக நிலைமைகளையும் ஒருதடவை கவனத்தில் கொள்ளவேண்டும்.

ஐ.நா.மனித உரிமை கவுன்சிலின் வாக்கெடுப்பு நமக்கு சாதகமாக இல்லை தான். இதில் வெற்றிதோல்வி என்பதனை விடுத்து நமது பிரச்சினை ஜ.நா. வரைக்கும் வந்துள்ளது என்பதில் மகிழ்ச்சி கொள்ளவேண்டும். அத்தோடு மட்டுமல்ல சிறிலங்கா அரசுக்கு எதிராக வாக்களித்த நாடுகளையும் ஆதரவாக வாக்களித்த நாடுகளையும் நாம் பார்க்கவேண்டும்.

உலகின் தலைவிதியை நிர்ணயிக்கும் சக்தியாக இருக்கக்கூடிய அமெரிக்கா தலைமையிலான அணி இன்று தமிழர்களின் பக்கம் ஓரளவு இருக்கின்றது என்பதனையிட்டு நாம் ஆறுதலடையவேண்டும். இன்றுள்ள நிலையில் இவைதான் நமக்கு சாதகமான நிலை. போரை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டதாக சிங்களம் மார்தட்டி வெற்றிக்கழிப்பில் இருக்கி;ன்ற நிலையில் சிங்கள தேசத்தின் அடுத்த கட்ட நகர்வையே இன்று சர்வதேசம் எதிர்பார்த்துள்ளது. சிங்களம் எம் மக்களுக்கு கௌரவமான ஒரு தீர்வை முன்வைக்காது என்பது நம்க்குத்தெரியாத ஒன்றல்ல. ஆனால் அது சர்வதேசத்திற்கு தெரியும் காலம் வரும் வரையில் நாம் உறுதி தளராத மனவுறுதியுடன் பணிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும்.

இவைகள் ஒருபுறமிருக்க அதற்கு முன்னதாக நாம் சிங்களத்தின் சிறைக்குள் அகப்பட்டுக்கிடக்கும் எம் மக்களைப்பற்றியும் எம் போராளிகள் பற்றியும் உடனடியாக கரிசனை செய்யவேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம். போதிய உணவு இன்றியும் சரியான மருத்துவ வசதிகள் இன்றி மக்களும் போராளிகளும் சிங்களத்தின் சிறையில் அகப்பட்டு கிடக்கின்றார்கள். விடுதலைத்தாகத்தோடு களமாடிய நம் உறவுகள் இன்று சிங்களப்படையினரின் கூட்டிற்குள் அகப்பட்டு தினம் தோறும் அவலப்படுகின்றார்கள். காயப்பட்டிருந்த அவர்களின் நிலை என்ன? வேறு வழியின்றி சரணடைந்த போராளிகள் பற்றி எந்த தகவல்களும் இல்லாத நிலையில் நாம் வெட்டிப்பேச்சு பேசி காலத்தை கடத்துவதனைவிடுத்து ஆக்கபூர்வமான செயற்படுகளை இன்னும் காலம் தாழ்த்தாது செய்யவேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்தப்பணிகளில் தளத்திலுள்ள எங்களைவிட புலத்திலுள்ள உங்களால் செய்யப்படவேண்டிய பணிகள் நிறையவே இருக்கின்றன. இவ்வேளையில் நாம் நமக்குள் இருக்கும் கருத்துவேறுபாடுகளையும் விமர்சனங்களையும் புறந்தள்ளி ஒன்றுபட்டு உழைக்கவேண்டும். அப்போதுதான் சாவின் விளிம்பிலுள்ள நம் உறவுகளை காப்பாற்றமுடியும். இதற்கு சர்வதேசத்தின் உதவிகளைப்பெறக்கூடிய வழிகளை ஆராய்ந்து செயற்படவேண்டும்.

இங்கு படையினருடன் போராடி அவர்களுக்கு உயிர் இழப்புக்களை ஏற்படுத்துவது பெரியகாரியமல்ல. அதனால் எதுவுமே இப்போதைக்கு நடக்காது. கடந்த இரு தசாப்தகாலத்தில் படையினருக்கு எல்லாவழிகளிலும் நாம் இழப்புக்களை ஏற்படுத்தியிருந்தோம். அதனால் என்ன நடந்தது?

இன்றுள்ள நிலையில் முதலில் பாதிக்கப்பட்டுள்ள நாம் உறவுகளை பாதுகாக்கவேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும். தற்போதுள்ள நிலையில் பத்மநாதன் அண்ணர் சில முக்கியமான செயற்பாடுகளிலும் ராஜதந்திர நகர்வுகளையும் மேற்கொண்டுள்ளதாக அறிகின்றேன். தற்போதுள்ள நிலையில் அவரின் கரங்களைப் பலப்படுத்துவோம். வெளியுறவுத்துறைக்கு பொறுப்பாக தேசியத்தலைவர் அவர்கள் பத்மநாதன் அண்ணர் அவர்களை நியமித்து அவர் செயற்பட்டு வந்தநிலையில் தொடர்ந்தும் அவரது பணிகளை சிறப்பான முறையில் முன்னெடுக்க நாம் ஒத்துழைப்பது தவறல்ல. எனவே அவரின் செயற்பாடுகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவோம். அதற்கு பின்னர் முதலில் என்ன செய்யவேண்டும் என்று அடையாளம் கண்டுகொண்டு அடுத்த கட்டம் பற்றி சிந்திப்போம். அதனால் நாம் தலைவரின் பாதையிலிருந்து விலகிவிட்டதாக நீங்கள் நினைக்காதீர்கள். அவரின் வழியில் தொடர்ந்து பயணிக்க என்றும் நாம் தயாராகவே உள்ளோம். எந்த மக்களுக்காக நாம் களமாடினோமோ அந்த மக்கள் இன்று நம்மீது சிலவிடயங்களில் வெறுப்புணர்வுகளையும் காட்ட முற்படுகின்றார்கள். காரணமறிந்து செயற்பட நாம் முன்வரவேண்டும். அவ்வாறான ஒரு நிலை ஏற்படும் போது நாங்களும் எங்கள் முடிவுகளை மாற்றி ஒன்று சேர்ந்து புலத்திலுள்ள உங்களுக்கு களமாடி பலம் சேர்ப்போம் என்பதனை தெளிவாக எடுத்துக்கூற விரும்புகின்றேன். அத்தோடு களத்திலுள்ள மக்களின் தியாகங்களினால்த்தான் புலத்திலுள்ள மக்களை ஒன்றுசேர்க்கமுடியும் எழுச்சி கொள்ளச் செய்யமுடியுமென்றால் அதற்கு எம்மக்கள் தயாராகவே உள்ளார்கள்.

இறுதியாக ஒன்றை ஆணித்தரமாக கூற விரும்புகின்றேன். மிகவும் முக்கியமான ஒரு காலகட்டத்தில் நாம் முரண்பட்டு தற்போதுள்ள கட்டமைப்புக்களை சிதைத்து மக்கள் மனங்களிலிருந்து புறக்கணிக்கப்படுவோமாக இருந்தால் அது நாம் எமது தலைமைக்கும் எம் மக்களுக்கும் செய்யும் வரலாற்றுத்துரோகமாகவே இருக்கும். பொறுப்புணர்வுடன் முடிவுகளை எடுத்து நமது தலைமை காட்டிய பாதையில் தொடர்ந்தும் பயணிப்போம். நம் தலைமையை நாம் உண்மையாகவே நேசிப்பவர்களாக இருந்தால் ஒன்றுபட்டு எம்மக்களுக்கான உரிமையை மீட்டெடுப்போம்.

என்றும் அன்புடன்…
தயா மோகன்
விடுதலைப்புலிகள் மட்டு அம்பாறை அரசியற் துறை.

பிரபாகரனே வந்தாலும் இனி ஆயுதம் வேண்டாம் அகிம்சையே வேண்டும் – தமிழருவி

thamilaruvi.jpgஈழத்தில் வாடும் தமிழரும், புலம்பெயர்ந்து வாழும் தமிழரும் தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம். ஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். “அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம்” என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது என்று இந்திரா காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு பிரிவின் முன்னாள் பொதுச் செயலாளர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழ்நாட்டிலிருந்து வாரம் இருமுறை வெளிவரும் ஜூனியர் விகடன் இதழில் ‘தமிழா… உன் கதி இதுதானா?’ எனும் தலைப்பில் தமிழருவி மணியன் எழுதிய கட்டுரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது :  

“உன்னதமானவர்கள் வீழ்ந்துவிட்டனர்.
ஆளரவமற்ற இருட்புலத்தில்
அவர்கள் புதைக்கப்பட்டனர்.
யாரும் கண்ணீர் சிந்தவில்லை.
யாரோ அவர்களைக்
கல்லறைக்கு எடுத்துச் சென்றனர்.
அவர்தம்
புகழ்வாய்ந்த பெயர் கூறிட
அங்கே சிலுவையோ…
சமாதியோ… மண்டபமோ
ஏதுமில்லை.
புல் முளைத்திருக்கிறது அங்கே.
தாழ்ந்திருக்கும் புல்லிதழ் ஒன்று
அந்த இரகசியத்தைத் தாங்கியிருக்கிறது.
கரை மீறிச் சீறியடிக்கும்
அலைகள் மட்டுமே சாட்சியம்.
வல்லமை வாய்ந்த
அவ்வலைகள் கூட
தொலைதூர இல்லத்துக்கு
செய்தியைக் கொண்டுபோக முடியாது…”

என்ற வி.என்.ஃபிக்னரின் கவிதை ஒன்று, வன்னிப் பகுதியில் நிகழ்ந்து விட்ட சோகத்தைச் சொல்வதற்காகவே எழுதப்பட்டது போல் இருக்கிறது..!

விடுதலைப் புலிகளை ஒட்டு மொத்தமாக அழித்து விட்டதாக ராஜபக்சவின் இராணுவம் அறிவித்துவிட்டது. பிரபாகரனை கொன்றுவிட்டதாக இலங்கை அரசு எக்காளமிடுகிறது. பிரபாகரன் செத்துவிட்டதாக ஒரு சான்றிதழ் பெற நாராயணனும், சிவசங்கர மேனனும் புதுடில்லியிலிருந்து கொழும்புக்குப் பறந்தனர். ராஜபக்சவின் வெற்றிச் சிரிப்பில், இருவரும் முகமலர்ந்து நிற்பதை செய்தித்தாள்கள் படமாக்கின. ஒரே நாளில் பல்லாயிரம் தமிழர் படுகொலை செய்யப்பட்டது, நம் பிரதமரின் தூதுவர்களைத் துளியும் பாதிக்கவில்லை. தமிழினத்தின் உயிர் அவ்வளவு அற்பமாகப் போய்விட்டது!

சிங்களர்கள் அனுராதபுரத்திலும், கொழும்பிலும் ஆடிப் பாடி மகிழ்ந்தனர். இதயத்தை அழுத்தும் சோகத்தைக் கூட வெளிப்படுத்த முடியாமல் தமிழ்க் குடும்பங்கள் ஒடுங்கின. இனி எல்லாம் நலமாக நடந்தேறும் என்று இந்திய அரசும், உலக நாடுகளும் ‘நாடி ஜோசியம்’ சொல்வதை நாம் நம்ப முயல்வோம்!

ஹிட்லரின் இன அழிப்புப் படையால் ஆஸ்விட்ச் வதை முகாமிலும், புச்சன்வால்ட் மரண முகாமிலும் சொற்களில் இறக்கிவைக்க முடியாத சோகங்களை அனுபவித்த, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற எலீ வீஸல் தன், ‘இரவு’ என்ற படைப்பில் வெளிப்படுத்திய உணர்வுகள் இங்கே நினைவுக்கு வருகின்றன.

‘என் வாழ்க்கையையே சபிக்கப்பட்ட ஒரு நீண்ட இரவாக மாற்றிய அந்த நாளை நான் என்றுமே மறக்கமாட்டேன். அந்தப் புகையை, மௌனமான நீலவானத்தின் கீழ் புகை வளையங்களாக மாறிய அக்குழந்தைகளின் சிறிய முகங்களை என்னால் மறக்க முடியாது.

என் நம்பிக்கையை முற்றிலும் விழுங்கிய அத்தீச்சுவாலைகளை, வாழும் ஆசையை முற்றாகப் பறித்துவிட்ட, ஆதியும் அந்தமும் அற்ற அந்த இருண்ட அமைதியை எப்படி மறப்பேன்? எனது கடவுள் நம்பிக்கையையும் ஆன்மாவையும் கொன்று, எனது கனவுகளை சாம்பலாக்கிய அந்தக் கணங்களை நான் என்றும் மறக்கமாட்டேன். கடவுளைப் போல் நான் வாழ விதிக்கப்பட்டாலும், அந்த நாளை என்றென்றும் மறக்கமாட்டேன்!’ என்று அவர் வெளிப்படுத்திய அதே உணர்வுகளுடன்தான் ஒவ்வொரு ஈழத்தமிழரும் இறுதி வரை இருப்பர் என்பது நிஜம். ‘பிரபாகரன் தலைமையில் இயங்கிய விடுதலைப் புலிகளால்தான் ராஜீவ் – ஜெயவர்த்தனே ஒப்பந்தம் நிறைவேறாமல் போனது. அது மட்டும் நிறைவேறியிருந்தால், இன்று ஈழத் தமிழர்களுக்கு எல்லா உரிமைகளும் வந்துசேர்ந்திருக்கும்!’ என்று சொல்லிவந்தவர்களுக்கு இப்போது நல்ல வாய்ப்பு கனிந்திருக்கிறது. பிரபாகரனை கொன்றுவிட்டதாகவும் விடுதலைப் புலிகளை வென்றுவிட்டதாகவும் பிரகடனம் செய்திருக்கும் இலங்கை அரசு, சிங்களருக்கு சமமாக அனைத்து உரிமைகளையும் எஞ்சியிருக்கும் ஈழத்தமிழருக்கு வழங்க, இப்போது இவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?

இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு இப்போது நடைமுறையில் இருக்கும் அரசமைப்புச் சட்டத்தின் கீழ் தமிழருக்கு சம உரிமை சாத்தியமா? இலங்கை முழுவதும் சிங்களத்துடன் தமிழும் ஆட்சி மொழியாக இதயசுத்தியுடன் அங்கீகரிக்கப்பட்டு, தமிழ் வழி கற்றவர்கள் அரசு நிர்வாகத்தின் சகல துறைகளிலும் அமர்ந்து பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்படுமா? முழுமையான கூட்டாட்சி மலராமற்போனாலும், தமிழக அரசுக்குரிய ஆட்சியுரிமைகளாவது வடக்கிலும் கிழக்கிலும் அமைக்கப்படும் அரசுகளுக்குக் கிடைக்கக்கூடுமா? கிழக்குப் பகுதியில் திருகோணமலைப் பக்கம் திட்டமிட்டு சிங்களரைக் குடியேற்றி தமிழர் நிலங்களை அபகரித்தது போன்று, வடக்கில் வன்னிப் பகுதியில் சிங்களக் குடியேற்றம் நடக்காமல், தமிழரின் வரலாற்று வாழ்வாதாரப் பகுதிகள் பாதுகாக்கப்படுமா? இராணுவத்திலும் காவல்துறையிலும் தமிழர் கணிசமாக இடம்பெற சிங்களப் பேரினவாதப் பௌத்த வெறியர்கள் அனுமதிப்பார்களா? இந்த வினாக்களுக்கெல்லாம் இவர்கள் முதலில் விடை காணட்டும்.

“பிரபாகரன்தான் வன்முறையை வளர்த்தெடுத்தார். விடுதலைப் புலிகளால்தான் பயங்கரவாதம் கட்டவிழ்த்து விடப்பட்டது. ஈழம் அமைதி இழந்ததற்கு இவர்களுடைய இரத்த வெறியே காரணம்!” என்று இங்குள்ள காங்கிரஸ் நாட்டாமைகள் கிளிப்பிள்ளைபோல் இன்று வரை கூறி வருகின்றனர். நூறு எலிகளை விழுங்கிய பூனை தீர்த்த யாத்திரை போன கதைதான் சிங்கள வெறியர்களின் செயல் என்பதை இவர்களுக்கு யார்தான் புரியவைப்பது?

சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்று 1956 இல் அறிவிக்கப்பட்டதும், நாடாளுமன்றத்துக்கு முன்னால் காலிமுகத் திடலில் சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட தமிழினத் தலைவர்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல் நடத்தி, கொழும்பில் தமிழர் சொத்துகளைச் சூறையாடியது யார்? பண்டா – செல்வா ஒப்பந்தத்தை நிறைவேற்றும்படி 1958 இல் அறப்போரில் ஈடுபட்டபோது, தமிழர் பலரைப் படுகொலை செய்து, தமிழ்ப் பெண்களிடம் பாலியல் பலாத்காரம் நடத்தி, அவர்களுடைய உடைமைகளைத் தீக்கிரையாக்கியது யார்? தென்னிலங்கையிலிருந்து பல்லாயிரம் தமிழர் தமிழகத்துக்கும், ஈழ நிலத்துக்கும் புகலிடம் தேடி ஓடச்செய்தது யார்? யாழ்ப்பாணத்தில் 1974 இல் தமிழாராய்ச்சி மாநாடு நடந்தபோது, வெடிகுண்டு வீசி மோசமான தாக்குதலை முன்நின்று நடத்தியது யார்? மலையகத் தமிழர் மீதும், தெற்கில் வாழ்ந்த அப்பாவித்தமிழர் மீதும் 1977 இல் வெறித் தாக்குதல் நடத்தி, இனக்கலவரத்தை வளர்த்தது யார்? பயங்கரவாதத் தடைச்சட்டம் கொண்டுவந்து 1970 ஜூலையில் தமிழ் இளைஞர்கள் மீது நரவேட்டை நடத்தியது யார்? ‘தமிழரின் அறிவுக்கோயில்’ என்று கொண்டாடப்பட்ட யாழ். நகர் நூலகத்தின் 95 ஆயிரம் நூல்களை எரித்துச் சாம்பலாக்கியது யார்? 1983 ஜூலை 25 அன்று வெலிக்கடை சிறையில் 37 தமிழ் இளைஞரும் 27 ஆம் நாள் 18 தமிழரும் குரூரமாகக் கொல்லப்பட்டது யாரால்?

சிங்கள வெறியர்களின் படுபாதகச் செயல்களை ஒரு பட்டியலில் முடித்துவிட முடியாது. புத்த பூமியை இரத்த பூமியாக்கியவர்கள் சிங்களர்கள். அவர்களுடைய வன்கொடுமைக்கு எதிராக வந்து நின்றவர்கள் விடுதலைப் புலிகள். இதுதான் வரலாறு.

எள் முனை உரிமையும் பெறாமலேயே ஏராள மான இழப்புகளைச் சந்தித்துவிட்டது ஈழத் தமிழினம். தமிழீழம் காணும் கனவில் பல்லாயிரம் வீர இளைஞர்கள் களத்தில் பலியாகிவிட்டனர். வான்படை, கடற்படை, தரைப்படையென்று முப்படைகளை உருவாக்கி… ஒரு வலிமை மிக்க, கட்டுப்பாடான இராணுவத்தைக் கட்டமைத்த பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா என்பது கேள்விக்குறியாகிவிட்டது. வீடிழந்து, உறவிழந்து, மன அமைதியை முற்றாக இழந்து, மூன்று லட்சம் தமிழர்கள் வதை முகாம்களில் இரக்கமற்ற இராணுவத்தின் முன் மார்பெலும்பு தெரியும் மழலைகளுடன் கையேந்தி நிற்கின்றனர். போதும் இந்தப் போர்!

சிங்களருக்கு சமமான உரிமைகளுடன் தமிழரை வாழ வைக்க முடியும் என்று சர்வதேச நாடுகள் நம்புகின்றன. நிறைவேறாத முயற்சி அது என்று அந்த நாடுகளின் அதிபர்களுக்கு விரைவில் புரிந்துவிடும். ‘புத்த மதத்துக்கு முக்கியத்துவம் தராமல் தமிழரோடு ஒப்பந்தம் போடுகிறாயா?’ என்று பண்டாரநாயகாவை சுட்டுக்கொன்ற புத்த சந்நியாசிகளின் பூமியில், தமிழருக்குக் குறைந்தபட்ச உரிமைகள் கொடுக்க ராஜபக்சவே முன்வந்தாலும் ஒன்று கொல்லப்படுவார்… அல்லது அதிகார நாற்காலியிலிருந்து அகற்றப்படுவார். பிரபாகரன் இல்லாத நிலையில், கொழும்பில் இருக்கும் ஆறு லட்சம் தமிழர் வாழ்வில் எந்த நேரத்திலும் அமைதி பறிக்கப்படும். காலம் பின்னாளில் நடத்தவிருக்கும் பாடம், நம் பிரதமருக்கும் சர்வதேசத் தலைவர்களுக்கும் உரிய ஞானம் தரும்.

இலங்கை இறையாண்மைக்கு உட்பட்டு, ஈழத் தமிழருக்கு இந்தியா அரசியல் அதிகாரங்களை இனி வாங்கித் தரும் என்று நாம் நம்புவோமாக! அதற்குமுன்பு வதை முகாம்களில் ஆடு-மாடுகளைப் போல் அடைக்கப்பட்டிருக்கும் மக்களுக்குப் போதிய உணவும் குடிநீரும் மருந்தும் கிடைக்க வழி செய்ய வேண்டும். இருப்பிடங்களை இழந்து நிற்கும் பத்து லட்சம் பேரும் மிக விரைவில் தங்கள் சொந்தக் குடியிருப்புகளுக்குத் திரும்ப வழி காணவேண்டும். நிவாரண உதவிகளை நேரடியாக சர்வதேச நாடுகளின் மனித உரிமை அமைப்புகள் வழங்க அனுமதிக்க வேண்டும். ராஜபக்ச வாக்களித்தபடி, ஆறு மாதங்களில் ஈழத் தமிழரின் இதய ரணங்கள் ஆறும் வகையில் அரசியல் தீர்வை அளிக்க வேண்டும்.

பிரபாகரன் மீது பழியைப் போட்டு நம் சொந்தங்களை சாவுப் பள்ளத்தில் தள்ளியதை வேடிக்கை பார்த்த இந்திய அரசு, இனியாவது செயலில் இறங்க வேண்டும். ஆனால், மன்மோகன் அரசோ ராஜபக்ச சகோதரர்களின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக உலக நாடுகள் நடவடிக்கை எடுப்பதைத் தடுப்பதில் தீவிரமாக இருக்கிறது. தமிழினம் எங்கே போய், யாரிடம் தன் விதியை நொந்து கொள்வது?!

இரண்டாம் உலகப் போரின் இறுதியில் அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் யூனியன், பிரான்ஸ் ஆகிய நான்கு நாடுகளின் முயற்சியில் ஹிட்லரோடு இணைந்து மனித உரிமைகளைக் குழிதோண்டிப் புதைத்தவர்களுக்கு எதிராக ‘நூரம்பர்க் விசாரணை’ நடத்தப்பட்டு, தூக்கு தண்டனையும், ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.

போர்க் குற்றங்களுக்காகவும் மனிதகுல உரிமைகளுக்கு மாறான அத்துமீறல்களுக்காகவும் யாரையும் விசாரணைக் கூண்டில் நிறுத்தி, தண்டிப்பதற்காக சர்வதேச நாடுகள் முன்வந்தன. ‘சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம்’ உருவானது. ‘உலகின் நீதிக்கும் அமைதிக்கும் அடித்தளம், மனித குலத்தின் கண்ணியம் காக்கப்படுதலே’ என்று தெளிவுபடுத்துகிறது. ‘சித்ரவதை, வன்கொடுமை, இழிவாக நடத்தப்படுதல் ஆகியவை மனித உரிமை மீறல்’ என்கிறது அந்தப் பிரகடனத்தின் ஐந்தாவது பிரிவு.

‘ஒரே நாளில் பல்லாயிரம் தமிழரைப் படுகொலை செய்த ராஜபக்ச அரசைக் கண்டித்து ஐ.நா. சபையின் மனித உரிமை அமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று பிரிட்டனும் ஐரோப்பிய நாடுகளும் வேண்டின. டென்மார்க் முயன்று 17 நாடுகளின் ஆதரவைத் திரட்டி மனித உரிமை சபையைக் கூட்டச் செய்தது. ஆனால், இலங்கை அரசு நிராயுதபாணிகளைக் கொன்று குவித்ததை நியாயப்படுத்தி, கம்யூனிச வரலாற்றில் களங்கத்தை ஏற்படுத்திய ரஷ்யாவும் சீனாவும் கியூபாவும், இந்தியத் தமிழரின் எதிர்ப்பு வருமே என்று சிறிதும் கவலைப்படாமல் மன்மோகன் அரசும், ராஜபக்சவைக் காப்பாற்றக் களம் அமைத்தன!

வியன்னாவில் ஒரு சீக்கிய மதகுரு படுகொலை செய்யப் பட்டதும், பஞ்சாப் பற்றி எரிந்தது. மன்மோகன் சிங் பதறுகிறார். வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா வியன்னாவுடன் பேசுகிறார். ஆனால், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட ஈழத் தமிழரின் பிணங்கள் விழுந்து மண் முழுவதும் மயானமானது. இந்திய அரசின் இதயம் மட்டும் இரங்கவில்லை. மன்மோகனின் மனம் பதறவில்லை; சோனியாவிடமிருந்து ஒரு சொல் வரவில்லை!

‘சகோதரன் ஒருவனை விலங்கு பிணைத்திருப்பது உங்களை வருத்தாவிட்டால், நீங்கள் உண்மையில் இழிந்த அடிமைகளாகத்தான் இருக்க வேண்டும். வல்லமையற்றவர்க்கும் வாயில்லாதவர்க்கும் பரிந்து பேச அஞ்சுவோர் அனைவரும் அடிமைகளே!’ என்றார் ஜேம்ஸ் ரஸ்ஸல். இங்குள்ள தமிழர்கள் இனவுணர்வற்ற அடிமைகள். ஐந்நூறு ரூபாய்க்குத் தங்கள் வாக்கை விற்பவர்கள். வாய்வீரம் பேசுவதில் மட்டும் வல்லவர்கள். பதவி தரும் சுகத்துக்காக ஏங்குபவர்கள். சொந்த நலனுக்காக இனநலனை இழப்பவர்கள்.

ஈழத்தில் வாடும் தமிழரும், புலம்பெயர்ந்து வாழும் தமிழரும் தாயகத் தமிழரை இனி நம்ப வேண்டாம். ஆயுதத்தை மறந்து விடுங்கள். அகிலம் முழுவதும் அறப்போரை நடத்துங்கள். ‘அகிம்சையே வலிமை மிக்க ஆயுதம்’ என்று போற்றிய புரட்சியாளர்கள் மார்ட்டின் லூதர் கிங், நெல்சன் மண்டேலாவை நெஞ்சில் நிறுத்துங்கள். பிரபாகரனே வெளிப்பட்டாலும் அகிம்சை வழியில் புரட்சியைத் தொடர்வதே உகந்தது. ஆயுதப் போரில் இனியும் எம் தமிழினம் அழியக்கூடாது.

முல்லை பெரியாறு, காவிரி, பாலாறு, ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம் என்று எந்த உரிமை மறுக்கப்பட்டாலும் உறக்கத்திலிருந்து எழாத தமிழரையும், பல்லாயிரம் ஈழத் தமிழர் பலியான நாளில் குடும்ப உறவுகளை மத்திய அமைச்சர்களாக்க புதுடில்லி புறப்பட்ட தமிழினத் தலை வரையும், நம் இந்திய அரசு சரியாகவே இனம் கண்டு வைத்திருக்கிறது. அதனால்தான் அது ராஜபக்சவுக்கு அரியணை தாங்கி ஆலவட்டம் வீசுகிறது. தமிழினத்தின் புறநானூற்று வீரத்தில் புழுதி படிந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன.

‘பாண்டியனின் வழி நீயா? இமயக்கோட்டில் பறந்திருந்தது உன் கொடியா? இலங்கை நாட்டை ஆண்டவர்கள் உன்னவரா? கலிங்கர் மண்ணை அதிரடித்தது உன்குலமா? கடல்கள் மூன்றைத் தாண்டியவர் பரம்பரையா? புட் பகத்தில், சாவகத்தில் கொடி போட்டான் பிள்ளையா நீ? மாண்ட வரலாற்றினுக்கும் உன்றனுக்கும் மயிரளவும் தொடர்பில்லை, எதற்கு வார்த்தை?’ என்று சரியாகத்தான் சொன்னார் கண்ணதாசன்! என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“ஆரம்பத்தில் புலிகளை வெறுத்த பல நாடுகள் கடைசிக் கட்டத்தில் பிரபாகரனைக் காப்பாற்ற முயன்றன. இதுதான் உண்மை” – கோட்டாபய ராஜபக்ஸ

gothabaya7777.jpgகே:  இதற்கு முன்னர் ஒரு நேர்காணலில் பயங்கரவாதம் முற்றாக அழித்தொழிக்கப்படும் என்றும் எல். ரீ. ரீ. ஈ.க்கு கசப்பான ஒரு பாடம் புகட்டப்படும் என்றும் நீங்கள் உறுதியளித்திருந்தீர்கள். இப்போது புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் உங்களது உணர்வுகள் எவ்வாறு உள்ளன?

பதில்: பயங்கரவாதம் முற்றாகத் துடைத்தெறியப்பட்டுள்ளமை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இது ஒரு பாரிய பிரச்சினையாக இருந்தது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு, சொத்திழப்பு என்பனவற்றை எண்ணிப் பார்க்கின்ற போது, உண்மையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிக்கின்றது.

கே: இதற்கு முன்னர் தீட்டப்பட்ட பாதுகாப்புத் திட்டங்களில் அரசியல் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதுண்டு. முன்னாள் ஜனாதிபதிகள் இந்தத் தலையீடுகளைப் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.  நீங்கள் அவ்வாறான ஒரு தலையீட்டுக்கு முகம் கொடுத்தீர்களா? அல்லது ஜனாதிபதி உங்கள் சகோதரர் என்பதால் உங்களுக்கு அவ்வாறான தலையீடுகள் இருக்கவில்லையா?

பதில்: பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் மேல் மட்டத்தில் இருந்தும், கீழ் மட்டத்தில் இருந்தும் வரும் பிரச்சினைகளையும், அழுத்தங்களையும் சமாளித்து சரியான முடிவுகளை என்னால் எடுக்கக் கூடியதாக இருந்தது. சரியான தகவல்களை வழங்கியதன் மூலம் நான் ஜனாதிபதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானேன். இது வெல்லக்கூடிய ஒரு யுத்தம் என்ற நம்பிக்கையை நான் அவர்களுக்கு ஏற்படுத்தினேன். அதற்கு அவர்கள் எல்லோருமே தமது பூரண ஆதரவை வழங்கினர்.

கே: ஆரம்பம் முதல் இறுதிவரை சர்வதேச அழுத்தங்கள் எவ்வாறு அமைந்திருந்தன? நீங்களும், அரசாங்கமும் அவர்களை எப்படி சமாளித்தீர்கள், அவர்களுக்கு சரியான பதிலைக் கொடுத்து இந்த சவாலுக்கு எப்படி முகம் கொடுத்தீர்கள்?

பதில்: இந்தக் கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்னர் சர்வதேச சமூகம் என்பது என்ன என்பதை முறையாகப் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற ஒரு சில நாடுகளை மட்டும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனைய நாடுகளையும், குறிப்பாக எம்முடன் நட்பாக உள்ள நாடுகளையும் நாம் சரியாக இனம் கண்டுகொண்டோம். இந்த நட்பு நாடுகள் வரிசையில் இந்தியா முன்னணியில் இருந்தது.

இந்தியாவின் செல்வாக்கு எம்மைப் பொறுத்தமட்டில் முக்கியமானது. ஜனாதிபதி பதவியேற்றவுடன் இந்தியாவுக்குப் பயணமானார். அங்கு அவர் பயங்கரவாதம் பற்றிய தெளிவான மதிப்பீடொன்றை வழங்கினார். இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அண்மையில் இங்கு விஜயம் செய்தபோது, நான் அது குறித்து அவருக்கு நினைவூட்டினேன்.

அவர் திடுக்கிடும் ஒரு விடயத்தை எனக்குச் சொன்னார். ஒரு சிறிய ராஜதந்திர தவறானது பாரிய அழிவை ஏற்படுத்தக் கூடியது என்பதுதான் அவர் சொன்ன விடயம். 1987ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் பிரபாகரனும், உமாமகேஸ்வரனும் கைது செய்யப்பட்ட போது, அப்போதைய இந்திய அரசாங்கம் இராஜதந்திர ரீதியான அணுகுமுறையைக் கையாண்டிருந்தால், பயங்கரவாதம் இந்தளவுக்கு மோசமான நிலைக்கு வந்திருக்காது என்று அவர் சொன்னார்.

வெள்ளைத் தோல் உள்ள வெளிநாட்டவர் ஒருவர் இங்குவந்து தன்னைப் பெரிதாகக் காட்டிக்கொள்ள முனைகின்றார் என்பதற்காக நாம் அலட்டிக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இவ்வாறு பெரிதாகக் கூச்சலிடுபவர்களால் எமக்கு எந்த உதவிகளும் கிடைப்பதில்லை. சர்வதேச சமூகத்துடனான உறவுகளை வளர்த்துக்கொள்வதற்காக நாம் மலேஷியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளுடனான உறவுகளை மேலும் நெருக்கமாக்கிக் கொண்டோம்.

இந்த நாடுகளின் மூலம் புலிகள் ஆயுதக் கடத்தலில் ஈடுபடுவதை நாம் நன்கு அறிவோம். இந்த நாடுகளில் உள்ள பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரோடு நாம் மிக நெருக்கமாகப் பணிபுரிந்து புலிகளின் ஆயுதக் கடத்ததல்களை முறியடிப்பதில் முழுமையாக ஈடுபட்டோம்.

சீனா, ரஷ்யா என்பனவற்றையும் நாம் முக்கியமாகக் கருதினோம். அதேவேளை பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களையும் கொள்வனவு செய்தோம். இந்த நாடுகளுக்கு ஜனாதிபதி மூன்று தடவைகள் விஜயம் மேற்கொண்டார். இது தவிர பல சந்தர்ப்பங்களில் அந்த நாடுகளின் தலைவர்களோடு தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டார்.

ஆரம்பத்தில் புலிகளை வெறுத்த பல நாடுகள் கடைசிக் கட்டத்தில் பிரபாகரனைக் காப்பாற்ற முயன்றன. இதுதான் உண்மை. இது எமக்கு நன்றாகத் தெரியும்.

வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் நெருக்குதல்கள் காரணமாகவா, அல்லது எல். ரீ. ரீ. ஈ. உடன் உள்ள நீண்ட கால உறவுகள் காரணமாகவா எம்போன்ற சிறிய அபிவிருத்தி நாடுகள் பற்றி அவர்கள் தீட்டியிருக்கும் பாரிய திட்டங்கள் காரணமாகவா இவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதை நாம் மதிப்பீடு செய்ய முயல வேண்டும்.

அவர்கள் எமக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றங்களை சோடித்தார்கள். நாம் மனிதாபிமான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன்பே அவர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எம்மீது நெருக்குதல் பிரயோகிக்க ஆரம்பித்தார்கள்.
கேள்வி: இந்த இரட்டை வேடம் காரணமாக உங்களதும், ஜனாதிபதியினதும் உயிர்களுக்கு எதிர்காலத்தில் ஆபத்து இருக்கும் என்று கருதுகின்aர்களா?

பதில்: அதற்கான சாத்தியம் உள்ளது. பயங்கரவாதத்தின் தோல்வியால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றவரை எமக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதும் எமக்குத் தெரியும்.

கே: புலிகளின் தலைவரை ஏன் உயிருடன் பிடிக்க முடியாமல் போனது?

பதில்: ஒரு மோதல் சூழ்நிலையின் கீழ் கடைசி சிவிலியனும் மீட்கப்பட்ட பின்னர் புலிகளின் தலைவர்கள் ஒரு சிறிய பிரதேசத்தில் நிர்க்கதி நிலைக்குள்ளானார்கள். அவர்கள் விரும்பும் பட்சத்தில் சரணடைவதற்கு போதிய கால அவகாசமும் கொடுக்கப்பட்டது.

தயா மாஸ்டர் போன்றவர்கள் காப்பாற்றப்பட்ட மக்களோடு மக்களாக வந்து சரணடைந்தார்கள். இதற்கு மேலதிகமாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்களும் சரணடைந்தார்கள். ஆனால் முன்னணித் தலைவர்கள் சரணடைய முன்வரவில்லை. சர்வதேச சமூகம் தங்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு இருந்தார்கள்.

கே: குமரன் பத்மநாதன் என்பவர் பற்றி இப்போது அதிகம் பேசப்படுகின்றதே

பதில்: கடந்த பல வருடங்களாக புலிகளுக்கு பிரதான ஆயுதங்களை கொள்வனவு செய்பவரும், விநியோகித்து வருபவரும் இவர் என்றே கருதப்படுகின்றது. இவர் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக இன்டர்போலினால் தேடப்படுபவர். இவர் மீது போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டும் உள்ளது. இவர் நிதி ரீதியாக புலிகளை ஸ்திரப்படுத்தியவர். இவர் புலிகளின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளதாக சில இணையத் தளங்கள் குறிப்பிட்டுள்ளன.

சர்வதேச பொலிஸாரால் வேண்டப்படும் ஒரு நபரை சில நாடுகள் ஏன் இன்னும் கைதுசெய்யாமல் இருக்கின்றன என்பதைத் தான் என்னால் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது.

கே: இப்போது காவலில் வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்ன?

பதில்: இவர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். புலிகளின் பயங்கரவாதச் செயல்களில் பங்கேற்றதாக இவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் விசாரணைகளும் நடத்தப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கூடியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். கிழக்கு மாகாணத்தில் இது சம்பந்தமான அனுபவம் எமக்குள்ளது.

கிழக்கில் உள்ள புனர்வாழ்வு முகாம்கள் வெற்றிகரமாகச் செயற்படுகின்றன. 30 வருடங்களுக்கு மேலாக புலிகளின் செயற்பாடோடு தொடர்புபட்டிருந்தவர்களுக்கு புனர்வாழ்வளிப்பது என்பது இலகுவான காரியமல்ல.

கே: புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையிலும், எதிர்காலத்தில் உங்களது உயிருக்கு ஆபத்து இருக்கலாம் என்று நீங்கள் கருதுகின்ர்களா?

பதில்: அவ்வாறான அச்சுறுத்தல் எனக்கு இருக்கலாம். ஜனாதிபதி, ஆயுதப் படைகளின் தளபதிகள் ஆகியோருக்கும் இத்தகைய ஆபத்து இருக்கலாம். புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட சகல முன்னணித் தலைவர்களுக்கும் முடிவு கட்டப்பட்ட நிலையிலும் கூட நாம் இந்த ஆபத்தை எதிர்பார்க்க வேண்டிய நிலையில்தான் உள்ளோம்.

ஒருவேளை இந்த ஆபத்து சர்வதேச மட்டத்தில் இருந்து வரலாம். ஏனெனில் எமது நாட்டுக்கு அந்தளவுக்கு சர்வதேச நெருக்குதல் பிரயோகிக்கப்பட்டது. எனவே இதற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கையாள வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

கே: பொட்டு அம்மானைத் தவிர மற்ற எல்லா புலிகளின் தலைவர்களினதும் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. பொட்டு அம்மான் பற்றி ஏன் எந்தத் தகவலும் இல்லை?

பதில்: கடைசி சில தினங்களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது பெருமளவு புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். நாம் எமது வளங்களுக்கு ஏற்ப அவற்றை அடையாளம் கண்டு பெயர்களை வெளியிட்டோம். பிரபாகரன், பானு, சூசை ஆகியோர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பொட்டு அம்மானும் நிச்சயம் கொல்லப்பட்டிருப்பார். அவர்கள் இராணுவத்துடனான மோதலில் கொல்லப்பட்டிருந்தால் வித்தியாசமான சூழ்நிலையில் கொல்லப்பட்டிருப்பார்கள். அப்போது அடையாளம் காண்பது கூட சாத்தியப்பட்டிருக்காது.

கே: விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குமா?

பதில்: அது நடைபெற நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். 30 வருடங்களுக்கு மேலாக அவர்கள் சேகரித்த பெருந்தொகையான ஆயுதங்களை நாம் கைப்பற்றியுள்ளோம். அவர்களிடம் வேறு ஆயுதங்கள் எஞ்சியிருப்பின் அவற்றையும் தேடிக் கண்டுபிடிக்க நாம் நடவடிக்கை எடுப்போம். எமது படையினரால் சுமார் 20 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். பத்மநாதன் போன்ற ஒரு சிலர்தான் இன்னும் ஈழக் கனவு காண்கின்றனர். எனவேதான் அவர்கள் பொய்ப் பிரசாரங்களும் செய்கின்றனர்.

எம்மீது சர்வதேச சமூகம் கொண்டுவந்த அழுத்தத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். எல். ரீ. ரீ. ஈ.க்கு ஆயுதங்கள் வழங்குபவர்கள் மீது அவர்கள் ஏன் அழுத்தங்களைப் பிரயோகிப்பதில்லை? சர்வதேசத்தினூடாகத்தான் குமரன் பத்மநாதன் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அவர் பணம் சம்பாதிக்க போதைப் பொருள் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளார்.

முழு உலகத்துக்கும் இது தெரியும். எம்மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் சர்வதேச அமைப்புக்களுக்கு சர்வதேச மட்டத்தில் சட்டவிரோத செயல் புரியும் இவர் போன்ற நபர்களைக் கைதுசெய்ய அழுத்தம் பிரயோகிக்க வேண்டிய கடமையும் உள்ளது. எனவே இத்தகைய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாம் இந்த அமைப்புக்களை வேண்டிக்கொள்கிறோம்.

கே: புலிகளின் ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை இராஜதந்திர நிலையங்கள் பெளத்த ஆலயங்கள் என்பனவற்றைத் தாக்கி உள்ளனர். இந்த விடயத்தில் அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன?

பதில்: அரசாங்கம் என்ற வகையில் நாம் எமது தூதுவர்களை அழைத்து, இது தொடர்பாக விழிப்பூட்டியுள்ளோம். சம்பந்தப்பட்ட அரசுகளுக்கும் எமது தூதரகங்கள் ஊடாக அறிவித்துள்ளோம். ஆனால் அந்த அரசுகளால் இதுவரை இது சம்பந்தமாக எவரையும் சட்டத்தின் முன் நிறுத்த முடியவில்லை.

இவற்றுக்கு நாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். ஆனால் இந்த சம்பவங்களோடு தொடர்புடைய ஒரு நபரைக் கூட அந்த அரசாங்கங்கள் இன்றும் கைது செய்யவில்லை. இவ்வகையான மனித உரிமை மீறல் குற்றங்களைப் புரிபவர்களை சட்டம் ஒழுங்கு பற்றி வெகுவாகப் பேசும் நாடுகளால் கைதுசெய்ய முடியவில்லை.

ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்துக்கும் இதை நாம் கொண்டு வந்துள்ளோம். இந்த நாடுகள் மீது ஏதாவது ஒரு வகையில் அழுத்தங்களைக் கொண்டுவருமாறும் நாம் அவரைக் கேட்டுள்ளோம்.

கே: சர்வதேச மட்டத்திலான சில அமைப்புக்களின் பிரதிநிதிகள் அடிக்கடி எமது நாட்டுக்கு விஜயம் செய்கின்றனர். இந்த வெளிநாட்டவர்களின் வருகை பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: கடந்த சில மாதங்களாக இலங்கையில் சட்டங்களும், விதிமுறைகளும் மறக்கப்பட்ட ஒரு நிலைதான் காணப்பட்டது. இந்த வட்டத்துக்கு வெளியே தான் சம்பவங்கள் நடந்தன. இதற்கு முக்கிய காரணம் இங்கு நிலவிய பயங்கரவாதம். ஆனால் இப்போது இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் இடம்பெறாமல் தடுக்கக் கூடிய ஒருநிலை ஏற்பட்டுள்ளது. சிலர் தாங்கள்தான் இந்த நாட்டை ஆட்சிசெய்வது போலவும் நடந்துகொண்டனர். அவர்கள் எமது உள்நாட்டு விவகாரங்களில் தேவையின்றி தலையிட்டனர்.

அரச சார்பற்ற நிறுவனங்களால் எவ்வித தேசிய அல்லது சர்வதேசக் கட்டுப்பாடுகளும் இன்றி இந்தத் தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களது முடிவுகள் பொறுப்புக்கூறும் மட்டத்துக்கு அப்பால் சென்றது. நாட்டின் சட்ட விதிகளையும், ஒழுங்கு முறைகளையம் பயங்கரவாதம் பலவீனப்படுத்தியிருந்தமை தான் இதற்கு முக்கிய காரணம். இவற்றைக் கண்டும் காணாமல் இருக்கவேண்டிய நிர்ப்பந்த நிலையில் நாம் இருந்தோம். உண்மையில் எமது நாட்டுக்கே உரிய விதிமுறைகளும், ஒழுங்கமைப்புக்களும் இருக்கின்றன. வெகு விரைவில் நாம் இவற்றை மீள நிலைநாட்ட வேண்டும்.

கே: கொழும்பில் இன்னமும் மறைந்திருப்பதாக நம்பப்படும் புலிச் சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க அல்லது இனம்காண எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன?

பதில்: புலனாய்வுச் சேவைகள் மூலமும், பொலிஸார் மூலமும் எமது விசாரணையாளர்கள் நடத்திய விசாரணைகளின் பலனாக கொழும்பில் புலிகளின் வலையமைப்பை ஏற்கனவே எம்மால் தகர்க்க முடிந்துள்ளது. வன்னிக்குத் தப்பிச் செல்ல முயன்றவர்களையும் கூட நாம் கைது செய்துள்ளோம். இந்தப் பணியை பூரணப்படுத்தும் செயற்பாட்டில் உளவுத் துறையினர் தற்போது முழுமையாக ஈடுபட்டுள்ளனர்.

சிவில் வாழ்வை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் வகையில்தான் நாம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். புலிகளின் அச்சுறுத்தல், கப்பம் கோரல் என்பனவற்றால் சாதாரண தமிழ் மக்களும் கூட பாதிக்கப்பட்டனர். இராணு வத்தினதும், பொலிஸாரின தும் உதவியோடு இவற்றைத் தீர்த்துக் கொள்வதிலும் அந்த மக்களுக்குப் பிரச்சினைகள் இருந்தன. ஆனால் இப்போது சகல சமூகங்களும் இணக்கமான சமாதானமான ஒரு சூழலில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

கே: இந்த முழுச் செயற்பாட்டிலும் ஊடகங்களின் பங்களிப்பு எவ்வாறு அமைந்திருந்தது?

பதில்: நாம் ஒருபோதும் ஊடகங்களை ஒடுக்க முயலவில்லை. ஒரு நாட்டில் ஊடகம் என்பது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஊடகத்தின் ஒரு பகுதி இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டது. அதைப் பற்றி மட்டும் தான் நான் பேசுகின்றேன். இவர்கள் உண்மையில் பெரும் தடையாக இருந்தனர்.

மோதல் நிலைமை பற்றி தவறான ஒரு அறிக்கை வெளியிடப்பட்டால் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ இந்த இலக்கை அடையும் விடயத்தில் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்க முடியாது. எனவே தவறான அறிக்கைகளும், தகவல்களும் மக்களைச் சென்றடைவதை நாம் தடுக்க வேண்டியிருந்தது. இதனால்தான் சிலவேளைகளில் இவ்வாறானவர்களுக்கு எதிராக நான் பேசவேண்டியிருந்தது.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், யாரையும் நாம் நெருக்குதலுக்கு உட்படுத்தியதில்லை. பிழையான செய்தி அறிக்கைகளை ஏனையயஊடகங்கள் மூலம் திருத்தும் வேலையை மட்டும்தான் நாம் செய்தோம். நாட்டு மக்களுக்கும், பெருமளவுக்கு உலக மட்டத்திலும் சரியான தகவல்களை வழங்கும் பணியை பாதுகாப்புத் துறை இணையத் தளம் மிகச் சிறப்பாகச் செய்தது. நாம் கடமையைத்தான் செய்தோம். ஒரு போதும் தணிக்கை செய்யவில்லை.

தமிழில் ; எம். நெளஷாட் மொஹிடீன்   – நன்றி: தினகரன்

பொதுக் கொள்கையின் கீழான வேலைத் திட்டத்துக்கு ஆலோசனை கோருகிறார் செ.பத்மநாதன்

pathmanathan00.jpgதமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சந்தித்துள்ள புதிய சவாலை எதிர்கொள்வதற்கு ஒரு பொதுக்கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட்ட பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதே இன்றைய காலத்தின் கட்டயமாகும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தற்போதைய சூழ்நிலையில் நமது தாயகத்தினதும் அங்கு வாழும் மக்களினதும் இன்றைய யதார்த்த நிலையினை அடிப்படையாக வைத்து சிந்திப்பதுதான் சரியானதும் நேர்மையானது ஆகும்.

தாயகத்தின் தற்போதைய நிலையில் – சிறிலங்கா அரசின் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் மக்களினதும் போராளிகளினதும் பாதுகாப்பை உறுதிப்படுத்தல், அவர்களின் நலன்களைப் பேணுதல், மக்கள் தமது வாழ்விடங்களில் விரைவாக மீளக்குடியேற வழி செய்தல், அவர்கள் தமது இயல்பு வாழ்வுக்குத் திரும்புவதற்கு ஆவன செய்தல், போரில் தமது உடல் உறுப்புக்களை இழந்திருக்கும் மக்களுக்கும் போராளிகளுக்கும் புது வாழ்வளித்தல் என்பவையே எங்கள் முன்னால் இன்று உள்ள தலையாய கடமையாகும்.

அதன் தொடர்ச்சியாக – தமிழர் தேசியம், தமிழர் தாயகம், தமிழரின் தேசிய தன்னாட்சி உரிமை என்ற கோட்பாடுகளின் அடிப்படையில் தமிழீழ மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுக்கக் கூடியதான நிரந்தரமான ஒரு அரசியல் தீர்வைக் காணுதல் என்பதும் எங்கள் முன்னால் உள்ள வரலாற்றுப் பணியாகும். இந்தப் பணிகளை நிறைவேற்றி – நாம் கடந்துசெல்ல வேண்டிய பாதை மிகவும் நீண்டதும் சவால்கள் நிறைந்ததும் ஆகும்.

தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று சந்தித்துள்ள இந்தச் சவால்களை வெற்றிகொள்ள தமிழர்கள் அனைவரும் ஒரு பொது வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைய வேண்டியது அவசியமானது ஆகும்.

சிறிலங்கா அரசு தமிழ்த் தேசிய இனத்தின் தனித்துவத்தினை நிராகரித்து – ஒரே நாடு என்ற கோட்பாட்டின் அடிப்படையில் – தமிழீழ மக்களை சிங்களப் பேரினவாத ஆதிக்கத்துக்குள் நிரந்தரமாக சிறைப்பிடிக்கப் பார்க்கிறது.

தமிழ்த் தேசிய இனம் தனது தேசிய இனப் பண்பாட்டு அடையாளங்களைப் பாதுகாத்து, தனது தேசிய தனித்துவத்தினைப் பேணிக் கொள்வதற்கே போராட வேண்டிய நிலை இப்போது உருவாகிவிட்டது.

சிறிலங்கா அரசின் இந்தக் கொள்கையானது தமிழ் பேசும் மக்கள் அனைவருக்குமே ஆபத்தானது. முஸ்லிம் மக்கள், மலையகத் தமிழ் மக்கள் ஆகியோரும் தமது தனித்துவத்தினையும் அடையாளத்தினையும் பேணிக்கொள்வதற்கும் எதிரானது.

சிறிலங்கா அரசின் இந்த பௌத்த சிங்கள மேலாதிக்கத் திணிப்பை எதிர்த்துப் போராட இலங்கைத் தீவில் வாழும் தமிழ் பேசும் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து ஒரு பொது வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்பட வேண்டிய அவசியம் இப்போது உருவாகிவிட்டது.

சவால்கள் நிறைந்த இன்றைய காலகட்டத்தை எதிர்கொள்வதற்கு முன்னதாக நமது கடந்தகாலச் செயற்பாடுகளை நாம் திரும்பிப் பார்க்க வேண்டும். அந்தப் பட்டறிவிலிருந்து நாம் பாடங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். நடந்து முடிந்த இனப் படுகொலையை எம்மால் தடுத்துநிறுத்த முடியவில்லை. உலகம் எங்கும் தமிழ்நாட்டிலும் எழுச்சிமிகுந்த போராட்டங்களை தமிழர்கள் நடத்தினோம். எத்தனையோ இராஜதந்திர நகர்வுகளை நாம் மேற்கொண்டோம்.

இருந்தபோதும் உலக நாடுகளை தமிழர் தேசத்திற்கு ஆதரவாக அசையவைக்க எங்களால் முடியவில்லை. நமது மக்கள் படுகொலை செய்யப்பட்டமை குறித்த கண்டனங்கள் எழுந்தனவே தவிர அந்தப் படுகொலையை தடுத்து நிறுத்தவோ அல்லது நமது விடுதலை இயக்கத்தை பாதுகாக்கவோ யாருமே முன்வரவில்லை.

ஆனால் சிங்கள தேசமோ தற்போதைய உலக ஒழுங்கை நன்கு புரிந்துகொண்டு செயற்பட்டது. இந்து சமுத்திரப் பிராந்திய புவிசார் அரசியலை அது நன்கு பயன்படுத்தியது. அனைத்துலக முறைமை இயங்கும் நடைமுறையை கருத்திற்கொண்டு உலக நாடுகளை அது தனது பக்கம் அணி சேர்த்தது. இந்த இராஜதந்திர காய்நகர்த்தல்களின் பின்புலத்திலேயே தமிழர் தேசம் மீதான போரையும் சிறிலங்கா நடத்தியது.

தற்போதும் – இதே அணுகுமுறையினைப் பின்பற்றியே – மே மாதம் 27 ஆம் நாள் நடைபெற்ற ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிறப்பு அமர்விலும் சிறிலங்கா அரசு வெற்றி ஈட்டியது.

தொடர்ந்தும் – அனைத்துலக சமூகத்தினை நுட்பமாக கையாண்டவாறு சிங்கள மேலாண்மையை தமிழ் மக்கள் மீது திணிக்கவே சிறிலங்கா அரசு முயல்கிறது.

நமது அடுத்த கட்டப் போராட்டத்தில் நாம் தனித்து நின்று செயற்பட்டு வெற்றி பெற முடியாது. நமது தேசத்திற்கு ஆதரவாக உலகை எவ்வாறு திருப்பப் போகிறோம்?

நமது தேசியத் தலைவர் அவர்கள் முன்னர் சுட்டிக்காட்டியவாறு இந்த உலக ஒழுங்கு தர்மச்சக்கரத்தில் சுழலாமல் தனது நலன்கள் என்ற அச்சில்தான் சுழன்று கொண்டிருக்கிறது.

இத்தகைய உலக ஒழுங்கில் நமக்கு ஆதரவாக உலக நாடுகளை வென்றெடுப்பது எவ்வாறு?

இதற்கு நமக்கு உள்ள வாய்ப்புக்கள் எவை?

நாம் எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் எத்தகையவை?

இவை பற்றி நாம் புதிதாய், புதிய சூழலில் சிந்திக்க வேண்டும். வேகமாய் இயங்கிக் கொண்டிருக்கும் உலகில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கும்.

இந்த மாற்றங்கள் ஈழத் தமிழ் மக்களின் விடுதலைக் கதவுகள் திறக்கப்படுவதற்கு ஏற்ற நிலைமைகளை உருவாக்கும். அந்த நம்பிக்கையுடன் – நமது விடுதலைத் தாகம் தணிந்துவிடாமல் – நமது விடுதலைச் சுடர் அணைந்துவிடாமல் – தமிழ்நாடு மற்றும் உலகத் தமிழ் மக்களின் துணையுடனும் நியாயத்தின் பக்கம் நிற்கும் உலக மக்களின் ஆதரவுடனும் நமது அடுத்த கட்டப் போராட்டத்தை நாம் முன்நோக்கி நகர்த்த வேண்டும்.

யதார்த்த நிலையினை புரிந்துகொண்டு நாம் கூட்டாகச் சேர்ந்து சிந்திப்பதே இன்றைய காலத்தின் தேவை. அதுவே நம் முன்னுள்ள நெருக்கடிகளையும் சவால்களையும் எதிர்கொண்டு நாம் முன்னேறுவதற்கான வழியாகும். நமது புதிய பாதையை வடிவமைத்துச் செப்பனிட்டுச் செல்வதற்கு நமது மக்களது கருத்துக்களும் ஆலோசனைகளும் மிகவும் அவசியமானதும் அடிப்படையானதுமாகும்.

இந்தத் தொடர்புக்கு வழிசமைக்கும் முகமாக மக்கள் தொடர்புக்கான மின்னஞ்சல் முகவரியொன்றை ஏற்பாடு செய்துள்ளோம். இந்த முகவரிக்கு உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ அனுப்பிவைக்குமாறு தாழ்மையுடன் வேண்டிக் கொள்கிறோம்.

மின்னஞ்சல் முகவரி: prdinternational@gmail.com

எமது தலைவர் விட்டுச்சென்ற கடைமையை பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கிறோம் : செ.பத்மநாதன்

pathmanathan.jpgதமிழர் தாயககளத்தில் இனப்படுகொலை அரங்கேற்றப்பட்ட அந்த இறுதிக் கணத்தில் நடந்தது என்ன என்பது குறித்தும் தமிழ் மக்கள் முன்னுள்ள தற்போதைய அவசரமான பணி என்ன என்பது குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் விளக்கமளித்துள்ளார்.  அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய ‘செய்தியலைகள்’ நிகழ்ச்சிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் விபரம் வருமாறு:

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பிரிவினர் கடந்த 17 ஆம் நாள் படுகொலை செய்யப்படும் அந்த துயரமான வேளையிலும் உங்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் இறுதியாக என்ன விடயத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டனர்?

எனது அண்ணன் நடேசன், தம்பி புலித்தேவன் இவர்களின் மரணம் என்னை மிகவும் ஆழமாக பாதித்தது. எமது மக்கள் மிகவும் கொடுமையாக எதிரிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டபோது – ஒவ்வொரு கணமும் எமது உடன்பிறப்புகள் சுட்டுவீழ்த்தப்பட்டபோது – நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இவர்கள் இருவரும் என்னுடன் கலந்துரையாடினார்கள்.

போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக சிறிலங்கா அரசாங்கத்துடன் நாம் பேசினோம். சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரின் ஊடாக – சிறிலங்கா அரச தலைவரின் ஒப்புதலின்படி – நடேசன், புலித்தேவன் ஆகியோர் இராணுவ முகாமுக்கு சென்று கலந்துரையாடுவதற்காக வெள்ளைக் கொடியுடன் சென்றுகொண்டிருந்தபோது சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள்.  அதேபோன்று பொதுமக்கள் சிலரும் வெள்ளைக் கொடியுடன் சென்றபோது சிறிலங்கா அரசாங்கம் தனது வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு அவர்களை சுட்டுக்கொலை செய்தது. இதுதான் உண்மை.

நடேசன், புலித்தேவன் ஆகியோர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பின்னரே அவர்கள் சரணடைவது குறித்த தகவல் தமக்கு கிடைத்ததாக சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருக்கிறார். இது குறித்து என்ன கூறுகிறீர்கள்?

சரணடைவு குறித்து 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே சிறிலங்கா தரப்புடன் பேசப்பட்டது. முதற்கட்ட நடவடிக்கையாக முக்கிய அமைச்சர் ஒருவரும் எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இரண்டு கத்தோலிக்க ஆயர்களும் அங்கு செல்வதாக இருந்தது. அந்த சம்பவம் ஏதோ காரணத்தினால் நடைபெறாமல் போய்விட்டது.  எனினும் நாம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினோம். புலிகளை நேரடியாக வந்து பேசலாம் என்று சிறிலங்கா தரப்பில் எமக்கு கூறப்பட்டது.

சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு இந்த தகவல் அறிவிக்கப்பட்டதா? இல்லையா? என்பது எமக்கு தெரியாது. ஆனால் சிறிலங்கா அரச தலைவரின் உத்தரவுப்படியே இந்த சரணடைவு நடைபெற்றது என்பது அப்பட்டமான உண்மை.

இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த மக்களை பாதுகாக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் கோரும் நடவடிக்கையில் நீங்கள் இறுதி நாட்களில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருந்தீர்கள். இதற்கு ஏதேனும் சாதகமான சமிக்ஞைகள் கிடைத்தனவா?

அனைத்துலக ரீதியில் நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். ஆனால் சிறிலங்கா அரசு பல்வேறு காரணங்களை கூறி எமது முயற்சிகளை தட்டிக்கழித்துக்கொண்டே வந்தது. கடைசித் தருணத்தில் அதாவது மே 16 ஆம் நாளும் நாங்கள் போர்நிறுத்தம் குறித்து பேசுவதற்கு முயற்சிகள் எடுத்தோம். அவர்கள் அதனையும் தட்டிக்கழித்தனர். அனைத்துலக அரசுகள் கூட எவ்வளவோ அழுத்தங்களைக் கொடுத்தும் சிறிலங்கா அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை.

சிறிலங்கா படையினரால் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் மக்களுக்காக – அங்கே நாளாந்தம் உயிரிழக்கும் முதியவர்களுக்காக – அங்கே கடத்தப்பட்டு காணாமல் போகும் எமது உறவுகளுக்காக – நாங்கள் உடனடியாக செய்ய வேண்டிய நடவடிக்கை என்ன?

எமது இனம் ஊனமாக்கப்பட்டுவிட்டது. சிறிலங்கா அரசு அந்த முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் கைகளில்தான் எமது இனத்தின் தலைவிதி இன்று தங்கியிருக்கின்றது. நாம் ஒரு அரசியல் சுனாமியை சந்தித்து, அந்த அழிவின் வருத்தத்தில் இருக்கின்றோம். எனவே புலம்பெயர் வாழ் மக்கள் தமது உடன்பிறப்புக்களை காப்பாற்ற வேண்டிய கடமையில் இருக்கின்றார்கள்.  புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் உடனடியாக அந்தந்த நாடுகளில் அங்குள்ள சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு – எந்தவித வன்முறையையும் தொடாமல் – போராட்டங்களை மேற்கொண்டு, எமது மக்களுக்கு உதவும்படி அந்த நாடுகளின் அரசுகளை கேட்க வேண்டும். அந்த அரசுகளின் அனுதாபத்தை நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த போராட்டத்திற்கு புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்க முன்வர வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையுடனும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடனும் நாங்கள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம். எமது மக்களுக்குரிய உணவும் மருந்துப் பொருட்களும் சென்றடைய வேண்டும். இந்திய அரசாங்கத்துடனும் இது குறித்து பேசிக்கொண்டு இருக்கிறோம்.

எமது தலைவர் விட்டுச்சென்ற கடைமையை பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கிறோம். எனவே, அனைவரும் வேறுபாடுகளை மறந்து முன்வந்து எமது இனத்தை காப்பாற்றுங்கள். முள்வேலிகளுக்கு இடையில் அகப்பட்டுக்கொண்டிருக்கும் எமது உறவுகளைக் காப்பாற்றுங்கள் என்று உங்கள் அனைவரையும் மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலை வெற்றிடமாகியுள்ள நிலையில் – தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமை ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனை எவ்வாறு நீங்கள் முன்னெடுத்து வருகிறீர்கள்?

மிகவும் கடுமையாக அந்த முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இந்த வெற்றிடம் என்பது எதிர்பாராத நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது. நாம் அனைத்து தரப்பினருடனும் குறிப்பாக சகல அரசியல் கட்சிகளுடனும், இயக்கங்களுடனும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மிகவிரைவில் அந்த முயற்சி வெற்றிபெறும்.

தமிழ் இன அழிப்பின் இறுதிக்கட்ட போரில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் குறித்த ஆதாரங்களை சேர்த்து அவற்றை மனித உரிமை அமைப்புக்களுக்கு வழங்க வேண்டிய வரலாற்று பொறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்த நடவடிக்கை அத்தியாவசியமானது. புலம்பெயர் வாழ் நாடுகளில் உறவுகள் வசித்து வருகின்றனர். எங்களிடம் தங்களது உறவுகள் குறித்து நலம் விசாரிக்கின்றனர். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இந்த தகவல்களை பெற்றுக்கொள்ளவதற்கு நாங்கள் முயற்சித்தபோதும் அதற்கு சிறிலங்கா அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே அடுத்த கட்டமாக சட்ட நுணுக்கங்களை ஆராய வேண்டிய தேவை உள்ளது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நான் இது குறித்து பேசியுள்ளேன். அவர்களும் இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளிடமும் இது குறித்த உதவிகளை நான் கேட்டிருக்கிறேன். சில அரசாங்கங்களுடனும் இது குறித்து பேசி வருகின்றேன். முடிந்தவரை அவற்றை வெகுவிரைவில் செய்யவேண்டும் என்று விரும்புகின்றேன்.

ஆனால், அதற்கு முன்னர் எமது மக்கள் பசியால் வாடவோ அன்றி உணவின்றி இறப்பதையோ நாங்கள் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே அவர்கள் பட்ட துன்பம் போதும். இனியாவது அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுங்கள்.

எனது அன்பு உடன் பிறப்புகளே! அனைத்துலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களே!! அங்குள்ள உறவுகளுக்கு ஒரு நம்பிக்கையை கொடுங்கள். அதுவே அவர்களை வாழ வைக்கும்.

நாங்கள் எந்த உதவியை செய்வதானாலும் சிறிலங்கா அரசுடன் ஊடாகவே மேற்கொள்ள வேண்டியுள்ளது. மாறாக எமது மக்களை இந்த உதவிகள் நேரடியாகச் சென்றடையக் கூடிய பேச்சுவார்த்தைகள் எதையாவது நீங்கள் மேற்கொள்கின்றீர்களா?

சிறிலங்கா அரசு இந்தப் போரில் ஒரு வெற்றியைக் கண்டிருப்பது உண்மை. ஆனால், அவர்கள் அனைத்துலக நிறுவனங்களை அங்கே அனுமதிக்க தயங்குகின்றனர். எமது மக்களுக்கு நேரடியாக பொருட்கள் அங்கு அனுப்பப்பட முடியாவிட்டாலும் – இந்திய அரசாங்கத்துடனும் தமிழக முதல்வருடனும் இது குறித்து கதைத்துக் கொண்டிருக்கின்றோம். எனவே எந்த வழியில் சென்றாலும் அது மக்களை சென்றடைந்தால் அது போதும் என்றே நான் கருதுகின்றேன்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பொறுத்தவரை அனைத்துலக நாடுகள் தமிழ் மக்களை கைவிட்டுவிட்டன என்று கருதலாமா?

அனைத்துலக நாடுகள் சிறிலங்கா அரசுக்கு ஓரளவுக்கு அழுத்தமும் கொடுத்திருக்கின்றன. எனினும் சீனா, ரஸ்யா, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆசியுடன் இந்த நாடகத்தை சிறிலங்கா அரசாங்கம் ஆடி முடித்திருக்கிறது.

மக்களுக்கான தீர்வு குறித்து ஏதாவது சிந்தனைகள் உள்ளதா?

எமது இனம் மானத்துடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு ஒரு தீர்வு அவசியம். இது குறித்து நாம் எமது பலதரப்பட்ட பிரிவினர்களுடன் கதைத்துக் கொண்டிருக்கின்றோம். எமது மக்களின் அரசியல் அபிலாசையை ஓரளவுக்கேனும் நிறைவேற்றக்கூடிய திட்டத்தை செயலாற்ற வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். விரைவில் இது குறித்த முழு விபரமும் வெளியிடப்படும்.

அனைத்துலகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும் எந்தவகையிலான முயற்சிகளை நீங்கள் எடுக்கின்றீர்கள்?

அனைத்துலக நாடுகளில் உள்ள தமிழ்மக்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது யாதெனில் – பாரிய சுமைகளை எல்லாம் எமது தோளில் மட்டும் சுமத்தாதீர்கள். ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உரிய கடமை அது. அந்தந்த நாடுகளில் அந்தந்த அரசுகளுடன் நல்ல உறவைப் பேணும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

இந்திய அரசாங்கத்தின் கவனத்தை எம்பக்கம் திருப்பும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா?

முதல் வேலையாக அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த வேலைகளை தொடர்ந்தும் செய்துகொண்டிருக்கின்றோம். சிறிது கால அவகாசம் தேவைப்படுகின்றது. இது குறித்த மேலதிக விபரங்களை தற்போது வெளிப்படுத்த முடியாது.

நீங்கள் தற்போது முழுக்கவனத்தையும் செலுத்தியிருக்கும் விடயம் எதுவென கூறமுடியுமா?

இராணுவ முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளைக் காப்பாற்றுவதற்கும் பிடிபட்ட போராளிகளை அனைத்துலக சட்டத்திற்கு அமைவாக நிறுத்த வேண்டும் என்றும் அரசியல் தீர்வு குறித்தும் நாம் அதிக கவனம் செலுத்துகின்றோம். பிளவுகளை மறந்து அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு குடையின்கீழ் அரசியல் தீர்வுக்காக நிற்க வேண்டும். அதுதான் எனது விருப்பம். அதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் எடுத்து வருகின்றேன்.

புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் துயருக்கும் சோர்வுக்கும் மத்தியிலும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து எவ்வாறு பார்க்கிறீர்கள்?

நாம் கனவில் கூட எண்ணியிராத ஒரு சூறாவளி எமது இளம் தலைமுறையை அடித்து சென்றுவிட்டது. அதில் இருந்து மீள்வதற்கு நாங்கள் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டிய காலம் இது.

கவனயீர்ப்பு போராட்டங்களின் ஊடாக அந்தந்த நாடுகளில் உள்ள ஊடகங்கள் மற்றும் மக்களுக்கு நாங்கள் என்ன செய்தியை கூற வேண்டும்?

சிறிலங்காவின் படை முகாம்களுக்குள் எமது இனம் படும் சித்திரவதைகளை – எமது தங்கைகளை படையினர் கொடுமைப்படுத்துவதை – எமது இளம் சிறார்கள் பெற்றோருடன் சேரவிடாமல் பிரிக்கப்பட்டிருப்பதை – முதலில் நாங்கள் அனைத்துலகத்தின் கண்களில் நிறுத்த வேண்டும்.

உங்களைப் பற்றிய வதந்திகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்தியாவின ‘றோ’ உங்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கான உங்களது பதில் என்ன?

எமது தேசியத் தலைவருடன் நான் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, அவருடன் ஆத்ம ரீதியாக கலந்துகொண்டவன். இதனை எமது போராட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் அறிந்துகொள்வர். எமக்கு இடையில் எந்தவித அப்பழுக்கற்ற நட்பை பேணிக்கொண்டோம். இது சாதாரண குடும்ப – மனித – வாழ்க்கைக்கு சற்று மேலான உறவு.

அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக என்னை நியமித்த அந்த தலைவருக்கு செய்யப்படும் துரோகமாகத்தான் நான் இதனை எண்ணுகின்றேன். எமது தலைவர் எமது மக்களின் இதயங்களில் குடிகொண்டவர். நான் பணத்திற்காகவோ அல்லது பதவிகளுக்காகவோ விலைபோகக் கூடியவனாக இருந்தால் என்னை அவர் இந்த பொறுப்பிற்கு நியமித்திருக்க மாட்டார். இது எமது போராளிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துலக நாடுகளுக்கு வந்து வசித்து வரும் போராளிகளுக்கும் தெரியும். எனவே எமது தலைவர் அப்படியொரு தவறை செய்ய மாட்டார்.

எனது தலைவர் கூறிய அவரது கனவான – எமது மக்களுக்கு கௌரவமான, சமனான, மரியாதையுடன் வாழக்கூடிய தீர்வை எடுத்துக் கொடுப்பதற்கு – எனது வாழக்கையை அர்ப்பணித்திருக்கின்றேன்.

சிறிலங்கா அரசு தற்போது தொடங்கியுள்ள போரானது அனைத்துலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் கட்டமைப்பை உடைப்பதாகவே உள்ளது. அதுதான் அவர்களின் அடுத்த இலக்கு. திருமதி அன்ரன் பாலசிங்கத்தை நாடு கடத்துவதற்கும் அவரை துரோகியாக்குவதற்கும் சிறிலங்கா அரசு முயற்சி எடுத்திருக்கின்றது. எனவே அவர்கள் நினைப்பதை செய்வதற்கு தயவு செய்து துணை போகாதீர்கள். நாம் கருத்துகளில் வேறுபடலாம். ஆனால் இலட்சியத்தில் ஒன்றுபட்டவர்கள்.

எனவே அன்பு தம்பிகளே! உறவுகளே!!

எனது அண்ணன் விட்டுச் சென்ற கடைமையை தொடர்ந்தும் செய்வோம். 

புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தற்போதைய நிலையில் கருத்து வேறுபாடுகளை மறந்து தீவிரமான போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து கூற முடியுமா?

நான் ஏற்கனவே கூறியதன்படி இந்த சுனாமியினால் மனம் நொந்திருக்கும் எமது உறவுகள் மீண்டும் எழ வேண்டும். மீண்டும் நாம் எமது கடைமையை ஆற்றுவதற்கு தயாராக வேண்டும். அதனை உடனே செய்ய வேண்டும். காலம் தாமதித்தால் எமது உறவுகள் எமது நாட்டில் மிகவும் கொடுமையான நிலைக்கு தள்ளப்படுவார்கள். நாம் தாங்கொணா துயரத்தை இதயத்தில் தாங்கிக் கொண்டிருக்கிறோம். எமது நெஞ்சம் வெடிக்கின்றது.

இருந்தாலும் எமது உறவுகளுக்காக நம்பிக்கையுடன் இருக்கின்றோம். புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் அந்த கடைமையை செய்ய வேண்டும். அனைவரும் ஒன்றாக வாருங்கள். ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் எமது உறவுகள் ஒன்றுசேர வேண்டும். உங்களுடைய கடைமை பாரியது.

முதற்கட்டமாக அனைவரும் ஒன்றுகூடி எங்கள் உறவுகளைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் இருக்கின்றோம் என்ற நம்பிக்கையை கொடுங்கள். அந்த நம்பிக்கை அவர்களை வாழ வைக்கும். எனவே அதனைச் செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இன்றைய நிலையில் தமிழ் ஊடகங்களின் பங்கு எந்தளவுக்கு காத்திரமானதாக இருக்க வேண்டும் என்பது பற்றி கூறமுடியுமா?

ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அங்குள்ள மக்களை காப்பாற்றுவதற்காக இங்கேயுள்ள மக்களை ஒன்றுதிரட்டும் பணியை இந்த ஊடகங்கள் செய்ய வேண்டும். வேறுபாடுகளை மறந்து ஒன்று சேருங்கள். எமது பலத்தை காட்டுங்கள். நாங்கள் ஒன்று சேர்ந்து இங்கு எமது பலத்தை காட்டினால் அங்கேயுள்ள எமது மக்கள் கண்ணீர் சிந்த மாட்டார்கள். இந்த ஊடகங்கள் அதனை மிகவும் பொறுப்புடன் செய்ய வேண்டும்.

உத்தேச தீர்வுத் திட்டம் 13 ஆவது திருத்தத்திலும் பார்க்க கூடுதலானதாக அமையும் – ஜனாதிபதி ராஜபக்ஷ

mahinda-0000.jpgஉத்தேச அரசியல் தீர்வானது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திலும் பார்க்க கூடுதலானதாக அமையும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சகலருமே அதனை அமுல்படுத்துவதற்கு அவசியம் இணங்குவதாக இந்த 13 ஆவது திருத்தத்திலும் கூடுதலான தீர்வு விளங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த உத்தேச யோசனைகள் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் ஒன்றுசேர்ந்து தீர்மானிக்க வேண்டியது அவசியமென்றும் தான் இந்த விடயத்தில் அவர்களை நிர்ப்பந்திக்கப் போவதில்லை என்றும் தீர்வுத் திட்டமானது ஒவ்வொரு மக்கள் மத்தியில் இருந்தும், தலைவர்களிடமிருந்தும் வெளிவர வேண்டியது அவசியம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

“இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆசிரியர் சேகர் குப்தாவிற்கு என்.டி.ரி.வி.யின், “வோக் த ரோக்’ நிகழ்ச்சியில் பேட்டியளித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பயங்கரவாதத்திலிருந்து, விடுதலைபெற்ற நிலையில் சேகர் குப்தாவுடன் தற்போது தான் உரையாடுவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

பேட்டியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது;  விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இழைத்த பாரிய தவறு ராஜீவ் காந்தியை கொன்றதாகும். ஏனெனில், இந்தியாவின் முழு அனுதாபத்தையும் அவர்கள் பகைத்துக்கொண்டனர். அந்த நேரத்தில் அவர் செய்த பாரிய தவறு இதுவென நான் நினைக்கிறேன். இரண்டாவதாக அவர் தெற்கின் சக்தியைப் பற்றி அளவிட்டிருக்கவில்லை. அவர் இழைத்த மற்றொரு தவறாகும் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் அவர் விரும்பியிருக்கவில்லை. முழு நாட்டையுமே அவர் கைப்பற்ற விரும்பியிருந்தார். அவருடைய திட்டம் முழு நாட்டையும் கைப்பற்றுவதாகும். பயங்கரவாதத்தினாலும், துப்பாக்கியினாலும் சகலரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று அவர் நினைத்திருந்தார். 30 வருடங்களில் அவருடைய பாரிய தவறு ராஜீவ் காந்தியின் படுகொலையாகும். அதுவே அவரது வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது என்பது உண்மையாகும்.

இந்தப் பிரச்சினையை யார் உருவாக்கியது என்பது உங்களுக்கு தெரியும். இந்த மனிதர் எப்பொழுது இதனை ஆரம்பித்தார் மற்றும் இந்தியாவில் அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது என்பது யாவருக்கும் தெரியும். இறுதியாக அவர்கள் இந்திய மக்களால் அன்பு செலுத்தப்பட்ட தலைவரை கொன்றனர். தமிழ் மக்களால் மட்டுமன்றி முழு இந்தியாவுமே அன்பு செலுத்தியவரை அவர்கள் கொன்றனர். தமிழ்நாட்டில் அவரைக் கொன்றனர். தமது ஜாக்கெட்டை அவர் (ராஜீவ்) கொடுத்தார் என்று நான் கேள்விப்பட்டேன். இது சரியானதா என்பது எனக்கு தெரியாது. அவர் இந்த மனிதருக்கு தமது சொந்த குண்டு துளைக்காத ஜாக்கெட்டை கொடுத்தார். எமது அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் தீர்வொன்றை ஏற்படுத்த அவர் (ராஜீவ் காந்தி) முயற்சித்தார். அதனை நாம் இப்போது வைத்திருக்கின்றோம். இந்திய சமாதானப்படை இலங்கைக்கு வந்தபோது நாம் மகிழ்ச்சியடையவில்லை. நானும் கூட சந்தோஷப்படவில்லை. நான் எதிர்த்தரப்பில் இருந்தேன். அந்த நேரத்தில் நாம் எதிர்த்தோம். ஆனால், இப்போது அவர்கள், அல்லது நாம் இந்திய அமைதி காக்கும் படையை மேலும் ஓரிரு மாதங்களுக்கு தங்கியிருக்க அனுமதித்திருந்தால் இதனை அவர்கள் முடித்து வைத்திருப்பார்கள்.

இந்திய அமைதி காக்கும் படையுடன், போரிட பிரேமதாஸா புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்ததாக லலித் அத்துலத் முதலி தமக்கு கூறியதாக சேகர் குப்தா கேள்வியெழுப்பியபோது, சரி என்று ஜனாதிபதி பதிலளித்துள்ளார். 5 ஆயிரம் ரி56 ரக துப்பாக்கிகளை புலிகளுக்கு அவர் கொடுத்ததாக கேள்வியெழுப்பப்பட்டபோது, ஆம் என்று ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் எப்போதுமே யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தியோ அல்லது இந்தியாவையோ அல்லது மேற்கு சக்திகளையோ பயன்படுத்த முயன்றதாகவும், ஜனாதிபதி கூறியுள்ளார்.

புலிகள் பிரேமதாஸாவை கொன்றனர், அவர்களுக்கு உதவியவர்களை கொன்றனர், ராஜீவ் காந்தியை கொன்றனர், காமினி திசாநாயக்காவை கொன்றனர், அமிர்தலிங்கம், லக்ஷ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வன் போன்ற அவர்களின் சொந்த தலைவர்களையே கொன்றனர். சமாதானத்தை விரும்பியவர்களை கொன்றனர்.

ராஜீவ் காந்தியை கொன்றதன் மூலம் அவர் ஏன் இந்த மாதிரியான பாரிய தவறினை செய்தார். அதுபற்றி நீங்கள் ஆராய்ந்துள்ளீர்களா? ஏதாவது தகவல்களை பெற்றுள்ளீர்களா? என்று ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டபோது, ராஜீவ் காந்தி அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முயன்றார் என்றும், அதனை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்ததால் ராஜீவ் காந்தியை அவர் வெறுத்தார் என்றும், தான் கருதுவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். அவர் (பிரபாகரன்) எந்த தீர்வையும் விரும்பவில்லை. தான் மன்னனென கருதினார். இந்தியா தமிழ்நாட்டின் மனநிலை குறித்து அவர் கவலைப்படவில்லை. அவருடன் அனுதாபம் கொண்ட சில தலைவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களைப் பற்றி குறிப்பிட நான் விரும்பவில்லை. அவர்களின் பெயரை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் யாவரும் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய வாக்காளர்கள் புத்திசாலிகள் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

இறுதி நாட்களைப் பற்றி கூறுமாறும் இறுதியாக எவ்வாறு அவரையும் ஏனைய முக்கியமான தலைவர்களையும் கண்டுபிடித்ததாகவும் சேகர் குப்தா கேள்வியெழுப்பியபோது பதிலளித்த ஜனாதிபதி, அவர்கள் தப்பிச்செல்ல முயற்சித்ததாகவும், சிறிய நிலப்பகுதியில் ஓரங்கட்டப்பட்டிருந்த அவர்கள் 3 குழுக்களாக இருந்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அந்த 3 குழுக்களில் ஒரு சாரார் வடக்கு பக்கமாகவும், மற்றவர்கள் தெற்கு பக்கமாகவும் இடையில் ஏரிப் பக்கமாகவும் சென்றதாகவும், பிரபாகரனும் ஏனையவர்களும் முன்னோக்கி நகர்ந்ததாகவும், அச்சமயம் இராணுவத்துடன் மோதல் ஏற்பட்டதாகவும், ஜனாதிபதி கூறியுள்ளார். அப்போது அவர்கள் சுற்றிவளைக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கட்டாரில் ஜனாதிபதி இருந்தபோது பிரபாகரனின் மரணம் குறித்து அவருக்கு தெரிவிக்கப்பட்டதாக தாங்கள் கேள்விப்பட்டதாக சேகர் குப்தா குறிப்பிட்டபோது, இல்லை எனவும் 19 ஆம் திகதியே தாம் செய்தியை பெற்றுக்கொண்டதாகவும், ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, இந்தியாவிடமிருந்து அதிகளவிலான பிரதிபலிப்புகள் வெளிப்படுத்தப்பட்டதா, உதாரணமாக ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சு இடம்பெற்ற போது, என்று சேகர் குப்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, அவ்வாறான ஒன்றுமே நடைபெறவில்லை என்றும் அது ஒரு பிரசாரம் என்றும் மருத்துவர்கள் தங்களுடன் இருப்பதாகவும் இந்த மாதிரியாக அறிவிக்குமாறும், தங்களுக்கு கூறப்பட்டதென அவர்கள் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சு இடம்பெறவில்லை எனவும், இது முற்றுமுழுதான பிரசாரம் எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்களின் இழப்புகள் குறித்து கேட்கப்பட்டபோது 100 இலும் குறைவானவர்களே இறந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். எந்தவொரு பொதுமக்களுக்கு எந்தவொரு இழப்புகளும் ஏற்படக்கூடாது என தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அவர்கள் செய்தது போன்று நாம் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை எனவும் ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது செய்மதி மூலமான பிரதிமைகளைப் பெற உதவியை பெற்றுக்கொண்டீர்களா என்று கேட்கப்பட்டபோது, எங்கிருந்தும் நாங்கள் செய்மதி புகைப்படங்கள் தொடர்பாக உதவியைப் பெற்றிருக்கவில்லை என்று தெரிவித்தார்.

இந்தியாவின் தேர்தல் வேளையில் அதாவது ஆறு கிழமைகள் தொடக்கம் பிரபாகரனின் மரணம் வரை இந்தியாவுடனான தொடர்பாடல் எவ்விதம் அமைந்திருந்தது என்று கேட்கப்பட்டபோது, நாம் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தோம். ஆரம்பத்தில் அவர்கள் பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக கவலையடைந்திருந்தனர் என்று ஜனாதிபதி தெரிவித்தார். அவர்கள் ஏதாவது அழுத்தத்தைக் கொடுத்தார்களா எனக் கேட்டபோது, அவ்வாறான அழுத்தம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், நண்பர்கள் மத்தியில் அழுத்தங்கள் இருக்க முடியாது என்று கூறினார்.

நீங்கள் யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ளீர்கள். சமாதானத்தை எவ்வாறு இப்போது தோற்றுவிக்கப் போகிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது, முதலாவதாக நாங்கள் அவர்களை மீளக்குடியமர்த்த வேண்டும். முகாம்களுக்குள் இருந்தவாறு மக்களால் அரசியலைப் பற்றி சிந்திக்க முடியாது உடனடியாக நாம் மேற்கொள்ளப்படவேண்டியது அந்தப் பகுதிகளை மீளக்கட்டியெழுப்ப வேண்டும். அப்பகுதிகளில் உள்சார் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னர் அவர்களை மீளக்குடியமர்த்த வேண்டும்.

இதற்கு 180 நாட்கள் திட்டத்தை வைத்திருக்கின்றோம். அந்த நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டுள்ளோம். அதற்கான பணத்தை கண்டுபிடிக்கவேண்டும். ஒன்றிரண்டு பில்லியன் தேவைப்படுகிறது. இந்தியா எமக்கு உதவவேண்டும். அவர்கள் அதனைச் செய்வார்கள் என நினைக்கிறேன். மீளக் கட்டியெழுப்ப அவர்கள் உதவவேண்டும்.

தமிழ் மக்களை சமனான பிரஜைகளாக நீங்கள் நடத்துவீர்களா என்றும் உங்களது முறைமையில் சமத்துவம் உள்ளதா எனவும் இப்போது தாங்கள் தோற்கடிக்கப்பட்டதாக அவர்கள் உணர்வதாகத் தென்படுகிறதெனவும் கேட்கப்பட்டபோது எனது பாராளுமன்ற உரையை நீங்கள் பார்த்தால் இனிமேல் இங்கு சிறுபான்மையினர் இல்லையென்று நான் கூறியுள்ளேன். இங்கு இரண்டு வகையான மக்களே இருப்பார்கள். ஒன்று இலங்கையை நேசிப்பவர்கள் மற்றவர்கள் இலங்கையை நேசிக்காதோர். இதுவே மக்கள் மத்தியில் உள்ள வேறுபாடாக அமையும். சகல மக்களும் எனது மக்கள். அவர்கள் தமிழரோ, சிங்களவரோ, முஸ்லிம்களோ மலாயர்களோ, யாராகவிருந்தாலும் அவர்கள் எமது மக்கள் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். யாவரையும் தான் சமமாகவே நடத்துவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

1983 இல் இது தொடர்பாக வரலாறு உள்ளது என்று கேட்கப்பட்டபோது, வரலாற்றை நாம் மறந்துவிட வேண்டும். நாம் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் நீங்கள் வேறுபாட்டைக் காண்பிப்பதில்லையா என்று கேட்டபோது, இல்லை, நான் அவ்வாறு செய்யமுடியாது. ஏனெனில், எனது உறவினர்களில் சிலர் தமிழர்கள். எனது பெறாமகள் ஒரு தமிழரைத் திருமணம் செய்துள்ளார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

உங்களது விருப்பத்துக்குரிய கிரிக்கெட் கதாநாயகன் தமிழரான முத்தையா முரளிதரனா என்று கேட்கப்பட்டபோது, எவ்வாறு அதை நான் கூறமுடியும். எனது சொந்த வீட்டிற்குள் அதனை அவ்வாறு கூறமுடியாது என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

சிங்கள மேலாதிக்கவாதம் என்பது யதார்த்தமானதாக இருந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, நான் அதனைக் கூறமாட்டேன். ஏனென்றால், சகல அரசியல்வாதிகளுமே அதனைத் தொடக்கியிருந்தனர் என்று தெரிவித்தார். நீங்கள் கிராமத்துக்குச் சென்றால் தமிழர்களுடன் பேசினால் அவர்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. ஆனால் அரசியல்வாதிகள் அதிகாரத்திற்காக இதனைச் செய்கிறார்கள் என்றும் அதிகாரத்திற்கு வருவதற்கான ஒரே வழியாக அது இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமக்கு அந்தமாதிரியாக செயற்படும் நோக்கமில்லை என்று தெரிவித்திருந்த ஜனாதிபதி, முழு நாடுமே தமக்கு வாக்களிக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார். துரிதமாக தேர்தல் இடம்பெறும் சாத்தியம் பற்றி குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி, நவம்பர் மாதத்தில் அது தொடர்பாக தம்மால் தீர்மானம் எடுக்க முடியுமென்று கூறியுள்ளார்.

நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த முடியுமென்று குறிப்பிட்ட அவர், தேர்தலில் தமிழ் மக்களையும் உள்ளீர்த்துக் கொள்வதை ஏற்கனவே செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழர்களுக்கெதிரான பிரசாரத்தை மேற்கொள்வீர்களா என்று கேட்கப்பட்டபோது, இல்லை. எனக்குத் தமிழ் வாக்குத் தேவை. தமிழர்களோ முஸ்லிம்களோ சகலரது வாக்குகளும் தேவை என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.  இராணுவ ரீதியான தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வீர்களா என்று கேட்கப்பட்டபோது, அது பயங்கரவாதத்திற்கு எதிரானதொன்றல்லவா என ஜனாதிபதி பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நகரத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் ஜெனரல்கள், படைவீரர்கள் உள்ள சுவரொட்டிகள், பதாகைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த வருட பிற்பகுதியில் இடம்பெறும் தேர்தலில் இவை உங்களின் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுமென நீங்கள் கருதவில்லையா என்று கேட்கப்பட்டபோது, இல்லை. தேவையற்றது, நாட்டை மீண்டும் பிளவுபடுத்த நான் விரும்பவில்லை. நான் ஒருபோதும் அதனைச் செய்யமாட்டேன். எனது அமைச்சரவையைப் பாருங்கள் எவ்வளவு முஸ்லிம், எவ்வளவு தமிழர்கள் இருக்கின்றார்கள். மலைநாட்டுத் தமிழர்கள் உள்ளனர். அவர்களை சிலர் இந்தியத் தமிழர்கள் என்று அழைக்கின்றனர். அவர்களுக்குத் தலைவராக தொண்டமான் இருக்கிறார். வடக்கிலிருந்தும் எமது அமைச்சரவையில் அமைச்சர் இருக்கின்றார் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

பல ஜனநாயக நாடுகளில் இந்தப் பிரச்சினையுண்டு. அதாவது; அவர்கள் பெரிய யுத்தத்தில் ஈடுபட்டபோது இராணுவ ஜெனரல்கள் கதாநாயகர்களாகின்றனர். இராணுவம் மிகவும் சக்தி வாய்ந்ததாக உருவெடுக்கின்றது. அவர்கள் மிகவும் செல்வாக்குப் பெற்றவர்களாக உருவாகின்றனர். அவர்கள் மக்கள் தமது சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்யும் போது, அரசியல்வாதிகள் ஏனைய மக்களுக்காக தங்கள் வாழ்வைத் தியாகம் செய்வதிலிருந்து தாங்கள் அனுகூலம் பெறுகின்றனர் என்று சேகர் குப்தா குறிப்பிட்டபோது ஜனாதிபதி ஆம் என்று பதிலளித்தார்.

யுத்தம் முடிவடைந்த போது இதனை கீழே கொண்டுவருவதற்கான சவால் ஜனநாயக நாடுகளிடம் காணப்படுகின்றன. இது தொடர்பான திட்டம் ஏதாவது உண்டா என்று ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டபோது, இல்லை. இந்த நாட்டு மக்கள் கல்வி கற்றவர்கள். என்ன நடைபெறுகிறது என்பது அவர்களுக்குத் தெரியும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜெனரல்கள் வல்லமை பெற்றவர்களாக உருவாகிவருவது குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா என்று கேட்கப்பட்டபோது, இல்லை. நான் கவலைப்படவில்லை. நோக்கத்தில் அவர்கள் மிகவும் விசுவாசமானர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்கு ஏதாவது அரசியல் அபிலாசைகள் இருக்குமென்று நான் நினைக்கவில்லை என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

நூற்றுப் பத்துக் கோடி மக்களைக் கொண்ட நாடு இந்தியா. அதன் ஆயுதப் படைகளின் தொகை 13 இலட்சமாகும். 2 கோடி மக்களைக் கொண்ட உங்கள் நாட்டில் 2 இலட்சம் இராணுவத்தினர் உள்ளனர் என்று கேட்கப்பட்டபோது, இத்தொகையை நாங்கள் அதிகரிக்க வேண்டியிருந்தது என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

ஆள் வீத அடிப்படையில் எமது இராணுவத்தை விட உங்கள் இராணுவம் நூறு மடங்கு அதிகமாக உள்ளதே இப்போது உங்களுக்கு இது தேவைப்படாதே என்று சேகர் குப்தா கேட்டபோது அவ்வாறு கூறவேண்டாம். நிர்மாணப் பணிகளுக்கு அவர்களை நாம் பயன்படுத்த முடியும் என்றும் அவர்களை ஏனைய அபிவிருத்தி வேலைகளில் ஈடுபடுத்த விரும்புகிறோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

காலப்போக்கில் அவர்களின் எண்ணிக்கையை குறைப்பீர்களா என்று கேட்கப்பட்டபோது, இப்போது அதற்குரிய திட்டங்கள் இல்லையென ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

200,000 இராணுவத்திற்கு சமாதானமான இலங்கை மிகவும் சிறியதொன்றாகும். பாதுகாப்பதற்கான எல்லைகள் எதுவும் இல்லை. வெளிமட்டப் பகைவர்களும் இல்லை என்று சேகர் குப்தா கூறியபோது, நாம் எமது சொந்தப் பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளது. சொந்தப் பாதுகாப்பிற்காக அவர்களை வைத்துள்ளோம். இலங்கைக்கு 2 இலட்சம் படையினர் அதிகமான தொகையல்ல. இத்தொகையே நாம் வைத்திருப்போம். மேலதிகமாகச் சேர்க்கமாட்டோம். அவர்களை ஐ.நா. சமாதானப் படைக்கு அனுப்பமுடியும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

யுத்த வேளையில் இந்தியாவை விட வேறு ஏதாவது அழுத்தங்கள் ஏற்பட்டதா. மில்லிபான்ட் இங்கு வந்த போதும் நோர்வே காரர்களுடனும் மகிழ்ச்சியற்றதான சில விடயங்களை நாம் பார்த்தோம் என்று கேட்கப்பட்டபோது, துரதிர்ஷ்டவசமாக அவர்களில் சிலரின் மனப்போக்கு எங்களை அவர்களின் காலனியாகக் கருதியதாகும். இலங்கை எவரதும் காலனி அல்ல. அவருடைய மனப்போக்கிற்கு எங்களால் எதனைச் செய்ய முடியும் என்று பதிலளித்திருக்கிறார்.

சீனா, பாகிஸ்தானுடன் உங்கள் உறவுகள் தொடர்பாக இந்தியா தரப்பிலிருந்து கவலைகள் காணப்படுகிறதே என்று கேட்கப்பட்டபோது இலங்கையைப் பற்றி இந்தியா எந்தக் கவலையும் கொள்ளத்தேவையில்லை. நாங்கள் சிறந்த புரிந்துணர்வுடன் இருக்கின்றோம். இந்தியா எம்மீது அதிகளவு பரந்த மனதைக் கொண்டிருக்கிறது. நாங்கள் உறவு ரீதியான நண்பர்கள். ஆரம்பத்திலிருந்தே அதாவது முதல் நாளில் இருந்தே இந்தியா எமது அயல் நாடு. இராணுவ ரீதியில் சீனாவிடம் இருந்து நாங்கள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்தோம். இஸ்ரேல், பாகிஸ்தான், ரஷ்யா, உக்ரைனிடமிருந்தும் பெற்றுக்கொண்டிருக்கிறோம். இதேவேளை, இந்தியாவிற்கு தாம் விஜயம் மேற்கொள்ளப்போவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி ஜெயவர்தன ஒப்பந்தத்தில் ஒருபுறம் இந்திய சமாதானப் படை மறுபுறம் துன்பியல் என்பன இருக்கையில் 13 ஆவது திருத்தமும் அதிகாரப் பகிர்வுப் பொதியும் தமிழர்களுக்கு வழங்கப்பட்டது. அதற்கு இப்போது என்ன நடக்கும். அதனை முன்னோக்கிக் கொண்டு செல்ல விரும்புகிறீர்களா அதற்கு அப்பால் கொண்டு செல்ல விரும்புகிறீர்களா என்று சேகர் குப்தா கேள்வி எழுப்பிய போது, 13 ஆவது திருத்தத்திலும் கூடுதலானது என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

இப்போது யுத்தம் முடிந்து விட்டது இலங்கைத் தமிழர்களுக்கான உங்களது செய்தி என்ன என்று கேட்கப்பட்ட போது, யுத்தம் முடிவடைந்து விட்டது நாம் ஒன்று சேர்ந்து இந்த நாட்டில் இருக்க வேண்டும் சம பிரஜைகளாக இருப்பார்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், சிங்கள அரசியலில் இப்போதும் சக்திகள் உள்ளனவே என்று கேட்கப்பட்ட போது, தமிழ் அரசியலிலும் அந்த சக்திகள் உண்டு என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், சிங்களவர்கள் அரசியல் ரீதியாக மேலாதிக்கம் உடையவர்களாக இருக்கிறார்களே என்று கேட்கப்பட்ட போது, இல்லை என்றார்.

 நன்றி: தினக்குரல்

வியாபாரிகளால் வீழ்ந்த என்தலைவா… வீர வணக்கங்கள்.. : சாத்திரி

Sasthiriஇந்த மாதமாதம்..17..18..19.. ந்திகளில் இரவும் பகலும் எனது வீட்டுத்தொலைபேசி மணிஅடிக்கும் பொழுதெல்லாம் அவை மரணத்தின் மணிச்சந்தங்களாகவே இருந்தது..19 ந்திகதி மதியத்துடன் தொலைபேசி சத்தங்கள் மட்டுமல்ல நானும் சேர்ந்தே சோர்ந்து போனேன்.. எங்கள் கனவு.. எங்கள் உழைப்பு.. எங்கள் தியாகங்கள்..போராளிகளுடன் இறுதிவரை உறுதுணையாய் நின்ற மக்கள் அவர்களின் நம்பிக்கைகள்..கொஞ்சம் கொஞ்சமாய் கட்டி வளர்த்த இயக்கம்..தளபதிகள் போராளிகள். எல்லவற்றிற்கும் அவன் இருக்கிறான் என்று நாங்கள் இறுமாப்பாய் சொன்ன எங்கள் தலைவன்..அவனது குடும்பம்.. என்று அத்தனையையுமே இழந்துவிட்டோம்..இனியென்ன எல்லாம் முடிந்து விட்டது.. இனி பத்திரிகைகளில் மட்டுமல்ல இணையத்தளங்களிலும் எழுதுவதில்லை அகதிமுகாம்களில் தங்கியிருக்கும் மக்களிற்கு ஏதாவது செய்தாலே போதும் என்று முடிவெடுத்து மூடிக்கொண்டு இருந்துவிட்டேன்..

ஆனாலும் முடியவில்லை..காரணம்.. இப்பொழுது பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்று சர்ச்சையில் உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இரண்டாக பிரிந்து ஒரு சண்டை பிடித்துக்கொண்டு நிற்கிறார்கள்.. ஒருவர் மற்றவரை சாதாரணமாய் நலம் விசாரிப்பது போலவே அவர்களிற்குள் துரோகிகள் என்று கூறிவிட்டு போய்க்கொண்டிருக்கிறார்கள்.. புலிகளின் வெளிநாட்டு விவகாரங்களிற்கான பேச்சாளர் பத்மநாதன்.. 24ந்திகதி பிரபாகரனும்.. அவரது பிள்ளைகளும் யுத்தத்தில் இறந்து விட்டார்கள் என்கிற அறிவிப்பே..இத்தனைக்கும் காரணம்..அவரின் அறிவிப்பு வெளியான உடனேயே வெளிநாடுகளில் உள்ள ஒரு குழுவினர்..பத்மநாதன் விலைபோய்விட்டார் துரோகி என்றுவிட்டு அறிவிப்பு வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே அவசரமாக நெடுமாறன் அவர்களுடனும் வைகோடனும் தொடர்பு கொண்டு பிரபகரன் இறக்கவில்லை உயிரோடதான் இருக்கிறார் என்று ஒரு அறிவிப்பை விடவைக்கின்றனர்.

வழைமை போலவே அதிகமாய் உணர்ச்சி வசப்படும் வை.கோ அவர்கள் இந்த விடயத்திலும் உணர்ச்சி வசப்பட்டு பத்மநாதனின் இந்த அறிவிப்பு துரோகத்தனமானது என்று ஒரு வசனத்தையும் சேர்த்தே சொல்லி விட்டார்.. இவர்கள் இருவரும் புலிகளின் ஆதரவாளர்களே தவிர புலிகளின் பேச்சாளர்களோ உறுப்பினர்களோ அல்ல..இவற்றுக்கிடையில்.. யாரென்று இதுவரையில் கேள்விப்பட்டே இருக்காத பெயர்களிலும்.. இல்லாத படையணியின் பெயரிலும் கூட பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்கிற அறிவிப்புக்கள் வெளியாகிக் கொண்டிருந்தபோது புலிகளின் அரசியல் பிரிவில் எஞ்சியிருக்கும் மட்டு..அம்பாறை மாவட்ட அரசியல் பிரிவின் பொறுப்பாளர் தயாமோகனும் பிரபாகரன் இல்லை என்பதனை ..பி.பி.சி. தமிழ் ஓசையூடாக உறுதி செய்தபொழுது தயாமோகனும் துரோகியாக்கப்பட்டார்..

Prabaharan_Anjaliபிரபாகரனிற்காக அஞ்சலிநிகழ்வு செய்த ஜி.ரி.வி. என்கிற தொலைக்காட்சி சேவையின் ஊழியர்கள் மிரட்டப்பட்டார்கள். (அவர்கள் மிரட்டப்படுவது இது முதல்தடைவையல்ல) ஜி. ரி்வியும்..எதற்கு வம்பு என்று .. பிரபாரனிற்கான அஞ்சலி நிகழ்வினை இடைநிறுத்தியது..சரி இனி இவர்களிற்கு யார்தான் வந்து உறுதிப்படுத்தவேண்டும்.. இறந்து போன பிரபாகரனே திரும்பவந்து நான் இறந்துவிட்டேன் நம்புங்கடா.. என்று சொல்லவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்களா??அப்படி நடந்தாலும் பிரபாகரனும் துரோகியாக்கப்படுவார்.. 34 ஆண்டுகள் ஒரு ஆயுத விடுதலைப்போராட்டத்தினைநடத்தி.. கொண்ட கொள்கைக்காக தன்னையே அர்ப்பணித்த ஒரு வீரனிற்கு ஒரு பூவினைப்போட்டு மனதார அஞ்சலி செலுத்தக்கூட விடாமல் மக்களை குழப்பியடித்து முரண்பாடான அறிக்கைகளை வெளியிடுபவர்கள் மாற்றுக்கருத்தாளர்களோ..இலங்கையரசோ அதன் கூலிகளோ அல்ல..

புலிகளின் வெளிநாட்டு பணியகங்களின் பொறுப்பாளர்களே இத்தனை அசிங்கங்களையும் நிறைவேற்றுகின்றனர். காரணம் இறுதியாக அவசரகால நிதியென்று புலம்பெயர் தமிழர்களிடம் இவர்கள் சேகரித்த பல மில்லியன் யுரோக்கள் அந்தந்த நாட்டுப் பொறுப்பாளர்களிடமே முடங்கிப்போயுள்ளது. எதிர்பாராதவிதமாக புலிகளின் தலைமையில் அத்தனைபேருமே அழிக்கப்பட்டு விட்டதால்..இனி யாரிற்கும் கணக்கு காட்டத் தேவையில்லையென்று நினைத்து புலம்பெயர்தேசங்களில் உள்ள மக்களிற்கும் கடவுள் ஒருநாள் வருவார் என்பதைப்போல பிரபாகரன் இருக்கிறார்.. ஒருநாள் வருவார்..என்று கதைவிட்டுக்கொண்டே காலத்தை ஓட்டிவிடலாமென்று நினைத்தவர்களிற்கு. பத்மநாதன் மற்றும் தயாமோகனின் அறிக்கைகள் இடியாய் இறங்கியிருக்கும் என்பதில் ஆச்சரியமில்லை..புலிகள் இனி அரசியல் ரீதியான ஒரு போராட்டத்தினை முன்னெடுப்தற்கு வெளிநாடுகளில் அரசியல் கட்டமைப்பு ஒன்றினை உருவாக்கும் முயற்சிசியில் இறங்கிருக்கிறார்கள் என்கிற செய்தியாலும் இவர்கள் ஆடிப்போயிருக்கிறார்கள் அப்படி ஒரு கட்டமைப்பு உருவானால் அவர்களிடம் தங்கள் கணக்குகள் சொத்துக்கள் பற்றிய விபரங்களையும் கையளிக்கவேண்டிவிடும் என்பதே இவர்களது பயம்..

சரி ஒரு வாதத்திற்கு பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்றுவைத்தாலும்..புலிகளின் தளபதிகள் தங்கள் இறுதிக்கணம் வரையும் சட்டிலைற் தொலைபேசி வசதியுடன் உலகில்அத்தனை பகுதிகளிற்கும் தொடர்பு கொண்டபடியேதான் இருந்தனர்..இது அனைவரிற்கும் தெரிந்த விடயம்…பத்மநாதன் மற்றும் தயா மோகனது அறிக்கைகளால் உலகத்தமிழர்களது நிலை குழப்பமடைந்து அது ஈழத்தமிழர்களின் அடுத்தகட்ட நடவடிக்கைகளிற்கு தடையாக அமைந்து அவர்கள் சோர்வடைந்து விடுவார்கள் என்றுகூட சிந்திக்கத்தெரியாமல் 34 ஆண்டுகால போராட்டத்தினை நடத்தியவரல்ல பிரபாகரன்…அவர் எங்கு மறைந்திருந்தாலும் சில நிமிட உரையையாவது பதிவு செய்து சட்டிலைற் தொ.பே மூலம் உலகத்தமிழர்களிற்கு தெரியப்படுத்தி தமது அடுத்தகட்ட நடவடிக்கை என்னவென்று நிச்சயம் அறியத் தந்திருப்பார்..

ஏனென்றால். 88ம் ஆண்டு இந்தியப்படை ஆக்கிரமிப்புக்காலத்தில் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்று இந்திய ஊடகங்கள் எழுதியதில் அது பொதுமக்களிடமும் குழப்பத்தை ஏற்படுத்தியபொழுது அன்று இந்தளவு தொழில் நுட்பவளங்கள் இல்லாதபொழுதும் பிரபாகரனின் 3 நிமிடங்கள் அடங்கிய பேச்சை பதிவுசெய்து போராளிகளால் மக்கள் கூடும் இடங்களில் சிறிய ரேப்றிக்காடர்களில் ஒலிக்கவிடப்பட்டு அவரது இருப்பு உறுதிசெய்யப்பட்டது..சரி் அவர் பத்மநாதனின் அறிக்கையை வெளியான பின்னர் பிரபாகரன் உயிருடன் இருந்தும் பதில் அறிக்கைகள் விடாமல் இருக்கிறார் என்றால் அவரும் பத்மநாதனின் அறிக்கையை ஏதோ காரணங்களிற்காக ஏற்றுக்கொள்கிறார் என்பதுதானே அர்த்தம்..

ஆனால் வெளிநாடுகளின் பொறுப்பாளர்கள் மட்டும் ஏற்கமறுப்பதற்கு அவர்கள் சொல்லும் சப்பைக்காரணம் வெளிநாடுகளில் உள்ள தமிழ்மக்கள் மனமுடைந்து விடுவார்களாம். வெளிநாட்டு தமிழர்கள் மனமுடைந்து போனால் அதனை ஒட்டவைக்க ஆயிரம் வழிகளுண்டு இரண்டு நாள் அழுது விட்டு மூன்றாவது நாள் வழைமைக்கு திரும்பி விடுவார்கள். ஆனால் இறந்து போன பிரபாகரனை இன்னமும் வாழ வைப்பதன் மூலம் மேலும் சட்டச்சிக்கல்களை உருவாக்கி வவுனியாவில் முட்கம்பிகளிற்கு பின்னால் நாளை என்ன நடக்குமென்றே தெரியாமல் எதிர் காலத்தை தொலைத்துவிட்டு நிற்கும் மூன்று இலட்சம் மக்களினது வாழ்வு மட்டுமல்ல இலங்கை இராணுவத்திடம் சரணடைந்த பத்தாயிரத்திற்கு மேற்பட்ட போராளிகள்..தனியாக சிறப்பு முகாம்களில் அடைக்கபட்டுள்ள 2300ற்கும் மேலான புலிகளின் இரண்டாம் மூன்றாம் கட்டத்தலைவர்கள் அரசியல் அமைப்பாளர்கள்.அவர்களது குடும்பங்கள் என்று நீளும் பட்டியலில் உள்ளவர்களின் எதிர்காலம் என்ன??? சிந்திப்பீர்களா??

இதற்குமேல் என்னால் வாழைப்பழத்தை உரித்து அவர்கள் வாயில்வைத்து. ஒரு தடியால் வயிற்றிலும் தள்ளிவிட முடியாது. எம்தலைவனிற்கு அஞசலி செய்யத்தடையாய் நிற்காதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக்கொண்டு துரோகமும் வஞ்சகமும். புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் பணியக பொறுப்பாளர்களினால் நடத்தைகளினாலும் அவர்களால் அள்ளிவீசப்பட்ட வாக்குறிதிகளினாலும். புலம்பெயர் நாடுகளில் உள்ள புலிகளின் பணியக பொறுப்பாளர்களினால் நடத்தைகளினாலும் அவர்களால் அள்ளிவீசப்பட்ட வாக்குறிதிகளினாலும். உலகநாடுகளின் ஏமாற்று உறுதி மொழிகளினாலும் அழிக்கப்பட்ட ஈழப்போராட்டத்தின் இறுதிநாட்கள் பற்றிய விரிவான அடுத்த பதிவொன்றுடன் சந்திக்கிறேன் நன்றி.

நன்றி : சாஸ்திரி புளொக்ஸ்பொட்.

விடுதலைப்புலிகளின் வீழ்ச்சியும் சிறுபான்மையின மக்களின் உரிமைகளும் – வீரகேசரி வாரவெளியீடு

idps200_1.jpgஇலங்கையில் கடந்த சுமார் 30 வருடங்களாக தமிழர்களுக்கு முழுமையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் இலங்கை இராணுவத்தால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அவ்வியக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில் இலங்கையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு விட்டதாகவும் போர் மேகங்கள் ஓய்ந்து விட்டதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் இலங்கையில் பிரச்சினைகள் தீர்ந்து விட்டன என்று கூற முடியாது.

இலங்கையின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டுமாயின் எல்லா இனங்களும் ஏற்கும்படியான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட வேண்டும். இலங்கைத் தமிழர்கள் தமக்கு சிங்களவர்களுக்கு ஈடான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென்று ஜனநாயக வழிகளில் போராட்டங்களில் ஈடுபட்டதனால் கிடைக்கப் பெற்ற பயன் ஏற்கும்படியாக இல்லாததன் காரணமாகவே உரிமைகளுக்கான ஜனநாயகப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக மாறியது.

இந்த ஆயுதப் போராட்டத்தினால் தமிழர்கள், முஸ்லிம்கள், சிங்களவர்கள் என மூவின மக்களிலும் ஆயிரக்கணக்கானவர்கள் உயிர் இழந்துள்ளனர். இலங்கையை மாறி மாறி ஆட்சி செய்த அரசாங்கங்கள் சிறுபான்மையினரின் கோரிக்கைகளிலுள்ள நியாயங்களை உணர்ந்து கொண்டிருந்தபோதிலும் அவற்றை வழங்குவதற்கு முழுமனதுடனான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. சிறுபான்மையினரை மென்மேலும் ஒடுக்கும் நடவடிக்கைகளையே மேற்கொண்டார்கள். இதனால் போராட்டங்களும் உயிர் இழப்புக்களும் அதிகரித்துக் கொண்டே சென்றன.

இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட யுத்தத்திற்காக நாட்டின் மொத்த வருமானத்தில் பெரும் பகுதி செலவு செய்யப்பட்டதுடன் பொருளாதாரம் பாரிய பின்னடைவுகளை கண்டது. இதனால் பொது மக்கள் மீதான பொருளாதார சுமைகள் அதிகரித்துக் கொண்டே வந்தன. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் தமிழர்களுக்கோ அல்லது சிறுபான்மையினருக்கோ அதிகாரப் பகிர்வு வழங்கப்படத் தேவையில்லை என்று வாதிடப்படுமாயின் அவ்வாதம் இலங்கையின் வளர்ச்சிக்கு தடையானதொரு வாதமாகவே இருக்கும்.

இலங்கையில் இருப்பது இனப்பிரச்சினையல்ல, பயங்கரவாதப் பிரச்சினையே. பயங்கரவாதம் தோற்கடிக்கப்படுமாயின் எல்லாம் சரியாகி விடுமென்று பேரினவாத மேலாதிக்கவாதிகள் தொடர்ச்சியாகக் கூறிக் கொண்டிருந்தனர்.

தற்போது விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதனால் மீண்டும் இக்கருத்தை வலியுறுத்தவும், சிறுபான்மையினர் அனுபவிக்கும் உரிமைகளையும் சலுகைகளையும் இல்லாமல் செய்வதற்கும் முயற்சிகளை எடுக்கலாம். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டாலும் அவர்களினால் போராட்டத்திற்கு அடிப்படையாக அமைந்த கருத்துக்கள் தோற்கடிக்கப்படவில்லை.

தமிழர்கள் சம உரிமைகளுடன் வாழ வேண்டும். தனி ஈழம் அமைய வேண்டும் என்ற கருத்து தமிழர்களின் மனங்களிலிருந்து நீக்கப்பட வேண்டுமாயின் அவர்களின் நியாயமான அபிலாசைகள் நிறைவேற்றப்பட வேண்டும். விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் பெரும்பான்மையின மேலாதிக்கத்தின் பிடி இன்னும் இறுக்கமாகி விடுமோ என்ற அச்சம் சிறுபான்மை மக்கள் மத்தியில் இருக்கலாம். இதனை நீக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தின் கைகளில் உள்ளது.

இதேவேளை இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையில் “எல்லோரும் ஏற்கும்படியான அதிகாரப் பகிர்வு முன்வைக்கப்படும். விடுதலைப் புலிகளின் தோல்வி தமிழர்களின் தோல்வியல்ல. அவர்கள் நிம்மதி, சந்தோஷத்துடன் சமத்துவமாக வாழ்வதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியாகக் கூறியுள்ளார்.

இலங்கையின் உள்நாட்டுப் போரினை அவதானித்துக் கொண்டிருந்த சர்வதேச சமூகங்கள் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் “ஈழத் தமிழர்களின் அபிலாஷைகள் நிறைவேற்றப்படுவது அவசர அவசியமானதாகும். அங்கு வாழும் எல்லா இனங்களும் ஏற்கும்படியான அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும்” என்று கேட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான ரணில் விக்கிரமசிங்க, “இனியும் நாட்டு மக்களிடையே அரசாங்கம் வேற்றுமை காட்டக்கூடாது. அவ்வாறு காட்டினால் மீண்டும் புரட்சி வெடிக்கும்” என எச்சரித்துள்ளார்.

“”இலங்கைத் தமிழர்களுக்கு அதிகாரங்கள் வழங்கப்படா விட்டால் வேறு வழிகளில் போராட்டம் நிகழக்கூடும்” என்று நோர்வே கூறியுள்ளது. “”இலங்கை மக்களுக்கு அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டும்” என்று அமெரிக்கா கூறியுள்ளது. இந்திய அரசாங்கம் தமது பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி அதிகாரப் பரவலாக்கம் பற்றி கலந்துரையாடியுள்ளது.

இவ்வாறு உலக நாடுகள் பலவும் இலங்கையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்பட வேண்டுமென்று வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன. இக்குரல்களை தட்டிக் கழித்துச் செயற்பட இலங்கை அரசாங்கம் நினைக்குமாயின் சர்வதேச ரீதியாக பல்வேறு சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.

ஆதலால் பெரும்பான்மையினர் அனுபவிக்கும் எல்லா வகையான உரிமைகளையும் சலுகைகளையும் சிறுபான்மையினரும் பெற்றுக் கொள்வதற்கு வாய்ப்புக்கள் ஏற்படுத்தப்பட வேண்டும். இதனை நிறைவேற்றுவதில் காலதாமங்கள் இடம்பெறக்கூடாது.

பிரபாகரனின் ‘கடைசி’ மணிநேரங்கள் – கூறுகிறார் இலங்கை ராணுவ அதிகாரி

Pirabakaran_Vவிடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் ‘கொல்லப்பட்டபோது’ நடந்த சம்பவங்கள் குறித்து இலங்கை அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

அது இதோ…

பிரபாகரனின் நடமாட்டம், அவர் எங்கு செல்கிறார் என்பது அவரது மனைவி மதிவதனி தவிர மூன்றே மூன்று விடுதலைப் புலிகள் அமைப்பினருக்கு மட்டும்தான் தெரியுமாம்.

ஒருவர் பொட்டு அம்மான், இன்னொருவர் பிரபாகரனின் மகன் சார்லஸ் அந்தோணி. மூன்றாவது நபர் புலிகளின் மருத்துவப் பிரிவு தலைவர் டாக்டர் ரீகன்.

சமீபத்தில் டாக்டர் ரீகன் ராணுவத்திடம் சிக்கினார். அவரை பல நாட்கள் கடுமையாக சித்திரவதை செய்து விசாரித்துள்ளனர். முதலில் பிரபாகரன் குறித்து தனக்குத் தெரியாது என்று கூறியுள்ளார் ரீகன். ஆனால் கொடூர சித்திரவதையில் பிரபாகரன் இருப்பிடம் குறித்து கூறி விட்டார் ரீகன்.

இதன் மூலம் 16ம் தேதி நள்ளிரவுவாக்கில்தான் பிரபாகரன் இருப்பிடம் குறித்து ராணுவத்திற்கு தெளிவாகத் தெரிய வந்தது.

மேலும், பிரபாகரன் போட்டு வைத்திருந்த முழுத் திட்டமும் தெரிய வந்தது.

பிரபாகரனின் திட்டம் என்னவென்றால், ராணுவத்தின் 53வது முன்னரங்கு பாதுகாப்பு வளையத்தை உடைத்துக் கொண்டு, முல்லைத்தீவு- வெளிஓயா காடுகளுக்குச் செல்வது. பின்னர் அங்கிருந்து திரிகோணமலை வழியாக கிழக்கு மாகாணத்தில் உள்ள மட்டக்களப்பு அல்லது அம்பாரைக்கு தப்பிச் செல்வது.

ஏற்கனவே அங்கு நிலை கொண்டிருந்த கர்னல் ராம் தலைமையிலான படையினரிடம் தங்களது வருகையை முன்கூட்டியே தெரிவித்து விட்டாராம் பிரபாகரன்.

இதையடுத்து 17ம் தேதி அதிகாலையில் புலிகள் தங்களது கடைசி தாக்குதலைத் தொடங்கினர். கடல் மார்க்கமாக விடுதலைப் புலிகளின் கடற்புலிகள் பிரிவினர் படு துணிச்சலான தாக்குதலை மேற்கொண்டு சென்றனர்.

ஏற்கனவே எச்சரித்து வைக்கப்பட்டிருந்த ராணுவப் பிரிவுகள், விடுதலைப் புலிகளை மடக்க முயன்றன. ஆனால், அதையும் மீறி 53வது பிரிவின் முன்னரங்கு பாதுகாப்பு வளையத்தை புலிகள் உடைத்துக் கொண்டு சென்றனர்.

மேலும் ராணுவத்தின் ஆம்புலன்ஸ் ஒன்றையும் பறித்துக் கொண்ட அவர்கள், 15 ராணுவ வீரர்களையும் சுட்டுக் கொன்றனர்.

ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே ராணுவம் திருப்பித் தாக்கத் தொடங்கியது. சக்தி வாய்ந்த எறிகணை ராக்கெட்டுகளை வீசித் தாக்கியது. இதில் 200 விடுதலைப் புலி வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்களில் 30 பேர் வரை கருகிப் போய் விட்டனர்.

விடுதலைப் புலிகள் இயக்கத்திலேயே மிகச் சிறந்த வீரர்களாக அவர்களின் உடல்கள் அந்தப் பகுதி முழுவதும் சிதறிக் கிடந்தன. விடுதலைப் புலிகள் தப்பிச் சென்ற ஆம்புலன்ஸும் தாக்குதலில் சிக்கி எரிந்து போனது.

பின்னர் ராணுவத்தினர் அந்த ஆம்புலன்ஸை நெருங்கிப் பார்த்தபோது உள்ளே பிரபாகரனைப் போன்ற உடலமைப்புடன் கூடிய உடல் உள்பட 3 உடல்கள் சிக்கின.

பிரபாகரனைப் போன்ற உடலமைப்புடன் கூடிய உடல், கருகிப் போயிருந்தது. முகத்தையோ, உடலையோ அடையாளம் காணவே முடியாத அளவுக்கு அது இருந்தது.

(முதலில் இப்படித்தான் கூறியிருந்தது இலங்கை ராணுவமும், அரசும். அந்த கருகிப் போன உடலை அடையாளம் காண முயன்று வருவதாகவும் அது கூறியிருந்தது.

ஆனால் திடீரென பிரஷ்ஷான முக அமைப்புடன் கூடிய ஒரு உடலைக் காட்டி இதுதான் பிரபாகரன், நந்திக்கடல் கழிமுகப் பகுதியில் இந்தப் பிணம் கிடந்தது என்று இலங்கை அரசும், ராணுவமும் கூறியது நினைவிருக்கலாம்.

முதலில் கருகிப் போய் அடையாளமே தெரியவில்லை என்று கூறிய ராணுவம், பின்னர் புது உடலைக் காட்டியதுதான் ராணுவத்தின் பேச்சை நம்புவதா, இல்லையா என்ற சந்தேகத்தை பலமாக எழுப்பியுள்ளது).

இருந்தாலும், அந்த உடல் பிரபாகரனுடையதாக இருக்கும் என்றே ராணுவம் உறுதியாக நம்பியது. காரணம், பிரபாகரன் தப்பிப் போக வேறு வழியே இல்லை.

சிறப்பு ராணுவப் படையினரால் பிரபாகரன் சுட்டுக் கொல்லப்பட்டிருக்க வேண்டும். அல்லது காயமடைந்து, நந்திக்கடல் கழிமுகப் பகுதியில் போய் அவர் உயிரிழந்திருக்க வேண்டும்.

ஆனால் அவரது உடலை கருகிப் போன ஆம்புலன்ஸிலிருந்துதான் ராணுவம் எடுத்தது.

இந்தத் தாக்குதலின்போது உயிருடன் சிக்கிய விடுதலைப் புலிகள்  சிலரை விசாரித்தபோது, பிரபாகரன் சுடப்பட்டு இறந்ததாக தெரிவித்தனர்.

பிரபாகரன் உள்ளிட்டோரின் கருகிய உடல்களை 53வது பிரிவு வீரர்கள் மீட்டாலும் கூட, உடலை வேறு ஒரு பிரிவினர் வந்து வாங்கிச் சென்று விட்டனர்.

ராணுவம் 400 உடல்களை மீட்டது. உடல்களை மீட்கும் பணியில் 1, 2, மற்றும் 5வது சிறப்புப் படைப் பிரிவினர் ஈடுபட்டனர்.

கொல்லப்பட்ட வீரர்கள் பட்டியலில் முக்கியமான விடுதலைப் புலிகளான லாரன்ஸ், கரிகாலன், பாப்பா, இளந்திரையன் ஆகியோரைக் காணவில்லை.

அதேசமயம், பொட்டு அம்மான், பானு, சூசை ஆகியோரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு விட்டன.

இவர்களில் சூசையும், சொர்ணமும்தான் இறுதி வரை தீரத்துடன் போராடினார்கள். மற்றவர்கள் அங்கிருந்து தப்ப முயன்றபோது இவர்கள் இருவரும் அவ்வாறு செய்ய முயலாமல், ராணுவத்தை எதிர்த்து கடுமையாக சண்டையிட்டனர். இருப்பினும் அவர்கள் இருவரையும் ராணுவ வீரர்கள் கொன்று விட்டனர் என்று அந்த ராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார்.

நன்றி;தட்ஸ் இந்தியா

தமிழகத்தின் 40 தொகுதிகளின் வெற்றி நிலவரம்: முழு விபரம்

indian-election.jpgதமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் மே 13ந் தேதி நடந்தது.  இந்த தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

இதில் திமுக 21 இடங்களிலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், விடுதலை சிறுத்தைகள் 2 இடங்களிலும், முஸ்லிம் லீக் ஒரு இடத்திலும் போட்டியிட்டன.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக மதிமுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.

இதில் அதிமுக 23 இடங்களிலும், பாமக 7 இடங்களிலும், மதிமுக 4 இடங்களிலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு,  இந்திய கம்யூனிஸ்டு ஆகியவை தலா 3 இடங்களிலும் போட்டியிட்டன.விஜயகாந்தின் தே.மு.தி.க. மற்ற தேர்தல்களைப் போலவே இந்த தேர்தலிலும் தனித்து 40 தொகுதிகளிலும் போட்டியிட்டது.

பாரதீய ஜனதா கட்சி சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுடன் சேர்ந்து களத்தில் நின்றது.

இதில் பாரதீய ஜனதா கட்சி 13  இடங்களிலும், சமத்துவ மக்கள் கட்சி 5 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம், நாடாளும் மக்கள் கட்சி ஆகியவை தலா 2 இடங்களிலும் போட்டியிட்டன.

இவர்கள் தவிர மனிதநேய மக்கள் கட்சி 4 தொகுதிகளிலும், புதிய தமிழகம் தென்காசி தொகுதியிலும் போட்டியிட்டன.

திமுக கூட்டணி வெற்றி நிலவரம்

திமுக கூட்டணி 28 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன.

திமுக

1. நாமக்கல் பாராளுமன்ற தொகுதியில் 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் காந்தி செல்வன் வெற்றி பெற்றுள்ளார்

2.ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் கே.சிவக்குமார் என்ற ரித்திஷ் 69,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

3. தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதியில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் (தி.மு.க.) துரை. பாலகிருஷ்ணன் (ம.தி.மு.க.) டாக்டர் ப. ராமநாதன் (தே.மு.தி.க.), எஸ். சரவணன் (பகுஜன் சமாஜ் கட்சி) மற்றும் 9 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

இதில் திமுக வேட்பாளர் பழனி மாணிக்கம் 10 ஆயிரத்து 500 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

4.மத்திய சென்னை பாராளுமன்ற தொகுதியில்37 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் 15 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

5.நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் ஆ.ராசா (தி.மு.க.) டாக்டர் சி.கிருஷ்ணன் (ம.தி.மு.க.) குருமூர்த்தி (பா.ஜனதா) செல்வராஜ் தே.மு.தி.க.) எம்.கிருஷ்ணன் (பகுஜன் ஜமாஜ் கட்சி) பத்ரன் (கொங்கு நாடு முன்னேற்ற கழகம்) மற்றும் 8 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளரும், மத்திய அமைச்சருமான ஆ.ராசா 85 ஆயிரத்து 547 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

6. கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதியில் 22 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஜே.ஹெலன்

டேவிட்சன் 65,564 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

7. ஸ்ரீபெரும்புதூர் பாராளுமன்ற தொகுதியில் டி.ஆர்.பாலு (தி.மு.க.), ஏ.கே.மூர்த்தி (பா.ம.க.), அருண்சுப்பிரமணியம் (தே.மு.தி.க.), ராஜப்பா (பகுஜன் சமாஜ் கட்சி) மற்றும் 28 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு 25, 544 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

8.தூத்துக்குடி பாராளுமன்ற தொகுயில் 15 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் எஸ்.ஆர்.ஜெயதுரை 76, 649 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

9.அரக்கோணம் பாராளுமன்ற தொகுதியில் 20 வேட்பாளர்கள் மற்றூம், சிறு கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்சகன் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

10.தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.1. ஆர். தாமரை செல்வன் (தி.மு.க.)2. டாக்டர் இரா. செந்தில் (பா.ம.க.)3. வி.இளங்கோவன் (தே.மு.தி.க.)4. வே.புருசோத்தமன் (பகுஜன் சமாஜ் கட்சி)5. கோ.அசோகன் (கொங்குநாடு முன்னேற்ற கழகம்).மற்றும் 16 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள் என்று போட்டியிட்ட 21 வேட்பாளர்களில் திமுக வேட்பாளர் ஆர்.தாமரைச்செல்வன் வெற்றி பெற்றுள்ளார்.

11.கிருஷ்ணகிரி தொகுதியில் மொத்தம் 16வேட்பாளர்கள் போட்டியிட்டார்கள். 1. இ.ஜி.சுகவனம் (தி.மு.க.)2. நஞ்சேகவுடு (அ.தி.மு.க.)3. ஜி.பாலகிருஷ்ணன் (பா.ஜனதா)4. அன்பரசன் (தே.மு.தி.க.)5. வி.வி.மூர்த்தி (பகுஜன்சமாஜ் கட்சி)6. பி.எஸ்.சந்திரன் (கொங்கு இளைஞர் பேரவை)7. செல்வராஜன் (கொங்குநாடு முன்னேற்ற கழகம்)8. சக்திவேல் (லோக்ஜனசக்தி)9. கோவிந்தராஜன் (லட்சிய தி.மு.க.)மற்றும் 7 சுயேச்சைகள் என்று போட்டியிட்ட 16 வேட்பாளர்களில், திமுக வேட்பாளர் இ.ஜி.சுகவனம் வெற்றி பெற்றுள்ளார்.

12.பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் து.நெப்போலியன் (தி.மு.க,)கே.கே.பாலசுப்ரமணியன் (அ.தி.மு.க.) ,துரை.காமராஜ் (தே.மு.தி.க.),க.செல்வராஜ் (பகுஜன் சமாஜ் கட்சி) வக்கீல் ஆர்.ஸ்டாலின் (லோக்ஜன சக்தி) இரா. சுந்தரவிஜயன் (சமாஜ்வாடி கட்சி) மற்றும் 15 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

இதில் திமுக வேட்பாளர் நடிகர் நெப்போலியன் வெற்றி பெற்றுள்ளார்.

13.நாகப்பட்டினம் பாராளுமனற தொகுதியில், ஏ.கே.எஸ்.விஜயன் (தி.மு.க.).எம்.செல்வராஜ் (இந்திய கம்யூனிஸ்டு).மா.முத்துக்குமார் (தே.மு.தி.க.)கோ.வீரமுத்து (பகுஜன் சமாஜ் கட்சி) மற்றும் 3 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஏ.கே.எஸ். விஜயன் வெற்றி பெற்றுள்ளார்.

14, வட சென்னை பாராளுமன்ற தொகுதியில் டி.கே.எஸ். இளங்கோவன் (தி.மு.க.) தா.பாண்டியன் (இந்திய கம்யூனிஸ்டு) தமிழிசை சவுந்தரராஜன் (பாரதீய ஜனதா) யுவராஜ் (தே.மு.தி.க.) சாந்தா ஸ்ரீநி (பகுஜன்சமாஜ்)மற்றும் 24 சுயேச்சைகள் போட்டியிட்டனர்இதில் திமுக வேட்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றுள்ளார்.

15. திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதியில த.வேணுகோபால் (தி.மு.க.) ஜெ.குரு (பா.ம.க.) எஸ்.மணிகண்டன் (தே.மு.தி.க.)எஸ்.ஏ.ராஜாராம் (புதிய நீதி கட்சி)பி.கோவிந்தசாமி (பகுஜன் சமாஜ் கட்சி) பி.செல்வராஜ் (சமாஜ்வாடி கட்சி)அப்ரோஸ் உஸ்னா (லோக்ஜனசக்தி)மற்றும் 23 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் த.வேணுகோபால் 1,38,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

16. கள்ளக்குறிச்சி பாராளுமன்ற தொகுதியில் ஆதிசங்கர் (தி.மு.க.), தன்ராஜ் (பா.ம.க.), சுதீஷ் (தே.மு.தி.க.), விஜய டி.ராஜேந்தர் (லட்சிய தி.மு.க.), மற்றும் 25 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் திமுக வேட்பாளர் ஆதி.சங்கர் வெற்றி பெற்றுள்ளார்.

17. மதுரை பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்ட திமுக வேட்பாளர் மு.க.அழகிரி 1,40,985 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மதுரை பாராளுமன்ற தொகுதியில் மு.க.அழகிரி (தி.மு.க.), பி.மோகன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு) கவியரசு (தே.மு.தி.க.) தர்பார் ராஜா (பகுஜன் சமாஜ்) மற்றும் 8 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.இதில் திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய யூனியன் முஸ்லீம் லீக்

1.வேலூர் பாராளுமன்ற தொகுதி திமுக சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் அப்துல் ரகுமான் வெற்றி பெற்றுள்ளார்.

வேலூர் பாராளுமன்ற தொகுதியிலமற்றும் 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் திமுக சார்பில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் வேட்பாளர் அப்துல் ரகுமான் வெற்றி பெற்றுள்ளார்.

காங்கிரஸ்

1.சிவகங்கை பாராளுமன்ற தொகுதியில் மொத்த 20 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.ப.சிதம்பரம் (காங்கிரஸ்)ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் (அ.தி.மு.க.) பர்வத ரெஜினா பாப்பா (தே.மு.தி.க.).தூதை செல்வம்

(சிவசேனா கட்சி) எம்.ஜி.தேவர் (பகுஜன் சமாஜ்) ராமசாமி (புதிய தமிழகம்)மற்றும் 14 சுயேச்சைகள் என்று போட்டியிட்ட 20 வேட்பாளர்களில் ப.சிதம்பரம் 3354 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

2.ஆரணி பாராளுமன்ற தொகுதியில் எம்.கிருஷ்ணசாமி (காங்கிரஸ்) முக்கூர் என்.சுப்பிரமணியன் (அ.தி.மு.க.) ஆர்.மோகன் (தே.மு.தி.க.) கே.சரவணகுமார் (புதிய நீதி கட்சி)ஏ.சங்கர் (பகுஜன் சமாஜ் கட்சி வி.அரிராஜ் (சமாஜ்வாடி)மற்றும் 7 சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் எம்.கிருஷ்ணசாமி வெற்றி பெற்றுள்ளார்.

3.தேனி பாராளுமன்ற தொகுதியில்ஆரூண் ரஷீத் (காங்கிரஸ்)தங்கதமிழ்செல்வன் (அ.தி.மு.க.)கவிதா (பகுஜன் சமாஜ்)பார்வதி (பா.ஜனதா)சந்தானம் (தே.மு.தி.க.)செல்வராஜன் (புதிய தமிழகம்)மற்றும் 16 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஆருண் ரஷீத் வெற்றி பெற்றுள்ளார்.

4.கடலூர் பாராளுமன்ற தொகுதியில் கே.எஸ்.அழகிரி (காங்.)எம்.சி.சம்பத் (அ.தி.மு.க)எம்.சி.தாமோதரன் (தே.மு.தி.க.)ஆரோக்கியதாஸ் (பகுஜன் சமாஜ்)மற்றும் 7 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் கே.எஸ்.அழகிரி வெற்றி பெற்றுள்ளார்.

5.விருதுநகர் பாராளுமன்ற தொகுதயில் மாணிக் தாகூர் (காங்கிரஸ்), வைகோ (ம.தி.மு.க.), பாண்டியராஜன் (தே.மு.தி.க.), நடிகர் கார்த்திக் (அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி ), கனகராஜ் (பகுஜன் சமாஜ்) மற்றும் 11 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக் தாகூர் 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

6.புதுச்சேரி மாநில பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் சார்பில் நாராயணசாமி, ராமதாஸ் (பா.ம.க) விஸ்வேஸ்வரன் (பா.ஜனதா) அசனா (தே.மு.தி.க.)சோமசுந்தரம் (பகுஜன் சமாஜ் கட்சி) கோவிந்தசாமி (காமராஜர் தேசிய காங்கிரஸ்) மற்றும் 22 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் நாராயணசாமி 85, 612 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

7.காஞ்சிபுரம் (தனி) பாராளுமன்ற தொகுதியில் வி.விஸ்வநாதன் (காங்), டாக்டர் இ.ராமகிருஷ்ணன் (அ.தி.மு.க.), டி.தமிழ்வேந்தன் (தே.மு.தி.க.), க.உத்திராபதி (பகுஜன் சமாஜ்) பக்கிரி அம்பேத்கர் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா)ஜவகர்லால் நேரு (லோக் ஜனசக்தி) மற்றும் 14 சுயேச்கைகள் போட்டியிட்டனர்.

இதில் காங்கிரஸ் வேட்பாளர் வி.விஸ்வநாதன் வெற்றி பெற்றுள்ளார்.

8.திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதியில் என்.எஸ்.வி. சித்தன் (காங்கிரஸ்)பாலசுப்பிரமணி (அ.தி.மு.க.)பி.முத்துவேல்ராஜ் (தே.மு.தி.க.)சீனிவாசபாபு (பகுஜன் சமாஜ் கட்சி)மற்றும் 15 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.இதில் காங்கிரஸ் வேட்பாளர் சித்தன் 14 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

9. திருநெல்வேலி பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 21 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

எஸ்.ராமசுப்பு (காங்கிரஸ்)கே.அண்ணாமலை (அ.தி.மு.க.) எஸ்.மைக்கேல் ராயப்பன் (தே.மு.தி.க.)கரு.நாகராஜன் (சமத்துவ மக்கள் கட்சி) ரமேஷ் பாண்டியன் (பகுஜன் சமாஜ்)எஸ்.செய்யது இமாம் (சமாஜ்வாடி)மற்றும் 15 சுயேச்சைகள்.21 வேட்பாளர்களில் காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.ராமசுப்பு வெற்றி பெற்றுள்ளார்.

விடுதலைசிறுத்தைகள்

1.சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனும், அதிமுக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் பொன்னுசாமியும், தேமுதிக சார்பில் சபா. சசிக்குமாரும், பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் என்.ஆர். ராஜேந்திரன் மற்றும் 9 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளன் 99,414 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

அதிமுக கூட்டணி= 12 தொகுதிகளில் வெற்றி

அதிமுக

1.பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதயில் கு.சண்முக சுந்தரம் (தி.மு.க.), கே.சுகுமார் (அ.தி.மு.க.) பாபா ரமேஷ் (பாரதீய ஜனதா)கே.பி.தங்கவேல் (தே.மு.தி.க., தி.மூர்த்தி (பகுஜன் சமாஜ் கட்சி)செ.கிருஷ்ணகுமார் (தமிழ் தேசிய கட்ச, சுரேஷ் (சமாஜ்வாடி கட்சி,இ.உம்மர் (மனிதநேய மக்கள் கட்சிஎஸ்.டி.ரமீஜா பேகம் (சமதா கட்சிபெஸ்ட் எஸ்.ராமசாமி (கொ.நா.மு.க.)

மற்றும் 12 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் கே.சுகுமார் வெற்றி பெற்றுள்ளார்.

2.தென்சென்னை பாராளுமன்ற தொகுதியில் சிட்லபாக்கம் ராஜேந்திரன் (அ.தி.மு.க.) ஆர்.எஸ்.பாரதி (தி.மு.க.) இல.கணேசன் (பா.ஜ.க. வீ.கோபிநாத் (தே.மு.தி.க.)மற்றும் 40 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன் வெற்றி பெற்றுள்ளார்.

3.விழுப்புரம் பாராளுமன்ற தொகுதியிலக.சாமிதுரை (விடுதலை சிறுத்தைகள்) எம்.ஆனந்தன் (அ.தி.மு.க.)பி.எம்.கணபதி (தே.மு.தி.க.) எஸ்.பொய்யாது (பகுஜன் சமாஜ் கட்சி)க.தேவராஜ் (லோக் ஜனசக்தி கட்சி)ஆர்.பஞ்சநாதன் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா) மற்றும் 13 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் எம்.ஆனந்தன் 2797 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

4.திருவள்ளூர் பாராளுமன்ற தொகுதியில் எஸ்.காயத்ரி (தி.மு.க.) பி.வேணுகோபால் (அ.தி.மு.க.) சுரேஷ்

(தே.மு.தி.க.)எம்.எஸ்.சுதர்சன் (ஐக்கிய ஜனதாதளம்) ஆனந்தன் (பகுஜன் சமாஜ் கட்சி)மற்றும் 9 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் பி.வேணுகோபால் வெற்றி பெற்றுள்ளார்.

5.மயிலாடுதுறை பாராளுமன்ற தொகுதியில் மணிசங்கர் அய்யர் (காங்கிரஸ்) ஓ.எஸ்.மணியன் (அ.தி.மு.க) கார்த்திகேயன் (பா.ஜ.க)) பாண்டியன் (தே.மு.தி.க) ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி)மற்றும் 18 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் ஓ.எஸ்.மணியன் வெற்றி பெற்றுள்ளார்.

6.திருப்பூர் பாராளுமன்ற தொகுதியில்எஸ்.கே.கார்வேந்தன் (காங்கிரஸ்)சி.சிவசாமி (அ.தி.மு.க.)எம்.சிவக்குமார் (பா.ஜனதா)என்.தினேஷ்குமார் (தே.மு.தி.க.)கே.பாலசுப்பிரமணியன் (கொ.நா.மு.க.என்.சிவக்குமார் (உழைப்பாளி மக்கள் கட்சிஎம்.தங்கவேல் (லோக் ஜனசக்தி)மற்றும் 14 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளர் சி.சிவசாமி வெற்றி பெற்றுள்ளார்.

7.திருச்சி பாராளுமன்ற தொகுதியில் சாருபாலா தொண்டைமான் (காங்கிரஸ்)குமார் (அ.தி.மு.க)லலிதா குமாரமங்கலம் (பாரதீய ஜனதா) ஏ.எம்.ஜி. விஜய்குமார் (தே.மு.தி.க)கல்யாண சுந்தரம் (பகுஜன் சமாஜ் கட்சி)நீலமேகம் (சமாஜ்வாடி கட்சி) மன்சூர் அலிகான் (லட்சிய தி.மு.க.மற்றும் 17 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.இதில் அதிமுக வேட்பாளர் குமார் 3400 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

8.கரூர் பாராளுமன்ற தொகுதியில் மொத்தம் 38வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.1. கே.சி.பழனிசாமி (தி.மு.க.2. தம்பிதுரை (அ.தி.மு.க.3. ஆர்.ராமநாதன் (தே.மு.தி.க.4. லோகநாதன் (சமதா கட்சி5. தர்மலிங்கம் (பகுஜன் சமாஜ் கட்சிமற்றும் 33 சுயேச்சைகள், சிறு கட்சி வேட்பாளர்கள்.இவர்களில் அதிமுக வேட்பாளர் தம்பிதுரை வெற்றி பெற்றூள்ளார்.

9.சேலம் பாராளுமன்ற தொகுதியில கே.வி.தங்கபாலு (காங்கிரஸ்)செம்மலை (அ.தி.மு.க.) பாலசுப்பிரமணி (பகுஜன் சமாஜ் கட்சி) அசோக் சாம்ராஜ் (கொங்கு நாடு முன்னேற்ற கழகம்) அழகாபுரம் ஆர்.மோகன்ராஜ் (தேமுதிக) மற்றும் 18 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் அதிமுக வேட்பாளரும், முன்னாள் மாநில அமைச்சருமான செம்மலை, தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலுவை விட 46252 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

மதிமுக

1.ஈரோடு பாராளுமன்ற தொகுதியில் மதிமுக வேட்பாளர் அ.கணேச மூர்த்தி வெற்றி பெற்றுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட்

1தென்காசி பாராளுமன்ற தொகுதியில் ஜி.வெள்ளைப்பாண்டி (காங்கிரஸ்) பி.லிங்கம் (இந்திய கம்யூனிஸ்டு) கே.இன்பராஜ் (தே.மு.தி.க.)டாக்டர் கே.கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) கே.கிருஷ்ணன் (பகுஜன் சமாஜ்)மற்றும் 4 சுயேச்சைகள் போட்டியிட்டனர்.  இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.லிங்கம் வெற்றி பெற்றுள்ளார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்

1.கோவை பாராளுமன்ற தொகுதியிலஆர்.பிரபு (காங்கிரஸ்) ஜி.கே.எஸ்.செல்வக்குமார் (பாரதீய ஜனதாபி).ஆர்.நடராஜன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு)ஆர்.பாண்டியன் (தே.மு.தி.க.)பி.கதிர்மணி (சமாஜ்வாடி கட்சி)கே.ராமசுப்பிரமணியம் (பகுஜன் சமாஜ் கட்சி)எம்.செல்வம் (சிவசேனா)ஈ.ஆர்.ஈசுவரன் (கொ.நா.மு.க.)மற்றும் 17 சுயேச்சைகள் போட்டியிட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் பி.ஆர்.நடராஜன் 38664 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

(நக்கீரன்)