மறுபிரசுரங்கள்

மறுபிரசுரங்கள்

சிறுபான்மையினர் பற்றிய சரத் பொன்சேகாவின் முரண்பாடான கருத்துக்கள் அரசியல் யாப்பை மீறுபவை – சட்டத்தரணி எம். எம். சுஹைர்

pr-can.jpg(இக்கட்டுரை எம். எம். சுஹைர் அவர்களால் எழுதப்பட்டதாகும். இவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமாவார்.)

அடுத்து வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக அறிவிப்பை விடுத்த தனது முதலாவது விரிவான ஊடகவியலாளர் மாநாட்டில், சரத் பொன்சேகா “எந்த வொரு சமூகமும் மித மிஞ்சிய அதிகாரங்களைக் கோரக் கூடாது” என்று குறிப்பிட்டுள்ளார்.  (டெய்லி மிரர் 30 நவம்பர் 2009 பிரதான தலைப்புச் செய்தி).

இவரின் இந்தக் கருத்தை வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் வாழுகின்ற தமிழ் மக்களுக்கும் அதேபோல் முஸ்லிம் மக்களுக்கும் எதிரான ஒரு தாக்குதலாகவே சிறுபான்மையின மக்கள் கருதுகின்றனர்.

இந்தச் சமூகங்களைச் சேர்ந்த அரசியல் கட்சிகள் பெரும்பான்மை சமூக அரசுகளிடமிருந்து மித மிஞ்சிய அதிகாரங்களைக் கோரி வருகின்றனர் என்ற தொனிப் பொருளிலேயே அல்லது அந்த மாதிரியான சிந்தனையின் பின்னணியிலேயே சரத் பொன்சேகா இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார் என்றே கருதத் தோன்றுகின்றது.

இன உறவுகள் தொடர்பான மிகவும் பாரதூரமான உணர்வுபூர்வமான விடயத்தில் சரத் பொன்சேகாவின் இந்தக் கூற்று, அவர் இந்த விடயம் தொடர்பாக ஏற்கனவே தெரிவித்த கருத்துக்களை மீண்டும் உறுதி செய்வதாகவே அமைந்துள்ளது.

இதில் 23 ஆம் திகதி செப்டம்பர் மாதம் 2008 இல் கனடாவின் “நெஷனல் போஸ்ட்” இதழுக்கு அவர் வழங்கிய பேட்டியில் “சிறுபான்மையினராக இருக்கின்றோம் என்ற காரணத்துக்காக மித மிஞ்சிய விடயங்களுக்கு அவர்கள் கோரிக்கை விடுக்கக் கூடாது” என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கதாகும். “இந்த நாடு சிங்களவர்களுக்கு மட்டுமே உரியது என்று நான் உறுதியாக நம்புகின்றேன். சிறுபான்மையினர் இங்கு விருந்தாளிகள் மட்டுமே” என்று அவர் ஏற்கனவே தெரிவித்த சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக அவர் வருத்தம் தெரிவிப்பார் அல்லது மன்னிப்புக் கோருவார் என்ற எதிர்ப்பார்ப்பு,  இப்போது தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சமூகங்களுக்கு ஏமாற்றத்தையே அளித்துள்ளது. பல அவதானிகளின் கருத்தும் இதுவாகவே உள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் சரத்பொன்சேகா போட்டியிடும் அறிவிப்பை வழங்கிய அண்மைய ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் இனிப்பு பூசப்பட்ட வில்லைக்குள் பழைய மருந்தை அடைத்துக் கொடுக்கும் ஒரு முயற்சியாகவே இருக்கின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு கிடைக்கவுள்ள பெரும்பான்மையின வாக்குகளை திசை திருப்பலாம் என்ற நோக்கில், சரத் பொன்சேகா இந்த அதி உயர் பதவிக்கான போட்டியில் குதித்திருந்தாலும் கூட,  இந்த நாடு சிங்களவர்களுக்கே உரியது என்ற அவரது தொடர்ச்சியான கூற்று, இத்தகைய ஒரு தேர்தலில் முக்கியமானதாகக் கருதப்படும் சிறுபான்மையின வாக்குகளை அவருக்கு ஒருபோதும் வழங்கப்போவதில்லை.

ஏனெனில் சிறுபான்மையினர் தொடர்பாக பேசும்போது “விருந்தாளிகள்”, “சுற்றுலாப் பயணிகள்”, “கோரிக்கை”, “மிதமிஞ்சிய உரிமை” என்றெல்லாம் வார்த்தைப் பிரயோகங்களை அவர் அள்ளிக் கொட்டியிருப்பது வேண்டத்தகாத, விரும்பத்தகாத விடயமாகவே கருத்தப்படுகிறது.

சரத் பொன்சேகாவின் அரசியல் தர்க்கம் இது தான் என்றால், அது இந்த நாட்டின் இனக் குழுக்கள் அனைத்தையும் சிங்களக் குழுக்கள் உட்பட தேவையற்ற ஒரு முரண்பாட்டு அரசியல் சூழலுக்கே தள்ளிவிடும்.

ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்த விடயத்தில் மிகவும் தெளிவான ஒரு நிலையிலேயே உள்ளார். அதாவது இந்த நாட்டில் எவரும் சிறுபான்மையினராகக் கருதப்படக் கூடாது. இந்த நாட்டை நேசிக்கும் எல்லோருமே பெரும்பான்மையினர் தான். தேசப்பற்றற்ற ஒரு சில தீய சக்திகள் மட்டுமே சிறுபான்மையாக இருக்கின்றன என்பது தான் ஜனாதிபதியின் நிலைப்பாடாக உள்ளது.

யாரும் தனக்கு உரிமையில்லாத எதையும் மிதமிஞ்சிய கோரிக்கையாக முன்வைக்கக் கூடாது. இது முற்றிலும் சரி. ஆனால் சரத் பொன்சேகா சிறுபான்மை, பெரும்பான்மை பேதம் இருக்கின்றது என்பதை மிகத் தெளிவாக முன்வைக்க முயலுகின்றார். (டெயிலி மிரர் 27 நவம்பர் 2009)மேலும் பெரும்பான்மையினர் தான் மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கின்றது. அவர்களுக்கு எந்தளவுக்கு அது இருக்கின்றது என்ற தீர்ப்பைக் கூற வேண்டியவர்கள் என்ற கருத்தையும் சரத் பொன்சேகா முன்வைத்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் இந்தக் கருத்து சகல பிரஜைகளுக்கும் இருக்கின்ற சமத்துவ உரிமைகள் தொடர்பான அரசியல் சாசன ஏற்பாடுகளை முற்றாக மீறுவதாக அமைந்துள்ளது. ஒருவருக்கு இன, மத மற்றும் வேறுபாடுகளுக்கு அப்பால் சமமான உரிமைகள் இருப்பதாக அரசியல் யாப்பு கூறுகின்றது.

“பயங்கரவாதத்தை ஒழிப்பதில் ஒரு பங்கு வகித்த தான் இப்போது “விருந்தாளிகளை”க் கையாள தயாராகி வருகின்றேன்” என்று சரத் பொன்சேகா கூறுவதாகவும் அவருடைய இந்தக் கருத்தில் இருந்து அர்த்தம் கொள்ள முடிகின்றது.

இந்த நாட்டின் சிங்களப் பெரும்பான்மை மக்களால் கூட முன்வைக்கப்படாத ஒரு தீவிரவாதக் கருத்தை சரத்பொன்சேகா மிகத் தெளிவாக முன்வைத்துள்ளார். 1972 மற்றும் 1978 அரசியல் யாப்புக்களில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகள் தொடர்பான ஏற்பாடுகளை முழு நாடும் ஆதரிக்கின்றது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இலங்கையை மீண்டும் ஒரு இருள் சூழ்ந்த யுகத்துக்குள் தள்ளிவிட சரத்பொன்சேகா எத்தனிக்கின்றாரா என்ற கேள்வியும் இங்கு எழுகின்றது.

அவர் ஆரம்பத்தில் இராணுவத் தளபதியாக இருக்கின்றபோது தான் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்திருந்தார். அதுவே அரசியல் சாசனத்தை மீறுகின்ற ஒரு செயலாகும். நாட்டின் அரசியல் சாசனத்தையும், அடிப்படைச் சட்டங்களையும் மீறி செயற்பட அவர் தயாராக இருக்கின்றார் என்ற கருத்திலேயே இதை நோக்க வேண்டியுள்ளது.

இதுபோன்ற கருத்தை இதற்கு முன்னர் வெளியிட்ட ஒரே தலைவர் முன்னாள் ஜனாதிபதி டி. பி. விஜேதுங்க ஆவார். சிறுபான்மையினர் என்பவர்கள் ஒரு மரத்தை படர்ந்திருக்கும் செடிகள் போன்றவர்கள் என்று 1993 ஆம் ஆண்டில் அவர் தெரிவித்திருந்தார்.  அப்போதைய சிறுபான்மைத் தலைவர்கள் தொண்டமான் மற்றும் அஷ்ரப் ஆகியோர் இதற்கு தக்க பதிலளிக்கும் வகையில் ஐ. தே. க.விலிருந்து விலகி 1994 ஜனாதிபதித் தேர்தலில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஆதரவு வழங்கினர்.

இந்த நாட்டின் சிறுபான்மையினர் “விருந்தாளிகள்” என்றும், அந்த “விருந்தாளிகளுக்கு” இந்த நாட்டில் உரிமை இல்லை என்றும் கூறுகின்றவர்கள், அவ்வாறு கூறுவதன் மூலம் வெளிநாட்டுச் சக்திகளின் தலையீட்டுக்கான கதவுகளையும் திறந்து விடுகின்றனர்.

சில சிறுபான்மையினர் கடந்த காலங்களில் வெளிநாட்டு ஆதரவுகளைப் பெற்றுக் கொள்ள முயற்சிகள் செய்துள்ள நிலையில்,  இத்தகைய கூற்றுக்கள் அவ்வாறான முயற்சிகளை நியாயப்படுத்தும் வருந்தத்தக்க ஒரு சூழலையே தோற்றுவிக்கும்.

வெளிநாடுகளுடனான ஒப்பந்தம் ஒன்றை பொன்சேகா மேற்கொண்டிருக்காவிட்டால், சிறுபான்மையினர் பற்றி அவர் மீண்டும் வித்தியாசமான ஒரு வடிவத்தில் உளறி இருக்கமாட்டார். அல்லது இந்த நாட்டுக்கு மிக அவசரமாகத் தேவைப்படும் தூரநோக்கு அவரிடம் கிடையாது என்பதே இந்த உளறலின் அர்த்தமாகும்.

பாக்கீர் மார்க்காரின் 12 வது ஞாபகார்த்தப் பேருரையை நிகழ்த்திய கலாநிதி, தயான் ஜயதிலக்க (ஐலண்ட் 30 நவம்பர் 2009) இந்த நாட்டுக்கு முன்னே உள்ள தெரிவை மிகத் தெளிவாக விளக்கியுள்ளார்.

“இலங்கை சிங்கள பெளத்தர்களுக்கு மட்டும் தான் சொந்தமானது. சிறுபான்மையினர் ஏதோ ஒரு வகையில் விருந்தாளிகள், அல்லது நாட்டுக்குள் வருகை தந்தவர்கள் என்ற குறிப்பானது, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இந்த நாட்டின் 60 வருட கால சுதந்திர வரலாற்றில் பெருமளவு பிரஜைகள் மத்தியில் முரண்பாடுகளை ஏற்படுத்தியுள்ளது.

“இலங்கைக்கான வெற்றிகரமான ஒரு தனித்துவத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஒரே பாதை இன, மொழி மற்றும் சமய ரீதியான பெரும்பான்மை, சிறுபான்மை என்ற பேதங்கள் இன்றி இலங்கை நாடானது அதன் பிரஜைகள் அனைவருக்கும் சம அளவில் சொந்தமானது என்ற கருத்தை வலியுறுத்துவதாகும்.

‘நாங்கள் எல்லோரும் விரிவான ஒரே குடும்பத்தின் உறுப்பினர்கள்/ உறவினர்கள் என்ற வகையில் ஒருவருக்கொருவர் இயல்பான வித்தியாசங்களுடன் வாழப் போகின்றோமா அல்லது நாம் ஒருவருக்கொருவர் மேலாண்மைக்காகவும், ஏனைய பிரிவுகளுக்காகவும், இந்த சிறிய தீவில் வெவ்வேறு இறைமையுள்ள பிரதேசங்களுக்காகவும் மோதிக் கொள்ளும் கூட்டத்தினராக வாழப் போகின்றோமா இதில் இரண்டாவது நிலைமையை நாம் தெரிவு செய்தால், எமது காலம், வளம், உயிர்கள், எதிர்காலம் என எல்லாமே தொடர்ந்தும் நாசமாகிவிடும்.

“ஒரு நாடு என்ற வகையில் எமக்குள்ள வியக்கத்தக்க முழு ஆற்றல்களையும் நாம் அடைந்து கொள்ள முடியாமல் அது எமது எதிர்காலத்தை சீர்குலைத்துவிடும். பிளவுபட்டிருந்த நாடு இப்போது மீண்டும் ஐக்கியப்படுத்தப்பட்டுள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வழங்கிய அரசியல், இராணுவ, பொருளாதார, ராஜதந்திர தலைமையால் இது சாத்தியமாகியுள்ளது. அதற்காக நாம் அனைவரும் அவருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

“அவருடைய அடுத்த இலக்கு மக்கள் மத்தியில் சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பேதங்கள் இன்றி மக்களை ஐக்கியப்படுத்துவதாகும். அத்தோடு தனக்குள்ள நிறைவேற்று ஜனாதிபதி அதிகார முறைகளைப் பயன்படுத்தி பொருளாதார ரீதியாகவும் நாட்டை விரைவில் விருத்தி செய்வதும் அவரது குறிக்கோளாகும்.

“இந்த இலக்குகளை அடைந்துகொள்ள இந்த நாட்டின் ஒவ்வொரு பிரஜையும் யுத்தம் வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு ராஜபக்ஷ சகோதரர்களால் அமைதியும், பாதுகாப்பான சூழலும் ஏற்படுத்தப்பட்டது என்பதை நினைவு கூர கடமைப்பட்டுள்ளனர்.

“இன அடிப்படையில் மக்களை பிளவுபடுத்தவோ, அல்லது வேறு வழிகளில் புதிதாக, இன மோதல்களை அல்லது சமய மோதல்களை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் எந்த ஒரு முயற்சியையும் இந்த நாட்டின் பிரஜைகள் நிராகரிக்க வேண்டும்.”

நன்றி: தினகரன்- 09.12.2009

தமிழர்கள் சரத் பொன்சேகாவுக்கு வாக்களிக்க வேண்டும் : மனோ கணேசன்

manoganesan_sarath.jpgதென்னி லங்கையில் வாழும் தமிழ் மக்கள் ஆட்சிமாற்றத்திற்காக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான சரத் பொன்சேகாவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வேண்டும்.

வடக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களில் வாழும் தமிழ் மக்கள் தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் நடக்கும் பேச்சுவார்த்தைகளை அடுத்து இறுதி முடிவு தேர்தல் நியமன தினத்திற்கு முன் அறிவிக்கப்படும் என்ற ஜனநாயக மக்கள் முன்னணி அரசியல் குழு எடுத்துள்ள முடிவை கட்சியின் தலைவர் மனோ கணேசன் எம்பி கொழும்பில் இன்று (03.12.2009) காலை கிராண்ட் ஒரியன்டல் விடுதியில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் மாநாட்டின் போது தெரிவித்தார்.

இம்மாநாட்டில் மனோ கணேசன் எம்பியுடன், கட்சியின் பொதுச்செயலாளர் கலாநிதி நல்லையா குமரகுருபரன், தேசிய அமைப்பாளர் பிரபா கணேசன், ஜதொகா பொதுச்செயலாளர் எம்.சிவலிங்கம், கொழும்பு மாவட்ட அமைப்பாளர் எஸ்.ராஜேந்திரன், சிரேஷ்ட உபதலைவர் கங்கை வேணியன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர் மொஹமட் ஷியாம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இம்மாநாட்டில் மனோ எம்பி தொடர்ந்து உரையாற்றுகையில் மேலும் தெரிவித்ததாவது :

“ஆட்சி மாற்றத்திற்கான வாக்கு சரத் பொன்சாகாவுக்கு எந்தவித அரசியல் நிபந்தனைகளுமின்றி வாக்களிக்கவேண்டும் என தமிழ் மக்களை நாம் கோரவில்லை. தமிழ் மக்கள் சரத் பொன்சேகாவுக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் இன்றைய ஆட்சியை மாற்றும் வாக்காகும்.

யுத்த வெற்றியினை முன்னிலைபடுத்தி தேர்தல்களில் இலகு வெற்றி பெற்றிடலாம் என இந்த அரசாங்கம் மனப்பால் குடித்தது. ஆனால் யுத்த வெற்றிக்கு காரணமானவரையே பொது வேட்பாளராக எதிரணி நிறுத்துவதால் இன்று அரசாங்கம் அதிர்ந்து போயுள்ளது. இந்த ஆட்சியை மாற்றுவதற்கு இதைவிட சிறந்த வழி எதுவும் கிடையாது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு

இன்றைய ஆட்சியை மாற்றியமைத்து புதிய தேசிய அரசாங்கத்தை ஏற்படுத்தி, தமிழ் மக்களுக்கு அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்கும் நமது செயற்திட்டத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

வடக்கு கிழக்கின் யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகிய மாவட்டங்களில் வாழும் தமிழர் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடக்கும் பேச்சுவார்த்தைகள் தொடர்ந்தும் நடத்தப்படும்.

இன்றைய அரசாங்கத்தை மாற்றிடவேண்டும் என்ற உணர்வுகள் இன்று வடக்கு கிழக்கிலுள்ள தமிழ் மக்கள் மனங்களில் ஒலிப்பதாக எமக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த உணர்வுகளை எதிரொலித்து ஆட்சிமாற்றம் என்ற ஒரே அடிப்படையில் எதிரணி பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை கூட்டமைப்பு ஆதரிக்கவேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

மலையகக் கட்சிகளுக்கும் அழைப்பு

தென்னிலங்கையின் மத்திய, ஊவா, சப்ரகமுவ மற்றும் மேல்மாகாணத்தில் வாழ்ந்துக்கொண்டிருக்கும் தமிழ் மக்கள் மத்தியிலே இந்த அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்ற உணர்வு கொந்தளித்துக்கொண்டிருக்கின்றது. எவர் என்ன சொன்னாலும் இதுதான் யதார்த்தம்.

எனவே நமது மக்களின் எண்ணக்கருத்திற்கு ஏற்ப மலையகக் கட்சிகள் செயற்பட வேண்டும். ஆட்சி மாற்றத்திற்காக மலையக கட்சிகள் எதிரணி பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை ஆதரிக்கவேண்டும் என தோழமையுடன் கேட்டுக்கொள்கின்றேன்.

தமிழர் போராட்டம்

இந்நாட்டிலே இனியொரு ஆயுதப் போருக்கு இடம் கிடையாது. போர் முடிந்துவிட்டது. ஆனால் போராட்டம் முடியவில்லை. தமிழ் மக்களின் போராட்டத்தின் வடிவம் மாற வேண்டும். அது ஜனநாயக போராட்டமாக முன்னெடுக்கப்படவேண்டும். அதிகார பகிர்வுக்காகவும், நீதி, சமாதானம் ஆகிய நோக்கங்களுக்காகவும் அரசியல் முதிர்ச்சியுடனான சாணக்கியத்துடன் நாம் காய்நகர்த்த வேண்டும்.

எமது போராட்டத்தைச் சிங்கள அரசியல் அணிகளுடன் இணைந்து முன்னெடுக்கும் சந்தர்ப்பங்களை நாம் ஒருபோதும் தவறவிடக்கூடாது. புலம் பெயர் தமிழர்கள் இலங்கையிலே ஆட்சி மாற்றத்திற்கும், தமிழர்களின் போராட்ட வடிவத்தின் ஜனநாயக மாற்றத்திற்கும் ஆதரவு வழங்க வேண்டும்.

களத்தில் இருந்தபடி நேரடியாக ஜனநாயக போராட்டங்களை முன்னெடுக்கும் தமிழ்த் தலைமைகளை அடையாளங்கண்டு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

இன்றைய அரசாங்கம்

இன்றைய அரசாங்கத்திற்கு வாக்களிப்பதற்கு தமிழ் மக்களுக்கு எந்தவொரு காரணமும் கிடையாது. தேசிய இனப்பிரச்சினை தொடர்பிலும், மனித உரிமைகள் தொடர்பிலும் இந்த அரசாங்கம் தமிழ் மக்களிடம் தோல்வியடைந்துவிட்டது. சொல்லொணா துன்பங்களை விளைவித்த யுத்தத்திற்கு இந்த அரசாங்கம் அரசியல்-இராணுவத் தலைமையைத் தந்தது.

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்று சொல்லி தாமே ஆரம்பித்து வைத்த சர்வக்கட்சி கடையை இந்த அரசாங்கமே இழுத்து மூடிவிட்டது. இன்று இந்த யுத்தத்தையடுத்து தமிழ் மக்களின் மனங்களை வெல்வதற்கு கிடைத்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்தர்ப்பத்தையும் இந்த அரசாங்கம் தவறவிட்டு விட்டது.

எதிர்க்கட்சி பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவிற்கு வாக்களிப்பதானது எமது வரலாற்று கடமையல்ல. அது நாம் வாழ்கின்ற காலத்தின் கட்டாயமாகும். சரத் பொன்சேகா நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதாக ஐக்கிய தேசிய முன்னணி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய இரண்டு அணியிடமும் உறுதியளித்துள்ளார்.

கடந்தகால ஜனாதிபதிகளின் இத்தகைய உறுதிமொழிகளுக்கும், தற்போதை நடைமுறைக்கும் இடையில் இருக்கின்ற வேறுபாடுகள் சிந்திப்பவர்களுக்கு புரியும்.

13ஆவது திருத்தமும் தேசிய இனப்பிரச்சினையும்

பொது வேட்பாளர் சரத் பொன்சேகா 13ஆவது திருத்தத்திற்கு அப்பால் சென்று இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும் என பகிரங்கமாக கூறியிருப்பது நல்ல விடயம். இந்த நிலைப்பாடுகூட இதுவரையில் ஆளுங்கட்சியின் வேட்பாளர் கூறவில்லை.

ஜனாதிபதி தேர்தலை அடுத்து ஐதேக, ஸ்ரீலசுக மக்கள் பிரிவு, ஜனநாயக மக்கள் முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ் உள்ளிட்ட ஐக்கிய தேசிய முன்னணிக்கும், ஜேவிபிக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் அழைப்பு விடுத்து சர்வ கட்சிகளையும் உள்ளடக்கிய காபந்து அரசாங்கத்தை ஜனாதிபதி நியமிப்பார்.”

இவ்வாறு மனோ கணேசன் தெரிவித்தார்.

வீரகேசரி இணையம் 12/3/2009

கனடாவில் சீமான் கைது?

seeman.jpgகனடாவில் இலங்கைத் தமிழர்கள் நடத்திய மாவீரர் தினத்தில் கலந்து கொண்டு பேசிய இயக்குனர் சீமான் கைது செய்யப்பட்டுள்ளதாக இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

கனடாவின் சட்டத்தை மீறும் வகையில் பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. எனினும் சட்டத்துக்குப் புறம்பான அவரது பேச்சு என்னவென்பது வெளியிடப்படவில்லை.

தினமணி

”மக்கள் எம்மோடுதான் இருக்கிறார்கள். ஜனாதிபதியின் ஆட்சிக் காலத்தில் இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம்” கிஷோர் : பி.வீரசிங்கம்

kishoor.jpgதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல்.

சிவநாதன் கிஷோர் வன்னி மாவட்ட மக்களைப் பொறுத்தவரையில் நன்கு அறிமுகமானவர். வவுனியா மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரியாகவும் சமாதான நீதவானாகவும் மக்களால் அறியப்பட்டவர். இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் வவுனியா மாவட்ட கிளைத் தலைவராகவும், வடக்கு கிழக்கு இணைப்பாளராகவும், கொழும்பு ஆளுநர் சபையில் வட மாகாணத்தைச் சேர்ந்த ஓரேயொரு தமிழ் உறுப்பினராகவும், வவுனியா ரோட்டரி கழகத் தலைவராகவும் இருந்தவர். போர்ச் சூழல்களின் போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சேவையாற்றியவர்.

கேள்வி: பொதுச் சேவையில் நீண்ட காலமாக பணியாற்றி வருகிர்கள். அரசியலில் பிரவேசிப்பதற்கான காரணம் என்ன?

பதில்: கடந்த 14 வருடங்களுக்கு மேலாக மக்களுக்காக சேவையாற்றி வருகிறேன். யுத்த காலத்தில் போக்குவரத்து செய்ய முடியாதிருந்த போது செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பல்வேறு உதவிகளைச் செய்தேன். இந்நிலையில் 2004ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் போட்டியிடுமாறு பொதுமக்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்து கொண்டு மக்களுக்கான எனது சேவையை தொடர்ந்து செய்து வருகிறேன்.

மே மாதம் 19ம் திகதிக்கு முன்னர் ஒரு கஷ்டமான நிலையில் எதையும் செய்ய முடியாதிருந்தது. கஷ்டங்களுக்கு மத்தியில் சேவையாற்றினேன். இப்போது நிலைமைகள் மாறியுள்ளன.

கேள்வி: நிவாரணக் கிராமங்களுக்கும் மீள்குடியேற்றப் பகுதிகளுக்கும் சென்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் நீங்களும் இடம்பெற்றிருந்தீர்கள். தற்போது அங்கு நிலைமைகள் எப்படியிருக்கின்றன?

பதில்: வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் மக்கள் இடம்பெயர்ந்த அவ்வேளையில் ஜனாதிபதியையும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவையும் சந்தித்து அவர்களைச் சென்று பார்ப்பதற்கு அனுமதி கோரினேன். அவர்களும் அனுமதியளித்தார்கள். தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இப்போதுதான் முதல் தடவையாக முகாம்களைப் பார்வையிட்டுள்ளது.

இந்தளவு தொகையில் மக்கள் இடம்பெயர்ந்து வருவார்கள் என அரசாங்கம் எதிர்பார்த்திருக்கவில்லை. மக்கள் பெரும் எண்ணிக்கையில் வந்திருந்ததால் அங்கு இடநெருக்கடி, உட்பட பல பிரச்சினைகள் அப்போது காணப்பட்டன.

இந்தத் தடவை சென்று பார்த்த போது நிலைமை முற்று முழுதாக மாறியிருக்கிறது. மக்களை மீளக்குடியமர்த்தும் நடவடிக்கையை அரசாங்கம் செய்து வருகிறது. இதனால் இடப்பிரச்சினை இல்லை. குறைந்த எண்ணிக்கையில் மக்கள் இருப்பதால் சந்தோஷமாக இருக்கிறார்கள். எது எப்படியிருப்பினும் இருக்கும் அந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு செல்ல வேண்டுமென்ற ஆவலுடன் இருக்கிறார்கள்.

கேள்வி: மீளக்குடியமர்த்துவதில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் எப்படியிருக்கின்றன?

பதில்: அரசாங்கம் இவ்வளவு விரைவில் மக்களை மீளக்குடியமர்த்தும் என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் கொடுத்த அழுத்தங்கள், அவர்களுடன் அடிக்கடி நடத்திய பேச்சுவார்த்தைகள் காரணமாக துரிதமாக மக்கள் மீளக்குடியமர்த்தப் படுகிறார்கள் என அறிகிறேன். தை மாதம் 30ம் திகதிகளிடையில் எஞ்சிய மக்களை மீளக்குடியமர்த்தப் போவதாக கூறியிருக்கிறார்கள். அது நல்ல விடயம்.

அந்த மக்களுக்குப் பல தேவைகள் இருக்கின்றன. உயிர், உடைமைகளை இழந்து வந்திருக்கிறார்கள். மீண்டும் அவர்கள் புது வாழ்க்கையை ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டும். தங்களது புதிய வாழ்க்கையை ஆரம்பிப்பதற்கான ஆரம்பக் கட்டம் இது. இப்போது முகாமிலிருந்ததை விட மிகவும் சந்தோஷமாக இருக்கிறார்கள். மீள்குடியேறுவோருக்கு இருபத்தையாயிரம் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

உடனடியாக ஐயாயிரம் ரூபா, வங்கிக் கணக்கில் இருபதாயிரம் ரூபா இடப்பட்டுள்ளது. அது போதாது, என்றாலும் இது தொடர்பாக ஜனாதிபதியின் ஆலோசகர் பசில் ராஜபக்ஷவிடம் பேசிய போது மூன்று இலட்சத்து இருபத்தையாயிரம் ரூபா பெறுமதி யான வீடுகளை வெகுவிரைவில் நிர்மாணித்துக் கொடுக்கவுள்ளதாக உறுதியளித்துள்ளார். முதலில் அவர்கள் சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்தப்பட வேண்டும். அதன் பின்னர் படிப்படியாக அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்கு உதவி செய்வதாக அவர் கூறினார்.

கேள்வி: மீள்குடியேறிய மக்களை சந்தித்தீர்களா?

பதில்: மக்கள் தங்களுடைய வீட்டிற்குச் சென்று கஞ்சியை குடித்தாலும் சந்தோஷமாக இருப்பார்கள். முகாம்களில் என்னதான் பிரியாணியை கொடுத்தாலும் அது குறைவாகவே இருக்கும். மீளக்குடியேறிய மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

கேள்வி: அந்த மக்களின் மனநிலைகள் எப்படியிருக்கிறது?

பதில்: கடந்த 33 வருடங்களாக அந்த மக்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்தார்கள். பல இழப்புகளை சந்தித்தவர்கள். பல கட்டுப்பாடுகளுக்குள் வாழ்ந்தவர்கள். உறவுகளை உடைமைகளை இழந்து அனைத்தையும் தாங்கிக் கொண்டு வாழ்வதென்பது சாதாரண விடயமல்ல. என்றாலும் தாம் உயிர் தப்பியிருக்கிறோம் என்ற சந்தோஷத்தில் இருக்கிறார்கள். இதுதான் உண்மை.

கேள்வி: அரசாங்கத்தின் நடவடிக்கைகள் உங்களுக்கு திருப்தியளிக்கிறதா?

பதில்: அரசாங்கம் அகதிகள் விடயத்தில் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் வரவேற்கக் கூடியது என்றே கூற வேண்டும். என்றாலும் இன்னும் சில திருத்தங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. அனைத்தும் நன்றாக இருப்பதாக நான் சொல்ல வரவில்லை.

ஐந்து, பத்து வருடங்கள் முகாமில் இருக்கப் போகிறோம் என்றிருந்த மக்களை மீளக்குடியமர்த்த அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் வரவேற்கத்தக்கது. இன்னும் பல அபிவிருத்தித் திட்டங்களை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

தொண்ணூறில் இடம்பெயர்ந்த மக்கள் இன்னமும் வவுனியா, பூந்தோட்டம் பகுதி முகாம்களில் இருக்கின்றனர். அவற்றுடன் ஒப்பிடுகையில் இவர்கள் மீளக்குடியமர்த்தப்படுவது என்பது பெரிய விடயமே! நான் எதைப் பார்த்தேனோ அதையே பீறினேன். சரி என்றால் சரியென்றுதானே கூற வேண்டும். அகதிகள் விடயத்தில் அரசாங்கம் எடுத்து வரும் நடவடிக்கைகள் சரியானவையே.

கேள்வி: யுத்தம் காரணமாக தமிழ் மக்கள் பல விதத்திலும் நொந்து போயிருக்கிறார்கள். இவ்வாறான சூழ்நிலையில் இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேசுவதென்பது சாத்தியமா?

பதில்: இனப்பிரச்சினைத் தீர்வு தொடர்பாக பேசுவதற்கு இது நேரமல்ல. மக்கள் முற்று முழுதாக அவர்களது சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டும். சொந்த இடங்களில் அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தில் மேம்பாடடைச் செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். நீண்டகாலமாக நீடீத்த இந்த யுத்தம் ஒரு முடிவு மில்லாமல் போய்விட்டது. இனப்பிரச்சி னையின் தீர்வுக்கான தீர்வுத் திட்டம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் தயாரிக்கப்பட்டு வருகிறது.

எம்மைப் பொறுத்தவரையில் ஜனாதிபதி அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வென்ற பின்னர் ஒரு முடிவை எடுப்பார். நிரந்தரமான தீர்வுத் திட்டமொன்றை கொடுக்க வேண்டுமென பல தடவைகள் கூறி வந்திருக்கிறார். பெரும்பான்மை இனம், சிறுபான்மை இனம் என்றில்லை என பகிரங்கமாக கூறியிருக்கிறார். எங்கு சென்றாலும் தமிழ் மொழியிலும் உரையாற்றுவது நல்லதொரு விடயம். இதனை செயலிலும் அவர் காட்டுவார் என நம்புகிறோம். யுத்தம் முடிந்து நாடு சுமுகமானதொரு நிலைக்கு வந்திருக்கிறது. ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் இந்த இனப்பிரச் சினைக்கு ஒரு தீர்வைக்காண முடியுமென நம்புகிறேன்.

கேள்வி: தமிழ் தேசிய கூட்டமைப்பு மக்கள் மத்தியிலிருந்து அந்நியப்பட்ட நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. எதிர்வரும் காலங்களில் கூட்டமைப்பின் பலம் எவ்வாறு இருக்குமென கருதுகிர்கள்?

பதில்: மக்கள் எம்மோடுதான் இருக்கிறார்கள். யுத்தம் முடிவடைந்த பின்னர் நாம் எல்லாவற்றையும் இழந்திருந்த போது உள்ளூராட்சி தேர்தல் வந்தது. இதனை ஒரு பரீட்சார்த்தமாகவே அரசாங்கம் நடத்தியது. வவுனியா நகர சபைக்கு யாழ். மாநகர சபைக்கும் என நடத்தப்பட்ட தேர்தலில் நாங்கள் வவுனியா நகர சபையை வென்றோம். யாழ். மாநகர சபையையும் வெல்லக்கூடிய நிலை இருந்தது. மக்கள் வாக்களித்திருந்தால் அது பெரிய வெற்றியாக இருந்திருக்கும். அப்படியிருந்தும் எட்டு ஆசனங்களைக் கைப்பற்றியிருந்தோம். இது எங்களுக்குப் பெரிய வெற்றி என்றே கருதுகின்றோம்.

கேள்வி: கடந்த காலங்களைப் போலவே யுத்தம் முடிவடைந்து இயல்பு நிலைக்குத் திரும்பிக் கொண்டிருக்கும் தற்போதும் தமிழ் கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படுவதாகத் தெரியவில்லையே?

பதில்: கடந்த காலங்களில் பல குழுக்களாகப் பிரிந்து நின்றாலும் ஒரு குறிக்கோளுடன் போராடினர். பின்னர் அவர்களுக்குள் இன்னும் பல குழுக்களாகப் பிரிந்து சண்டைகள், கொலைகள் எல்லாம் நடந்துமுடிந்து விட்டன. மே 19ம் திகதிக்குப் பின்னர் நாங்கள் பல தடவைகள் பேச்சுக்களை நடத்தினோம். ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியத்தை வலியுறுத்தினோம். எமது மக்கள் ஒன்றாக இருந்த வரலாறு இல்லை. எமது முயற்சி களைக் கைவிட வில்லை. அனைவரும் ஒன்றிணைந்தால் பலமாக இருக்கும். அதற்கான காலம் வெகு விரைவில் வரும் என்றே நினைக்கின்றேன்.

கேள்வி: தேசிய அரசியலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடாததன் காரணமாக தென்னிலங்கை அரசியல் சக்திகளுடன் இணைந்து தமிழ்ப் பகுதிகளில் அபிவிருத்தி நடவடிக் கைகளை முன்னெடுக்க முடியாதிரு ப்பதாக கருத்து நிலவுகிறது. தேசிய அரசியலில் பங்கெடுத்துக் கொள்ளா திருப்பதற்கான காரணமென்ன?

பதில்: எமது அரசியல்வாதிகள் மத்தியில் இவ்வாறான நிலை இருப்பது உண்மைதான். அரசின் பக்கம் போனால் மக்கள் நிராகரித்து விடுவார்கள் எனக் கருதுகின்றனர். ஆனால் நான் பாராளுமன்றத் தேர்தலில் வந்ததன் பின்னர் அரசுடன் சேர்ந்து பல விடயங்களைச் செய்திருக்கிறேன். வவுனியா மாவட்டத்தில் ஒரு தாதியர் பயிற்சிக் கல்லூரியை கொண்டு வந்திருக்கிறேன். மன்னார் மாவட்டத்தில் ஒரு ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, 150 ஏக்கர் நிலப்பரப்பில் வவுனியாவுக்கான வளாகத்தை நிறுவவும் அதனை வன்னிப் பல்கலைக்கழகமாக மாற்றுவதற்குமான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். கடந்த காலங்களில் எமது மக்கள் கைது செய்யப்பட்டு கொழும்புக்கும் அநுராதபுரத்திற்கும் கொண்டு செல்லப்பட்டனர். இப்போது வவுனியாவிலேயே நீதியமைச்சினால் கட்டப்பட்டுள்ள சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறான வேலைகளை நாம் அவர்களுடன் இணைந்து தான் செய்ய முடிகிறது.

அவர்களுடன் பேசி நல்ல விடயங்களைச் செய்யலாம். அதற்கு அவர்கள் முழு ஆதரவையும் செய்திருக்கிறார்கள். தெற்கிலுள்ள அரசியல் தலைமைகளுடன் இணைந்து ஒரு உறவுப் பாலம் அமைக்க வேண்டியது அவசியமாகும்.

புலிகள் எடுத்த அவசர முடிவுகளே இன்றைய விளைவுகளுக்குக் காரணம் – கருணாநிதி

karunanidhi.jpgவிடு தலைப் புலிகள் அரசியல் கண்ணோட்டம் இல்லாமல், அவசரப்பட்டு எடுத்த முடிவுகளால் ஏற்பட்டுள்ளதே இன்றைய விளைவுகள். இதைக் கண்டு நாம் மெளனமாக அழுது கொண்டிருப்பது யார் காதில் விழப் போகிறது என்று முதல்வர் கருணாநிதி  கூறியுள்ளார் .

இதுகுறித்து முதல்வர் கருணாநிதி முரசொலியில் எழுதியுள்ள கட்டுரை பின்வருமாறு

ஈழத் தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து 1956 முதல்; தி.மு.க. தென்னிந்தியாவில் இலங்கை பிரச்சினைக்காக எழுப்பிய குரலும் – இலங்கையில் ஜனநாயகம் மலர வேண்டும் என்பதற்காக எடுத்து வைத்த வாதங்களும் – நடத்திய அறப்போராட்டங்களும் – சிறைகளை நிரப்பிய தியாகச் செயல்களும் – சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் தூக்கி எறிந்த நிலைகளும் – ஏன்; இருமுறை ஆட்சியையே இழந்த சரித்திரச் சம்பவங்களும் –

தி.மு.கழகத்தின் சார்பில் நிதியாக தமிழர்களிடமிருந்து சேர்த்துக் கொடுத்த மாசறு காசுகள்; செல்லாக் காசுகளாக மாறிய நிகழ்ச்சியும் –

“டெசோ” இயக்கத்தின் சார்பில் – நானும், தமிழர் தலைவர் வீரமணியும், பழ.நெடுமாறன், அய்யணன் அம்பலம் ஆகியோரும் முன்னின்று மாவட்டந்தோறும் நடத்திய பேரணிகளைத் தொடர்ந்து; 4-5-1986 அன்று மதுரையில் ஈழத் தமிழர் ஆதரவு மாநாட்டுக்கு டி.யு.எல்.எப். சார்பாக அமிர்தலிங்கம், புரோடெக் சார்பாக சந்திரகாசன், ஈராஸ் சார்பாக ரத்தினசபாபதி, டி.இ.எல்.எப். சார்பாக ஈழவேந்தன், ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பாக வரதராஜப்பெருமாள், பிளாட் சார்பாக வாசுதேவன் ஆகியோர் கலந்து கொண்டனர் என்பதும்,

அந்த மாநாட்டில் அகில இந்திய ரீதியில் என்.டி.ராமராவ், வாஜ்பாய், பகுகுணா, ராம்வாலியா, உபேந்திரா, உன்னிகிருஷ்ணன், சுப்பிரமணிய சாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர் என்பதும்,

அந்த மாநாட்டிற்கு பல்வேறு போராளிக் குழுக்களின் தலைவர்கள் எல்லாம் வந்து கலந்து கொண்டு போராளிகளிடையே அடிக்கடி எழும் புயல் குறித்து விவாதித்து; அதனை நிறுத்த சகோதர ஒற்றுமை வேண்டுமென்று வலியுறுத்தினார்கள் என்பதும்,

ஆனால் அந்த மாநாட்டிற்கு எல்.டி.டி.ஈ. சார்பாக திலகர் என்பவர் தான் வந்திருந்தாரே தவிர, பிரபாகரன் வரவில்லை என்பதும்;

அரசு பொறுப்பில் முதல்வராக இருந்து கொண்டே, அமைதிப்படை இந்தியாவிற்கு திரும்பி வந்ததை வரவேற்க செல்லாமல் புறக்கணித்து, தமிழ்நாட்டின் உணர்வை நான் வெளிப்படுத்திய நிகழ்வும் – இலங்கையில் நடந்த விடுதலை போராட்டத்திற்கு நமது தாய் மண்ணிலிருந்து நீட்டப்பட்ட ஆதரவுக் கரம் என்பதை நடுநிலையாளர்கள் யாரும் மறந்துவிட முடியாது.

ஆனால் விடுதலைப் படைமுகத்திலே நின்ற ஒருசில தளகர்த்தர்களுக்கு – தளபதிகளுக்கு – தலைவர்களுக்கு நாமே வலுவில் சென்று வழங்கிய ஆதரவு; மிக லேசாகவே தெரிந்தது. நாம் எடுத்து வைத்த கருத்துகள் அலட்சியப்படுத்தக் கூடியவைகளாக ஆகிவிட்டன. வீரத்தைப் பயன் படுத்திய அளவுக்கு; இதுபோன்ற போர் முனைகளில் விவேகத்தைப் பயன்படுத்த வேண்டும் என்று நாம் தொடர்ந்து வலியுறுத்தியதை என்ன காரணத்தாலோ அலட்சியப்படுத்திவிட்டார்கள்.

எல்லாம் முடிந்து மேலும் முடிவுறுமோ; என்ற துயர நேரத்திலே ஜனநாயக ரீதியாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு வாய்ப்பு வாசற்படி வரையிலே வந்தபோது கூட, அதை எட்டி உதைத்து விட்ட தவறான காரியம் நடைபெற்றதையும் – நடைபெற்றதற்கான காரணத்தையும் – நான் அல்ல; என்னைப் போன்றவர்கள் அல்ல; இதோ மவுன வலி உணர்ந்து, அதனை நமக்கு உரைக்கும் அருமை நண்பர்களாம், தமிழ் எழுத்தாளர்களில் தலைநிமிர்ந்து நிற்கும் தன்மானத் தோழர், கோபாலுக்கு; அண்மையில் சென்னைக்கு வந்த இலங்கை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும், இன்றைய இலங்கை எதிர்க்கட்சி தலைவரும், இலங்கையின் முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கே 18-11-2009 தேதியிட்ட நக்கீரன் வார இதழுக்காக அளித்த பேட்டியில்,

“இந்தப் போரின் விளைவுகளுக்கு ஒரு வகையில் பிரபாகரனும் காரணம். தமிழர்களின் பிரச்சினைக்கு அரசியல் தீர்வுகாண வேண்டி முயற்சி நடந்தபோதெல்லாம் அதனை தவிர்த்தார் பிரபாகரன். 2003-ல் நடந்த அமைதி பேச்சுவார்த்தையிலிருந்து தானாகவே வெளியேறினார்.

2005-ல் டோக்கியோவில் நடந்த பேச்சுவார்த்தையிலும் தமிழர்களின் கோரிக்கைகள் என்னவென்பதை தெரிவிக்காமலே இழுத்தடித்தார். இறுதியில் அதில் கலந்து கொள்வதை தவிர்த்தார்.

மேலும் 2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல்; பிரபாகரன் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அதே நேரம் அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால் தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்.”

என்று ரணில் கூறியிருப்பதைக் கூர்ந்து கவனித்தால் விடுதலைப்புலிகள் போர்த் தந்திரத்தை எதிர்காலக் கணிப்போடு கடைப்பிடிக்காதது தான் காரணம் என்பதை புரிந்து கொள்ள முடியும்.

விளைந்த நிலைமையை எண்ணிப்பார்ப்பதற்கு இந்த விடுதலைப் போரின் பின் விளைவுகளுக்கு; சகோதர யுத்தத்தின் காரணமாக; மாவீரன் மாத்தையாவிற்கு விடுதலைப்புலிகள் இயக்கமே மரண தண்டனை விதித்து அதை நிறைவேற்றியும்;

டெலோ சிறீ சபாரத்தினத்தை சவமாக ஆக்கியும்;

பத்மநாபாவையும், அவரோடு இணைந்து பத்து போராளிகளையும் கொன்று குவித்தும்;

தொடக்க காலத்திலிருந்து போராளிகளின் துணைவராக விளங்கிய அமிர்தலிங்கத்தையும், யோகேஸ்வரனையும் இந்த நிகழ்ச்சிகளில் உச்சகட்டமாக பலியாக்கியும்;

டெலோ இயக்கத்தைச் சேர்ந்த மனோமாஸ்டர் என்ற பஞ்சலிங்கத்தையும், அந்த இயக்கத்தின் தலைவர் குலசேகரம் தேவசேகரத்தையும், தலைசிறந்த அரசியல் அறிஞர் நீலன் திருச்செல்வத்தையும், சுந்தரம் எனப்பட்ட சிவசண்முகமூர்த்தியையும், ஜார்ஜ், சபாலிங்கம், சாம்தம்பிமுத்து, கலாதம்பிமுத்து மற்றும் பிளாட் இயக்கத்தைச் சேர்ந்த யோதீஸ்வரனையும், வாசுதேவாவையும், மரணக் குழியிலே தள்ளியும்;

தங்கள் துணைகளை தாங்களே திட்டமிட்டு, தொலைத்து விட்ட காரியங்களாக அமைந்தன என்பதை இந்தப் போர்முனை சரித்திரம் இன்னமும் சொல்லிப் புலம்பிக் கொண்டு தானிருக்கிறது.

நான் யார் மீதும் குற்றம், குறை சொல்வதற்காக இதையெல்லாம் எழுதவில்லை. இலங்கையில் 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு அமைந்த ஒரு சில நாட்களுக்குள் – 9-4-2004 அன்று கிழக்கு இலங்கையிலே சகோதர யுத்தம் – பிரபாகரன், கருணா படைகளிடையே ஏற்பட்டு அதிலே 20 போராளிகளும், 2 சிவிலியன்களும் கொல்லப்பட்டார்கள்.

இப்படி சகோதர யுத்தம் காரணமாக – நம்மை நாமே கொன்று குவித்துக்கொண்டது மாத்திரமல்ல – முறையாக திட்டமிட்டு நடவடிக்கை மேற்கொள்ளத் தவறிய காரணத்தால் – நம்முடைய பலத்தையும், மாற்றார் பலத்தையும் துல்லியமாக கணிக்காத காரணத்தால் – நம்முடைய தமிழ் மக்கள் எத்தனை பேர் மாற்றாரின் தாக்குதலுக்கு உள்ளாகி தங்கள் உயிரை இழக்க நேரிட்டது. இளம் சிறார்கள் எத்தனை பேர் தங்கள் பிஞ்சு வயதிலேயே வெந்து மாண்டனர்? அவர்களை இழந்த அவர்களுடைய பெற்றோர் எத்தனை வேதனைப்பட்டிருப்பார்கள்? எத்தனை பேர் தங்கள் சொத்து சுகங்களை இழந்து நாடு விட்டு நாட்டிற்கு பஞ்சைகளாக, பராரிகளாகச் செல்ல நேரிட்டது? தங்கள் வாழ்க்கையைத் தொடர அவர்கள் எங்கெங்கு அலைந்து திரிய வேண்டியதாயிற்று? எத்தனை பேர் அகதிகள் முகாம்களில் ஆண்டுக்கணக்கில் வாட நேர்ந்தது? இதற்கெல்லாம் காரணம் என்ன? ஏன் பிரபாகரனின் மனைவி, மக்கள் குடும்பத்தாரின் கதி தான் என்ன? இப்படி எத்தனை குடும்பங்கள்? இன்னும் பல ஆண்டுகள் அனைவரும் அமைதியோடு வாழ்ந்து – தமிழர்களின் உயர்வுக்காகப் பாடுபட வேண்டியவர்கள் – தங்கள் உயிரை அற்ப ஆயுளில் முடித்துக் கொண்டு போய் விட்டார்களே என்ற ஆதங்கத்தில் தான் இதனை நான் எழுத நேரிட்டது. வாழ வேண்டிய ஆயிரக்கணக்கான இளந்தளிர்கள் வாடி வதங்கி விட்டார்களே என்ற வேதனையில் இதனை எழுதுகின்றேன்.

என்னையும், மாறனையும் 15-3-1989 அன்று; அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி டெல்லிக்கு அழைத்து – விடுதலைப்புலிகள் இயக்கத்தைப் பற்றியும், ஈழப் பிரச்சினை குறித்தும் இரண்டு நாள் உரையாடி – அதுபற்றிய விவரங்களை சுமார் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் தமிழ்நாடு மாளிகையில் வெளியுறவுத்துறை இணை அமைச்சர் நட்வர்சிங் மூலமாக எங்களுக்கு தெரிவித்து – நீங்களும், மாறனும், வைகோவும் தேவைப்பட்டால் இலங்கை சென்று கொழும்பிலோ அல்லது உங்களுக்கு விருப்பமான இடத்திலோ முகாமிட்டு – பிரபாகரனுடன் இந்த பிரச்சினை குறித்து விரிவாகப் பேசுங்கள், எத்தனை நாள் வேண்டுமானாலும் அதற்காக நேரம் ஒதுக்கிக் கொள்ளுங்கள், இலங்கையில் நீங்கள் அவர்களைச் சந்திக்கவோ அல்லது அவர்கள் நீங்கள் தங்கியிருக்கும் இடத்திற்கு வந்து சந்திக்கவோ தேவையான ஏற்பாடுகளை நான் இங்கிருந்து செய்து தருகிறேன், அதிகபட்சம் அவர்களது கோரிக்கை என்ன என்பதை விவரமாகத் தெரிந்து கொள்ளுங்கள், இலங்கையில் தமிழ் மக்களின் உரிமைகளை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன் – என்றெல்லாம் எங்களுக்கு சொல்லி உறுதியளித்த அந்த இளந்தலைவர் ராஜீவ் காந்தி இந்திய மண்ணில் அதுவும் தமிழ் மண்ணிலேயே கொலையுண்டார் என்பது ஒரு மாபெரும் சோகச் சம்பவம். அந்த சம்பவமும் ஈழ விடுதலைப் போராட்டத் தீயில் தண்ணீர் விட்டு அணைத்தது போல் ஆயிற்று என்பதை உலகம் மறந்து விடவில்லை.

இதோ ஒரு நிகழ்ச்சி. 17-11-2005 அன்று இலங்கை அதிபரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. 13 பேர் போட்டியிட்டனர். அந்த தேர்தலில் அப்போது பிரதமராக இருந்த மகிந்த ராஜபக்சேவும், அவரை எதிர்த்து முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும் முக்கியமாக போட்டியிட்டார்கள். அந்த தேர்தலை சிறுபான்மையினரான தமிழர்கள் புறக்கணிக்க வேண்டுமென்று விடுதலைப்புலிகள் அறிவுறுத்தினர். அந்த தேர்தலின்போது, தான் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டால், விடுதலைப்புலிகளுடன் அமைதிப் பேச்சைத் தொடருவதற்கு முன்னுரிமை அளிப்பேன் என்றார் ரணில். அப்போது ரணில் சொன்னதைத் தான் இப்போதும் நக்கீரன் இதழுக்கு அளித்த பேட்டியிலும், “2005-ல் நடந்த அதிபர் தேர்தலில் தமிழர்கள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் பிரபாகரன் தமிழ் மக்கள் தேர்தலைப் புறக்கணிக்கச் செய்தார். அதே நேரம் அவர்கள் தேர்தலில் தங்கள் பங்களிப்பை செய்திருந்தால் தமிழர்களின் மனநிலை என்னவென்பதை அறிந்து கொள்ள முடிந்திருக்கும். அந்த ஜனநாயக வாய்ப்பை தமிழ் மக்களுக்குத் தர பிரபாகரன் தவறி விட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

2005-ம் ஆண்டு நடைபெற்ற அந்த தேர்தலில், இலங்கையின் ஐந்தாவது அதிபராக, பிரதமராக இருந்த ராஜபக்சே வெற்றி பெற்றார். ராஜபக்சேவுக்கு 48,87,152 (50.29 சதவிகிதம்) வாக்குகளும், ரணிலுக்கு 47,06,366 (48.43 சதவிகிதம்) வாக்குகளும் கிடைத்தன. சுமார் 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ரணில் தோல்வி அடைந்தார். ஏறத்தாழ ஏழு லட்சம் தமிழ் வாக்காளர்கள் தேர்தலைப் புறக்கணித்த காரணத்தால், அவர்கள் வாக்களிக்கவே இல்லை என்பதை எண்ணிப் பார்க்கும்போது – விடுதலைப்புலிகள் சார்பாக அவசரப்பட்டு அன்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவின் விளைவுகள் எப்படி ஆயின; எங்கே போய் முடிந்தன; என்பதை எண்ணிப் பார்த்து நாம் மவுனமாக அழுவது யார் காதிலே விழப் போகிறது? நம்முடைய மவுன வலி தான் யாருக்குத் தெரியப் போகிறது? என்று கூறியுள்ளார் கருணாநிதி.

கருணாநிதி வேதனைக்கு என்ன காரணம்…

கடந்த சில நாட்களுக்கு முன்பு ஈழம்- மெளனத்தின் வலி என்ற பெயரில் நூல் ஒன்று வெளியிடப்பட்டது. அதில் பல்வேறு தரப்பினரும் ஈழம் குறித்த தங்களது கருத்துக்களைக் கவிதைகளாக பதிவு செய்துள்ளனர்.

இதற்குப் பதிலளிக்கும் வகையில்தான் முதல்வர் கருணாநிதி தனது வேதனையை வெளிப்படுத்தி தற்போதைய கடிதத்தை முரசொலியில் எழுதியுள்ளார்.

சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை விசாரிப்பதற்கு இலங்கை எதிர்ப்பு

031109sarathfonseka.jpgஇலங்கையின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரான கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுக்களுக்கான ஆதரமாக இலங்கை கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை பயன்படுத்தும் நோக்கில் அவரை விசாரிப்பதற்காக அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்பு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்று இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

இது தொடர்பாக இலங்கைக்கான அமேரிக்க தூதுவரிடம் இலங்கை வெளியுறவு அமைச்சர் றோஹித போகொல்லாகம அவர்கள் பேச்சு நடத்தியுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை, நேர்காணல் ஒன்றுக்காக வரும் புதனன்று வருமாறு அழைத்துள்ளது. இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு எதிரான மனித உரிமைகள் மீறல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரிக்கவே அது அவரை அழைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

இது குறித்து இன்று கொழும்பில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய அமைச்சர் றோஹித போகொல்லாகம அவர்கள், ”ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு கிடைத்திருக்கக் கூடிய அனைத்து தகவல்களும் அவர் இலங்கை இராணுவத்தின் தலைவர் என்ற வகையில் அவருக்கு கிடைத்த வசதிகளின் அடிப்படியிலேயே அவருக்கு கிடைத்திருந்தன, ஆகவே அவற்றை அவர் பிறருக்கு சட்ட ரீதியாக கூறுவதானால், அது குறித்து முன்னதாகவே இலங்கை அரசாங்கத்தின் அனுமதியைப் பெற்றிருக்க வேண்டும்” என்று கூறினார்.

 இந்த தகவல்கள் இலங்கையினதும் அதனது மக்களினதும் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்த தகவல்கள் என்பதால், அவற்றை எந்த சூழ்நிலையிலும், அவர் வெளியிடுவதை இலங்கை அரசாங்கம் அனுமதிக்காது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை இந்த விவகாரம் குறித்து இலங்கை மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகளினதும், உயர்மட்டத்தில் விரிவாக கலந்துரையாடப்பட்டிருப்பதால், அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத்துறை அது குறித்து, சரத் பொன்சேகா அவர்களை விசாரிக்கக் கூடாது என்றும் தாம் அமெரிக்காவின் இலங்கைக்கான தூதரிடம் கூறியிருப்பதாகவும் வெளியுறவுத் துறை அமைச்சர் கூறினார்.

இப்படியான ஒரு விசாரணைக்காக ஜெனரல் சரத் பொன்சேகா அழைக்கப்பட்டிருப்பதை, வைத்துப் பார்க்கும் போது ஜெனரல் பொன்சேகாவுக்கும், பாதுகாப்பு அமைச்சர் கோத்தாபாயவுக்கும் இடையில் பிளவு ஏற்பட்டிருப்பதாக கொள்ளலாமா என்று கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர் றோகித போகொல்லாகம அவர்கள், ” நான் அப்படி நினைக்கவில்லை” என்று பதிலளித்தார்.

யுத்தத்தில் இராணுவத்திற்கு கிடைத்த வெற்றி அதிஷ்டலாப சீட்டில் கிடைத்த வெற்றியல்ல- ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவில் தெரிவிப்பு

இராணுவத்தின் இந்த வெற்றி மிகவும் இலகுவாக, அதிஷ்டலாப சீட்டில் அதிர்ஷ்டம் கிடைத்தது போலானது என எடைபோட்டு விடக்கூடாது. அந்த வெற்றியின் உண்மை தன்மை குறித்து விடுதலைப் புலிகளுடனான போரில் ஈடுபட்டிருந்தோருக்கே தெரியும் என்று பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளுடனான மோதலின் போது சுமார் 5200 இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் படையினரில் 28000 பேர் காயமடைந்தனர். இராணுவத்தினரும் பொதுமக்களும் இணைந்திருக்காவிடின் என்னதான் இராணுவ தளபதியாக இருந்தாலும் , அரசியல் வாதியாக இருந்தாலும் இந்த வெற்றியை பெற்றுக்கொண்டிருக்கமுடியாது என்றும் அவர் சொன்னார். அமெரிக்காவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த 25ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள விகாரையொன்றுக்குச் சென்று உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு உரையாற்றிய அவர் தொடர்ந்தும் கூறியதாவது :

நான் முதன் முறையாக பௌத்த விகாரையொன்றில் உரை நிகழ்த்துகின்றேன். அதிலேதும் பிழை இருந்தால் மன்னிக்கவும். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் நான் என்ன நினைக்கின்றேன்? என்பது குறித்து இந்த விகாரையின் பிரதம தேரர் தர்மசிறியுடனான சந்திப்பின் போது தெளிவுபடுத்தினேன். அங்கு இதுவரையிலும் என்ன நடந்தது. எதிர்காலத்தில் என்ன நடக்க வேண்டும் என்பது தொடர்பில் அங்கு கலந்துரையாடினோம். அமெரிக்காவுக்கு நான் கடந்தமுறை வந்திருந்தபோது என்னைச் சந்தித்த சிலர் இன்றும் இவ்விடத்தில் கூடியிருக்கக் கூடும். அன்று நான் அவர்களிடம் என்ன உறுதியளித்தேன் என்று அவர்களுக்கு தெரியும் . இந்த வருடத்துக்குள் அதாவது 2009ஆம் ஆண்டுக்குள் விடுதலைப் புலிகளுடனான யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவேன் என்று நான் அன்று அவர்களிடம் உறுதியளித்தேன். அந்த உறுதிமொழியின் பிரகாரம் அதனை கடந்த மே மாதம் 18 ஆம் திகதி நிறைவேற்றினேன். அதற்காக நாம் பெரும் மகிழ்ச்சியடைகிறோம். நாட்டிற்குள் ஊடுருவியிருந்த பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்து எதிர்கால சந்ததியினர் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் வாழ வழிசமைக்கக்கூடிய நாடொன்றாக உருவாக்குவோம் என்னும் உறுதியினை நிறைவேற்றினோம்.

உறுதி மொழிகளை நிறைவேற்றுவதற்காக நாம் பல அர்ப்பணிப்புக்களை மேற்கொண்டோம். இந்த வெற்றி மிக இலகுவாகப் பெறப்பட்டதல்ல. அதற்காக பெரும் கஷ்டங்களைச் சந்தித்தோம். தைரியமாகச் செயற்படுவதற்காக பல பயிற்சிகளைப் பெற்றுக்கொண்டோம். அதன்மூலமாகவே இந்த வெற்றி கிட்டியது. நாட்டிலுள்ள பெருமளவானோருக்கு இந்த வெற்றி இலகுவாகக் கிடைத்ததொன்றாகத் தோன்றுகிறது. அதனால் தான் அந்த வெற்றியைப் பங்கிட்டுக்கொள்வதற்கு பலரும் முயற்சிக்கின்றனர். யுத்த வெற்றி தொடர்பில் பலரும் பலவற்றை பேசுகின்றனர். ஆனால் அந்த வெற்றியின் உண்மை தன்மை குறித்து விடுதலைப் புலிகளுடனான போரில் ஈடுபட்டிருந்தோருக்கே தெரியும்.

வெற்றியை எவ்வளவு பிரச்சினைகளுக்கு மத்தியில் பெற்றுக் கொண்டோம் எனும் உண்மையை அவர்கள் மாத்திரமே அறிந்திருக்க முடியும். அதிலும் விஷேடமாக இராணுவத்தினரே அறிந்திருக்க முடியும். இராணுவத்தினரின் அர்ப்பணிப்பு தொடர்ப்பில் இந்த இடத்தில் நான் தெரிவிக்காவிட்டால் அது எனது சேவைக்கு செய்யும் மாபெரும் துரோகமாகும்.

யுத்த காலத்தின் போது இராணுவத்தில் சுமார் ஒரு இலட்சம் பேர் இணைந்துகொண்டனர். அத்தொகையினர் இணைந்திருக்காவிடின் நாம் இன்னமும் வவுனியா பிரதேசத்திலேயே நின்றுகொண்டிருந்திருப்போம். அங்கிருந்து முன்னோக்கிச் செல்ல முடியாது போயிருக்கும். பொதுமக்கள் எமக்கு வழங்கிய ஆசிர்வாதம் மற்றும் கௌரவம் போன்றவையே எமது வெற்றிக்கு ஊன்றுகோலாக விளங்கியது.

இராணுவத்தில் இணைந்துகொண்டவர்களில் சுமார் 80ஆயிரம் பேர் இன்னமும் சேவையில் ஈடுபட்டுள்ளனர். ஏனைய 20 ஆயிரம் பேர் விடுமுறை இல்லாமையால் விட்டு சென்றிருக்கலாம். இராணுவத்தில் இணைந்துகொண்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் இல்லாவிடின் என்னதான் இராணுவ தளபதிகளாக அல்லது அரசியல்வாதிகளாகவே இருந்திருந்தாலும் இந்த வெற்றியினை அடைந்திருக்க முடியாது. இந்த காலகட்டத்திற்கு முன்னரும் இராணுவத்துக்கு ஆட்சேர்ப்பு செய்யும் யோசனை இருந்தது. இருப்பினும் வருடத்துக்கு 3000 பேரையேனும் இணைத்துக்கொள்ள முடியாது போயிற்று. ஆனால் புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின் போது வருடத்துக்கு 40ஆயிரம் பேர் இராணுவத்தில் புதிதாக இணைந்துகொண்டனர் அதுவும் நாம் பெற்றுக்கொண்ட வெற்றி என்றே கூறவேண்டும்.

யுத்த வெற்றியின் போது புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார், அதனால் அனைத்தும் முடிந்துவிட்டது எனக்கூறி சந்தோசமாக காலத்தை கழிப்பதை நாம் விரும்பவில்லை. பிரபாகரன் என்றொருவர் இருக்கவில்லை. கடந்த 30 வருடங்களுக்கு முன்னர் அவர் உருவாக்கப்பட்டார். இதனை மறந்துவிடுவதற்காக எமது பிரஜைகள் கடந்த 30 வருடங்களாக எவ்வளவு கஷ்டப்பட்டனர். நாம் பல்வேறு துன்பங்களை எதிர்கொண்டதுடன் சவால்களுக்கும் முகம்கொடுத்தோம். அவற்றிலிருந்து விடுதலைபெற எவ்வளவு கஷ்டப்பட்டோம். அர்ப்பணிப்புக்களை செய்தோம் என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன்.

எமது அர்ப்பணிப்புகளை இந்த பரம்பரையினர் மறந்தால் அடுத்த பரம்பரையினர் கட்டாயமாக இவ்வாறான பிரபாகரன்களை சந்திப்பார்கள் என்பது எனது அதீத நம்பிக்கையாகும். அதனால், தேரர் என்னிடம் சொன்னது போன்று அனைவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை நானும் ஏற்றுக் கொள்கிறேன். ஒற்றுமையை கட்டிக்காப்பது மிக மிக அவசியமாகும். அவ்வாறாயின்,அனைத்துத் தரப்பினரும் அனைவரது தேவைகளையும் கருத்திற் கொண்டு எல்லாப் புறத்திலிருந்தும் வரும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டு உண்மையானவர்களாக செயற்பட வேண்டும். அப்படி நடந்தால் தான் எமது நாட்டை தொடர்ந்தும் பாதுகாத்துக் கொள்ள முடியும் என்பதை நான் உறுதியாக நம்புகின்றேன்.

எம்மால் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டிய சேவைகளை நாம் சரிவர செய்து வருகின்றோம். சீருடையணிந்த ஜெனரல்கள் இந்த சேவையிலேயே இருந்து விடமுடியாது. நான் ஓய்வு பெறும் வயதையும் தாண்டி மேலதிகமாக 4 வருடங்கள் சேவையாற்றியுள்ளேன். இருப்பினும் நாடு முழுமையானளவில் பயனடைந்து விட்டது என்று கூறுவதற்கில்லை. பிரபாகரன் கொல்லப்பட்டு விட்டார் என்பதால் நாட்டின் பாதுகாப்பு 100 வீதமாக முழுமையடைவில்லை. யுத்தத்தின் போது இடம்பெயர்ந்த பொதுமக்கள் அவர்களின் சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுப்பதன் மூலமே பயங்கரவாதம் எனும் நோய்க்கிருமி மீண்டும் நுழைய விடாமல் தடுக்க முடியும். நலன்புரி முகாம்களில் தற்போது தங்கியுள்ள பொதுமக்களுடன் ஆயிரக்கணக்கான புலி உறுப்பினர்களும் தங்கியுள்ளனர். அவர்களை அடையாளம் கண்டு கைது செய்யும் அதேவேளை, அப்பாவிப் பொதுமக்களை மீளக் குடியேற்றி அவர்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகளை முன்னெடுப்பதால் மட்டுமே நாம் வெற்றிகொண்ட யுத்தத்தில் வெற்றியை கண்டோம் என்று மகிழ்ச்சியடைய முடியும்.அதனால் அந்த கொள்கையை நோக்கி நாம் பயணிக்கவேண்டும்.

நாட்டின் அபிவிருத்திக்கும் பாதுகாப்பிற்கும் எடுக்கக்கூடிய நடவடிக்கை இருக்குமாயின் நாட்டின் பிரஜை என்றவகையில் அதனை நடைமுறைப்படுத்துவது அவர்களின் கடமையாகும். பெற்றுக்கொள்ளப்பட்ட வெற்றி தொடர்பில் கதைத்தே காலத்தை கழிப்பதை விட எதிர்காலத்தில் என்ன நடக்கபோகிறது என்பது தொடர்பில் கவனம் செலுத்துவது மிக முக்கியமானதாகும்.

யுத்த காலத்தின் போது நாட்டின் எதிர்காலம் குறித்து கவலையுற்றவாறே எதிர்வரும் காலங்களிலும் நாடு தொடர்பில் கவனம் செலுத்தி அதனை சரியான திசையில் கொண்டு செல்வதா? அல்லது கொண்டு செல்லவேண்டுமா? நாட்டிற்கான பாதுகாப்பை வழங்குவதா? என்பது தொடர்பில் அவதானம் செலுத்தவேண்டும். அதன் மூலம் நாட்டிற்கு சேவையாற்றினோம் என்ற திருப்தியை அனைவரும் உணரவேண்டும்

வீரகேசரி நாளேடு 10/29/2009

உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்ளப் போவதில்லை : பேராசிரியர் சிவத்தம்பி

24prof-karthgesu.jpgதமிழக அரசினால் நடத்தப்படவுள்ள உலகத் தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் தான் கலந்து கொள்ளப் போவதில்லை என்று இலங்கை தமிழ் ஆய்வாளரான பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி கூறியுள்ளார்.

இலங்கையில் தமிழர் அரசியல் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் திட்டவட்டமான நிலைப்பாடு எதனையும் எடுக்காதது குறித்து,  இலங்கை பலத்த விமர்சனம் இருப்பதாக கூறுகின்ற சிவத்தம்பி அவர்கள்,  இந்த நிலையில் தான் உலக தமிழ் செம்மொழி ஆய்வு மாநாட்டில் கலந்து கொள்வது சிரமமான விடயமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். தனது நிலைப்பாடு தொடர்பாக மாநாட்டு ஒருங்கிணைப்பாளரான இராஜேந்திரன் அவர்களுக்கு தான் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.  உலகத் தமிழர் தலைவராக தன்னைக் கொள்ளவேண்டும் என்று விரும்புகிற கருணாநிதி அவர்கள், இந்த விவகாரத்தில் ஒரு சாதகமான நிலைப்பாட்டினை எடுத்திருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

செம்மொழி மாநாடு நடத்துவது மிகவும் பயனுள்ளது என்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இல்லாத போதிலும், அதில் அனைவரும் கலந்துகொள்வதற்கான சூழ்நிலையும் அவசியம் என்றும் பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் கூறுகிறார்.  ஆனால், தமிழ் ஆய்வு மாநாட்டை அரசியலாக பார்க்கக் கூடாது என்று கூறுகிற தமிழக திட்டக்குழுவின் துணைத் தலைவரான நாகநாதன் அவர்கள், சிவத்தம்பியின் கருத்துடன் முரண்படுகிறார்.

இதேவேளை இந்த மகாநாட்டைப் புறக்கணிப்பது ஒரு தமிழ் அறிஞருக்கு அல்லது பேராசிரியருக்கு ஏற்புடையது அல்ல என கவிஞர் மு. மேத்தா தெரிவித்துள்ளார். எனினும் பேராசிரியரின் முடிவை ஆதரித்துள்ள கவிஞர் இன்குலாப் அவரது செய்தி மகிழ்ச்சியாகவும் ஆறுதலாகவும் இருப்பதாக தெரிவித்துள்ளார். 

நன்றி: வீரகேசரி 25.10.2009

மீள்குடியேற்றத்தைத் துரிதமாக்க உதவியது தமிழக எம்.பீ.க்களின் வருகை : தினமுரசு

IDPs_TN_Delegationபத்து எம்.பீ.க்களைக் கொண்ட தமிழக எம்.பீ.க்கள் குழுவின் ஐந்து நாள் வருகை எழுப்பிய சலசலப்புகள் இன்னமும் ஓய்ந்துவிடவில்லை. இந்தியாவின் தமிழகத்திலும், இலங்கையிலும், இலங்கையின் தமிழ் மக்களின் வாழ்விடங்களிலும் வருகை தொடர்பான வாதப்பிரதிவாதங்கள் இன்னமும் தொடர்ந்த வண்ணமே இருக்கின்றன. தி.மு.க.வைச் சேர்ந்த ஐந்து பேர், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நான்கு பேர், சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த தொல்.திருமாவளவன் ஆகியோரே இலங்கைக்கு வந்து போன பத்து எம்.பீ.க்களாவர். கடந்த ஒன்பதாம் திகதி இலங்கை மண்ணில் கால் பதித்தார்கள். கடந்த பதினான்காம் திகதி தமிழகம் போய்ச் சேர்ந்துவிட்டார்கள். இலங்கையில் தங்கியிருந்த நாட்களில் கப்சிப் பென வாய் பொத்திக் கருத்துக் கூறுவதைத் தவிர்த்தமை, அவர்கள் கட்டுப்பெட்டிகளாகவே இங்கு வருகை தந்திருப்பதை உணர்த்தியது. தமிழகம் திரும்பி, தமது வருகை தொடர்பான ஒன்பது பக்க அறிக்கையை முதல்வர் கருணாநிதியிடம் கையளித்தனர். அதற்கு முன்னதாக முதல்வரே சென்னை விமான நிலையம் சென்று தமிழகக் குழுவை வரவேற்றமையும் ஒரு வகையில் அர்த்தம் பொதிந்த ஒன்றுதான். சென்னை விமான நிலையத்திலும் கூட ஊடகவியலாளர்கள், தமிழக எம்.பீ.க்களின் வாயைக் கிளற படாதபாடு பட்டார்கள். சர்வமும் கப்சிப் மயமாகவே கழிந்து போனது.

ஒன்பது பக்க அறிக்கையின் சாராம்சத்தைச் சொன்னபோது மட்டும் கலைஞர் வாயைத் திறந்தார். இலங்கையின் வடபகுதி முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் 58 ஆயிரம் தமிழர்கள் இரண்டு வாரங்களில் விடுவிக்கப்படுவார்கள் என்று இரத்தினச் சுருக்கமாகச் சொன்னார். ஏனையவர்களும் விரைவில் விடுவிக்கப்படுவார்களென்று இலங்கை அரசு உறுதியளித்திருக்கிறது என்றும் சொன்னார். 58 ஆயிரம் பேரை விடுவிப்போமென்று சொல்லவே இல்லை என்று மறுத்தலித்தார் அமைச்சர் யாப்பா அபேவர்த்தன. இலங்கை விவகாரங்கள் தொடர்பாகப் பேசவல்ல அரசாங்க அமைச்சர் அவர்.

சுமார் 1,30,000 பேரை இம்மாத முடிவுக்குள் மீளக் குடியமர்த்தி விடுவோம் என்று உறுதியளித்திருக்கிறார் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ். வவுனியா மெனிக்பாம் முகாமுக்குத் தமிழக எம்.பீ.க்கள் குழு சென்றிருந்தபோது திருமதி சார்ள்ஸைக் கண்ணீர் விட்டழ வைத்தார் டி.எஸ்.பாலு என்று இந்தியப் பத்திரிகைகள் தெரிவித்திருந்தன. அதனைச் சில இலங்கைப் பத்திரிகைகள் மறு பிரசுரம் செய்திருந்தன. டி.எஸ்.பாலு தமிழ்நாட்டின் ஸ்ரீபெரம்புதூர் தொகுதி எம்.பீ. ராஜீவ் காந்தி புலிகளின் தற்கொலைக் குண்டுத்தாரியினால் கொல்லப்பட்ட இடம் ஸ்ரீபெரம்புதூர். இதே டி.எஸ்.பாலுதான் தமிழகக் குழுவுக்குத் தலைமை தாங்கி வந்தார். இலங்கையின் பல இடங்களில் கேள்வி கேட்க முனைந்த ஊடகவியலாளர்கள் மீது எரிந்து விழுந்தாரென்றும் இலங்கைப் பத்திரிகைகள் சில இவர் மீது எரிந்து விழுந்திருக்கின்றன. யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த சந்திப்பொன்றின்போது யாழ்.பல்கலைக்கழகத் துணைவேந்தர் சண்முகலிங்கத்தை இவர் பேசவிடாமல் தடுத்தாரென்றும் யாழ் பத்திரிகைகள் பொரிந்து தள்ளியிருந்தன.

இலங்கைக்கு வந்த குழு, இந்திய மத்திய அரசில் அங்கம் வகிக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு. அது சர்வகட்சிக் குழுவல்ல. தமிழக மாநில ஆளும் கூட்டணியின் சார்புக்குழு. தமிழக எம்.பீ.க்கள் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் விடுத்த வேண்டுகோளை அடியொற்றியே இந்தக் குழு இலங்கை வந்தது. எனவே தமிழக எம்.பீ.க்கள் குழுவின் வருகையை வெறும் கண்துடைப்பு நாடகமென தமிழக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியிருக்கின்றன. இப்படித்தான் புலி இயக்க ஆதரவாளர்களான வைகோ, ராமதாஸ், பழ நெடுமாறன் உள்ளிட்ட அனைவரும் குற்றம் சாட்டியிருக்கின்றனர். புலிகளுக்காகவே அண்மைக் காலம்வரை ஆர்ப்பரித்து வந்த சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவனும் வாயைத் திறக்க மறுத்தமையும் கவனத்துக்குரிய விடயம்தான். நீங்கள் பிரபாகரனுடன் இருந்திருந்தால் கொல்லப்பட்டிருப்பீர்கள் என்று திருமாவளவனிடமே கைநீட்டிச் சுட்டிக்காட்டி ஜனாதிபதி சொன்னாரென்று கூட செய்திகள் வெளிவந்தன. அது வெறும் பகிடி என்று திருமாவளவனும் பின்னர் தமிழகச் செய்தியாளர்களிடம் பகிடி விட்டிருக்கிறார்.

இலங்கை, இந்திய மற்றும் தமிழக அரசுகளுக்கிடையில் ஏற்பட்ட ஒரு புரிந்துணர்வின் அடிப்படையிலேயே தமிழக எம்.பீ.க்களின் இலங்கை வருகை அமைந்திருந்தது என்பதற்கு அவர்கள் அளவோடு கருத்துகளைக் கூறியமை குறிப்பிட்டுக் காட்டுகிறது. இதனை வெளிப்படையாகவே இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ் புதுடில்லிச் செய்தியாளர்களிடம் அண்மையில் தெரிவித்திருந்தார். இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையில் மீள்குடியேற்றம் தொடர்பில் நெருங்கிய உறவு உள்ளதாக நிருபமாராவ் தெரிவித்திருந்தார். இதற்கும் மேலாக தமிழக எம்.பீ.க்கள் குழு சமர்ப்பித்த ஒன்பது பக்க அறிக்கை முகாம்களிலுள்ள மக்கள் எதிர்கொள்ளும் அவதிகளை அச்சொட்டாக வெளிப்படுத்தியிருந்தது. எந்த ஒளிவுமறைவுமின்றி முகாம் மக்களின் கஷ்டங்களை மிகத் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தது. முகாம்களிலுள்ள மக்களை விடுதலை செய்யுங்களென்ற வார்த்தைப் பிரயோகமே அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாகவும் சிங்கள அரசு தமிழ் மக்களை முட்கம்பிச் சிறைக்குள் தள்ளிக் கொடுமைப்படுத்துகிறது என்றும் தமிழகக் குழு கண்டிக்க வேண்டுமென்று எதிர்பார்த்தவர்களுக்குக் கிடைத்தது ஏமாற்றமே. தமிழ் தேசியத்தை முன்தள்ளும் இலங்கை, இந்திய ஊடகங்களின் கருத்துகளில் இந்த எதிர்பார்ப்பின் தோல்வியைக் காண முடிந்தது. இதைப் போன்றே இலங்கை அரசைத் தமிழகக் குழு கண்டிக்க வேண்டுமென்று எதிர்பார்த்த இலங்கை மற்றும் தமிழக எதிர்க்கட்சிகளுக்கும் கிடைத்தது ஏமாற்றமே.

தங்கக்கூடு என்றாலும் அடைத்து வைப்பது நியாயமல்ல என்ற தமிழக முதல்வர் வெளிப்படுத்திய அதே ஆதங்கத்தை தீர்க்கும் முயற்சியில்தான் இந்திய, தமிழக அரசுகள் ஈடுபட்டிருக்கின்றன. கண்ணிவெடி அகற்றல் என்று சிங்கள அரசு சொல்வது, வேண்டுமென்றே புலிகள் என்று சந்தேகப்படுபவர்களைக் கொல்வதற்குத்தான். முகாமில் மெல்ல, மெல்ல சித்திரவதைப்படுவதை விட தங்களது இடம் நோக்கிச் செல்கையில் கண்ணிவெடியில் உயிர் துறப்பதே மேல் என்றுதான் முகாமிலுள்ள தமிழர்கள் கருதுகின்றனர் என்று நடிகர் விஜயகாந் கருத்துத் தெரிவித்திருந்தார். தேசிய முற்போக்குத் திராவிடக் கழகத்தின் தலைவரான இந்த நடிகர், இலங்கைத் தமிழர்களை வைத்துத் தமிழகத்தில் அரசியல் நடத்த முனைகிறார் என்பதைத்தான் இவரது கருத்துகள் காட்டுகின்றன. இதைத்தான் அனைத்துத் தமிழக மற்றும் இலங்கை எதிர்க்கட்சிகளும் நடத்த முனைகின்றன.

புலிகள் தோற்கடிக்கப்பட்டமைக்கு இலங்கை ஜனாதிபதியினதும் இலங்கைப் படைகளினதும் உத்தி மட்டும் காரணமல்ல. அமெரிக்காவும், இந்தியாவும் அளித்த உதவிகளும் காரணம்தான். பாகிஸ்தான், சீனா போன்ற நாடுகள் வெளிப்படையாகவே ஆயுத உதவிகளை வழங்கின. அமெரிக்காவும் இந்தியாவும் புலிகளின் ஆயுதக் கடத்தல் பற்றிய புலனாய்வுத் தகவல்களை அனுப்பியதோடு, தத்தமது நாடுகளில் புலிகளின் செயற்பாடுகளையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததன் மூலம் இலங்கைக்கு உதவின.

பயங்கரவாத அமைப்புகள் என்று கூறப்படுவவை அழித்தொழிக்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் பிந்திய கொள்கை. அதேநேரம் தமிழ் மக்களின் அபிலாஷைகள் தீர்க்கப்பட வேண்டுமென்பதும் இந்திய மத்திய அரசின் எதிர்பார்ப்பாகும். இதுவே தமிழக அரசின் பொறுப்பும், கடமையும் எதிர்பார்ப்பும். அதனைத்தான் தமிழகத்திலிருந்து வந்த எம்.பீ.க்களின் குழு செய்திருக்கிறது. அதன் வெளிப்பாடாக இலங்கை அரசு முகாம்களிலுள்ள மக்களின் மீள்குடியேற்றத்தைத் துரிதப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக மேலும் ஐநூறு கோடி ரூபாவை இந்திய அரசு அளிக்கவுள்ளது. சர்வதேச சமூகமும் மீள்குடியேற்றத்துக்கெனத் தாராளமாக உதவுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. முகாம் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் தீர்ந்ததும் இலங்கைத் தமிழ் மக்களின் அதிகாரப் பகிர்வுக்கு இந்தியாவும், தமிழகமும் அழுத்தம் கொடுக்கும். அதுவே நடக்கப் போகிறது. நந்திக்கடலில் செத்துப்போன புலிகளுக்கு இனியும் இந்தியா ஒக்சிசன் கொடுக்காது.

அண்டை நாடான சீனாவோடு உறவுகளைச் சுமுகமாக வைத்திருக்க இந்தியா விரும்புகிறது. சீனாவுக்கும் அந்த நோக்கம் இருக்கிறது. இருந்தாலும் இரு நாடுகளுக்குமிடையிலும் பிரச்சினைகளும் இருக்கின்றன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளைக் கொண்ட பிறிக் (BRIC) என்ற அமைப்பிலும், ஆறு நாடுகளின் ஷங்காய் ஒத்துழைப்பு அமைப்பிலும் இந்தியாவும் சீனாவும் அங்கம் வகிக்கின்றன. இதேவேளை அருணாசலப் பிரதேசம், காஷ்மீரின் சில பகுதிகள் உட்பட எல்லைப் பிரச்சினையும் இரு நாடுகளுக்கிடையிலும் இருக்கின்றன. இரு நாடுகளும் ஐக்கியமாகச் செயற்பட விரும்பினாலும் பிரச்சினைகளும் இருக்கின்றன. அண்டை நாடாள இலங்கையில் செல்வாக்கைச் செலுத்துவது என்பது இந்தியா, சீனா இரு நாடுகளுக்குமே முக்கியமானதாகும். எனவேதான் இலங்கைக்கு நான் முந்தி, நீ முந்தி என்று இந்தியாவும் உதவுகிறது. சீனாவும் உதவுகிறது. இதனால்தான் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் இந்தியாவும் அடக்கி வாசிக்கிறது. தமிழகமும் அடக்கி வாசிக்கிறது.

‘நூல்தேட்டம்’ நூலகவியலாளர் என்.செல்வராஜா : நேர்காணல் ஜெ கவிதா

Selvarajah Nஉங்களைப் பற்றி எங்களுடன்…………….

இலங்கையில் நீர்கொழும்பு பிரதேசத்தில் தண்டுகம என்ற கிராமத்தில் 20.10.1954இல் பிறந்த நான், நீர்கொழும்பில் என் இளமைக்காலத்தின் 16 வயதுவரை வாழ்ந்தேன். நீர்கொழும்பு விவேகானந்த (விஜயரத்தினம்) மகா வித்தியாலயம், புனித மரியாள் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றேன். எனது தந்தையார் அமரர் வ.நடராஜா, நீர்கொழும்பின் பிரபல P.W.D ஓவர்சியராக இருந்தவர். நீர்கொழும்பு இந்து வாலிபர் சங்கத்தின் தலைவராகவும் ஒரு காலத்தில் பணியாற்றியவர். நிறைந்த நூலார்வம் மிக்கவர். தந்தையாரின் மரணத்தின் பின்னர் நீர்கொழும்பையும் விட்டுப் பிரிந்து, தாயாருடன்; எழுபதுகளில் யாழ்ப்பாணம் சென்று என் உயர் கல்வியைத் தொடர்ந்து, 1976இல் ஒரு நூலகராக உருவாகினேன்.

நூலகவியலாளர்களான எஸ்.எம்.கமால்தீன், கலாநிதி வே.இ.பாக்கியநாதன் ஆகிய உன்னதமான சிற்பிகளால் வடிக்கப்பெற்று இன்று ஒரு நூலகவியலாளனாக ஈழத்தமிழர்களிடையே வலம்வருகின்றேன். இலங்கையில் இருந்த வேளையில், சுன்னாகம் இராமநாதன் மகளிர் கல்லூரியின் பாடசாலை நூலகராக 1978இல் முதல் நியமனம் பெற்றேன். பின்னர் புங்குடுதீவில் பிராந்தியத் தலைமையகத்தைக் கொண்டிருந்த சர்வோதய சிரமதான இயக்கத்தின் வடமாகாண நூலகராக 1979இல் இணைந்து 1983 வரை அங்கு பணியாற்றினேன். இக்காலகட்டத்தில் 1982இல் ஐக்கிய நாடுகள் சபையின் தொண்டர் சேவையில் (UNDP-UNV) இந்தோனேஷிய நாட்டில் ஒருவருடகாலம் கிராம நூலக அமைப்பினைக் கட்டியெழுப்பும் பணிக்கு சர்வோதய இயக்கத்தின் சிபார்சின் பேரில் சென்றிருந்தேன். பின்னர் இலங்கை உள்ளுராட்சி சேவை நூலகராக – திருகோணமலை மாவட்டத்தின் முள்ளிப்பொத்தானை கிராமத்திலும் ஒருவருடகாலம் பணியாற்றினேன். 1983 முதல் 1989 வரை, யாழ்ப்பாணம் திருநெல்வேலியில் அமைந்துள்ள ஈவ்லின் இரத்தினம் பல்லினப் பண்பாட்டு நிறுவனத்தின் ஆய்வு நூலகராக, அங்கு பேராசிரியர் கா.இந்திரபாலா இயக்குநராக இருந்தவேளையில் – பொறுப்பேற்றேன். அவ்வாண்டில் சடுதியாக அவர் புலம்பெயர்ந்து அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற பின்னர் அந்நிறுவனத்தின் இயங்கலுக்கான முழுப்பொறுப்பையும் படிப்படியாக ஏற்று 1989 வரை அந்நிறுவனத்தை யாழ்ப்பாணக் கல்லூரியின் சார்பில் கொண்டு நடத்தினேன்.

விடுதலை இயக்க, அரசியல், மற்றும் போர் நெருக்கடிகள் – குறிப்பாக இந்திய இராணுவத்தின் அடாவடித்தனங்கள், மற்றும் பொருளாதாரச் சிக்கல்களுக்கு மத்தியிலும்- அந்த நிறுவனத்தை வழிநடத்திச் சென்றமை எனக்கு நிறைந்த வாழ்வியல் அனுபவத்தைத் தந்தது. பின்னர் 1989இல் கொழும்புக்கு குடும்பத்துடன் உள்ளகப் புலப்பெயர்வினை மேற்கொண்டிருந்தேன். அங்கும் அமரர் தமிழவேள் இ.க.கந்தசாமி அவர்களின் வேண்டுகோளின்பேரில், கொழும்புத் தமிழ்ச் சங்கத்தின் பாரிய நூலகச் சேர்க்கைகளை ஒழுங்குபடுத்தும் பணியில் சேவை அடிப்படையில் ஈடுபடலானேன். அதேவேளையில் அமரர் சோமகாந்தனின் அழைப்பை ஏற்று இந்து சமய, கலாச்சார அலவல்கள் அமைச்சின் நூலகத்தினை புனரமைக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தேன். அங்கு எனது பணியினை அவதானித்த அமரர் நீலன் திருச்செல்வம் அவர்கள், எனது பணி நிறைவுற்றதும், தான் இயக்கும் International Centre for Ethnic Studies என்ற சமூக ஆய்வியல் நிறுவனத்தின் ஆய்வு நூலகராகப் பணியாற்ற அழைப்புவிடுத்தார். அவரது அழைப்பையேற்று சில காலம் அவரது நூலகத்தின் ஒழுங்கமைப்பிலும் பணியாற்றினேன். பின்னர் 1991இல் புலம்பெயர்ந்து இங்கிலாந்துக்கு வந்து இங்கு நிரந்தர பிரஜாவுரிமைபெற்று, பிரித்தானிய தபால் திணைக்களத்தின் அந்நிய நாணயப் பிரிவில் அலுவலராகப் பணியாற்றி வருகின்றேன்.

அங்கு நூல்தேட்டம் தொகுப்பினை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை உங்களுக்கு எவ்வாறு ஏற்பட்டது?

லண்டன் வரும் முன்னரே யாழ்ப்பாணத்திலிருந்துகொண்டு “நூல்தேட்டம்” என்ற பெயரில் காலாண்டுச் சஞ்சிகையொன்றை வெளியிடும் பணியில் ஏற்கெனவே 1990இல் ஈடுபட்டிருந்தேன். ஒவ்வொரு இதழிலும் 50 நூல்களைப் பற்றிய சிறு குறிப்பரையுடன் தொகுத்து, தமிழ் நூலகர்கள் அனைவருக்கும் அவை பற்றிய தகவல் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே எனது அவாவாக இருந்தது. அவ்வாறாக நூல்தேட்டம் சஞ்சிகையின் இரண்டு இதழ்கள் வெளிவந்தன. பின்னர் நான் கொழும்புக்கு வந்தபோது, அங்கு புத்தகச் சந்தையில் காணப்பெற்ற ஈழத்துத் தமிழ் நூல்களின் எண்ணிக்கையினைப் பார்த்துப் பிரமித்து விட்டேன். அதில் பத்தில் ஒரு பங்கினைக்கூட யாழ்ப்பாணத்தில் நான் அதுவரை அறிந்திருக்கவில்லை.

இலங்கையில் தமிழ் நூலகர்களுக்கு உள்ள பெரும் சவாலாக அமைந்திருப்பது – ஈழத்தவரின் நூல்களைத் தேடிப்பெற்றுத் தமது நூலகங்களில் சேகரிப்பதாகும். ஈழத்துத் தமிழ் படைப்பாளிகள் தமது நூல்களை இலங்கையில் மட்டுமல்லாது இந்தியாவிலும் வெளிநாடுகளிலும் வெளியிட்டு வருகிறார்கள். இவற்றைப் பற்றிய தகவல்கள் ஒருங்குசேர எங்குமே கிடைப்பதில்லை. இலங்கையின் பிரதான நூலகங்களுக்கு அவற்றை அனுப்பிவைக்கவேண்டும் என்ற அக்கறையோ, அந்நூலகங்கள் அவற்றைப் பெற்றுக்கொள்ளும் வகையில் தமிழ்ப் புத்தகசாலைகளில் அவற்றை விற்பனைக்கு வைக்கவேண்டும் என்ற ஆர்வமோ அவர்களிடம் பொதுவாகக் காணப்படுவதில்லை. கொழும்பில் எனது பார்வைக்கெட்டிய பெருந்தொகையான நூல்களின் இருப்பைப் பார்த்ததும், எனது நூல்தேட்டம் சஞ்சிகையின் வரவை நிறுத்தி அதனை பாரிய நூல்தொகுதிகளாகவே வெளியிடவேண்டும் என்று தீர்மானித்தேன். சஞ்சிகையாக வெளிவந்து குறுகிய கால வாழ்வுடன் சில நூறு நூல்களை மட்டும் பதிவுசெய்துவிட்டு ஒதுங்கிவிடாது, ஒரு காத்திரமானதும் முழுமையை நோக்கியதுமான ஆவணத்தொகுப்பாக அதை உருவாக்கி எமது இனத்தின் பார்வைக்கும்- உலகத்தின் பார்வைக்கும் வைக்கவேண்டும் என்று தீர்மானித்தேன். புலம்பெயர்வாழ்வின் குடும்பப் பொருளாதார நிலையும், குடும்பத்தினரின் மேலான ஆதரவும் எனக்குச் சாதகமாயிற்று. ஒவ்வொரு தொகுதியும் 1000 ஈழத்துத் தமிழ் நூல்கள் பற்றிய விரிவான தகவல்களைக் கொண்டதாக இத்தொகுப்பு பரிணாமம் பெற்றது. இன்று ஆறாவது தொகுதியில் வந்து நிற்கின்றது. அதாவது 6000 நூல்களைத் தொகுத்துவிட்ட திருப்தியுடனும், இன்னும் எத்தனையோ ஆயிரங்கள் தொகுக்கப்படவேண்டி இருக்கின்றனவே இவை என் வாழ்நாளில் சாத்தியமாகுமா என்ற ஏக்கத்துடனும் உங்கள் முன் நிற்கின்றேன்.

ஈழத்துத் தமிழ் நூல்களுக்கு மாத்திரம் தான் நூல்தேட்டமா அல்லது அண்டை நாட்டு தமிழ் நூல்களுக்கும் அதனை விஸ்தரித்திருக்கிறீர்களா?

நூல்தேட்டத்தின் மூன்றாவது தொகுதியின் தொகுப்புப் பணியில் ஈடுபட்டிருந்த வேளையில், மலேசியாவில் கோலாலம்பூரில் அமைந்திருந்த மலாயாப் பல்கலைக்கழகத்தின் இந்திய ஆய்வியல் துறையில் ஒரு தமிழ் நூலகம் இருப்பதாகவும் அங்கு பல அறியப்பெறாத ஈழத்தவர்களின் நூல்கள் பாதுகாக்கப்பெற்றிருப்பதாகவும் அறிந்து அங்கு சென்றேன். மலாயாப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையில் தான் அமரர் தனிநாயகம் அடிகளார் பணியாற்றினார். அங்கிருந்து தான் உலகத் தமிழ் ஆராய்ச்சி மகாநாட்டை ஒழுங்குபடுத்தினார். அத்தகைய பெருமை பெற்ற அந்த நூலகத்தில் நான் பல ஈழத்தவர்கள் மலாயா மண்ணில் புலம்பெயர்ந்து வாழ்ந்தபோது வெளியிட்ட தமிழ் ஆங்கில நூல்களை பார்வையிட நேர்ந்தது. அவர்கள் பற்றி எந்தவொரு ஈழத்து இலக்கிய ஆய்வாளர்களும் குறிப்பிட்டிருக்கவில்லை. இதைப்பற்றி ஒரு விரிவான கட்டுரையும் எழுதியிருந்தேன். அது தினக்குரலில் தொடராக 1.5.2005 முதல் 22.5.2005 வரை நான்கு வார இதழ்களில் வெளிவந்திருந்தது.

அங்கு நான் ஆய்வில் ஈடுபட்டிருந்த வேளையில் என்னைச் சந்தித்த இந்திய ஆய்வியல்துறைத் தமிழ்ப்பிரிவின் தலைவர், மற்றும் மலேசிய எழுத்தாளர் சங்கத் தலைவர் போன்றோர், மலேசிய சிங்கப்பூர் தமிழ் நூல்களுக்கும் ஒரு நூல்தேட்டத் தொகுதியை ஒதுக்கும்படி கேட்டிருந்தனர். அவர்களின் வேண்டுகோளை ஏற்று மலேசிய-சிங்கப்பூர் நூல்தேட்டம் என்ற தலைப்பில் தனியான ஒரு தொகுதியை 2000 நூல்கள் பற்றிய குறிப்புகளுடன் வெளியிட்டிருந்தேன். ஈழத்து நூல்தேட்டம் போலல்லாது, மலேசிய நூல்தேட்டம் வெளியிட நான் செலவிட்ட பணத்தொகை அந்நூல்களின் விற்பனைமூலம் ஒரு வருடத்திலேயே பெற்றுக்கொள்ள முடிந்தது. தற்போது அதன் இரண்டாவது தொகுதியின் தொகுப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகின்றேன்.

மலேசிய நூல்தேட்டம் போன்றே தனித்தொகுதியாக ஈழத்தமிழரின் ஆங்கில நூல்களின் குறிப்புரையுடன் கூடிய தொகுப்பாக ஆங்கில மொழியிலமைந்த நூல்தேட்டம் (Noolthettam) தொகுதியொன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாண்டு (2009) இறுதிக்குள் அந்நூல் உலகெங்கிலும் உள்ள நூலகங்களுக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது. இதன்மூலம் ஈழத்தமிழர் பற்றிய- அவர்கள் இலங்கையின் பல்வேறு கட்டமைப்புகளுக்கு சிங்கள அறிஞர்களுடன் இணைந்து ஆற்றிய பணிகள் பற்றிய தகவல்களை தமிழர் அல்லாதவர்கள் அறிந்துகொள்ள வாய்ப்பு நிச்சயம் ஏற்படும்.

நூல்தேட்டம் தொகுப்பு முயற்சி பொருளாதார ரீதியில் உங்களுக்கு திருப்திகரமாக அமைந்துள்ளனவா?

எனது அனுபவத்தின்படி ஈழத்தமிழரான எம்மவர்களிடம் ஒரு பாரிய குறைபாடு உள்ளது. கவலைக்குரிய விடயமும் அதுதான். தமக்குத் தனிப்பட்ட முறையில் அல்லாது, தமது சமூகத்துக்கு பொதுவாக நன்மை பயக்கவேண்டிய எதையும் மற்றவர்களே தமது செலவில் செய்யவேண்டும் என்று கருதுவதுடன், தாம் பார்வையாளராகவும் விமர்சகர்களாகவும் மாத்திரம் இருப்பதே வசதி என்று நினைப்பது அந்தப் பண்பாகும். இன்றுவரை எந்தவொரு தனிமனிதரோ, பொது, சமூக, அறிவியல் நிறுவனங்களோ எனது நூல்தேட்டம் தொகுப்புப் பணியின் பொருளாதாரப் பழுவை தாம் கூட்டாக ஏற்க முன்வரவேயில்லை. குறைந்த பட்சம் ஈழத்து படைப்பாளிகள் ஒவ்வொருவரும் நூல்தேட்டத்தின் பிரதிகளை புத்தகசாலைகளில் விலைகொடுத்து வாங்கியிருந்தால், அல்லது இலங்கையிலுள்ள தமிழ் நூலகங்கள் அனைத்தும் தமது நூலகங்களுக்காக அதனை உசாத்துணை நூலாக வாங்கிப் போட்டிருந்தால்கூட அது மறைமுகமாக எனது பணிக்கு உதவுவதாகவே அமைந்திருக்கும்.

இன்றைய யதார்த்த நிலை என்னவென்றால், நூல்தேட்டம் தொடங்கப்பெற்று ஏழு ஆண்டுகள் கழிந்த நிலையிலும், இன்றும் நூல்தேட்டத்தின் பிரதிகள் விற்பனை செய்யமுடியாமல் தேங்கிக் கிடப்பதாக பூபாலசிங்கம் பத்தகசாலை அதிபர் சிறீதர் சிங் தெரிவித்தார். அவரது கணக்கின்படி ஒவ்வொரு தொகுப்பிலும் 100 பிரதிகள் வரை கையிருப்பில் உள்ளன. இது மிக அண்மைக்கால கணக்கு. இவை உடனுக்குடன் விற்பனையாகியிருந்தால் இன்று நான் தடங்கலின்றி 10 அல்லது அதற்கும் மேற்பட்ட எண்ணிக்கையான தொகுதிகளைப் பதிவுசெய்திருப்பேன். எனது இந்த ஆவணவாக்கத்தின் முக்கியத்துவம் பற்றி இந்த நேர்காணலை வாசிக்கும் ஒவ்வொருவரும் தமது மனச்சாட்சியை ஒரு தடவை கேட்டுக்கொண்டால், எனது உணர்வுகளை நிச்சயம் புரிந்துகொள்வார்கள்.

இங்கிலாந்தில் நூலக ஆவணக் காப்பகம் ஒன்றை உருவாக்க முனைவதாக பத்திரிகைச் செய்திகள் வாயிலாக அறிகின்றோம். அவ்வாறு ஒரு ஆவணக்காப்பகத்தை அமைக்கவேண்டும் என்ற உயரிய சிந்தனை உங்களுக்கு எவ்வாறு உருவானது?

நூல்தேட்டம் தொகுப்பு பரவலாக எம்மவரால் உள்வாங்கப்படும் போதெல்லாம், இந்த நூல்தேட்டத்தில் பதிவிலுள்ள ஆவணங்களை நீங்கள் சேர்த்து வைத்திருக்கிறீர்களா என்ற கேள்வி என்னையே நோக்கி எழுப்பப்படுவது வழக்கம். அவர்களின் வேண்டுகோளை எற்று, மேலதிக முயற்சியொன்றை அண்மைக்காலத்தில் மேற்கொண்டுள்ளேன். நூல்தேட்டம் பதிவுக்காக நான் எழுத்தாளர்களிடமிருந்தும், வெளியீட்டகங்களிடமிருந்தும் அன்பளிப்பாகவும், சில சமயங்களில் விலைகொடுத்தும் பெற்றுக்கொண்ட நூல்கள் சுமார் 3000 வரையில் என்னிடம் சேர்ந்துள்ளன. அதைத் தவிர தனிப்பட்டவர்களின் சேர்க்கைகளும் இங்கு லண்டனில் ஆங்காங்கே சேர்த்துவைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தையும் ஓரிடப்படுத்தி அவற்றை ஒரு ஆவணக்காப்பகமாகவும், ஆய்வு நிறுவனமாகவும் பேணவேண்டும் என்ற ஆவல் என்னுள் மேலெழுந்ததால் எனது நண்பர்கள் சிலருடன் இணைந்து கடந்த மே 2009இல் European Tamil Documentation and Research Centre என்ற தலைப்பில் ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளேன். ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும் என்று தமிழில் அதை அழைக்கலாம். இது பிரித்தானிய அரசின் தர்மஸ்தாபன அமைப்பாகவும் பதிவுசெய்யப்பட்டு, அதற்கு தனியான நடைமுறை வங்கிக் கணக்கொன்றும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் பொதுமக்களின் நிதி வருவாயுடன் இந்த அமைப்பினை நாம் கட்டியெழுப்ப அனுமதி சட்டபூர்வமாக கிட்டியுள்ளது.

இன்று ஈழத்தமிழர் தொடர்பான நூல்களும், அவர்கள் படைத்த நூல்களும் உலகெங்கிலுமிருந்து தமிழ் உள்ளிட்ட வௌ;வேறு மொழிகளில் வெளியாகியுள்ளன. இவை அனைத்தையும் இங்கு ஓரிடத்தில் பார்ப்பதென்பது மிகக் கடினம். பிரித்தானிய நூலகம், சொயாஸ் நூலகம், கேம்பிரிஜ் பல்கலைக்கழகத்தின் ஆய்வு நூலகங்கள் என்பன ஓரளவு இலங்கை தொடர்பான நூல்களை சேகரித்துப் பாதுகாத்து வைத்திருந்தாலும் அவை இறுக்கமான அங்கத்துவக் கட்டுப்பாடுகளை விதித்திருப்பதால் பொதுவான வாசகரால் அவற்றை சுதந்திரமாகப் பார்வையிட முடிவதில்லை. இந்நிலையில் எமக்கென்றொரு ஆவணக்காப்பகம் தேவை.

மற்றது, இன்று தமிழர்கள் மாத்திரம் தான் இலங்கைத் தமிழர் பற்றியும் அவர்களின் சமயம், அரசியல், கலை, கலாச்சாரம், வரலாறு பற்றியும் அறிய ஆர்வம் காட்டுகிறார்கள் என்றில்லை. இலங்கையின் இனப்பிரச்சினை உலகளாவிய கவன ஈர்ப்பினைப்பெற்று விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில் உலகில் பலரும் இலங்கை பற்றியும் இலங்கைத்தமிழர் பற்றியும் ஆர்வம் கொண்டவராகக் காணப்படுகிறார்கள். அவர்களது ஆய்வுக்கும், அறிவுக்கும் வேண்டிய தகவல்களை புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் வழங்கவேண்டியது முக்கியமான ஒரு பணியாகக் கருதுகின்றேன். அதனையும் நாம் வழங்காமல் இலங்கை அரசாங்கமே தானாக முன்வந்து வழங்கும்வரை காத்திருப்பதும் அதன்பின் விமர்சனம் செய்வதும் பொருத்தமானதா?

அடுத்தது இங்கு வாழும் இரண்டாம் தலைமுறைத் தமிழப் பிள்ளைகள் தாம் ஐரோப்பிய நாடுகளில் அந்நாட்டுத் தேசிய மொழிகளில் கல்வி பயில்கிறார்கள். எதிர்காலத்தில் எமது இனம் பற்றிய வாழ்வியலையும் வரலாற்றையும் தமிழில் அல்லாது பிற மொழிகளில் தான் அவர்கள் பரிமாறப்போகிறார்கள். இதுவே யதார்த்தம். அவர்களின் தேவைக்காகவும் தமிழில் அல்லாத ஆங்கிலம் மற்றும் பிற மொழிகளில் தமிழர் பற்றிய ஆவணங்களைத் தேடிப் பாதுகாத்துவைத்து வழங்க வேண்டியதும் எமது கடமையாகின்றது.

இவை அனைத்தினதும் கூட்டுவெளிப்பாடாகவே இந்த ஆவணக்காப்பகத்தின் உருவாக்கம் பற்றிய சிந்தனை என்னுள் உரம்பெற்றது என்று சொல்லலாம்.

நிறுவனமாக செய்யப்பட வேண்டிய ஒரு முயற்சியை தனித்து, இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும் எப்படி உங்களால் முன்னெடுத்துச் செல்ல முடிகிறது?

இவை அனைத்தும் விதிவசத்தாலும், எம்மவரின் பாராமுகத்தினாலும் சலிப்புற்று, அவமே காலம் கரைவதனால் வேறு வழியின்றி, தனித்துச் செய்கிறேனேயல்லாது, இது தனி ஒருவனால் செய்து முடிக்கக்கூடிய காரியமல்ல. காலக்கிரமத்தில் எம்மவர் உணர்ந்து எனக்குத் தோள் கொடுப்பார்கள் என்றும், எனக்குப் பின் அடுத்த தலைமுறையொன்று எனது பணியைத் தொடரும் என்றும் நிறைந்த நம்பிக்கைகளுடன்தான் எனது பயணத்தைத் தொடர்கின்றேன். இதனை ஒரு பாரிய பணிக்கான அத்திவாரமாகவே நான் கருதுகின்றேன்.

உங்களின் இந்த முயற்சிக்கு புலம் பெயர்ந்தவர்களின் ஆதரவு எப்படி உள்ளது?

புலம்பெயர்ந்த தமிழர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் புலம்பெயர்தலுக்கும், அகதி அந்தஸ்தினைப் பெறுதலுக்கும், அங்கு வளத்துடன் வாழ்வதற்கும், தமது சமூக அந்தஸ்தினை உயர்த்திக்கொள்வதற்கும் தேவையான தேர்ந்த நடவடிக்கைகளில் மட்டுமே அக்கறை கொள்வதில் அதிகம் நாட்டம் கொண்டவர்கள். -இது எனது தனிப்பட்ட அபிப்பிராயம். பொதுவானதொரு நீண்டகாலத் திட்டத்தில்- வருவாய் ஈட்டாத ஒரு சமூக நலத்திட்டம் என்று எம்மவரிடம் எதுவுமே இல்லை. விடுதலைப் போராட்டத்திற்கு நிதி கொடுத்தால் சமூக அபிவிருத்தி நடவடிக்கைகள் புலத்திலும், புகலிடத்திலும் எல்லாம் தானாக நடக்கும் என்ற நம்பிக்கையில் பணத்தை வழங்குவதுடன் தமது கடமை முடிந்ததாகக் கருதித் திருப்திப்பட்டுக்கொள்ளும் அப்பாவிகளே அதிகம்.

புகலிடத் தமிழர்கள் கோவில்களைக் கட்டினார்கள். கடைகளை, வர்த்தக நிறுவனங்களைப் பெருக்கினார்கள், பாடசாலைகளைத் தொடங்கினார்கள். இவை அனைத்தும் ஒரு வகையில் பொருளாதார வருவாயை அடிப்படையாகக் கொண்டே கட்டி எழுப்பப்பட்டன. இவ்வமைப்புகளைச் சுற்றியுள்ளவர்களில் ஒரு சிலரைத் தவிர பெரும்பான்மையானவர்கள், புலம்பெயர் தமிழர் மத்தியில் பகிரங்கமாக பொதுமேடைகளில் தலை காட்டாதவர்கள்;. இதனால் ஒரு பாரிய பிரிவு மறைமுகமாக எம்மிடையே ஏற்பட்டு வருகின்றது. பொருளாதார வளம் மிக்கவர்கள் பொதுநலத் திட்டங்களிலிலிருந்து ஒதுங்கிக் கொள்கின்றார்கள். பொது நலத்திட்டங்களை முன்னெடுத்துச் செயற்பட முனைபவர்கள் பொருளாதார பலமற்று தனிமைப்படுத்தப்பட்டு கைவிடப்படுகின்றார்கள். இங்குள்ள கோயில்கள் ஒவ்வொன்றும் பல்லாயிரக்கணக்கான நிதி வருவாய் கொண்டவை. அவை இணைந்து முன்வந்தால் இந்தப் புலம்பெயர் நாடுகளில் பாரிய சாதனைகளை செய்து முடித்திருக்கலாம். ஆனாலும் இன்றுவரை எந்தவொரு கல்விசார் ஆவணக்காப்பகமோ, ஆய்வு நிறுவனமோ ஏன் தமிழ் நூலகமோ இந்தச் சமூக அமைப்புகளால் புகலிடத்தில் சிறப்பாக வளர்த்தெடுக்கப்படவில்லை. அப்படி ஒன்றிரண்டை நான் இனம்காட்டக் கூடியதாக இருந்தாலும் அது தனிப்பட்ட ஒரு சிலரின் தியாகத்தாலும், கனவாலும் கட்டியெழுப்பப்பட்டவையாகவே உள்ளன.

இம் முயற்சிகளுக்கு ஈழத்தவர்களின் ஆதரவு போதுமானளவு கிடைக்கின்றதா?

எனது ஆவணக்காப்பக முயற்சி பற்றி இலங்கை ஊடகங்களில் பல தடவைகள் வேண்டுகோள் விடுத்திருந்தேன். இதுவரை எவரும் அணுகவில்லை. இலங்கையிலிருந்து ஆவணக்காப்பகத்திற்கு பணத்தை எதிர்பார்க்கவில்லை. விலைகொடுத்து வாங்க இயலாத ஏராளமான நூல்கள், சஞ்சிகைகள், சிறப்பு மலர்கள், அறிக்கைகள் மற்றும் பல்வேறு ஆவணங்கள் அங்கு தேங்கிக்கிடக்கின்றன. அவை தனிப்பட்டவர்களிடம் சேகரிப்புகளாக இருக்கின்றன. அவற்றை உரியவர்கள் விரும்பினால் கொழும்பிலேயே ஒப்படைத்து இங்கு அவற்றை பாதுகாப்பாக அனுப்பிவைப்பதற்கான எளிய நடைமுறைகளையும் குறிப்பிட்டிருந்தேன். எதிர்காலத்தில் அவற்றை இலங்கையில் பாதுகாப்பதா, லண்டனில் பாதுகாப்பதா என்ற சிக்கலான கேள்விக்கு விடைதேட முடியாதவர்களாக அவர்கள் இருக்கக்கூடும். முடிவை அவர்கள் தான் எடுக்கவேண்டும். தமது சேர்க்கைகளில் ஒரு பகுதியை- அல்லது மேலதிகப் பிரதியொன்றை ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகமும் ஆய்வு நிறுவனமும் என்ற எமது அமைப்புக்கு அனுப்பிவைப்பதன் முக்கியத்துவத்தை அவர்கள் உணரும் பட்சத்தில் எம்முடன் தொடர்புகொண்டால் அவற்றை எமது செலவில் இங்கு எடுப்பிக்க நடவடிக்கை எடுக்க முடியும்.

ஈழத்து எழுத்தாளர்கள், புலம் பெயர்ந்த ஈழத்து எழுத்தாளர்களது நூல்கள் மாத்திரமா? அல்லது ஏனைய நாட்டு எழுத்தாளர்களது நூல்களும் இங்கு பாதுகாக்கப்படுகின்றன?

ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகத்தில் ஆய்வுத் தேவைக்காக பேணிப்பாதுகாப்பதற்காக இலங்கையிலும் உலக நாடுகளிலும் வெளியிடப்பட்ட ஈழத்தமிழர்களினது தமிழ் ஆங்கில நூல்கள் பாதுகாப்பப்படும். மலேசிய-சிங்கப்பூர் தமிழர்களின் நூல்களும் இங்கு சிறப்புச் சேர்க்கையாக பாதுகாக்கப்படுகின்றன. அத்துடன் இலங்கையிலும் தமிழகம் உள்ளிட்ட உலக நாடுகளிலும் ஈழத்தமிழர் பற்றி வெளிவந்த தமிழ், ஆங்கில, சிங்கள நூல்களும் பாதுகாத்து வைக்கப்படும். இவை தவிர ஈழத்துச் சஞ்சிகைகள், சிறப்பு மலர்கள், பல்கலைக்கழக ஆய்வுக்கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதி என்பனவும் பாதுகாக்கப்படுகின்றன.

நூல்களாகவே இவை இங்கு பாதுகாக்கப்படுகின்றனவா? அல்லது இணையத்தளத்தில் மாத்திரம் பாதுகாக்கப்படுகின்றனவா?

பெரும்பாலும் நூலுருவிலான ஆவணங்களும், ஒலி-ஒளிப்பதிவுகளும் இறுவட்டுகளும் பாதுகாக்கப்படுகின்றன. ஈழத்துத் தமிழ்த் திரைப்படங்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள் இறுவட்டுகளாகப் பாதுகாக்கப்படுகின்றன. துண்டுப்பிரசுரங்கள் கூட இன்றைய காலத்தில் எமது வரலாற்றுப் பதிவுகளாகிவிட்டன. அவையும் எம்மிடம் உள்ளன. இவ்விடத்தில் நூல்களை இணையத்தில் பாதுகாக்கும் நடவடிக்கையில் நேரடியாக இயங்காதபோதிலும், நூலகம் டொட் நெற் (Noolaham.net) இணையத்தளத்தின் இணைய நூலகத்திற்கான முக்கிய பயனீட்டாளர்களாக ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகம் இயங்கும். எமது இனத்தில் ஒரு குழு மேற்கொள்ளும் மிக முக்கிமான பணியை வளர்த்தெடுக்க உதவுவது, அதைப் போன்ற மற்றொரு இணைய நூலகத்தை உருவாக்கிச் செயற்படுத்தவதைவிட சிறந்ததென்று கருதுகின்றேன்.

இங்கு நூல்கள் என்ன முறையில் ஒழுங்குப்படுத்தப்பட்டுள்ளன?

காப்பகத்தின் நூல்கள், ஆவணங்கள் அனைத்தும் டூவி டெசிமல் பகுப்பாக்க முறையில் பகுப்பாக்கம் (Dewey decimal Classification – DDC) செய்யப்பட்டு கணணியேற்றம் செய்யப்பட்டுள்ளன. நூல்தேட்டம் பதிவும் இம்முறையைத் தழுவியே பகுப்பாக்கம் செய்யப்பட்டுள்ளதை அவதானித்திருப்பீர்கள். இன்று தேசிய நூலகம் உள்ளிட்ட இலங்கையின் பொது நூலகங்கள் அனைத்தும் இவ்வகைப் பகுப்பு முறையினையே பின்பற்றுகின்றன. ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகம் ஒரு ஆவணக்காப்பகமும் ஆய்வு நிறுவனமுமேயன்றி ஒரு பொது நூலகம் அல்ல. எனவே இங்குள்ள நூல்கள் closed access முறையிலேயே பாதுகாக்கப்படும். வெளிப்படையாக தட்டுகளில் ஒழுங்கமைக்கப்பட்டு யாரும் எந்நேரமும் தமது விருப்பப்படி எடுப்பதும், வீட்டுக்கு எடுத்துச் செல்வதும் சாத்தியமாக இராது.

புலம் பெயர் தமிழர்களின் இலக்கிய முயற்சிகள் எவ்வாறு உள்ளன?

புகலிடங்களில் வெளிவந்த பெரும்பான்மையான கதை, கவிதை நூல்கள் போராட்டம் சார்ந்த இலக்கியங்களாகவே இருந்தன. தாம் புலம்பெயர்ந்த மண்ணின் இலக்கியங்களை தமிழுக்குக் கொண்டு வருவதும், தமிழில் தாம் எழுதிய படைப்புக்களை புகலிடத்துத் தேசிய மொழிகளில் கொண்டுவருவதும் ஆங்காங்கே இடம்பெற்றுமிருந்தன. ஆயினும் அவை முனைப்புப் பெற்றிருக்கவில்லை. முன்னைய காலங்களைப் போலல்லாது போரியல்சார்ந்த படைப்பிலக்கியங்கள் வெளிவருவது மே 2009இன் பின்னர் நின்றுவிட்டன. இப்போது தான் ஆங்காங்கே ஒன்றிரண்டு நூல்கள் வெளிவந்துள்ளன. புலம்பெயர்ந்த தமிழர்களிடம் நான் அடிக்கடி குறிப்பிடும் விடயம் – தமது படைப்பகளை நூலுருவில் காண்பதுடன், வசதி குறைந்த ஈழத்துப் படைப்பாளிகளின் நல்ல படைப்புகளைப் பெற்றுப் பதிப்பிக்கும் பணியிலும் ஈடுபடுங்கள் என்பதாகும். எனது வேண்டுகோள் இடைக்கிடையே நிறைவேற்றப்பட்டிருப்பினும் அதில் போதிய வேகம் காணப்படவில்லை. இனிவரும் காலங்களில் அதற்கான வாய்ப்புகள் அதிகம் ஏற்படலாம். இப்பொழுது புலம்பெயர்ந்த தமிழர்களின் இரண்டாம் தலைமுறையினரும் தமது படைப்பிலக்கியப் பணிகளில் முகம்காட்டுகின்றனர். இவர்களின் படைப்புக்கள் புதியதொரு அனுபவத்தை எமக்கு வழங்கும்.

இன்றைய எழுத்தாளர்களுக்கு நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

எழுத்தாளர்களுக்கு என்ன எழுதவேண்டும், எப்படி எழுத வேண்டும் என்று ஆலோசனை கூற நான் அருகதை அற்றவன் என்பதே எனது தாழ்மையான கருத்து. நான் ஒரு படைப்பாளியோ எழுத்தாளனோ அல்ல. ஏதோ எழுதுகின்றேன். மற்றும்படி நான் ஒரு நூலகவியலாளன். நூலியல் சார்ந்த விடயங்களில் நான் தாராளமாகக் கூறலாம். குறிப்பாக ஒரு நூலை எழுதும்போது அதன் வடிவமைப்பு, விநியோகம் பற்றியும் அக்கறை செலுத்துங்கள். வெறும் வெளியீட்டு விழாக்களையும், சுற்று வட்ட நண்பர்களையும் மாத்திரமே கருத்தில் கொள்ளாதீர்கள். அது உங்கள் படைப்புக்களை ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள்ளேயே வைத்திருக்கும். ஊர் கடந்து, நாடுகடந்து அந்நியரின் கைகளுக்குள் அது செல்லவேண்டும். அப்போது தான் அது புதிய வாசகர்களை உங்களுக்குத் தேடித்தரும். உங்களை நாடி எவராவது வரவேண்டும் என்று எதிர்பார்த்து கைகளில் புத்தகத்துடன் காத்திருக்காதீர்கள். உங்கள் நூல்களில் ஒரு சில பிரதிகளையாவது அது வெளிவந்ததும் உங்களைப்பற்றிய குறிப்புகளுடன் சேர்த்து புகலிட ஊடகங்களுக்கு அனுப்பி வைத்தால், உங்கள் நூல் பற்றிய செய்தி வெளியாருக்கும் பரவ வாய்ப்பு ஏற்படும். புலம்பெயர் தமிழ் ஊடகம் பாரியது. உங்கள் நூல் பற்றிய விபரங்களை ஐரோப்பிய வாசகர்களிடம் என்னாலும் எடுத்துச் செல்லமுடியும். அதற்கு என்னுடனான உங்கள் தொடர்பு அவசியம்.

ஈழத்துப் படைப்புக்களை உங்களால் உடன் பெற்றுக்கொள்ள முடிகிறதா?

இல்லை என்பதே வேதனையான பதில். ஈழத்துப் படைப்புகள் யாழ்ப்பாணம், கொழும்பு, மட்டக்களப்பு, மலையகம் உள்ளிட்ட பல பிரதேசங்களிலிருந்து வருகின்றன. அவை வெளிவந்த சுவட்டினைக்கூட நாம் அறிய முடிவதில்லை. ஒன்றிரண்டு நூல்கள் பற்றி பத்திரிகைகளிலும், சஞ்சிகைகளிலும் வெளிவரும் அறிமுகச் செய்திகளை வைத்து நூலாசிரியரின் முகவரி கிடைக்குமிடத்து அவருக்கு கடிதம் எழுதுவது எனது வழக்கம். பெரும்பாலான நூல் அறிமுகங்களில் இந்தத் தொடர்பு முகவரி காணப்படுவதில்லை. இது கைக்கெட்டியும் வாய்க்கெட்டாத நிலையையே எம்மவர்களுக்குத் தோற்றுவிக்கும். ஒரு நூலை அறிமுகப்படுத்துபவரின் நோக்கம் வெறுமனே அந்நூல் பற்றித் தெரிவிப்பதுடன் மாத்திரம் நின்றுவிடுவதில்லை. அந்நூல் வாசகரின் கைகளை அடைவதற்கும் அது ஒரு பாதைவகுத்துத் தரவேண்டும். அதற்கு ஏற்ப நூலாசிரியரின் முகவரி அவசியம் பதிவுபெற வேண்டும்.

குமரன் புத்தக இல்லம், சேமமடு பொத்தகசாலை ஆகிய வெளியீட்டகங்கள் தாம் அச்சிடும் நூல்களில் ஒவ்வொரு பிரதியை எனக்குத் தவறாமல் அனுப்பி வைக்கிறார்கள். பிற வெளியீட்டகங்களும் எனது நூல்தேட்டப் பதிவுப் பணியின் முக்கியத்துவத்தை உணர்ந்து செயற்படவேண்டும். வெறும் வியாபாரிகளாக மாத்திரம் எம்மவர்கள் இருப்பது கொடுமையாகும். லாபீர், அந்தனி ஜீவா, ஞானம் ஆசிரியர்- கலாநிதி ஞானசேகரம் போன்றோரும், யாழ்ப்பாணத்திலிருந்து கவிஞர் முருகுவும், யாழ்.பல்கலைக்கழக நூலகர் கல்பனா சந்திரசேகர் போன்றோரும் தாமாக முன்வந்து நூல்களைச் சேகரித்து எனக்கு அனுப்பிவைக்கிறார்கள். இவை தவிர நான் வீடுவீடாக, ஊர் ஊராக, நாடுகடந்து சென்று தான் நூல்கள் பற்றிய பதிவுகளை மேற்கொள்ளவேண்டிய துர்ப்பாக்கிய நிலை காணப்படுகின்றது. எனது இந்த வரிகளை வாசிக்கும் எழுத்தாளர்கள், நூல் ஆர்வலர்கள் தாம் வாசிப்பதை ஒரு கணம் நிறுத்திவைத்துவிட்டு சிந்தித்தால் அவர்களால் எனது தேடலுக்கு மிக எளிதில் உதவ முடியும். ஒரு தேசிய நூலகம் சட்டபூர்வமாகச் செய்யவேண்டிய பணி இது. உலகில் எங்குமே தமிழ்ப் படைப்புகள் முழுமையாகப் பதிவுபெறாத நிலையே இன்று காணப்படுகின்றது. ஈழத்தமிழரின் படைப்புக்கள் அந்நிலையிலிருந்து விலகி முன்மாதிரியாக இருக்க வேண்டும் என்ற தீவிரஉணர்வு கொண்டவர்கள் ஒரு சிலராவது எனக்கு உதவலாம் அல்லவா?

உங்களால் எழுதப்பட்ட நூல் முயற்சிகள்?

ஈழத்து நூல்கள் மாத்திரமல்லாது, மலேசிய சிங்கப்பூர் நூல்கள் பற்றியும் அதன் படைப்பாளிகள் பற்றியும், நூல் வெளியீடுகள் பற்றியும், நூலகவியல் பற்றியும் ஏராளமான கட்டுரைகளை இதுவரை இலங்கையிலும் புகலிட நாடுகளின் ஊடகங்களிலும் எழுதிவந்திருக்கிறேன். பிரித்தானிய தமிழ் வானொலியான ஐ.பீ.சீயில் காலைக்கலசம் என்ற நிகழ்ச்சியில் தமிழ் இலக்கியம் மற்றும் நூல் வெளியீடுகள் பற்றி 2002ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஞாயிற்றக்கிழமைகளிலும் 15 முதல் 20 நிமிடங்கள் உரையாடி வருகின்றேன். ஞானம், சுடரொளி போன்ற சஞ்சிகைகளில் எனது பத்தி எழுத்துக்கள் இடம்பெறுகின்றன. இவை அனைத்தும் அவ்வப்போது பல்வேறு உலகத் தமிழ் சிற்றேடுகளிலும் இணையத்தளங்களிலும் மீள்பிரசுரம் கண்டும் உள்ளன. நூல்களைப் பொறுத்தவரையில் 28 நூல்கள் வரையில் எழுதியிருக்கிறேன். அண்மையில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பு ஞானம் சஞ்சிகையின் வெளியீடாக “வேரோடி விழுதெறிந்து” என்ற தலைப்பில் எனது 20 கட்டுரைகள் கொண்ட நூலொன்று வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் இலங்கையிலேயே அச்சிட்டு விநியோகிக்கப்படுவதால், இலங்கையின் பிரபல புத்தக நிலையங்களில் தாராளமாகப் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த முயற்சிகளுக்காக நீங்கள் பெற்றுக்கொண்ட விருதுகள்………….?

எனது இலக்கியப் பணிக்காக 2004இல் கனேடிய நாட்டில் ஒன்ராரியோ மாநிலத்தில் தமிழர் தகவல் நிறுவனம் “தமிழர் தகவல்”; விருதினை வழங்கிக் கௌரவித்திருந்தது. 2005இல் உடத்தலவின்னை சிந்தனை வட்டம் அமைப்பினால் திரு பீ.எம்.புன்னியாமீன் அவர்கள் “இலக்கிய வித்தகர்” விருதினை வழங்கி கௌரவித்திருந்தார். இவை தவிர பல்வேறு நாடுகளுக்கும் நான் நூல்தேடல் பணியினை மேற்கொண்டு செல்லும் போதெல்லாம் அவ்வந்நாட்டு தமிழ் இலக்கிய அமைப்புகள் என்னை வரவேற்று உபசரித்து பாராட்டுவதுடன் நூல்களைத் தேடியும் வழங்கிவருகின்றன. சுய அறிமுகம் ஏதுமின்றிப் பெறப்படும் இந்த அங்கீகாரமே பெரிய விருதாகக் கருதுகின்றேன்.

ஆவணக் காப்பகம் தொடர்பாக எதிர்காலத்தில் செயற்படுத்தவென எத்தகைய திட்டங்களை முன்வைத்துள்ளீர்கள்?

ஐரோப்பிய தமிழ் ஆவணக் காப்பகம் ஒரு தனியான கட்டடத்தில் சுதந்திரமாக செயற்படவேண்டும் என்பதே எனது கனவாகும். இதற்கு ஈழத்தமிழர்கள் நூல் ஆதரவும், புலம்பெயர் தமிழர் நிதி ஆதரவும் வழங்கினாலேயே என் கனவு மெய்ப்படும். இக்கனவு எனக்கானதொரு சுயநலக்கனவல்ல. எமது அடுத்த தலைமுறையினருக்கு எமது தேட்டத்தை விட்டுச்செல்ல என்ன நடவடிக்கைகளை நாம் எமது காலத்தில் எடுத்தோம் என்று சுயவிமர்சனம் செய்துகொள்ளும் ஒவ்வொரு புத்திஜீவியின் கனவுமாகும். இதற்கான வழி-அடிப்படையில் நிதி ஆதரவிலேயே தங்கியுள்ளது. ஆகக் குறைந்தது 500 பேர் மாதம் 5 பவுண் செலுத்தும் அளவு வளர்ந்தால், பிரித்தானிய அரசே எமக்கு பல வழிகளில் உதவும் வாய்ப்புள்ளது. இரண்டு லட்சம் ஈழத்தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நிலையில் பிரித்தானியாவில் இன்றைய தினத்தில் எமது வேண்டுகோள்கள் அனைத்தும் தீவிரமாக மக்களைச் சென்றடையவில்லை. இன்றைய இலங்கைத் தமிழரின் விடுதலைப் போராட்டத்தின் திடீர் முடிவு அவர்களை நிலைகுலையச் செய்திருக்கலாம். எதிர்காலத்தில் சிறிய அளவிலான கருத்தரங்குகளை ஒழுங்குசெய்து புத்திஜீவிகள் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்தவிருக்கிறோம். இதற்கு தமிழறிஞர் ஐ.தி.சம்பந்தன் போன்றோர் உதவி வருகின்றனர். தற்போது ஆங்கிலத்தில் வெளிவரவுள்ள நூல்தேட்டம் தொகுப்பினை ஆவணக்காப்பக வெளியீடாகவே பிரசுரிக்கவுள்ளோம். தமிழர் அல்லாதவர்களிடையே இக்காப்பகச் செயற்பாடுகள் பற்றிய தெளிவான தகவல் ஒன்றினை இந்நூல் எடுத்துச் செல்லும் என்று நம்புகின்றோம். கணிசமான நிதி வருவாயினையும் இது எமக்குப் பெற்றுத்தரும் என்று நம்புகின்றோம்.

ஈழத்து எழுத்தாளர்கள் எவ்வாறு உங்களுடன் தொடர்பு கொள்ள முடியும்?

தமிழ் எழுத்தாளர்கள், நூல் ஆர்வலர்கள் மற்றும் ஆவணக்காப்பகத்தின் உருவாக்கத்திற்கு ஏதோ ஒரு வகையில் உதவ முன்வருபவர்கள் என்னுடன் மின்னஞ்சல் வழியாகவோ. தொலைபேசி வழியாகவோ கடிதம் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

மின்னஞ்சல்: selvan@ntlworld.com
தபால் முகவரி: Mr. N.Selvarajah, ETDRC, 48 Hallwicks Road, Luton LU2 9BH, United Kingdom..
தொலைபேசி இலக்கம்: 0044 1582 703786
இலங்கையில் தமது நூல்களை வழங்க விரும்புவோர் தொடர்பிற்கு:
Mr. V.T.Rajaram, C/1/6 Veluvanarama Flats, Off Hampden Lane, Wellawathe, Colombo

இந்நேர்காணல் தினக்குரல் பத்திரிகைக்காக எடுக்கப்பட்டது. இந்நேர்காணல் 27 09 2009 – 04 10 09 இதழில் வெளிவந்தது. (நன்றி தினக்குரல்)