ASATiC – Academic Secretary ரவி சுந்தரலிங்கம் ஈரோஸ் அமைப்பின் முக்கிய உறுப்பினர். தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களிலேயே தன்னை அதனுடன் இணைத்துக் கொண்டவர்.
தனது வாலிபப் பருவத்தில் கொம்யுனிஸ்ட் கட்சி செயற்பாட்டாளராக இருந்த இவர் 1976ல் தமிழீழப் பிரகடனம் முன் வைக்கப்பட்ட போது அதனை எதிர்த்துக் குரல் எழுப்பியவர். அதன் பின் லண்டனுக்குப் புலம்பெயர்ந்த ரவி சுந்தரலிங்கம் ஈரோஸ் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார்.
நீண்ட இடைவெளிக்குப் பின் மீண்டும் இலங்கைத் தமிழர்களின் அரசியலில் தன்னை ஈடுபடுத்தி உள்ள இவர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்பட்ட காலப் பகுதியில் வன்னிக்குச் சென்று முன்னாள் ஈரோஸ் தலைவர் பாலகுமார் மற்றும் தலைவர்களைச் சந்தித்தவர்.
அண்மைகாலமாக SAAG இணையத்தில் இலங்கை தொடர்பான பல கட்டுரைகளை எழுதி உள்ளார். இந்தியாவில் இடம்பெற்ற இலங்கை தொடர்பான ஆய்வு மாநாட்டில் ஆய்வறிக்கைகளையும் சமர்ப்பித்துள்ளார். இந்தியாவுடனான ஈரோஸ் அமைப்பின் தொடர்புகள் நீணடகாலமானது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
இவற்றின் பின்னணியில் இன்றைய இலங்கையின் அரசியல் சூழல் அதில் இந்தியா ஏற்படுத்தும் தாக்கம் பற்றி ரவி சுந்தரலிங்கம் அவர்களுடன் உரையாடினோம். அதன் தொகுப்பை ரவி சுந்தரலிங்கம் இங்கு தொகுத்து உள்ளார். பெப்ரவரி 18ல் லண்டன் ஹைபரியில் உள்ள அவருடைய இல்லத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
தேசம்நெற்
_._._._._
தேசம்நெற் : இராணுவப் போரட்டம் என்பது கேள்விக்குறியான நிலைக்கு வந்துள்ளது. இந்நிலையில் போராட்ட தொடக்க காலத்தில் அது சார்பாக எடுத்த நிலைப்பாடு பற்றிய உங்களுடைய இப்போதைய கருத்து என்ன?
ரவி சுந்தரலிங்கம்:
(1) தமிழ் பேசும் மக்களது உடமைப் போராட்டம் ஆயுதம் என்ற அம்சத்தால் தோல்வி கண்டுள்ளது என்பது தவறானது. ஏனெனில், தமிழரசுக் கட்சியின் சாத்வீகப் போராட்தாலேயோ அல்லது த.வி.கூ. அணியினாது பேச்சு வார்ததைகளாலேயோ எத்தனையோ இணக்கங்கள் ஏற்ப்பட்டிருப்பினும் அவை எதுவும் சாசனமயமானதில்லை. ஆயுத-அம்சம் இல்லாது13ம் சீர்திருத்தம் ஏற்பட்டிராது, ஏனெனில், முதலில் இந்தியா கூடத் தலை போட்டிராது.
(2) மேலும் புலிகளது உக்கிரமமான இராணுவப் போர் இல்லாது 2002 MOU ஏற்பட்டிராது. அதனை புலிகள் சாசன ரீதியில் காத்திரமாக்கவில்லை, அல்லது ‘நாட்டினுள்ளே இன்னொரு நாட்டின் நிர்வாகம்’ என உருவாகிய பிரதேசத்தை, அதனுள் அடங்கிய மக்களை, அவர்களால் பாதுகாக்க முடியவில்லை என்ற குறைபாடுகளால் MOU தந்துள்ள அடிப்படையான சாதனைகளை நிராகரித்திட முடியாது. பாவித்த குளி-தண்ணியுடன் குளந்தையையும் யாரும் வீசிடுவதல்ல.
(3) ஆயுதம் என்பதையையே பிறப்புரிமையாக அமரிக்க சாசனம் வழங்குகிறது. ஏனெனில் தற்பாதுகாப்பு என்பதை தனிமனித உரிமையாக அது அங்கீகரிக்கிறது. ஐ.நா. சாசனம் தற்பாதுகாப்பு என்பதை தேசங்களுக்கும் நாடுகளுக்கும் மக்களுக்கும் உள்;ள அடிப்படை உரிமையாக பலபடிகள் உயர்த்துகிறது. ஐ.நா. அமைப்பு காலனித்துவ முடிவு காலத்தில் உருவாகியது என்பதையும் ‘தேசிய’ ‘சுயநிர்ணைய’ போராட்டங்களை எதிர் நோக்கிய காலமும் அது என்பதையும் சேர்த்தே அதன் சாசனங்களை நாம் பிரதிபலிக்க வேண்டும்.
(4) இலங்கையில் ஈரோசோ புலிகளோ ஆயுதப் போராட்டத்தை பிரேரிக்க முன்னரே, சிறீ லங்கா அரசு த.பே.மக்கள் மீது பலாத்காரத்தை பாவித்த தருணத்திலிருந்தே, அவர்கள் தம்மைப் பாதுகாக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு விட்டனர். அதனை, அரச பயங்கரவாதத்தை சிங்களக் அரசியற் கட்சிகளின் குண்டர்களா அல்லது அரச படைகளா அவ் இன அழிப்புளை நடத்தின என்று பாகுபடுத்திப் பார்த்தாலும் அவற்றின் பின்னடியில் ஆயுதம் தரிப்பது இயற்யையாக எழுந்த இயங்கியல் நிலைப்படே. அதனை யாரும் சொல்லிக் கொடுக்கவோ சொல்லித் தடுத்திருக்கவோ முடியாத நிலமையது.
(5) அதேதருணம் ஈரோஸ் பிரேகரித்த ஆயுதப் போராட்டதிற்கும் புலிகளது இராணுவம் போராட்டத்திகும் பாரிய வேறுபாடுகள் உண்டு. நாம் அதனை Subotage & suversion என விளக்கியிருச்தோம். ஆனால் புலிகளது போர் அணிவகுப்பு முறையில் கெரிலாப் போரையும் உள்ளக்கிய இராணுவ மோதலில் தங்கியது. ஈரோஸினது, த.பே.மக்கள் அனைவரதும் அடிப்படையான அபிலாசைகளுக்கான அரசியற் பிரேரணையாக ஒரு ‘தேசியத்துவத்தை’ கட்டித் தருவதற்க்காக, அதனையும் மக்களையும் பாதுகாப்பதற்கான ஆயுதப் பாதுகாப்பு என்ற அடிப்படையில், ஒரு மக்கள் போராட்டமாக படிப்படியாக உருவாக்க வேண்டும் என்ற கணிப்பிலானது. புலிகளதோ, ஏற்கனவே இருக்கும் தேசத்தை பெறுவத்காக, ‘மண்ணை மீட்பது” என்ற நோக்குடன் சுலோகங்களுடன் அமைந்தது.
(6) இவ்வேளையில், சரித்திரத்தை பின்னோக்கிப் பார்ப்பது படிப்பினைகளுக்கு உதவலாம் என்பதை ஏற்றுக் கொள்ளும் போது, சரித்திரத்தை பின் நோக்கி நகர்திதிடலாம் என்ற அவாவுடன் அணுகுவது தவறானது என்பதை நாம் உணர வேண்டும். அப்படியான தவறையையே சிறீ லங்கா அரசுடன் ஒத்தாசையாக இருந்தே, அது தன்பாட்டிலேயே எம்முடனான சர்ச்சைகளைத் தீர்த்துவிடும் என்று எந்த அரச அமைப்பு எமக்கு தீங்கு செய்கிறது மக்களாக அழித்திட விளைகிறது என்பதை அன்று தெரிந்தவர்கள் போராடியவர்கள் இன்று கூறுவதால் இழைக்கிறார்கள்.
தேசம்நெற் : 2002 புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்ட போதும் அதனை அடிப்படையாகக் கொண்டு தமிழீழ விடுதலைப் புலிகளால் தமிழ் மக்களுடைய உரிமையை நிலை நாட்ட முடியவில்லை. அப்படியானால் நீங்கள் குறிப்பிடும் MOU வின் பயன் என்ன?
ரவி சுந்தரலிங்கம் :
(1) முதலில் அது ஒரு சர்வதேசியமயமான உடன்பாடு. அதாவது, வழமைப்பாட்டினால் சட்ட ரீதியில் ஊர்ஜிதம் செய்யப்படக் கூடியது. மூன்றாம் நாடான நோர்வேயின் நேரடித் தலையீட்டில் co-chairs என்ற சர்வதேசிய அரங்கில், இந்திய எதிர்பின்றிய அனுசரணையுடன், பலநாடுகளது கண்காணிப்புக் குழுவினுடைய நேரடித் தலையீட்டுடன், சிறீ லங்கா அரசாங்கத்தின் உடன்பாட்டுடன், நடைமுறை-வழமையினால் உருவாகியதால் சர்வதேசியச் சட்டமயமான உடன்பாடு என்கிறோம், வெறும் இணக்கமல்ல.
(2) அவ்வாறான உடன்பாட்டினால் ஏற்படுத்தப்பட்ட நிர்வாகத்தை அழித்துவடுவதால் உடன்பாடு இல்லாது போய்விடுவதல்ல. அது சார்ந்த மக்களை இல்லாமல் செய்தாலே அதனை சரித்திரத்தில் இல்லாது செய்ய முடியும். நேரு, காஸ்மீர் பிரச்சனையில் ஐ.நா. தலையீட்டையும் பொதுசன வாக்கெடுப்பையும் ஏற்றுக் கொண்டதை உலகவல்லரசாக வளர்ந்து கொண்டுள்ள இந்தியா என்றுமே ரத்து செய்ய முடியாதுள்ளது. தனது பலத்தாலும் செல்வாக்கினாலும் காலம் கடத்திக் கொண்டிருக்கவே அதனால் முடியும். அது போன்றதே MOU உடன்பாடும்.
(3) மேலும், இலங்கையின் இனப் பிரச்சனைக்கான தீர்வுக்கு இந்திய-சிறீ லங்கா உடன்பாடடின் படி சிறீ லங்காவால் உடன்பாட்டின் வீச்சை மழுங்கடிக்க வைக்கப்பட்ட 13ம் சீர் திருத்தம் எமது இறுதித் தீர்வுக்கு கீழ்-வரையறுப்பு ஆகிறது. அதேவேளை, புலிகள் ஏற்படுத்திய MOU மட்டுமே மேல்-வரையறுப்பைத் தருகிறது. அதாவது அது இல்லாவிடில் தீர்வின் மேல் வரைவு தெளிலில்லாதே இருந்திருக்கும். திம்பு தீர்மானங்கள் என்று வாஜ்சையுடன் நாம் கூறுவது இறுதித் தீர்வின் கோட்பாடுகளே, வெறும் கோசமயப்படுத்தப்பட்ட இலட்சியங்களே.
(4) புலிகளது நடைமுறைத் தன்மைகளை, போராட்ட நெறிகளை, அரசியலற்ற ஜனநாயகமற்ற வறட்டு இராணுவ பலாத்காரத்தை அவர்களது பயங்கரவாதத்தை தட்டிக் கேட்டுவிடுவதால் போராட்டத்தின் எதிரிகளாக யாரும் மாறிடுவது இல்லை. ஆதேவேளை புலிகளுக்கு மட்டுமே எமது விசுவாசம் என்பதனால் நாம் போரட்டததிற்கு என்றென்றும் விசுவாசமாக இருந்துவிடுவோம் என்பதற்கு அத்தாட்சிகளும் இல்லை. புலிகள் ஒழிந்த பின்னரே ஏதாவது தீர்வு என்ற “புலி வாதத்துள்;” அடங்கி விடுபவவர்கள் எமது மக்களிடையே ஊடுருவி எமை ஆளும் அத்தன்மைக்கு அப்பாற்பட்டவர்களுமல்ல. அதனை மீறிப் பார்த்தால் என்றுமே தீர்வு சொல்லும் இயல்போ சித்தியோ கொண்டவர்களும் அல்லர். தாங்கள் எங்கிருந்து ஏன் எவ்வாறு புறப்பட்டவர்கள் என்பதை விளங்கிக் கொள்ள, விளக்க, ஏற்று ஒத்துக்கொள்ள முடியாதவர்கள் மக்களுக்கு வழிகாட:;டும் தகமையை மனோவியற் பாங்கை என்றோ இழந்தவர்கள். அவர்கள் வன்-முறைகள் மனிதாபிமானத்துக்கு தகுந்த பண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட முறைகளால் தம்மை முன்நிறுத்தவே முயன்றவண்ணம் இருப்பர்.
தேசம்நெற் : தமிழீழ விடுதலைப் புலிகள் MOU வைப் பயன்படுத்தி ஏன் தமிழ் மக்களின் உரிமையை ஊர்ஜிதம் செய்ய முயலவில்லை? நிர்வாகத்தை சீராக நடத்தி பரவலாக்கம் செய்யவில்லை? ISGA ஏன் சரிப்படவில்லை?
ரவி சுந்தரலிங்கம் :
(1) ISGA பிரேரணை MOU வை நடைமுறையில் ஊர்ஜிதம் செய்வதற்காக முன்வைக்கப்பட்டது. ஆனால். அதனையொட்டி ஏற்பட்ட ஒஸ்லோ உடன்பாட்டின்படி அமையவில்லை என்பது அதனது பெறுமதியை மறுத்தது. ஓஸ்லோ உடன்பாட்டில் உள்நாட்டு சுய-நிர்ணையம் என்ற விசித்திரமான அகராதியுடன் பிரிவினை வாதத்தை, புலிகளது தூதுவர் பாலசிங்கம் கைவிட முன்வந்ததை அறிவோம். அவ்விடயதை ISGA தர்க்க ரீதியிலாவது உள்ளடக்கி இருந்தால் சாதகமாக அமைந்திருக்கும்.
(2) மேலும், அது புலிகளது அதிகாரத்தை வடக்கு கிழக்கு முழுவதற்கும் பரவலாக்குவதற்கான புலிகளது முயற்சியாக, குறிப்பாக சிறீ லங்காவாலும் முக்கியமாக இந்தியாவாலும், மற்றைய தமிழ் இஸ்லாமிய அமைப்புகளாலும் கருதப்பட்டதும் சாதகமாக அமையவில்லை.
(3) சுனாமியின் தலையீடு புலிகளையும், அவர்களது நிர்வாகப் பிரதேசத்தையும் மக்களையும் பாரதூரமாகப் பாதித்தமையும் சாதகமாக அமையவில்லை. அதற்கு சான்று பகர்வதாக அமைந்ததே P-tom உடன்பாட்டிற்கு புலிகள் தயாராக இருந்தமை. எமது விளக்கங்களில் குறைபாடுகளைக் காண்பவர்கள் கூட P-tom, ISGA பிரேரணையிலும் பார்க்க அதிகார ரீதியில் மட்டுப்படுத்தப்பட்டது என்பதை ஏற்றுக் கொள்வர்.
(4) இவற்றிலும் பார்க்க புலிகளிடையே வடக்கு கிழக்கு என்று நிர்வாக ரீதியில் அன்று உருவாகி வந்த உட்பிரிவினைகள் அவர்களை ISGA குறித்து உற்சாகம் காட்டுவதை நிச்சயமாக மட்டுப்படுத்தி இருக்கும்.
(5) ஆனால் இவ்வாறான பிரச்சனைகளை அரசியல் துணிவிருந்தால், ஜனநாயத்திலும் மக்களிலும் சற்றாவது நம்பிக்கை கொண்டிருந்தால், இஸ்லாமியருடன் ஓரளவு நம்பிக்கையை வளர்த்திருந்தால், தீர்வு என்ற குறிக்கோள் இருந்திருந்தால் நிச்சயமாக மேவி இருக்க முடியும் என்பதில் எமக்கு நம்பிக்கை. அதாவது இன்னுமொரு அவகாசம் கைவசம் கிட்டாது போனதாகவே கருத வேண்டும்.
தேசம்நெற் : இன்று தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் குறுகிய ஒரு பிரதேசத்தினுள் அடக்கப்பட்டு உள்ளனர். இந்த யுத்தத்தை இந்தியாவே நடத்துவதாகவும் அவதானிகள் தெரிவிக்கின்றனர். இந்தியாவின் இன்றைய நிலைப்பாடு என்ன? இன்று புலிகளது தோல்விகளுக்கு காரணம் இந்தியா என்று கருதுகிறீர்களா?
ரவி சுந்தரலிங்கம் :
(1) இந்தியா என்றால் எந்த இந்தியா என்பது எம்மைக் கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி. எம்மவர் வடக்கத்தையான் என்று ஒரு புறத்தில் கூறியபடி அவர்களது கோவில்களுக்கு படை எடுக்கும் போது, கல்யாணம் செய்வதற்கு நகை நட்டு புடவைகள் வாங்கப் போகும் போது, அகதிகளாகப் போகும்போது, இலங்கைத் தமிழர்களாக இந்திய visa எடுக்க வரிசையில் அவஸ்த்தைப்படும் போது, இவ்வாறாக எமது தேவைகளின் நிமிர்த்மே நாம் அணுகும் இந்தியா என்று ஒன்று உண்டு. தமிழ் தமிழ்நாடு என்றவாறு பண்டைய உறவு கூறும்போது உணர்வது இன்னுமொரு இந்தியா. ஆந்திரா தொடக்கம் ஒறிசாவரை அந்நப் பரந்த பிரதேசத்தில் தமது நிலத்தையும் உடமைகளையும் கோரி போரிடும் மக்களும் ஒரு இந்தியா. ஆசாம், மீசோராம், நாகலாந்து, காஸ்மீர் என்றெல்லாம் தமது தேசிய உரிமையில் நம்புபவர்கள் காண்பதும் ஒரு இந்தியா. அதேவேளை, தாகூர்-காந்தி-அம்பேக்கர் தமது பாரிய பாரம்பரிய சரித்திரத்துள் கண்ட புதியதொரு நாட்டும் இந்தியாதான்.
(2) அந்தப் பாரிய இந்தியாவில் யாரை இந்தியா என்று பார்ப்பது எமக்கு மட்டுமல்ல அங்கு வாழ்பவர்களுக்கும்தான் பிரச்சனை. அதனை ஆளுபர்கள் தமது தொகுதியளிலும் மாநிலங்களிலும் காணும் பிரச்சனைகளுக்கு வழிகாண விளைபவர்களாக இருக்கிறார்களே அன்றி வளர்ந்த நாடுகளில், இடையிடையே உருவாகும் அரசியல் முன்னோடிகள் போல என்றென்றும் அமைவதில்லை. ஆதலால், இந்தியாவின் வெளிவிவகாரம், சீனா பாக்கிஸ்தான் அமரிக்கா என்ற பாரிய விடயங்களைத் தவிர்த்து, எஞ்சியவை பொதுவில் அரச அதிகாரிகளின் கைகளிலேயே தங்கியுள்ளது என்பது நாம் கவனிக்க வேண்டியது. எனவே அவர்கள் காணும் இந்தியா எப்படியானது என்பதையும் நாம் அறிய வேண்டியதாகிறது.
(3) யாழ் சமுதாயம் தனது பொருளாதார வசதிகளால் தம்மை தமிழ் பேசும் மக்களுள் மிக முன்னேற்றம் கண்டவர்களாக காண்பதும், அதனால் மற்றைய சமுதாயங்களை, குறிப்பாக இந்தியரை இழிவாகக் கணிப்பதும் வழக்கம். அதற்கு 13ம் நூற்றாண்டிலிருந்து இடையிடையே ஏற்பட்ட சரித்திர மன-இடைஞ்சல்களும் காரணமாக, அண்மைக்கால இந்திய நிலைப்பாடுகளும் சாட்சி தருவதுபோல அமைய, அவை இந்தியர்க்கு எதிரான பொதுப்பட்ட அவநம்பிகையாக எம்மவரிடையே படிவது புதினமல்ல.
(4) அந்த அவநம்பிக்கையும் அவமரியாதையும் எமது சிந்தனைகளையெல்லாம் எவ்வாறு சீர் குலைக்கின்றன என்பதை எமது நண்பர்கள் உறவினர்கள+டாகவே கண்டுகொள்ளலாம். அண்மையில் சிறீ லங்காவினது இராணுவ வெற்றிகளுக்கு இந்தியாதான் பின்னணி என்பது ஊர்ஜிதமாகும்வரை எம்முள்ளே கடுதாசிப் படிப்புப் பெற்றவர்கள், பெரியவர்கள், கனவான்கள், கட்டுரை கட்டுihயாக எழுதுபவர்கள் என யாவரும் அதனை இந்தியாவால் முடியாத காரியமாகக் கருதினர். யாராவது, இந்தியாவை கவனிக்க வேண்டும் அதிகாரிகளுடன் பேசி மார்க்கம் தேட வேண்டும் என்று கூறினால் நையாண்டி செய்தார்கள். சீனாவும், ஏன் ஈரான் இஸ்ரேல் கூடக் காரணமாக இருக்க முடியும், ஆனால் இந்தியாவால் இயலாத காரியம் என்று தட்டி எறிந்தார்கள். மிஞ்சினால், இந்தியர் அமரிக்க ஏகாதிபதியத்தின் ஏவுகரங்களாகவே இருக்க முடியும் என்றார்கள். இன்று அமரிக்கா, பிருத்தானியா, ஐரோப்பி ஒன்றியம் எல்லாம் விசேட பிரதிகளை அனுப்ப அவர்களை சிறீ லங்கா தடுக்கிறதே, எப்படி அந்தத் துணிவு என்று கேட்கும் போதுதான் தளம்புகிறார்கள். மகிந்தாவின் அரசாங்கம் வெள்ளையரது ஏகாதிபத்தியத்தில் இருந்து விடுபட்டு விட்டதென்று சிறீ லங்காவின் இடதுசாரிகள் பொதுவில் கருதுவதற்கும் ஆதரவு தருவதற்கும் இந்தியாவினது பங்கு எவ்வளவு என்பதை அவர்கள் கூட இன்று உணர்கிறார்கள்.
(5) எம்மைப் பொறுத்தவரை எது இந்தியா என்பதில் சந்தேகமே இல்லை. இந்திய மக்கள் மீதும் அவர்கள் உலகிற்கு தந்த கொடைகளிலும் அன்பு மட்டுமின்றி நிறைவான மரியாதையும் எதிர்பார்ப்பும் கொண்டவர்கள். ஆனால் இந்தியா என்ற டெல்லி அரசாங்கம் எமது போராட்டம் குறித்தும், புலிகளது போர் குறித்தும் எப்படியான கருத்தை முதலிருந்தே கொண்டிருந்தது என்பதிலும் விழிப்பாகவே இருந்தோம். பாலஸ்தீனியருடன் எமக்கு இருந்த உறவை 1980 களின் நடுப்பகுதில் அவர்கள் துண்டித்தபோது விழித்த கண்கள் இமை மூடவே இல்லை.
(6) போராட்ட அமைப்புகளிடையே நேரடித் தலையீடு செய்து ஆயுதப் பயிற்சி தர முன்வந்த போதே தனி நாட்டுக் கோரிக்கையை தாம் அநுமதிக்கப் போவதில்லை என்ற முன்நிபந்தனையை இந்தியா வைத்திருந்தது. “எவ்வளவு கெதியில் சிறீ லங்காவை தனது வழிக்கு கொண்டு வருவது” என்பதிலேயே அது கருத்தாக இருந்தது. மக்கள் போராட்டம் என்று கொள்கை கொண்ட அமைப்புகள், சோசலிசம் பேசும் அரசியல் ஆர்வம் கொண்ட அமைப்புகள்யாவும் பின் தள்ளப்பட்டன. மற்றவை சிபார்புகளின் படி முன் கொணரப்பட்டன. அநுராதபுரம் போன்ற படுகொலைகள் பேச்சு வார்த்தைக்கான நிலையை துரிதப்படுத்தின. விரைவிலேயே நேரடியாக இந்திய துருப்புகள் வந்து சேர வழியாயிற்று.
(7) இந்தியத் தலையீடு திருகோணமலை அமரிக்கக்-குரல் வானொலி (Voice of America) போன்ற கேந்திர நோக்குகளுக்கு பதிலானவை என்பது இருதுருவ உலக அரசியலில் சரியான விளக்கமாகத் தென்பட்டது. ஆனால், சோவியத் கூட்டமைப்பின் முடிவுகாலம் என எமக்குத் தெரியாது போயினும், இந்திய உளவு ஸ்தாபனங்களுக்கு தெரிந்திருக்கக் கூடிய நிலையில், தொழில் நுட்ப வளர்ச்சிகளால் பாரிய அளவு துருப்பினரை (rapid deployment force) ஒரு சில நாட்களிலேயே நகர்த்தக்கூடிய காலத்தின் தொடக்கத்தில், யப்பான் பிலிப்பைன்ஸ் நாடுகளில் கிளாக் சூபிக் குடா போன்ற முகாம்களை அமரிக்கா மூடத் தொடங்கிய காலத்தில், இவ்விளக்கம் போதுமானதாக இல்லை. இதனால் மேலதிக விளக்கமாக இலங்கையில் தமிழரது பிரிவினைவாதத்தை அநுமதித்தால் தமிழ்நாட்டிலும் வியாதி பிடித்துவிடும் என்ற அச்சத்தாலும் இந்தியா எம்மைப் பற்றிய தமது முடிவுகளுக்கு வந்தது என்பதும் ஒரு வாதம். புலவிதமான சர்ச்சைகளை உள்ளும் புறமும் எதிர்நோக்கும் டெல்லி அதிகாரிகள் இவ்வாதங்கள் யாவற்றையும்தான் கவனத்தில் கொண்டிருப்பார்கள்.
(8) இந்திய பாது காப்பு படை (IPKF) வெளியேற்றப்பட்ட போது இந்திய அதிகாரிகளது கெட்ட கனவுகள் நினைவாகின எனலாம். அங்கிருந்து திரும்பிப் பார்த்தால் அவர்கள் அன்றிலிருந்து இன்றுவரை எமது போராட்டம் குறித்து கொண்ட நிலைப்பாடுகள் புரியும். இந்தியப் படைகள் – புலிகள் மோதலிலான அவமரியாதைகளிலும் பார்க்க அவர்கள் வங்காள தேசத்தில் பெற்ற அநுபவத்தை அம்மோதல் ஊர்ஜிதம் செய்வதே முக்கியமாகிற்று. அங்கே பாக்கிஸ்தான் என்ற ஒரு எதிரியிலும் பார்க்க இரு வேறுபட்ட எதிரிகளுடன் தான் உருவாகியதும், அதிலும் இராணுவ சர்வாதிகார அரச அமைப்புகளுடன் தாக்கு பிடிக்க வேண்டியதும் வித்தியசாமான இடைஞ்சல்களை உருவாக்கின. தாக்கியது புலிகள்தானியினும் இந்திய அதிகாரகளுக்கு அமைப்புகள் பற்றிய வேறுபாடுகள் முக்கியமானதா என்பது கௌ;விக் குறியே. அதிலும் தனது பரம எதிரிகளுடன் சேர்நது இந்திவை வெளியேற்றியது “எனது எதிரியின் எதிரி எனது நண்பன்” என்ற ரீதியில் ராஜந்திரமாகக் கூட கருதப்பட்ட விடயம் “தனது எதிரியுடன் கூட்டுச் சேர்வதால் தன்னை எதிரியிலும் பார்க்க கூடிய எதிரியாக காட்டுகிறது” என்று இந்தியாவிற்கு உணர்தியிருக்கும் என்பதை நாம் அன்று புரிந்து கொள்ளவில்லை.
(9) மூன்றாம் உலக நாடுகளின் தேசியப் போராட்டங்கள் சமூக-பொருளாதார வளர்சியில் பின்தங்கியமையால் சர்வாதிகார அரசுகளாக மாறுவது சகஜம், அவற்றுள் இந்தியா போன்ற ஒரு சில நாடுகளே விதி விலக்கு. அதற்காக இந்தியாவில் ஜனநாயகம் பூரித்துப் பொங்குகின்றது என் நாம் கூறவில்லை. இந்திய அதிகாரிகளுக்கோ சர்ச்சைகளுடன் வாழ்வதுடன் சர்ச்சைகளால் சூழப்பட்டு வாழ்வது மேலும் கடினமான விடயம் என்ற உணர்வு எவ்வளவு தூரம் எமது போராட்டத்திற்கு பாதகமாக அல்லது சாதகமாக அமைந்தது என்பது கேட்டப்பட வேண்டியது.
(10) இந்தியாவை சுற்றியுள்ள நாடுகள் செயலிளந்தவை failed states என்பதை சுட்டிக் காட்டியுள்ளோம். அவற்றுள் பாக்கிஸ்தான்மயப்படல் என்பது மத முறையில் இராணுவமயப்பட்ட அரசியற் ஸ்தாபனங்களைக் கொண்ட அரசமைப்புகள் எனலாம். இது வற்காள தேசத்திலும் இடம் பெறுகிறது, ஆனால் அங்கு ஜனநாயக சக்திகள் இன்றும் நின்று பிடிக்கின்றன. சிறீ லங்காவிலும் இந்நிலை உருவாகி வருவதை இந்தியாவோ அங்குள்ள அரசியற் கட்சிகளோ பொதுவில் ஏற்கப் போவதில்லை. இதனைத் தடுப்பதாகின் சிறீ லங்காவின் இராணுவம் அரசியல்மயபடுத்துவதை தடுத்து professional army ஆக வைத்துக் கொள்ள வேண்டும். இது கூட இந்தய அதிகாரிகளது கவனத்தில் இருக்கலாம். ஆனால், பாக்கிஸ்தான்மயத்தில் இராணுவமும் UNP, SLFP போன்ற அரசியற் கட்சியாக மட்டுமின்றி அரசாங்களை நியமிக்;கும் நிர்ணையம் செய்யும் சக்தியாகவும் இருக்கும். இந்நிலை இன்னமும் இலங்கையில் இல்லை என்பது இந்தியாவுக்கு சாதகமாகவே உள்ளது.
(11) இன்று புலிகளுக்கு எதிராக இந்தியா வெளிக்காட்டும் நிலைப்பாடு இன்று நேற்று தொடங்கியிருக்க முடியாது. புலிகள் தம்முடன் மோதியது கேந்திர முக்கியத்துவமானது என்றால், ராஜிவ் காந்தியின் படுகொலை அதனது அடுத்த முடிவுகளுக்கு அரசியற் திரை போடுவதற்கு உதவியது. மேலும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகளுக்கு வாய்க்கட்டு போடுவதற்கும் ஏதுவானது. இலங்கைத் தமிழர்களை தனது கேந்திர பங்குதாரராக கணிக்க முடியாது என்ற தீர்க்த்துடன் அங்குள்ள சகல சமூகங்களையும் ஒரே மதிப்பில் இந்தியா கையாள முடிவு செய்திருந்தால் வியப்பதற்கில்லை. அதாவது, இந்திய எதிரப்புவாதம் இலங்கையின் சகல சமூகங்களின் அரசியல் வர்கங்களிடையே சம அளவில் இளை ஓடிஉள்ளது என்ற அவதானிப்பு எவ்வாறான தீரக்கமான முடிவுகளை இட்டுச் சென்றன என்பதை ஊகிக்க முடியாது.
(12) இலங்கையின் இனப் பிரச்சனைக்கு தனது அபிலாசைகளுக்கு குந்தகம் இல்லாதவாறு வெளியார் தீர்வு காண்பதை இந்தியா தடுக்காது போகிலும், அம் முயற்சிகளின் இயற்கையான இறப்பின் பின்னர் தனது திட்டங்களை நடைமுறைப்படுத்த அது என்றுமே தயாராகவே இருந்ததெனலாம். சிறீ லங்கா இராணுவத்தை பலப்படுத்தி புலிகளது பிரிவினைகளை நிஜப்படுத்தி கிழக்கிலிருந்து அப்புறப்படுத்தி ‘ஏக பிரதிநிதி’ என்பதற்கு முடிவு கொண்டுவருவது அதனது முடிவுகளில் ஒன்று என்பதை இன்று யாவரும்தான் உணர்ந்திருப்பர். ஆனால், இராணுவத் தீர்வு என்பது அனுமதிக்கப்பட முடியாது என்று அது கூறி வந்ததை யாரும்தான் நம்பி இருந்திருப்பர்.
(13) இராணுவ நிலைமையில் சமாந்திரத்தை மாற்றினால் இராணுவத் தீர்வு ஒரு கரைக்கு சாத்தியமாகும் என்பதை நாம் யாவரும்தான் அறிவோம். கேந்திர ரீதியில் கனரக ஆயுதங்களை, விமானக் குண்டு வீச்சுகளை, பல்-குளல் ஏவுகணைகளை தாங்கிப் படைத் தாக்கலை அனுமதித்தால் பல்லாயிரம் படை கொண்ட சிறீ லங்கா போரை தன்வசமாக்க முடியும் என்பதையும்தான் நாம் உணர்ந்திருப்போம். இன்று இந்நிலை மாறியிருந்தால் அது எப்படிச் சாத்தியமானது? ‘சர்வதேசிய சமூகம்’ முதலைக் கண்ணீர் வடிப்புகளுக்கு அப்பால் எப்படிததான் அனுமதி தந்தது? தமிழ்நாட்டில் எதிரப்புகளை எதிர்பார்தது இருந்தும் இந்தியா எப்படி தடுக்காது இருந்தது?
(14) சகல தமிழ் தலைமைகளையும் புலிகள் அழித்தொழிப்பதை அனுமதிப்பது போல இருந்துவிட்டு, புலிகளை தாமே ஏக பிரதிநிதிகளாக பங்கள+ர் பேச்சுவார்ததையிலிருந்து நியமித்துவிட்டு இன்று அவர்களை அழித்தொழிக்க முடிவுக்கு வரும்போது அவர்கள் எமது மக்களது தலைமை என்ன என்று எப்படியான முடிவுக்கு வந்துள்ளனர்?
(15) “புலி அன்றறுக்கும் இந்தியா நின்றறுக்கும்” என்று அன்று நாம் சிலேடையகக் கூறியது இன்று கண்முன் நிஜமாகிறது. ஆனால் நாம் இந்திய எதிரப்பாளர்கள் அல்லர். “பணிந்து வாழ்பவன் எதிரியை மட்டுமே அறிந்தவன், ஆனால் பணிவுடன் வாழ்பவன் தன்னையும் அறிந்தவன்” என்பதை நாம் உணர வேண்டும்.
தேசம்நெற் : இணைத் தலைமை நாடுகள் தமிழீழ விடுதலைப் புலிகள் சரணடைய வேண்டும் என்ற கோரிக்கையை வைத்தள்ளன. இந்தியாவும் அவ்வாறான ஒரு நிலைப்பாட்டையே கொண்டு உள்ளது. இன்றைய யுத்தம் பாரிய மனித அவலத்தை ஏற்படுத்திக் கொண்டு உள்ளது. யுத்தப் பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றாதவரை இழப்புகள் அதிகரித்துக் கொண்டே செல்லப் போகின்றது. இவை பற்றி பற்றி….
ரவி சுந்தரலிங்கம் :
(1) ஆயுதக் கையளிப்பு என்பதற்கும் சரணடைதலுக்கும் பாரிய வேறுபாடுகள் உள்ளன. ஆனால் யாரும் அதைக் கேட்கவில்லை. நாம் யாரும் ஆயுதங்களுடன் பிறக்கவில்லை, எமது மக்களது பாதுகாப்பின் நிமிர்தமே ஆயுதம் தரித்தோம், ஆகையால் அவர்கள் பேரில் அவற்றினை களையவும் தயாராக இருக்க வேண்டும்.
(2) “மக்களுக்கு பாதுகாப்பு கிடைத்துவிட்டதா?” என்பது முதலாவது கேள்வி. “ஆயுதத்தால் பூரண பாதுகாப்பை வழங்க முடியாது போய்விட்டதா?” என்பது இரண்டாவது கேள்வி.
(3) மேல் இரண்டுக்கும் தகுந்த சிந்தனையின் பின்னர் “ஆம்” என்ற பதிலாகிவிட்டால், “கையில் இருக்கும் தளபாடங்களை, போரிட தாயாரக உள்ள நிலைப்பாட்டை, போரால் உள்ள அநுபவத்தை, அவையாவற்றையுமே கொண்ட சூழலை எவ்வாறான அரசியல் உடமைகளுக்கு மாற்றீடு செய்வது?” என்பது மூன்றாவது கேள்வி.
(4) அவற்றிக்கும் தகுந்த பதில்கள் இருக்குமாயின் “ஆயுதங்களை யாரிடம் கையளிப்பது?” என்பது அடுத்த கேள்வி.
(5) சிறீ லங்காவோ தனது அரசமைப்பை மாற்றிட தயாராக இல்லாத நிலையில் சிறீ லங்காவிடம் ஆயுதக் கையளிப்புச் செய்வது சரணடைவதாகும். அதனிலும்பார்க்க இராணுவ ரீதியில் தோல்வியைத் தழுவுவது புலிகளுக்குத் தகும் என்பது புரிந்து கொள்ளக் கூடியது. சரித்திர ரீதியில் இலாபகரமானது. இதனை போரிடாது வசதியாக வாழும் எம்மால் கோரிட முடியாது! வெறும் கருத்தாகவே முன்வைக்க முடியும்.
(6) சிறீ லங்கா சிறுபான்மை மக்கள் என்றோ மனித உரிமைகளென்றோ நிலைப் பாடுகளை எடுக்கும் அரசியற் சூழலையோ அற்கான தலைமைகளையோ கொண்டதல்ல. அன்று ஆட்சியை கைப்பற்றிய குட்டி பூர்சுவாக்களின் பௌத்தமத-சிங்களவாதமான சோவனிசம் இன்று ப+ர்சுவாக்களின் பெரும்தேசிய சிங்கள வாதமாக வளர்ச்சிகண்டுள்ளது. இதனை வெளிநாடுகள் குறிப்பாக ஆசிய நாடுகள் பாவித்துக் கொள்வதற்கான நிலமை உருவாகியுள்ள போதிலும், அவை சிறுபான்மையினருக்கு சாதகமாக அமைவதற்கு போதுமான வளர்ச்சி இல்லாமலே உள்ளது.
(7) ஆனால், இவையனைத்தையும் சீராக நடத்த ஒட்டு மொத்தமான அரசியற் தலைமைப் பீடம் த.பே.மக்களுக்கு அவசியம். ஆதனை நாம் TNC என்ற பெயரில் என்றிருந்தோ பிரேரித்த வண்ணம் உள்ளோம். அதுபற்றி சில வருடங்களுக்கு முன்னர் டக்லஸ் தேவானந்தாவுடன் கூட உடன்பாடு கண்டிருந்தோம், புலிகளிடமும் பேசி இருந்தோம். சிறையில் தாக்கப்பட்டு டக்லஸ் கண்பார்வை இழந்ததிலிருந்து அவ்வழி தூர்ந்து போய்விட்டது. ஆனால், இன்று புது வழிகள் திட்டங்கள் கொண்டு அதனைத் தேட வேண்டிய நிலையிலையே நாம் உள்ளோம்.
(8) அதே வேளை தமிழ் அமைப்புகளிடையே மாற்றங்கள் உருவாகி உள்ளதையும் நாம் கவனிக்க வேண்டும். அன்று புலிகளாலேயே கொழும்பில் இருக்க வேண்டிய நிலை இன்று போய்விட்டது. “அரசுடன் நாம்” என்பவர்களாகயும் “அரச அமைப்பை மாற்றிட வேண்டும்” என்பவர்களாகவும் தமிழ் பேசும் மக்களது அரசியல் நிலமை பிரிவு காணத் தொடங்கி உள்ளது. இவ்வாறான இரு நிலை வேறுபாடு சிங்கள மக்களிடையே குறைந்த அளவிலேயே உள்ளது.
ஒரு வேண்டுகோள்:
பதில்கள் கேள்விகளின் அடிப்படையில் தரப்பட்டிருப்பினும், சகலதையும் கூட்டிச் சேர்த்துப் பார்த்தே எமது கருத்துகளை புரிந்துகொள்ள வாசகர்கள் விளைவார்கள் என்பதில் நம்பிக்கை. ஓரு கருத்துடன் புலிக்கு வக்காலத்து என்றும், மற்றதுடன் புலி எதிரப்பாளர் எனவும், அதேவேளை இந்தியவாதி என்றும் இந்திய எதிர்பாளர் என்றும் சிந்தனையே இல்லாது வெறும் உணர்ச்சியின் உந்தல்ளில் மட்டும் ஊசலாடி வாழ்வது சில வேளை இதமானதாக இருக்கலாம், ஆனால் எமது மக்களது வளர்சியை அன்றி அவர்களது குறும் தன்மைக்கும் வீச்சற்ற பார்வைக்குமே ஆதாரமாகிவிடும்.
மேலும், இக் கலந்துரையாடலுக்கான சந்தர்ப்hத்தை வழங்கியமைக்கு தேசம் இணைவுத் தளத்தினருக்கு, குறிப்பாக நண்பர்கள் ஜெயபாலனுக்கும் சோதிலிங்கத்திற்கும் நன்றி.
ரவி சுந்தரலிங்கம்
Academic Secretary
ASATiC
ரவி சுந்தரலிங்கம் எழுதிய சில கட்டுரைகள் :
http://www.southasiaanalysis.org/searchb10.asp?search=Ravi+Sundaralingam&searchtype=all
http://thesamnet.co.uk/?cat=36&submit=%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D