நேர்காணல்கள்

நேர்காணல்கள்

”அஜீவன் காணாமல் போகவில்லை. எனது தளத்தை மாற்றிக் கொண்டேன்.” அஜீவனுடன் ஒரு நேர்காணல்.

Ajeevanஅஜீவன் சிறுவயது முதலே மேடை நாடகங்கள் வானொலி தொலைக்காட்சி என பலவேறுபட்ட அனுபவங்களைக் கொண்டவர். சிங்கப்பூர் தொலைக்காட்சி நிறுவனத்திலும் இவர் பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது. சுவிஸ்க்கு புலம்பெயர்ந்த பின்னரும் இன்று வரை அவருடைய ஊடகப் பயணம் அனுபவம் தொடர்கின்றது.

புலம்பெயர்ந்த பின்னர் குறும்படங்களை இயக்கி சினிமாத்துறையில் தனக்கென்று ஒரு அடையாளத்தைப் பதித்துக் கொண்டவர். அண்மைக்காலத்தில் பல சினிமா முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் அவற்றுக்கு முன்னதாகவே 2000 ஆண்டு காலப்பகுதியிலேயே மாற்று சினிமாவுக்கான ஒரு தளத்தை உருவாக்கியவர். 2002 மார்ச் 30 – 31ல் தேசம்நெற் ஏற்பாடு செய்த குறும்படப் பயிற்சிப் பட்டறையில் பயிற்சிகளை வழங்கி இரு குறும்படங்கள் அதில் உருவாக்கப்பட்டது.  http://www.oruwebsite.com/tamil_eelam_videos/musicvideo.php?vid=e593271b8

தற்போது சுவிஸ் நாட்டு தொலைக்காட்சியில் பணிபுரிந்து வருகின்ற அஜீவன் ‘ஜீவன் போர் யு’ என்ற பெயரில் சுவிஸ் வானொலியில் வாராவாரம் தமிழ் சிங்கள நிகழ்ச்சிகளைத் தயாரித்து வழங்கி வருகின்றார். தனது சினிமா அனுபவங்களை தேசம்நெற் வாசகர்களுடன் அஜீவன் பகிர்ந்து கொள்கின்றார். உங்களுடைய மேலதிக கேள்விகளைப் பதிவு செய்தால் அஜிவன் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்வார். (இந்நேர்காணல் மின் அஞ்சலூடாகப் பதிவு செய்யப்பட்டு உள்ளது.)

._._._._._.

Ajeevanபுலம்பெயர்ந்த மண்ணில் யாத்திரை கவிக்குயில், ரீஸிங், பீல்ட் த பெயின், நவ் அன் போரெவர், நிழல் யுத்தம், எச்சில் போர்வை, பவர் அழியாத கவிதை என்று குறிப்பிட்டுச் சொல்லப்படக் கூடிய குறும்படங்களை இயக்கி உள்ளீர்கள். இந்த அனுபவங்களினூடாக தற்போதுள்ள புலம்பெயர் சினிமா பற்றிய உங்களுடைய மதிப்பீடு என்ன?

பூத்து குலுங்கும் என்று எதிர்பார்த்த சினிமா, முட்களுக்குள் சிக்கிக் கொண்டதனால் தன்னையே இறுக்கி தன்னை நசுக்கிக் கொண்டது. வளரும் போதே வளைந்து போனது. சுதந்திரமாக பேசப்பட வேண்டிய சினிமா, விருதுகளை வெல்வதற்கு சுயநலமாகிப் போனது. இலங்கை தமிழ் சினிமாவை தோற்கடித்த அதே தமிழன் புலத்திலும் புலத்து தமிழ் சினிமாவை தோற்கடித்தான் என்பதை வருத்தத்தோடாவது மனம் திறந்து சொல்லியே ஆக வேண்டும். சினிமாவை உருவாக்கிய படைப்பாளிகளது பெயரைக் கூட, படம் காட்டியவர்கள் தட்டிப் பறித்துக் கொண்டார்கள். அதாவது திரையிட்டவர்கள் பெற்ற புகழின் ஒரு சதவீதத்தையாவது, அதை உருவாக்கியவனால் பெற முடியவில்லை. அரசியல் தளங்களைக் கொன்டோர் கையில் புலம் பெயர் சினிமா சிக்கிய போது, சாவுச் சங்குச் சத்தம் கேட்கும் என்பதை உணர்ந்தேன்.

நேர்மையான கலைஞர்களை மெளனிக்க அது வழி வகுத்தது. ஏதோ அதிஸ்டத்தில் வென்றவர்கள் அப்போதைய அலையோடு அடங்கிப் போனார்கள். திறமையான சிலர் மனப்புழுக்கத்தில் வெந்து வெறுத்து ஒதுங்கினார்கள். பலருக்கு ஆசை இருந்த அளவு, அந்த கலை குறித்து அறிவு இருக்கவில்லை. அதை வளர்த்துக் கொள்ளவும் யாரும் முயலவில்லை. அது குறித்து சொன்னாலும் அதை யாரும் ஏற்றுக் கொள்ளவும் இல்லை. சினிமா தெரிந்த இளைஞர்களுக்குக் கூட அடுத்த முயற்சிக்கு ஒத்துழைப்பு கிடைக்கவில்லை. பாவம் அந்த இளைஞர்கள்.

புலம்பெயர் சினிமாவிற்கான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் புலம்பெயர் சினிமா தனது தனித்துவத்தை நிலைப்படுத்திக் கொள்ள முடியாத ஒரு நிலையே காணப்படுகின்றது. கனடா, லண்டன், பிரான்ஸ், சுவிஸ் என சினிமாவுக்கான அமைப்புகளும் குறும்பட விழாக்களும் உருவாகிய போதும் அவை விளலுக்கு இறைத்த நீராகிவிட்டதோ என்று எண்ணத் தோன்றுகின்றது. இந்நிலைக்குக் காரணம் என்ன?

குறும்பட விழாக்களின் தேர்வுக் குழுவினர், சினிமா தேர்வுக் குழுவுக்கு எப்படித் தேர்வானார்கள் என்ற வினாவை எழுப்பினால் இதற்கான பதில் கிடைக்கும். எழுதவே தெரியாதவன் பரீட்சை தாள் திருத்தியதன் விளைவை இப்போது அனுபவிக்க வேண்டி வந்துள்ளது.

இரண்டாயிரமாம் ஆண்டின் முற்பகுதிகளில் அஜீவன் என்ற இயக்குநரிடம் இருந்து தொடர்ச்சியாக சில படைப்புகள் வந்த வண்ணம் இருந்தது. ஆனால் தற்போது புலம்பெயர்ந்த தமிழ் சினிமாச் சூழலில் அஜீவன் காணமற் போனது ஏன்?

அஜீவன் காணாமல் போகவில்லை. எனது தளத்தை மாற்றிக் கொண்டேன். நான் வாழும் சுவிஸ் சினிமாவோடும் தொலைக் காட்சிக்குள்ளும் என்னை பதித்துக் கொண்டேன். இலங்கை சிங்கள சினிமாவில் என் குழுமத்தோடு எப்போதும் போல் இருக்கிறேன். என்னைப் போல்தான் நாளைய இளைய புலம் பெயர் தலைமுறையும் செய்யும். இருள் படிந்ததால் சூரியன் இல்லாமல் போய் விட்டதாக யாரும் அர்த்தம் கொள்ளக் கூடாது. அது மறு புறத்தில் ஒளி கொடுத்துக் கொண்டு தன் பணியை தொடர்ந்து செய்கிறது.

குறிப்பாக ஈழவர் திரைக் கலை மன்றத்தின் அணுசரணையுடன் உங்களின் சில படைப்புகள் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஈழவர் திரைக்கலை மன்றத்தின் சினிமா முயற்சிகளும் ஸ்தம்பித்துப் போயுள்ளது. ஏன்?

உண்மையானவர்களை யாரும் உடனடியாக ஏற்றுக் கொள்வதில்லை. அதை அவர்கள் உணரும் போது, காலம் கடந்து இருக்கும். பணம் இருக்கும் அல்லது இல்லாமல் போகும். கற்ற கல்வியை எவராலும் அழிக்க முடியாது. எனவே பணத்தாலும், பலத்தாலும் மட்டும் எதையும் வெல்ல முடியாது. ஜால்ராக்கள் எங்கும் சூழலாம். நல்ல நண்பர்கள் எங்கும் சூழ்ந்து இருக்க மாட்டார்கள். உண்மை பேசுவோர் எதிரிகளாகத் தெரிவார்கள். ஆனால் உண்மைகள் பொய்யாவதில்லை. மெதுவான வளர்ச்சியை கொள்ளாமல், அகலக் கால் பதிக்க முயன்றதும், சுயநலவாதிகள் சூழப் பெற்றதும், அவர்களை ஏற்றுக் கொண்டதும், ஈழவர் திரைக்கலை மன்றத்தின் ஸ்தம்பிதத்துக்குக் காரணம்.

நான் ஏனையவர்களது படைப்புகளை கொண்டு வர ஆதரவும், ஆலோசனையும் வழங்கினேன். அதுவே எனது அவாவாகவும் இருந்தது. பிரான்சில் படைப்புகளை செய்ய அடிப்படை தேவைகள் மற்றும் முன்னெடுப்புகளை எப்படிச் செய்வதென ஆலோசனை வழங்கினேன். அங்கே படப்பிடிப்பு நடத்தி, அதன் வெளியீட்டின் பின்னேதான் என்ன செய்துள்ளார்கள் என பார்க்க முடிந்தது. அதுவும் அரைப் பிரசவமானது.

ஜெர்மனியில் ஒரு படத்தின் மேற்பார்வைக்காகச் சென்று, அதன் ஒளிப்பதிவையும், அவர்களுக்கான உதவிகளையும் என் செலவிலேயே செய்தேன். இன்றுவரை அந்த படத்தின் ஒரு பிரதி கூட எனக்குக் கிடைக்கவில்லை. காட்டவும் இல்லை. நான் பிரான்ஸ் சென்ற போது, படத்தொகுப்புக்கு முன்னரான பகுதிகள் நடிகர் ரகுநாதனிடம் வந்துள்ளதாக சொன்னார். அடுத்த நாள் அவர் வீட்டுக்கு சென்று, அனுப்பியுள்ள ஒளிப்பதிவு செய்து உங்களிடம் வந்துள்ள பகுதிகளை பார்க்கலாமா என்று கேட்டேன். அதை அனுப்பி விட்டேன் என ஒரு பெரும் பொய்யை சொன்னார். நான் எனக்குள்ளேயே சிரித்துக் கொண்டேன். ஒளிப்பதிவாளருக்கு காட்டாமல் படத்தை எடிட் செய்யும் கொடுமையை அன்றுதான் உணர்ந்தேன்.

சினிமா என்பது இயக்குனர் மீடியா என்றாலும் இயக்குனர் நினைப்பதை ஒரு ஒளிப்பதிவாளனே செதுக்குகிறான். அவன் எடுத்த ஷாட்களில் தவறானதை பாவிக்காதீர்கள் என்று சொல்லக் கூட ஒளிப்பதிவாளருக்கு உரிமையில்லாத கொடுமையை இவர்களிடம் கண்டேன். இவையெல்லாம் இவர்கள் செய்த மாபெரும் தவறுகள். சமைத்த சமையல்காரருக்கு ருசி பார்க்ககூட சந்தர்ப்பம் அளிக்காது விருந்தினருக்கு பரிமாறியதில் உணவு விடுதியை மூடவேண்டி வந்துள்ளது.

இங்கே சிலதை சொல்லியே ஆக வேண்டும். இது பலருக்கு மனவேதனை தந்தாலும், புதியவர்களுக்கு வழிகாட்டியாக நான் சொல்பவை சிலவேளை அமையலாம்.

எனது சினிமா ஆசான் அன்றூ ஜயமான்ன சொல்வார் ” ஒன்று வேலை தெரிந்தவனோடு வேலை செய். அல்லது வேலை தெரியாதவனோடு வேலை செய்.” என்பார். அரை குறைகளோடு மட்டும் வேலை செய்யாதே என்பார். வேலை தெரிந்தவர்களோடு வேலை செய்தால், அவர்களிடமிருந்து நீ எதையாவது கற்றுக் கொள்வாய். வேலை தெரியாதவனோடு சேர்ந்து வேலை செய்தால் நீ சொல்வதை அவன் ஏற்றுக் கொள்வான். அவனும் எதையாவது கற்றும் கொள்வான் என்பார். காரணம் அரை குறைகளோடு வேலை செய்தால் நீ சொல்வதை அவனும் ஏற்றுக் கொள்ள மாட்டான். அவன் சொல்வதை உன்னாலும் ஏற்றுக் கொள்ள முடியாது” என்பார். அதை நம்மவர்களிடம் அநேகமாக பார்க்கலாம்.

ஸ்டார்ட், கட் சொன்னால் அல்லது ஒரு நல்ல கேமரா இருந்தால் படம் எடுக்கலாம் என்பதை விட அநேக விடயங்கள் இருக்கிறது என்பதை நம்மில் பலர் உணராமல் இருப்பது வேதனையானது. என்னோடு பேசிய அநேக தமிழர்கள் இப்படியான தமிழ் சினிமா ஆர்வலர்கள். அரசியல் மற்றும் போராட்ட வரலாறு கொண்டவர்களுக்கு அவர்கள் சார்ந்த கருத்து திரைப்படம் எடுக்க ஆவல். அது எனது குறிக்கோள் அல்ல.

இலங்கையில் நாங்கள் எடுத்த இரு சிங்கள திரைப்படங்களின் இயக்கத்தையும் என் நண்பனே செய்தான். ஆரம்பம் தொட்டு இறுதிவரை நான் அவனோடு இருந்தேன். முதலாவது படம் அவனை தொலைக் காட்சியிலிருந்து, வெள்ளித் திரைக்கு கொண்டு வந்தது. அவன் இலங்கையின் 3 தொலைக் காட்சிகளை உருவாக்கிக் கொண்டு வர அடிப்படையாக இருந்தவன்.

இவற்றில் பணியாற்றிய நாங்கள், இலங்கையின் திரைப்பட மேதையும் இடதுசாரியுமான காலஞ்சென்ற திஸ்ஸ அபேசேகரவின் சினிமா குழந்தைகள். http://en.wikipedia.org/wiki/Tissa_Abeysekara , http://www.bbc.co.uk/sinhala/news/story/2009/04/090418_tissa.shtml . அவர் எமக்கு ஆசீர்வாதமாக மட்டுமல்ல, அடித்தளமாகவும் இருந்தார். நாங்கள் உலக சினிமாவுக்குள் செல்ல வழிகாட்டியாக இருந்தார். ஈகோக்கள் உருவாகாத மனதை கொடுத்தார். தவறானதை செய்யாதே, தூக்கி எறிந்துவிட்டு வெளியேறு. அதுவே உன்னை உண்மையான படைப்பாளியாக அடையாளம் காட்டும். என்னதான் கிடைத்தாலும் தவறான படைப்புகளை உருவாக்க வேண்டாம் என அறிவுரை தந்தார். தவறான ஒரு திரைப்படம் ஒரு சமூகக் கொலைக்கு சமன் என்றார்.

இலங்கையில் உருவான திரைப்படங்கள் தொடர்பாக, நாங்கள் அரசியலுக்குள் சிக்கிக் கொள்வில்லை. அது கலைஞனுக்கு மாபெரும் ஆபத்து. முதல் திரைப்படத்தில் இலங்கைக்குள் தடம் பதிப்பதை குறியாகக் கொண்டோம். அத்திரைப்படம் போர் காலத்தில் திரைப்பட்டதால் பெரும் வசூல் கிடைக்கவில்லை. எம்மைக் காத்துக் கொண்டோம். அதனால் உலக சினிமாவுக்குள் எம்மை அறிமுகம் செய்து கொண்டோம். அது அடுத்த நகர்வுக்குத் தேவையாக இருந்தது. காலம் தாழ்த்தாது உடனடியாகவே அடுத்த படத்தை உலக சினிமாவுக்காக கொண்டு வந்தோம். அத் திரைப்படம் இலங்கை அரசியல் களம் மற்றும் யுத்தம் காரணமாக வெளியிட வைக்காது தாமதிக்க வைத்தது. ஆனால், உலக சினிமா எம்மை அடையாளம் கண்டுள்ளது. தற்போது அடுத்த படத்தை தொடங்கியுள்ளோம். அது இலங்கை பாதாள உலகம் குறித்த திரைப்படம்.

இங்கே பணிபுரியும் அனைவரும் நான் என்பதை விட, நாங்கள் என்று படைப்புகளை உருவாக்குகிறோம். என்னை விட, இலங்கை பிரச்சனை தெரிந்த என் நண்பர்கள் சினிமா வல்லுனர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். அந்த தளத்தில் உள்ளவனே அதற்கு சிறந்தவன். நான் உலக சினிமாவுக்கு எமது படைப்புகளை கொண்டு செல்லவும், தயாரிப்பு மற்றும் வினியோகம் குறித்தும் இந்தியாவில் லேப் வேலைகள் தொடர்பாகவும் எனது பணியை முன்னெடுக்கிறேன். இதற்கும் என்னை விட என் நண்பர்களே நேரடியாக பணியாற்றுகிறார்கள். நான் போய்ச் செய்வதை பல வேளைகளில் தொலைபேசி வழியே பணிக்கிறேன். எனவே புரிந்துணர்வுள்ள நாங்கள் ஒரு குழுமமாகவே பணியாற்றுகிறோம். முடிந்தளவு செலவுகளை கட்டுப்படுத்த இவை உதவுகின்றன. இதை எம்மவரோடு செய்வது கடினமாக உணர்கிறேன்.

எம்மவர் மருத்துவரை ஒதுக்கி விட்டு, ஓடலிகளை வைத்து மருந்து கொடுக்க முற்படுவதாக சொன்னால் நம்பவா போகிறார்கள். என்னை அடிக்கத்தான் வருவார்கள். அதுவே தொடர்கிறது. காலம் வரும். அப்போது தமிழில் நல்ல படைப்புகளையும் நிச்சயம் தருவோம். அதற்கான தருணம் உருவாகிறது என நம்புகிறேன்.

அண்மைக் காலங்களில் சிங்கள மொழிப் படங்கள் இரண்டை இயக்கியதாக அறிந்துள்ளேன். அவை பற்றி சற்று கூற முடியுமா?

இயக்கவில்லை. எனது ஆசான்களோடும், நண்பர்களோடும் இணைந்து இரு சிங்கள திரைப்படங்களை உருவாக்கி இருக்கிறோம். Sankranthi’ (The Tender Trap), 2006 இந்திய திரைப்பட விழாவிலும், கனேடிய திரைப்பட விழாவிலும், சுவிஸ் திரைப்பட விழாவிலும் பங்கேற்றது. Sankranthi’ இலங்கையில் திரையிடப்பட்டு விட்டது. இத் திரைபடத்தின் உரிமை சிரச தொலைக் காட்சிக்கு விற்கப்பட்டுள்ளது. வெளிநாட்டு உரிமை என்னிடம் உள்ளது.
http://img19.imageshack.us/img19/24/ajeevanfilmteam.jpg
சென்னையில் திரைப்பட குழுவினர் இறுதிக் கட்ட பணிகளுக்கு சென்ற போது….

http://www.cyberstudio.biz/HB/static/anujaya/sankranti-html/film-makers.html

http://www.youtube.com/watch?v=6WMQaUWqGFk&feature=channel_page

http://sundaytimes.lk/061231/TV/012tv.html

http://www.cfi-icf.ca/index.php?option=com_cfi&task=showevent&id=14

http://iffi.nic.in/MoreFilm.asp?id=307

அடுத்த Cruel Embrace / Dhawala Duwili. 2007, 35 mm, Colour, 90 mins, Sinhala திரைப்படம் சோவியத் திரைப்பட விழாவில் விருதொன்றையும், இந்திய திரைப்பட விழாவில் பங்கு கொண்டும் உள்ளது. இன்னும் திரையிடப்படவில்லை. இலங்கையில் இடம் பெற்று வந்த, யுத்தம் காரணமாக போர்களம் செல்லும் படையினரால் சின்னா பின்னமாகும் சிங்கள கிராமத்து மக்களின் வாழ்வின் ஒரு பகுதியான போர்க்கால விதவைகள் குறித்து பேசும் இத் திரைப்படத்தை சில அரசியல் காரணங்களால் இன்னும் திரையிட முடியவில்லை.
http://www.cyberstudio.biz/HB/static/anujaya/davala_duvili-html/davala-duvili.html

http://www.iffigoa.org/iffi2007/SCREENINGSCHEDULE07.doc

சுவிஸ் திரைப்பட அமைப்பின் உத்தியோகபூர்வ உறுப்பினராக உள்ள நீங்கள் அதன் அனுபவத்தை சுருக்கமாக சொல்ல முடியுமா?

நான் வாழும் நாட்டு திரைப்படத் துறையினரோடு வாழ்வதற்கும், அவர்களுக்குள் இருப்பதற்கும் ஒரு வரமாக அதைக் கருதுகிறேன். நான் செய்வது குறைவு, மதிக்கப்படுவது அதிகம். அதில் மகிழ்வாக இருக்கிறது.

அண்மையில் பேர்ளின் திரைப்பட விழாவில் திரையிடத் தெரிவு செய்யப்பட்ட ஆர் பிரதீபனின் ‘என் வீட்டு முற்றத்தில் ஒரு மாமரம்’, ஆர் புதியவனின் துறுத வின்டோ போன்ற குறும்படைப்புகள் என அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வெளிவந்துள்ளது. ஆர் புதியவன் தொடர்ச்சியாக முழுநீளப் படங்களை இயக்கி வருகின்றார். அண்மையில் ‘லண்டன் மாப்பிளை’ என்ற படத்தின் காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டது. இவை புலம்பெயர் சினிமாவில் உங்களுக்கு நம்பிக்கை அளிக்கின்றனவா?

மகிழ்வாக இருக்கிறது. நல்ல படங்கள் அனைத்து தரப்பாலும் வர வேண்டும். அவர்களை வாழ்த்துவேன். எனக்கு அவர்களது வேதனையை உணரத் தெரியும். முன்னரெல்லாம் எனது எண்ணங்களை சொல்ல முயன்றேன். புலம் பெயர் படைப்பாளிகளை உருவாக்கவும் முயன்றேன். அதன் பிரதி பலனை எப்போதோ அனுபவித்து திருந்தி விட்டேன். இப்போது அதைச் செய்வதை தவிர்த்து வருகிறேன். முதுகில் குத்தியவர்களை விட்டு எப்போதோ பாதையை மாற்றிக் கொண்டேன். இப்போது உலக மக்களுக்காக சினிமா செய்கிறேன். அது எந்த மக்கள் என தரம் பிரிப்பதல்ல என் நோக்கம். எனவே என்றும் மகிழ்வாக இருப்பேன்.

புலம்பெயர் தமிழ் சினிமா – மாற்றுச் சினிமா எதிர்கொள்கின்ற தடைகள் என்ன? அவற்றை எவ்வாறு தாண்ட முடியும் என நீங்கள் நினைக்கின்றீர்கள்?

இது அவரவர் திரைப்படம் செய்யும் கரு மற்றும் தளத்தைப் பொறுத்தது. எங்கும் தடை வரலாம். தடைகளை தாண்டி நேர்மையோடு நடக்கிறவன்தான் கலைஞன். நம் மனதுக்கு சரியென்று பட்டு, அதைச் செய்தால் தோல்வியிலும் மகிழலாம். வித்தியாசமாக படைப்பவனால் மட்டுமே படைப்பாளியாக உலக சினிமாவில் தடம் பதிக்கலாம். அதற்காக நம் இதயத்துள் இரத்தம் சிந்தி நமக்குள்ளேயே போராட தயாராக இருக்க வேண்டும். தோல்விகள் என்பவைதான் வெற்றிக்கான வழி காட்டல்கள். நம்மில் பலர் மரத்தை வெட்டி வீழ்த்தி விட்டு பழம் புடுங்கி சாப்பிட நினைப்பவர்கள். அல்லது நினைத்தவர்கள். பழம் புடுங்க மரம் இருந்தால்தான் தொடர்ந்தும் பழம் புடுங்கலாம் என அவர்களாகவே உணரும் காலம் வரை நம்மால் உயர்வடைய முடியாது. அதை உணர்ந்தால், அடுத்த நொடியே நம் சமூகம் அனைத்து தடைகளையும் உடைத்துக் கொண்டு உயர்வடையும். அந்த நாள் வரை பொறுப்போம்.

நீங்கள் தேசம் சஞ்சிகையுடன் இணைந்து சினிமா பயிற்சிப் பட்டறை நடாத்திய காலங்களில் குறும்படங்களைத் தயாரிப்பவர்கள் அவற்றை வெளியிடுவதற்கான தளங்கள் இல்லாமல் விரல் விட்டு எண்ணக் கூடிய தங்கள் உறவினர்களுக்கு நண்பர்களுக்கு போட்டக் காட்டி விட்டதுடன் முடிந்துவிடும். இன்று யூ ரியூப் போன்ற தொழில்நுட்பங்கள் பார்வையாளர் தளத்தை உலகளாவிய தளத்திற்கு விரிவுபடுத்தி உள்ளது. அதனை புலம்பெயர் தளத்தில் உள்ளவர்கள் ஏன் முழுமையாகப் பயன்படுத்தத் தவறுகின்றனர்?

நான் செய்த தவறுகளில் இதுவும் ஒன்று. புலத்து திரைப்பட படைப்பாளிகள் உருவாக வேண்டும் என நினைத்தேன். இலவசமாக பயிற்சி பட்டறைகளை நடத்தினேன். அந்த காலத்தில் நான் வேறு ஏதாவது செய்திருக்கலாம். ஒரு சிலரைத் தவிர பலரால் தலை காட்ட முடியவில்லை. திறமையை விட ஜால்ரா அடிக்க கற்றுக் கொண்டால்தான் எம்மவர் மத்தியில் நிற்க முடியும். அது எனக்கு வராது. எனவே இங்கே தோற்பதே என் வெற்றி.

யூ டியுப்பினால் கூட கலைஞர்கள் ஏழ்மை நிலைக்குத்தான் போகிறார்களே தவிர, பொருளாதாரத்தில் எவரும் முன்னேறவில்லை. பொழுது போக்கிற்காக இது பரவாயில்லை. வீட்டு அடுப்பு எரிய இந்த வழி பயன்தராது. இது சில நினைவலைகளை மீட்க உதவலாம் அல்லது ஒருவரை வெளிக்காட்டிக் கொள்ள உதவலாம். ஒரு கலைஞனை வாழ வைக்காது. முதலில் ஒரு கலைஞனை வாழவைக்க முயலுங்கள். அதைக் கண்டு அடுத்த கலைஞன் தோன்றுவான். அதிக சம்பளம் கிடைக்கும் ஒரு இடத்துக்குத்தான் எவரும் வேலை மாறுகிறார்கள். தனக்கு பிடித்த இடத்தில் இலவசமாக எவராவது வேலை செய்வதை யாராவது பார்த்திருக்கிறீர்களா? அதை நம் கலைஞர்களிடம் மட்டுமே காணலாம். பாவப்பட்ட ஜென்மங்கள்.

படைப்புகளிலும் பார்வையாளரின் ரசனையிலும் புலம்பெயர் மண்ணில் தோன்றிய தொலைக்காட்சிகள் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது?

பாவம் புலம் பெயர் தமிழ் பார்வையாளர்கள். வானோலி நிகழ்ச்சிகளை தொலைக் காட்சியில் பார்க்கிறார்கள். இந்திய படைப்புகள் இல்லையென்றால், எவரும் தொலைக் காட்சியையே பார்க்க மாட்டார்கள். தொலைக் காட்சியை பார்த்து முட்டாள்கள் ஆன மக்கள் குறித்து ஒரு ஆய்வு நடத்தினால், எந்த மக்களில் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பதை நான் சொல்லி எவரும் தெரிந்து கொள்ள வேண்டியதில்லை? அந்த அளவுக்கு நம் தொலைக் காட்சிகள் நம் சமூகத்துக்கு கெடுதல் செய்து கொண்டு உள்ளன.

நடைமுறைச் சாத்தியமான விடயங்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – அமைச்சர் டியூ குணசேகர

200909-deu.jpgதற்போதைய சூழ்நிலையில் முதலில் நடைமுறைச் சாத்தியமான விடயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் மக்களை மீளக் குடியமர்த்த வேண்டும். இப் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு சமாதானம் பற்றிப் பேச முடியாது.  அம்மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது என்பது நாம் பேசுவது போன்று எளிதான விடயமல்ல என்று அரசியல் யாப்பு விவகார தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் டியூ குணசேகர தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கியிருந்த நேர்காணலில்.தெரிவித்திருந்தார்
 

கேள்வி : நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை எப்படியிருக்கிறது?

பதில் : முப்பது வருடகால பயங்கரவாதம், 30 வருட கால யுத்தம் நாட்டின் அரசியலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதனை மாற்றியமைப்பதே இப்போதைய தேவையாக உள்ளது. இரண்டாவதாக 1977 காலப் பகுதியில் ஆரம்பித்த திறந்த பொருளாதாரக் கொள்கையானது 2006இல் பாரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. எனினும் கடந்த மூன்றரை வருட காலத்திற்குள் பொருளாதார வழிமுறைகளில் முன்னேற்றகரமான மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. உலகப் பொருளாதாரத்தில் சரிவு நிலை ஏற்பட்டிருப்பினும் கூட எமது தேசிய உற்பத்திகளைப் பாதுகாத்துக் கொள்ள முடிந்திருக்கிறது.

விசேடமாக தேசிய உற்பத்தியை கிராமிய, மாகாண மட்டத்தில் அதிகரிப்பதன் மூலம் பொருளாதார ரீதியில் சிறந்த முறையில் செயற்படுவதற்கு ஏதுவாய் அமைந்தது. தேசிய உற்பத்தியில் 50 சதவீத அதிகரிப்பை மேல் மாகாணமும், 2.9 வீதம் வட மாகாணமும், கிழக்கு, ஊவா, வடமத்திய மாகாணங்கள் 4 சதவீத அதிகரிப்பையும் காட்டுகின்றன. இதேவேளையில் எதிர்வரும் காலங்களில் பாராளுமன்ற பொதுத் தேர்தல், மற்றும் ஜனாதிபதித் தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் ரீதியான முன்னெடுப்புக்கள் இவற்றின் பெறுபேறுகளிலேயே தங்கியிருக்கின்றன.

கேள்வி : யுத்தத்தின் பின்னரான சமாதான முன்னெடுப்புக்கள் பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில் : தற்போதைய சூழ்நிலையில் முதலில் நடைமுறைச் சாத்தியமான விடயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுக்க வேண்டியுள்ளது. யுத்தத்தால் பாதிக்கப்பட்டு நிவாரணக் கிராமங்களில் தங்கியிருக்கும் மக்களை மீளக் குடியமர்த்த வேண்டும். இப் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு சமாதானம் பற்றிப் பேச முடியாது.

அம்மக்களை சொந்த இடங்களில் குடியமர்த்துவது என்பது நாம் பேசுவது போன்று எளிதான விடயமல்ல. வேறு நாடுகளில் அகதிகளைப் பராமரிப்பதில் நிலவும் பிரச்சினைகளைப்போல நமது நாட்டில் இல்லை. அமெரிக்காவில் இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் கூடாரங்களில் வாழ்ந்து வருகின்றனர். சிறிய தீவான எமது நாட்டில் 3 இலட்சத்துக்கு மேற்பட்ட மக்களை நிவாரணக் கிராமங்களில் வைத்து பராமரிப்பதென்பது சாதாரண விடயமல்ல.

முதலில் மக்கள் மீளக்கூடியமர்த்தப்பட வேண்டும். அதன் பின்னர் பிரதான பாதைகள் புனரமைப்புச் செய்யப்பட வேண்டும். அப் பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். சிறந்த போக்குவரத்து வசதிகள் இருந்தால்தான் அப்பகுதிகள் பொரு ளாதார ரீதியில் முன்னேற்றமடைய முடியும்.

அடுத்த கட்டமாக அப்பகுதிகளில் சிவில் நிர்வாகத்தை ஏற்படுத்த வேண்டும். மன்னார் மாவட்டத்தில் மக்கள் மீளக் குடியமர்த்தப்பட்டு வருகின்றனர். கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு மக்கள் அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழ்க்கூடியதொரு நிலைமை ஏற்படும். மன்னார் மாவட்டத்தில் 45 பொலிஸ் நிலையங்கள் இருந்தன. அவற்றில் பல முழுமையாக சேதமடைந்த நிலையில் காணப்படுகின்றன. படையினர் நிலைகொண்டுள்ள பகுதிகளில் பொலிஸார் நிர்வாகப் பொறுப்புக்களை ஏற்க வேண்டும். படிப்படியாக சிவில் நிர்வாகம் ஏற்படுத்தப்பட்ட பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும். உள்ளூராட்சி சபை பிரதிநிதிகள் அம்மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதற்கான அதிகாரத்தை கொண்டிருக்க வேண்டும்.

இவையெல்லாவற்றையும் தனியொரு அமைச்சினால் மட்டும் செய்துவிட முடியாது. அனைத்து அமைச்சுக்களினதும் முழு ஒத்துழைப்புடனேயே இவ்வாறான பணிகளைச் செய்ய முடியும். வட பகுதியைச் சேர்ந்த பெரும்பாலானோரிடம் தேசிய அடையாள அட்டை இல்லை. அடையாள அட்டை இல்லாமல் அவர்களால் எந்தவொரு தேவையையும் பூர்த்திசெய்துகொள்ள முடியாது. இவ்வாறு பிரச்சினைகள் அதிகம்.

கேள்வி : பதின் மூன்றாவது அரசியலமைப்புத் திருத்தம் பற்றி?

பதில் : இது ஒன்றும் புதிய விடயமல்ல: 1987ம் ஆண்டிலிருந்து இன்றுவரை செயற்படும் மாகாண சபை முறை 13 ஆவது திருத்த சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்டதாகும்.

தமிழ் மொழியையும் அரச கரும மொழியாக ஏற்று சட்ட ரீதியாக செயற்படுத்துவது 13ஆவது திருத்தத்தின் கீழ் உறுதிப்படுத்தப்படுகிறது. ஆயினும் கடந்த 20 வருடங்களாக தமிழ் மொழியை அமுலாக்க முடியாது போய்விட்டது. தற்போதைய ஜனாதிபதி அரச கரும மொழியாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ் மொழியை செயற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்தார்.

அதற்கமைய நான் அரசில் அங்கம் வகிக்கும் கட்சிகளுடன் பிரதான எதிர்க்கட்சி உட்பட ஏனைய அனைத்துக் கட்சிகளுடனும் மேற்கொண்ட நீண்ட கலந்துரையாடல்கள், கருத்துப் பரிமாறல்கள், பிரத்தியேக முயற்சிகள் ஆகியன காரணமாகவும் அதனை முன்னெடுக்க ஜனாதிபதி அவர்கள் வழங்கிய பூரண ஒத்துழைப்பின் காரணமாகவும் தமிழ் மொழியை அரச கரும மொழியாக முழு அளவில் முன்னெடுக்க அரசியல் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆகவே தமிழ் மொழியை அரச கரும மொழியாக முன்னெடுப்பதற்கான அரசியல் தடைகள் முற்றாக நீங்கியுள்ளன.

எனினும் தமிழ் மொழியை அரச திணைக்களங்களில் உரிய முறையில் அமுல்படுத்துவதற்கேற்ற ஆளணி பற்றாக்குறை காணப்படுகிறது. இவற்றை நிவர்த்தி செய்யும் பொருட்டு ஓய்வுபெற்ற மொழிபெயர்ப்பாளர்களைச் சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

தாய்மொழி தமிழாக இருப்பின் இரண்டாம் மொழியாக சிங்கள மொழியைக் கற்றிருத்தல் அவசியமாகும். அதுபோல் தாய் மொழி சிங்களமாக இருப்பின் இரண்டாம் மொழியாக தமிழ் மொழியை கற்றிருத்தல் அவசியமாகும். அரச திணைக்களங்களிலும் கூட்டுத்தாபனங்களிலும் உயர் அதிகாரிகள் மட்டத்திலிருந்து சாதாரண ஊழியர்கள் வரையிலானோர் இரண்டாம் மொழியில் தேர்ச்சி பெற வேண்டியதன் அவசியம் குறித்துக் கருத்தரங்குகள், செயலமர்வுகள் நடத்தப்படுகின்றன.

2007 ஜுலை முதலாம் திகதியிலிருந்து அரச சேவையில் சேர்த்துக் கொள்ளப்பட்டவர்கள் அனைவரும் இரண்டாம் மொழியை கற்றிருக்க வேண்டும் எனவும் இல்லாவிடில் சம்பள அதிகரிப்புப் பெற முடியாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்போது அரச திணைக்களங்களில் இரண்டாம் மொழி தொடர்பாக வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

தெற்கே சிங்கள அரச உத்தியோகத்தர்களுக்கு தமிழ் மொழியில் கற்பிக்கும் அதேநேரம் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தமிழ் அரச உத்தயோகத்தர்களுக்கு சிங்கள மொழியை கற்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஏனெனில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பதினான்கு பிரதேச செயலகப் பிரிவுகளில் சிங்களவர்கள் சிறுபான்மையினராக வாழ்ந்து வருகின்றனர். தெற்கில் சிறுபான்மையினர் முகங்கொடுக்கும் அதேவிதமான பிரச்சினைக்கு வடக்கு, கிழக்கில் வாழும் பெரும்பான்மை சமூகம் முங்கொடுக்கிறது. இதுவே கள யதார்த்தமாகும்.

இந்த வாரம் தொடக்கம் அனைத்து அரச நிறுவனங்களிலும் மொழி தொடர்பான நடவடிக்கைகளை முன்னெடுக்க செயலாளர் மட்டத்திலான அதிகாரியொருவர் நியமிக்கப்படவுள்ளார். அந்தந்த அரச நிறுவனங்களில் அரசகரும மொழித் திட்டத்தை அமுல்படுத்தும் பொறுப்பு அவரையே சாரும். நமது நாட்டில் பத்து இலட்சத்திற்கு மேற்பட்ட அரச ஊழியர்கள் இருக்கின்றனர். இதுவொரு அரசியல் தீர்வுத் திட்டத்தை ஊக்குவிப்பதற்கான செயலாக அமையும்.

கேள்வி : எப்போதும் அரசியல் தீர்வுக்குத் தடையாக இருந்து வரும் தெற்கில் உள்ள அரசியல் தடைகளை எவ்வாறு சமாளிக்கப் போகிறீர்கள்?

பதில் : அதற்கு நாம் கடந்தகால வரலாற்றிலிருந்து பாடம் கற்க வேண்டும். எமது அரசியல் பிரச்சினைகளை இதுவரை தீர்க்க முடியாமல் போனதற்கான முக்கிய காரணம் சிறுபான்மையினர் அல்ல என்பதையும் இவ்விடத்தில் கூற வேண்டும். இதுவரை காலமும் நாட்டை ஆண்டுவந்த பிரதான இரு அரசியல் கட்சிகளுக்கிடையே இது தொடர்பில் ஒரு இணக்கம் ஏற்படாமை இதற்கு முக்கிய காரணமாகும்.

தேசியப் பிரச்சினை தொடர்பாக மொழி, மதம், இனம் ஆகிய விடயங்களில் ஒரு இணக்கம் ஏற்படத் தவறியமையும் முக்கிய காரணமாகும். அனைத்துக் கட்சிகளின் மாநாட்டை ஜனாதிபதி கூட்டுவதற்கான காரணம் இந்தப் பொது இணக்கப்பாடொன்றை எட்டுவதற்கேயாகும். இவ்விடத்தில் சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் குறைந்த பட்ச இணக்கப்பாட்டுக்காவது வரவேண்டும்.

கேள்வி : இதற்கு பதின்மூன்றாவது திருத்தம் எந்த வகையில் உதவியாக அமையும்?

பதில் : பதின்மூன்றாவது திருத்தம் புதிய விடயமல்ல. நமது அரசியல் யாப்பின் ஓர் அங்கமாகவே இருக்கிறது. அதனைக் கொண்டுவருவதற்கான முக்கிய நோக்கமே வடக்கு கிழக்கு பிரச்சினையைத் தீர்ப்பதாகும். ஆனால் கடந்த 17 வருடகாலமாக அம் மாகாணங்கள் தவிர்ந்த வேறு மாகாணங்களில் அது செயற்பட்டு வருகிறது. யுத்தத்தின் பின்னர் கிழக்கில் நிலைமைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. உள்ளூராட்சித் தேர்தல், பின்னர் மாகாண சபைத் தேர்தல்களின் பின்னர் கிழக்கு மாகாண சபை இயங்கி வருகிறது.

வடக்கில் ஏற்கனவே நான் கூறியதுபோன்று அனைத்து விடயங்களையும் கட்டம் கட்டமாகவே செய்ய வேண்டியுள்ளது. வடக்கு, கிழக்கு நிர்வாகம் தொடர்பான ஐயப்பாடு தெற்கில் இருக்கிறது. முக்கியமாக காணி, பொலிஸ் ஆகிய விடயங்களில் அதிகாரம் தொடர்பான பீதி அர்த்தமற்ற ஒன்றாகும். வடக்கு, கிழக்கில் சிறு தொகை காணிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து காணிகளும் தனிநபர்களுக்குச் சொந்தமானதாகும். அப்பிரதேசங்களில் சொற்ப அளவிலான நிலங்களே அரசுக்கு சொந்தமானதாகும்.

கேள்வி : 13ஆவது திருத்தம் தொடர்பில் அரச தரப்பினருக்கிடையே ஒருமித்த கருத்தை எட்டமுடியாதுள்ளதே?

பதில் : ஜே. வி. பி., ஜாதிக ஹெல உறுமய, விமல் குழு இவர்கள்தான் 13ஆவது திருத்தம் தொடர்பான எதிர்ப்பை முன்வைக்கின்றனர். ஆனால் பேச்சுவார்த்தை மூலம் அதனைத் தீர்த்துக்கொள்ள முடியும் என்பதே எனது உறுதியான நம்பிக்கை. மொழிப் பிரச்சினை தொடர்பான எதிர்ப்பைச் சமாளித்து ஒரு இணக்கப்பாட்டை ஏற்படுத்தியது போன்று இதனையும் தீர்த்துக்கொள்ள முடியுமென்றே நான் கருதுகிறேன்.

கேள்வி : இந்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு எவ்வாறு அமைய வேண்டுமென கருதுகிறீர்கள்?

பதில் : தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் நாம் 88, 89 களில் இருந்தது போன்ற நிலையிலேயே இருந்து வந்தனர். அவர்களால் சுயாதீனமாக செயல்பட முடியாமல் இருந்தது. கடந்த காலங்களில் நிலவிய யதார்த்த நிலை அது. தற்போது அந்த நிலை மாறிவிட்டது. இந்நிலையில் அவர்களின் செயற்பாடுகளும் மாற வேண்டும். நிச்சயம் மாறும் என்றே நானும் கருதுகிறேன். கடந்த வாரம் பாராளுமன்றத்தில் அவர்கள் நடந்து கொண்ட விதத்தில் அந்த மாற்றத்தைக் காணக்கூடியதாக இருக்கிறது.

தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வைத்து புலிகளை ஏசுவதையோ, விமர்சிப்பதையோ விடுத்து அவர்களைச் சுயமாகச் செயற்பட விடுவதே சிறந்தது. அடுத்த பொதுத் தேர்தல் வரும் வரையில் அவர்கள் அப்பகுதி மக்களால் பாராளுமன்றத்துக்குத் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள். அவர்கள் உண்மையான பிரதிநிதிகளா இல்லையா என்ப தையும் அந்த மக்களே தீர்மானிக்க வேண்டும். அது வரையில் அவர்களை அப்பிரதேச ஜனநாயக பிரதிநிதிகளாக ஏற்றுச் செயற்பட வேண்டும்.

கேள்வி : இடதுசாரிக் கட்சிகளின் செயற்பாடுகள் எப்படியிருக்கின்றன?

பதில் : வாசுதேவ நாணயக்கார, லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி உட்பட ஐந்து இடதுசாரிக் கட்சிகள் எப்போதும் இணைந்தே செயற்பட்டு வருகிறோம். எதிர்காலத்தில் கூட்டமைப்பாக செயற்படுவது பற்றிய முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. ஒருவர் இன்னொருவரின் மனம் புண்படாதவாறு செயற்படுவதன் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளலாம்.

கேள்வி : வடபகுதி மக்களின் மனங்களைத் தெற்கு எவ்வாறு வெற்றிகொள்ளலாம்?

பதில் : வடக்கில் அகதிகளாக இருக்கும் மக்களுக்கு நேசக்கரம் நீட்டிவரும் தெற்கு மக்களின் கரிசனையிலிருந்தே மக்களின் மனங்களை வென்று பிரச்சினையைத் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது.

30 வருட கால யுத்தம் முடிவுக்கு வந்துள்ளமை சந்தோஷத்திற்குரியதாக இருப்பினும் அளவுக்கு மிஞ்சி அதைத் தூக்கிப்பிடிக்காமல் ஏற்பட்டிருக்கும் சுமுக நிலையை சாதகமாக்கிக் கொள்ள வேண்டும்.

முப்பது வருட காலமாக இடம்பெறாத சுமுக அரசியல் நிலையை ஏற்படுத்தி அதற்கான களம் அமைத்துக் கொடுக்க வேண்டும். அரசு, பொது மக்கள், சமூகக் குழுக்கள், அரசியல் வாதிகள் உட்பட அனைவருமே இதில் கவனம் செலுத்த வேண்டும். அப்படிச் செய்தால் நல்லதொரு எதிர்காலத்தை உருவாக்க முடியும் என்பதே எனது நம்பிக்கையாகும்.

நேர்கண்டவர் : பி. வீரசிங்கம்

கூட்டமைப்பைக் கலைத்துவிட்டு தனித்தனிக் கட்சிகளாக இணைந்து செயற்படுவதே பலனளிக்கும் – சித்தார்த்தன்

130909sittar.jpgத. தே. கூட்டமைப்பில் ஏனைய கட்சிகள் சேர்வதால் தெற்கில் மேலும் சந்தேகமும் அவநம்பிக்கையும் வளர இடமுண்டு. பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதனை மேலும் சிக்கலாக்கிக் குழப்பிவிட இது காரணமாக அமைந்துவிடும் என்று புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் கூறியுள்ளார்

புளொட் அமைப்பின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணல் வருமாறு

கேள்வி: தற்போதைய அரசியல் நிலைமைகள் எப்படியிருக்கின்றன?

பதில்: அரசியல் நிலைமை பற்றி கூறுவதானால் ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் இவை இரண்டும் முடியும் வரையிலும் அரசியல் ரீதியான எந்தவொரு முன்னெடுப்பையும் அரசாங்கம் நிச்சயமாக எடுக்கப்போவதில்லை என்றே நான் நம்புகின்றேன்.

அதனை முன்னெடுப்பதற்கான பலம் அரசிடம் இல்லை. பாராளுமன்றத்தைப் பொறுத்தவரையில் ஜே. வி. பி, ஹெல உறுமய, விமல் வீரவன்ச மூன்று பகுதியினரும் ஒரு நிலைப்பாட்டை எடுக்கின்றனர்.

இவ்வாறு எடுக்கும்போது அரசியல் ரீதியான ஒரு தீர்வோ அல்லது பாராளுமன்றத்தில் அரசியல் அமைப்பை மாற்றுவதற்கான முயற்சியோ சாத்தியமில்லை. ஆகவே, அடுத்த பாராளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் அரசின் பக்கம் பாராளுமன்ற உறுப்பினர்களாக யார் வரப்போகின்றார்கள் கடும் போக்காளர்கள் மக்களால் ஒதுக்கப்படுவார்களா என்பவற்றைப் பொறுத்துத்தான் ஒரு அரசியல் தீர்வை நாம் பார்க்க முடியும்.

சர்வதேச ரீதியில் அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வந்தாலும் இப்போது அவை படிப்படியாகக் குறைந்து வருவதை அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. மேற்குலக நாடுகள் கூட தமிழ் மக்களின் பிரச்சினைக்கான அரசியல் தீர்வைக் காட்டிலும் இப்போது மனித உரிமைகள் பற்றிப் பேச ஆரம்பித்திருக்கின்றன.

யுத்த காலத்தில் நடைபெற்ற விடயங்களில் அக்கறை காட்டுவதன் மூலம் இங்கு மீண்டும் இனங்களுக்கிடையே ஒற்றுமையற்ற நிலைமையை உருவாக்குவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்த முனைகிறார்கள்.

யுத்த காலத்தில் எமது உறுப்பினர்கள் பலர் புலிகளால் கடத்திச் செல்லப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறான சம்பவங்களை நாம் ஆதாரபூர்வமாக இலங்கை கண்காணிப்பு பணியகத்திற்கும் சர்வதேசத்திற்கும் எடுத்துக் கூறிய போதும் அவர்கள் அதுபற்றி எவ்வித அக்கறையும் எடுக்கவில்லை. அன்று முதல் இன்றுவரை அவர்களின் நடவடிக்கைகள் அனைத்தும் பக்கசார்பானதாக இருந்து வருவதை நாம் பார்க்கிறோம்.

முதலில் இனங்களுக்கிடையே சுமுகமான உறவுகளை ஏற்படுத்த வேண்டும். நீண்ட காலமாக யுத்தத்தினால் மூவினங்களுக்கிடையேயும் ஒரு அவநம்பிக்கை வளர்ந்திருப்பதும் அரசியல் தீர்வைக் கொண்டு வர முடியாமைக்கான ஒரு முக்கிய காரணமாகும். ஆகவே இனங்களுக்கிடையே நம்பிக்கையைக் கட்டியெழுப்ப முற்பட வேண்டும்.

தமிழ் மக்கள் மத்தியில் கூட கடந்த காலங்களில் பல கசப்பான சம்பவங்கள் நடந்திருக்கின்றன. அவற்றை மறக்க முடியாவிட்டாலும் கூட ஒருவரையொருவர் மன்னித்து ஓன்றுபட்ட நிலையை உருவாக்கி சரியானதொரு தீர்வை நோக்கி முன்னேற வேண்டும்.

கேள்வி: தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடந்த வாரம் ஜனாதிபதியைச் சந்தித்தது. இச் சந்திப்பு தமிழ் மக்களிடையே ஒரு நம்பிக்கையைத் தோற்றுவிக்குமா?

பதில்: எம்மைப் பொறுத்தவரையில் த. தே. கூட்டமைப்பு கடந்த காலத்தில் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட அமைப்பாகும். புலிகளாலேயே 22 பாராளுமன்ற உறுப்பினர்கள் வெல்லக்கூடியதாக இருந்தது. புலிகள் எதைக் கூறினார்களோ அதனையே த. தே. கூட்டமைப்பும் செய்து வந்திருக்கிறது.

இன்று புலிகள் இராணுவ ரீதியில் முற்றாக அழிக்கப்பட்ட பின்னர் கூட்டமைப்பினர் சுயமாக சிந்தித்து ஒரு முடிவை எடுக்கக்கூடிய நிலையில் இருக்கின்றனர். யார் விரும்புகிறார்களோ இல்லையோ மஹிந்த ராஜபக்ஷ தான் இந்நாட்டின் ஜனாதிபதி.

எமது பகுதிகளில் வாழும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகள் (நான் இங்கு அரசியல் தீர்வுப் பிரச்சினையைக் கூறவில்லை) மிக அதிகளவில் இருப்பதால், யுத்தத்தினால் அழிக்கப்பட்டு அகதிகளாக்கப்பட்ட மக்கள் அகதி முகாம்களில் வாழும் இந்நிலைக்கு ஜனாதிபதியுடன் பேசாமல் ஒரு தீர்வு காண முடியாது.

ஆகவே இவர்கள் கடந்த காலங்களில் வாய்ப்புகள் வழங்கப்பட்ட போதெல்லாம் ஜனாதிபதியைச் சந்திக்க மாட்டோம் என்ற நிலைப்பாட்டை கொண்டிருந்தனர். அவ்வாறு இறுமாப்போடு இருந்ததால் மக்களுக்குச் செய்யக்கூடிய பல அடிப்படையான விடயங்களைக்கூட செய்ய முடியாமல் போனது. அவ்வாறு தட்டிக்கழித்ததால் அது அவர்களுக்கு வசதியாக இருந்திருக்கிறது.

ஆகவே இன்று இவர்கள் இப்படியானதொரு நிலைப்பாட்டை எடுத்திருப்பதை மக்களும் நிச்சயம் வரவேற்பார்கள். மக்களைக் பொறுத்தவரையில் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண வேண்டும் என்பது ஒருபுறமிருக்க ஒவ்வொரு தனிமனிதனும் தனது அன்றாடப் பிரச்சினைகள் தீர வேண்டும் என்பதில் அக்கறையாக இருப்பர்.

அகதி முகாம்களில் மூன்று இலட்சம் மக்கள் இருக்கும் இவ்வேளையில் அரசியல் பிரச்சினைகளை விட அவர்கள் தமது சொந்த இடங்களுக்குச் சென்று அமைதியாகவும் சுதந்திரமாகவும் வாழக்கூடிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்பதே முக்கிய பிரச்சினையாகும்.

இதையே நாமும் இன்று முதலில் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவ்வாறான சூழ்நிலையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜனாதிபதியை சந்தித்தது உண்மையில் வரவேற்கக்கூடிய விடயமாகும். இதுவொரு ஆரம்பமாக இருக்கலாம். இச்சந்திப்பினால் உடனடியாக எந்தவொரு பிரச்சினையும் தீர்க்கப்படாது போனாலும் இது நல்லதொரு ஆரம்பம். த. தே. கூட்டமைப்பை பொறுத்தவரையில் சரியோ பிழையோ இன்று வடக்கு, கிழக்கில் மிகப்பெரிய பலம் பொருந்திய 22 பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சியாக இருக்கின்றது.

ஆகவே அவர்களுக்கு ஒரு கடமை இருக்கிறது. வெறுமனே நாங்கள் ஜனாதிபதியைச் சந்திக்க மாட்டோம், தமிழ் மக்களின் தன்மானத்தைக் காப்போம் எனக்கூறிக்கொண்டு மாத்திரம் இருக்காது அந்த மக்களின் அன்றாட பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும். அதற்கானதொரு நல்ல ஆரம்பமாகவே நான் இதனைப் பார்க்கிறேன்.

கேள்வி: தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எதிர்கால நடவடிக்கைகள் எப்படி இருக்குமென நீங்கள் கருதுகிaர்கள்?

பதில்: அதனைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஏனெனில் கடந்த 5 வருட காலமாக புலிகளே ஏக பிரதிநிதிகள் என்ற கொள்கையைக் கொண்டிருந்தனர். யுத்தம் நடைபெற்றபோது கூட யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களைப் பற்றி உலகமே கவலைப்பட்டுக் கொண்டிருக்கையில், அவர்கள் மக்களைக் காப்பாற்றுவதை விட புலிகளைக் காப்பாற்றுவதில்தான் அதிக கவனம் செலுத்தினர்.

ஆயிரக்கணக்கான சிறுவர்களை புலிகள் தமது படையில் பலவந்தமாக சேர்த்தபோது உலகமே அதைப்பற்றி பேசியது. அப்போதும் த. தே. கூட்டமைப்பு அதனை நியாயப்படுத்திப் பேசியது. பாராளுமன்றத்திற்குள்ளேயும் வெளியிலும் அச்சிறுவர்கள் தாங்களாகவே சென்று சேர்ந்துகொள்வதாக கூறினர்.

ஒரு விடயத்தில் நாம் அனைவரும் தெளிவுடன் இருப்போமானால் அனைத்து பிரச்சினைகளும் ஒரு முடிவுக்கு வரும். அதாவது மே 18 இற்கு முந்திய காலம், மே 18 இற்கு பிந்திய காலம் அல்லது பிரபாகரனுக்கு முன்பு, பிரபாகரனுக்கு பின்பு என தமிழ் மக்களின் பிரச்சினைகளை வகுக்க வேண்டும்.

மே 18 இற்கு முன் நடந்தது நடந்தவையாகவே இருக்கட்டும். மே 18 இற்குப் பின் நடப்பவை நல்லவையாகவே இருக்கட்டும். நாம் அனைவருமே ஒரு கருத்தொருமையுடன் சிந்தித்து செயற்படுவோமேயானால் நிச்சயம் தமிழ் மக்களுக்கு ஏதோ எங்களால் முடிந்த சேவையை ஆற்ற முடியுமென்று நான் நம்புகிறேன்.
கேள்வி : தமிழ்த் தரப்புகள் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக கூறப்படுகிறதே?
பதில்: தமிழ் மக்களின் நலன் விரும்பிகள் மத்தியில் இவ்வாறானதொரு எதிர்பார்ப்பும், எண்ணமும் இருக்கின்றது. எம்மைப் பொறுத்தவரையில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்பது புலிகளால் உருவாக்கப்பட்ட, தெற்கில் சந்தேகத்துடன் பார்க்கப்படும் ஒரு அமைப்பாகும்.

தமிழ்த் தேசியவாத சாயம் பூசப்பட்ட அமைப்பாகவே பெரும்பான்மை இன மத்தியில் பேசப்படுகிறது. ஆகவே தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் ஏனைய அமைப்புகள் சேரவேண்டும் என்பது முக்கியமல்ல. த. தே. கூட்டமைப்பு என்ற பெயரெல்லாம் கைவிடப்பட்டு அனைத்து கட்சிகளும் தனித்தனியாகவும், ஒன்றாகவும் கூடிப்பேசி ஒரு அமைப்பை கொண்டு வருவதுதான் தமிழ் மக்களுக்கு நன்மை தருவதாக அமையும். த. தே. கூட்டமைப்பில் ஏனைய கட்சிகள் சேர்வதால் தெற்கில் மேலும் சந்தேகமும் அவநம்பிக்கையும் வளர இடமுண்டு.

பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அதனை மேலும் சிக்கலாக்கிக் குழப்பிவிட இது காரணமாக அமைந்துவிடும்.

கேள்வி: உங்களைப் போன்றோர் இவ்வாறான விடயங்களை முன்வந்து செய்ய முடியாதா?

பதில்: நாங்கள் அதனைச் செய்யத் தயாராகவும், ஆர்வமாகவும் இருக்கிறோம். ஆனால் இதனை தனியொரு தரப்பினரால் முன்னெடுக்க முடியாது. தனிநபராகவோ அல்லது தனிக் குழுவின் செயற்பாடாகவோ இருக்கக் கூடாது. ஏகப் பிரதிநிதித்துவக் கதைகளை விட்டுவிட்டு தமிழ்த் தரப்புக்களிடையே கருத்தொருமைப்பாட்டை ஏற்படுத்துவதே இப்போதைய தேவையாக இருக்கிறது. தமிழ் மக்களை மேலும் கூறு போடாது இருப்பதன் மூலமே பிரச்சினையைத் தீர்க்க முடியும்.

கேள்வி: 13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை, நடைமுறைப்படுத்துவது பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில்: நிச்சயமாக இது தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து அவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க உதவாது. ஜே. ஆர். ஜயவர்த்தன ஆட்சிக் காலத்தில் ஒரு இலட்சத்திற்கு மேலான இந்திய அமைதிப் படையின் வருகை, இந்தியாவின் அழுத்தம் என்பன இருந்தும் கூட எம்மால் 13ஆவது திருத்தத்தையும் அதன் மூலம் கிடைத்த மாகாண சபையையுமே எம்மால் பெற முடிந்தது.  இன்று தமிழ் மக்களின் அரசியல் நிலமை மிகவும் பலவீனமான நிலையிலேயே இருக்கின்றது.

விடுதலைப் புலிகள் ஏனைய அனைவரையும் பலவீனப்படுத்திய பின் அவர்களே தம்மை ஏகப் பிரதிநிதிகள் எனக் கூறிச்செயற்பட்டனர். இன்று அவர்களும் முற்றாக அழிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் அரசியல் ரீதியில் மிகவும் பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கும் இத்தருணத்தில் 13ஆவது திருத்தத்திற்குக் கூடுதலாக எதையும் நாம் பெற்றுவிட முடியாது.

அது மாத்திரமல்ல. இந்திய அரசாங்கம் கூட அன்று 13ஆவது திருத்தத்தை விடக் கூடுதலாக அதிகாரங்கள் கொடுக்க வேண்டும் என்ற நிலையில் இருந்த போதிலும் இன்று 13 + என்ற எல்லையில் நின்று கொண்டிருக்கின்றனர். ஆகவே 13ஆம் திருத்தத்திற்கு இன்னும் சில முக்கிய அம்சங்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஏனெனில் கிழக்கு மாகாணத்தில் சுயமாக எதையும் செய்ய முடியவில்லையென அதன் முதலமைச்சர் கூறுகிறார். 13ஆவது திருத்தத்தை ஒரு நல்ல ஆரம்பமாக எடுத்துக்கொண்டு அதிலிருந்து படிப்படியாக தேவையான அம்சங்களை அதிகாரங்களை இணைத்துக்கொள்ள வேண்டும். 13ஆவது திருத்தம் ஒரு முடிவாக அல்லாமல் ஆரம்பமாகவே அமைய வேண்டும்.

கேள்வி: வடக்கு கிழக்கு இணைப்பு பற்றிய உங்கள் கருத்தென்ன?

பதில்: வடக்கு கிழக்கு தமிழர் தாயகம். அது இணைந்ததாகவே இருக்கவேண்டும் என்பதே எனது கருத்தாகும்.

கேள்வி: இனப்பிரச்சினைக்கான தீர்வில் இடதுசாரிக் கட்சிகளின் நிலைப்பாடு எப்படியிருக்கின்றது?

பதில்: ஜே. வி. பியை இடதுசாரிக் கட்சியெனக் கூற முடியாது. ஏனெனில் அவர்கள் அடிப்படையில் இனவாதக் கருத்துக்களையே முதன்மைப்படுத்துகின்றனர். ஏனைய இடதுசாரிக் கட்சிகள் இனப்பிரச்சினையின் தீர்வு தொடர்பாக ஆக்கபூர்வமான கருத்துகளைக் கொண்டுள்ளன.

ஆனால் துரதிஷ்டவசமாக அவர்களின் பலம் போதுமானதாக இல்லை. இடதுசாரிக் கட்சிகளுடன் நெருங்கிய தொடர்புகள் இன்னும் இருக்கின்றன. கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்து செயற்பட்டோம். எதிர்வரும் காலங்களிலும் இடதுசாரிக் கட்சிகளுடன் இணைந்தே செயற்படுவோம்.

கேள்வி: இனப்பிரச்சினையின் தீர்வு தொடர்பாக ஆராயும் சர்வகட்சி மாநாடு தொடர்பில் உங்களது கருத்தென்ன?

பதில்: பேராசிரியர் திஸ்ஸ விதாரண இவ்விடயத்தில் மிகவும் ஆர்வத்துடன் செயற்பட்ட போதிலும் அதில் ஐ. தே. க., த. தே. கூட்டமைப்பு ஆகிய பிரதான கட்சிகள் பங்குபற்றவில்லை.

இதனால் ஒரு தீர்வைக்காண முடியுமா என்பது சந்தேகம்தான். உண்மையாக ஒரு தீர்வைக்காண வேண்டுமானால் எதிர்க்கட்சியான ஐ. தே. க. மற்றும் த. தே. கூட்டமைப்பு ஆகியன இதில் பங்குபற்றியே ஆகவேண்டும்.

கேள்வி: கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை எவ்வாறு முன்னெடுக்க திட்டமிட்டுள்ளிர்கள்?

பதில்: எதிர்கால நடவடிக்கைகள் பற்றி எதிர்வுகூற முடியாவிட்டாலும் கூட இன்று இடம்பெயர்ந்து மிகவும் இக்கட்டானதும் துரதிஷ்டமானதுமான நிலையில் வாழ்ந்து வரும் எமது மக்களுக்குத் தொடர்ந்தும் பிச்சை கொடுத்துக் கொண்டிராமல் அவர்களின் எதிர்காலத்தை உறுதிப்படுத்த வேண்டும்.

சொந்த இடத்தில் சுதந்திரமானதும், நிம்மதியானதுமான வாழ்க்கையினை அவர்கள் பெறுவதற்கு வெறுமனே அரசாங்கத்தை குறைகூறாமல், புலம்பெயர் மக்கள், சக்திகள் உட்பட சகல வளங்களையும் பயன்படுத்தி எமது மக்களை மிக விரைவில் நல்வாழ்வுக்கு இட்டுச்செல்ல வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும்.

நேர்கண்டவர் பி. வீரசிங்கம்

கைதான பத்மநாதனின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அனைத்துலக சமூகம் தலையிடவேண்டும்: வி. உருத்திரகுமாரன்

rudrakumaaran_v.jpgதமிழீழ விடுதலைப்புலிகளின் சர்வதேசப் பொறுப்பாளர் பத்மநாதன் மலேசியாவில் கடத்தப்பற்றமை தொடர்பாக நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் வி. உருத்திரகுமாரன் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், பத்மநாதனின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த அனைத்துலக சமூகம் தலையிடவேண்டும் என அறைகூவல் விடுத்துள்ளார்.  மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவம் வருமாறு:-

திரு.செல்வராசா பத்மநாதன் மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக கடத்தப்பட்டமை

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் புதிய அரசியல் இராஜதந்திரப் பாதையைத் தலைமைதாங்கி வழிநடத்தி  வந்த திரு.செல்வராசா பத்மநாதன் அவர்கள் ஓகஸ்ட் 5ம் நாள் தாய்லாந்தில் வைத்துக் கைது செய்யப்பட்டு  இலங்கைத் தலைநகர் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டதாக அதிகாரிகளை ஆதாரம் காட்டி  இலங்கை மற்றும் அனைத்துலக ஊடகங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தாய்லாந்து நாட்டில் எல்லைக்குள் இவ்வாறான கைது நடைபெற்றதென்பதை தாய்லாந்து அரசு மறுத்துள்ளது. மேலும் திரு பத்மநாதன் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் வைத்துக் கடத்தப்பட்டதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர்கள் உட்பட, தமிழ்ச் சமூகத்தில் பல்வேறு தரப்புகளிடமிருந்து பெறாப்பட்ட தகவல்களின் அடிப்படையில், கோலாலம்பூரில் உள்ள ‘ரியூன்’ விடுதியில் இக்கடத்தல் நடத்தப்பட்டதாக நாம் அறிகின்றோம். இவ்வாறான சட்ட விரோத நடவடிக்கை, இலங்கையின் இராணுவப் புலனாய்வுத் துறையினரால், மலேசிய பாதுகாப்பு அல்லது புலனாய்வு நிறுவனத்தின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டதாக நாம் கருதுகின்றோம்.

திரு.செல்வராசா பத்மநாதன் அவர்களின் இயற்பெயர் இன்ரர்போலின் தேடப்படுவோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாயின் அனைத்துலக அரசுகள் அவற்றின் துறைகளினால் மேற்கொள்ளப்படும் எவ்வகையான கைது நடவடிக்கைகளும் உள்நாட்டு சட்ட ஒழுங்கு நடைமுறைகளுக்கும் அனைத்துலக சட்ட ஒழுங்குகளுக்கும் அமைவாக மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதை நாம் தீர்க்கமாக நம்புகின்றோம்

திரு.செல்வராசா பத்மநாதன் சித்திரவதைகளுக்கெதிரான சட்டமுறையின் மூன்றாம் சரத்திற்கு அமைய பாதுகாப்பு உரிமை உடையவர். அதன்படி எந்தவொரு நாட்டிலும் ஒருவர் சித்திரவதைக்குட்படுத்தப்படும் சாத்தியமிருந்தால் அந்நாட்டுக்கு அவர் எடுத்துச் செல்லப்படுதல் தடைசெய்யப்படுகிறது.

இவ்விடத்தில், அனைத்துலக நடைமுறைகள் தமிழர் விடயத்தில் மீளவும் சட்ட நியமங்களை மீறியதையே காண்கின்றோம். திரு.பத்மநாதன் அவர்கள் சட்டங்கள் எதனையும் மீறியிருந்தால் சட்ட நியமங்களுக்கு அப்பாற்பட்டு சூறையாடும் கூட்டங்கள் காடையர் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குழுக்கள் போலியங்கி அவரைச் சிறைபிடிப்பதற்கு பதிலாக நாடு கடத்தலுக்கான ஆணையைப் பெற்று அவரைக் கையேற்பதே சரியான முறையாக இருந்திருக்கும்.

திரு.செல்வராசா பத்மநாதன் அவர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அரசியல் மீள் உருவாக்க முயற்சிகளின் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்தார் என்பதையும் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைகளுக்கான போராட்டத்தினை அரசியல் இராஜதந்திர அணுகுமுறைகளை நோக்கி வழிநடத்திக் கொண்டிருந்தார் என்பதையும் குறிப்பிட  விரும்புகின்றோம்.

இப்பணியில் அவர் பெரும் சவால்களை எதிர்கொண்டிருந்த போதும் இலங்கைத் தீவில் தமிழர்களுக்கான நீதியான அரசியல் எதிர்காலம் நோக்கிய நகர்வினை நம்பிக்கையுடனும் தீவிர மன உறுதியுடனும் முன்னெடுத்து வந்தார். நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தினை மக்கள் வாக்களிப்பின் மூலம் உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்கான அடிமட்டத்திலிருந்து உருவாகுமொரு சனநாயக நிறுவனமாக ஏற்றுக்கொள்வதன் மூலம் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்கு மக்களாட்சி வழியானதொரு தலைமைத்துவத்தை கட்டியெழுப்புவதை அவர் ஆதரித்தார்.

திரு.பத்மநாதனை வழிப்பறிக் கும்பலினரது பாணியில் கைப்பற்றியவர்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இந்த அரசியல் மீளுருவாக்க முயற்சியைத் தடுக்கவே விரும்புகின்றனர். ஆயினும் தமிழீழ மக்களின் சுயநிர்ணய உரிமையை வென்றெடுப்பதற்கான தமிழீழ தேசியச் செயற்றிட்டம் ஒரு தனிமனிதனின் ஆற்றல் அர்ப்பணிப்பில் மட்டும் தங்கியிருப்பதில்லை என்பதால் எண்ணிலடங்காத பற்றுறுதி மிக்க பலரது உழைப்பின் மூலம் இத்திட்டம் வெற்றி கிட்டும்வரை தொடரும் என்பது உறுதி.

திரு.பத்மநாதன் அவர்கள் மலேசிய அதிகாரிகளின் உதவியுடன் கடத்தப்பட்டிருப்பின் அக்கடத்தல் தொடர்பான விபரங்களை வெளியிடுமாறு மலேசிய அரசாங்கத்தினை உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் சார்பாக நாம் வேண்டுகின்றோம். மலேசிய அரசாங்கத்திடம் இது விடயத்தில் தகவலேதும் இல்லையெனில் நடந்தேறிய இச்சட்ட விரோத கடத்தல் தொடர்பான விசாரணைகளை மலேசிய அரசாங்கம் முன்னெடுக்க வேண்டுமென நாம் உறுதியாக வேண்டி நிற்கின்றோம்.

திரு.பத்மநாதன் அவர்கள் இலங்கை அரசாங்கம் கூறுவது போல் கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தால் அனைத்துலக நியமங்களுக்கமைய அவரது பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் அவருக்கு வேண்டிய சட்ட அறிவுரைகளைப் பெறுவதற்குரிய வாய்ப்பினை ஏற்படுத்தவும், அனைத்துலக சமூகம் இதில் தலையிட வேண்டுமெனவும் நாம் அறைகூவல் விடுக்கின்றோம்.

இலங்கை அரசு ஏலவே மூன்று இலட்சம் தமிழ் மக்களை நாசி முகாம் வகையிலான வதைமுகாம்களில் கால வரையறையின்றி தடுத்து வைத்திருப்பதையும் இது விடயத்தில் கவனத்தில் கொண்டுவர விரும்புகின்றோம். திரு.பத்மநாதன் அவர்களது உயிர்ப் பாதுகாப்பு தொடர்பாக அஞ்சுவது போலவே இந்த மக்களது பாதுகாப்பு தொடர்பாகவும் நாம் அஞ்சுகின்றோம்.

இதனால் இம்மூன்று இலட்சம் மக்களின் பரிதாப நிலைக்கு விரைவில் தீர்வுகாண்பதிலும் திரு.பத்மநாதன் அவர்கள் எல்லாவித அனைத்துலக  விழுமியங்களுக்கமைய பாதுகாப்பினை பெறுவதையும் உறுதிப்படுத்துமாறு அனைத்துலக சமூகத்தை வேண்டி நிற்கின்றோம்.

இவண்

விசுவநாதன் உருத்திரகுமாரன்
இணைப்பாளர்
நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழு

மனிதாபிமான பணிகளில் அரசுடன் சேர்ந்து செயற்பட தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தயார்

tna-logo.jpgபத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்துள்ளார்களென்று அரசாங்கம் கூறுகிறது. அப்படியானால் அவர்களுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்க வேண்டும். இதற்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில் ஜே. வி. பி. உறுப்பினர்களுக்கு அரசாங்கம் பொதுமன்னிப்பு வழங்கியுள்ளது. ஆகவே, இந்த அடிப்படையிலேயே இளைய சமூகத்தினரான இவர்களுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும். அவர்கள் தங்களது எதிர்கால வாழ்வைக் கட்டியெழுப்பவும் அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய பேட்டியில் தெரிவித்துள்ளார். அவருடனான பேட்டி முழுமையாக இங்கே தரப்படுகிறது.

கேள்வி: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இறுதியாக நடைபெற்ற சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொண்டது. இந்தச் சந்திப்புக்கும் மேலாக ஜனாதிபதியுடனான தனிப்பட்ட சந்திப்பு ஒன்றுக்கும் நீங்கள் வேண்டுகோள் விடுத்திருந்தீர்கள். இவ்வாறானதொரு தனிப்பட்ட சந்திப்புக்கான அவசியம் தான் என்ன?

பதில்: சர்வகட்சிக் குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு எமக்கு அழைப்பு விடுக்கப்படுவதற்கு ஒரு மாதத்துக்கு முன்னரே ஜனாதிபதியைச் சந்திப்பதற்குத் தீர்மானித்திருந்தோம் என்பதே உண்மை. வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து மனித அவலத்துக்கு உள்ளாகியிருக்கும் தமிழ் மக்கள் தொடர்பான மனிதாபிமான நடவடிக்கைகள் குறித்து ஜனாதிபதியுடன் பேசுவதற்கு முடிவெடுத்திருந்தோம்.

வவுனியா அகதி முகாம்களிலுள்ள மக்களை நாம் பார்வையிட அனுமதித்தல், இடம்பெயர்ந்த மக்கள் இராணுவ மயப்படுத்தப்பட்ட கம்பி வேலிக் கூடாரங்களுக்குள் தொடர்ந்தும் வாழக் கூடாதென்பதற்காக அவர்களை விரைவாகச் சொந்த இடங்களில் குடியேற்றுதல், அவர்களுக்கு நஷ்ட ஈடு வழங்குதல் போன்றன குறித்து நாங்கள் பல நாடுகளிடம் குறிப்பாக இந்தியாவிடமும் ஐ.நா. பிரதிநிதிகளிடமும் வலியுறுத்தி வந்தோம். இந்த விடயம் தொடர்பில் இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் சந்தித்துப் பேசுவதென்றும் முடிவெடுத்தோம்.

ஜனாதிபதியைச் சந்திப்பதற்கு ஒரு முன்னோடியாக அமைச்சர் டளஸ் அழகப்பெருமவைச் சந்திப்பதெனத் தீர்மானித்தோம். இதன்படி கடந்த மாதம் 26 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் அவரது அமைச்சு அறையில் சந்தித்து, இடம்பெயர்ந்துள்ள மக்களின் மனிதாபிமானப் பிரச்சினைகள் குறித்து விளக்கினோம். அவர்களைப் பார்க்க முடியாத எமது நிலை குறித்தும் தெரிவித்தோம். முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த எமது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் மோதல் காரணமாக அங்கிருந்து வெளியேற முடியாமலிருந்தார். இன்று அவர் மனிதாபிமானமற்ற முறையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பது குறித்தும் எடுத்துக் கூறினோம். மேலும் மனிதாபிமானப் பணிகளையும் மருத்துவப் பணிகளையும் மேற்கொண்ட டாக்டர்களின் தடுத்து வைப்புக் குறித்தும் பிரஸ்தாபித்தோம். ஆகவே இந்த விடயங்களை ஜனாதிபதியிடம் எடுத்துக் கூறி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென்ற கோரிக்கையையும் அமைச்சர் டலஸிடம் முன் வைத்தோம். அப்போது அமைச்சர் டலஸ், ஜனாதிபதியை நீங்கள் சந்தித்து பேசினால் என்னவென்று எம்மைக் கேட்டார். இதுதான் உண்மையில் நடந்தது.

கேள்வி: இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்குமிடையில் மோதல் இடம்பெற்றுக் கொண்டிருந்த கால கட்டத்திலும் கூட சர்வகட்சிக் குழுக் கூட்டங்கள் நடைபெற்றனவே. அதற்கான அழைப்புகள் உங்களுக்கும் அனுப்பப்பட்டன. அந்த வேளையில் நீங்கள் ஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்திருந்தீர்களே? அழைப்பினை ஏற்று நீங்களும் கலந்து கொண்டிருந்தால் சில பிரச்சினைகளுக்கு ஆரம்பத்திலேயே தீர்வு கிடைத்திருக்குமல்லவா?

பதில்: ஆம், சர்வகட்சிக் குழுக் கூட்டங்களில் பங்கு கொள்ளுமாறு எமக்கு இருமுறை அழைப்புகள் வந்தன. ஆனால் அன்றைய சூழ்நிலைகள் ஜனாதிபதியைச் சந்திக்க எம்மை அனுமதிக்கவில்லை.

கேள்வி: ஜனாதிபதியை சந்திக்கும் உங்கள் முடிவுக்கு சாதகமான பதில் கிடைத்ததா? ஜனாதிபதியை நீங்கள் சந்தித்தீர்களா?

பதில்: இல்லை. இதுவரையும் எந்தவித பதிலும் எமக்குக் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் இறுதியாக நடைபெற்ற சர்வ கட்சிப் பிரதிநிதிகள் குழுக் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு ஜனாதிபதி செயலகத்திலிருந்து அழைப்புக் கிடைத்தது. இதனை ஏற்றுக் கொண்ட நாம் எமது கட்சியைச் சேர்ந்த எம். பிக்கள் சிலரை என்.ஸ்ரீகாந்தா தலைமையில் சர்வகட்சி பிரதிநிதிகள் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செய்து எமது பிரச்சினைகள் குறித்து எடுத்துரைக்குமாறு கூறினோம். அங்கு சென்ற எமது பிரதிநிதிகள் அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் பேசினார்கள். ஆனால் இதுவரைக்கும் வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள மக்களைச் சந்தித்து பேச எமக்கு அனுமதி கிடைக்கவில்லை. இது எமக்கு ஏமாற்றத்தையும் கவலையையும் தருகிறது. வவுனியா நலன்புரி முகாம்களிலுள்ள மக்களின் பிரதிநிதிகளான நாம் அவர்களைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி அனுமதி தர மறுப்பதன் காரணமாகவே இந்த விடயங்களை அண்மையிலும் இந்தியா மற்றும் ஐ.நா பிரதிநிதிகளிடமும் முறையிட்டோம். இதேவேளை, இடம் பெயர்ந்த மக்களைக் குடியமர்த்துவது தொடர்பாகவும் அவர்களின் நலன் குறித்துத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்குமாக ஒரு குழுவினை அரசாங்கம் அமைத்துள்ளது. ஆனால் அந்தக் குழுவில் கூட ஒரு தமிழ் அரச பிரதிநிதியோ நாடாளுமன்றப் பிரதிநிதியோ உள்வாங்கப்படவில்லை. இதன் காரணமாக அதனை நாங்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எங்களுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் முரண்பாடுகள் இருந்தாலும் கூட மனிதாபிமானப் பணிகள், தொடர்பில் இரு தரப்பும் சந்தித்துப்பேசுவதில் தவறில்லை. சுனாமி காலத்தில் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவும் விடுதலைப் புலிகளின் தலைவரும் ஒரு ஒப்பந்தத்தையே செய்திருந்தார்கள். அவ்வாறாயின் எங்களுக்கும் அரசாங்கத்துக்குமிடையில் மனிதாபிமானப் பணிகள் தொடர்பில் பேசுவதில் தவறில்லை என்ற முடிவின் அடிப்படையிலேயே சர்வகட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டோம்.

கேள்வி: வன்னி நிலப்பரப்பில் வாழ்ந்த மக்கள் எண்ணிக்கை, இடம்பெயர்ந்த மக்கள் எண்ணிக்கை தொடர்பில் முரண்பாடான தகவல்கள் வெளிவருகின்றனவா?

பதில்: ஆம். அகதிகளாக வந்த மக்களின் பெயர்பட்டியல் முதலில் வெளியிடப்பட வேண்டும். இலங்கை அரச படைகளுக்கும் புலிகளுக்குமிடையில் மோதல் இடம்பெற்றுக் கொண்டிருந்த போது 4,30,000 பேர் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்ததாக அரசாங்க அதிபர் இமெல்டா சுகுமார் முன்னர் தெரிவித்திருந்தார். உலக உணவுத் திட்டத்தின் தகவல்களின் அடிப்படையில் 3,30,000 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கமோ முல்லைத்தீவு மாவட்டத்தில் 70,000 பேர்மட்டுமே இருந்ததாக சர்வதேச ரீதியாகவே பிரசாரத்தை மேற்கொண்டது. இவ்வாறான முரண்பாட்டு தகவல்கள் வெளியாகிக் கொண்டிருந்த வேளையில் சுமார் 3,15,000 பேர் இடம்பெயர்ந்து வவுனியா அகதி முகாம்களுக்கு வந்திருந்தனர். இது ஆச்சரியத்தையே தந்தது. ஆகவே மீதியான சுமார் ஓர் இலட்சம் மக்களின் கதி என்னவாகியிருக்கும் என்பதனை நாம் இன்னும் அறியாதவர்களாகவே உள்ளோம். ஆகவே இவ்வாறான முரண்பாடான தகவல்கள் காரணமாக உண்மை நிலையை அறிந்து கொள்ளும் வகையில் அந்த மக்களைச் சந்தித்துப் பேச வேண்டியுள்ளது.

அடுத்ததாக, பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் சரணடைந்துள்ளார்களென்று அரசாங்கம் கூறுகிறது. அப்படியானால் அவர்களுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்க வேண்டும். இதற்கு முன்னர் இரு சந்தர்ப்பங்களில் ஜே. வி. பி. உறுப்பினர்களுக்கு அரசாங்கம் பொது மன்னிப்பு வழங்கியுள்ளது. ஆகவே, இந்த அடிப்படையிலேயே இளைய சமூகத்தினரான இவர்களுக்கும் மன்னிப்பு வழங்க வேண்டும். அவர்கள் தங்களது எதிர்கால வாழ்வைக் கட்டியெழுப்பவும் அனுமதிக்கப் பட வேண்டும்.

கேள்வி: சமஷ்டிக்கே இடமில்லை யென்று ஜனாதிபதி திட்டவட்டமாகக் கூறி விட்டார். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்த நகர்வு என்ன?

பதில்: தமிழரசுக் கட்சியை ஆரம்பித்த போது ஒரு சமஷ்டி முறையிலான தீர்வுத் திட்டத்தையே முன் வைத்திருந்தோம். தந்தை செல்வாவின் அந்தத் திட்டத்துக்காக மக்களும் வாக்களித்து வந்தனர். இது தொடர்பாகவோ அல்லது தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கான தீர்வுத் திட்டம் குறித்தோ பேச்சு வார்த்தைகள் இடம்பெற்ற போதெல்லாம் ஒரு முறையான தீர்வுத் திட்டத்தை எந்த சிங்கள அரசாங்கத் தலைமைகளுமே முன்வைக்கவில்லை. தந்தை செல்வா, ஜீ. ஜீ. பொன்னம்பலம், தொண்டமான் ஆகியோர் பங்கு கொண்ட வட்டுக்கோட்டை மாநாட்டில் முன் வைக்கப்பட்ட ஆறு அம்சக் கோரிக்கை கூட சிங்கள அரசியல் தலைமைகளால் நிராகரிக்கப்பட்டது. இன்று இந்த அரசாங்கமும் சமஷ்டியை நிராகரித்துள்ளது. தமிழ் மக்களின் அபிலாஷைக்கான ஒரு தீர்வுத் திட்டத்தை எவ்வாறு முன் வைக்கப்போகிறதென்று கூட இன்னும் தெளிவாகக் கூறவில்லை. சமஷ்டியை நிராகரிக்கிறார்களென்றால் வேறெதனை முன் வைக்கப்போகிறார்கள் என்பதும் எமக்குத் தெரியாமல் உள்ளது. இந்தச் சூழ்நிலையில் தான் நாம் ஒரு புதிய தீர்வுத்திட்டம் தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம்.

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான நியாயமான தீர்வொன்றினைக் காணும் வகையில் மூன்று அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட தீர்வுத் திட்டமொன்றை தயாரிக்கும் பணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபட்டுள்ளது. எமது இந்தத் தீர்வுத் திட்டம் தயாரிக்கப்பட்டதும் இலங்கை, இந்தியா மற்றும் சர்வதேசத்திலும் முன் வைக்கப்படும். தமிழ் மக்களுக்கு உரித்தான இறைமை, சுய உரிமைத் தத்துவம், தமிழ் மக்கள் தங்களைத் தாமே ஆளும் சுயாட்சி முறை ஆகிய மூன்று அம்சங்களையும் அடிப்படையாகக் கொண்டதாகவே இந்த புதிய தீர்வுத் திட்டம் உருவாக்கப்படவுள்ளது.

இலங்கை அரசாங்கத்திடம் எமது தீர்வுத் திட்டம் முன்வைக்கப்படும் போது அரசாங்கத்துக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குமிடையே ஏற்படக் கூடிய உடன்பாடானது புதியதொரு தீர்வுத் திட்டத்தை உருவாக்கும் நிலைக்கு இட்டுச் சென்றால் அந்தத் தீர்வுத் திட்டத்தில் நாம் முன்வைத்த மூன்று அடிப்படை அம்சங்களும் உள்வாங்கப்பட வேண்டும். அல்லது இந்தத் தத்துவங்களின் அடிப்படையில் தீர்வு காணப்படக் கூடிய ஒரு அரசியல் அமைப்பு உருவாக வேண்டும்

இந்த நிலையில் இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சினையில் இந்தியா தனது முழுப் பங்களிப்பையும் வழங்கி தமிழ் மக்களின் அபிலாஷைகளைத் தீர்த்து வைக்கும் வகையில் செயற்பட வேண்டும். தமிழ் மக்கள் தங்களைத் தாமே ஆளுகின்றோமென்ற உணர்வைக் கொள்ளக் கூடிய ஒரு தீர்வு ஏற்படுவதற்கு இந்தியா உதவும் என்ற நம்பிக்கை எமக்கு உள்ளது. இதேபோன்று இலங்கைத் தமிழ் மக்களின் மனிதாபிமான பிரச்சினைகளுக்கும் இந்தியா தனது பூரண ஆதரவையும் ஒத்துழைப்பை யும் வழங்க வேண்டும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியன இலங்கைத் தமிழ் மக்களின் மனிதாபிமான பிரச்சினைகள் தொடர்பிலும் அதனைத் தீர்த்து வைப்பதிலும் காட்டும் அக்கறை போன்று இந்தியாவும் தனது பங்களிப்பை நல்கி தமிழ் மக்களுக்கான மனிதாபிமானப் பணிகளைத் துரிதப்படுத்த உதவி செய்ய வேண்டும்.

இதேவேளை, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் தமிழ் மக்கள் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வை எட்டவும் மனிதாபிமான பணிகளுக்குப் பங்களிப்புச் செய்யவும் நாங்கள் தயாராகவுள்ளோம்.

கேள்வி: 13 ஆவது அரசியலமைப்பு திருத்தச்சட்ட மூலத்தினை தமிழ் மக்களின் பிரச்சினைக்கான தீர்வாக நீங்கள் ஏற்றுக்கொள்ள முடியுமே?

பதில்: இல்லை, 13 ஆவது அரசியலமைப்புச் சீர்திருத்தச் சட்ட மூலத்தை ஜே.ஆர். ஜெயவர்தன தனது விருப்பப்படியே நாடாளுமன்றத்துக்கு கொண்டு வந்தார். அந்த நேரத்தில் நாங்கள் நாடாளுமன்றத்தில் இருக்கவில்லை என்பது தெரிந்த விடயமே. இருப்பினும் இந்தத் திருத்தச் சட்ட மூலம் எங்கள் மக்களின் பிரச்சினைக்குத் தீர்வாகவோ அல்லது தீர்வுக்கான அடிப்படையாக இருக்கமாட்டாது. நாம் அதனை ஏற்றுக்கொள்ளப் போவதுமில்லை. இதனை நாம் அண்மைக்காலங்களில் பாராளுமன்றத்தில் தெளிவாகக் கூறிவிட்டோம். இந்தத் திருத்தச் சட்டமூலமானது இலங்கை, இந்திய ஒப்பந்தத்தைப் பிரதிபலிக்கவில்லை. இதனை இந்திய அரசாங்கத்துக்கு நாம் தெளிவாகக் கூறியுள்ளோம். இந்தச் சட்ட மூலம் அதிகாரத் தைப் பகிர்ந்து கொடுக்கவோ அல்லது ஆட்சியில் பங்களிப்புச் செய்யவோ அதிகாரத்தைப் பரவலாக்கவோ இடமளிக்கவில்லை. பொலிஸ், சட்டம். ஒழுங்கு, காணி, நிலப்பங் கீடுகளுக்கான அதிகாரங்கள் கூட 13 ஆவது திருத்தச் சட்ட மூலத்தில் உள்ளடக்கப்பட வில்லை. தமிழ் மக்களின் நீண்ட கால அரசியல் வரலாற்று போராட்டங்கள் என்ன இலக்குக்காக நடத்தப்பட்டனவோ என்ன இலக்குக்காக நாங்கள் உடன்பாடுகள் கண்டோமோ அவற்றில் எதனையும் இந்த 13 ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டிருக்காத காரணத்தினால் இதனை நாங்கள் நிராகரித்துள்ளோம்.

கேள்வி: நீங்கள் தமிழ் மக்கள் தொடர்பில் எவ்வளவு தான் கோரிக்கைகளை தமிழ் நாடு அரசிடமோ புதுடில்லி அரசிடமோ முன்வைத்தாலும் கூட அவர்கள் அதனைக் காதில் போட்டுக்கொள்ளவில்லையே.

பதில்: மோதல் இடம்பெற்றுக்கொண்டிருந்த காலத்தில் இந்தியாவின் அணுகுமுறை தொடர்பாகப் பல விமர்சனங்கள் எழுந்ததை நாங்கள் அறிவோம். எங்கள் தமிழ் மக்கள் கொல்லப்படுகின்றார்களென்ற விடயத்திலும் அதனைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்ற விடயத்திலும் இந்தியா எதனையும் கருத்திற் கொள்ளவில்லை என்ற அபிப்பிராயமும் நிலவியது. இந்த விடயத்தில் எங்களுக்கும் ஆழமான வேதனை உண்டு. எமது மக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கும் வகையில் இந்திய அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லையென்ற நிலையிலும் இந்தியாவுக்கும் சென்று இங்குள்ள நிலைவரம் தொடர்பில் விளக்கினோம். முழுமையான ராஜதந்திரத்தை பிரயோகித்து இந்த யுத்தத்தை நிறுத்தும்படி அவர்களிடம் வேண்டுகோள் விடுத்தோம். அதனைக் கூட அவர்கள் கருணையோடு அணுகவில்லை. இது இன்னும் வேதனை தருகிறது.

இருப்பினும் இந்தியா தொடர்பில் நாங்கள் முற்று முழுதாக நம்பிக்கையை இழந்து விடவில்லை. இலங்கைத், தமிழ் மக்கள் பிரச்சினையில் இந்தியா தலையிட்டு ஒரு தீர்வைக்காண உதவ வேண்டுமென்பதில் நாங்கள் இன்னும் திடமாக உள்ளோம். இதன் காரணமாகவே இந்தியத் தேர்தல் முடிந்தவுடனும் புதுடில்லிக்குச் சென்று இலங்கைத் தமிழ் மக்கள் தொடர்பில் உண்மை நிலைமைகளை விளக்கி இந்தப் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக இந்தியா உதவ வேண்டுமென்று மீண்டும் கோரிக்கை விடுத்தோம். வெளியுறவுத்துறை அமைச்சர் என்.எஸ். கிருஷ்ணாவைச் சந்தித்து நாம் பேசிய போது எமக்கு ஒரு நம்பிக்கை ஏற்பட்டது. நாம் முன்வைத்த அனைத்து விடயங்களையும் ஏற்றுக்கொண்டார் என்றே நாம் நம்புகிறோம்.

கேள்வி: ஆனால் ஒன்றும் நடக்க வில்லையே?

பதில்: ஆம் நடைமுறைக்குக் கொண்டு வந்தால் மட்டுமே நாம் திருப்திப்படமுடியும். ஆனால் எமது பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியா உதவுமென்ற நம்பிக்கை எமக்கு இன்னும் உள்ளது.

கேள்வி: யாழ் மாநகராட்சி, வவுனியா நகராட்சி தேர்தல் குறித்து உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில்: இந்தத் தேர்தலை இப்போது நடத்தக் கூடாதென்றே நாம் அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுத்திருந்தோம். இரத்தம் காய்ந்து போவதற்கு முன்னர் இவ்வாறு ஒரு தேர்தல் நடத்துவது நல்லதல்ல. பலவீனப்பட்டுள்ள மக்கள் மத்தியில் அரசாங்கம் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி அந்த மக்களை வென்றெடுத்து, தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை மறைப்பதற்காக, அந்த மக்கள் தமக்கு வாக்களித்திருக்கிறார்கள் என்ற மாயைத் தோற்றத்தை வெளியுலகுக்கும் சிங்கள மக்களுக்கும் காட்டுவதற்காகவே இந்தத் தேர்தலை அரசு நடத்துகிறது.

நன்றி: வீரகேசரி வாரவெளியீடு 8/2/2009

நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தல் 2010 ஏப்ரலில்: வி.உருத்திரகுமாரன்

rudrakumaaran_v.jpgநாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் தேர்தல்கள் 2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதமளவில் நடைபெறலாம் என்று அதனை உருவாக்குவதற்காக நாடு கடந்த தமிழீழ அரசு அமைக்கும் செயற்திட்டக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சட்டத்தரணி விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து வெளியாகும் ‘தெகல்கா’ வார ஏட்டுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவரது நேர்காணலின் முழு விபரம் வருமாறு:

நாடு கடந்த தமிழீழ அரசின் வெற்றி தொடர்பில் நீங்கள் எவ்வளவு நம்பிக்கையுடன் இருக்கிறீர்கள்? உலகின் பல்வேறு பிரதேசங்களில் காணப்படும் புறநிலை அரசுகளில் இருந்து இது எந்த வகையில் வேறுபட்டு அமைகின்றது?

எமது முயற்சி வெற்றிபெறும் என்பதில் எமக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கிறது. தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தை மிகக் கொடூரமான முறையில்  இலங்கை அரசு அடக்கி விட்டாலும்கூட, சுதந்திரம், சமத்துவம் மற்றும் மதிப்பு என்பவற்றுக்கான அவர்களின் வேட்கையை அடக்க முடியவில்லை.

இப்போது, இலங்கையில் தமிழர்களின் இருப்பு கேள்விக்குறியாகி உள்ளதுடன் மட்டுமல்ல அவர்கள் தமது அரசியல் வேட்கைகளை வெளிப்படுத்துவதற்கான வசதிகள் கூடக் கிடையாது. அதனால் தமிழர்களின் அரசியல் போராட்டங்கள் முழுவதும் வெளியில் இருந்தே மேற்கொள்ளப்பட முடியும்.

நாங்கள் உருவாக்க முனைவது புறநிலை அரசு அல்ல. நாடு கடந்த அரசு ஒன்றையே நாம் உருவாக்க உள்ளோம். இதற்கு எந்த ஒரு நாடும் (அதாவது நிலப்பரப்பும்) தேவை இல்லை. இந்த அரசு புலம்பெயர் தமிழர்கள் மத்தியில் இருந்தே தேர்வு செய்யப்படும்.

இதற்கு முன் எந்தவொரு இனக் குழுவும் இத்தகைய நாடு கடந்த அரசுகளை உருவாக்கியதில்லை. இந்தக் கருத்துருவாக்கமானது அரசியலுக்கும் அரசியல் தத்துவங்களுக்கும் எங்களின் பங்களிப்பாக இருக்கும்.

தமிழ்நாட்டில் வாழும் ஈழத் தமிழ் அகதிகள் இந்த நடவடிக்கையில் பங்கேற்பார்களா? இந்திய அரசினதும் மாநில கட்சிகளினதும் ஆதரவைக் கோருவீர்களா?

நிச்சயமாக. நாங்கள் அவர்களின் ஆதரவைப் கோருவோம்.

முதலமைச்சர் மு.கருணாநிதியையும் ஏனைய தமிழ் தலைவர்களையும் சந்திப்பதற்காக தமிழ்நாட்டுக்கு பயணம் மேற்கொள்ள எண்ணியிருக்கிறீர்களா?

கருணாநிதி, ஜெயலலிதா, நெடுமாறன், வைகோ, பாண்டியன் மற்றும் ஏனைய தலைவர்கள் அனைவரையும் சந்தித்துப் பேசுவதற்கு எண்ணியுள்ளோம். டில்லியிலும் தமிழ் நாட்டிலும் உள்ள கல்விமான்களையும் சமூகத் தலைவர்களையும் கூட சந்தித்துப் பேசுவதற்கு நாம் எண்ணியுள்ளோம். இந்தியாவின் ஆதரவு எமக்கு மிக முக்கியமானது.

நீங்கள் முன்வைத்துள்ள நாடு கடந்த தமிழீழ அரசுக்கான பிரதிநிதிகள் சபையை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல்களை எப்போது நடத்தப் போகிறீர்கள்? எந்த முறையில் தேர்தல்கள் நடத்தப்படப் போகின்றன?

2010 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் தேர்தல்களை நடத்தலாம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். இருந்தாலும், நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு மக்கள் எங்களைக் கேட்டிருக்கின்றனர். மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் சென்று வாக்களிக்க வேண்டும் என்றே எதிர்பார்க்கிறோம்.

ஈழத்தை அடைவதற்காக நீங்கள் கொண்டிருக்கக்கூடிய வழிகாட்டு வரைபடம் என்ன?

நாடு கடந்த தமிழீழ அரசு தான். அதன் சட்டபூர்வ நிலை, புகழ் மற்றும் அனைத்துலக ஆதரவு காரணமாக அது அதிகார மையமாகும். சிங்கள தேசத்திற்கும் தமிழ் தேசத்திற்கும் இடையிலான நடுநிலை அதிகாரம் ஒன்றை அது உருவாக்கும். சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்கள் அமைதியுடன் வாழக்கூடிய அரசியல் ஒப்பந்தங்களை உருவாக்குவதற்கு அது தனது பங்களிப்பை வழங்கும்.

இது தொடர்பில் எந்த நாட்டிடம் இருந்தாவது சாதகமான பிரதிபலிப்பு கிடைத்திருக்கிறதா?

இந்த முயற்சிக்கு அனைத்துலக நாடுகளின் ஆதரவு மிக அத்தியாவசியமானது. ஜனநாயக நெறிமுறைகளின் அடிப்படையில் நாடு கடந்த தமிழீழ அரசு அமையும்போது, எங்கள் முயற்சிக்கு ஜனநாயக நாடுகள் ஆதரவு தரும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம். இப்போதே சில நாடுகளில் இருந்து சாதகமான பிரதிபலிப்புக்களை நாங்கள் பெற்றிருக்கிறோம்.

விடுதலைப் புலிகள் அமைப்பானது நிலைமைகளுக்கு இசைவாக தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு அமைப்பு. ‘த வீக்’ வார இதழுக்கு பத்மநாதன் பேட்டி

kp.jpg“எமது மக்களின் சுதந்திரப் போராட்டம் மாற்றமடையவில்லை. ‘நாம் எமது போராட்ட வடிவத்தை மாற்றிக்கொண்டாலும் எமது போராட்ட இலட்சியம் மாறாது’ என எமது தலைவர் எப்போதும் சொல்லிவந்துள்ளார். அதன்படி எமது போராட்டம் முடிவுக்கு வரவில்லை. எமது இலக்கை அடைவதற்கான போராட்ட வடிவத்தையே நாம் மாற்றிக்கொண்டுள்ளோம்” என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.
இந்தியாவில் இருந்து வெளிவரும் ‘த வீக்’ பிரபல ஆங்கில வார ஏட்டுக்கு வழங்கியிருக்கும் பேட்டியொன்றிலேயே இதனைத் தெரிவித்திருக்கும் பத்மநாதன், தமிழ் மக்களின் சுயாட்சிக்காக 1976 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட உரிமைக் கோரிக்கை மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டது. தமிழ் மக்களின் உரிமைகள் பெற்றுக்கொள்ளப்படும் வரையில் அதனை நோக்கிய போராட்டத்தில் மாற்றம் ஏற்படப் போவதில்லை எனவும் தெரிவித்தார்.

இந்தப் பேட்டியில் செல்வராஜா பத்மநாதன் மேலும் முக்கியமாகத் தெரிவித்திருப்பதாவது:

“பிரபாகரன்தான் எமது தேசியத் தலைவர். தான் நம்பிக்கை வைத்த கொள்கைக்காக தனது வாழ்க்கை முழுவதையுமே வாழ்ந்தவர் அவர். ஒரு ஆயுதப் போராட்டத்தின் மூலமாக தமிழ் மக்களின் நிலத்தை மீட்டு எடுப்பதில் சமரசத்துக்கு இடம் இல்லாத நம்பிக்கை வைத்திருந்தவர் அவர். தனது நோக்கத்தில் இருந்து ஒருபோதுமே அவர் பின்வாங்கியதில்லை. சிறிலங்காப் படை இயந்திரத்தின் அனைத்துச் சவால்களையும் பிரபாகரன் எதிர்நோக்கினார். அனைத்துலகத்தின் ஆதரவைப் பெற்றுக்கொண்டமையால்தான் விடுதலைப் புலிகளின் படை பலத்தை சிறிலங்காப் படையால் முறியடிக்க முடிந்தது.

அரச தலைவர்களும், படை ஜெனரல்களும் மாற்றமடைந்தபோது, மிகவும் குழப்பமான நிலைமைகளுக்கு மத்தியில் தமிழ் மக்களுக்கு அவர் தலைமை தாங்கினார். அவர் தனது தாயகத்தில் இருந்துகொண்டே இந்த போரை நடத்தினார். இது ஒரு தற்காப்பு போராகவே இருந்தது. அவர் தமிழர் தாயகத்துக்கு வெளியே போரை கொண்டுசெல்லவோ அல்லது அப்பாவிப் பொதுமக்களைப் பாதிப்புக்குள்ளாகச் செய்யவோ இல்லை. கொள்கையுடைய ஒரு மனிதராக அவர் இருந்தார். தனது இறுதி மூச்சுவரையில் தமிழ் மக்களின் நலன்களிலேயே அவர் கவனமாக இருந்தார். போர் அழுத்தம் மற்றும் தொடர்ச்சியான அனைத்துலக அழுத்தங்களுக்கு மத்தியில் அவர் ஒரு செயல்திறன் மிக்க படையையும் நடைமுறை ரீதியான நிர்வாகக் கட்டமைப்பு ஒன்றையும், நடைமுறை ரீதியான தமிழீழ அரசு ஒன்றையும் அவர் உருவாக்கியிருந்தார்.

சிறிலங்கா அரசு சொல்வது உண்மை என எடுத்துக்கொண்டால், விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தமிழீழப் போராட்டத்துக்கும் என்ன நடைபெற்றிருக்கின்றது என நீங்கள் நினைக்கின்றீர்கள்? பலர் சொல்வதைப் போல ஈழக் கனவு முடிவுக்கு வந்துவிட்டதா?

1976 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தமிழ் மக்களின் சுயாட்சி உரிமை என்ற கருத்துக்கு மக்களின் ஆணை கிடைத்தது. தமிழ் மக்களின் உரிமைகள் பெற்றுக்கொள்ளப்படும் வரையில் தமிழர்களின் போராட்டத்தில் மாற்றம் ஏற்படப்போவதில்லை. விடுதலைப் புலிகள் படை ரீதியான பின்னடைவைச் சந்தித்திருக்கின்றனர் என்பது உண்மைதான். 10 ஆயிரத்துக்கும் அதிகமான எமது போராளிகள் சிறிலங்கா அதிகாரிகளினால் அனைத்துலக விதிமுறைகளுக்கு எதிராகத் தடுத்துவைக்கப்படடுள்ளனர் என்பதும் உண்மைதான். ஆனால் தமிழர்களின் போராட்டம் முடிவுக்கு வரவில்லை.

எதிர்காலத்தில் விடுதலைப் புலிகள் எடுக்கப்போகும் நிலைப்பாடு என்ன?

விடுதலைப் புலிகள் அமைப்பானது நிலைமைகளுக்கு இசைவாக தன்னை மாற்றிக்கொள்ளக்கூடிய ஒரு அமைப்பு. புதிய உலக ஒழுங்குக்கு அமைவாக நாம் எமது போராட்ட வடிவத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். அத்துடன், வன்முறையற்ற ஒரு பாதையிலேயே நாம் செல்ல வேண்டும். எதிர்காலத்தில் எமது போராட்டம் அரசியல் வழிகளிலேயே முன்னெடுக்கப்படும். விடுதலைப் புலிகள் அமைப்பு ஒரு தேசிய அமைப்பாக தொடங்கப்பட்ட போதிலும் இப்போது ஒரு அனைத்துலகப் பிரசன்னத்தை அது கொண்டுள்ளது. இதனை ஒரு அனைத்துலக அமைப்பாக மாற்றியமைத்து அதன் மூலமாக சுயநிர்ணய உரிமைக்கான எமது போராட்டத்தை முன்னெடுப்போம்.

இதனை ஒரு தோல்வி என நீங்கள் கருதுகின்றீர்களா? ஒரு பாரம்பரிய படை என்ற நிலைக்குச் செல்வதை நிறுத்திவிட்டீர்களா?

நான் முதலில் குறிப்பிட்டது போல, நிச்சயமாக நாம் படைத்துறை ரீதியாக பின்னடைவு ஒன்றைச் சந்தித்துள்ளோம். நாம் இப்போது அனைத்துத் தமிழர்களும், அனைத்துலக சமூகமும் ஏற்றுக்கொள்ளக் கூடிய விதமான அரசியல் பாதை ஒன்றையே தெரிவு செய்ய வேண்டியுள்ளது.

இந்த நிலையில் அனைத்துலக சமூகம் செய்ய வேண்டியது என்ன?

30 வருடங்களுக்கு முன்னர் என்ன காரணத்துக்காக நாம் ஆயுதப் போராட்டத்தை தொடங்கினோமோ அது இன்று வரையில் தீர்க்கப்படாமல் இருக்கின்றது என்பதை அனைத்துலக சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். தமிழ் மக்கள் இன்றும் சமத்துவ உரிமை மறுக்கப்பட்டவர்களாக இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்தப்படுகின்றனர். கடந்த சில மாத காலமாக விடுதலைப் புலிகள் அழிக்கப்பட்டபோது அனைத்துலக சமூகம் மெளனமாகவே இருந்தது.

ஆனால், தமிழ் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அது தவறிவிட்டது. 30 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்களின் உயிர்களைக் காப்பாற்ற அது தவறிவிட்டது. தற்போது சிறிலங்காப் படையினரால் கொடூரமாக படை மயப்படுத்தப்பட்ட முகாம்களில் 3 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் வாடிக்கொண்டிருக்கின்றனர். இந்த மக்களைப் பாதுகாப்பதற்கு சிறிலங்கா அரசின் மீது எந்தவிதமான அழுத்தத்தையும் கொடுக்க முடியாத நிலையில் அனைத்துலக சமூகம் உள்ளது.

இந்த அப்பாவித் தமிழர்கள் மீது தமக்குள்ள அக்கறையை அனைத்துலக சமூகம் இப்போது வெளிப்படுத்துவதுடன், அவர்களைப் பாதுகாப்பதில் தமக்குள்ள அக்கறையையும் வெளிப்படுத்த வேண்டும். இதுதான் இப்போதுள்ள அவசரத் தேவை.

அமைச்சர் அம்மானுக்கு மனைவி வித்யா ஒரு மாத காலக்கெடு

Karuna_ColVidyawadi_Muraleetharanகருணா அம்மான் என்று அறியப்பட்ட இலங்கையின் தேச நிர்மாண அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு அவருடைய மனைவி ஒரு மாத காலக்கெடு வழங்கி உள்ளார். அமைச்சர் முரளீதரன் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாக சிறிலங்கா கார்டியன் இணையத் தளத்திற்கு வழங்கிய பேட்டியில் (July 22)தெரிவித்துள்ள வித்தியாவதி முரளீதரன் அவர் ஒரு மாத காலத்திற்குள் தனது தவறுகளைத் திருத்திக்கொள்ளத் தவறினால் அவர் பற்றிய இரகசியங்களை வெளிப்படுத்தப் போவதாகத் தெரிவித்து உள்ளார்.

கருணா அம்மான் 2007 நவம்பர் 2ல் தனது குடும்பத்தினரைக் காண லண்டன் வந்திரந்த வேளையில் ஸ்கொட்லன்ட் யாட் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு போலிக் கடவுச்சீட்டு மோசடிக்காக 9 மாதங்கள் சிறை வைக்கப்பட்டு 2008 யூலை 3 ல் இலங்கைக்குத் திருப்பி அனுப்பப்பட்டார். கிழக்கு மாகாண சபைத் தேர்தலுக்குப் பின் இலங்கை சென்ற கருணாவிற்கு முதலமைச்சர் பதவிக்குப் பதிலாக அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஏற்கனவே தற்போதைய முதலமைச்சர் பிள்ளையானுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாகவே கருணா வெளிநாடு செல்ல வேண்டிய நிர்ப்பங்தம் ஏற்பட்டதாகவும் அப்போது செய்திகள் வெளியாகி இருந்தது.

தாங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்து வந்த போது தனது கணவரிடம் தீர்க்கமான நோக்கம் இருந்ததாகக் குறிப்பிடும் வித்தியாவதி முரளீதரன் தற்போது முரளீதரன் தமிழ் மக்களுக்கும் தமிழ் தலைமைக்கும் துரோகம் இழைப்பதாகக் குற்றம்சாட்டி உள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில் ‘ஓம்’ போடும் ஒரு தலையாட்டியாக சுயநலத்துடன் செயற்படுவதாகத் தெரிவித்து உள்ளார். பீடில் வாசித்துக் கொண்டிருக்கும் நீரோ மன்னனின் நிலையில் தனது கணவர் இருப்பதாகவும் வித்தியாவதி முரளீதரன் குறிப்பிட்டு உள்ளார்.

Vidyawadi_Muraleetharanவித்தியாவதி சாதாரண குடும்பத் தலைவி மட்டுமல்ல தமிழீழ விடுதலைப் புலிகளின் பெண்கள் பிரிவின் தலைவிகளில் ஒருவர். கணவர் கருணாவுடன் தமிழீழ விடுதலைப் புலிகளில் இருந்து பிரிந்தவர். தற்போது இவர் தனது மூன்று பிள்ளைகளுடன் ஸ்கொட்லன்ட் பகுதியில் வசிக்கின்றார். கடைசியாக லண்டன் கென்சிங்ரன் பகுதியில் குடும்பத்தினருடன் இருந்த வேளையிலேயே கருணா கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தது.

கருணா லண்டனில் இருந்து கடந்த யூலையில் திருப்பி அனுப்பபட்ட பின்னர் கடந்த ஒரு வருடமாக தனது குடும்பத்தினரை நேரடியாகச் சந்திக்கவில்லை. அவருடைய பதவியும் அதையொட்டிய நடவடிக்கைகளும் குடும்ப உறவைப் பாதித்துள்ளதை வித்தியாவதி முரளீதரனின் நேர்காணலில் வெளிப்பட்டு உள்ளது. தொலைபேசியூடாக நான்கு மணிநேரம் இடம்பெற்ற நேர்காணலில் பல பகுதிகளை ஊடக நாகரீகம் கருதி வெளியிடவில்லை என ஸ்ரீலங்கா கார்டியன் இணையத் தளம் தெரிவித்து உள்ளது.

புலம்பெயர்ந்த நாடுகளில் இருந்து சென்ற குழுவினரைச் சந்திக்க வந்திருந்த முரளீதரன் மது போதையில் காணப்பட்டதாகவும் அவர் கிழக்கு மாகாண முதலமைச்சர் பற்றி மோசமான கருத்துக்களை வெளியிட்டதாகவும் அக்குழுவில் சென்ற சிலர் கருத்து வெளியிட்டு இருந்தனர். அமைச்சர் முரளீதரனுடைய கவனம் செக்ரிறரியில் இருந்த அளவிற்கு ஏனைய விடயங்களில் இருக்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

கிழக்கு மாகாண முதல்வர் சிவநேசன் சந்திரகாந்தன் 13வது திருத்தச்சட்டங்களில் உள்ள அதிகாரங்களைக் கோரி அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றார். கிழக்கு மாகாண சபையின் அங்கிகாரம் இன்றி அரசு தனியாருக்கு நிலங்களை வழங்குவதற்கு எதிராக கிழக்கு முதல்வர் நேற்று (யூலை 23) மாகாண சபையில் தீர்மானமும் இயற்றி உள்ளார். ஆனால் அமைச்சர் முரளீதரன் மாகாண சபைகளுக்கு அதிகாரங்கள் அவசியமில்லை என அரசுக்கு ஒத்திசைவாக செயற்பட்டு வருகின்றார்.

தொடரும் கருணா – பிள்ளையான் முரண்பாடு கிழக்கு மாகாண சபையை பலவீனப்படுத்துவதாக கிழக்கு முதல்வர் பிள்ளையானுக்கு நெருங்கிய ஒருவர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார். கருணா அம்மானின் நிலைப்பாடு மாகாண சபைக்கு கூடுதல் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதில் தடைக்கல்லாக இருப்பதாகவும் அவர் தேசம்நெற்றுக்குத் தெரிவித்தார்.

இதுவரை பிள்ளையானிடம் இருந்து எதிர்ப்பை எதிர்கொண்டு வந்த அமைச்சர் அம்மான் தற்போது மனைவி பிள்ளைகளிடம் இருந்து காலக்கெடுவை எதிர்நோக்கி உள்ளார். ஸ்கொட்லன்டில் வாழும் வித்தியாவதி முரளீதரனின் காலக்கெடுவை வெறும் அடுப்பு ஊதும் குடும்பப் பெண்ணின் மிரட்டலாக அமைச்சர் அம்மானால் தட்டிக் கழிக்க முடியுமா?

பிரபாகரன் அமெரிக்க அரசை உறுதியாக நம்பினார்.: ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு விகடனுக்கு செவ்வி

thru.jpg”புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, நிகழப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே அனுமானிக்கக்கூடிய சக்தி அதிகம். அதனால் போரின் இறுதி நிலை கொடூரமானதாகவும், தாங்க இயலாததாகவும் இருக்கும் என்று அவருக்குத் தெரிந்திருக்கும் என்று ஈழத் தமிழ் எழுத்தாளர் திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார்.

தற்போது மண்டபம் அகதிகள் முகாமுக்குக் கொண்டு வரப்பட்ட திருநாவுக்கரசை விகடன் நிறுவனத்தினார் சந்தித்துள்ளனர். திருநாவுக்கரசு விகடனுக்கு வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு:-

”ஈழத்தின் கடைசிக்கட்ட நிலைமை எப்படி இருந்தது?”

”இராணுவம் அனைத்துப் புறமும் சூழ்ந்துவிட்டது. இனி தப்பிக்க முடியாது என்கிற எண்ணம் மக்களிடத்திலும் போராளிகளிடத்திலும் உருவாகி விட்டது. பங்கருக்குள் பதுங்கி இருந்த மக்கள், இராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதியை நோக்கிப் போகத் தொடங்கி விட்டார்கள். சரியான தகவல் பரிமாற்றங்கள் இல்லாததால், போராளிகளும் திக்கற்று நின்றார்கள். திரும்பிய பக்கமெல்லாம் கதறல்.பிணங்கள் சிதறிக் கிடந்த பாதைகளில் மக்கள் ஓடிக் கொண்டிருந்தார்கள். எல்லோருடைய மனதிலுமே இதுதான் இறுதி நிமிடம் என்கிற பதைபதைப்பு. இறப்பைக் காட்டிலும் இறக்கப் போகிறோமே என்கிற பதற்றம் ரொம்பக் கொடுமையானது. வார்த்தைகளால் சொன்னால் புரியாது, அனுபவித்தால்தான் தெரியும்…”

”இறுதி நெருக்கடிகளை புலிகள் எப்படி சமாளிக்கத் திட்டமிட்டிருந்தார்கள்?”

”புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு, நிகழப்போகும் நிகழ்வுகளை முன்கூட்டியே அனுமானிக்கக்கூடிய சக்தி அதிகம். அதனால் போரின் இறுதி நிலை கொடூரமானதாகவும், தாங்க இயலாததாகவும் இருக்கும் என்று அவருக்குத் தெரிந்திருக்கும். புலிப்படைத் தளபதிகளுக்கும் போராளிகளுக்கும் இருந்த அசாத்திய நம்பிக்கையும் ஒரு கட்டத்தில் தகர்ந்து போனது. ஆரம்பத்தில்… கிளிநொச்சியைத் தாண்டி இராணுவத்தால் முன்னேற முடியாது என்று புலிகள் உறுதியாக நம்பி இருந்தனர்.

ஆனால், இராணுவம் அசுர பலத்தால் அடுத்தடுத்த நிலப் பகுதிகளை வீழ்த்தத் தொடங்கி விட்டது. அதன்பிறகு மக்களுக்கும் ‘இனி ஜெயிக்க முடியுமா’ என்கிற தயக்கமும் பயமும் ஏற்பட்டது. ஆனாலும், பிரபாகரன் கொஞ்சமும் தளராமல் உறுதியோடு போரை முன்னெடுத்து நடத்துவதில் தீவிரமாக இருந்தார். எத்தகைய சூழலிலும் தோல்வி குறித்த அச்சம் அவரிடத்தில் இல்லை. ஆனால், இறுதி நேரம் முழு நம்பிக்கையும் தகர்ந்து போகிற அளவுக்குக் கொடூரமானதாக மாறி விட்டது.

பிரபாகரனை குறிவைத்துத் தாக்குதல் நடப்பது தெரிந்து, 600 புலிகள் அவரை ஆனந்தபுரம் பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது நான்கு புறமும் இராணுவம் சூழ்ந்துகொண்டு தாக்குதலை நடத்தியது. அப்போது பிரபாகரனுடன் அசாத்திய திறமை படைத்த கடாபி, தீபன், விதுஷா, துர்கா உள்ளிட்ட போராளிகளும் அடுத்தநிலை தளபதிகளும் பாதுகாத்து நின்றனர். அந்த இலக்கை குறிவைத்து இராணுவம் தாக்குதல் நடத்த, அதில் புலிகளுக்கு நினைத்துப்பார்க்க முடியாத பேரிழப்பு ஏற்பட்டது. பிரபாகரனின் அதிமுக்கிய தளபதிகள் அதில் கொல்லப்பட்டார்கள். ஆனாலும், பானு உள்ளிட்ட முக்கிய தளபதிகளால் அந்தத் தாக்குதலில் இருந்து நூலிழையில் காப்பாற்றப்பட்டார் பிரபாகரன்!”

”கடைசி நேரத்தில் புலிகள் சமாதானத்துக்குத் தயாரானதாகவும், அதனை சிங்கள இராணுவம் சட்டை செய்யவில்லை என்றும் சொல்லப்படுகிறதே?”

“இராணுவத்தின் அடுத்தடுத்த கொடும் தாக்குதல்களை சமாளிக்க முடியாது என்பதை, புலிகளின் முக்கியத் தளபதிகளே தெரிந்து வைத்திருந்தார்கள். இதையடுத்து, அரசியல் பிரிவின் பொறுப்பாளரான பா.நடேசன், சமாதானப் பிரிவு பொறுப்பாளரான புலித்தேவன் உள்ளிட்டவர்கள் பிரபாகரனிடம் பேசினார்கள். ஆனால், பிரபாகரன் அமெரிக்க அரசை உறுதியாக நம்பினார். ‘ஹிலாரி கிளின்டனிடம் நம்ம ஆட்கள் பேசி விட்டார்கள். அதனால் சீக்கிரமே அமெரிக்கா நம் விவகாரத்தில் தலையிடும். நாம் இன்னும் மூன்று நாட்கள் வரை தாக்குப்பிடிப்போம்’ என பிரபாகரன் நம்பிக்கையோடு சொன்னார்.

ஆனால், அமெரிக்காவின் உதவி கைகூடுவதில் சில சிக்கல்கள் உருவாகி விட்டன. இந்தியாவைக் கடந்து அமெரிக்காவால் உதவ முடியாது என்பதை புலித் தலைவர்கள் தாமதமாக… அதாவது காலம் கடந்த பிறகே புரிந்து கொண்டனர். இதற்கிடையில், இராணுவம் முற்றாக வளைத்து விட்டது. கடைசி நேரத்தில் சரணடைவது குறித்து நடேசன், பிரபாகரனிடம் பேசினார். ‘நீங்கள் சரணடையச் செல்லுங்கள்… நான் களத்திலேயே நிற்கிறேன்!’ என உறுதியாகச் சொல்லி விட்டார் பிரபாகரன். இந்தக் கணத்தில்தான் நாங்கள் மக்களோடு மக்களாகக் கலந்து இராணுவப் பகுதிக்கு போனோம். கடந்த மே 16-ம் தேதி வரை புலித் தலைவர்கள் பற்றிய நிலவரம் இதுதான். ஆனால், அடுத்தடுத்த நாளிலேயே புலித் தலைவர்கள் வீழ்த்தப்பட்டு விட்டதாக செய்திகள் வந்தன.”

”வெள்ளைக் கொடியுடன் வந்த நடேசன் உள்ளிட்டவர்களை இராணுவம் சுட்டுக் கொன்றதாக வந்த செய்திகள் குறித்து..?”

”நடேசன் சமாதானத்துக்கு முயன்றது எனக்கு உறுதியாகத் தெரியும். ஆனால், சமாதான விஷயத்தை சிங்களத் தரப்புக்கு சொன்னவர்கள், அதனை எப்படி முன்னெடுத்தார்கள் என்பது யாருக்கும் தெரியாத விஷயமாக இருக்கிறது. சிங்கள இராணுவத்தின் கட்டமைப்புப்படி சமாதானத் தகவல் பல கட்டங்களைத் தாண்டித்தான் சம்பந்தப்பட்ட பட்டாலியன் வீரர்களுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கும். அந்த இடைவெளிக்குள் துயரங்கள் நடந்தேறி இருக்க வாய்ப்பிருக்கிறது. அந்தக் கணத்தில் நாங்கள் முகாம் பக்கம் வந்து விட்டோம்… அதனால், என்ன நடந்தது என்பது குறித்து உறுதியான தகவல் இல்லை!”

”பிரபாகரனின் நிலை என்ன ஆனது?”

”சரணடைவதில் கடைசி வரை பிரபாகரனுக்கு விருப்பம் இல்லை. ‘சரணடைவதைவிட சாவதே மேல்’ என்பதுதான் அவருடைய உறுதியான எண்ணம். ஆனால், கடைசி நேரத்திலும் வல்லமை மிக்க போராளிப்படை, பிரபாகரனைச் சுற்றி நின்றது. அவர் கடைசிக் கணத்தில் என்ன முடிவெடுத்தார் என்பதெல்லாம் அவரைச் சுற்றி நின்றவர்களுக்குக்கூட தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மற்றபடி, இந்தக் கேள்விக்கு யூகமான பதிலை சொல்வது சரியானதாக இருக்காது!”

”பிரபாகரனின் பிரேதம் என சிங்கள ராணுவம் காட்டிய படம்..?”

”அதற்கு முன்னர் நான் பிரபாகரனை பார்த்திருக்கிறேன். முக அமைப்புகள் எல்லாம் அவரைப் போலவேதான் இருந்தது. ஆனாலும், அதில் வேறேதும் ஜோடிப்பு செய்யப்பட்டிருக்கலாம் என மக்கள் மத்தியில் பேச்சிருந்தது. அடுத்தடுத்த தினங்களில் பிரபாகரன் கொல்லப்பட்ட தகவலை முக்கால்வாசி மக்கள் நம்பத் தொடங்கிவிட்டார்கள். பிரபாகரனைப் பிடிக்காதவர்கள்கூட, அவர் மரணித்ததாக வந்த செய்தியை நினைத்துக் கலங்கினார்கள். ஏனென்றால், தமிழீழப் போராட்டத்துக்கு அவரை விட்டால் வேறு ஆள் இல்லை என்பது தமிழ் மக்கள் மனதில் ஆணியாக அறையப்பட்டிருக்கும் உண்மை.”

”பிரபாகரனின் குடும்பத்தினர் தப்பி விட்டதாக சிலரும், அவர்களும் போரில் கொல்லப்பட்டு விட்டதாக சிலரும் முரணான கருத்துகளைச் சொல்கிறார்களே?”

”பிரபாகரன் தன்னுடைய குடும்பத்தினர் அனைவரையுமே ஈழத்து மண்ணில்தான் வைத்திருந்தார். போர் நெருக்கடியான நிலைக்கு வருவதற்கு முன்னரே, அவர்களைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்திருக்க முடியும். ஆனாலும், அதில் பிரபாகரனுக்கு கொஞ்சமும் விருப்பமில்லை. இரண்டு மகன்களையும், மகள் துவாரகாவையும் மக்கள் பார்க்கும் படியான நிலையில்தான் அவர் வைத்திருந்தார்.

தன்னுடைய குடும்பத்தினரை மட்டும் வெளியே அனுப்பினால், அது புலிகள் இயக்கத்தின் பிடிப்பை உடைத்து விடும் என்பதை அவர் உறுதியாகத் தெரிந்து வைத்திருந்தார். சார்ள்ஸ் அண்டனியை போர்க்களத்தில் நிறுத்தி இருந்தார். போர் மிகத் தீவிரமாக உருவெடுத்தபோது, பிரபாகரனின் மனைவி மதிவதனியை வெளியே அனுப்ப சிலர் முயற்சி எடுத்தார்கள். ஆனால் ‘மதிவதனி வெளியேறக் கூடாது…’ என உறுதியாக அறிவித்து விட்டார் பிரபாகரன். ‘மக்கள் வேறு… குடும்பத்தினர் வேறு…’ என்று அவர் ஒருநாளும் பிரித்துப் பார்த்ததில்லை.

உண்மையைச் சொல்வதானால், ‘போரின் முடிவு தன் குடும்பத்தினர் கூண்டோடு அழிவதாகக்கூட இருக்கும்’ என்பதையும் அவர் அனுமானித்து வைத்திருந்தார். அதற்காகவே பிரத்தியேகமாக ஒரு மருத்துவரைச் சந்தித்து தன்னுடைய மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் ஸ்பெஷலாக சயனைட்டுகளை தயாரிக்கச் சொல்லி வாங்கி வைத்திருந்தார். அதனைக் கொடுத்தனுப்பிய மருத்துவரே என்னிடம் சொன்ன விவரம் இது. சாவை பற்றிய அச்சமோ தயக்கமோ பிரபாகரனுக்கு ஒரு போதும் இருந்ததில்லை என்பதற்கு, இந்த ஒரு சம்பவமே போதும்!”

”பிரபாகரனின் குடும்பத்தினர் யாரும் தப்பித்திருக்க வாய்ப்பில்லையா?”

”போரின் இறுதி நேரம் நான் தங்கி இருந்த பங்கருக்கு அருகே ஒரு பெரிய பங்கர் இருந்தது. அங்கே நான் போன போது, அதில் பிரபாகரனின் பெற்றோர் தங்கி இருந்தார்கள். அவர்கள் இராணுவக் கட்டுப்பாட்டுக்கு வந்தபிறகு, கதிர்காமர் முகாமில் வைக்கப்பட்டிருந்ததை நான் பார்த்தேன். அவர்களை இராணுவம் சித்திரவதைகள் ஏதும் செய்யவில்லை. அதன்பிறகு, பாதுகாப்பு கருதி ஒரு ஸ்பெஷல் அறையில் வைத்து, அவர்களை இராணுவத் தரப்பு மரியாதையுடன் நடத்துவதாக எனக்குத் தகவல் வந்தது. பிரபாகரனின் மூத்த மகன் சார்ள்ஸ் அண்டனி போரில் மடிந்ததை நேரில் பார்த்தவர்களே உறுதி செய்திருக்கிறார்கள். அதே நேரம் துவாரகா, பாலச்சந்திரன், மதிவதனி ஆகியோர் என்ன ஆனார்கள் என்பது முகாமில் இருந்த எனக்கு சரிவரத் தெரியவில்லை!”

”பாலச்சந்திரன் கொல்லப்பட்டது போன்ற படம் இணைய தளங்களில் வெளியாகி இருக்கிறதே?”

”பாலச்சந்திரன் போரின் கடைசி வரை ஈழத்தில் இருந்தது உண்மை. மற்றபடி, அவர் எப்போது பிடிபட்டார் என்பது பற்றியெல்லாம் யாருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனாலும், அவர் கொல்லப்பட்டதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு என்பதுதான் என் சிந்தைக்கு எட்டிய விஷயம்.”

”புலிகள் தரப்பில் பலரும் காடுகளுக்குள் பதுங்கி இருப்பதாக சொல்லப்படுவது உண்மையா?”

”போரின் இறுதி நேரத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் இராணுவத்திடம் சரணடைந்தார்கள்.மொத்தமாக புலிப்படையில் 24ஆயிரம் புலிகள் இருந்தார்கள். போரின்போது ஏழாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் வீரச்சாவு அடைந்தார்கள். இதுதவிர, இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட புலிகள் இப்போது காடுகளுக்குள் பதுங்கி இருக்கிறார்கள். அவர்கள் மேற்கொண்டு தாக்குதல்கள் நடத்துவதற்கு இப்போதைக்கு சாத்தியங்கள் ஏதுமில்லை. அவர்களை ஒருங்கிணைக்க இப்போதைக்கு வழியுமில்லை!”

”பொட்டு அம்மான் பற்றி எந்தத் தகவலும் இல்லையே..?”

”பொட்டு அம்மான், சூசை உள்ளிட்ட போராளித் தலைவர்களைப் பற்றி எந்தத் தகவலும் இல்லை. ஒரு விஷயத்தை மட்டும் உறுதியாகச் சொல்ல முடியும்… பிரபாகரன் கொல்லப்பட்டது உண்மையெனில், அது பொட்டு அம்மானைக் கொன்ற பிறகுதான் நடந்திருக்க முடியும். பொட்டு அம்மான் குறித்து இராணுவத்துக்கே சரியான தகவல்கள் கிடைக்கவில்லை என்பதுதான் சர்ச்சைகளுக்கு விதை போட்டிருக்கிறது. அதே நேரம், பொட்டு அம்மான் இராணுவத்தின் கஸ்ரடியில் இருப்பதாக சொல்வதில் நிஜமில்லை!”

”இந்தியத் தேர்தல், ஈழத்து நிலைமையை மாற்றும் என புலிகள் எதிர்பார்த்தார்களா?”

”இந்தியாவில் காங்கிரஸ் அரசுதான் மறுபடியும் அமையும் என்பதை ஈழத்தில் இருந்த அடித்தட்டு மக்கள்கூட நன்றாக அறிந்து வைத்திருந்தார்கள். மாற்று அணி வலிமையானதாக இல்லை என்பது எல்லோருக்குமே புரிந்தது. அதனால் இந்திய ஆட்சியில் மாற்றம் வரும் என்று புலிகள் எண்ணவே இல்லை. இருந்தாலும், தமிழகத்தில் ஈழத்துக்கு ஆதரவாக எழும்பிய ஒற்றுமை, ஈழ மக்களை நெகிழ வைத்தது!”

பிரபாகரன் இடத்தைப் பிடிக்க யாருடனும் சண்டையிடவில்லை : வி. உருத்திரகுமாரன்

rudrakumaaran_v.jpgதமிழ் மக்கள் பிரச்சினைக்கு சுயநிர்ணய அடிப்படையில் தீர்வு காண்பதற்கே நாடு கடந்த “தமிழீழ அரசு – பிரபாகரன் விட்டுச் சென்ற கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சிகளில் மட்டும் தான ஈடுபட்டிருப்பதாக வழக்கறிஞர் வி.உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.  நியூயோர்க்கைச் சேர்ந்த வழக்கறிஞரும் அரசியல் ஆலோசகருமான விசுவநாதன் உருத்திரகுமாரன் ஜுனியர் விகடனுக்கு அளித்துள்ள பேட்டியின் விபரம் வருமாறு:-

”நாடு கடந்த தமிழ் ஈழ அரசுக்கு, புலம் பெயர்ந்த அனைவரின் உதவியும் அவசியம் தேவை. இந்தியாவின் உதவி மிகவும் அவசியம். இந்தியாவை நாங்கள் என்றுமே எதிரி நாடாக பாவித்ததில்லை. உலகம் முழுவதும் பரந்து விரிந்து கிடக்கும் தமிழர்கள்தான் இந்த இயக்கத்தின் தூண். ஆயுதம் எங்கள் குறிக்கோள் அல்ல.

இலங்கை சுதந்திரம் அடைந்த பிறகு, தமிழ்த் தலைவர்கள் அமிர்தலிங்கம், செல்வா போன்றோர் அறவழியில் போராடினார்கள். நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்தார்கள். ஆனால், இலங்கை அரசு இதை நசுக்கியது. கயமைத்தனமாக அடியோடு அழிக்க முனைந்தது. வேறு வழியின்றி ஆயுதம் எடுத்தோம். அதன் பின்னரே வெளியுலகுக்கு தமிழினத்தின் துன்பங்கள் தெரியவந்தன. ‘போராட்ட வடிவங்கள் மாறினாலும், லட்சியம் ஒன்றுதான்!’ என்று சுதுமலையில் எங்கள் தலைவர் கூறினார்.

தமிழர்களின் தேசியப் பிரச்னைக்கு சுயநிர்ணய அடிப்படையில் ஒரு தீர்வு காண்பதற்கு இது அமைக்கப்பட்டது. பேச்சு வார்த்தைக்கு சமபல நிலை அவசியம். அரசுக்கு சமமாக இருந்தோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு, இப்போது அந்த இடைவெளியை நிரப்ப மிகவும் அவசியம். புறநிலை அரசுக்கும் [Government in excile] நாடு கடந்த அரசுக்கும் [Transnational Government] பல ஒற்றுமைகள் இருந்தாலும், சில வேறுபாடுகள் உள்ளன.

ஒரு நாட்டில் அரசு அமைக்க இயலாதபோதே புறநிலை அரசு பிறக்கும். தலாய்லாமா, பாலஸ்தீனர்கள், ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் போன்றவை இந்த வகை. நாங்களோ, உலகெங்கும் உள்ள ஈழத் தமிழர்களை ஒருங்கிணைக்க இதைக் கையில் எடுத்திருக்கிறோம். நாடு கடந்த தமிழ் ஈழ அரசு இன்னமும் அமைக்கவில்லை.

அதை அமைப்பதற்காகவே செயற்குழுவை ஏற்படுத்தியுள்ளோம். பலர் இந்தியாவில் இருந்து தொடர்புகொண்டு, ‘உலகத் தமிழர் வரலாற்றில் இது ஒரு புதிய சகாப்தமாயிற்றே. எங்களை ஏன் சேர்க்கவில்லை?’ எனக் கேட்கின்றனர்.  எங்கள் அறிக்கையை இராஜதந்திரிகள், தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி, அவர்களின் கருத்துகளையும் கேட்டிருக்கிறோம். அடுத்தது, ஒவ்வொரு நாடுகளிலும் செயற்குழுவினை அமைக்கவிருக்கிறோம். கலந்துரையாடல்கள் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளன. இந்தக் குழுக்களுக்குப் பயிற்சிப் பட்டறையும் நடத்தி வருகிறோம்.

தமிழ் ஈழப் பிரச்னையில், குறிப்பாக கடந்த நான்கு மாதங்களாக நடந்த சம்பவங்களில், இந்தியாவின் பங்கை பல கோணங்களில் ஆராய்ந்து வருகிறோம். எங்கள் திட்டம் குறித்து இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயார் என்றுதான் கூறுகிறோம். இனி ஆயுதப் போராட்டம் இல்லை. இந்தியாவின் இறையாண்மையையோ அல்லது பூகோள நலன்களையோ எம்முடைய செயல்கள் பாதிக்காது என உறுதி அளிக்கிறோம்.

நாங்கள் திட்டமிடுவது, வெறும் வலைதளத்தில் மட்டுமே வாழும் அரசு அல்ல.தலைவருக்குப் பிறகான பதவிச் சண்டையும் அல்ல. எந்த ஒரு குழுவையோ அல்லது தனிநபரையோ இது முன்னிலைப்படுத்தாது. விரைவில் தேர்தலும் நடத்துவோம். ஜனநாயக முறைப்படி, அதில் யாரும் பங்கு பெறலாம். முகாம்களில் சீரழியும் மூன்று இலட்சம் ஈழ மக்களைக் காப்பாற்றுவதே எங்கள் நோக்கம். எங்கள் இலக்கு, தனி ஈழம். அதை இனி ஜனநாயக முறையில் இந்தியா, உலக நாடுகளின் உதவியுடன் பெறுவோம்.

”பிரபாகரன் இடத்துக்கு நான் வர முயற்சிக்கிறேன்  என்பது சரியல்ல. அவர் இடத்தை இட்டு நிரப்புவதற்கு யாருமில்லை. அதற்கான முயற்சியை நான் மட்டுமல்ல, யாருமே எடுக்க மாட்டார்கள். அவருடைய கொள்கைகளை நிறைவேற்றுவதற்கான முயற்சியில்தான் நாங்கள் இறங்கி இருக்கிறோம். ஈழ தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழ்வதற்கான ஏற்பாடுகளை செய்ய வேண்டும். அதற்காகவும் உலக அளவில் முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது இவ்வாறு உருத்திரகுமாரன் கூறியுள்ளார்.