நேர்காணல்கள்

நேர்காணல்கள்

நாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர் மக்களே தூண்களாக தாங்கி நிற்க வேண்டும்: உருத்திரகுமாரன்

02-rudrakumaran.jpgநாடு கடந்த தமிழீழ அரசை புலம்பெயர்ந்துள்ள மக்கள்தான் தூண்களாக தாங்கி நிற்க வேண்டும் என நாடு கடந்த தமிழீழ அரச உருவாக்க செயற்குழுவின் தலைவர் விசுவலிங்கம் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார்.  அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு செவ்வாய்க்கிழமை வழங்கிய நேர்காணலில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

நாடு கடந்த அரசு குறித்த சிறிய விளக்கத்தை தெரிவிக்க முடியுமா?

தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையை சரித்திரப் பின்னணியோடு நாங்கள் பார்க்க வேண்டும். சிறிலங்கா தீவு சுதந்திரமடைந்த பின்னர் தமிழ்த் தலைவர்கள் நாடாளுமன்றத்தின் மூலமும் சாத்வீகப் போராட்டத்தின் மூலமும் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க முனைந்தனர். ஆனால் அந்தப் போராட்டங்கள் படையினரால் முறியடிக்கப்பட்டதோடு,  இனவாதம் தலைதூக்கியதன் காரணமாக நாடாளுமன்றத்தின் மூலமூம் அந்த உரிமைகளை வென்றெடுக்க முடியாமல் போனது. இதன் விளைவாகவே தமிழ்மக்களின் இந்தப் போராட்டம் ஆயுதப் போராட்டமாக பரிணமித்தது.

கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்மக்களின் இந்த பிரச்சினை அனைத்துலக அரங்கில் முன்வைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது, அங்கு ஒரு கட்டுமானமும் இருந்தது. சிறிலங்கா அரசு இன்று மாறிவரும் பூகோள அரசியல் நிலைமையை தனக்கு சாதகமாக வைத்து அனைத்துலக சட்டங்களுக்கு முரணாக அந்த இராணுவப் போராட்டங்களை முறியடித்து விட்டது. எனவே அடுத்த கட்டமாக தமிழர்களின் போராட்டத்தை நாடு கடந்த தமிழீழ அரசு என்ற வகையில் முன்னெடுத்துச் செல்லவுள்ளோம்.

“போராட்ட வடிவங்கள் மாறினாலும் இலட்சியம் ஒன்றுதான்” என்று சுதுமலையில் இடம்பெற்ற பிரகடனத்தில் தலைவர் கூறினார். அதே போன்றுதான் போராட்ட வடிவங்கள் மாறினாலும் எமது இலட்சியம் ஒன்றுதான். அனைத்துலக சட்டங்களுக்கும் அனைத்துலக ஒழுங்குகளுக்கும் இணைவாக தமிழர்களின் தேசியப் பிரச்சினைக்கு சுயநிர்ணய அடிப்படையிலான ஒரு தீர்வைக் காண்பதற்காகத்தான் இது அமைக்கப்படவுள்ளது.

பேச்சுவார்த்தை மூலமான தீர்வைக் காண்பதற்கு சமபலநிலை அத்தியாவசியமானது. நோர்வேயின் அனுசரணையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளின்போது சமபலநிலை எங்களுடைய இராணுவ பலத்தை மையப்படுத்தியிருந்தது. இன்று சமபலமற்ற நிலையில் இருக்கின்றோம். எனினும் சமபலநிலை என்பது இராணுவ பலத்தை மட்டும் கொண்டதல்ல. சமபலநிலை என்பதற்கு பல்வெறு வடிவங்கள், பரிமாணங்கள் உண்டு.

தற்போது அமைக்கப்பட்டுள்ள நாடுகடந்த தமிழீழ அரசு அந்த சமபல நிலையை – தற்போதுள்ள சமபல இடைவெளியை – நிரப்பும் என்று நாங்கள் கருதுகிறோம்.

இதனடிப்படையில் பேச்சுவார்த்தையின் மூலம் சுயநிர்ணய அடிப்படையில் ஒருதீர்வைக் காண்பதற்கு இது அடிப்படையாக இருக்கும் என்று நாங்கள் கருதுகிறோம்.

நாடு கடந்த அரசு குறித்து கடந்த இரண்டு தசாப்தங்களாக ஆராய்ச்சிகள் இடம்பெற்று வந்தன. புறநிலை அரசுக்கும் (Government in Exile) நாடு கடந்த அரசுக்கும் (Transnational Government) பல ஒற்றுமைகள் இருந்தாலும் சில வேறுபாடுகள் உள்ளன. புறநிலை அரசு (என்பது ஒரு நாட்டில் ஆட்சியை நடத்த முடியாத நிலை ஏற்பட்டால் அவர்கள் அனைத்துலக சமூகத்தில் இன்னொரு நாட்டின் அனுசரணையுடன் புறநிலை அரசு (Government in Exile) அமைத்துக் கொள்வார்கள். உதாரணமாக ஏஎன்சி, பலஸ்தீனர்கள், இந்தியாவில் தலாய்லாமா அப்படிச் செய்தார்கள்.

மேற்படி இரண்டு விடயங்களிலும் அதாவது நாடு கடந்த அரசிலும் புறநிலை அரசிலும் அரசியல் இடைவெளி என்பது இல்லை. ஒரு நாட்டில் இதற்குரிய இடமளிப்புக்கள் இல்லாத காரணத்தினால்தான் அனைத்துலகில் இதனை அமைக்க வேண்டியுள்ளது.

அத்துடன், நாடு கடந்த தமிழீழ அரசு என்பது தாயகத்தில் உள்ள மக்களை மட்டுமன்றி புலம்பெயர்ந்துள்ள மக்களின் சமூக, அரசியல், பொருளாதார நலன்களையும் பேணும். எனவே, புலம்பெயர் தமிழ்மக்கள் ஒரு குழுவாக இருந்தால்தான் அந்த பலத்தின் மூலம் நாங்கள் எமது மக்களின் விடிவிற்கு உதவ முடியும்.

தமிழர்களின் இராணுவ பலம் சமநிலையில் இருந்தபோது அனைத்துலக சமூகத்தால் எமக்கு ஒரு தீர்வையும் வழங்க முடியவில்லை. இன்றைய நிலையில் இந்த நாடு கடந்த தமிழீழ அரசின் ஊடாக எவ்வாறு இலக்கினை அடைய முடியும் எனக் கருதுகின்றீர்கள்?

தமிழர்களின் தேசியப் பிரச்சினையானது பூகோள அரசியலுடன் பின்னிப் பிணைந்துவிட்டது. தென்னாசியாவில் எப்படி அரசியல் மாற்றமடைகிறதோ அதன் மையத்தில்தான் தமிழர்களின் இனப்பிரச்சினை தீர்வும் இருக்கின்றது. எமக்கு என ஒரு இராணுவ பலம் இல்லாவிட்டாலும் இன்று மாறிவரும் பூகோளஅரசியல் நிலையில் – நாடு கடந்த தமிழீழ அரசு ஒரு அதிகார மையமாக திகழ்ந்து, அனைத்துலக சமூகத்தின் ஆதரவுடன் அங்கு எமது உரிமைகளை வென்றெடுப்பதற்கான ஒரு சூழ்நிலை உருவாகும் என்று நான் கருதுகிறேன்.

கடல் கடந்த தமிழீழ அரசுக்கு அனைத்துலக நாடுகளின் ஆதரவு வெளிப்படையாகவோ அல்லது மறைமுகமாகவோ இருக்கின்றதா?

நாடு கடந்த தமிழீழ அரசு இன்னும் அமைக்கப்படவில்லை. தற்போது அதனை அமைப்பதற்கான செயற்குழுவே அமைக்கப்பட்டுள்ளது. இதனை அமைப்பது தொடர்பாக பல்வேறு இராஜதந்திரிகளுடனும், அனைத்துலக தொண்டு நிறுவனங்கள் உட்பட பல தரப்புகளுடனும் நாங்கள் தொடர்புகளை ஏற்படுத்தி வருகின்றோம். நாங்கள் தயாரித்த அறிக்கையை இராஜதந்திரிகளுக்கும், தொண்டு நிறுவன பிரிதிநிதிகளுக்கும் அனுப்பி அவர்களுடன் கருத்து பரிமாறுவதற்கு கோரியுள்ளோம். அவர்கள் அத்தகைய கருத்து பரிமாறலுக்கு இணங்கியுள்ளனர். அவர்களுடனான சந்திப்புக்கும் ஏற்பாடாகியுள்ளது. விரைவில் ஒரு ஆலோசனைக்குழுவையும் அமைப்போம்.

நாடு கடந்த தமிழீழ அரசுக்கு எதிர்பாராத வரவேற்பு கிடைத்துள்ளது. எந்தவொரு இராஜதந்திரியோ அல்லது எந்தவொரு தொண்டு நிறுவனமோ இந்த கடல் கடந்த தமிழீழ அரசு குறித்த அறிக்கையை நிராகரிக்கவில்லை. மாறாக இதைப்பற்றி முக்கியமெடுத்து கலந்துரையாட வேண்டும் என்று கூறியுள்ளனர். தனிப்பட்ட முறையில் இத்தகைய கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருகின்றன. விரைவில் முறையான ஒரு கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

ஆலோசனைக்குழு அமைக்கப்பட்ட பின்னர் அடுத்தகட்ட நடவடிக்கையாக என்ன செய்யப்போகிறீர்கள்?

செயற்குழு அமைப்பது தொடர்பாக கலந்துரையாடி வருகிறோம். குறிப்பாக ஒவ்வொரு நாடுகளுக்குமான செயற்குழுக்களையும் அமைக்கவிருக்கிறோம். அத்துடன் எமது செயற்குழுவில் மேலும் சிலரையும் சேர்க்கவிருக்கிறோம். குறிப்பாக சிறிலங்காவைச் சேர்ந்த முஸ்லிம் பேராசிரியர் ஒருவர் அமெரிக்காவில் தற்போது உள்ளார். அவர் எமக்கு ஒரு கடிதம் அனுப்பியிருக்கிறார். இது ஒரு வரலாற்று சந்தர்ப்பம் என்றும் இதில் தானும் இணைந்து தமிழ் – முஸ்லிம் மக்களுக்கு சரியான தீர்வைக் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார். அதேபோல இந்தியாவிலிருந்தும் சிலர் தொடர்பு கொண்டு எதற்காக இந்தியாவிலிருந்து எவரையும் செயற்குழுவில் இணைக்கவில்லை என்று தெரிவித்திருந்தனர்.

எனவே இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு செயற்குழுவை விரிவுபடுத்தவிருக்கிறோம். அதன்பின்னர் இந்த குழுக்களுக்கான பயிற்சிப் பட்டறைகளை நடாத்தவிருக்கிறோம்.

தமிழ்மக்களுக்கான தீர்வு விடயத்தில் சிறிலங்கா மற்றும் இந்தியாவையும் இணைத்துக்கொண்டு செல்வது குறித்த உங்களது கருத்து என்ன?

தமிழர் பிரச்சினையில் இந்தியாவின் பங்கை கடந்த நான்கு மாதங்களாக நடந்த சம்பவங்கள் எமக்கு தெட்டத்தெளிவாக காட்டியது. தமிழ்த்தேசியப் பிரச்சினையில் இந்தியா முக்கிய வகிக்கின்றது. அது நன்மையாகவோ அல்லது தீமையாகவோ இருக்கலாம். எதுஎப்படியிருப்பினும் இந்தியாவுடனும் நாங்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும்.

சிறிலங்காவிற்கான கதவுகளையும் நாங்கள் இன்னமும் மூடவில்லை. பேச்சுவார்த்தை மூலமாகத்தான் தீர்வை எட்டுவதென்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.

அந்தவகையில் சிறிலங்கா அரசுக்கான கதவுகளை திறந்தே வைத்திருக்கின்றோம். இந்தியாவுடனும் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றோம். இந்தியாவின் ஆட்புல ஒருமைப்பாட்டுக்கோ அல்லது இந்தியாவின் பூகோள நலன்களுக்கோ எமது செயற்பாடுகள் பாதிப்பாக அமையாது என்பதை வலியுறுத்தி இந்தியாவுடனான எமது செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்லவிருக்கின்றோம்.

இரண்டு விடயங்களை நாங்கள் தொடர்ந்து முன்னெடுக்கவிருக்கிறோம். ஒன்று – சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் (Relevant Stake Holders) தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளை நடத்துவது. இரண்டாவது நிறுவனமயப்படுத்தலையும் (Institution Building) முன்னெடுத்துச் செல்வது.

கடல் கடந்த தமிழீழ அரசு பற்றிய விளக்கத்தை புலம்பெயர்ந்த தமிழ்மக்களுக்கு கொண்டுசெல்ல வேண்டிய தேவை உள்ளது. அதனை நீங்கள் எவ்வாறு திட்டமிடுகிறீர்கள்?

மக்களை இந்த தகவல் சென்றடைய வேண்டும் என்பதில் நாங்கள் கவனம் எடுத்திருக்கின்றோம். செயற்குழுவில் இடம்பெற்றுள்ளவர்கள் எமது நடவடிக்கைகள் குறித்த விளக்கங்களை ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்துவார்கள்.

நாடு கடந்த அரசு என்பது எமது மக்களுக்கு புதிய விடயம். எனவே இதனை எமது மக்களுக்கு எவ்வாறு தெரிவிப்பதென்பது குறித்து நாங்கள் கவனமெடுத்து வருகிறோம். குறிப்பாக கேள்வி பதில் வடிவில் புத்தகமாக இந்த விளக்கத்தை மக்களுக்கு வெளிப்படுத்தவிருக்கிறோம். ஓரிரு மாதங்களில் இந்த புத்தகம் வெளியாகும்.

நடந்து முடிந்த துயரச் சம்பவங்களிலிருந்து மீண்டெழுந்து மக்கள் எவ்வளவு விரைவாக அடுத்தகட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?

நாடு கடந்த தமிழீழ அரசு குறித்த அறிவிப்பு வெளியாகியதும் அதனை அவசரப்பட்டு மெற்கொண்ட முடிவாக சிலர் கருதினர். மே மாதம் 15, 17 ஆம் திகதிகளில் முள்ளிவாய்க்காலில் நடந்த இராணுவத் தாக்குதல்களின் கொடூரம் எங்களுக்கு தெரியும். அந்த ஒருமாத காலத்தில் சிறிலங்கா அரசிற்கு நாங்கள் ஒரு செய்தியை அனுப்ப விரும்பினோம். இராணுவ ரீதியில் போரியல் சட்டங்களுக்கு மாறாக எங்களுடைய சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தை அழித்தாலும் அரசியல் ரீதியாக நாங்கள் அழியவில்லை, அழிக்கவும் முடியாது என்ற செய்தியை சிறிலங்கா அரசிற்கு தெரியப்படுத்தவே காலங் கடந்த தமிழீழ அரசை நாங்கள் அறிவித்தோம்.

அத்துடன், அடுத்து என்ன என்று இருந்த மக்களுக்கு ஒரு வழியைக் காட்டுவதற்காகத்தான் நாங்கள் அவசரப்பட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டோம்.

புலம்பெயர் வாழ் தமிழ்மக்கள் தற்போது செய்யவேண்டிய பணிகளாக எவற்றைக் கருதுகிறீர்கள்?

நாடு கடந்த தமிழீழ அரசிற்கு புலம்பெயர்ந்துள்ள எமது மக்களின் ஆதரவு நிச்சயமாகத் தேவை. புலம்பெயர்ந்துள்ள மக்களின் அமைப்புகள்தான் இந்த அரசை தூண்களாகத் தாங்கி நிற்க வேண்டும். அனைத்துலக நாடுகளில் பரந்து வாழும் புலம்பெயர் மக்களால் தெரிவு செய்யப்படும் இந்த அரசுதான் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதிநிதியாக (Authentic Voice) வரவேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

எந்தவொரு குழுவையோ அல்லது எந்தவொரு நபரையோ இது முன்னுரிமைப்படுத்தவில்லை. நாங்கள் தேர்தல் நடத்த இருக்கின்றோம். அது ஜனநாயக முறைப்படி நடக்கும். அதில் எவரும் பங்குகொள்ளலாம். அப்படி தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படவுள்ள எமது அரசு தான் அனைத்துலகில் தமிழ் மக்களின் ஏற்றுக்கொள்ளப்பட்ட குரலாக இருக்க வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம்.

அதற்கு முன்னர் மூன்று இலட்சம் மக்கள் முகாம்களில் வாழ்கின்றனர். அவர்களுக்கு என்ன செய்யவேண்டும் என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

எனவே முக்கியமாக ஒவ்வொரு தமிழனும் இதில் ஒன்றுபட்டு இது எனது அரசு என்ற நோக்கில் இதனை முன்னெடுத்துச் செல்ல வேண்டும்.

இனங்களுக்கிடையே ஐக்கியம் பற்றி பேசுவதும், அறிக்கைகள் விடுவதும் மட்டும் போதாது. செயல்பாட்டு ரீதியாக காட்ட வேண்டும். – சட்டத்தரணி ஏ.எம். வைஸ் : நேர்காணல்

சட்டத்தரணி ஏ.எம். வைஸ்வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்த தேசம்நெற் முன்னெடுத்த முயற்சிக்கு மத்திய இலங்கை முஸ்லீம் பட்டதாரிகள் சங்கம் உதவ முன்வந்துள்ளது. இருபத்து எட்டு லட்சம் ரூபாய் நிதித்திட்டத்தில் 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் முகாம்களில் உள்ள ஒவ்வொரு மாணவனுக்கும் 5 பயிற்சி நூல்கள் மற்றும் வழிகாட்டி நூல்களை வழங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்டமாக 2009 ஏப்ரல் 01ஆம் திகதி இடம்பெயர்ந்த தரம் 05இல் கல்விபயிலும் 1057 மாணவர்களுக்காக வேண்டி சிந்தனைவட்டமும், தேசம்நெற் உம் இணைந்து மாதிரிவினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கியது.

2009.06.01ஆம் திகதி உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் வவுனியா நலன்புரி நிலையங்களில் இயங்கும் 53 பாடசாலைகளிலும் உள்ள இடம் பெயர்ந்த தரம் 5 மாணவர்களின் எண்ணிக்கை 4872 ஆக உயர்ந்துள்ளது.

எனவே, வவுனியா நலன்புரி நிலையங்களில் செயற்படும் இடம்பெயர்ந்த மாணவர்களுக்காக வேண்டி அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளின் இணைப்பாளரும், துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளருமான திரு.த. மேகநாதன் அவர்களின் வேண்டுகோளின்படி மேலதிகமான 3815 மாணவர்களுக்கும் மேற்படி உதவியினை வழங்க தேசம்நெற் உம், சிந்தனைவட்டமும் முடிவெடுத்தது. அத்துடன், இந்த வேலைத்திட்டத்தில் சில அமைப்புகளையும் இணைத்துக் கொள்ள முடிவெடுத்தது.

ஒரு மாணவனுக்கு 570ரூபாய் வீதம் பெறுமதிமிக்க 30 மாதிரிவினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் 4872 மாணவர்களுக்கும் தனித்தனியாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவினம் 27,77,040 ரூபாவாகும். இச்செலவில் முன்றிலொரு பங்கினை சிந்தனைவட்டம் பொறுப்பேற்றுக் கொண்டது. இரண்டாம் கட்டமாக 3815 மாணவர்களுக்கு வினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கும் வேலைத்திட்டத்திற்கு இலங்கை நாணயப்படி 7 இலட்சம் ரூபாய்களை வழங்க மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில் சிந்தனை வட்ட அலுவலகத்தில் நடைபெற்ற வைபவத்தின்போது மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றிய செயலாளர் ஜனாப் ஏ.எம். வைஸ் அவர்கள் சிந்தனைவட்ட பணிப்பாளர் கலாபூசணம் புன்னியாமீன் அவர்களிடம் 7 இலட்சம் ரூபாய் பெறுமதியாக காசோலையை கையளித்தார்.

லண்டனில் இயங்கும் அகிலன் பவுண்டேசன் இம்மாணவர்களின் கல்வித்திட்டத்திற்கு உதவ முன் வந்துள்ளது. இது பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.

மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றிய செயலாளரும் சட்டத்தரணியும், தேசிய சேமிப்பு வங்கியின் மாவட்ட சட்ட அதிகாரியும், சத்திய பிரமாண ஆணையாளரும், சமாதான நீதவானும், மத்திய இலங்கை தகவல் பேரவையின் தலைவரும், தெற்காசிய சுதந்திர ஊடக அமைப்பினதும், ஸ்ரீலங்கா மீடியா போரத்தினதும் கண்டி மாவட்ட இணைப்பாளருமான சட்டத்தரணி ஏ.எம். வைஸ் அவர்கள் “தேசம்நெற்” க்கு வழங்கிய விசேட நேர்காணல் கீழே தரப்படுகின்றது.

தேசம்நெற்: தற்போதைய நெருக்கமான சூழ்நிலையின் பின்னணியில் வன்னி மாவட்டத்திலிருந்து இடம்பெயர்ந்த தரம் 05 மாணவர்களுக்கு உதவும் முகமாக மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம் முன்வந்தமையிட்டு எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளும் அதேநேரத்தில் ஒரு முஸ்லிம் அமைப்பான நீங்கள் இத்திட்டத்தில் ஏன் உதவியளிக்க முன்வந்தீர்கள் என்பதை குறிப்பிட முடியுமா?

ஏ.எம். வைஸ்: மானுடம் என்று பார்க்கும்போது இனம், மதம் இரண்டாம் பட்சமே. வன்னி மாவட்டத்திலிருந்து பாதிக்கப்பட்டு வந்துள்ள அனைவரும் மானுடப் பிறவிகளே. எங்களைப் போலவே ஆசாபாசமுள்ள அவர்களது உணர்வுகளை நாங்கள் மதிக்க வேண்டும். கடந்த வாரம் இலங்கைப் பாராளுமன்றத்தில் கல்வி அமைச்சர் திரு. சுசில் பிரேம்ஜயந்த அவர்கள் தெரிவித்த அறிக்கை பிரகாரம சுமார் 60,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இடம்பெயர்ந்து வன்னியில் அமைக்கப்பட்டுள்ள அகதிமுகாம்களில் தங்கியுள்ளனர்.

இம்மாணவர்களின் நிலையினை நேரடியாக அவதானிக்கும்போது அவர்களின் ஏக்கங்களைப் புரிந்து கொள்ளக் கூடியதாகவுள்ளது. அந்த அடிப்படையிலேயே மாணவர்களின் கல்வி நலனுக்காக வேண்டி செயல்படும் அமைப்புகளுடன் இணைந்து உதவி புரிய எண்ணியமையினாலேயே தேசம்நெற், சிந்தனைவட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து கொண்டு இதற்கு உதவி வழங்க முன்வந்தோம்.

மறுபுறமாக இனங்களுக்கிடையே ஐக்கியத்தைப் பற்றி கூட்டங்களில் பேசுவதால் மாத்திரமோ, அறிக்கைகள் விடுவதால் மாத்திரமோ சரிசெய்யப்படுவதில்லை. நாங்கள் செயல்பாட்டு ரீதியாக முன்வர வேண்டும். அவ்வாறு முன்வந்தால்தான் நடைமுறை சாத்தியப்பாடுமிக்கதாக இருக்கும். எனவே, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்காக உதவிகளை வழங்குவதில் முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம் ஒரு கடமையெனக் கருதுகின்றது.

தேசம்நெற்: எம்மால் வழங்கப்படக்கூடிய மாதிரிவினாத்தாள்கள், வழிகாட்டிப் புத்தகங்கள் மாணவர்களுக்கு பயனுள்ளவையாக உள்ளது என நீங்கள் கருதுகின்றீர்களா?

ஏ.எம். வைஸ்: தேசம்நெற் ஆலும் சிந்தனைவட்டத்தாலும் வழங்கப்படும் மாதிரி வினாத்தாள்களையும், வழிகாட்டிப் புத்தகங்களையும் எமது முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியத்தின் கல்வி அபிவிருத்திப் பிரிவு பரிசீலித்தது. அந்த வினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகங்களும் மாணவர்களுக்கு ஏற்ற முறையில் புதிய பாடத்திட்டத்தைத் தழுவி எழுதப்பட்டுள்ளமையை எமது கல்வி அபிவிருத்திப் பிரிவு உறுதிப்படுத்தியது. எமது கல்வி அபிவிருத்திப் பிரிவில் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், கல்விமான்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். கல்வி அபிவிருத்திப் பிரிவின் உறுதிப்பாட்டின் பிற்பாடு இத்திட்டத்துக்கு உதவுவதில் எமக்கு எந்தவித சந்தேகமும் இருக்கவில்லை.

மேலும், தேசம்நெற் ஆலும் சிந்தனைவட்டத்தாலும் விநியோகிக்கப்படும் மாதிரிவினாத்தாள்களும், வழிகாட்டிநூல்களும் நேரடியாக மாணவர்களிடம் போய்ச் சேர்வதை எம்மால் உறுதிப்படுத்தக் கூடியதாக இருந்தது. வேறு உதவிகள் நிமித்தமாக எமது இயக்கத்தின் சார்பில் இடம்பெயர் முகாம்களுக்கு சென்ற பிரிதிநிதிகள் இதனை உறுதிப்படுத்தினர். அதேநேரத்தில் இடம்பெயர்ந்த தரம் 05 மாணவர்களை பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள் சிந்தனைவட்ட வினாத்தாள்களுக்கும், வழிகாட்டிப் புத்தகங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்துவருவதையும் அவதானிக்க முடிந்தது.

தேசம்நெற்: அரசாங்கம் இம்மாணவர்களுக்காக வேண்டி இலவச பாடப்புத்தகங்களை வழங்கி வரும் அதேநேரத்தில் எம்மால் வழங்கப்படும் வழிகாட்டிப் புத்தகங்கள், மாதிரிவினாத்தாள்களின் முக்கியத்துவத்தை எவ்வாறு ஏற்றுக் கொள்கிறீர்கள்?

ஏ.எம். வைஸ்: அரசாங்கம் இடம்பெயர்ந்துள்ள அனைத்து தர மாணவர்களுக்கும் அரசாங்கத்தால் வழங்கப்படும் இலவச புத்தகங்களை வழங்கி வருகின்றது. இந்த அடிப்படையில் தரம் 05 மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இங்கு ஒரு முக்கிய விடயத்தை கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது. அரசாங்கத்தால் வழங்கப்படும் புத்தகங்கள் ஓராண்டு கல்வி செயற்பாட்டை மையமாகக் கொண்டு கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக வடிவமைக்கப்பட்டவையாகும். ஆனால், இடம்பெயர்ந்து வந்துள்ள பெரும்பாலான மாணவர்கள் குறிப்பாக கிளிநொச்சி, முல்லைத் தீவைச் சேர்ந்த மாணவர்கள் கடந்த 06 மாதங்களில் பாடசாலைக் கல்வியைப் பெறாத நிலையிலேயே உள்ளனர்.

அதேநேரத்தில் மடுவலயம், முல்லைத்தீவு துணுக்காய் போன்ற பிரதேச மாணவர்கள் கிட்டத்தட்ட ஓராண்டுகள் பாடசாலைக் கல்வியைப் பெறாத நிலையிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். இருப்பினும் அரசாங்கத்தால் நடத்தப்படக் கூடிய தேசிய பரீட்சைகள் தேசிய ரீதியில் திட்டமிடப்படுவதனால் அரசாங்கப் பரீட்சைகள் திட்டமிட்டபடி திட்டமிட்ட நேரஅட்டவைணயில் நடைபெறுகின்றன. இதனால் இடம்பெயர்ந்த மாணவர்கள் பாடத்திட்டத்தை நிறைவு செய்யாத நிலையில் பரீட்சைக்குத் தோற்ற வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதுபோன்ற சந்தர்ப்பத்தில் தேசம்நெற், சிந்தனைவட்டம் இணைந்து வழங்கும் மாதிரி வினாத்தாள்களும், வழிகாட்டிப் புத்தகங்களும் மாணவர்களுக்கு பெரிதும் உதவியாக அமைகின்றன என்றே நாம் கருதுகின்றோம்.

தேசம்நெற்: இடம்பெயர்ந்த மாணவர்கள் தொடர்பாக தங்கள் இயக்கம் ஏற்கனவே பல ஆய்வுகளை மேற்கொண்டதாக நாம் அறிகின்றோம். இந்த மாணவர்களுக்கான கற்றல், கற்பித்தல் நடவடிக்கைகள் குறித்து யாதாவது குறிப்பிட முடியுமா?

ஏ.எம். வைஸ்: பொதுவான அவதானத்தின் பிரகாரம் இடம்பெயர்ந்த அனைத்து மாணவர்களும் போல மானசீகமாக பாதிப்புக்கு உட்பட்டுள்ளனர். அவர்கள் வாழ்ந்த சூழலிலிருந்து பிரிந்து வந்த வேதனை, தனது நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்களை இழந்த துயர சூழ்நிலை. ஏற்கனவே கற்றுவந்த சூழலைவிட வித்தியாசமான சூழலில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் கற்பதற்கும் போதிய வசிதியில்லை இவ்வாறாக பல காரணங்கள் நிமித்தமாக மனோநிலையில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணாக்கரின் மனோநிலைப் பாதிப்பினை குறைப்பதற்காக வேண்டி கல்வித் திணைக்களமும், ஏனைய சில நிறுவனங்களும் சில கவுன்சிலின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் கூட, இச்செயற்கையான சூழ்நிலையில் அவர்களது மனோநிலை மாற்றங்களை சீர்செய்வதென்பது கடினமான காரியமே.

இத்தகைய மாணவர்களிடம் முறைசார் கல்வித்திட்டத்தின் கீழ் போதனைகளை நடத்துவதென்பது மிகவும் கடினமான ஒரு காரியமே. அதற்காக இம்மாணவர்களை விட்டுவிடமுடியாது.

மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்துவதைவிட அரசாங்கப் பரீட்சைகளுக்கு முகம்கொடுக்கும் மாணவர்களுக்கு அப்பரீட்சையை முகம்கொடுக்கக் கூடிய வழிகளைக் காட்ட வேண்டியது தற்போதைய சூழ்நிலையில் மிக அவசியமானது. மாணவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் க.பொ.த உயர்தரப் பரீட்சை, புலமைப்பரிசில் பரீட்சை ஆகிய இரண்டு பிரதான பரீட்சைகளை எதிர்நோக்கியுள்ளனர். இதில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்காக வேண்டி பல துரித செயற்றிட்டங்கள் நடைபெறுவதாக அறிகின்றோம். அதேநேரம் தேசம்நெற், சிந்தனைவட்டம் ஆகியன இணைந்து நடைமுறைப்படுத்தும் இத்திட்டம் தரம் 05 மாணவர்களுக்கான துரித செயல்திட்டமாகக் கொள்ளலாம். இதனை மாணவர்கள் ஆர்வத்துடன் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்க முடியும்.

புலம்பெயர் தமிழர்களினதும் தமிழ் நாட்டு மக்களதும் ஆதரவுடன் நாம் அனைத்துலக மட்டத்தில் எமது போராட்டத்தை முன்னெடுப்போம் : செ.பத்மநாதன்

lttepathmnathan.jpgபுலம்பெயர் தமிழர்களினதும் தமிழ் நாட்டு மக்களதும் ஆதரவுடன் நாம் அனைத்துலக மட்டத்தில் எமது போராட்டத்தை முன்னெடுப்போம் என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் அறிவித்துள்ளார்.
‘இந்தியா ருடே’ குழுமத்தின் ‘ஹெட்லைன்ஸ் ருடே’க்கு அவர் வழங்கிய நேர்காணலின் முக்கிய பகுதிகள்:

பிரபாகரன் அவர்களின் மரணம் பற்றிய உண்மைகள் என்ன?

எனக்கு கிடைக்கப்பெற்ற தகவல்களின் படி, எமது தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் சிறிலங்கா படைகளுடனான போரில் மே 17 ஆம் நாள் மாவீரர் ஆனார்.

இறுதி மணித்துளிகள் வரை நீங்கள் தொடர்பில் இருந்தீர்களா? அந்த இறுதி மணித்துளிகள் எப்படியாக இருந்தன?

ஆம், அவரின் தொடர்பு இணைப்புத் துண்டிக்கப்படும் கடைசி மணி நேரம் வரையில் நான் எமது தலைவருடன் தொடர்பில் இருந்தேன். எனது இறுதித் தொடர்பு கேணல் சூசையுடன் இருந்தது. அந்த நேரத்தில் அவர் சிறிலங்கா படையினருடன் மீதான தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதல் அணியை கடைசி மணிவரை வழி நடத்திக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் களத்தில் நடப்பதை விபரமாக அவர் எனக்கு விபரித்தார்.

கடைசி நேரத்தில் சிறிலங்கா இராணுவத்தின் தாக்குதல் நிறையக் கோரமும் பயங்கரமும் கொண்டிருந்தது. ஆயிரக்கணக்கான எமது மக்கள் கொல்லப்பட்டும் காயப்பட்டும் இருந்தனர். அங்கே மருத்துவர்களோ, மருத்துவ வசதிகளோ, காயப்பட்டவர்களைக் கவனிப்பதற்கு இருக்கவில்லை. மருத்துவ கவனிப்பு இல்லாமல் மக்கள் இறந்து கொண்டிருந்தனர். எமது தலைவர் சிறிலங்கா இராணுவத்துடன் மோதி ஈழத் தமிழ் தேசியத்துக்காக தமது உயிரைத் தியாகம் செய்து கொண்டிருக்கிறார் எனவும் சூசை தெரிவித்தார்.

பிரபாகரனின் குடும்பத்தில் யார், யார் எஞ்சியுள்ளனர்?

எமக்கு கிடைத்த மிக நம்பகரமான தகவல்களின் படி எமது தலைவரின் மூத்த மகன் சாள்ஸ் அன்ரனியும் மகள் துவாரகாவும் தமிழீழ விடுதலைப் புலிகளின் படையணியில் இணைந்து சிறிலங்கா படையினருடனான போரில் இறுதி நேரத்தில் அவர்களும் வீரச்சாவடைந்தனர். இந்தக் கணம் வரை தலைவரின் துணைவியார் மதிவதனியும் இளைய மகன் பாலச்சந்திரனின் கதியும் என்ன என்பது பற்றிய துல்லியமான தகவல் எமக்கு கிடைக்கவில்லை.

‘ஹெட்லைன்ஸ் ருடே’க்கு எரிக் சொல்ஹெய்ம் வழங்கிய பேட்டியில் கடைசிப் போரின் இறுதிக் கணங்கள் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் தம்முடன் தொடர்பில் இருந்தனர் என்று சொல்லியிருந்தார். ஏனைய உலகத் தலைவர்களுடனும் நீங்கள் தொடர்பு வைத்திருந்தீர்களா?

ஆம். நான் சில உலகத் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்தேன். ஆனால் இராஜதந்திரக் காரணங்களுக்காக அத்தகைய தொடர்புகள் பற்றிய தகவல்களை இந்தத் தருணத்தில் எம்மால் வெளியிட முடியாதுள்ளது.

இந்த முயற்சிகள் ஏன் பயன் தராமல் போயின?

போரை நிறுத்த அர்த்தமான நடவடிக்கைகளை அவர்கள் எடுக்க முன்னர் தமிழீழ விடுதலைப் புலிகள் தமது ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டும் என அனைத்துலக சமூகம் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்துள்ளது. ஆயுதங்களை கீழே வைக்கும் முன்பாக ஏற்றுக்கொள்ளத்தக்க அரசியல் தீர்வு வைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் எமது தலைமை இருந்தது.

ஆயுதங்களை கீழே வைப்பதற்குப் பதிலாக நாம் ஒரு போர் நிறுத்தத்தையும் அரசியல் தீர்வையும் தேடினோம். தூரதிர்ஷ்டவசமாக எமது கோரிக்கை சிறிலங்கா அரசுக்கு ஏற்க முடியாத காரணத்தால் அனைத்துலக சமூகத்துக்கு அது ஏற்றுக்கொள்ளத்தக்கதாய் இருக்கவில்லை. எனவே போரை நிறுத்த கனதியான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை.

கடைசி நேரத்தில் சிறிலங்கா இராணுவத்தின் கடுமையான மிருகத்தனமான தாக்குதல்களின் காரணமாகவும் மருத்துவ வசதிகளும் இல்லாத காரணத்தால் பொதுமக்களினதும் எஞ்சிய வீரர்களின் உயிரைக் காக்கவும் எமது தலைமை துப்பாக்கிகளை அமைதிப்படுத்தியது.

எமது தலைமை துப்பாக்கிகளை நிறுத்தாது விட்டால் அதனை ஒரு சாட்டாக வைத்து சிறிலங்கா அரசு எமது மக்களின் அழிப்பை நியாயப்படுத்திவிடும் எனக் கவலை கொண்டிருந்தது. துப்பாக்கிகளை அமைதிப்படுத்தும் செய்தி எனக்கு 15 ஆம் நாள் மாலை தெரியப்படுத்தப்பட்டது. அது ஒரு வெள்ளிக்கிழமை. அடுத்த 48 மணி நேரமும் நாம் அனைத்துலக சமூகத்துடன் தொடர்ச்சியாகச் செயற்பட்டு உடனடிப் போர் நிறுத்தத்தை நடைமுறையாக்க முயற்சித்து அதில் எமக்குச் சாதகமான சில பதில்களும் கிடைத்திருந்தன.

மீதமான நாட்கள் வார இறுதியான சனி, ஞாயிறு நாட்களாக இருந்த போதும் அனைத்துலக சமூகத்தின் உறுப்பினர்கள் சிறிலங்கா அரசை போர் நிறுத்தம் செய்ய முயற்சித்தனர். ஆனால், சிறிலங்கா அரசின் பதில் மறுப்பாகவே இருந்தது. சிறிலங்கா அரசும் அதன் படையினரும் இறுதித் தாக்குதலிலும் தமது மிருகத்தனமான அழிப்பிலும் பிடிவாதமாக இருந்தனர்.

இந்தியாவில் உள்ள வைகோ, நெடுமாறன் உட்பட பல தமிழீழ வீடுதலைப் புலிகள் இயக்க ஆதரவாளர்கள் நீங்கள் பிரபாகரன் இறந்துவிட்டார் என்ற அறிவித்தலை விடுத்தமைக்காக உங்களைக் கண்டித்துள்ளார்கள். தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் உள்ள சிலரும் பிரபாகரன் இறந்துவிட்டார் என்பதை ஏற்க மறுக்கின்றனர். இவற்றை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் தமிழ் மக்களுக்கு விடுத்த செய்தி மிகவும் கெட்டதும் பெரும் துன்பம் நிறைந்ததும் ஆகும். நிச்சயமாக இச்செய்தியை ஏற்கவும் உண்மை என எடுக்கவும் எனக்குப் பல மணி நேரங்கள் பிடித்தது. சில உறுப்பினரும் பெரும் பகுதியான தமிழ் மக்களும் நான் வெளிக்கொணர்ந்த செய்தியை நம்ப முடியாதுள்ளனர். நான் அவர்களின் மனநிலையைப் புரிந்து கொள்கிறேன் அவர்களுக்காக மிகுந்த அனுதாபம் கொண்டுள்ளேன். அவர்களின் நடவடிக்கைகள் உணர்வுகளின் வெளிப்பாடுகளின் காரணமாக உள்ளன. ஓரு பொறுப்பு வாய்ந்த விடுதலை இயக்கமாக நாம் எமது மக்களிடம் இருந்து உண்மைகளை மறைத்து விட முடியாது. அரசியல் ரீதியாகவும் எம் மக்களிடம் இருந்து உண்மைகளை மறைப்பது தவறானதாகும்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் வன்முறை வழியை கைவிட்டமை அமைப்புக்குள் பரவலான ஆதரவைக் கொண்டுள்ளதா? இது நிரந்தரமானதா அல்லது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் மீளவும் பின்னால் ஆயுதத்தை எடுக்கும் உரிமையைத் தன்வசம் கொண்டுள்ளதா?

எமது துப்பாக்கிகளின் பாவனையை நிறுத்தும் முடிவு எமது தலைவரால் அவரது மறைவுக்கு முன்னர் எடுக்கப்பட்டதாகும். நாம் இப்போது ஒரு புதிய பாதையை நோக்கி முன்னேறுகிறோம். இந்நிலையானது அமைப்புக்குள்ளே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. இது தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் நிலைப்பாடு ஆகும்.

எந்த ஒரு தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வும் தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் கொள்கைகளான, தமிழ்த் தேசியத்தின் அங்கீகாரம், வடக்கு – கிழக்கு தமிழரின் வரலாற்றுத் தாயகம் மற்றும் சுயநிர்ணய உரிமை என்பவற்றை அங்கீகரிப்பதாக அமைதல் வேண்டும்.

தமிழ் மக்களின் இந்த அரசியல் வேட்கைகளை அடையும் வரை எமது அரசியல் போராட்டம் தொடரும். நாங்கள் இந்த நிலைப்பாட்டில் உறுதியாக நிற்போம். நீங்கள் வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் தொடக்கத்தில் ஆயுதப் போராட்டம் தோற்றுவதற்கு அடக்குமுறை, ஆக்கிரமிப்பு, அரசியல் முறையான எதிர்ப்புகளையும் ஜனநாயகப் போராட்ட உரிமைகள் என்பனவற்றை அடக்கப்பட்ட மக்களுக்கு மறுத்தமையும், மூலகாரணமாக இருப்பதை இலகுவாக அவதானிக்க முடியும்.

இந்நிலை எமக்கும் ஏற்பட்டது. விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் தமிழ்த் தேசியத்துக்கு ஏற்பட்ட அநீதிகளின் வரலாற்றுப் பிரதிபலனாகும். தமிழீழ விடுதலைப் புலிகள் இப்போது அரசியல் வழியைத் தெரிவு செய்துள்ளனர். மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் பற்றிய கேள்வி வரலாற்றில் தமிழ் மக்களின் உரிமையாக விட்டுவிட விரும்புகிறேன்.

அமைப்புக்கு உள்ளும் வெளியிலும் உள்ள ஆதரவாளர்கள் மத்தியில் இப்போதும் ஆயுதப் போராட்டம் மட்டுமே தமிழ் ஈழம் பெறுவதற்கான ஓரே வழி என நம்பும் மக்களைப் பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?

மூன்று தசாப்த கால ஆயுதப் போராட்ட வழியில் எமது தலைவர் பெரும் சவால்களை எதிர்நோக்கி இருந்தார். அக்காலத்தில் நிலவிய நிலைமைகளுக்குள் பெறக்கூடிய அதிகபட்ச நன்மைகளை பெற்று விட்டார். இலட்சியத்துக்காக மிகவும் பாடுபட்டு உழைத்தவர். சுயநலங்களை அச்சாகக் கொண்டு சுழலும் இந்த உலக இயக்கத்துக்கு எமது ஆயுதப் போராட்டம் அனுதாபத்தைப் பெற முடியாது போய்விட்டது.

மாறாக சிறிலங்கா அரசு இன்றைய உலக நிலைப்பாட்டினையும் பூகோள அரசியல் கட்டமைப்புகளையும் தனது பக்கம் அணிதிரட்டி விட்டதை நாம் பார்த்துள்ளோம். நாம் எமது கொள்கைகளிலும் கோரிக்கைகளிலும் உறுதியாக நின்று அடுத்தகட்டப் போராட்டத்தை அரசியல் வழியில் தொடருவதே எம்முன் இருக்கும் சிறந்த தெரிவாக உள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்குத்துக்குள் பிளவு என்றும் அதற்குள் ஒரு பலப்போர் நடக்கிறது என்றும் கூறப்படும் செய்தி அறிக்கைகள் பற்றி உங்கள் பதில் என்ன?

நான் அதனை மறுக்கிறேன். தலைவரின் மரணச் செய்தி அறிவித்தலால் எமக்குள் மாறுபட்ட கருத்துக்கள் உள்ளன என்பது உண்மைதான். இந்த விடயத்தில் நாம் ஒரு ஒற்றுமையைக் காண்பதில் வெற்றிபெற முடியவில்லை. ஆனால், உரையாடல் மூலம் அதனைத் தீர்த்துவிட உழைத்து வருகிறோம்.

இனிவரும் காலத்தில் அமைப்பில் உங்களது பங்கு என்னவாக இருக்கும்?

தமிழீழ அமைப்பின் அனைத்துலக உறவுகளுக்கான பிரிவின் தலைவராக நான் எமது அரசியல் இலட்சியங்களை வென்றெடுக்கத் தேவையான அனைத்துலக உறவுகள் எதிர்பார்க்கும் அரசியல் செயற்பாடுகளை முன்னெடுத்து நடத்துவேன். நாம் அமைப்பில் மறுசீரமைப்புப் பணிகள் பற்றித் திட்டம் இட்டு வருகிறோம். இது முடிவுற்றதும் தமிழ் மக்களுக்கும் உலகத்துக்கும் அறிவிப்போம்.

எதிர்வரும் காலத்தில் புதிய வன்முறைகள் அற்ற தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் எத்தகைய பங்கை வகிக்கும்?

தமிழ்த் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற தமிழர்களின் அரசியல் வேட்கைகளுக்காகப் போராடும். நாம் ஒரு புதிய பாதையைத் தெரிவுசெய்து விட்டபடியால், நாம் எமது அமைப்பை அரசியல் வழியில் போராட்டத்தைத் தொடரும் வகையில் மாற்றம் செய்து வருகிறோம். அதன் எமது ஒரு செயற்பாடாக புலம்பெயர் தமிழர்களினதும் தமிழ் நாட்டிலும் உலகின் வேறு பகுதிகளிலும் உள்ள தமிழ் உறவுகளினதும் ஆதரவுடன் எமது அமைப்பின் மீது உள்ள அனைத்துலக தடையை நீக்குவதற்காக உழைக்க வேண்டி உள்ளது.

அனைத்துலக சமூகம் முக்கியமாக இந்தியாவும் மேற்குலக நாடுகளும் எமது புதிய வழியை வரவேற்று அதற்கு வெகுமதியாக எமது அமைப்பின் மீது உள்ள தடையை நீக்கி எமது அரசியல் செயற்பாட்டுக்கான வாசற் கதவுகளைத் திறந்து விடுவர் என நாம் நம்புகிறோம்.

நாடு கடந்த தமிழ் ஈழ அரசு பற்றி எமக்குக் கூற முடியுமா? ஏனைய வெளியக அரசுகள் பெருமளவு பயனளிக்காத நிலையில் இது எப்படி அவற்றில் இருந்தும் வேறுபடுகிறது?

எமது சட்ட ஆலோசகர் விஸ்வநாதன் உருத்திரகுமாரன் தலைமையில் நாடு கடந்த தமிழ் ஈழ அரசை உருவாக்க ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. நாடு கடந்த அரசுக்கும் வெளியக அரசுக்கும் இடையில் சில கருத்தியல் வேறுபாடுகள் உள்ளன. இதற்கான குழுவின் ஒருங்கிணைப்பாளர் உருத்திரகுமாரன் இக்கேள்விக்கான மேலதிக பதிலை வழங்கக்கூடிய சரியான நபர் என நான் கருதுகிறேன்.

தேர்தலில் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு நேரடியாகப் பங்குபற்றுவது பற்றிச் சிந்திக்குமா? நீங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தொடர்பை தேடியிருக்கிறீர்கள். இந்த உறவு எப்படிச் செயற்படும்?

தேர்தலில் கலந்துகொள்வதில் எந்த நியாயமோ தேவையோ இருப்பது எமக்குத் தெரியவில்லை. அரசியல் வழியில் போரிடுவது என்பது கட்டாயமாகத் தேர்தலில் கலந்துகொள்ள வேண்டும் என்பதல்ல. தமிழர் தேசியம், தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமை என்ற கொள்கைகளின் அடிப்படையில் ஒரு அரசியல் தீர்வு கிடைக்கும் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தேர்தல்களில் கலந்துகொள்ளாது.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நாம் தேடவில்லை. ஆனால் நாம் புலத்திலும் தாயகத்திலும் அரசியல் நடவடிக்களின் இணக்கப்பாட்டின் முக்கியத்துவம் பற்றி உணருகிறோம். எப்படி ஒரு பொதுவான புரிந்துணர்வு உருவாகிச் செயற்படும் என்பது பற்றி கருத்து தெரிவிப்பதற்கு இது ஏற்ற தருணம் அல்ல.

அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு நீங்கள் விடுக்கும் செய்தி என்ன?

சிறிலங்கா அரசு தமிழீழ விடுதலைப் புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்து இருக்கலாம். ஆனால், அரசியலில் அல்ல. தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கான காரணிகள் கவனத்தில் எடுக்கப்படாமலே உள்ளன. சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு இலங்கை மக்களாட்சி பலமான சிங்கள பேரினவாத சர்வாதிகார ஆட்சியாக மாறிவிட்டுள்ளது.

தமிழ் – சிங்கள மக்களை அடக்கும் சாதனங்களாக சிறிலங்காவின் நாடாளுமன்றம் அரசு நீதி பரிபாலனம் செயற்பட்டு வருகின்றன. அண்மையில் இலங்கையில் ஒரு தேசம், ஒரு மக்கள் என்ற அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் கூற்றானது. அந்தத் தீவில் உள்ள தமிழ் – முஸ்லிம் மக்களின் தனித்துவத்தை அங்கீகரிக்காது உள்ளதோடு அங்கே எதிர்வரும் காலத்தில் இன இணக்கப்பாட்டுக்கு எதிர்வரும் காலத்தில் பாரிய பின் விளைவுகளுக்கு வழிசெய்து விடும்.

சிங்கள மேலாதிக்க செயற்பாட்டில் நாட்டை ஆண்டு வரும் நிலையில் அந்தத் தீவில் பெரும்பான்மை சிறுபான்மை இல்லை. ஆனால், தேசப்பற்றாளரும் தேசத் துரோகிகளும் மட்டுமே உள்ளனர் என்பது அபத்தமாக இருக்கிறது. இலங்கை தனது தேசியக் கட்டுமானத்தில் பரிதாபமான தோல்வியைச் சந்தித்து உள்ளதை அரச தலைவர் மகிந்த ராஜபக்ச விளங்கிக்கொள்ள வேண்டும்.

இலங்கையிலும் வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்கள் தம்மை இலங்கையர் என அடையாளப்படுத்த விரும்பாது ஈழத் தமிழர்களாகவே அடையாளப்படுத்த விரும்புகின்றனர். சிறிலங்கா அரசை அந்நிய அரசாகவே தமிழர்கள் கருதுகின்றனர்.

இத்தகைய பின்னணியில் தமிழர்களின் அரசியல் வேட்கைகளான தமிழ்த் தேசியம், வடக்கு – கிழக்கு தமிழர் தாயகம், சுயநிர்ணய உரிமைகளை அங்கீகரித்து ஒரு உண்மையான இணக்கப்பாடு காண்பதே எஞ்சியிருக்கும் தனி ஒரு தெரிவாக உள்ளது.

இப்போது மகிந்த ராஜபக்ச மிகப்பலமான மக்கள் ஆதரவைக் கொண்டுள்ளார். அவர் தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளை ஏற்க முன்வரின் சிங்கள மக்களின் எதிர்ப்பு குறைவாக எதிர்நோக்கும் வாய்ப்புகள் உள்ளன. அவர் தம்மை எல்லா இன மக்களையும் சமமாக கருதும் ஒரு உண்மையான தலைவராகக் கருதினால் அவர் தமிழ் மக்களின் அரசியல் வேட்கைகளை அங்கீகரித்து தம்மை நிரூபிக்க வேண்டிய நேரம் இது.

ஈழப் போர் – 4 என இன்று அழைக்கப்படும் போரில் இந்தியாவின் வகிபாகத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்? தமிழ்ப் பொதுமக்களைக் காப்பாற்ற இந்தியாவால் அதிக அளவு செய்திருக்க முடியும் என நினைக்கிறீர்களா?

அண்மைப் போரில் இந்தியா உறுதியாக இலங்கையின் பக்கம் நின்று முழுமையான ஆதரவை வழங்கியது. இது இரகசியமானது அல்ல. சிறிலங்கா தலைவர்களும் இராணுவ அதிகாரிகளும் இந்திய அதிகாரிகளும் பகிரங்கமாக ஏற்றிருந்தனர். எனினும் நாம் இந்தியாவை வெறுக்கவில்லை.

இந்தியாவின் ஏனைய நாடுகளுடனான குறிப்பாக சீனாவுடனான பூகோள அரசியல் போரில் அதற்குத் தமிழ் மக்களின் உண்மையான நம்பகரமான நட்பு இருக்கும் என நாம் கருதுகிறோம். இதனை எதிர்வரும் காலத்தில் இந்தியா உணர்ந்து தமிழ் ஈழ மக்களின் சுயநிர்ணய உரிமைப் போரை ஆதரிக்கும் என நாம் உறுதியாக நம்புகிறோம்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதியும் ஏனைய அரசியல் தலைவர்களும் நவம்பர் 2008 ஆம் ஆண்டில் விடுத்த வேண்டுதலை ஏற்று இந்தியா போரை நிறுத்தத் தீர்மானித்திருந்தால் பொதுமக்களைப் பாரியளவில் காப்பாற்றியிருக்க முடியும்.

நீங்கள் இந்தியாவுடன் நேரடித் தொடர்பை மேற்கொள்வீர்களா? நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதில் இந்தியாவுக்கு ஏதும் வகிபாகம் இருக்கிறதா?

ஆம். தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரி இந்தியாவுடன் நேரடித் தொடர்பு மேற்கொள்ள இருக்கிறேன். தமிழீழ மக்களின் அரசியல் வேட்கைகளை ஆதரிக்கவும் கோருவேன். நாடு கடந்த அரசு அமைப்பு கருத்தியல் நிலையில் உள்ளதால் ஏனைய அரசுகளின் ஆதரவைக் கேட்பது ஒரு முன் நிபந்தனையாக இருக்காது. தேசம் கடந்த அளவில் இது ஒரு புலம்பெயர் தமிழ் மக்கள் மயமான செயற்பாடாகும்.

நிச்சயமாக நட்பு அரசுகளின் ஆதரவு நாடு கடந்த அரசுக்கும் அதன் செயற்பாட்டு நோக்கங்களுக்கும் பலம் சேர்க்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. தற்காலிக நாடு கடந்த அரசமைப்புக் குழு எல்லா நாடுகளுடனும் முக்கியமாக இந்தியாவுடனும் நாடு கடந்த அரசுக்கான ஆதரவைத் தேடும்.

இலங்கையில் இன்னமும் சில விடுதலைப் புலிகப் போராளிகள் செயற்பாட்டில் இருக்கிறார்கள். அவர்கள் கிழக்கில் காடுகளில் செயற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. கேணல் ராம் பிரபல தலைவர் எனச் சொல்லப்படுகிறது. இக்குழுவைப் பற்றிய தகவல் ஏதும் உங்களிடம் இருக்கிறதா? இக்குழுக்களிடம் இனிமேல் உங்கள் தொடர்பு என்னவாக இருக்கும்?

எமக்கு அவர்களுடன் தொடர்பு இருக்கிறது. அவர்கள் தமது துப்பாக்கிகளின் பாவனையை நிறுத்தி எமது தலைமையிலான புதிய வழிக்குத் திரும்பி எனது வழிகாட்டலில் உள்ளனர். எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய எதுவித வழிமுறையும் ஏற்படுத்திக்கொள்ள முடியாத காரணத்தால் அவர்களின் பாதுகாப்பு பற்றிய கவலை எனக்கு இருக்கிறது. இது விடயத்தில் அனைத்துலக சமூகம் இந்த விடயத்தில் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என நான் நினைக்கிறேன்.

உங்களுக்கு எதிராக சிறிலங்கா அரசு அனைத்துலக பிரச்சாரம் செய்து உங்களைக் கைது செய்யக் கோருகிறது. இந்த நடவடிக்கைகளை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்களுக்கு எதிரான சிறிலங்கா அரசின் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் என்ன?

செய்தித் தாள்களில் இச்செய்தியைப் படித்துள்ளேன். தமிழ்த் தேசியம் தனது சட்ட ரீதியான உரிமைகளை வென்றெடுக்கும் விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்தில் நானும் பங்காளியாக உள்ளேன். அனைத்துலக சட்டங்களின்படி இப்போராட்டம் நியாயபூர்வமானது. இராணுவத் தோல்வி போராட்டத்தின் நியாயப்பாட்டை அழித்துவிட முடியாது. நான் எந்தக் குற்றமோ மனிதத்துக்கு கெடுதல் செய்யவோ இல்லை.

மேலும் நான் இப்போது எமது அமைப்பை ஒரு அரசியல் அமைப்பாக மாற்றம் செய்து வருகிறேன். இம் மாற்றத்துக்கான முடிவானது எமது தமிழர்களின் தேசிய நலன் கருதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதேநேரத்தில் அந்தத் தீவில் உள்ள சிங்கள, இஸ்லாமிய மக்களுக்கும் நன்மையளிக்கக் கூடியது.

அந்தத் தீவினதும் பிராந்தினதும் உறுதிப்பாட்டிற்கும் அமைதிக்கும் முக்கியமானது. இந்த விடயத்தில் பாத்திரம் வகிப்போர் இந்த விடயத்தை யதார்த்த நிலையில் அணுகுவார்கள் என நான் நம்புகிறேன். எது எப்படி இருப்பினும் தமிழ் மக்களுக்காக நான் எவ்வித ஆபத்தையும் உயிரையும் கூடத் தியாகம் செய்யச் சித்தமாக இருக்கிறேன்.

பொட்டு அம்மானின் உண்மை நிலை என்ன, சிறிலங்கா அரசு சொல்கிறது அவர் இறந்து விட்டார் எனவும் ஆனால் அதற்கான சான்றுகளைத் தர முடியாது உள்ளனர்?

எமக்கு கிடைத்த தகவல்களின் படி மே 17 ஆம் நாளில் 2009 இல் இடம்பெற்ற சிறிலங்கா படைகளுக்கு எதிரான போரில் அவரும் மாவீரர் ஆனார் என்றே தெரிகிறது.

இலங்கைத் தமிழ் மாணவர்களின் இன்றைய கல்விநிலை குறித்து எழுத்தாளர் புன்னியாமீன் அவர்களுடன் ஒரு நேர்காணல்

puniyameen-photortf.jpg‘இலங்கை எழுத்தாளர் புன்னியாமீன்’ அவர்களுடன் இடம் பெற்ற இந் நேர்காணல் இந்தியா தமிழ் நாட்டில் முன்னணித் தமிழ் இணையத்தளங்களில் ஒன்றான ‘சங்கமம் லைவ்’ இல் 19.06.2009 பிரசுரமானதாகும். இந்த நேர்காணல் முனைவர். மு. இளங்கோவன் இணையத்தளத்திலும், கல்வி சார்ந்த சில இணையத்தளங்களிலும் உடன் மறுபிரசுரம் செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் பிரபல எழுத்தாளர் ‘பொன்மொழிவேந்தன்’ பத்து நாட்களுக்கு முன்பு நேரடியாக இந்நேர்காணலை புன்னியாமீன் இடம் இருந்து பெற்றிருந்தார். இந்நேர்காணல் வழங்கப்பட்ட பின்பு வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள தரம் 05 மாணவர்களுக்காக வேண்டிய கல்வி உதவிச் செயற்பாட்டில் ஐக்கிய இராட்சியத்தின் ‘அகிலன் பவுண்டேசனும்’ இணைந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. தேசம் நெட் வாசகர்களுக்காக வேண்டி இந்நேர்காணல் மீளப்பிரசுரமாகின்றது.(ஆசிரியர்)

நேர்காணல்  ‘பொன்மொழிவேந்தன்’ (தமிழ் நாடு)

இலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் புன்னியாமீன் அவர்கள் 150 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஒரு முன்னணி எழுத்தாளராவார். சமூக உணர்வுமிக்க இவரும், இவரது நூல் வெளியீட்டகமான சிந்தனைவட்டமும் 2002, 2006 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் சப்பிரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாழின் போதும், 2004ஆம் ஆண்டு சுனாமி நிகழ்வின் போதும் மாணவர்களின் கல்வியை இலக்காகக் கொண்டு பல்வேறுபட்ட சேவை நலத்திட்டங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளனர்.

மேலும் கல்வியைத் தொடர வசதி இல்லாத நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வியைத் தொடர உதவிகளைச் செய்துள்ளதுடன்,பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் வசதி குறைந்த மருத்துவ, பொறியியல் துறை மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.

2006ஆம் ஆண்டில் இலண்டனில் வசிக்கும் புகழ்பெற்ற நூலகவியலாளர் திருவாளர் என். செல்வராஜா அவர்களின் வழிகாட்டலுடன் ‘அயோத்தி நூலக சேவை’யின் பரிந்துரையின்படி ‘இலண்டன் புக்ஸ்’ எப்ரோட் நிறுவனத்தின் மூலமாக 4 மில்லியன் உரூபாய்க்கு மேலாகப் பாடசாலைப் புத்தகங்களைப் பெற்று இலங்கையில் உள்ள 115 நூல் நிலையங்களுக்குப் பெறுமதி மிக்க நூல்களை வழங்கினர். அதே நேரம் சிந்தனை வட்டத்தின் தரம் 5 புலமைப்பரிசில் வழிகாட்டல் திட்டத்தின் கீழ் 1996ஆம் ஆண்டு முதல் அனாதைச் சிறுவர்கள், அகதிச் சிறுவர்கள் போன்ற, சராசரியாக 300க்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஆண்டு தோறும் விளம்பரங்கள் இன்றி உதவிகளை வழங்கி வருகின்றனர்.

தற்போது வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்த சிந்தனைவட்டம், இலண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் தேசம்நெற் இணையத்தளத்துடனும், சில புரவலர்களுடனும், பொதுநல அமைப்புகளுடனும் இணைந்து இருபத்து எட்டு இலட்சம் ரூபாய் நிதித்திட்டத்தில் 5ஆம் தர புலமைப் பரிசில் தேர்வுக்குத் தோற்றும் நலன்புரிநிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் கற்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனை முன்னிட்டு சிந்தனைவட்டப் பணிப்பாளர் எழுத்தாளரும் பதிப்பாளருமான புன்னியாமீன் அவர்களுடன் மேற்கொண்ட சிறப்பு நேர்காணல் கீழே தொகுத்து தரப்பட்டுள்ளது.

கேள்வி: வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்தத் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம். வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் நிலை பற்றி சற்று விளக்க முடியுமா?

பதில்: இலங்கையில் கல்வியால் உயர்ந்து உலகளாவிய ரீதியில் தடம்பதித்த ஒரு சமூகத்தை உருவாக்கிய இலங்கையில் வடபுலத்து மண் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தினால் இன்று சொல்லொனாத் துயரங்களை சுமந்து ‘பூஜ்ய கல்வி அலகை’ எதிர்நோக்கக் கூடிய ஒரு சமூகமாக மாறிவிட்டது. வடபுலத்து மண்ணில் தமிழர்கள் செறிவாக வாழ்ந்து வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, கண்டாவலை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த அனைத்துப் பாடசாலைகளும் இயங்கவில்லை.

முல்லைத் தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலைகளும், துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த துணுக்காய், ஒட்டிசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளும் இயங்கவில்லை. இதனை இன்னும் தெளிவாகக் குறிப்பிடுவதாக இருந்தால் கிளிநொச்சி, முல்லைத் தீவு நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த எந்தப் பாடசாலைகளுமே இயங்கவில்லை எனலாம். இங்கு எந்த மக்களுமே இல்லை. அண்மைக் கால யுத்தத்தில் மாத்திரம் வடபுலத்து மண்ணிலிருந்து இடம்பெயர்ந்த மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் அகதி முகாம்களில் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம் கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிவித்த அறிவித்தலின்படி சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நலன்புரிநிலையங்களில் உள்ளனர்.

வவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் சுமார் 53 பாடசாலைகள் இயங்குகின்றன. இப்பாடசாலைகளில் இம்மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். நலன்புரி நிலையங்களில் ஆரம்பப் பிரிவு தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை கற்பித்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் முறைசார் கல்வித்திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களாலும் உரிய கல்வியினை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

கேள்வி : இதனை எந்த அடிப்படையில் நியாயப்படுத்துவீர்கள்?

பதில் : இடம் பெயர்ந்துள்ள மாணவர்கள் மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட நலன்புரி நிலையப் பாடசாலைகளில் பெரும்பாலான பாடசாலைகளில் கற்றல் கற்பித்தலுக்குரிய சூழ்நிலை இல்லை. இதனை இரண்டு கோணங்களில் தெளிவு படுத்தலாம்.

ஒன்று இடம்பெயர்ந்த அனைத்து மாணவர்களை அவதானிக்குமிடத்து அவர்கள் அதிகளவிலான மானசீகமான பாதிப்புகளுக்கு உட்பட்டிருப்பதை உணரமுடிகின்றது. அவர்கள் வாழ்ந்த சூழலிலிருந்து தனது நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்களை இழந்து அல்லது பிரிந்து வந்த துயரசூழ்நிலை ஒரு புறம். ஏற்கனவே கற்றுவந்த சூழலைவிட வித்தியாசமான சூழலில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் மறுபுறம். இத்தகைய காரணிகளால் மனோநிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இம்மாணவர்கள் கல்வியினைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளனர்.

இரண்டாவதாக இவர்கள் கற்கும் சூழ்நிலை. வசதியான பாடசாலைகளில் வசதி வளங்களோடு கற்று விட்டு தற்போது நலன்புரி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டில்களில் அல்லது மர நிழல்களில் கற்க வேண்டிய நிலை. இங்கு பெரும்பாலான மாணவர்களுக்கு மேசை, கதிரைகள் கிடையாது, சீருடை கிடையாது. நிலங்களில் அமர்ந்து கொண்டே கற்கின்றனர். இவர்கள் கற்கும் இடங்களை ஊடறுத்துக் கொண்டு முகாம்களில் உள்ள பெரியவர்கள் செல்லக்கூடிய நிலையும் உண்டு. இவர்கள் கற்கும் இடங்களுக்கு அண்மையில் சீட்டாடுவதும், வம்பளப்பதும் உண்டு. இங்குள்ள நிலையை இன்னும் தெளிவு படுத்துவதாயின் ஆரம்ப வகுப்பில் கற்பிக்கும் சில ஆசிரியர்கள் தனது குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டு கற்பிக்கும் அவலமும் நலன்புரிநிலையப் பாடசாலைகளில் உண்டு. எனவே மாணவர்களின் மனோ நிலைப்பாதிப்பும், கற்கும் சூழ்நிலையும் தொடர்பு படுத்திப்பார்க்கும் போது முறைசார் கல்வியை மேற்கொள்ள முடியாதிருப்பதைத் தங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.

கேள்வி: மாணவர்களின் மனோ நிலைப்பாதிப்புக்களைக் களைவதற்காக யாதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா?

பதில்: இது குறித்து விரிவான விளக்கத்தை என்னால் தர முடியாது. இருப்பினும் மனஅழுத்தங்களுடன் கூடிய மாணாக்கரின் மனோநிலைப் பாதிப்பினை குறைப்பதற்காக வேண்டி கல்வித் திணைக்களமும், ஏனைய சில நிறுவனங்களும் சில கவுன்சிலின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம். இந்த செயற்கையான சூழ்நிலையில் அவர்களது மனோநிலை மாற்றங்களை சீர்செய்வதென்பது கடினமான காரியமே. அதற்காக வேண்டி இந்த மாணவர்களை விட்டுவிடமுடியாது. வட பகுதிகள் தமிழர் கல்வியால் எழுச்சி பெற்றவர்கள். கல்வியால் எழுச்சிபெற்ற சமூகம் கல்வியால் வீழ்ச்சி பெற்றுவிடக் கூடாது. இதனை ஒவ்வொருவரும் உணர வேண்டிய கட்டத்தில் உள்ளோம். ஏதேவொரு வழியில் ஓரளவுக்காவது கல்வியின்பால் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த விழைய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.

கேள்வி : இங்குக் கற்கும் மாணவர்கள் காலை உணவைப் பெற்று வருகிறார்களா?

பதில் : முகாம்களில் வழங்க வேண்டிய உணவினையே பெற வேண்டிய நிலையில் இவர்கள் இருப்பதினால் அனைத்து மாணவர்களும் காலை ஆகாரத்தை எடுத்த பின்பே வருவார்கள் என்று கூற முடியாது. மாணவர்களுக்கு உலக உணவுத்திட்டத்தின் கீழ்உணவு வழங்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அதே நேரம் நலன்புரி நிலையப் பாடசாலைகள் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாகவும் இயங்குவதை இங்கு குறிப்பிடல் வேண்டும். அதாவது காலையில் சில வகுப்புகள், மத்தியானம் சில வகுப்புகள், பின்நேரம் சில வகுப்புகள் என ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள பாடசாலைகள் பொதுவாக காலை 7.30 மணிமுதல் பி.ப 1.30 மணிவரை ஆறு மணிநேரம் இயங்கும். ஆனால் இங்கு இயங்கும் பாடசாலைகள் 3 அல்லது 4 மணிநேரமே இயங்கி வருகின்றன.

கேள்வி: வட இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுள் தரம் 05 இல் பயிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்பாக சிந்தனைவட்டம் சிறப்புக் கவனம் செலுத்தி வருவதாக அறிகின்றோம். தரம் 5வகுப்பை நீங்கள் ஏன் தேர்ந்து எடுத்தீர்கள்?

பதில்: இலங்கையில் மாணவர்களை மையப்படுத்தி அரசாங்கத்தால் 03 பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. இதில் முதலாவது பரீட்சை தரம் 05 மாணவர்களை மையமாகக் கொண்ட புலமைப்பரிசில் பரீட்சையாகும். ஏனைய பரீட்சைகள் க.பொ.த சாதாரண தர பரீட்சை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை என்பனவாகும்.

தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை இலங்கை மாணவனொருவன் எதிர்நோக்கும் முதல் அரசாங்கப் பரீட்சையாகும். அதே நேரம் இது ஒரு போட்டிப் பரீட்சையாகும். இந்தப் பரீட்சையில் சித்தியடையும் மாணவனுக்கு உயர்தரக் கல்வி வரை கற்பதற்கு அரசாங்கம் புலமைப்பரிசில் பணம் வழங்கும். (ஆண்டுதோறும் 5000 ரூபாய்) அத்துடன் இலங்கையில் முன்னணி பாடசாலைகளில் கற்பதற்கான வாய்ப்பும் அம்மாணவர்களுக்குக் கிடைக்கின்றது. இப்பரீட்சை தரம் 5ஐ சேர்ந்த சிறிய மாணவர்களுக்கான அரசாங்கத்தால் நடத்தப்படும் முதல் பரீட்சை என்ற வகையிலும் இப்பரீட்சை இன்னும் இரண்டு மாதங்களில் அதாவது எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளமையினாலும் இப்பரீட்சையை நாங்கள் முதற் கட்டமாகத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

கேள்வி: நலன்புரி நிலையங்களில் தரம் 5 இல் கல்வி பயிலும் எத்தனை மாணவர்கள் அளவில் இருக்கின்றார்கள்?

பதில்: வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையப் பாடசாலைகளில் உத்தியோக பூர்வ இணைப்பாளரும், உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு.த. மேகநாதன் அவர்களின் 2009.06.01ஆம் திகதிய உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் வவுனியா நலன்புரி நிலையங்களில் இயங்கும் 53 பாடசாலைகளிலும் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 4872 ஆகும்.. இந்த மாணவர்களின் பரீட்சையை எதிர்நோக்கி நாம் செயல்பட்டு வருகின்றோம்.

கேள்வி: இந்த மாணவர்களின் கல்வி நிலை எவ்வாறு உள்ளது எனக் குறிப்பிட முடியுமா?

பதில்: இம்மாணவர்களின் கல்வித் தரம் மிகவும் பாதிப்படைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. வட பகுதியில் யுத்த நிலை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த ஆறு மாதங்களாக எந்தவொரு பாடசாலைகளும் இயங்கவில்லை. அதேநேரம், வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள மடு கல்வி வலயம், துணுக்காய் கல்வி வலயம் போன்ற கல்வி வலய மாணவர்கள் ஓராண்டு காலங்களுக்கு மேல் பாடசாலை வாசனையை அறியாமலே உள்ளனர். இந்த மாணவர்கள் தான் எதிர்வரும் ஆகஸ்டில் பரீட்சையை எதிர்நோக்கப் போகின்றார்கள். இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் பரீட்சை நாடளாவிய ரீதியில் ஒரு பொதுப் பரீட்சை என்பதனால் பரீட்சை திகதிகள் ஒத்திவைக்கப் படமாட்டாது. எனவே இம்மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட ஆகஸ்ட் பரீட்சையை எழுதியேயாக வேண்டிய நிலையில் உள்ளனர்.

கேள்வி: அப்படியாயின் ஆறு மாதங்களுக்கு மேல் பாடசாலை கல்வியையே பெறாத மாணவர்களுக்கு எந்த வகையில் வழிகாட்டலை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள்?

பதில்: பாடத்திட்டத்தின் பிரகாரம் தரம் 4, 5 வகுப்புகளில் இம்மாணவர்கள் பல பாட அலகுகளை முடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு இம்மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்களை துரிதமாக வழிநடத்தக்கூடிய வகையில் நாங்கள் 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கி மாணவர்களின் துரித வழிகாட்டலுக்கான ஏற்பாட்டினை செய்கின்றோம். எமது 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் மாணவர்களுக்கு வழங்கி நலன்புரி நிலையங்களில் உள்ள ஆசிரியர்கள் வழிநடத்துகின்றனர்.

கேள்வி: இத்திட்டத்தைச் சிந்தனை வட்டம் மாத்திரம் மேற்கொள்கிறதா? அல்லது வேறும் அமைப்புக்களோடு சேர்ந்து மேற்கொள்ளப்படுகிறதா?

பதில்: இத்திட்டத்தை சிந்தனை வட்டம் மாத்திரம் மேற்கொள்ளவில்லை. இந்த செயற்பாட்டுக்கு லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘தேசம்நெற் இணையத்தளத்’தினர் மற்றும் ‘மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம்’ உட்பட லண்டனில் வேறு சில அமைப்புகள் வழங்கும் உதவியினாலேயே இத்திட்டத்தை முன்னெடுத்து செல்லக் கூடியதாகவுள்ளது.

ஒரு மாணவனுக்கு 570ரூபாய் வீதம் பெறுமதிமிக்க 30 மாதிரிவினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் 4872 மாணவர்களுக்கும் தனித்தனியாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவினம் இலங்கை நாணயப்படி 2,777,040 ரூபாவாகும். இதில் மூன்றிலொரு பங்கான ரூபாய் 925,680 சிந்தனைவட்டம் நேரடியாகப் பொறுப்பேற்று நடத்துகின்றது. 7 இலட்சம் ரூபாய்களை வழங்க மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. மீதித் தொகையினை லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் ‘தேசம்நெற் இணையத்தளத்’தினரும், வேறும் சில அமைப்புகளும் வழங்க முன்வந்துள்ளன.

இலங்கையிலிருந்து பாடத்திட்டத்திற்கு அமைய இவ்வினாத்தாள்களை தயாரித்தல், அச்சிடல், முகாம்களுக்கு நேரடியாக வினியோகித்தல் போன்ற கருமங்களை சிந்தனை வட்டமே நேரடியாக பொறுப்பேற்று நடத்துகின்றனர். எமது இத்திட்டத்திற்கு வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையப் பாடசாலைகளின் உத்தியோகபூர்வ இணைப்பாளரும், உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்கள் பூரண ஒத்துழைப்பினை நல்கி வருகின்றார்.

கேள்வி: இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த மாணவர்களின் இந்நிலை தொடரும் என எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில்: 180 நாட்களுள் இடம்பெயர்ந்த மக்களின் அரைவாசிக்கும் மேற்பட்டோர் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று அரசாங்கம் கூறி வருகின்றது. அவ்வாறு நடக்குமாயின் வரவேற்கக்கூடிய விடயம். ஆனால், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வட இலங்கை பிரதேசத்தில் அடிப்படை கட்டமைப்புகள் முழுமையாக சீர்குழைந்துள்ள நிலையில் இது எவ்வளவு தூரத்திற்கு சாத்தியமாகும் என்பது கேள்விக் குறியாகவேயுள்ளது. எவ்வாறாயினும் ஆறு மாதங்களுக்கு மாத்திரமல்ல. இன்னும் நீண்ட காலத்துக்கு வன்னிப் பிரதேசத்தில் நலன்புரிநிலையங்கள் இயங்குமெனக் கொண்டால் இங்குள்ள மாணவர்களின் எதிர்கால நலன்கருதி பல விசேட திட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.

கேள்வி: அவ்வாறு யாதாயினும் திட்டம் வைத்துள்ளீர்களா?

பதில்: மாணவர்கள் நலன்புரி நிலையங்களில் வாழும் வரை எம்மால் ஆன உதவிகளை செய்யவே திட்டமிட்டுள்ளோம். எமது முதல் கட்டப்பணியின் பலாபலன்களை அவதானித்து இரண்டாம் கட்டமாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் க.பொ.த. சாதாரண தர பரீட்சையை மையமாகக் கொண்டு சில வேலைத்திட்டங்களை நாம் தயாரித்து வருகின்றோம். எமது இந்த செயல்திட்டத்துக்கு பேராதனைப் பல்கலைக்கழக சில புத்திஜீவிகளும் பூரண ஒத்துழைப்பினை நல்கி வருகின்றனர்.

கேள்வி: இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும், புலம்பெயர் ஈழத்துத் தமிழர்களும் இலங்கையின் பிரச்சினைகள் குறித்து ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளனரா?

பதில்: இவ்வளவு பாடங்களைக் கற்றும் இலங்கைத் தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் ஒன்றிணையக்கூடிய ஒரு போக்கினை காட்டி நிற்கவில்லை. இன்று சுமார் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய, அமெரிக்க, ஆசிய நாடுகளில் வாழ்ந்தாலும்கூட புலம்பெயர்ந்த தமிழர்களால் கொள்கையளவிலான ஒருமைப்பாட்டினைக் காணமுடியவில்லை. இது விமர்சனங்களுக்கும், விளம்பரங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு காலம்.

அண்மையில் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழக கல்வியாளர்கள் “வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில் இன்றைய சூழ்நிலை வடபுலத்து தமிழர்களின் கல்வியை நேரடியாக 15 ஆண்டுகள் பின்நோக்கித் தள்ளிவிட்டது” என்று கூறப்பட்ட கருத்து சிந்திக்கத்தக்கதே. அதாவது, இதன் உள்ளார்த்தமான கருப்பொருள் இன்னுமொரு புதியதொரு தலைமுறையினரால் தான் கல்வியினை கட்டியெழுப்ப முடியும் என்பதை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது. எனவே, தற்போது உள்ள இளம் சந்ததியினரை குறிப்பாக மானசீக தாக்கங்களுக்கு உட்பட்டுள்ள இவர்களுக்கு நாம் செய்ய முடியும். ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய கட்டத்தில் உள்ளனர்.

கேள்வி தமிழ் நாட்டில் வாழும் எமது உறவுகளின் செயற்பாடு தொடர்பாக என்ன குறிப்பிட விரும்புகின்றீர்கள்?

பதில்: தமிழ் நாட்டில் வாழும் உறவுகள் இலங்கை தமிழ் மக்களைப் பற்றியும், அகதிகள் பற்றியும் விசேட கரிசனைக் காட்டி வருவது ஆரோக்கியமான விடயமே. அதேநேரம், சில அரசியல்வாதிகள் இதனைக் குறுகிய நோக்கில் அவதானித்து அரசியல் இலாபம் தேட விளைவது வேதனைத் தருகின்றது.

தமிழ் நாட்டு அரசும் மத்திய அரசும் இலங்கை தமிழ் அகதிகளுக்கான வேண்டி பல்வேறுபட்ட உதவிகளை செய்து வருகின்றன. அதேபோல தமிழ் நாட்டில் உள்ள தனிப்பட்ட பரோபகாரிகளும் இம்மக்களைப் பற்றி சிந்தித்து யாதாவது தம்மால் ஆன உதவிகள் புரிவார்களாயின் இச்சந்தர்ப்பத்தில் பேருதவியாக இருக்கும். அப்படிப்பட்ட பரோபரிகாரிகள் உதவிகள் செய்யுமிடத்து இடம்பெயர்ந்தவர்களின் அத்தியாவசியத் தேவையென்பதைவிட சமூகத்தின் எதிர்கால நோக்கம் கொண்டு செயல்படுமிடத்து அதன் பயன் மிகவும் உச்சமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

ஏனெனில், தமிழ் நாட்டில் வாழக்கூடிய பல பரோபகாரிகளுக்கு இலங்கையுடனான நேரடியான தொடர்புகள், உறவுகள் காணப்படுகின்றன. எனவே, அவர்கள் மூலமாக உண்மை நிலைகளை அறிந்து உதவிகளை வழங்க முற்படுவார்களாயின் வரவேற்கக்கூடியதாக இருக்கும். இவ்விடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். அரச மட்ட உதவிகள் ஒருபுறமிருக்க தமிழ் நாட்டில் வாழக்கூடிய பரோபகாரிகள் இலங்கை தமிழ் அகதிகள் பற்றி சிந்திக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.

உரையாடியவர்: பொன்மொழிவேந்தன்

http://sangamamlive.in/index.php?/content/view/3163/

http://muelangovan.blogspot.com/2009/06/blog-post_19.html

“ஆரம்பத்தில் புலிகளை வெறுத்த பல நாடுகள் கடைசிக் கட்டத்தில் பிரபாகரனைக் காப்பாற்ற முயன்றன. இதுதான் உண்மை” – கோட்டாபய ராஜபக்ஸ

gothabaya7777.jpgகே:  இதற்கு முன்னர் ஒரு நேர்காணலில் பயங்கரவாதம் முற்றாக அழித்தொழிக்கப்படும் என்றும் எல். ரீ. ரீ. ஈ.க்கு கசப்பான ஒரு பாடம் புகட்டப்படும் என்றும் நீங்கள் உறுதியளித்திருந்தீர்கள். இப்போது புலிகள் தோற்கடிக்கப்பட்டுள்ள நிலையில் உங்களது உணர்வுகள் எவ்வாறு உள்ளன?

பதில்: பயங்கரவாதம் முற்றாகத் துடைத்தெறியப்பட்டுள்ளமை மிகவும் மகிழ்ச்சியளிக்கின்றது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக இது ஒரு பாரிய பிரச்சினையாக இருந்தது. இதனால் ஏற்பட்ட உயிரிழப்பு, சொத்திழப்பு என்பனவற்றை எண்ணிப் பார்க்கின்ற போது, உண்மையில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிக்கின்றது.

கே: இதற்கு முன்னர் தீட்டப்பட்ட பாதுகாப்புத் திட்டங்களில் அரசியல் தலையீடு இருந்ததாக குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டதுண்டு. முன்னாள் ஜனாதிபதிகள் இந்தத் தலையீடுகளைப் புரிந்ததாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.  நீங்கள் அவ்வாறான ஒரு தலையீட்டுக்கு முகம் கொடுத்தீர்களா? அல்லது ஜனாதிபதி உங்கள் சகோதரர் என்பதால் உங்களுக்கு அவ்வாறான தலையீடுகள் இருக்கவில்லையா?

பதில்: பாதுகாப்புச் செயலாளர் என்ற வகையில் மேல் மட்டத்தில் இருந்தும், கீழ் மட்டத்தில் இருந்தும் வரும் பிரச்சினைகளையும், அழுத்தங்களையும் சமாளித்து சரியான முடிவுகளை என்னால் எடுக்கக் கூடியதாக இருந்தது. சரியான தகவல்களை வழங்கியதன் மூலம் நான் ஜனாதிபதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமானேன். இது வெல்லக்கூடிய ஒரு யுத்தம் என்ற நம்பிக்கையை நான் அவர்களுக்கு ஏற்படுத்தினேன். அதற்கு அவர்கள் எல்லோருமே தமது பூரண ஆதரவை வழங்கினர்.

கே: ஆரம்பம் முதல் இறுதிவரை சர்வதேச அழுத்தங்கள் எவ்வாறு அமைந்திருந்தன? நீங்களும், அரசாங்கமும் அவர்களை எப்படி சமாளித்தீர்கள், அவர்களுக்கு சரியான பதிலைக் கொடுத்து இந்த சவாலுக்கு எப்படி முகம் கொடுத்தீர்கள்?

பதில்: இந்தக் கேள்விக்கு பதிலளிப்பதற்கு முன்னர் சர்வதேச சமூகம் என்பது என்ன என்பதை முறையாகப் புரிந்துகொள்ள வேண்டும். அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம் போன்ற ஒரு சில நாடுகளை மட்டும் நாம் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. ஏனைய நாடுகளையும், குறிப்பாக எம்முடன் நட்பாக உள்ள நாடுகளையும் நாம் சரியாக இனம் கண்டுகொண்டோம். இந்த நட்பு நாடுகள் வரிசையில் இந்தியா முன்னணியில் இருந்தது.

இந்தியாவின் செல்வாக்கு எம்மைப் பொறுத்தமட்டில் முக்கியமானது. ஜனாதிபதி பதவியேற்றவுடன் இந்தியாவுக்குப் பயணமானார். அங்கு அவர் பயங்கரவாதம் பற்றிய தெளிவான மதிப்பீடொன்றை வழங்கினார். இந்தியாவின் பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் அண்மையில் இங்கு விஜயம் செய்தபோது, நான் அது குறித்து அவருக்கு நினைவூட்டினேன்.

அவர் திடுக்கிடும் ஒரு விடயத்தை எனக்குச் சொன்னார். ஒரு சிறிய ராஜதந்திர தவறானது பாரிய அழிவை ஏற்படுத்தக் கூடியது என்பதுதான் அவர் சொன்ன விடயம். 1987ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தால் பிரபாகரனும், உமாமகேஸ்வரனும் கைது செய்யப்பட்ட போது, அப்போதைய இந்திய அரசாங்கம் இராஜதந்திர ரீதியான அணுகுமுறையைக் கையாண்டிருந்தால், பயங்கரவாதம் இந்தளவுக்கு மோசமான நிலைக்கு வந்திருக்காது என்று அவர் சொன்னார்.

வெள்ளைத் தோல் உள்ள வெளிநாட்டவர் ஒருவர் இங்குவந்து தன்னைப் பெரிதாகக் காட்டிக்கொள்ள முனைகின்றார் என்பதற்காக நாம் அலட்டிக் கொள்ளக்கூடாது. ஏனெனில் இவ்வாறு பெரிதாகக் கூச்சலிடுபவர்களால் எமக்கு எந்த உதவிகளும் கிடைப்பதில்லை. சர்வதேச சமூகத்துடனான உறவுகளை வளர்த்துக்கொள்வதற்காக நாம் மலேஷியா, பிலிப்பீன்ஸ், தாய்லாந்து போன்ற நாடுகளுடனான உறவுகளை மேலும் நெருக்கமாக்கிக் கொண்டோம்.

இந்த நாடுகளின் மூலம் புலிகள் ஆயுதக் கடத்தலில் ஈடுபடுவதை நாம் நன்கு அறிவோம். இந்த நாடுகளில் உள்ள பாதுகாப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவினரோடு நாம் மிக நெருக்கமாகப் பணிபுரிந்து புலிகளின் ஆயுதக் கடத்ததல்களை முறியடிப்பதில் முழுமையாக ஈடுபட்டோம்.

சீனா, ரஷ்யா என்பனவற்றையும் நாம் முக்கியமாகக் கருதினோம். அதேவேளை பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களையும் கொள்வனவு செய்தோம். இந்த நாடுகளுக்கு ஜனாதிபதி மூன்று தடவைகள் விஜயம் மேற்கொண்டார். இது தவிர பல சந்தர்ப்பங்களில் அந்த நாடுகளின் தலைவர்களோடு தொலைபேசி மூலமும் தொடர்புகொண்டார்.

ஆரம்பத்தில் புலிகளை வெறுத்த பல நாடுகள் கடைசிக் கட்டத்தில் பிரபாகரனைக் காப்பாற்ற முயன்றன. இதுதான் உண்மை. இது எமக்கு நன்றாகத் தெரியும்.

வெளிநாடுகளில் உள்ள புலம்பெயர்ந்த தமிழ் சமூகத்தின் நெருக்குதல்கள் காரணமாகவா, அல்லது எல். ரீ. ரீ. ஈ. உடன் உள்ள நீண்ட கால உறவுகள் காரணமாகவா எம்போன்ற சிறிய அபிவிருத்தி நாடுகள் பற்றி அவர்கள் தீட்டியிருக்கும் பாரிய திட்டங்கள் காரணமாகவா இவ்வாறு நடந்துகொண்டார்கள் என்பதை நாம் மதிப்பீடு செய்ய முயல வேண்டும்.

அவர்கள் எமக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றங்களை சோடித்தார்கள். நாம் மனிதாபிமான நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன்பே அவர்கள் இந்தக் குற்றச்சாட்டுக்களை முன்வைத்து எம்மீது நெருக்குதல் பிரயோகிக்க ஆரம்பித்தார்கள்.
கேள்வி: இந்த இரட்டை வேடம் காரணமாக உங்களதும், ஜனாதிபதியினதும் உயிர்களுக்கு எதிர்காலத்தில் ஆபத்து இருக்கும் என்று கருதுகின்aர்களா?

பதில்: அதற்கான சாத்தியம் உள்ளது. பயங்கரவாதத்தின் தோல்வியால் பாதிக்கப்பட்டவர்கள் இருக்கின்றவரை எமக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பதும் எமக்குத் தெரியும்.

கே: புலிகளின் தலைவரை ஏன் உயிருடன் பிடிக்க முடியாமல் போனது?

பதில்: ஒரு மோதல் சூழ்நிலையின் கீழ் கடைசி சிவிலியனும் மீட்கப்பட்ட பின்னர் புலிகளின் தலைவர்கள் ஒரு சிறிய பிரதேசத்தில் நிர்க்கதி நிலைக்குள்ளானார்கள். அவர்கள் விரும்பும் பட்சத்தில் சரணடைவதற்கு போதிய கால அவகாசமும் கொடுக்கப்பட்டது.

தயா மாஸ்டர் போன்றவர்கள் காப்பாற்றப்பட்ட மக்களோடு மக்களாக வந்து சரணடைந்தார்கள். இதற்கு மேலதிகமாக ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட புலி உறுப்பினர்களும் சரணடைந்தார்கள். ஆனால் முன்னணித் தலைவர்கள் சரணடைய முன்வரவில்லை. சர்வதேச சமூகம் தங்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையோடு இருந்தார்கள்.

கே: குமரன் பத்மநாதன் என்பவர் பற்றி இப்போது அதிகம் பேசப்படுகின்றதே

பதில்: கடந்த பல வருடங்களாக புலிகளுக்கு பிரதான ஆயுதங்களை கொள்வனவு செய்பவரும், விநியோகித்து வருபவரும் இவர் என்றே கருதப்படுகின்றது. இவர் சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக இன்டர்போலினால் தேடப்படுபவர். இவர் மீது போதைப் பொருள் கடத்தல் குற்றச்சாட்டும் உள்ளது. இவர் நிதி ரீதியாக புலிகளை ஸ்திரப்படுத்தியவர். இவர் புலிகளின் தலைமைத்துவத்தை ஏற்றுள்ளதாக சில இணையத் தளங்கள் குறிப்பிட்டுள்ளன.

சர்வதேச பொலிஸாரால் வேண்டப்படும் ஒரு நபரை சில நாடுகள் ஏன் இன்னும் கைதுசெய்யாமல் இருக்கின்றன என்பதைத் தான் என்னால் புரிந்துகொள்ள முடியாமல் உள்ளது.

கே: இப்போது காவலில் வைக்கப்பட்டுள்ள புலி உறுப்பினர்களுக்கு எதிராக எடுக்கப்படவுள்ள நடவடிக்கைகள் என்ன?

பதில்: இவர்களுக்கு புனர்வாழ்வளிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். புலிகளின் பயங்கரவாதச் செயல்களில் பங்கேற்றதாக இவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர். மேலும் விசாரணைகளும் நடத்தப்பட்டு சட்டப்படி நடவடிக்கை எடுக்கக் கூடியவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். கிழக்கு மாகாணத்தில் இது சம்பந்தமான அனுபவம் எமக்குள்ளது.

கிழக்கில் உள்ள புனர்வாழ்வு முகாம்கள் வெற்றிகரமாகச் செயற்படுகின்றன. 30 வருடங்களுக்கு மேலாக புலிகளின் செயற்பாடோடு தொடர்புபட்டிருந்தவர்களுக்கு புனர்வாழ்வளிப்பது என்பது இலகுவான காரியமல்ல.

கே: புலிகள் முற்றாக ஒழிக்கப்பட்ட நிலையிலும், எதிர்காலத்தில் உங்களது உயிருக்கு ஆபத்து இருக்கலாம் என்று நீங்கள் கருதுகின்ர்களா?

பதில்: அவ்வாறான அச்சுறுத்தல் எனக்கு இருக்கலாம். ஜனாதிபதி, ஆயுதப் படைகளின் தளபதிகள் ஆகியோருக்கும் இத்தகைய ஆபத்து இருக்கலாம். புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட சகல முன்னணித் தலைவர்களுக்கும் முடிவு கட்டப்பட்ட நிலையிலும் கூட நாம் இந்த ஆபத்தை எதிர்பார்க்க வேண்டிய நிலையில்தான் உள்ளோம்.

ஒருவேளை இந்த ஆபத்து சர்வதேச மட்டத்தில் இருந்து வரலாம். ஏனெனில் எமது நாட்டுக்கு அந்தளவுக்கு சர்வதேச நெருக்குதல் பிரயோகிக்கப்பட்டது. எனவே இதற்கு எதிரான பாதுகாப்பு நடவடிக்கைகளைக் கையாள வேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம்.

கே: பொட்டு அம்மானைத் தவிர மற்ற எல்லா புலிகளின் தலைவர்களினதும் உடல்கள் அடையாளம் காணப்பட்டன. பொட்டு அம்மான் பற்றி ஏன் எந்தத் தகவலும் இல்லை?

பதில்: கடைசி சில தினங்களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கையின் போது பெருமளவு புலி உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர். நாம் எமது வளங்களுக்கு ஏற்ப அவற்றை அடையாளம் கண்டு பெயர்களை வெளியிட்டோம். பிரபாகரன், பானு, சூசை ஆகியோர் கொல்லப்பட்டுள்ள நிலையில் பொட்டு அம்மானும் நிச்சயம் கொல்லப்பட்டிருப்பார். அவர்கள் இராணுவத்துடனான மோதலில் கொல்லப்பட்டிருந்தால் வித்தியாசமான சூழ்நிலையில் கொல்லப்பட்டிருப்பார்கள். அப்போது அடையாளம் காண்பது கூட சாத்தியப்பட்டிருக்காது.

கே: விடுதலைப் புலிகளின் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்குமா?

பதில்: அது நடைபெற நாம் ஒரு போதும் இடமளிக்கமாட்டோம். 30 வருடங்களுக்கு மேலாக அவர்கள் சேகரித்த பெருந்தொகையான ஆயுதங்களை நாம் கைப்பற்றியுள்ளோம். அவர்களிடம் வேறு ஆயுதங்கள் எஞ்சியிருப்பின் அவற்றையும் தேடிக் கண்டுபிடிக்க நாம் நடவடிக்கை எடுப்போம். எமது படையினரால் சுமார் 20 ஆயிரம் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர். பத்மநாதன் போன்ற ஒரு சிலர்தான் இன்னும் ஈழக் கனவு காண்கின்றனர். எனவேதான் அவர்கள் பொய்ப் பிரசாரங்களும் செய்கின்றனர்.

எம்மீது சர்வதேச சமூகம் கொண்டுவந்த அழுத்தத்தை நாம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டும். எல். ரீ. ரீ. ஈ.க்கு ஆயுதங்கள் வழங்குபவர்கள் மீது அவர்கள் ஏன் அழுத்தங்களைப் பிரயோகிப்பதில்லை? சர்வதேசத்தினூடாகத்தான் குமரன் பத்மநாதன் புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். அவர் பணம் சம்பாதிக்க போதைப் பொருள் கடத்தலிலும் ஈடுபட்டுள்ளார்.

முழு உலகத்துக்கும் இது தெரியும். எம்மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கும் சர்வதேச அமைப்புக்களுக்கு சர்வதேச மட்டத்தில் சட்டவிரோத செயல் புரியும் இவர் போன்ற நபர்களைக் கைதுசெய்ய அழுத்தம் பிரயோகிக்க வேண்டிய கடமையும் உள்ளது. எனவே இத்தகைய நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாம் இந்த அமைப்புக்களை வேண்டிக்கொள்கிறோம்.

கே: புலிகளின் ஆதரவாளர்கள் வெளிநாடுகளில் உள்ள இலங்கை இராஜதந்திர நிலையங்கள் பெளத்த ஆலயங்கள் என்பனவற்றைத் தாக்கி உள்ளனர். இந்த விடயத்தில் அரசாங்கம் எடுக்கவுள்ள நடவடிக்கை என்ன?

பதில்: அரசாங்கம் என்ற வகையில் நாம் எமது தூதுவர்களை அழைத்து, இது தொடர்பாக விழிப்பூட்டியுள்ளோம். சம்பந்தப்பட்ட அரசுகளுக்கும் எமது தூதரகங்கள் ஊடாக அறிவித்துள்ளோம். ஆனால் அந்த அரசுகளால் இதுவரை இது சம்பந்தமாக எவரையும் சட்டத்தின் முன் நிறுத்த முடியவில்லை.

இவற்றுக்கு நாம் ஒரு முடிவு கட்ட வேண்டும். ஆனால் இந்த சம்பவங்களோடு தொடர்புடைய ஒரு நபரைக் கூட அந்த அரசாங்கங்கள் இன்றும் கைது செய்யவில்லை. இவ்வகையான மனித உரிமை மீறல் குற்றங்களைப் புரிபவர்களை சட்டம் ஒழுங்கு பற்றி வெகுவாகப் பேசும் நாடுகளால் கைதுசெய்ய முடியவில்லை.

ஐ. நா. செயலாளர் நாயகம் பான் கீ மூனின் கவனத்துக்கும் இதை நாம் கொண்டு வந்துள்ளோம். இந்த நாடுகள் மீது ஏதாவது ஒரு வகையில் அழுத்தங்களைக் கொண்டுவருமாறும் நாம் அவரைக் கேட்டுள்ளோம்.

கே: சர்வதேச மட்டத்திலான சில அமைப்புக்களின் பிரதிநிதிகள் அடிக்கடி எமது நாட்டுக்கு விஜயம் செய்கின்றனர். இந்த வெளிநாட்டவர்களின் வருகை பற்றிய உங்கள் கருத்து என்ன?

பதில்: கடந்த சில மாதங்களாக இலங்கையில் சட்டங்களும், விதிமுறைகளும் மறக்கப்பட்ட ஒரு நிலைதான் காணப்பட்டது. இந்த வட்டத்துக்கு வெளியே தான் சம்பவங்கள் நடந்தன. இதற்கு முக்கிய காரணம் இங்கு நிலவிய பயங்கரவாதம். ஆனால் இப்போது இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் இடம்பெறாமல் தடுக்கக் கூடிய ஒருநிலை ஏற்பட்டுள்ளது. சிலர் தாங்கள்தான் இந்த நாட்டை ஆட்சிசெய்வது போலவும் நடந்துகொண்டனர். அவர்கள் எமது உள்நாட்டு விவகாரங்களில் தேவையின்றி தலையிட்டனர்.

அரச சார்பற்ற நிறுவனங்களால் எவ்வித தேசிய அல்லது சர்வதேசக் கட்டுப்பாடுகளும் இன்றி இந்தத் தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டன. அவர்களது முடிவுகள் பொறுப்புக்கூறும் மட்டத்துக்கு அப்பால் சென்றது. நாட்டின் சட்ட விதிகளையும், ஒழுங்கு முறைகளையம் பயங்கரவாதம் பலவீனப்படுத்தியிருந்தமை தான் இதற்கு முக்கிய காரணம். இவற்றைக் கண்டும் காணாமல் இருக்கவேண்டிய நிர்ப்பந்த நிலையில் நாம் இருந்தோம். உண்மையில் எமது நாட்டுக்கே உரிய விதிமுறைகளும், ஒழுங்கமைப்புக்களும் இருக்கின்றன. வெகு விரைவில் நாம் இவற்றை மீள நிலைநாட்ட வேண்டும்.

கே: கொழும்பில் இன்னமும் மறைந்திருப்பதாக நம்பப்படும் புலிச் சந்தேக நபர்களைக் கண்டுபிடிக்க அல்லது இனம்காண எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன?

பதில்: புலனாய்வுச் சேவைகள் மூலமும், பொலிஸார் மூலமும் எமது விசாரணையாளர்கள் நடத்திய விசாரணைகளின் பலனாக கொழும்பில் புலிகளின் வலையமைப்பை ஏற்கனவே எம்மால் தகர்க்க முடிந்துள்ளது. வன்னிக்குத் தப்பிச் செல்ல முயன்றவர்களையும் கூட நாம் கைது செய்துள்ளோம். இந்தப் பணியை பூரணப்படுத்தும் செயற்பாட்டில் உளவுத் துறையினர் தற்போது முழுமையாக ஈடுபட்டுள்ளனர்.

சிவில் வாழ்வை இயல்பு நிலைக்குக் கொண்டுவரும் வகையில்தான் நாம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். புலிகளின் அச்சுறுத்தல், கப்பம் கோரல் என்பனவற்றால் சாதாரண தமிழ் மக்களும் கூட பாதிக்கப்பட்டனர். இராணு வத்தினதும், பொலிஸாரின தும் உதவியோடு இவற்றைத் தீர்த்துக் கொள்வதிலும் அந்த மக்களுக்குப் பிரச்சினைகள் இருந்தன. ஆனால் இப்போது சகல சமூகங்களும் இணக்கமான சமாதானமான ஒரு சூழலில் வாழும் நிலை ஏற்பட்டுள்ளது.

கே: இந்த முழுச் செயற்பாட்டிலும் ஊடகங்களின் பங்களிப்பு எவ்வாறு அமைந்திருந்தது?

பதில்: நாம் ஒருபோதும் ஊடகங்களை ஒடுக்க முயலவில்லை. ஒரு நாட்டில் ஊடகம் என்பது மிகவும் பொறுப்புடன் செயற்பட வேண்டும். ஊடகத்தின் ஒரு பகுதி இராணுவத்தால் மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான செயற்பாடுகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நடந்துகொண்டது. அதைப் பற்றி மட்டும் தான் நான் பேசுகின்றேன். இவர்கள் உண்மையில் பெரும் தடையாக இருந்தனர்.

மோதல் நிலைமை பற்றி தவறான ஒரு அறிக்கை வெளியிடப்பட்டால் ஜனாதிபதியோ அல்லது அரசாங்கமோ இந்த இலக்கை அடையும் விடயத்தில் மக்களின் ஆதரவைப் பெற்றிருக்க முடியாது. எனவே தவறான அறிக்கைகளும், தகவல்களும் மக்களைச் சென்றடைவதை நாம் தடுக்க வேண்டியிருந்தது. இதனால்தான் சிலவேளைகளில் இவ்வாறானவர்களுக்கு எதிராக நான் பேசவேண்டியிருந்தது.

எந்த ஒரு சந்தர்ப்பத்திலும், யாரையும் நாம் நெருக்குதலுக்கு உட்படுத்தியதில்லை. பிழையான செய்தி அறிக்கைகளை ஏனையயஊடகங்கள் மூலம் திருத்தும் வேலையை மட்டும்தான் நாம் செய்தோம். நாட்டு மக்களுக்கும், பெருமளவுக்கு உலக மட்டத்திலும் சரியான தகவல்களை வழங்கும் பணியை பாதுகாப்புத் துறை இணையத் தளம் மிகச் சிறப்பாகச் செய்தது. நாம் கடமையைத்தான் செய்தோம். ஒரு போதும் தணிக்கை செய்யவில்லை.

தமிழில் ; எம். நெளஷாட் மொஹிடீன்   – நன்றி: தினகரன்

எமது தலைவர் விட்டுச்சென்ற கடைமையை பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கிறோம் : செ.பத்மநாதன்

pathmanathan.jpgதமிழர் தாயககளத்தில் இனப்படுகொலை அரங்கேற்றப்பட்ட அந்த இறுதிக் கணத்தில் நடந்தது என்ன என்பது குறித்தும் தமிழ் மக்கள் முன்னுள்ள தற்போதைய அவசரமான பணி என்ன என்பது குறித்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் விளக்கமளித்துள்ளார்.  அவுஸ்திரேலிய தமிழ் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை ஒலிபரப்பாகிய ‘செய்தியலைகள்’ நிகழ்ச்சிக்கு அவர் வழங்கிய நேர்காணலின் விபரம் வருமாறு:

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பிரிவினர் கடந்த 17 ஆம் நாள் படுகொலை செய்யப்படும் அந்த துயரமான வேளையிலும் உங்களுடன் தொடர்பில் இருந்துள்ளனர். அவர்கள் இறுதியாக என்ன விடயத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டனர்?

எனது அண்ணன் நடேசன், தம்பி புலித்தேவன் இவர்களின் மரணம் என்னை மிகவும் ஆழமாக பாதித்தது. எமது மக்கள் மிகவும் கொடுமையாக எதிரிகளால் சுட்டுவீழ்த்தப்பட்டபோது – ஒவ்வொரு கணமும் எமது உடன்பிறப்புகள் சுட்டுவீழ்த்தப்பட்டபோது – நாம் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இவர்கள் இருவரும் என்னுடன் கலந்துரையாடினார்கள்.

போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதற்காக சிறிலங்கா அரசாங்கத்துடன் நாம் பேசினோம். சிறிலங்கா அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர் ஒருவரின் ஊடாக – சிறிலங்கா அரச தலைவரின் ஒப்புதலின்படி – நடேசன், புலித்தேவன் ஆகியோர் இராணுவ முகாமுக்கு சென்று கலந்துரையாடுவதற்காக வெள்ளைக் கொடியுடன் சென்றுகொண்டிருந்தபோது சிறிலங்கா இராணுவத்தினரால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார்கள்.  அதேபோன்று பொதுமக்கள் சிலரும் வெள்ளைக் கொடியுடன் சென்றபோது சிறிலங்கா அரசாங்கம் தனது வாக்குறுதியை காற்றில் பறக்கவிட்டு அவர்களை சுட்டுக்கொலை செய்தது. இதுதான் உண்மை.

நடேசன், புலித்தேவன் ஆகியோர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பின்னரே அவர்கள் சரணடைவது குறித்த தகவல் தமக்கு கிடைத்ததாக சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா கூறியிருக்கிறார். இது குறித்து என்ன கூறுகிறீர்கள்?

சரணடைவு குறித்து 24 மணி நேரத்திற்கு முன்னதாகவே சிறிலங்கா தரப்புடன் பேசப்பட்டது. முதற்கட்ட நடவடிக்கையாக முக்கிய அமைச்சர் ஒருவரும் எமது தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரும் இரண்டு கத்தோலிக்க ஆயர்களும் அங்கு செல்வதாக இருந்தது. அந்த சம்பவம் ஏதோ காரணத்தினால் நடைபெறாமல் போய்விட்டது.  எனினும் நாம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினோம். புலிகளை நேரடியாக வந்து பேசலாம் என்று சிறிலங்கா தரப்பில் எமக்கு கூறப்பட்டது.

சிறிலங்கா இராணுவத் தளபதிக்கு இந்த தகவல் அறிவிக்கப்பட்டதா? இல்லையா? என்பது எமக்கு தெரியாது. ஆனால் சிறிலங்கா அரச தலைவரின் உத்தரவுப்படியே இந்த சரணடைவு நடைபெற்றது என்பது அப்பட்டமான உண்மை.

இறுதி நாட்களில் ஆயிரக்கணக்கில் மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். அந்த மக்களை பாதுகாக்குமாறு அனைத்துலக சமூகத்திடம் கோரும் நடவடிக்கையில் நீங்கள் இறுதி நாட்களில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டிருந்தீர்கள். இதற்கு ஏதேனும் சாதகமான சமிக்ஞைகள் கிடைத்தனவா?

அனைத்துலக ரீதியில் நாங்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டிருந்தோம். ஆனால் சிறிலங்கா அரசு பல்வேறு காரணங்களை கூறி எமது முயற்சிகளை தட்டிக்கழித்துக்கொண்டே வந்தது. கடைசித் தருணத்தில் அதாவது மே 16 ஆம் நாளும் நாங்கள் போர்நிறுத்தம் குறித்து பேசுவதற்கு முயற்சிகள் எடுத்தோம். அவர்கள் அதனையும் தட்டிக்கழித்தனர். அனைத்துலக அரசுகள் கூட எவ்வளவோ அழுத்தங்களைக் கொடுத்தும் சிறிலங்கா அரசு அதற்கு செவிசாய்க்கவில்லை.

சிறிலங்கா படையினரால் தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் மக்களுக்காக – அங்கே நாளாந்தம் உயிரிழக்கும் முதியவர்களுக்காக – அங்கே கடத்தப்பட்டு காணாமல் போகும் எமது உறவுகளுக்காக – நாங்கள் உடனடியாக செய்ய வேண்டிய நடவடிக்கை என்ன?

எமது இனம் ஊனமாக்கப்பட்டுவிட்டது. சிறிலங்கா அரசு அந்த முயற்சிகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகிறது. புலம்பெயர் வாழ் தமிழ் மக்களின் கைகளில்தான் எமது இனத்தின் தலைவிதி இன்று தங்கியிருக்கின்றது. நாம் ஒரு அரசியல் சுனாமியை சந்தித்து, அந்த அழிவின் வருத்தத்தில் இருக்கின்றோம். எனவே புலம்பெயர் வாழ் மக்கள் தமது உடன்பிறப்புக்களை காப்பாற்ற வேண்டிய கடமையில் இருக்கின்றார்கள்.  புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் உடனடியாக அந்தந்த நாடுகளில் அங்குள்ள சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு – எந்தவித வன்முறையையும் தொடாமல் – போராட்டங்களை மேற்கொண்டு, எமது மக்களுக்கு உதவும்படி அந்த நாடுகளின் அரசுகளை கேட்க வேண்டும். அந்த அரசுகளின் அனுதாபத்தை நாங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த போராட்டத்திற்கு புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை வழங்க முன்வர வேண்டும்.

ஐக்கிய நாடுகள் சபையுடனும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்துடனும் நாங்கள் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு இருக்கிறோம். எமது மக்களுக்குரிய உணவும் மருந்துப் பொருட்களும் சென்றடைய வேண்டும். இந்திய அரசாங்கத்துடனும் இது குறித்து பேசிக்கொண்டு இருக்கிறோம்.

எமது தலைவர் விட்டுச்சென்ற கடைமையை பாதுகாக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கிறோம். எனவே, அனைவரும் வேறுபாடுகளை மறந்து முன்வந்து எமது இனத்தை காப்பாற்றுங்கள். முள்வேலிகளுக்கு இடையில் அகப்பட்டுக்கொண்டிருக்கும் எமது உறவுகளைக் காப்பாற்றுங்கள் என்று உங்கள் அனைவரையும் மிகவும் தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

தாயகத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலை வெற்றிடமாகியுள்ள நிலையில் – தமிழ் மக்களுக்கான அரசியல் தலைமை ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனை எவ்வாறு நீங்கள் முன்னெடுத்து வருகிறீர்கள்?

மிகவும் கடுமையாக அந்த முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். உண்மையில் இந்த வெற்றிடம் என்பது எதிர்பாராத நிகழ்ச்சியாக அமைந்துவிட்டது. நாம் அனைத்து தரப்பினருடனும் குறிப்பாக சகல அரசியல் கட்சிகளுடனும், இயக்கங்களுடனும் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மிகவிரைவில் அந்த முயற்சி வெற்றிபெறும்.

தமிழ் இன அழிப்பின் இறுதிக்கட்ட போரில் படுகொலை செய்யப்பட்ட மக்கள் குறித்த ஆதாரங்களை சேர்த்து அவற்றை மனித உரிமை அமைப்புக்களுக்கு வழங்க வேண்டிய வரலாற்று பொறுப்பு ஏற்பட்டுள்ளது. இதனை எப்படி பார்க்கிறீர்கள்?

இந்த நடவடிக்கை அத்தியாவசியமானது. புலம்பெயர் வாழ் நாடுகளில் உறவுகள் வசித்து வருகின்றனர். எங்களிடம் தங்களது உறவுகள் குறித்து நலம் விசாரிக்கின்றனர். அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக இந்த தகவல்களை பெற்றுக்கொள்ளவதற்கு நாங்கள் முயற்சித்தபோதும் அதற்கு சிறிலங்கா அரசாங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே அடுத்த கட்டமாக சட்ட நுணுக்கங்களை ஆராய வேண்டிய தேவை உள்ளது. தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் நான் இது குறித்து பேசியுள்ளேன். அவர்களும் இதற்கான முயற்சியில் இறங்கியுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிதிகளிடமும் இது குறித்த உதவிகளை நான் கேட்டிருக்கிறேன். சில அரசாங்கங்களுடனும் இது குறித்து பேசி வருகின்றேன். முடிந்தவரை அவற்றை வெகுவிரைவில் செய்யவேண்டும் என்று விரும்புகின்றேன்.

ஆனால், அதற்கு முன்னர் எமது மக்கள் பசியால் வாடவோ அன்றி உணவின்றி இறப்பதையோ நாங்கள் அனுமதிக்க முடியாது. ஏற்கனவே அவர்கள் பட்ட துன்பம் போதும். இனியாவது அவர்களுக்கு ஒரு நம்பிக்கையை கொடுங்கள்.

எனது அன்பு உடன் பிறப்புகளே! அனைத்துலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களே!! அங்குள்ள உறவுகளுக்கு ஒரு நம்பிக்கையை கொடுங்கள். அதுவே அவர்களை வாழ வைக்கும்.

நாங்கள் எந்த உதவியை செய்வதானாலும் சிறிலங்கா அரசுடன் ஊடாகவே மேற்கொள்ள வேண்டியுள்ளது. மாறாக எமது மக்களை இந்த உதவிகள் நேரடியாகச் சென்றடையக் கூடிய பேச்சுவார்த்தைகள் எதையாவது நீங்கள் மேற்கொள்கின்றீர்களா?

சிறிலங்கா அரசு இந்தப் போரில் ஒரு வெற்றியைக் கண்டிருப்பது உண்மை. ஆனால், அவர்கள் அனைத்துலக நிறுவனங்களை அங்கே அனுமதிக்க தயங்குகின்றனர். எமது மக்களுக்கு நேரடியாக பொருட்கள் அங்கு அனுப்பப்பட முடியாவிட்டாலும் – இந்திய அரசாங்கத்துடனும் தமிழக முதல்வருடனும் இது குறித்து கதைத்துக் கொண்டிருக்கின்றோம். எனவே எந்த வழியில் சென்றாலும் அது மக்களை சென்றடைந்தால் அது போதும் என்றே நான் கருதுகின்றேன்.

தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தை பொறுத்தவரை அனைத்துலக நாடுகள் தமிழ் மக்களை கைவிட்டுவிட்டன என்று கருதலாமா?

அனைத்துலக நாடுகள் சிறிலங்கா அரசுக்கு ஓரளவுக்கு அழுத்தமும் கொடுத்திருக்கின்றன. எனினும் சீனா, ரஸ்யா, ஈரான், பாகிஸ்தான் போன்ற நாடுகளின் ஆசியுடன் இந்த நாடகத்தை சிறிலங்கா அரசாங்கம் ஆடி முடித்திருக்கிறது.

மக்களுக்கான தீர்வு குறித்து ஏதாவது சிந்தனைகள் உள்ளதா?

எமது இனம் மானத்துடனும் கௌரவத்துடனும் வாழ்வதற்கு ஒரு தீர்வு அவசியம். இது குறித்து நாம் எமது பலதரப்பட்ட பிரிவினர்களுடன் கதைத்துக் கொண்டிருக்கின்றோம். எமது மக்களின் அரசியல் அபிலாசையை ஓரளவுக்கேனும் நிறைவேற்றக்கூடிய திட்டத்தை செயலாற்ற வேண்டியது இன்றைய காலத்தின் கட்டாயமாகும். விரைவில் இது குறித்த முழு விபரமும் வெளியிடப்படும்.

அனைத்துலகத்திற்கும் தமிழ் மக்களுக்கும் இடையிலான உறவைப் பலப்படுத்தும் எந்தவகையிலான முயற்சிகளை நீங்கள் எடுக்கின்றீர்கள்?

அனைத்துலக நாடுகளில் உள்ள தமிழ்மக்களிடம் நாங்கள் கேட்டுக்கொள்வது யாதெனில் – பாரிய சுமைகளை எல்லாம் எமது தோளில் மட்டும் சுமத்தாதீர்கள். ஒவ்வொரு தமிழ் மகனுக்கும் உரிய கடமை அது. அந்தந்த நாடுகளில் அந்தந்த அரசுகளுடன் நல்ல உறவைப் பேணும்படி கேட்டுக்கொள்கின்றேன்.

இந்திய அரசாங்கத்தின் கவனத்தை எம்பக்கம் திருப்பும் காத்திரமான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவா?

முதல் வேலையாக அதற்கு முக்கியத்துவம் கொடுத்து அந்த வேலைகளை தொடர்ந்தும் செய்துகொண்டிருக்கின்றோம். சிறிது கால அவகாசம் தேவைப்படுகின்றது. இது குறித்த மேலதிக விபரங்களை தற்போது வெளிப்படுத்த முடியாது.

நீங்கள் தற்போது முழுக்கவனத்தையும் செலுத்தியிருக்கும் விடயம் எதுவென கூறமுடியுமா?

இராணுவ முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் எமது உறவுகளைக் காப்பாற்றுவதற்கும் பிடிபட்ட போராளிகளை அனைத்துலக சட்டத்திற்கு அமைவாக நிறுத்த வேண்டும் என்றும் அரசியல் தீர்வு குறித்தும் நாம் அதிக கவனம் செலுத்துகின்றோம். பிளவுகளை மறந்து அனைவரும் ஒன்றுசேர்ந்து ஒரு குடையின்கீழ் அரசியல் தீர்வுக்காக நிற்க வேண்டும். அதுதான் எனது விருப்பம். அதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் எடுத்து வருகின்றேன்.

புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் துயருக்கும் சோர்வுக்கும் மத்தியிலும் தொடர்ச்சியாக போராட்டம் நடத்த வேண்டியதன் அவசியம் குறித்து எவ்வாறு பார்க்கிறீர்கள்?

நாம் கனவில் கூட எண்ணியிராத ஒரு சூறாவளி எமது இளம் தலைமுறையை அடித்து சென்றுவிட்டது. அதில் இருந்து மீள்வதற்கு நாங்கள் மிகவும் கடுமையாக உழைக்க வேண்டிய காலம் இது.

கவனயீர்ப்பு போராட்டங்களின் ஊடாக அந்தந்த நாடுகளில் உள்ள ஊடகங்கள் மற்றும் மக்களுக்கு நாங்கள் என்ன செய்தியை கூற வேண்டும்?

சிறிலங்காவின் படை முகாம்களுக்குள் எமது இனம் படும் சித்திரவதைகளை – எமது தங்கைகளை படையினர் கொடுமைப்படுத்துவதை – எமது இளம் சிறார்கள் பெற்றோருடன் சேரவிடாமல் பிரிக்கப்பட்டிருப்பதை – முதலில் நாங்கள் அனைத்துலகத்தின் கண்களில் நிறுத்த வேண்டும்.

உங்களைப் பற்றிய வதந்திகள் வந்துகொண்டிருக்கின்றன. குறிப்பாக இந்தியாவின ‘றோ’ உங்களை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கான உங்களது பதில் என்ன?

எமது தேசியத் தலைவருடன் நான் மூன்று தசாப்தங்களுக்கு மேலாக, அவருடன் ஆத்ம ரீதியாக கலந்துகொண்டவன். இதனை எமது போராட்டத்தில் சம்பந்தப்பட்ட அனைவரும் அறிந்துகொள்வர். எமக்கு இடையில் எந்தவித அப்பழுக்கற்ற நட்பை பேணிக்கொண்டோம். இது சாதாரண குடும்ப – மனித – வாழ்க்கைக்கு சற்று மேலான உறவு.

அனைத்துலக இராஜதந்திர நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக என்னை நியமித்த அந்த தலைவருக்கு செய்யப்படும் துரோகமாகத்தான் நான் இதனை எண்ணுகின்றேன். எமது தலைவர் எமது மக்களின் இதயங்களில் குடிகொண்டவர். நான் பணத்திற்காகவோ அல்லது பதவிகளுக்காகவோ விலைபோகக் கூடியவனாக இருந்தால் என்னை அவர் இந்த பொறுப்பிற்கு நியமித்திருக்க மாட்டார். இது எமது போராளிகளுக்கு மட்டுமல்ல, அனைத்துலக நாடுகளுக்கு வந்து வசித்து வரும் போராளிகளுக்கும் தெரியும். எனவே எமது தலைவர் அப்படியொரு தவறை செய்ய மாட்டார்.

எனது தலைவர் கூறிய அவரது கனவான – எமது மக்களுக்கு கௌரவமான, சமனான, மரியாதையுடன் வாழக்கூடிய தீர்வை எடுத்துக் கொடுப்பதற்கு – எனது வாழக்கையை அர்ப்பணித்திருக்கின்றேன்.

சிறிலங்கா அரசு தற்போது தொடங்கியுள்ள போரானது அனைத்துலக நாடுகளில் வாழும் தமிழ் மக்களின் கட்டமைப்பை உடைப்பதாகவே உள்ளது. அதுதான் அவர்களின் அடுத்த இலக்கு. திருமதி அன்ரன் பாலசிங்கத்தை நாடு கடத்துவதற்கும் அவரை துரோகியாக்குவதற்கும் சிறிலங்கா அரசு முயற்சி எடுத்திருக்கின்றது. எனவே அவர்கள் நினைப்பதை செய்வதற்கு தயவு செய்து துணை போகாதீர்கள். நாம் கருத்துகளில் வேறுபடலாம். ஆனால் இலட்சியத்தில் ஒன்றுபட்டவர்கள்.

எனவே அன்பு தம்பிகளே! உறவுகளே!!

எனது அண்ணன் விட்டுச் சென்ற கடைமையை தொடர்ந்தும் செய்வோம். 

புலம்பெயர் வாழ் தமிழ் மக்கள் தற்போதைய நிலையில் கருத்து வேறுபாடுகளை மறந்து தீவிரமான போராட்டங்களை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து கூற முடியுமா?

நான் ஏற்கனவே கூறியதன்படி இந்த சுனாமியினால் மனம் நொந்திருக்கும் எமது உறவுகள் மீண்டும் எழ வேண்டும். மீண்டும் நாம் எமது கடைமையை ஆற்றுவதற்கு தயாராக வேண்டும். அதனை உடனே செய்ய வேண்டும். காலம் தாமதித்தால் எமது உறவுகள் எமது நாட்டில் மிகவும் கொடுமையான நிலைக்கு தள்ளப்படுவார்கள். நாம் தாங்கொணா துயரத்தை இதயத்தில் தாங்கிக் கொண்டிருக்கிறோம். எமது நெஞ்சம் வெடிக்கின்றது.

இருந்தாலும் எமது உறவுகளுக்காக நம்பிக்கையுடன் இருக்கின்றோம். புலம்பெயர்ந்துள்ள தமிழ் மக்கள் அந்த கடைமையை செய்ய வேண்டும். அனைவரும் ஒன்றாக வாருங்கள். ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் எமது உறவுகள் ஒன்றுசேர வேண்டும். உங்களுடைய கடைமை பாரியது.

முதற்கட்டமாக அனைவரும் ஒன்றுகூடி எங்கள் உறவுகளைக் காப்பாற்றுவதற்கு நாங்கள் இருக்கின்றோம் என்ற நம்பிக்கையை கொடுங்கள். அந்த நம்பிக்கை அவர்களை வாழ வைக்கும். எனவே அதனைச் செய்யுங்கள் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இன்றைய நிலையில் தமிழ் ஊடகங்களின் பங்கு எந்தளவுக்கு காத்திரமானதாக இருக்க வேண்டும் என்பது பற்றி கூறமுடியுமா?

ஊடகங்களின் பங்கு மிகவும் முக்கியமானது. அங்குள்ள மக்களை காப்பாற்றுவதற்காக இங்கேயுள்ள மக்களை ஒன்றுதிரட்டும் பணியை இந்த ஊடகங்கள் செய்ய வேண்டும். வேறுபாடுகளை மறந்து ஒன்று சேருங்கள். எமது பலத்தை காட்டுங்கள். நாங்கள் ஒன்று சேர்ந்து இங்கு எமது பலத்தை காட்டினால் அங்கேயுள்ள எமது மக்கள் கண்ணீர் சிந்த மாட்டார்கள். இந்த ஊடகங்கள் அதனை மிகவும் பொறுப்புடன் செய்ய வேண்டும்.

உத்தேச தீர்வுத் திட்டம் 13 ஆவது திருத்தத்திலும் பார்க்க கூடுதலானதாக அமையும் – ஜனாதிபதி ராஜபக்ஷ

mahinda-0000.jpgஉத்தேச அரசியல் தீர்வானது அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்திலும் பார்க்க கூடுதலானதாக அமையும் என்று தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, சகலருமே அதனை அமுல்படுத்துவதற்கு அவசியம் இணங்குவதாக இந்த 13 ஆவது திருத்தத்திலும் கூடுதலான தீர்வு விளங்கும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

இந்த உத்தேச யோசனைகள் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் ஒன்றுசேர்ந்து தீர்மானிக்க வேண்டியது அவசியமென்றும் தான் இந்த விடயத்தில் அவர்களை நிர்ப்பந்திக்கப் போவதில்லை என்றும் தீர்வுத் திட்டமானது ஒவ்வொரு மக்கள் மத்தியில் இருந்தும், தலைவர்களிடமிருந்தும் வெளிவர வேண்டியது அவசியம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

“இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆசிரியர் சேகர் குப்தாவிற்கு என்.டி.ரி.வி.யின், “வோக் த ரோக்’ நிகழ்ச்சியில் பேட்டியளித்திருக்கும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பயங்கரவாதத்திலிருந்து, விடுதலைபெற்ற நிலையில் சேகர் குப்தாவுடன் தற்போது தான் உரையாடுவதாக குறிப்பிட்டிருக்கிறார்.

பேட்டியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது;  விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இழைத்த பாரிய தவறு ராஜீவ் காந்தியை கொன்றதாகும். ஏனெனில், இந்தியாவின் முழு அனுதாபத்தையும் அவர்கள் பகைத்துக்கொண்டனர். அந்த நேரத்தில் அவர் செய்த பாரிய தவறு இதுவென நான் நினைக்கிறேன். இரண்டாவதாக அவர் தெற்கின் சக்தியைப் பற்றி அளவிட்டிருக்கவில்லை. அவர் இழைத்த மற்றொரு தவறாகும் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் அவர் விரும்பியிருக்கவில்லை. முழு நாட்டையுமே அவர் கைப்பற்ற விரும்பியிருந்தார். அவருடைய திட்டம் முழு நாட்டையும் கைப்பற்றுவதாகும். பயங்கரவாதத்தினாலும், துப்பாக்கியினாலும் சகலரையும் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்று அவர் நினைத்திருந்தார். 30 வருடங்களில் அவருடைய பாரிய தவறு ராஜீவ் காந்தியின் படுகொலையாகும். அதுவே அவரது வீழ்ச்சிக்கு இட்டுச் சென்றது என்பது உண்மையாகும்.

இந்தப் பிரச்சினையை யார் உருவாக்கியது என்பது உங்களுக்கு தெரியும். இந்த மனிதர் எப்பொழுது இதனை ஆரம்பித்தார் மற்றும் இந்தியாவில் அவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது என்பது யாவருக்கும் தெரியும். இறுதியாக அவர்கள் இந்திய மக்களால் அன்பு செலுத்தப்பட்ட தலைவரை கொன்றனர். தமிழ் மக்களால் மட்டுமன்றி முழு இந்தியாவுமே அன்பு செலுத்தியவரை அவர்கள் கொன்றனர். தமிழ்நாட்டில் அவரைக் கொன்றனர். தமது ஜாக்கெட்டை அவர் (ராஜீவ்) கொடுத்தார் என்று நான் கேள்விப்பட்டேன். இது சரியானதா என்பது எனக்கு தெரியாது. அவர் இந்த மனிதருக்கு தமது சொந்த குண்டு துளைக்காத ஜாக்கெட்டை கொடுத்தார். எமது அரசியலமைப்பில் 13 ஆவது திருத்தத்தை அறிமுகப்படுத்துவதன் மூலம் தீர்வொன்றை ஏற்படுத்த அவர் (ராஜீவ் காந்தி) முயற்சித்தார். அதனை நாம் இப்போது வைத்திருக்கின்றோம். இந்திய சமாதானப்படை இலங்கைக்கு வந்தபோது நாம் மகிழ்ச்சியடையவில்லை. நானும் கூட சந்தோஷப்படவில்லை. நான் எதிர்த்தரப்பில் இருந்தேன். அந்த நேரத்தில் நாம் எதிர்த்தோம். ஆனால், இப்போது அவர்கள், அல்லது நாம் இந்திய அமைதி காக்கும் படையை மேலும் ஓரிரு மாதங்களுக்கு தங்கியிருக்க அனுமதித்திருந்தால் இதனை அவர்கள் முடித்து வைத்திருப்பார்கள்.

இந்திய அமைதி காக்கும் படையுடன், போரிட பிரேமதாஸா புலிகளுக்கு ஆயுதங்களை கொடுத்ததாக லலித் அத்துலத் முதலி தமக்கு கூறியதாக சேகர் குப்தா கேள்வியெழுப்பியபோது, சரி என்று ஜனாதிபதி பதிலளித்துள்ளார். 5 ஆயிரம் ரி56 ரக துப்பாக்கிகளை புலிகளுக்கு அவர் கொடுத்ததாக கேள்வியெழுப்பப்பட்டபோது, ஆம் என்று ஜனாதிபதி பதிலளித்துள்ளார்.

விடுதலைப்புலிகள் எப்போதுமே யுத்த நிறுத்தத்தை பயன்படுத்தியோ அல்லது இந்தியாவையோ அல்லது மேற்கு சக்திகளையோ பயன்படுத்த முயன்றதாகவும், ஜனாதிபதி கூறியுள்ளார்.

புலிகள் பிரேமதாஸாவை கொன்றனர், அவர்களுக்கு உதவியவர்களை கொன்றனர், ராஜீவ் காந்தியை கொன்றனர், காமினி திசாநாயக்காவை கொன்றனர், அமிர்தலிங்கம், லக்ஷ்மன் கதிர்காமர், நீலன் திருச்செல்வன் போன்ற அவர்களின் சொந்த தலைவர்களையே கொன்றனர். சமாதானத்தை விரும்பியவர்களை கொன்றனர்.

ராஜீவ் காந்தியை கொன்றதன் மூலம் அவர் ஏன் இந்த மாதிரியான பாரிய தவறினை செய்தார். அதுபற்றி நீங்கள் ஆராய்ந்துள்ளீர்களா? ஏதாவது தகவல்களை பெற்றுள்ளீர்களா? என்று ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டபோது, ராஜீவ் காந்தி அரசியல் தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க முயன்றார் என்றும், அதனை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டியிருந்ததால் ராஜீவ் காந்தியை அவர் வெறுத்தார் என்றும், தான் கருதுவதாக ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார். அவர் (பிரபாகரன்) எந்த தீர்வையும் விரும்பவில்லை. தான் மன்னனென கருதினார். இந்தியா தமிழ்நாட்டின் மனநிலை குறித்து அவர் கவலைப்படவில்லை. அவருடன் அனுதாபம் கொண்ட சில தலைவர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர். அவர்களைப் பற்றி குறிப்பிட நான் விரும்பவில்லை. அவர்களின் பெயரை நீங்கள் அறிவீர்கள். அவர்கள் யாவரும் மக்களால் தோற்கடிக்கப்பட்டுள்ளனர். தென்னிந்திய வாக்காளர்கள் புத்திசாலிகள் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

இறுதி நாட்களைப் பற்றி கூறுமாறும் இறுதியாக எவ்வாறு அவரையும் ஏனைய முக்கியமான தலைவர்களையும் கண்டுபிடித்ததாகவும் சேகர் குப்தா கேள்வியெழுப்பியபோது பதிலளித்த ஜனாதிபதி, அவர்கள் தப்பிச்செல்ல முயற்சித்ததாகவும், சிறிய நிலப்பகுதியில் ஓரங்கட்டப்பட்டிருந்த அவர்கள் 3 குழுக்களாக இருந்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். அந்த 3 குழுக்களில் ஒரு சாரார் வடக்கு பக்கமாகவும், மற்றவர்கள் தெற்கு பக்கமாகவும் இடையில் ஏரிப் பக்கமாகவும் சென்றதாகவும், பிரபாகரனும் ஏனையவர்களும் முன்னோக்கி நகர்ந்ததாகவும், அச்சமயம் இராணுவத்துடன் மோதல் ஏற்பட்டதாகவும், ஜனாதிபதி கூறியுள்ளார். அப்போது அவர்கள் சுற்றிவளைக்கப் பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

கட்டாரில் ஜனாதிபதி இருந்தபோது பிரபாகரனின் மரணம் குறித்து அவருக்கு தெரிவிக்கப்பட்டதாக தாங்கள் கேள்விப்பட்டதாக சேகர் குப்தா குறிப்பிட்டபோது, இல்லை எனவும் 19 ஆம் திகதியே தாம் செய்தியை பெற்றுக்கொண்டதாகவும், ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

இதேவேளை, இந்தியாவிடமிருந்து அதிகளவிலான பிரதிபலிப்புகள் வெளிப்படுத்தப்பட்டதா, உதாரணமாக ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சு இடம்பெற்ற போது, என்று சேகர் குப்தா எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, அவ்வாறான ஒன்றுமே நடைபெறவில்லை என்றும் அது ஒரு பிரசாரம் என்றும் மருத்துவர்கள் தங்களுடன் இருப்பதாகவும் இந்த மாதிரியாக அறிவிக்குமாறும், தங்களுக்கு கூறப்பட்டதென அவர்கள் தெரிவித்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். ஆஸ்பத்திரி மீது குண்டுவீச்சு இடம்பெறவில்லை எனவும், இது முற்றுமுழுதான பிரசாரம் எனவும் அவர் தெரிவித்தார்.

பொதுமக்களின் இழப்புகள் குறித்து கேட்கப்பட்டபோது 100 இலும் குறைவானவர்களே இறந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். எந்தவொரு பொதுமக்களுக்கு எந்தவொரு இழப்புகளும் ஏற்படக்கூடாது என தெளிவான அறிவுறுத்தல்களை வழங்கியிருந்ததாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஆப்கானிஸ்தானில் அவர்கள் செய்தது போன்று நாம் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை எனவும் ஜனாதிபதி கூறியிருக்கிறார்.

பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது செய்மதி மூலமான பிரதிமைகளைப் பெற உதவியை பெற்றுக்கொண்டீர்களா என்று கேட்கப்பட்டபோது, எங்கிருந்தும் நாங்கள் செய்மதி புகைப்படங்கள் தொடர்பாக உதவியைப் பெற்றிருக்கவில்லை என்று தெரிவித்தார்.

இந்தியாவின் தேர்தல் வேளையில் அதாவது ஆறு கிழமைகள் தொடக்கம் பிரபாகரனின் மரணம் வரை இந்தியாவுடனான தொடர்பாடல் எவ்விதம் அமைந்திருந்தது என்று கேட்கப்பட்டபோது, நாம் கலந்துரையாடல்களை மேற்கொண்டிருந்தோம். ஆரம்பத்தில் அவர்கள் பொதுமக்கள் இழப்புகள் தொடர்பாக கவலையடைந்திருந்தனர் என்று ஜனாதிபதி தெரிவித்தார். அவர்கள் ஏதாவது அழுத்தத்தைக் கொடுத்தார்களா எனக் கேட்டபோது, அவ்வாறான அழுத்தம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்ட அவர், நண்பர்கள் மத்தியில் அழுத்தங்கள் இருக்க முடியாது என்று கூறினார்.

நீங்கள் யுத்தத்தில் வெற்றி பெற்றுள்ளீர்கள். சமாதானத்தை எவ்வாறு இப்போது தோற்றுவிக்கப் போகிறீர்கள் என்று கேட்கப்பட்டபோது, முதலாவதாக நாங்கள் அவர்களை மீளக்குடியமர்த்த வேண்டும். முகாம்களுக்குள் இருந்தவாறு மக்களால் அரசியலைப் பற்றி சிந்திக்க முடியாது உடனடியாக நாம் மேற்கொள்ளப்படவேண்டியது அந்தப் பகுதிகளை மீளக்கட்டியெழுப்ப வேண்டும். அப்பகுதிகளில் உள்சார் கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதன் பின்னர் அவர்களை மீளக்குடியமர்த்த வேண்டும்.

இதற்கு 180 நாட்கள் திட்டத்தை வைத்திருக்கின்றோம். அந்த நடவடிக்கைகளில் நாம் ஈடுபட்டுள்ளோம். அதற்கான பணத்தை கண்டுபிடிக்கவேண்டும். ஒன்றிரண்டு பில்லியன் தேவைப்படுகிறது. இந்தியா எமக்கு உதவவேண்டும். அவர்கள் அதனைச் செய்வார்கள் என நினைக்கிறேன். மீளக் கட்டியெழுப்ப அவர்கள் உதவவேண்டும்.

தமிழ் மக்களை சமனான பிரஜைகளாக நீங்கள் நடத்துவீர்களா என்றும் உங்களது முறைமையில் சமத்துவம் உள்ளதா எனவும் இப்போது தாங்கள் தோற்கடிக்கப்பட்டதாக அவர்கள் உணர்வதாகத் தென்படுகிறதெனவும் கேட்கப்பட்டபோது எனது பாராளுமன்ற உரையை நீங்கள் பார்த்தால் இனிமேல் இங்கு சிறுபான்மையினர் இல்லையென்று நான் கூறியுள்ளேன். இங்கு இரண்டு வகையான மக்களே இருப்பார்கள். ஒன்று இலங்கையை நேசிப்பவர்கள் மற்றவர்கள் இலங்கையை நேசிக்காதோர். இதுவே மக்கள் மத்தியில் உள்ள வேறுபாடாக அமையும். சகல மக்களும் எனது மக்கள். அவர்கள் தமிழரோ, சிங்களவரோ, முஸ்லிம்களோ மலாயர்களோ, யாராகவிருந்தாலும் அவர்கள் எமது மக்கள் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். யாவரையும் தான் சமமாகவே நடத்துவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

1983 இல் இது தொடர்பாக வரலாறு உள்ளது என்று கேட்கப்பட்டபோது, வரலாற்றை நாம் மறந்துவிட வேண்டும். நாம் புதிய வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார். தமிழர்களுக்கும் சிங்களவர்களுக்குமிடையில் நீங்கள் வேறுபாட்டைக் காண்பிப்பதில்லையா என்று கேட்டபோது, இல்லை, நான் அவ்வாறு செய்யமுடியாது. ஏனெனில், எனது உறவினர்களில் சிலர் தமிழர்கள். எனது பெறாமகள் ஒரு தமிழரைத் திருமணம் செய்துள்ளார். அவர் பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

உங்களது விருப்பத்துக்குரிய கிரிக்கெட் கதாநாயகன் தமிழரான முத்தையா முரளிதரனா என்று கேட்கப்பட்டபோது, எவ்வாறு அதை நான் கூறமுடியும். எனது சொந்த வீட்டிற்குள் அதனை அவ்வாறு கூறமுடியாது என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

சிங்கள மேலாதிக்கவாதம் என்பது யதார்த்தமானதாக இருந்தது பற்றி கேள்வி எழுப்பப்பட்டபோது, நான் அதனைக் கூறமாட்டேன். ஏனென்றால், சகல அரசியல்வாதிகளுமே அதனைத் தொடக்கியிருந்தனர் என்று தெரிவித்தார். நீங்கள் கிராமத்துக்குச் சென்றால் தமிழர்களுடன் பேசினால் அவர்களுக்கு இந்தப் பிரச்சினை இல்லை. ஆனால் அரசியல்வாதிகள் அதிகாரத்திற்காக இதனைச் செய்கிறார்கள் என்றும் அதிகாரத்திற்கு வருவதற்கான ஒரே வழியாக அது இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தமக்கு அந்தமாதிரியாக செயற்படும் நோக்கமில்லை என்று தெரிவித்திருந்த ஜனாதிபதி, முழு நாடுமே தமக்கு வாக்களிக்க விரும்புவதாக அவர் கூறியுள்ளார். துரிதமாக தேர்தல் இடம்பெறும் சாத்தியம் பற்றி குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி, நவம்பர் மாதத்தில் அது தொடர்பாக தம்மால் தீர்மானம் எடுக்க முடியுமென்று கூறியுள்ளார்.

நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த முடியுமென்று குறிப்பிட்ட அவர், தேர்தலில் தமிழ் மக்களையும் உள்ளீர்த்துக் கொள்வதை ஏற்கனவே செய்திருப்பதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழர்களுக்கெதிரான பிரசாரத்தை மேற்கொள்வீர்களா என்று கேட்கப்பட்டபோது, இல்லை. எனக்குத் தமிழ் வாக்குத் தேவை. தமிழர்களோ முஸ்லிம்களோ சகலரது வாக்குகளும் தேவை என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.  இராணுவ ரீதியான தேர்தல் பிரசாரத்தை மேற்கொள்வீர்களா என்று கேட்கப்பட்டபோது, அது பயங்கரவாதத்திற்கு எதிரானதொன்றல்லவா என ஜனாதிபதி பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.

நகரத்தில் ஜனாதிபதி ராஜபக்ஷவுடன் ஜெனரல்கள், படைவீரர்கள் உள்ள சுவரொட்டிகள், பதாகைகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் இந்த வருட பிற்பகுதியில் இடம்பெறும் தேர்தலில் இவை உங்களின் தேர்தல் பிரசாரத்திற்கு பயன்படுமென நீங்கள் கருதவில்லையா என்று கேட்கப்பட்டபோது, இல்லை. தேவையற்றது, நாட்டை மீண்டும் பிளவுபடுத்த நான் விரும்பவில்லை. நான் ஒருபோதும் அதனைச் செய்யமாட்டேன். எனது அமைச்சரவையைப் பாருங்கள் எவ்வளவு முஸ்லிம், எவ்வளவு தமிழர்கள் இருக்கின்றார்கள். மலைநாட்டுத் தமிழர்கள் உள்ளனர். அவர்களை சிலர் இந்தியத் தமிழர்கள் என்று அழைக்கின்றனர். அவர்களுக்குத் தலைவராக தொண்டமான் இருக்கிறார். வடக்கிலிருந்தும் எமது அமைச்சரவையில் அமைச்சர் இருக்கின்றார் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

பல ஜனநாயக நாடுகளில் இந்தப் பிரச்சினையுண்டு. அதாவது; அவர்கள் பெரிய யுத்தத்தில் ஈடுபட்டபோது இராணுவ ஜெனரல்கள் கதாநாயகர்களாகின்றனர். இராணுவம் மிகவும் சக்தி வாய்ந்ததாக உருவெடுக்கின்றது. அவர்கள் மிகவும் செல்வாக்குப் பெற்றவர்களாக உருவாகின்றனர். அவர்கள் மக்கள் தமது சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்யும் போது, அரசியல்வாதிகள் ஏனைய மக்களுக்காக தங்கள் வாழ்வைத் தியாகம் செய்வதிலிருந்து தாங்கள் அனுகூலம் பெறுகின்றனர் என்று சேகர் குப்தா குறிப்பிட்டபோது ஜனாதிபதி ஆம் என்று பதிலளித்தார்.

யுத்தம் முடிவடைந்த போது இதனை கீழே கொண்டுவருவதற்கான சவால் ஜனநாயக நாடுகளிடம் காணப்படுகின்றன. இது தொடர்பான திட்டம் ஏதாவது உண்டா என்று ஜனாதிபதியிடம் கேட்கப்பட்டபோது, இல்லை. இந்த நாட்டு மக்கள் கல்வி கற்றவர்கள். என்ன நடைபெறுகிறது என்பது அவர்களுக்குத் தெரியும் என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

ஜெனரல்கள் வல்லமை பெற்றவர்களாக உருவாகிவருவது குறித்து நீங்கள் கவலைப்படுகிறீர்களா என்று கேட்கப்பட்டபோது, இல்லை. நான் கவலைப்படவில்லை. நோக்கத்தில் அவர்கள் மிகவும் விசுவாசமானர்கள் என்பது எனக்குத் தெரியும். அவர்களுக்கு ஏதாவது அரசியல் அபிலாசைகள் இருக்குமென்று நான் நினைக்கவில்லை என்று ஜனாதிபதி கூறியுள்ளார்.

நூற்றுப் பத்துக் கோடி மக்களைக் கொண்ட நாடு இந்தியா. அதன் ஆயுதப் படைகளின் தொகை 13 இலட்சமாகும். 2 கோடி மக்களைக் கொண்ட உங்கள் நாட்டில் 2 இலட்சம் இராணுவத்தினர் உள்ளனர் என்று கேட்கப்பட்டபோது, இத்தொகையை நாங்கள் அதிகரிக்க வேண்டியிருந்தது என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

ஆள் வீத அடிப்படையில் எமது இராணுவத்தை விட உங்கள் இராணுவம் நூறு மடங்கு அதிகமாக உள்ளதே இப்போது உங்களுக்கு இது தேவைப்படாதே என்று சேகர் குப்தா கேட்டபோது அவ்வாறு கூறவேண்டாம். நிர்மாணப் பணிகளுக்கு அவர்களை நாம் பயன்படுத்த முடியும் என்றும் அவர்களை ஏனைய அபிவிருத்தி வேலைகளில் ஈடுபடுத்த விரும்புகிறோம் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

காலப்போக்கில் அவர்களின் எண்ணிக்கையை குறைப்பீர்களா என்று கேட்கப்பட்டபோது, இப்போது அதற்குரிய திட்டங்கள் இல்லையென ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

200,000 இராணுவத்திற்கு சமாதானமான இலங்கை மிகவும் சிறியதொன்றாகும். பாதுகாப்பதற்கான எல்லைகள் எதுவும் இல்லை. வெளிமட்டப் பகைவர்களும் இல்லை என்று சேகர் குப்தா கூறியபோது, நாம் எமது சொந்தப் பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டியுள்ளது. சொந்தப் பாதுகாப்பிற்காக அவர்களை வைத்துள்ளோம். இலங்கைக்கு 2 இலட்சம் படையினர் அதிகமான தொகையல்ல. இத்தொகையே நாம் வைத்திருப்போம். மேலதிகமாகச் சேர்க்கமாட்டோம். அவர்களை ஐ.நா. சமாதானப் படைக்கு அனுப்பமுடியும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

யுத்த வேளையில் இந்தியாவை விட வேறு ஏதாவது அழுத்தங்கள் ஏற்பட்டதா. மில்லிபான்ட் இங்கு வந்த போதும் நோர்வே காரர்களுடனும் மகிழ்ச்சியற்றதான சில விடயங்களை நாம் பார்த்தோம் என்று கேட்கப்பட்டபோது, துரதிர்ஷ்டவசமாக அவர்களில் சிலரின் மனப்போக்கு எங்களை அவர்களின் காலனியாகக் கருதியதாகும். இலங்கை எவரதும் காலனி அல்ல. அவருடைய மனப்போக்கிற்கு எங்களால் எதனைச் செய்ய முடியும் என்று பதிலளித்திருக்கிறார்.

சீனா, பாகிஸ்தானுடன் உங்கள் உறவுகள் தொடர்பாக இந்தியா தரப்பிலிருந்து கவலைகள் காணப்படுகிறதே என்று கேட்கப்பட்டபோது இலங்கையைப் பற்றி இந்தியா எந்தக் கவலையும் கொள்ளத்தேவையில்லை. நாங்கள் சிறந்த புரிந்துணர்வுடன் இருக்கின்றோம். இந்தியா எம்மீது அதிகளவு பரந்த மனதைக் கொண்டிருக்கிறது. நாங்கள் உறவு ரீதியான நண்பர்கள். ஆரம்பத்திலிருந்தே அதாவது முதல் நாளில் இருந்தே இந்தியா எமது அயல் நாடு. இராணுவ ரீதியில் சீனாவிடம் இருந்து நாங்கள் ஆயுதங்களைக் கொள்வனவு செய்தோம். இஸ்ரேல், பாகிஸ்தான், ரஷ்யா, உக்ரைனிடமிருந்தும் பெற்றுக்கொண்டிருக்கிறோம். இதேவேளை, இந்தியாவிற்கு தாம் விஜயம் மேற்கொள்ளப்போவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

ராஜீவ் காந்தி ஜெயவர்தன ஒப்பந்தத்தில் ஒருபுறம் இந்திய சமாதானப் படை மறுபுறம் துன்பியல் என்பன இருக்கையில் 13 ஆவது திருத்தமும் அதிகாரப் பகிர்வுப் பொதியும் தமிழர்களுக்கு வழங்கப்பட்டது. அதற்கு இப்போது என்ன நடக்கும். அதனை முன்னோக்கிக் கொண்டு செல்ல விரும்புகிறீர்களா அதற்கு அப்பால் கொண்டு செல்ல விரும்புகிறீர்களா என்று சேகர் குப்தா கேள்வி எழுப்பிய போது, 13 ஆவது திருத்தத்திலும் கூடுதலானது என்று ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார்.

இப்போது யுத்தம் முடிந்து விட்டது இலங்கைத் தமிழர்களுக்கான உங்களது செய்தி என்ன என்று கேட்கப்பட்ட போது, யுத்தம் முடிவடைந்து விட்டது நாம் ஒன்று சேர்ந்து இந்த நாட்டில் இருக்க வேண்டும் சம பிரஜைகளாக இருப்பார்கள் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால், சிங்கள அரசியலில் இப்போதும் சக்திகள் உள்ளனவே என்று கேட்கப்பட்ட போது, தமிழ் அரசியலிலும் அந்த சக்திகள் உண்டு என்று தெரிவித்திருக்கிறார். ஆனால், சிங்களவர்கள் அரசியல் ரீதியாக மேலாதிக்கம் உடையவர்களாக இருக்கிறார்களே என்று கேட்கப்பட்ட போது, இல்லை என்றார்.

 நன்றி: தினக்குரல்

150 நூல்கள் எழுதியுள்ள எழுத்தாளர் புன்னியாமீன்: அன்புமணி இரா.நாகலிங்கம்

puniyameen-photortf.jpgமத்திய இலங்கையின் தலைநகர் கண்டியைச் சேர்ந்த பீர்மொஹம்மட் புன்னியாமீன் அவர்கள் மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக எழுத்துத்துறையில் ஈடுபட்டு வரும் ஒரு எழுத்தாளரும், பன்னூலாசிரியரும், வெளியீட்டாளரும்,  ஊடகவியலாளருமாவார். இவர் ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டியங்கும் முன்னணி இணையத்தளமொன்றின் செய்தியாசிரியருமாவார். இலக்கியத்துறையில் பல்வேறு சாதனைகளைப் புரிந்தாலும்கூட, இவரின் தனிப்பட்ட சாதனைகளும்,  இவர் பற்றிய விபரங்களும் வெளியுலகிற்கு அதிகமாகத் தெரிய வரவில்லை. அவற்றை வெளிப்படுத்திக் கொள்ள இவர் அதிகமாக விளைவதுமில்லை. “ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறைக்கு என்னால் ஆற்றப்பட்டுள்ளது ஒரு சிறு துளி மாத்திரம் தான். நான்  இன்னும் இலக்கியத்துக்குச் செய்ய வேண்டிய எத்தனையோ விடயங்கள் உண்டு” என எச்சந்தர்ப்பத்திலும் அடக்கமாகக் கூறிவரும் இவர், பழகுவதற்கு இனியவர்.   

1960ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 11ஆம் திகதி பீர்மொஹம்மட், சைதா உம்மா தம்பதியினரின் புதல்வராகப் பிறந்த புன்னியாமீன் க/ஜாமியுல் அஸ்ஹர் மத்திய கல்லூரி,  க/ மடவளை மதீனா தேசிய கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவராவார். பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணிப் பட்டதாரியான இவர்,  ஊடகவியல் துறையில் டிப்ளோமா பட்டத்தினையும் பெற்றுள்ளார்.

தொழில் ரீதியாக 1983ஆம் ஆண்டில் ஸ்ரீலங்கா ஆசிரியர் சேவையில் இணைந்த புன்னியாமீன்,  பின்பு கல்லூரி அதிபராகவும், மத்திய மாகாண சபையின் கல்வி, கலாசார அமைச்சின் இணைப்பதிகாரியாகவும்,  மத்திய மாகாண கலாசார அமைச்சின் உதவிப் பணிப்பாளராகவும் சேவையாற்றி 2004ஆம் ஆண்டில் சுயவிருப்பின் பேரில் ஓய்வுபெற்றார். தற்போது வரையறுக்கப்பட்ட “சிந்தனைவட்டம்” தனியார் கம்பனியின் முகாமைத்துவப் பணிப்பாளராகக் கடமையாற்றிக் கொண்டிருக்கின்றார். அத்துடன்,  லண்டனிலிருந்து வெளிவரும் ‘லண்டன் குரல்’,  ‘உதயன்’ உள்ளிட்ட பல புலம்பெயர் பத்திரிகைகளின் செய்தியாளராகவும் பணிபுரிந்து கொண்டிருக்கின்றார். அத்துடன், இந்தியாவிலுள்ள முன்னணி இணையத்தளங்களில் ஒன்றான http://thatstamil.oneindia.in/ இல் சர்வதேச நினைவு தினங்கள் பற்றி தொடர்ச்சியாக எழுதி வருகின்றார். இவரின் இந்த ஆக்கங்கள் சர்வதேச ரீதியில் பல இணையத்தளங்களில் மறுபிரசுரம் செய்யப்பட்டு வருகின்றன. எழுத்துத் துறையிலும், ஊடகத்துறையிலும் ஏற்பட்டு வரும் நவீனமாற்றங்களுக்கேற்ப இவர் இலத்திரனியல் ஊடகங்களுடன் நெருக்கமான தொடர்புகளை விரிவுபடுத்திக் கொண்டிருப்பது குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஓர் அம்சமாகும். 

மாணவப் பராயத்திலிருந்தே வாசிப்புத்துறையில் தீவிர ஆர்வம் காட்டி வந்த இவரின் சுய ஆக்கமான முதல் உருவகக் கதை ‘அரியணை ஏறிய அரசமரம்’ எனும் தலைப்பில் 1978 ஜுலை 02ஆம் திகதி தினகரன் வாரமஞ்சரியில் பிரசுரமானது. அதிலிருந்து இதுவரை 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், 5000க்கும் மேற்பட்ட சமூக, இலக்கிய, அரசியல்,  திறனாய்வு,  கல்விசார் கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இத்தகைய ஆக்கங்கள் இந்தியாவில் கலைமகள், தீபம்,  தாமரை உட்பட பல புலம்பெயர் இலக்கிய சஞ்சிகைகளிலும்,  ஈழத்து தேசிய பத்திரிகைகள், சஞ்சிகைகளிலும் பிரசுரமாகியுள்ளன.

இவரின் இலக்கிய சேவையைக் கருத்திற்கொண்டு கிழக்கிலங்கையிலிருந்து வெளிவந்த ‘தடாகம்’ எனும் இலக்கியச் சஞ்சிகை 1999 நவம்பர் – டிசம்பர் இதழில் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்தது. அதேநேரம், இலங்கையிலிருந்து நான்கு தசாப்த காலங்களுக்கும் மேலாக வெளிவரும் தரமான இலக்கிய சஞ்சிகையான ‘மல்லிகை’ 2005 மார்ச் இதழிலும்,  மற்றொரு தரமான இலக்கிய சஞ்சிகையான ‘ஞானம்’ தனது 102வது (2008 நவம்பர்) இதழிலும் இவரின் புகைப்படத்தை முகப்பட்டையில் பிரசுரித்து கௌரவித்துள்ளன. மேலும்,  கிழக்கிலங்கையிலிருந்து வெளிவரும்  ‘சமாதானம்’ இலக்கிய சஞ்சிகையின் 2007 அக்டோபர் இதழும்,  இந்தியாவிலிருந்து வெளிவரும் ‘ஏழைதாசன்’ (இதழ் எண்:159) 2008 மே இதழும் இவரின் புகைப்படத்தை அட்டைப்படத்தில் தாங்கிவெளிவந்துள்ளன. 

இவரது முதலாவது சிறுகதைத் தொகுதி 1979.11.11ஆந் திகதி “தேவைகள்” எனும் தலைப்பில் வெளிவந்தது. முதல் புத்தகம் வெளிவந்து சரியாக முப்பது ஆண்டுகள் நிறைவுறும்போது 2008.11.11இல் இவரது 150வது புத்தகமான “இவர்கள் நம்மவர்கள் – தொகுதி 04” எனும் புத்தகம் வெளிவந்துள்ளது. இவரது வெளியீட்டுப் பணியகமான சிந்தனைவட்டத்தின் மூலம் இதுவரை 300 தமிழ்மொழி மூலமான நூல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இலங்கையில் யுத்த சூழ்நிலைகள் காணப்படும் இந்நேரத்தில் ஒரு தனிப்பட்ட எழுத்தாளன் சுயமாக 150 தமிழ்மொழி மூலமான புத்தகங்களை எழுதி வெளியிடுவது என்பது ஒரு சாதனையே. இந்த அடிப்படையில் கலாபூஷணம் புன்னியாமீன் அவர்களுடன் மேற்கொள்ளப்பட்ட நேர்காணல் கீழே இடம்பெறுகின்றது.

கேள்வி:- எழுத்துத்துறையில் நீங்கள் எவ்வாறு அறிமுகமானீர்கள் என்பதைப் பற்றி சுருக்கமாகக் கூற முடியுமா?

பதில்:- நான் பாடசாலையில் கற்கும் காலங்களில் (1974/1975) இளங்கதிர், இளங்காற்று, இளந்தென்றல் ஆகிய கையெழுத்துச் சஞ்சிகைகளின் ஆசிரியராக இருந்து செயற்பட்டுள்ளேன். அதனால் ஏற்பட்ட ஆர்வம் தொடர்ந்தும் எழுத வேண்டும் என்ற உணர்வினை என்னுள் ஏற்படுத்தியது. கையெழுத்து சஞ்சிகைகளில் எழுதி வந்த எனது எழுத்துக்கள் 1976ஆம் ஆண்டு தேசிய பத்திரிகையான தினகரனில் பிரசுரமாகின. அதையடுத்து ஏனைய தேசிய பத்திரிகைகள்,  சஞ்சிகைகள், வானொலி என்ற அடிப்படையில் என் எழுத்தை பரவலாக்கிக் கொண்டேன்.

கேள்வி:- தங்கள் முதலாவது சிறுகதைத் தொகுதி வெளிவந்ததைப் பற்றி……..

பதில்:- எனது முதலாவது சிறுகதைத் தொகுதி 1979.11.11ஆம் திகதி வெளிவந்தது. இத்தொகுதியின் தலைப்பு “தேவைகள்”. இத்தொகுதியில் 14 சிறுகதைகள் இடம்பெற்றன. அக்கதைகளுள் அதிகமான கதைகள் தினகரனிலும்,  தினகரன் வாரமஞ்சரியிலும் பிரசுரமானவையாகும். இதனை எனது சொந்தக் கிராமத்துக்கு அண்மையில் கட்டுகஸ்தோட்டை எனும் நகரை மையமாகக் கொண்டு இயங்கிய “இஸ்லாமிய சேமநல சங்கம்” எனும் சமூக சேவையமைப்பு வெளியிட்டது. எனது பத்தொன்பதாவது பிறந்த தினத்தன்று இப்புத்தகம் வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது.

கேள்வி:- படைப்பிலக்கிய முயற்சிகளில் தங்களின் பங்களிப்புகள் பற்றி குறிப்பிடுங்கள்.

பதில்:- ஆரம்ப காலங்களில் சிறுகதை,  கவிதை,  நாடகங்கள் என படைப்பிலக்கிய முயற்சிகளிலே நான் அதிகளவில் ஈடுபட்டு வந்தேன். இதுவரை 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளை நான் எழுதியுள்ளேன். இவை இலங்கையில் மாத்திரமல்லாமல் தமிழகத்தில் கூட,  கலைமகள், தாமரை,  தீபம், தீ போன்ற இலக்கிய சஞ்சிகைகளில் பிரசுரமாகியுள்ளன. இதுவரை ஏழு சிறுகதைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன. அவை “தேவைகள்”,  “நிழலின் அருமை”,  “கரு”,  “நெருடல்கள்”, “அந்த நிலை”,  “யாரோ எவரோ எம்மை ஆள”,  “இனி இதற்குப் பிறகு”. ஆரம்ப காலங்களில் காதலைப் பற்றியும்,  மாணவப்பராயத்து உணர்வுகள் பற்றியும் எழுதிவந்த நான் பிற்காலத்தில் நான் வாழும் சமூகத்தைப் பற்றியும்,  ஒடுக்கப்பட்ட பாட்டாளி வர்க்கம் பற்றியும், இலங்கையில் இன உறவுகள் பற்றியும் எழுத ஆரம்பித்தேன்.

ஆரம்ப காலத்தில் என் படைப்பிலக்கியங்களில் கற்பனை வாதத்துக்கு முக்கியத்துவம் கொடுத்த போதிலும்கூட,  பிற்காலத்தில் சமூக யதார்த்தத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து சமூகமயமாக்கப்பட்ட எழுத்துகளையே முன்வைத்தேன். இதனால் பல்வேறுபட்ட கெடுபிடிகளுக்கும் ஆளானேன். ஒரு எழுத்தாளன் என்ற வகையில் சமூக யதார்த்தங்களை முன்வைக்கச் சென்று பலவிதமான தாக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்ட பல அனுபவங்கள் எனக்குண்டு.

கேள்வி:- சிறுகதைத் துறையைப் போல நாவல் துறையில் நீங்கள் அதிக ஈடுபாடு காட்டாமைக்கான காரணம் என்ன?

பதில்:- நியாயமான கேள்வி. 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளை நான் எழுதியபோதிலும்கூட,  இதுவரை ஒரேயொரு நாவலை மாத்திரமே எழுதி வெளியிட்டுள்ளேன். 1983ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்த நாவலின் பெயர் “அடிவானத்து ஒளிர்வுகள்” என்பதாகும். நாவலை எழுதிய பின்பு அதனை பிரசுரத்துக்காக வேண்டி பல பத்திரிகைகளுக்கு அனுப்பி வைத்தேன். ஆனால்,  அந்த நாவல் நிராகரிக்கப்பட்டது. இலங்கையைப் பொறுத்தமட்டில் 1980களில் குறிப்பிட்ட சில எழுத்தாளர்களின் நாவல்களை மாத்திரமே இலங்கையின் தேசிய பத்திரிகைகளில் பிரசுரித்து வந்தனர். நாவல் துறையில் அறிமுக நாவலாகக் காணப்பட்ட என்னுடைய நாவலை வாசித்துக்கூடப் பார்க்காமல் நிராகரிக்கப்பட்டதை யடுத்து உண்மையிலேயே பாரிய மனத் தாங்கலுக்கு உட்பட்டேன். பின்பு 1987ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் “அல்-பாஸி பப்ளிகேஷன்” அந்த நாவலை நூலுருப்படுத்தி வெளியிட்டது. இதற்கு பக்கதுணையாக கல்ஹின்னை தமிழ்மன்ற ஸ்தாபகர் எஸ்.எம். ஹனிபா அவர்கள் இருந்தார்கள்.

“அடிவானத்து ஒளிர்வுகள்” நாவல் மூலமாக இலங்கையில் முஸ்லிம் சமூகத்தின் அரசியல் பிரச்சினைகளை நான் எடுத்துக் காட்டினேன். இந்த நாவல் எழுதும் காலகட்டத்தில் இலங்கையில் முஸ்லிம்களுக்கென அரசியல் கட்சியொன்றிருக்கவில்லை. மறுபுறமாக இந்த நாவல் எழுதப்பட்ட காலகட்டங்களில் இலங்கையில் வடபகுதியில் தமிழ் மக்கள் தமது விடுதலைப் போராட்டத்தை ஆயுத ரீதியாக ஆரம்பித்த கால கட்டமாகவும் இருந்தது. எனவே,  இந்த நாவலினூடாக இலங்கையின் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வொன்றைப்பெற அதிகாரப் பகிர்வு முறை முன்வைக்கப்பட வேண்டுமென்பதையும்,  முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் முஸ்லிம்களின் உரிமைகளுக்காக வேண்டி தனியொரு அரசியல் கட்சி உருவாக்கப்பட வேண்டுமென்பதையும் வலியுறுத்தி எழுதினேன். நாவல் வெளிவந்த பிறகு இலக்கிய உலகிலும், அரசியல் உலகிலும் என் நாவல் அதிகமாகப் பேசப்பட்டது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கான ஒரு தனிக்கட்சியாக 1987ஆம் ஆண்டு உருவாக்கம் பெற்றது. அதன் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களும், அப்போதைய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சுந்திரமூர்த்தி அபூபக்கர் அவர்களும் என் நாவலைப் படித்துவிட்டு என் வீட்டுக்கு வந்து பாராட்டினர். இந்நாவலில் இலங்கையின் இனப்பிரச்சினைக்கு மாகாண அலகுகள் பொருத்தமானது என்பதை நான் 1983ஆம் ஆண்டில் சுட்டிக் காட்டியிருந்தேன். இந்திய – இலங்கை ஒப்பந்தப்படி இலங்கையின் அரசியலமைப்பின் 13ஆம் திருத்தப் பிரகாரம் இலங்கையின் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக மாகாணசபை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விரு நிகழ்வுகளையும் வைத்து அரசியல் தளத்தில் கூட என் நாவல் அதிகமாகப் பேசப்பட்டது. இந்நாவலின் இரண்டாவது பதிப்பு சிந்தனைவட்டத்தின் வெளியீடாக வெளிவந்து குறிப்பிட்ட சில மாதங்களுக்குள் விற்பனையாகி முடிந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்த நாவல் பிற்காலத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சில பேராசிரியர்களால் ஆய்வுசெய்யப்பட்டதுடன், இலங்கைப் பல்கலைக் கழகங்களிலும் ஆய்வுக்குட்படுத்தப்பட்டது.

இருப்பினும், எனது தனிப்பட்ட வாழ்வில் தொழில் நிமித்தமாக எனக்கு ஏற்பட்ட நேரநெருக்கடிகளும்,  தனிப்பட்ட சில பிரச்சினைகளும் நாவல் துறையில் ஈடுபடக்கூடிய அவகாசத்தை குறைத்தது. அன்று முஸ்லிம்களுக்குத் தனிக்கட்சியொன்று அவசியம் என்று இலக்கிய வடிவமாக நான் முன்வைத்த கருத்தையிட்டு இன்று மனவேதனைப் படுகின்றேன். இன்று இலங்கையில் முஸ்லிம்களுக்கென 12 அரசியல் கட்சிகள் உள்ளன. இதுவே ஒரு சாபக்கேடாகவும் அமைந்து விட்டது. குறிப்பாக ஒரு அரசியல் தலைமைத்துவமில்லாத நிலைக்கு இலங்கை முஸ்லிம்களை மாற்றிவிட்டது. எனவே,  எதிர்காலத்தில் “அடிவானத்து ஒளிர்வுகள் பாகம் 02” ஐ எழுதும் எண்ணம் உண்டு. அதில் அன்று அரசியல் ரீதியாக என்னால் கூறப்பட்ட எதிர்வுகூறல்களை இன்றைய சூழ்நிலைகளுடன் தொடர்புபடுத்தி அக்கதையைத் தொடுப்பது என் எதிர்பார்க்கையாகும்.

கேள்வி:- இதுவரை 150 நூல்களை எழுதி வெளியிட்டுள்ளீர்கள். இவற்றுள் அதிகமான நூல்கள் பாடநூல்கள் எனப்படுகின்றனவே.

பதில்:- உண்மைதான். நான் எழுதிய நூல்களுள் 72 நூல்கள் போக மீதமானவை பாடவழிகாட்டி நூல்கள் என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன். இதற்கான மூல காரணத்தையும் குறிப்பிட வேண்டும். இலங்கையைப் பொறுத்தமட்டில் இலக்கிய நூல்களை வெளியிட்டு சந்தைப்படுத்துவது மிகவும் கடினமானவொரு காரியம். இந்தியாவில் வெளியிடப்படக்கூடிய நூல்களில் ஒரு தொகுதியை நூலகங்களோ,  அரசோ கொள்வனவு செய்வதைப் போல இலங்கையில் எத்தகைய ஏற்பாடுகளுமில்லை. இதனால் இலங்கையைப் பொறுத்தமட்டில் எழுத்தாளனே வெளியீட்டாளனாக இருக்க வேண்டிய துர்ப்பாக்கியமான  நிலை காணப்படுகின்றது.

ஆரம்ப காலங்களில் இலக்கிய நூல்களை மாத்திரம் வெளியிட்டு நான் பல இலட்சங்கள் நஷ்டமடைந்துள்ளேன். இந்நிலையில் நான் ஒரு கல்லூரி ஆசிரியராகவும் அதேபோல தனியார் கல்லூரிகளில் முன்னணி அரசறிவியல் போதகராகவும் இருந்ததினால் நாடளாவிய ரீதியில் பல்கலைக்கழகங்கள்,  பாடசாலைகளுடன் எனக்கு நேரடியான தொடர்புகள் ஏற்பட்டன. இதனைப் பயன்படுத்தியே ஆரம்ப கல்வி, இடைநிலைக் கல்வி, உயர்தரக் கல்வி,  பல்கலைக்கழகக் கல்வி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு பாடவழிகாட்டி நூல்களை குறிப்பாக அரசறிவியல், வரலாறு, சமூகக்கல்வி போன்ற பாடங்களில் எழுதி வெளியிட்டேன். பல்கலைக்கழக பீ.ஏ. பட்டப்படிப்பு மாணவர்களுக்காக வேண்டி அரசறிவியல் நூல்களையும் எழுதி வெளியிட்டேன். மேலும், என்னுடைய மனைவி மஸீதா புன்னியாமீனுடன் இணைந்து தரம் 05 புலமைப்பரிசில் பாடத்திட்டத்திற்கமைய பல நூல்களை எழுதி வெளியிட்டுள்ளேன். என்னால் எழுதப்பட்ட பாடநூல்களுக்கு அதிகக் கேள்வி இருந்தது. இந்நூல்களால் கிடைத்த இலாபத்தை வைத்து இலக்கிய நூல்களுக்கு முதலீடு செய்தேன். எனவே,  பாடநூல்கள் மூலமாக ஒரு வருமானம் கிடைக்காதவிடத்து என்னால் இலக்கிய நூல்களை இவ்வளவு தூரத்திற்கு எழுதி வெளியிட முடியாது போயிருக்கும்.

கேள்வி:- 21ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து இலங்கை எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களைத் தொகுத்து நூலுருப்படுத்துவதிலும் அவற்றை ஆவணப்படுத்துவதிலும் கூடிய கரிசனை செலுத்தி வருகின்றீர்கள். இதைப் பற்றி சற்று கூற முடியுமா?

பதில்:- 19ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியிலிருந்து இலங்கையில் தமிழ்மொழி வளர்ச்சிக்காக வேண்டியும்,  தமிழ்மொழியினூடாக சமய,  கலாசார,  தேசிய உணர்வுகளை ஏற்படுத்தக்கூடிய வகையிலும் ஆயிரக்கணக்கான எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்கள் தமது பங்களிப்புக்களை நல்கி வந்துள்ளனர். ஆனால்,  இன்றுள்ள தலைமுறையினருக்கும், நாளைய தலைமுறையினருக்கும் அவர்கள் யார்? என்ன செய்தார்கள்? அவர்களின் பணிகள் எத்தகையவை என்ற விபரங்கள் தெரியாமல் இருக்கின்றது. பல்கலைக்கழக மற்றும் உயர்மட்ட ஆய்வுகளில் கூட,  இத்தகைய தகவல்களைப் பெற முடியாதிருப்பது வேதனைக்குரிய ஒரு விடயமாகும். இதற்கான காரணம்  இவர்கள் பற்றிய தரவுகள்,  விபரங்கள், குறிப்புகள் இன்மையே.

இது பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும், அவை பதிவு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட வேண்டுமெனவும் நீண்ட காலமாக பலரும் கூறிவந்தாலும்கூட,  தொடர்ச்சியாக அம்முயற்சிகளில் யாரும் ஈடுபடவில்லை. முயற்சிகளை மேற்கொண்டவர்களும் குறிப்பிட்ட சிலரின் விபரங்களைத் திரட்டி ஆவணப்படுத்தியதுடன்,  அவற்றைத் தொடரவில்லை. எனவேதான்,  இலங்கையிலிருந்து வெளிவந்த நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் காலஞ்சென்ற எம்.பி.எம். அஸ்ஹர் அவர்களின் பத்திரிகை அனுசரணையுடன் இம்முயற்சியை நான் 2002ஆம் ஆண்டிலிருந்து ஆரம்பித்தேன். இன்றுவரை இலங்கையைச் சேர்ந்த 325 எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களைத் திரட்டி 14 தொகுதி நூல்களை வெளியிட முடிந்தது. அத்துடன்,  http://noolaham.org/wiki   இணையத்தளத்திலும் இவற்றை பதிவாக்க முடிந்துள்ளது. மேலும்,  என் சக்திக்கு எட்டியவாறு தேசிய ரீதியிலும்,  சர்வதேச ரீதியிலும் இவர்கள் பற்றிய குறிப்புகளை ஆவணப்படுத்தி வருகின்றேன். இன்னும் இம்முயற்சி தொடர்கின்றது. தற்போது இலங்கையிலிருந்து வெளிவரும் முன்னணி பத்திரிகைகளில் ஒன்றான ‘ஞாயிறு தினக்குர’லில் “இவர்கள் நம்மவர்கள்” எனும் தலைப்பில் மேற்கொண்டு வருகின்றேன்.

கேள்வி:- இம்முயற்சிக்கென இலங்கையிலுள்ள முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,  இந்து சமய கலாசார திணைக்களம் அல்லது வேறு யாதாவது நிறுவனங்கள் மூலமாக உதவிகள் கிடைக்கின்றனவா?

பதில்:- இல்லை. முழுமையாக இது என்னுடைய தனி முயற்சியே. உண்மையில் இத்தகைய முயற்சிகளை இலங்கையைப் பொறுத்தமட்டில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,  இந்து சமய கலாசார திணைக்களம் போன்றன மேற்கொண்டிருக்க வேண்டும். இதைப் பற்றி இவ்விடத்தில் நான் விமர்சிக்கத் தயாராக இல்லை. இந்த முயற்சியை மேற்கொள்ளும்போது எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களைத் திரட்டுவதில் பல செலவினங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. அதுமட்டுமல்லாமல் விபரங்களைத் திரட்டிய பின் அவற்றை நூலுருப்படுத்துவதிலும் என்னுடைய சொந்த முதலீட்டையே நான் மேற்கொள்கின்றேன். இது போன்ற ஆவணப் பதிவுகளை இலங்கையில் சந்தைப்படுத்தி வருமானத்தைப் பெறுவதென்பது இயலாத காரியம். மேலும்,  இந்த விபரங்களை ஆவணப்படுத்துவதிலும் என் சொந்த பணத்தையே நான் செலவிடுகின்றேன்.

கூட்டுமொத்தமாக இதுவரை 14 தொகுதிகள் வெளிவந்துள்ளன. இந்த 14 தொகுதிகளிலும் பல இலட்சம் ரூபாய்களை நான் இழந்துள்ளேன். இவ்விடத்தில் ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டும். இலங்கையைப் பொறுத்தமட்டில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,  இந்து சமய கலாசார திணைக்களம் போன்றன இலங்கை எழுத்தாளர்களின் நூல்களில் சுமார் 5000 ரூபாய் பெறுமதியான நூல்களை கொள்வனவு செய்து உதவுகின்றன. என்னுடைய இந்த ஆவணத் திரட்டு நூலை கொள்வனவு செய்து உதவும்படி முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்,  இந்து சமய கலாசார திணைக்களம் ஆகியவற்றிற்கு பலமுறை விண்ணப்பம் செய்த போதிலும்கூட,  அவர்களிடமிருந்து ஒரு பதில் கூட கிடைக்காமை இவ்விடத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டியதே. (முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இதுவரை வெளிவந்த 14 தொகுதிகளில் மூன்று தொகுதிகளை மாத்திரம் சில ஆண்டுகளுக்கு முன் கொள்வனவு செய்தது.)

இலங்கையில் அரச திணைக்களங்களுடனான இத்தகைய உதவிகளை கோரும்போது அரசியல் செல்வாக்குகள்,  அரசியல்வாதிகளின் செல்வாக்குகள்,  பிரதேசவாத செல்வாக்குகள் முதன்மைப் படுத்தப்படுவதினால் சேவையின் பெறுமானத்தை உணர்ந்து செயல்படாத அவர்களிடம் மண்டியிட நான் விரும்புவதில்லை. எவ்வாறாயினும் என் சக்திக்கெட்டியவாறு நான் மேற்கொண்டு செல்லும் முயற்சி எதிர்கால சந்ததியினருக்கு ஒரு பயன்தரும் முயற்சி என்ற நம்பிக்கையில் தொடர்ந்து கொண்டிருக்கின்றேன். நிச்சயமாக இதன் பெறுமானம் என்றோ ஒரு காலத்தில் உணரப்படும்.

கேள்வி:- இலங்கை எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரத்திரட்டுக்கள் தகவல்களைப் பெறும் முறை பற்றியும்,  வகைப்படுத்தல்கள்  மேற்கொள்ளப்படும் முறை பற்றியும் சற்று கூறுங்கள்.

பதில்:- இலங்கை எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரத்திரட்டுக்கான தகவல்களை நேரடியாகவும்,  ஆதாரபூர்வமாகவும் சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள், கலைஞர்களிடமிருந்தும் மரணித்தவர்களாயின் அவர்களின் உறவினர்களிடமிருந்தும் பெறுகின்றேன். இதற்காக வேண்டி தொடர்புகளுக்காக இலங்கையில் ஞாயிறுதினக்குரல் ஆசிரியர் திருவாளர் இராஜபாரதி அவர்கள் பூரண ஒத்துழைப்பு வழங்கி வருகின்றார். புலம்பெயர் நாடுகளில் நூலகவியலாளர் என். செல்வராஜா,  த. ஜெயபாலன் போன்றோரும்; ஜெர்மனியில் திருவாளர்கள் அருந்தவராசா,  சிவராசா,  ஜீவகன்,  புவனேந்திரன் போன்றோரும் ஒத்துழைப்பு நல்கி வருகின்றனர். புலம்பெயர் ஊடகங்களான உதயன்,  லண்டன் குரல், காலைக்கதிர்,  அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஐ.பி.சி.,  தீபம் தொலைக்காட்சி,  ஜெர்மனியில் மண்,  அவுஸ்திரேலியாவில் உதயம்,  இலங்கையில் ஞானம் போன்றன ஊடக அனுசரணையை வழங்கி வருகின்றன. இதன் மூலமாகவே எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களுடனான தொடர்பினை நான் ஏற்படுத்திக் கொண்டு விபரங்களைப் பெறுகின்றேன். மேலும்,  சில தேடல்களின் மூலமாக பழைய எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களைப் பெறுகின்றேன்.

இந்த இயந்திர யுகத்தில் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும் மத்தியில் குறிப்பாக நேரம் போதாமையினால் தேடல் முயற்சிகளினூடாக விபரங்களைத் திரட்டுவதில் பின்னடைவு நிலைதான் காணப்படுகின்றது. விபரத்திரட்டில் எவ்வித வகைப்படுத்தலையும் நான் மேற்கொள்ளவில்லை.

எனக்குக் கிடைக்கும் தகவல்களின் நம்பகத்தன்மைக்கு முன்னுரிமைக் கொடுத்து எழுதுகின்றேன். குறிப்பாக இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களையே நான் திரட்டுகின்றேன். அவர்கள் புலம் பெயர்ந்திருந்தாலும் அவர்கள் இலங்கை மண்ணில் பிறந்தவர்களாகவே இருக்க வேண்டும். இதுவே எனது அடிப்படை.

கேள்வி:- இந்த எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரத்திரட்டின் மூலம் உங்கள் இலக்கு என்ன?

பதில்:- சற்று சிந்திக்க வேண்டிய கேள்வி. 19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டத்திலிருந்து 21ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டம்வரை இலங்கையில் தமிழ்மொழி மூல வளர்ச்சிக்கு பங்களிப்பு செய்த 20 ஆயிரத்துக்கும்  மேற்பட்ட எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் இனங்காண முடிகின்றது. ஆனால்,  இவர்கள் அனைவரினதும் விபரங்களைத் திரட்ட முடியும் என்பது நிச்சயமாக என் வாழ்நாளில் முடியாததே. ஏனெனில்,  ஒரு தனி மனிதனாக நின்று தான் பல்வேறுபட்ட பிரச்சினைகளின் மத்தியில் இதுவரை 350 பேருடைய விபரங்களை ஆதாரபூர்வமாக திரட்டித் தொகுத்து ஆவணப்படுத்தியுள்ளேன்.

தங்கள் கேள்விக்கு என்னுடைய இலக்கைக் குறிப்பிடுவதாயின்,  தேகாரோக்கிய நிலையில் நான் உயிருடன் உள்ள வரை இயலுமான வரை விபரங்களைத் திரட்டுவதே இம்முயற்சியில் என்னுடைய அடுத்த இலக்கு 500 பேர். பின்பு 1000……. ஆசையும்,  ஆர்வமும்,  முயற்சியும் உண்டு. என் தேகாரோக்கியத்தைப் பொறுத்து இந்த இலக்கையடையலாம். அடையாமலும் விடலாம்.

இருப்பினும் ஒரு ஆசை. சுமார் எட்டாண்டுகளாக மிகவும் சிரமப்பட்டு பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளை சமாளித்துக் கொண்டு பாரிய பொருளாதாரப் பிரச்சினைகளையும் முகம்கொடுத்து என்னால் மேற்கொள்ளப்பட்டு வரும் இம்முயற்சியை நான் இல்லாத காலங்களில் யாராவது தொடர வேண்டும். அது தனிப்பட்டவராகவும் இருக்கலாம். அல்லது ஒரு அரச அன்றேல் சுயேச்சை நிறுவனமாகவும் இருக்கலாம். இதுவரை என்னால் மேற்கொள்ளப்பட்ட சகல ஆய்வுக்கும் ஆதாரங்கள் உள்ளன. அவை தொடர்ச்சியான ஆய்வுக்கு வழிவகுக்கும்.

கேள்வி:- தங்கள் குறிக்கோள்கள் நிறைவேற வாழ்த்துக்கள். சில எழுத்தாளர்களின் விபரங்களை http://thatstamil.oneindia.in/ இணையத்தளத்திலும் எழுதுவதாக அறிகின்றோம். இதை பற்றி கூற முடியுமா?

பதில்:- எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள், கலைஞர்களின் விபரத்திரட்டினை நான் ஞாயிறு தினக்குரலில் முதன்மையாக செய்து வருகின்றேன். தற்போது ஞாயிறு தினக்குரலில் பிரசுரமாகிவரும் இத்தொடரில் ஒரு குறித்த ஒழுங்கின் அடிப்படையில் செய்து வருகின்றேன். குறிப்பாக எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் பிறப்பிடம், வாழ்விடம்,  பிறந்த திகதி,  பெற்றோர்,  கற்ற பாடசாலைகள்,  தொழில், எழுத்து,  ஊடகம்,  கலைத்துறையில் ஈடுபாடு,  சாதனைகள்,  பெற்ற விருதுகள்,  இத்துறையில் தன்னை ஊக்குவித்தவர்கள் போன்ற விபரங்கள் ஒரு ஒழுங்கமைப்பின் கீழ் இடம்பெறுவதை நீங்கள் அவதானித்திருக்கலாம். மேற்குறிப்பிட்ட ஒழுங்கமைப்பிற்கிணங்க தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியாத நிலையில் அல்லது விசேட காரணமொன்றின் நிமித்தம் ஒரு துறையை முதன்மைப்படுத்த வேண்டிய நிலையிலுள்ள எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரங்களை http://thatstamil.oneindia.in/ இணையத்தளத்தில் பிரசுரித்து வருகின்றேன். http://thatstamil.oneindia.in/ இணையத்தளம் இலட்சக்கணக்கான வாசகர்களைக் கொண்ட ஒரு இணையத்தளமாகும். சர்வதேச ரீதியில் இந்த இணையத்தளத்துக்கு வாசகர்கள் உள்ளனர். எனவே,  இந்த இணையத்தளத்தில் எமது படைப்பாளிகளை அறிமுகப்படுத்துவதென்பது சர்வதேச ரீதியிலான ஓர் அறிமுகப்படுத்தலாகவே உள்ளது. இருப்பினும் இத்தகையோரின் அறிமுகம் பிரசுரமானாலும் இவர்கள் நம்மவர்கள் நூற்றொடரிலே இக்குறிப்புகளும் பதிவாக்கப்படும். எதிர்காலத்தில் இலங்கை எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள்,  கலைஞர்களின் விபரத்திரட்டில் இடம்பெற்றுள்ள அனைவரையும் சர்வதேச மட்டத்திலான அறிமுகத்தில் சேர்க்க விரிவான திட்டமொன்றை வகுத்து வருகின்றேன். இது பற்றிய விரிவான தகவல்களை பின்பு அறிவிப்பேன். இவ்விடத்தில் http://thatstamil.oneindia.in/ இணையத் தளஆசிரியர் திருவாளர் A.K Khan அவர்களுக்கும்,  நண்பர் முனைவர் மு. இளங்கோவன் அவர்களுக்கும் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

குறிப்பு:-
இலங்கையைப் பிறப்பிடமாகக் கொண்ட எழுத்தாளர்கள்,  ஊடகவியலாளர்கள், கலைஞர்கள் தங்கள் பற்றிய குறிப்புகளை வழங்க விரும்பினால் உரிய விபரத்திரட்டுப் படிவங்களைப் பெற பின்வரும் முகவரியுடன் தொடர்பு கொள்ளவும்

P.M. PUNIYAMEEN
14, UDATALAWINNA MADIGE,
UDATALAWINNA
SRI LANKA.
தொலை பேசி   : 0094 -812 -493 892 
தொலை நகல்   : 0094 -812 -493 746
மின் அஞ்சல்    :  pmpuniyameen @ yahoo.com

நன்றி: ஞாயிறு தினக்குரல் (இலங்கை) : 24 மே 2009

தலைவர் பிரபாகரன் நலம்; மூத்த உறுப்பினர்கள் பலர் வஞ்சகமாக கொல்லப்பட்டுள்ளனர்”: செ.பத்மநாதன்

Selvarasa_Pathmanathan_LTTEதமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாகத் தெரிவித்திருக்கும் அந்த இயக்கத்தின் அனைத்துலக விவகாரங்களுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன், ஆனால், தூரதிர்ஷ்டவசமாக தமது இயக்கத்தின் பல மூத்த உறுப்பினர்கள் வஞ்சகத்தனமாகக் கொல்லப் பட்டிருக்கின்றனர் எனவும் குறிப்பிட்டிருக்கின்றார்.

“சிறிலங்கா அரசாங்கம் போரில் வெற்றி பெற்றிருப்பதாகப் பிரகடனப்படுத்தலாம். ஆனால் இது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை சிறிலங்கா அரசாங்கம் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களின் நம்பிக்கையை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாகவே இழந்துவிட்டது” எனவும் ‘தமிழ்நெட்’ இணையத்தளத்துக்கு வழங்கிய பேட்டியில் செ.பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார்.

அவரின் பேட்டியின் முக்கிய விபரங்கள் வருமாறு:

இந்தப் போரில் வெற்றி பெற்றிருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருக்கின்றது. விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டுள்ளதாகவும் அறிவித்திருக்கின்றது. இந்தப் போரில் உண்மையிலேயே சிறிலங்கா வெற்றிபெற்றுள்ளதா?

சிறிலங்கா அரசாங்கம் நிரூபிக்க முடியாத ஒரு உரிமை கோரலை வெளியிட்டிருக்கின்றது. எமது தேசியத் தலைவர் உயிருடனும் நலமாகவும் உள்ளார் என்பதை மட்டும் என்னால் நிச்சயமாகக் கூற முடியும். ஆனால், எமது அமைப்பின் பல மூத்த உறுப்பினர்களும் தலைவர்களும் உயிழந்திருக்கின்றனர் அல்லது துரோகத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளனர் என்பது உண்மை. இது மிகவும் தூரதிர்ஷ்டமானது. ஆனால், எமது மக்களுடைய விருப்பங்கள் அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்படும் வரையில் எமது போராட்டம் தொடரும்.

சிறிலங்கா இராணுவம் தமக்கு ஒரு இராணுவ வெற்றி கிடைத்திருப்பதாகப் பிரகடனம் செய்யலாம். ஆனால் அது ஒரு வஞ்சகத்தனமான வெற்றி என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தமிழ் மக்களுடைய நம்பிக்கையை இவர்கள் முற்றாகவே இழந்துவிட்டனர்.

தற்போதைய நிலைமைகளின் அடிப்படையில் பார்க்கும்போது விடுதலைப் புலிகளின் எதிர்காலம் எவ்வாறு அமையும்?

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு இராணுவ வழிமுறைகளில் அல்லாமல் ஒரு அரசியல் தீர்வைக் காண்பதற்கான முயற்சிகளையே முன்னெடுக்க வேண்டும் என்பதை நாம் எமது முன்னய அறிக்கைகள் பலவற்றிலும் தெளிவாகத் தெரிவித்திருந்தோம். எமது மக்களுடைய உயிர்களைப் பாதுகாப்பதற்காகவே இந்த நிலைப்பாட்டை நாம் எடுத்தோம். தமிழ் மக்கள் மீது குண்டுகளை வீசியும், எறிகணைகளால் தாக்குதல் நடத்தியும் அவர்களைப் படுகொலை செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் போரைப் பயன்படுத்துவதை தொடர்ந்தும் அனுமதிக்க நாம் விரும்பவில்லை.

இந்த விவகாரத்தில் தலையிட்டு தாக்குதலைத் தடுத்து நிறுத்துமாறு அனைத்துலக சமூகத்தை நாம் கேட்டுக்கொண்ட போதிலும்,  இதனைக் கருத்திற்கொள்ளாமல் தாக்குதல் நடவடிக்கையை தொடர்வதிலேயே சிறிலங்கா அரசு குறியாக இருந்தது. எமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறு சரணடைய முன்வந்த எமது போராளிகளும் தலைவர்களும் அனைத்துலக நடவடிக்கைகள் அனைத்தையும் மீறும் வகையில் ஈவிரக்கமற்ற முறையில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றார்கள். இந்த விடயத்தில் ஒரு பலமான நிலைப்பாட்டை எடுத்து சிறிலங்கா அரசாங்கத்தை இணங்கச் செய்வதற்கும் அனைத்துலக சமூகம் மறுத்துவிட்டது.

இந்த நிகழ்வுகளையிட்டு நாம் மிகவும் வருந்துகின்றோம். ஆனால், இலங்கையில் உள்ள தமிழர்களின் எதிர்காலமும் தமிழ்த் தேசியப் பிரச்சினையும் தீர்வு எதுவும் இன்றி தொடர்ந்திருக்கப் போகின்றது.

தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கான தீர்வை முன்னெடுப்பதற்கான தமது பிரதிநிதிகளாக விடுதலைப் புலிகள் அமைப்புக்கு தமது ஆணையை மக்கள் வழங்கியிருக்கின்றனர். இவ்வாறு மக்கள் எமக்கு அளித்துள்ள ஆணையின் அடிப்படையில் பொருத்தமான மாற்றுத் திட்டங்களையிட்டுப் பரிசீலனை செய்வதற்கு எமது அமைப்பு தயாராக இருக்கின்றது.

நீங்கள் அரசியல் தீர்வு ஒன்று தொடர்பாகப் பேசுகின்றீர்கள். ஆனால் கொழும்பு வெளிப்படுத்தும் உணர்வுகளும், தமிழ் மக்களுடைய விருப்பங்களைப் புரிந்துகொள்ளாதவாறு நாட்டின் ஏனைய பகுதிகளில் காணப்படும் மனநிலையும் இதற்கு ஏற்றதாக உள்ளதா?

சிங்கள மக்களிடம் இருந்து வெளிப்படும் உணர்வுகளும் அவர்களின் போக்கும் தூரதிர்ஷ்டமானதாகவே இருக்கின்றது. அந்த நாட்டில் தமிழர்கள் சம உரிமை கொண்ட குடிமக்களாக கருதப்பட்டால் அவர்கள் கெளரவத்துடன் நடத்தப்பட வேண்டும். ஆனால், அரசாங்கமும் அதன் இராணுவத்தினரும் பேரினவாதத்தை ஊக்குவிக்கும் வகையிலேயே தமது செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றன. இது, இனங்களுக்கு இடையேயான பிளவுகளை மேலும் அதிகப்படுத்துவதற்கே வழிவகுப்பதாக இருக்கும் என்பதுடன், பகை உணர்வுக்கு முடிவைக் கொண்டுவருவதற்கும் தடையாகவே இருக்கும்.

‘விடுதலைப் புலிகளுக்குப் பிற்பட்ட காலம்’ எனப் பேசப்படுகின்றது. இந்த நிலையில் விடுதலைப் புலிகளால் மக்களை எவ்வாறு அணிதிரட்டி அதற்கான தலைமையை வழங்க முடியும்?

எமது தேசியப் பிரச்சினை ஆசியாவின் நீண்டகாலப் பிரச்சினைகளில் ஒன்றாகப் பார்க்கப்படுகின்றது. தற்போது உருவாகியிருக்கும் நிலைமைகளுக்கு இசைவாக எமது தந்திரோபாயங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது எமது தலைமைக்குத் தெரியும். புலம்பெயர்ந்த தமிழர்கள் விடுதலைப் புலிகளுக்குப் பின்னால் அணி திரண்டு தமது தீவிரமான ஆதரவை உலகம் முழுவதிலும் வெளிப்படுத்தியிருந்தமையை நீங்கள் பார்த்திருப்பீர்கள். வன்னியில் இடம்பெற்றுள்ள கொடூரம் தமிழர்களிடையேயான ஒற்றுமையை மேலும் பலப்படுத்தியிருக்கின்றது.

இதனைத் தனித்துநின்று சாதிக்க முடியாது என்பது எமக்குத் தெரியும். தமிழர்களின் நலன்களையும், அவர்களுடைய எதிர்காலத்தையும் உறுதிப்படுத்துவதற்காக இலங்கையிலோ அல்லது வெளிநாட்டிலோ தமிழர்கள் அல்லது தமிழ் அரசியல் கட்சிகள் மேற்கொள்ளக்கூடிய பங்களிப்பை நாம் வரவேற்கின்றோம். இதனை அடைவதற்காக இந்தியாவில் உள்ள தமிழ்க் கட்சிகள் உட்பட அனைத்துக் கட்சிகளுடனும் இணைந்து செயறபடுவதற்கு நாம் விரும்புகின்றோம்.

தமிழர்களின் இந்த தேசியப் பிரச்சினையின் அடிப்படையில் பல தமிழ்க் கட்சிகள் முன்னர் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை மேற்கொண்டிருந்தன. அவர்கள் அந்தக் கோட்பாடுகளுக்கு இப்போதும் கெளரவம் கொடுப்பார்கள் என நாம் நம்புகின்றோம். இந்த நிலையில் அதனை அடைவதற்கான இணைந்து செயற்படுவதற்கு அவர்கள் முன்வருவார்கள் என நாம் நம்புகின்றோம்.

வணங்கா மண் பொறுப்பாளர் டாக்குத்தர் மூத்தியுடன் ‘பின்நவீனத்துவ’ நேர்காணல். : ஈழமாறன்

Vanni_Missionவணக்கம் தொப்புள் கொடி மற்றும் அரநாக்கொடி உறவுகளே. தொலைவார் தொலைக்காட்சியில் வாரம் தோறும் புலம் பெயர் சூழலில் இருக்கும் கோயில் சங்கம் என்று ஒரு அமைப்புக் கட்டி சுத்தும் தமிழ்த் தேசிய உணர்வாளர்களைச் சந்தித்து பேட்டி காணும் நாம் இன்று மிக முக்கியமான ஒரு நபரைப் பேட்டிகாண உள்ளோம். (மூத்தியை இன்னும் திரையில் காட்டவில்லை.) ஆம் அவர் வேறு யாருமல்ல வணங்கா மண் என்ற படத்தின் இயக்குனர் டாக்குத்தர் மூத்தி அவர்களே. இன்று தனது ஆழமான அரசியல் கருத்தை பதுக்கி கொள்ள மன்னிக்கவும் பகிர்ந்து கொள்ள கலையகத்திற்கு வந்திருக்கிறார். (டாக்குத்தர் மூத்தி இப்போது சிரித்துக் கொண்டு திரையில் தோன்றுகிறார்.)

இழிச்சவாயன்: வணக்கம் டாக்குத்தர். நீங்கள் வெலிக்கடைச் சிறையில் இருக்கும் போது சிங்கள நிருவாகத்திற்கு அடிக்கடி காட்டிக் கொடுத்து பல இளைஞர்களுக்கு அடிவிழுவதற்கு காரணமாக இருந்திருக்கிறீர்கள் என்று நாம் அறிகிறோம். அதுபற்றிக் கூறமுடியுமா?

டாக்குத்தர்: என்னுடைய தலைவன் கரிகாலன் சோழன் தம்பி என்று செல்லமாக அழைக்கப்படும் தேசியத் தலைவன் பிரபாகரனின் வழிநடத்தலில் அரசியலுக்கு வந்த நான் அப்படிச் செய்ததில் என்ன தவறிருக்கிறது. வரலாறு தெரியாதவர்கள் செய்யும் பித்தலாட்டம் இது. இதைப் போய்க் குற்றம் என்று சொல்கிறார்கள். இளிச்சவாயன் தம்பி, இதிலை உமக்கு நான் ஒண்டு சொல்ல வேணும். வெலிக்கடையிலை இருக்கும் போது இந்தப் போராளிகள் தப்பிறதுக்குப் பிளான் பண்ணுவாங்கள். அவங்கள் தப்பினா இருக்கிற எங்களுக்குத்தான் அடி விழும். அதாலை தழிழீழத் தன்மான உணர்வோடை காட்டிக்குடுக்கிறதை விட வேறை வழி தெரியேல்லை எனக்கு. குட்டிமணி, தங்கத்துரை ஆக்களுக்கு என்ன தலைவர் செய்தாரோ அதையே தொண்டனும் செய்தேன்.

இழிச்சவாயன்: மிக அருமையான பதில். உங்கள் தலைவர் வன்னியில் இன்று மக்களை தடுத்து வைத்து என்ன செய்கிறாரோ, மக்கள் தப்பிப் போனா தனக்கு என்ன நடக்கும் என்று சோழன் வயிறு கலங்கி இப்படிச் செய்கிறாரோ, அதையே முப்பது வருடங்களுக்கு முன் அவரது தொண்டனாக இருந்து செய்திருக்கிறீர்களே உங்கள் தமிழீழ உணர்வை பார்க்கும் போது எனக்கு புல்லரிக்கிறது.

டாக்குத்தர்: சரியாகச் சொன்னீர்கள் தம்பி இழிச்சவாயன்.

இழிச்சவாயன்: நேயர்களே இன்று நாம் வணங்கா மண் படத்தின் இயக்குனர் டாக்குத்தர் மூத்தியை கலையக்தில் சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கிறோம். நீங்களும் கீழே கிடக்கும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு டாக்குத்தரிடம் உங்களின் கருத்துக்களையும் பறிகொடுக்கலாம். மன்னிக்வும் டாக்குத்தரை கண்ட நேரம் முதல் எல்லாமே சுத்துமாத்து சொற்களாகவே வருகிறது. பறிகொடுப்பதில்லை. பகிர்ந்து கொள்ளுங்கள்.

இழிச்சவாயன்: வன்னியில் நடக்கும் துயரங்களுக்கு பதில் சொல்வது போல நீங்கள் எடுத்திருக்கும் படம் வணங்கா மண். அதற்கு புலம் பெயர் மக்கள் அள்ளிக் கொடுத்திருக்கும் ஆதரவு உங்களுக்கு உற்சாகத்தைத் தந்திருக்கும் என்று நம்புகிறேன். அதைப் பற்றிச் கொஞ்சம் சுத்த முடியுமா. மன்னிக்கவும் சொல்ல முடியுமா?

டாக்குத்தர்: அந்த வயித்தெரிச்சலை ஏன் கேக்கிறியள். நாசாமாய்ப் போன சனம் ஆஸ்டாவிலையும் ரெஸ்கோவிலையும் போய் சாமானை வாங்கிக் கொண்டு வந்து குடுத்திருக்குதள்.

இழிச்சவாயன்: அதெல்லாம் பெரிய கடையள். நல்ல பொருட்களாய்த்தானை இருக்கும்.

டாக்குத்தர்: சாமான் எல்லாம் நல்லதுதான். ஆனா வேறை இடங்களிலை கொண்டுபோய் எப்பிடி விக்கறிது? அதெல்லாம் விக்கிறதுக்கு நோர்வேய் வரைக்கும் கொண்டு போக வேண்டியதாய் போச்சு.

இழிச்சவாயன்: ஏன் விக்கவேணும?; உங்கட படக் கதையின்படி அது வன்னிக்குப் போய், வன்னியிலை உங்கட தலைவர் கைவிட்டு ஒடிப் போன மக்களுக்கு குடுக்கிறது தானை முடிவு. பிறகேன் டாக்குத்தர் விக்கவேணும்?

டாக்குத்தர்: வன்னி மக்களுக்கு சாமான் அனுப்பிற மாதிரித்தான் வெளிப்படையா பாத்தா தெரியும். ஆனா நான் வைச்சிருக்கிற ருவிஸ்ற் என்ன தெரியுமோ? வாற சாமான் எல்லாத்தையும் வித்து வீட்டு மோட்கேச்சை கட்டி முடிக்கிறதுதான். இந்த நாசமாப் போன சனம் என்னெண்டா ரெஸ்கோ ஆஸ்டா என்டு சீலடிச்ச சாமானை வாங்கித் தந்திருக்குதுகள். ஒரு இடத்திலையும் விக்க முடியாம கராச்சில போட்டு வைத்திருக்கிறேன். சொஞ்சம் டென்மர்க் நாட்டுக்கும் கொஞ்சம் நோர்வேக்கும் போயிருக்கு. மிச்சம் எல்லாம் மிச்சம் என்ற இடத்திலை இருக்கிற ஒரு கடையிலை விற்பனைக்குப் போட்டிருக்கு. வணங்கா மண்ணா கொக்கா?

இழிச்சவாயன்: நல்லது டாக்குத்தர். நீங்கள் மணிரத்தினத்தையும் விட நுணுக்கமாக காய் நகர்த்தியும் மக்கள் உங்களைவிட புத்திசாலிகளாக இருந்திருக்கிறார்கள் என்று பார்க்கும் போது மிகுந்த வேதனையாக இருக்கிறது. நேயர்களே வன்னியில் எங்கள் மக்கள் தாங்கொணாத் துயரில் வாழும் இந்த வேளையில் டாக்குத்தர் மூத்தி வணங்கா மண்ணுக்காக செய்திருக்கும் தியாகங்கள் எண்ணிலடங்காது. இன்றைய இந்த அவலங்கள் தொடர்பாகவும் பேச இருக்கிறோம். வன்னி மக்கள் தொடர்பாக ஒரு பாடல் காட்சியைத் தொடர்ந்து நேர்காணல் தொடரும்

பாடல்: அடிடாங்க நாக்க மூக்க நாக்க மூக்க……..மூத்தி வந்தான். பேரை வைச்சான். பேரை வைச்சு காசு கேட்டான். அடிடாங்க நாக்க மூக்க. அட அடிடாங்க நாக்க மூக்க…. வெள்ளைப்புறா பறக்க விட்டான். கொள்ளை பணம் மடக்கி விட்டான். வன்னியிலை அண்ணைக் கெண்டு அடிடாங்க நாக்க.. மூக்க நாக்க மூக்க……என்ரை புள்ளை மெடிசின் செய்ய உன்ரை புள்ளை பாளிமெண்டில் அடிடாங்க நாக்க மூக்க. அட அடிடாங்க நாக்க மூக்க….

இழிச்சவாயன்: ஒரு அருமையான பாடலைத் தொடர்ந்து டாக்குத்தர் மூத்தி இந்த வணங்கா மண் கதை எவ்வளவு காலமாக உங்கள் மனதில் இருந்தது என்று சொல்ல முடியுமா?

டாக்குத்தர்: நான் வீடு வாங்கிய காலத்தில் இருந்து இந்த யோசனை இருந்தது. எதுக்கும் ஒரு காலம் வரவேணும் பாருங்கோ. எத்தினை படம் செய்திருப்பன். ஓரு படத்திற்கும் சனம் இவ்வளவு ஆதரவு தரேல்லை. வணங்கா மண் என்னைப் பொறுத்தவரையில் ஜரோப்பா கனடா என்று எல்லா நாடுகளிலும் நல்ல கிட். அதுதான் நான் இப்ப சாபம் போன்ற ரீவியளிலை வாறதைப் பாக்க மாட்டியள்.

இளிச்சவாயன்: நல்லது. இப்போது சாம்பொண்டில் தொலைக்காட்சியில் இருந்து முகட்டுக் கவிஞன் உத்தரக் கவிஞன் இணைப்பிலிருக்கிறார். வணக்கம். கலோ வணக்கம். குறுக்கால போக வணக்கம்.
உத்தரக்கவிஞன்: டாக்குத்தரிட்டை ஒரு கேள்வி.

இளிச்சவாயன்: கேளுங்கோ. நீங்கள் தானே அந்த முகட்டைப் பாத்துக் கொண்டு வன்னி மக்கள் தொடர்பா கவிதை வாசிக்ற கவிஞன்.

உத்தரக் கவிஞன் : ஆமாம் அது நான் தான். இன்றும் டாக்குத்தரைப் பற்றி ஒரு கவிதை வாசிக்க இருக்கிறேன்.

இழிச்சவாயன்: அருமை. டாக்குத்தரிடம் நேரடியாகவே கேள்வியைக் கேளுங்கள்.

உத்தரக் கவிஞன்: உங்களுக்கு ஞபகம் இருக்கோ தெரியாது. நீங்கள் வெலிக்கடைச் சிறையிலை இருக்கும்போது, வெறும் ஆயுள்வேதி டாக்குத்தர் தான். பிறகு வெளியிலை வந்து ஒரு வருடம் இந்தியாவில நிண்டியள். பிறகு ஒரே ஓட்டமாய் லண்டனுக்கு வந்திட்டியள். லண்டனுக்கு வந்த கையோட மூத்தி பிஎச்டி எண்டு போடுறியள். இவ்வளவு கெதியா கலாநிதிப் பட்டம் குடுக்கிற பல்கலைக்கழகம் எங்கை ஜயா இருக்கு. எனக்கும் டொக்டர் எண்டு பொடக் கனநாளா ஆசை. இப்ப டொக்டர். புறபெசர். எண்டு சொன்னாத் தான் கொஞ்சம் காசு சுருட்ட வசதியா இருக்கும்.  சிலவேளை சுருட்டுவதில் தலைசிறந்தவர் என்பதற்காக உங்களுககு கௌரவப் பட்டம் ஏதேனும் கிடைச்சதோ அதை ஒருக்கா உங்கட பாதுகாப்பா இருக்கிற புள்ளையளாணை உண்மையைச் சொல்லங்கோ.

டாக்குத்தர்: வன்னியில் தமிழர்கள் படுகொலை செய்யப் படுகிறார்கள். எமது போராளிகள் வெறும் அலவாங்கினாலும் கருங்காலிக் கொட்டனுகளாலுமே மக்களை போட்டுத் தாக்குவார்கள். அரசாங்கமோ ஆட்லறியால் அடிப்பது கண்டிக்கப்படவேண்டும். வணங்கா மண் அதனையே இந்த உலகத்திற்கு எடுத்துக் காட்டுகிறது.

இளிச்சவாயன்: கவிஞரே இணைப்பில் இருக்கிறீர்களா?

உத்தரக் கவிஞன்: நான் என்ன கேக்கிறன. டாக்குத்தர் என்ன சொல்லிறார். டொக்டாமாரின்ரை தொல்லை பெரும் தொல்லையா இருக்கு. அண்ணை இழிச்சவாயன் அண்ணை… கவிதையை வாசிக்கட்டோ:

இளிச்சவாயன்: வாசியுங்கோ

உத்தரக்கவிஞன்:
வெலிக்கடைச் சிறையில்
அடிக்கடி நீங்கள்
கொடுத்த தகவலில்
நூறு இளைஞர்கள்
தாறுமாறாகத் தாக்கப் பட்டனர்.
உங்கள் தலைவன் போலவே
கூட்டுச் சேர்வதும்
காட்டிக்கொடுப்பதும்
தமிழீழ தலைநகர் மைந்தா
உன்னால் சிறையில்
பலர் சிந்தினர் ரத்தம்
உன்தலையால் வன்னியில்
வாழ்விழந்தனர் பல லட்சம்

தலைவர் சிரிக்க
தலைவற்றை பிள்ளைகள்
நீச்சல் குளத்திலே குளிக்க
வன்னிப் பிள்ளையள்
பள்ளம் மேடெல்லாம்
பிணமாக் கிடக்க
நாலைஞ்சு போட்டோ
குளோசப் வேறை.

எடுத்த கையோடை லண்டன் பறந்து வந்து
அக்குபஞ்சர் ஊசியும் போட்டாய், குள்ளச் சோழனே
வணங்கா மண் காசெல்லாம் சுருட்டியும் போட்டாய்
புலம்பெயர் மக்களுக்கு
புதுக்கதையும் சொல்கிறாய்
டாக்குத்தா….. இது என்ன நாட்டுக் கூத்தா

இளிச்சவாயன்: நல்லது உத்தரக் கவிஞன். நீங்கள் முகட்டைப் பாக்கத் தொடங்கிட்டியள் போல கிடக்கு. இனி நிப்பாட்டமாட்டியள். உங்கள் கவிதையை சாம்பொண்டில் தொல்லைக் காட்சியில் தொடருங்கள்.

இளிச்சவாயன்: நல்லது டாக்குத்தர். உங்களுக்குத் தெரியும் ஜமுனா ராஜேந்திரன்.

டாக்குத்தர்: சினிமா விமர்சகர்…

இளிச்சவாயன்: ஆமாம். அவரே தான். அவர் உங்களுடைய வணங்கா மண் படம் பற்றிய விமர்சனத்தில் சொல்கிறார் டாக்குத்தர் மூத்தி வணங்கா மண் கப்பலை விடுறமாதிரி பாவனை காட்டி காசு பொருள் எல்லாம் சேத்தபிறகு கப்பலையும் காட்டாமல் காசு சுருட்டின கீரோவையும் சாம்பொண்டில் தொல்லைக் காட்சியில் தலை காட்டாமல் காசு கொடுத்தவர்களை அம்போ என்று விடும் முடிவு பின்நவீனத்துவத்தை திருப்பிப்போட்டு எடுத்தபடம் என்றும் கார்ல் மாக்சினுடைய காலுக்கும் மாவோவின் மண்டைக்கும் உள்ள அடிப்படை முரண்பாடுகளை மேலோட்டமாக எடுத்துச் சொல்லும் படம் என்று கூறியிருக்கிறார். அது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்.

டாக்குத்தர்: இதற்கு பதில் சொல்ல முதல், நான்  முதலில் இயக்கிய வெண்புறா படம் பற்றி சிறிது சிலாகிக்க வேணும். வெண்பறா படம் தொடங்கிய போது சில நண்பர்கள் சொன்னார்கள் அந்தப் படத்தின் கதையும் களமும் வேறாக இருப்பதால் அவ்வளவாகச் சம்பாதிக்க முடியாது என்று. நான் அவர்களின் பேச்சைக் கேட்காது படத்தை எடுத்தேன். கொமர்சியல் சக்சர்ஸ் என்று சொல்ல முடியாது. ஆனால் என் திட்டத்தின் படி வீட்டை அகட்டிக் கட்ட முடிந்தது. இந்த அனுபவம் ஒரு சுத்துமாத்து படைப்பாளி என்ற முறையில் எனக்கு நல்ல பாடத்தைக் கொடுத்தது. இனி எடுக்கும் படத்தில் இந்தத் தவறை விடக்கூடாது என்று காத்திருந்த போதுதான் வன்னி மக்களின் அவலம் எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. உடனே நல்ல தலைப்பொன்றுக்காக ஒரு நாள் முளுக்க நித்திரை இல்லாம இருந்து யோசிச்சன். அப்போது கிடைத்த பெயர்தான் வணங்கா மண். ஜமுனா சொன்னமாதிரி பின்நவீனத்துவத்தை பின்னிப் போட்டு கார்ல்மாக்சை கரைச்சு  தெளிச்சு வணங்கா மண் என்று எடுத்தேன். நல்ல கலக்சன். அதிலை ஒரு பகிடி என்ன தெரியுமோ? கப்பல் இப்பவும் வன்னிக்கு போய்கொண்டிருக்கெண்டு சொல்லிற சனமும் இருக்கு. தலைவர் உள்ளுக்க விட்டு அடிப்பார் எண்டு சொன்னமாதிரி.

இளிச்சவாயன்: நான் நினைக்கிறேன். ஜேர்மனியில் இருந்து ஒரு நேயர் அழைப்பில் இருக்கிறார். வணக்கம். கலோ வணக்கம்

அழைப்பு: வணக்கம். டாக்குத்தரோடை கதைக்கலாமோ?

இளிச்சவாயன்: தாராளமா? உங்கள் கேள்விகளை தயவு செய்து சுருக்கமாக கேளுங்கள்.

அழைப்பு: டேய்…… மகனே….. ஆண்டி….. றிங்ஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙஙங

இளிச்சவாயன்: அவரது அழைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது என்று நினைக்கிறேன். தயவுசெய்து அழைப்பவர்களுக்கு ஒரு சிறிய வேண்டுகோள். உங்கள் ஆத்திரம் புரிகிறது. அதற்காக அசிங்கமான வார்த்தைகளில் தயவு செய்து திட்ட வேண்டாம். வேண்டுமானால் மூத்தியின் வீட்டு முகவரியைக் கொடுக்கிறோம். அங்கு போய் படத்தின் முடிவில் ஏண்டா நாயே கப்பல் வன்னிக்குப் போகவில்லை என்று புலிப் பாணியில் கேட்டாலும் சரி. பின்நவீனத்துவ முறையிலை கேட்டாலும் சரி. அது உங்களுடைய பொறுப்பு. பணம் கொடுத்தவர்கள் அந்தப் பணத்திற்கு என்ன நடந்தது. என்று கேட்கத் தவறுவதால் தான் தவறு செய்பவர்கள் தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டே செல்கிறார்கள். தயவு செய்து பாராளுமன்றத்திற்க்கு முன் செய்யும் ஆர்ப்பாட்டத்தைப் போல வணங்கா மண் இயக்குனரின் வீட்டுக்கு முன்னும் செய்யத் தயங்க வேண்டாம்.

இளிச்சவாயன்: இறுதியாக ஒரு கேள்வி. இந்த இங்கிலண்ட் பாராளுமன்றத்துக்கு முன் ஆர்ப்பாட்டம் செய்யிறவை பிள்ளையளைப் பள்ளிக்கூடத்துக்கு போகவேண்டாம். படிப்பு முக்கியம் இல்லை. எல்லாரும் வந்து போராடுங்கோ எண்டு சொல்லுகினம். நீங்களும் அதுக்கு பூரண உடன்பாடு எண்டு செல்லிறியள். அப்ப ஏன் உங்கட பிள்ளையளை போராட்டத்திற்கு அனுப்பேல்லை.

டாக்குத்தர்: தலைவரை பின்பற்றிறதிலை என்னை விட்டா வேறை ஆள் கிடையாது. தலவைர் என்ன செய்தவர். தன்ரை பிள்ளையளை வெளிநாட்டுக்கு அனுப்பிப் போட்டு, வன்னிப்பிளளையளை கிடங்கு வெட்டி கழுத்தளவு வெள்ளத்திலை காலுக்கு செருப்புக் கூட இல்லாம அடிபட்டுச் சாக விட்டமாதிரி லண்டனிலையும் இந்த நாசமாப் போவாற்றை பிள்ளையளின்ரை படிப்பைக் கெடுத்து தெருவிலை விட்டிட்டு நான் என்ரை பிள்ளையளை ஒழுங்கா பள்ளிக்கூடம் அனுப்பிட்டன்.
 
இளிச்சவாயன்: தமிழ் மக்களின போராட்டத்தை விளையாட்டு மைதானமாக்கி விதை நிலமாக்கி வியாபாரமாக்கி லாபம் ஈட்டி மக்களை மாக்களாக்கிய வரலாறு தொடர்ந்து கொண்டே இருக்கிறது. வணங்கா மண்ணுக்குப் பிறகு அடங்கா பற்றுத் தொடங்கியிருப்பதாக கேள்ளிப் படுகிறோம். புடுங்காத் தமிழன் என்று இன்னொரு நிகழ்ச்சியில் சந்திக்கும் வரை அன்பு வணக்கங்கள்.